எண்ணங்கள் பகிர்வு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எண்ணங்கள் பகிர்வு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 28 ஆகஸ்ட், 2013

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி.


                     
                   

  


ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி
கண்ணன் பிறந்த நாளான இன்று கண்ணனைப் பற்றிய நினைவலைகள் பதிவில். கண்ணன் என்றதும் அவனது மாயைகள் தான் நினைக்கத் தோன்றுகிறது. பிறக்கும்போதே தான் கடவுளின் அவதாரம் என்று தெரிந்தே வாழ்ந்த கிருஷ்ணன் அவ்வப்போது தன் மாயாஜாலங்களைக் காட்டிச் சொல்லிப் போனதுதான் என்ன.?
இல்லாததை இருப்பது போல் தோற்றுவதும் , இருப்பதை இல்லாதது போல் தோற்றுவிப்பதும்  மாயையின் விளைவு என்று புரிதல் தவறல்லவே .உலகே மாயம் வாழ்வே மாயம் என்பதும் சரிதானே.. நிரந்தரம் என்பது ஏதுமில்லை, நிகழ்வதுகளிலும் நிச்சயமில்லை.  
கருத்துப் பிழைகளும் காட்சிப் பிழைகளும் நிறைந்ததே வாழ்க்கை

மாயையின் பிடியில் மயங்கி இருப்பதே வாழ்க்கையின் நிதர்சனம்
னத்தின்  மயக்கமே  மாயை என்றறிவோம்
உண்டு உறங்கி எழுவது நிச்சயமில்லை போகுமிடம்
தெரியாமல் போகாத ஊருக்குப் பொருள் ஈட்டி யாருக்கென்ன லாபம்
பேதம் பாராமல் பகிர்ந்துண்டு  வாழ்தல்  பெருமை தரும் 
ஈதலின் இன்பம் கொடுத்தனுபவித்தால் புரியும் முன்பொரு முறை நான்   எல்லாமே மாயைதான் என்ற பதிவில் எழுதி இருந்தது.படிக்க விரும்புவோர் இதைச் சுட்டுங்கள்





அவன் பிறந்த நாள் என்று நாம் கொண்டாடும் இந்நாளில் இம்மாதிரி எண்ணங்கள் தோன்றுவதும் சரிதானே. ஆனால் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி என்னும் இந்நாளில் சில மனசுக்கு இதந்தரும் நினைவுகளும் இல்லாமல் இல்லை. பண்டிகைகள், திருவிழாக்கள் எனும் போது இளம்பிராயத்து நினைவுகளும் முட்டி மோதி முன் வருகிறது. நான் என்னுடைய பத்து பதினோரு வயதுகளில் என் தந்தை வழிப் பாட்டியின் வீட்டில் கோவிந்தராஜபுரம் என்னும் ஒரு அக்கிரகாரத்தில் ( கல்பாத்திக்குப் பக்கம்) இருந்தேன். ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அன்று சிறுவர்களுக்குக் கொண்டாட்டம்தான். அன்று கிராமம் பூராவும் குட்டிக் கிருஷ்ணர்களின் தோற்றமாகவே இருக்கும். சிறுவர்கள் கிருஷ்ண வேடத்தில் ஆளுக்கொரு கொம்பைக் கையில் ஏந்தி கையில் ஒரு சொம்பும் எடுத்துக் கொண்டு வீடு வீடாகப் போய் “ ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி, சிவராத்திரி ஜெயந்திஎன்று ஏதோ சொல்லிக் கொண்டு (சரியாக நினைவுக்கு வரவில்லை) போவார்கள். சில வீடுகளில் சிறுவர்களுக்குக் கோவணமாகத் துண்டுதுணிகள் குச்சியில் கட்டுவார்கள். சில வீடுகளில் கொண்டு போகும் செம்பில் எண்ணை ஊற்றிக் கொடுப்பார்கள்.சிறுவர்களே அன்றுமாலை சப்பரம் ஒன்று செய்து அதில் கண்ணனை இருத்தி ஊர்வலம் கொண்டு செல்வார்கள். பிற்காலத்திய நினைவுகள் ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைக் கண்ணனின் பாதச் சுவடுகளை அவன் வந்ததுபோல் தெரியப் பதிப்பார்கள்.பிறகு சீடை முறுக்கு போன்ற பட்சணங்கள் நாக்கைச் சப்பு கொட்ட வைக்கும். 





கிருஷ்ணனின் பிறந்த நாளில் நாங்கள் மதுராவுக்குச் சென்றுவந்ததும் நினைவுக்கு வருகிறது ஜெய்ப்பூரில் இருந்து மதுரா வந்தோம். என் அண்ணாவின் பெண் அங்கிருந்தாள். இரண்டு நாட்கள் தங்கினோம். கண்ணன் பிறந்த ஜென்மத் தலம் என்று கூறப்படும் சிறைச் சாலையையும் கண்டோம், அங்கு பாது காப்புக் கெடுபிடிகள் மிகவும் அதிகம். அதற்கான காரணம் அதற்கு முன் நிகழ்ந்திருந்த அயோத்தி பாபர் மசூதி இடிப்புத்தான் என்பது புரிந்தது..மத வெறியைத் தூண்ட ஒரு சிறு பொறி போதும். ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால் historically நம் பிரபலக் கோயில்களைச் சுற்றிலும் (அல்லது வெகு அருகாமையில்) மசூதிகள் இருக்கின்றன. காசி விசுவநாதர் கோயிலும் சரி , மதுரா கிருஷ்ணர் கோயிலும் சரி மசூதிகளை ஒட்டியே இருக்கின்றன, இனம் மதம் மொழி இவை எப்போதுமே மிகவும் சாக்கிரதையாக கையாளப் படவேண்டும் மனிதனை சிந்திக்க வைக்காமலேயே வன்முறையைத் தூண்டும் சக்தி அவற்றுக்கு இருக்கிறது


மதுராவைச் சுற்றி சுமார் முப்பது கிலோமீட்டருக்குள் கண்ணனின் லீலைகள் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் கோவர்தன், நந்த்காவ்ன்,,பர்சானா, த்வாரகேஷ் என்னும் இடங்கள், மற்றும் யமுனா நதி. அண்மையில் ISCON  நிறுவியுள்ள் கிருஷ்ணர் கோயில் எல்லாமே நினைவுக்கு வருகிறது. ISCON  கோயிலில் கண்ணாடிக்குள் கண்ணனின் லீலைகளைக் கூறும் பல சிலைகள் ( எல்லாம் அசைந்து செயல்படும்) இருக்கின்றன. கம்சனைக் கண்ணன் போரிட்டுக் கொல்வது அசையும் பொம்மைகளால் காட்டப் படுகிறது. அருகில் ராதா ராணி கோயில்
(பர்சானாவிலா?) அழகானப் பின்னணியில் காணப் படுகிறது. அங்கு அப்போது எடுத்த  புகைப் படங்களைப் பார்க்கும்போது மலரும் நினைவுகள் இனிமை சேர்க்கின்றன. புகைப் படச் சுருளில் எடுத்த படங்கள், பதிவில் சேர்க்கத் தெரியவில்லை.


அங்கு சென்றிருந்தபோது மனதை பாதித்த விஷயம் என்னவென்றால் கண்ணன் வாழ்ந்த இடங்களில் தற்சமயமிருக்கும் மக்களின் ஏழ்மையே.. தங்களை ப்ரிஜ்வாசிகள் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் மக்கள் அவன் பேரைச் சொல்லியே பிச்சை எடுக்காத குறைதான்

கடைசியாத் தோன்றுவது ஆண்டவனின் அவதாரமே என்று அறிந்தே பிறந்தவன் ஏதோ சாபத்தால் யாதவர்களிடையெ நிகழ்ந்த சண்டையில் காலில் அம்பு பட்டு இறந்தான் என்பது சீரணிக்க முடியவில்லை. அவதாரக் கதைகளும் அவற்றுக்கான காரணங்களாகச் சொல்லப் படும் கதைகளும் நம் சந்ததியினர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. ஆனால் இப்போது இருந்து வரும் nucleus  குடும்பங்களில் அவற்றைச் சொல்லிக் கொடுக்கவே ஆளில்லாதது பெருங்குறையே.
--------------------------------------------   


 


 


  

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

சாந்தனுவின் சந்ததிகள்..


                              சாந்தனுவின் சந்ததிகள்.....
                             ---------------------------------



திருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டிகளை பெற்றுக் கொள்வது அவரவர் வம்சம் தழைக்க என்பதுதான் பொதுவாகப் புரிந்துகொள்ளப்படும் செய்தி. நமது சமூகத்தில் வம்சம் தழைப்பது என்று கூறும்போது தகப்பனின் வம்சாவளி என்றுதான் பொருள்படுகிறது. இன்னாரின் மகன் என்று சொல்வதும் தந்தையைக் குறித்தே இருக்கும். நான் இங்கு கூறுவது சட்டப்படி அனுமதிக்கப் பட்ட குடும்ப வாழ்க்கை முறையையும் அதன் மூலம் வளரும் தலை முறையையும் குறிப்பிடுவதாகும். எக்செப்ஷனல் கேஸ்களைக் காட்டி என்னிடம் கோபம் கொள்ளக் கூடாது.
தலைமுறை இடைவெளி என்பதே தலைமுறைகளைப் பற்றிய செய்திகள் தெரியாமல் இருப்பதைக் குறிக்கிறதோ.?நான் ,என் தந்தை ,என் தந்தையின் தந்தை- இதை மீறிய தலைமுறை பற்றி இக்காலத்தில் தெரிந்து கொள்ள முடிகிறதா.? இதையெல்லாம் பற்றி சிந்தனை எழுவது நியாயம்தானே. சந்ததி தழைக்க வேண்டி மறுமணம் செய்யும் பலரையும் நாம் காணலாம். 

நம்முடைய மிகப் பெரிய இதிகாசமான மஹாபாரதத்தின்/ல் வம்சாவளி குறித்துப் படிக்கும்போது என்னவெல்லாமோ நினைக்கத் தோன்றுகிறது. சிலவற்றைக் குறிப்பிட்டுக் காட்டுகிறேன்.அவற்றைக்குறித்தஅபிப்பிராயங்களை நீங்களே உருவாக்கிக்கொள்ளுங்கள்..மஹாபாரதக்கதையை அதன் ஆதி வடிவில் நான் படித்ததில்லை. பலரும் படித்திருக்க வாய்ப்புமில்லை
மஹாபாரதம் வியாசமுனிவர் கூற விநாயகரால் எழுதப் பட்டது என்று நம்பப் படுகிறது. வியாசர் பராசர மஹரிஷிக்கும் சத்தியவதி எனும் செம்படவப் பெண்ணுக்கும் பிறந்தவர் என்று அறியப்படுகிறார். இந்த வியாசமுனிவர் மஹாபாரதக் கதையின் ஒரு பாத்திரமாகவும் அறியப் படுகிறார். பராசர முனிவரிடம் கலந்ததில் இருந்து சத்தியவதியைச் சுற்றி ஒரு நறுமணம் திகழ்ந்திருந்ததாம். அந்த நறுமணத்தால் ஈர்க்கப்பட்டு சாந்தனு மஹாராஜா அவள் மேல் காதல் வசப்பட்டாராம். இந்த சாந்தனு மஹாராஜா ஏற்கனவே மணமானவர்.. கங்கையின் மேல் காதல் கொண்டு அவளை மணமுடிக்க விரும்பியபோது கங்கை ஒரு நிபந்தனை இட்டாள். அவளது எந்த செய்கையையும் சாந்தனு ராஜா கண்டு கொள்ளக் கூடாது என்பதே அது. சாந்தனு கங்கை திருமணத்தின் விளைவாய் பிறந்த குழந்தைகள் ஒவ்வொன்றையும் கங்காதேவி நீரில் எறிந்து விட . ஏதும் பேசாமல் இருந்த ராஜா எட்டாவது குழந்தையை நீரில் இடப் போகும்போது தடுத்துக் காரணம் கேட்கிறார். நிபந்தனையை மீறி கேள்வி கேட்ட சாந்தனு ராஜாவைவிட்டுப் பிரிந்து போகிறார் கங்காதேவி அந்த எட்டாவது குழந்தையை அரச குமாரனுக்கு வேண்டிய எல்லாத்தகுதிகளையும் கற்பித்து அவனை சாந்தனு ராஜாவிடம் ஒப்படைக்கிறார். அவர்தான் மஹாபாரதத்தில் பிதாமகர் என்று அழைக்கப்பட்ட பீஷ்மர்.

என்ன செய்வது.?சில விஷ்யங்களைப் பற்றிக் கூறும்போது, கதையையும் கொஞ்சம் கூறத்தான் வேண்டியுள்ளது. படிப்பவர்களுக்கும் மஹாபாரதக் கதையின் ஆரம்ப பகுதிகளை ரிவைஸ் செய்ததுபோலும் இருக்கும்.

வேட்டையாடச் சென்ற சாந்தனு ராஜா சத்தியவதியை மணக்க வேண்டுமென்றால் அவளது பிள்ளைகள்தான் அரசுக்கு வாரிசாக இருக்க வேண்டும் என்பதே நிபந்தனையாக சத்தியவதியின் தந்தை விதித்தார். அதை ஏற்றுக் கொண்டால் தேவவிரதன் என்று பெயர் கொண்ட பீஷ்மர் அரசுரிமையைத் துறக்க வேண்டும். அவர் துறந்தாலும் அவருக்குப் பிறக்கும் வாரிசுகள் உரிமை கோராமல் இருக்க வேண்டி தேவ விரதன் பிரம்ம சாரியாய் காலங்கழிக்க சபதம் பூண்டார்.

சத்தியவதிக்கும் சாந்தனு ராஜாவுக்கும் சித்திராங்கதன், விசித்திர வீரியன் என்று இரண்டு மகன்கள் பிறந்துஅவர்களுக்கு மணமுடிக்க பீஷ்மர் அம்பிகை அம்பாலிகை எனும் ராஜகுமாரிகளை சுயம்வரத்திலிருந்து அபகரித்து வந்து மணமுடித்தது ஒரு பெரிய கதை. அதை விட்டு விட்டு நம் கதைக்கு வருவோம். சித்திராங்கதன் அல்பாயுசில் உயிர் துறக்க விசித்திர வீரியன் மூலமும் மக்கள் இல்லாமலிருக்க சந்ததி வேண்டி ( யாருடைய சந்ததி.?), தாயார் சத்தியவதி, தன் முதல் கணவர் பராசர மஹரிஷி மூலம் பிறந்த வியாசரிடம் அம்பிகை அம்பாலிகைக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டுகிறார். வியாச மஹரிஷியும் தன் சகோதரர் மனைவிகளைப் புணர்ந்து மக்கட் செல்வம் தருகிறார். அம்பிகையுடன் சேர்ந்தபோது ரிஷியின் கோலத்தைக் கண்டு பயந்து கலவியின் போது கண்களை மூடிக் கொண்டதால் அவளுக்குப் பிறந்த குழந்தை குருடாகப் பிறந்ததாம், அவர்தான் திருத ராஷ்டிரர் என்னும் பெயர் பெற்றவர் அம்பாலிகையோ பயந்து முகமெல்லாம் வெளிறிப் போயிற்றாம். அந்தக் கலவியின் விளைவாய்ப் பிறந்தவர் பாண்டு என்று அழைக்கப் பட்டார். இரு பேரப் புத்திரரும் குறையுடன் பிறக்க மறுபடியும் முயல வியாசரை சத்தியவதி வேண்ட அம்பிகை அம்பாலிகை இருவரும்  விரும்பாமல் அவர்களது பணிப் பெண்ணை வியாசரிடம் அனுப்பி விடுகின்றனர். அந்த சேர்க்கை மூலம் பிறந்தவர் விதுரர்.

.திருதராஷ்டிரர், பாண்டு இவர்கள் சாந்தனு ராஜாவின் சந்ததிகளா.?

இது மட்டுமல்ல. மூத்தவன் பிறவிக் குருடன் என்பதால் இளையவன் பாண்டு வுக்கு முடி சூட்டுகிறார்கள். பாண்டுவுக்கு ஒரு சாபம். மனைவியுடன் கலந்தால் மரணம். அவரும் வெறுத்துப் போய் தன் இரண்டு மனைவிகளுடன் காட்டுக்குப் போய் விடுகிறார். அவரது சந்ததி தழைக்க என்ன செய்வது.? குந்தி தேவிக்குக் கிடைத்த வரம் அதற்கு வழி வகுக்கிறது. மந்திரம் உச்சாடனம் செய்ததும் யமதர்மன், வாயு, இந்திரன் மூலம் பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறாள் குந்திதேவி. தான் பெற்ற பேறு பாண்டுவின் இளைய மனைவிக்கும் அருளி, அவளும் தேவர்கள் மூலம் இரண்டு புத்திரர்களை பெற்றுக்கொள்கிறாள். இவர்களே பஞ்ச பாண்டவர்கள். இவர்கள் சாந்தனு ராஜாவின் சந்ததிகளா.?

மஹாபாரதக் கதையில் தர்மம் உபதேசிக்கப் படுவதாகக் கூறப் படுகிறது. குருடன் என்னும் காரணத்தால் அரசைத் துறக்க வேண்டி வந்த திருதராஷ்டிரன் தம்பி பாண்டு இறந்தபோது தன் மக்கள் அரசுரிமை பெற விரும்பியது தவறா? துரியோதனனைவிட  யுதிஷ்டிரர் மூத்தவர் என்பதால் அவருக்கு அரசுரிமை என்பது சரியா.? இந்த மாதிரியான பின்னணியில் பங்காளிச் சண்டையை முன் வைத்து எழுதப் பட்ட மஹாபாரதம் , தன்னுள்ளே நூற்றுக் கணக்கான கிளைக்கதைகளை அடக்கி மிகப் பெரும் இதிகாசமாய் திகழ்கிறது.

சுவையான கதை என்பதை ஒப்புக்கொள்ளும்போது, பல நெருடலான விஷயங்கள் இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.

ஒருவரை சுய அறிமுகம் செய்து கொள்ளும்போது அபிவாதயே சொல்லச் சொல்கிறார்கள் ( ஒரு சமூகத்தில் ) அப்படி அறிமுகம் செய்து கொள்ளும்போது  தன்னுடைய குலம் கோத்திரம் போன்றவற்றைக் கூறி இன்னாரின் பேரன் இன்னாரின் புதல்வன்  இன்ன பெயர் கொண்டவன் என்று கூறி வணங்க வேண்டுமாம். அதைப்பற்றிப் படிக்கும்போது சாந்தனுவின் சந்ததிகள் சொல்வது எப்படி இருக்கும் , சரியாக இருக்குமா என்று தோன்றியதன் விளைவே இப்பதிவு.
மேலும் இந்தப் பதிவில் நான் குறிப்பிடும் சம்பவங்கள் படித்துப் பெற்றதும் கேட்டுப் பெற்றதுமாகும். சரியெது தவறெது என்று கூறமுடியாது. மூலக் கதையை மூல வடிவில் படித்துணர்ந்தவர் உள்ளாரோ?
--------------------------------------------------------------------------         .    
  

திங்கள், 10 டிசம்பர், 2012

மீண்டும் சில அனுமானங்கள்.


                         மீண்டும் சில அனுமானங்கள்.
                        --------------------------------------------


நான் கேட்டால் ஏன் இந்த சுணக்கம் ?என்று எழுதி இருந்தேன். அதை எப்படி புரிந்து கொள்ள முடிகிறது என்று அப்பாதுரை கேட்டிருந்தார். இர்ண்டு மூன்று வருட வலையுலக அனுபவம் ப்ளஸ் இந்த வயதின் அனுபவம் ஒரு உணர்வாய் தெரியப் படுத்துகிறது என்று நினைக்கிறேன். மேலும் வலையில் எழுதுபவர்களை நானும் படித்துக் கொண்டு வருகிறேன். அவர்கள் எழுத்தை வைத்தும் அவர்கள் இடும் பின்னூட்டங்கள் வைத்தும் இன்னார் இன்ன மாதிரி என்று ஓரளவு அனுமானிக்கிறேன் . இந்த ரீதியில்  அனுமானங்கள் என்னும் ஒரு பதிவே எழுதி இருந்தேன்.


ஒரு விஷயம் எனக்கு நன்றாக விளங்குகிறது. என்னிடம் நட்பு பாராட்ட பலரும் தயங்குகிறார்கள். அதற்கு என்னால் இரண்டு காரணங்கள் அனுமானிக்க முடிகிறது. ஒன்று என் வயது. கிழவனுடன் நட்பு பாராட்டபலரும் விரும்புவதில்லை. எண்ணங்களில் தலைமுறை இடைவெளி இருக்கும் என்று எண்ணலாம். ஆனால் வயதில் முதியவனாய் இருப்பினும் எண்ணங்களில் இன்றும் இளைஞன்தான் , இரண்டு  என் எண்ண ஓட்டங்கள் பலரும் எண்ணுவதுபோல் இல்லாதிருப்பது. நான் ஒளிவு மறைவு இல்லாமல் இருப்பது எனக்கே தெரியும் அதுதான் என் பலமும் பல வீனமும்.
மேலும் பதிவுலகில் பலரும் முகமூடி அணிந்தவர்களாக இருக்கிறார்களோ என்றும் சந்தேகம் எழுகிறது. எழுதுபவர்கள் ஆணா பெண்ணா, வயது என்ன அவர்களது பின்னணி என்ன என்று தெரிந்து கொள்வதும் அரிதாயிருக்கிறது. நட்பு பாராட்ட நாம் பாதி தூரம் கடக்கலாம். அவர்களும் பாதி தூரம் வந்தால்தானே இதமாய் இருக்கும்.. திருச்சியில் ஒரு பதிவரைப் சந்திக்க விருப்பம் தெரிவித்து அவரது பதில் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தது குறித்து. ஒரு முறை எழுதி இருந்தேன். என் பதிவுகளின் தொடர்பாளராக இருந்தவர்கள் விலகிக் கொள்கிறார்கள். எனக்கு ஒரு முறை ஒரே பதிவர் இரண்டு பெயர்களில் பின்னூட்டம் இடுகிறாரோ என்னும்சந்தேகம் . புகைப் படங்களால் வந்தது.விளக்கம் கேட்டிருந்தேன். இல்லை என்று பதில் கிடைத்தது. இப்போது பார்த்தால் இருவரும் என் பதிவுகளில் தொடர்பாளகள் அல்ல என்று அறிகிறேன். இவ்வளவையும் நான் குறிப்பிடக் காரணம் எல்லோரையும் ஒரு அனுமானத்துடன்தான் அணுக வேண்டி இருக்கிறது. அப்படி அணுகும்போது யார் என் எழுத்துக்களை விரும்பிப் படிக்கிறார்கள், யார் படிக்கும்போது சுணங்குகிறார்கள் என்றும் அனுமானிக்க முடிகிறது.
என்னுடைய இன்னொரு அனுமானம் பதிவுலகில் ( நான் பார்த்த/ படித்த வரையில் ) நான் எழுதுவது ஒரு குறிப்பிட்ட சமூகத்தால் ஏற்றுக் கொள்ள முடியாதபடி இருக்கிறதோ என்பதுதான். நான் உயர்வு தாழ்வு , சம வாய்ப்பு இல்லாமை என்று எழுதுவதும் அதற்குக் காரணமாக நமது சமுகப் பின்னணியை குறை கூறுவதும் காரணமாக இருக்கலாம். நான் விருப்பு வெறுப்பு இல்லாமல்தான் என் எண்ணங்களின் அடிப்படையில் எழுதுகிறேன். என்னவோ ஏதோ எழுதுகிறோம் என்பதைவிட என்ன எழுதுகிறோம் என்பதில் கவனம் செலுத்துகிறேன். வெறும் பொழுது போக்காகவோ  என் எழுத்தாற்றலைக் காண்பிக்கவோ மட்டும் நான் எழுதுவதில்லை. பலமுறை நான் கூறி உள்ளதுபோல் என் எண்ணங்களைக் கடத்தவும் வலையை நான் உபயோகிக்கிறேன். அவற்றையே கதைகளாக கவிதைகளாக கட்டுரைகளாக எழுதுகிறேன். அப்படி எழுதுவதன் தாக்கம் என்ன என்று அறியவே நான் பின்னூட்டங்களைப் பார்க்கிறேன். நண்பர் ஒருவர் நான் பின்னூட்டங்களுக்காக ஏங்குகிறேன் என்று எழுதி இருந்தார். ஆம். நான் பின்னூட்டங்களை ஆர்வத்துடன் பார்க்கிறேன், பலரும் என்னை, என் எழுத்தைப் புகழுகிறார்களா என்று பார்க்க அல்ல. என் எழுத்தின் தாக்கம் என்ன என்று அறியவேதான்.
எழுதுவது எழுதுவதன் நிமித்தம் , படிப்பது படிப்பதன் நிமித்தம் ஆனால் அந்த நிமித்தங்கள்தான் எவ்வளவு வேறுபடுகின்றன, ஒருவரைப் படிக்கும்போது இன்ன ரசனைக்காக இவரைப் படிக்கிறோம் என்பதே முக்காலும் உண்மை. சிலரது எழுத்து என்னைப் பொறாமைப் படுத்தும். நடையும் எழுத்தும் மொழியின் ஆளுமையும் வலை உலகில் பலரிடம் அபரிமிதமாக இருப்பதைக் காண முடிகிறது. சரளமான நடையில் ஆர்வத்தைத் தூண்டும் எழுத்து அப்பாதுரையுடையது. அவரைப் பற்றிய என் எண்ணங்கள் அவர் என் வீட்டிற்கு வருகை தந்து என்னை சந்தித்ததில், அவருடன் உரையாடியதில் சரி என்று நினைக்க வைத்தது.அவருக்கு என்று சமூக மற்றும் MORAL கண்ணோட்டங்கள் இருந்தாலும் அதை யார் மேலும் திணிக்கும் ( எனக்கு நேர் எதிர்? ) எண்ணம் கிஞ்சித்தும் இல்லாதவர். அயல் நாட்டில் இருந்து கொண்டு தமிழில் இவ்வளவு அழகாக எழுதுபவர் அவருக்குத் தெரியாததை ஒப்புக்கொள்ளும் குணம் எனக்குப் பிடிக்கும். இந்தப் பதிவுக்கு முக்கிய காரண கர்த்தாவே அவர்தான்.
நேர் எதிர்மறைகளின் நடுவே சராசரி மனிதனின் எண்ணங்களை கவிதைகளாக எழுதும் ரம்ணி அவர்களின் எழுத்து எனக்குப் பிடிக்கும். அவற்றுக்கு நான் எழுதும் பின்னூட்டங்கள் அவருக்குப் பிடிக்குமோ தெரியாது, சில கருத்துக்களை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்வதும் கண்டிருக்கிறேன். ஆனால் அவரது பின்னூட்டங்கள் எல்லாம் நிறைவாகவே இருக்கும். என் பதிவுக்கு மட்டுமல்ல. யாருடைய பதிவிற்கும் அவர்  இடும் பின்னூட்டம் குறையே சொல்லாது. ஒரு முறை அவர் எழுதியதாக நினைவு. “ ஒருவரை மகா புத்திசாலி என்று புகழ்ந்தால் , அவர் உங்களை புத்திசாலி என்றாவது ஏற்றுக் கொள்வார் “( இதே வார்த்தைகள் இல்லாவிட்டாலும் இதே ரீதியில் இருந்தது.)
சிறுகதை எழுதுவதில் பலர் பல பாணிகளைக் கடை பிடிக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை சிறுகதை சம்பவங்களுக்காக பாத்திரம் அமைப்பது, இல்லையென்றால் பாத்திரங்களுக்காக சம்பவங்கள் அமைப்பது. இதில் வேறு பட்ட கருத்துக்கள் இருக்கலாம்.
சிலர் ஆன்மீக விஷயங்களை மட்டுமே பதிவாக இடுகிறார்கள். திருமதி இராஜராஜேஸ்வரி அருமையான படங்களுடன் இறைவன் சம்பந்தப்பட்ட பதிவுகளே அதிகம் இடுகிறார். என்னைப் போன்றவர்கள் படங்களை ரசிப்பதும் அவருடைய வேகத்தைக் கண்டு ஆச்சரியப் படுவது மட்டுமே செய்ய முடியும்..சில கேட்டிராத கதைகளும் கிடைக்கலாம்.
ஒரு வேகத்துடன் பதிவுலகில் எழுதிக் கொண்டிருந்த சுந்தர்ஜியின் எழுத்துக்களில் திசை மாற்றம் தெரிகிறது. அவர் பாராட்டி எழுதும் பின்னூட்டங்கள் டானிக் மாதிரி இருக்கும். அவரும் எதிர்மறைக் கருத்துக்கள் கூறுவதை தவிர்ப்பவர்.
பதிவுலகில் பலரும் பலவிதம். திடீரென்று ஒருவர் எதிர்பாராத கருத்தை தெரிவிப்பார். பின் அவரைக் காணவே முடியாதிருக்கும். நான் கவிச்சோலைக் கவிதைப் போட்டிக்கு ஒரு கவிதை “மெட்ராஸ் “ தமிழில் எழுதி இருந்தேன். சொற்குற்றம் பொருட்குற்றம் என்று எழுதி திணர அடித்தார் அமெரிக்காவில் இருந்து பின்னூட்டம் எழுதிய ‘பாரதசாரி ..என்பவர். பாரதத்துக்கு சாரி சொல்லவே அந்தப் பெயர் என்றும் எழுதி இருந்தார்.
வித்தியாசமாகப் பதிவர்களைப் பற்றிய அனுமானங்களாகி விட்டது இந்தப் பதிவு. நான் அறிந்த எல்லாப் பதிவர்களைப் பற்றியும் எழுதலாம். பதிவின் நீளம் கூடும். மேலும் அது விரும்பப் படுமா தெரிய வில்லை
முன்பொரு முறை எழுதி இருந்தேன். பதிவுலகில் I ALSO RUN..
!பதிவுலகத்தில் பொழுது போக்கவோ திறமையைத் தீட்டவோ பலரும் SUDOKU  சால்வ் செய்யும் பழக்கம் உடையவர்களாக இருக்கலாம். கீழே நான் கொடுத்திருக்கும் சுடோகோ சால்வ் செய்ய முடிந்தால் தெரியப் படுத்துங்கள். ஒரு பட்டமே தரக் காத்துக் கொண்டிருக்கிறேன்.
சுடோகு விதி முறைகள் தெரியும் என்று நம்புகிறேன். நான் கொடுத்திருக்கும் 81 சிறிய கட்ட சதுரங்களை ஒன்பது  ஒன்பது கட்டச் சதுரங்களாக் எடுத்துக் கொள்ளவும் எனக்கு அவற்றை SHADEசெய்து காட்டத் தெரியவில்லை. SUDOKU   SOLVE  செய்பவர்களுக்குப் புரியும். 

. .   


5
3





8






2


7


1

5


4




5
3



1


7



6


3
2



8


6

5




9


4




3






9
7




(ஒரு குறியீட்டைக் குறிக்கும் பதிவு இது. வித்தியாசமாக இருக்கிறதா.?)

     

          
:      












ஞாயிறு, 4 நவம்பர், 2012

ஒரு தன்னிலை விளக்கம்.


                                 ஒரு விளக்கம்.
                                 -----------------------

அன்பு பதிவுலக நண்பர்களே, நான் இரண்டாண்டுகளுக்கும் மேலாக பதிவுலகில் எழுதி வருகிறேன். வித்தியாசமான விஷயங்களை கட்டுரைகளாகவும் ,கவிதைகளாகவும் கதைகளாகவும் எழுதி வருகிறேன். அண்மையில் எனக்கு வந்த மின் அஞ்சல்களில் கண்ட சில தகவலளையும் பகிரத் தொடங்கினேன். நல்ல விஷயங்கள் என்று எனக்குப் பட்டதை , சிலவற்றை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்தும் பகிர்ந்து கொண்டேன். அந்த விதத்தில் என் பதிவு ;சென்னையின் விற்பனைப் பிரிவுப் பெண் ,வாஷிங்டன் போஸ்டின் கண்மூலம் பதிவிட்டிருந்தேன். நல்ல விஷயம் எனப் பாராட்டியும், எனக்குத் தனிப்பட்ட மூறையில் இது  முன்பே வந்த சமாச்சாரம் என்றும் அதில் கண்ட செய்தியின்உண்மை நிலை குறித்த சந்தேகத்து டனும் கடிதம் வந்தது.  எனக்கு வந்த மின் அஞ்சலின் அடிப்படையில் எழுதி இருந்தேன். அதில் கண்ட செய்தி உண்மை என்று நம்பி எழுதினேன். அது இரண்டு வருடங்களுக்கு முன்பே வந்தது என்றோ அது தவறாக இருக்கலாம் என்றோ எண்ண வில்லை. ஆனால் நான் எழுதுவது உண்மைக்குப் புறம்பாக இருக்கலாம் எனும் செய்தியே எனக்கு வருத்தம் அளிக்கிறது. சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பால் பட்டவளாக இருக்க வேண்டும் எனும் மொழிக்கு ஒப்ப நான் எழுதுவதும் சந்தேகத்துக்கு உள்ளாகக் கூடாது என்றும் எண்ணுகிறேன். எனக்கு  அனுப்பிய நண்பருக்கும் விளக்கம் கேட்டு எழுதி உள்ளேன். ஆனால் அவர் எனக்கு முகப் பரிச்சயம் கூட இல்லாதவர். பார்ப்போம் பதில் வருகிறதா என்று.  இருந்தாலும் இனி மின் அஞ்சலில் வரும் செய்திகள் உண்மை என்று நம்பி பகிர்வதில்லை என்று முடிவு செய்துள்ளேன். அது சரியானதுதான் என்று நம்புகிறேன்

இடம் பெயர் போன்ற விவரங்களுடன் தவறான செய்தி கொடுக்க வேண்டிய அவசியம் யாருக்கும் இருக்காது என்னும் என் நம்பிக்கை பொய் என்று எண்ணமனம் வரவில்லை. ஒரு வேளை காலங்கடந்த செய்தியாய் இருக்கலாம். காலங்கடந்த நிகழ்ச்சி என்பதால் சம்பந்தப் பட்ட வர்கள் நினைவில் இருந்து மறைந்து போயிருக்கலாம். இருந்தாலும் மின் அஞ்சல் செய்திகளை பதிவிட மாட்டேன்  என்பதில் உறுதியாய் இருக்கிறேன்.