Wednesday, June 5, 2013

ஏற்ற தாழ்வுகள் மனிதனின் ஜாதி - தீர்வுண்டா.?


                   ஏற்ற தாழ்வுகள் மனிதனின் ஜாதி- தீர்வுண்டா.?
                   ------------------------------------------------------------------ 


ஏற்ற தாழ்வு பற்றி ஓரளவுக்கு நிறையவே எழுதிவிட்டேன். ஏற்றத்தாழ்வுகளால் சமுதாயதில் ஏற்படும் பல பிரச்சனைகளையும் கூறி இருக்கிறேன் சமுதாய சீர்கேட்டுச் சித்தாந்தங்களால் இழி குலத்தோர்  என்று பல்லாண்டுகள் முத்திரை குத்தப்பட்டு வாழ்வின் அடிமட்டத்திலேயே உழன்றவர்களின் சந்ததிகளும் அதே நிலையில் இருக்கவேண்டுமா.?காலங்கள் மாற வேண்டாமா.? மாற்றக் கூடிய சக்தி எது என்று சிந்தித்தால் கல்வி ஒன்றுதான் என்று பதில் வருகிறது. இது எனக்கு மட்டும் உதித்த ஞானம் அல்ல. EDUCATION  IS A GREAT LEVELER என்று தெரிந்துதான் கல்வி கிடைக்கப் பெற முடியாதவர்களுக்கு ( ஏன் கல்வி கிடைக்கப் பெறமுடியாதவர்கள் ஆனார்கள் என்று ஆராயப் போனால் பலருக்கும் வருத்தம் ஏற்படும் விஷயங்களைக் கூற வேண்டி இருக்கும்) இட ஒதுக்கீடு என்று கொண்டு வந்தார்கள். அப்படிக் கொண்டுவந்த ஒதுக்கீடுகளினால் வாழ்வின் ஏற்ற தாழ்வுகளைச் சமன் செய்யவில்லை. ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துகள் கூறப் பட்டு இருக்கும் நிலையில் மாற்றம் ஏதுமில்லை. இன்னும் சொல்லப் போனால் சலுகைகளுக்காக தவறான அணுகுமுறைகளையும் சிந்திக்கத் தொடங்கி விட்டனர். இது போதாதென்று நாட்டில் ஏற்ற தாழ்வுகளை நிர்ணயிப்பது பணம் ஒன்றுதான் என்று அநேகமாக எல்லோரும் நம்புகின்றனர். கல்வி ஒன்றுதான் சமன் செய்யும் என்று எண்ணினால் அதுவும் வியாபாரிகளிடம் சிக்கி இருக்கிறது. கல்வி அமைப்புகளிலும் சமம் இல்லை. ஏழைக் கல்வி பணக்காரன் கள்வி என்றாகி விட்டது. இதையும் அறிந்துதான். ஓரளவுக்காவது சரிகட்ட எல்லாக் கல்வி நிலையங்களிலும் குறைந்தது 25% ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்துள்ளனர். இப்போதுள்ள கல்வி வியாபாரிகள் இந்த சட்டத்தை மதிப்பதாகவே தெரியவில்லை. ஒரு குழந்தையை ஆரம்பக் கல்விக்காக பள்ளியில் சேர்க்க வேண்டுமானால் அவர்கள் கேட்கும் தொகை மயக்கம் வர வைக்கிறது. பள்ளிக் கூடங்களின் பிரக்யாதியைப் பொருத்து ரூபாய் 50,000/ முதல் ஒரு லட்சம் வரைக் கேட்கிறார்கள். இந்த நிலையில் 25% ஏழைக்குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்றால் அதனால் ஏற்படப் போகும் நஷ்டத்தை அரசாங்கம் ஈடு செய்ய முடியுமா.?ஆகவேதான் எனக்கொரு எண்ணம் எழுகிறது. அரசாங்கம் ஏதேதோ செய்தாலும் அவை எல்லாம் அரை வேக்காடாய்ப் போகிறது. கல்வி கற்பிப்பதை அரசாங்கம் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். வங்கிகளை அரசுடைமை ஆக்கியது போல் கல்வியும் அரசுடைமை ஆக்கப் பட வேண்டும். இப்படி அரசுடைமை ஆக்கினாலும் ஏற்ற தாழ்வுகள் குறைந்து போகுமா.? ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு மாறுமா.? அதையும் மாற்ற கல்வி பயிலும் அனைவருக்கும் மதிய உண்வு சீருடை சமச் சீர் கல்வி என்பது எல்லாம் அரசாங்கமே பொறுப்பு ஏற்படுத்தினால் . இப்போதில்லாவிட்டாலும் வருங்காலச் சந்ததியினராவது பேதங்கள் தெரியாமல் வளர்ந்திருப்பர். பசித்திருப்பவனுக்கு மீன் கொடுப்பதைவிடமீன் பிடிக்கக்கற்றுக் கொடுத்தலே


சிறந்தது. பேதமற்ற கல்வி அறிவு அவர்கள் சிந்தனைகளில் மாற்றம் கொண்டு வரும்.

இதை எழுதுமுன் வள்ளுவர் கூறிய பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்என்னும் குறள நினைவுக்கு வந்தது. சரி, இணையத்தில் இது பற்றி என்னென்ன கருத்துக்கள் நிலவுகின்றன என்று பார்க்கப் போனால் வள்ளுவர் அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த நிலைமைகளையே சொல்லிச் செல்கிறார் என்று தெரிகிறது. கீழே சில குறள்களைத் தருகிறேன். அவற்றின் பொருள் குறித்து பல எண்ணங்கள் கொள்ளலாம் என்று தெரிகிறது. நான் படித்ததை இங்கு எடுத்துக் கூறினால் காப்பி பேஸ்ட் செய்கிறேன் எனும் குற்றச் சாட்டு எழலாம். இருந்தாலும் வெவ்வேறு முறையில் அர்த்தம் செய்து கொள்ளலாம் என்று தெரிகிறது. நான் ஒரு முறை எழுதி இருக்கிறேன். எனக்குத் தமிழ் தெரியாது. தெரிந்தவர்கள் விமரிசிக்கலாமே.


உலகத்தோடு ஒட்ட ஒழுகல்  பலகற்றும்
கல்லார் அறிவிலாதார் 

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப் பொழுக்கம் குன்றக் கெடும்.

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய்விடும்.

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார் வாய்ச்சொல்.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவா னெனின்

சிலர் எழுதும் பதிவுகளில் இந்த சாதி குல வேறுபாடுகள் பண்டைக் காலத்தில் இருக்க வில்லை என்றும் இவை எல்லாவற்றுக்கும் ஆங்கிலேயர்களே காரணம் என்பதுபோலவும் எழுதுகின்றனர். இருந்துவந்த வேறுபாடுகளை ஆங்கிலேயர்கள் உபயோகித்துக் கொண்டனர் என்பதும் அப்போது கல்வி கற்க அனுமதிக்கப் பட்டவர்கள் அவர்களுக்குத் துணை போனார்கள் என்பதுமே என் கட்சி. யார் காரணம் என்று ஆராய்வதில் குணமில்லை என்று கருதியே என் சிற்ற றிவுக்குப் பட்ட தீர்வைக் கூறி உள்ளேன்


கல்வி குறித்து நான் முன்பெழுதிய பதிவின் இணைப்பைப் படிக்க “இங்கே” சொடுக்குங்கள்

 

 
 

31 comments:

 1. கல்வி - மிக மிக முக்கியமான பிரச்சினை. இதைக்குறித்து அரசாங்கமோ சமூகமோ ஏதாவது செய்தே ஆகவேண்டும். எத்தனை முறை எழுதினாலும் - இது விடியலுக்காக ஊதும் சங்கு மாதிரி - எழுதிக்கொண்டே இருந்தாலும் போதாது.

  அரசுடமையாக்குவதால் பலனுண்டாகுமா - அதுவும் இந்திய அரசியல்வாதிகள் கையில் கொடுத்தால் - தெரியவில்லையே? (வங்கிகள் அரசுடமையானதால் நாட்டு மக்களுக்கோ பொருளாதாரத்துக்கோ என்ன பயன் (அரசுடைமையாகாவிட்டால் என்ன கேடு) என்று யாராவது விளக்கமாக எழுதியிருக்கிறார்களா தேடிப் பார்க்க வேண்டும்). இந்திய அரசியல்வாதிகளின் (நேரு குடும்பம்) அரைகுறை சோசலிச முயற்சிகளில் ஒன்றோ?

  கல்வி இலவசமாக வழங்கப்பட்டாலும் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் முன்வர வேண்டும். கல்வி என்பது பாடப்புத்தக பரீட்சைக் கண்ணோட்டக் கல்வியாக இருப்பதும் இன்றைய நிலைக்குக் காரணம்.

  பிரக்யாதி - என்றால் என்ன?

  ReplyDelete
  Replies
  1. மிகவும் சரியான பார்வை.

   பிரக்யாதி - என்றால் என்ன?

   http://www.kamakoti.org/tamil/dk6-155.htm

   Delete
  2. மிகவும் சரியான பார்வை./எது என்று கூறி இருக்கலாமோ அப்பாதுரையின் பின்னூட்டமா பதிவில் கண்ட செய்திகளா பிரக்யதி என்னும் சொல்புகழ்பெற்ற என்னும் பொருள் கொண்டது என்றே தெரிகிறது

   Delete
 2. நீங்கள் சொன்னது போல் அரசாங்கம் ஏற்றுக் கொண்டால் நல்லது தான்... ஆனால் நடைபெற ஒற்றுமையுடன் ஓர் புரட்சி / போராட்டம் நடை பெற்றால் ஒழிய இது சாத்தியப்படுவது சந்தேகம் தான்... கல்வி ஒரு சேவை என்பது நல்ல தொழில் என்று மாறி பல காலம் ஆகி விட்டதே... சிரமம் தான்...

  எல்லாவற்றிக்கும் தீர்வு உண்டு என்பதை குறள்கள் ஒவ்வொன்றும் விளக்கமாக விரிவாக சொல்லி விட்டன... அதனின் பொருளை அவரவர் அறிந்து கொள்வதே மிகவும் சிறந்தது என்று நினைக்கிறேன்...

  ஒவ்வொரு வீட்டிலும் திருக்குறள் புத்தகம் இருக்க வேண்டும் என்பார்கள்... இருக்கிறது... ஆனால்...?

  குறள்களை எழுதி மதிப்பெண்கள் வாங்குவது தான் இன்றைய நிலை... அதன்படி புரிந்து தம்மை சீர்படுத்திக் கொள்வது எல்லாம் கதை, கற்பனை என்றாகி விட்டது...

  காப்பி பேஸ்ட் பற்றி இன்றைய பதிவிலே தங்களின் கருத்துக்கு பதில் சொல்லி உள்ளேன் ஐயா... நன்றி...

  ReplyDelete
 3. அய்யா கல்வி ஒன்றே அனைத்து ஏற்றத் தாழ்வுகளையும் சமன் செய்யும் கருவி என்பது எனது எண்ணமய்யா. ஆனால் இன்றைய கல்வி முறை திசைமாறிப் பயணிக்கின்றது அய்யா. கல்வி என்பதே மதிப்பெண் பெறுவதற்கும், வளமான வாழ்க்கை வாழ்வதற்கு மட்டுமே என்ற நிலை இன்று உள்ளதய்யா.
  மதிப்பெண் பெறுவதற்ககாக அல்லாமல், உலகைத் தெரிந்து கொள்வதற்காக, புரிந்தகொள்வதற்காக கல்வி கற்க வேண்டும் அய்யா.
  நான் பள்ளியில் படித்த போது எவ்வளவு மதிப்பெண் பெற்றாள், உங்கள் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் என்ன என்று யாரும் கேட்டதில்லை.
  ஆனால் இன்று நிலைமை தலைகீழாக உள்ளது.

  ReplyDelete
 4. பசித்திருப்பவனுக்கு மீன் கொடுப்பதைவிடமீன் பிடிக்கக்கற்றுக் கொடுத்தலே சிறந்தது. பேதமற்ற கல்வி அறிவு அவர்கள் சிந்தனைகளில் மாற்றம் கொண்டு வரும்.

  அறிவார்ந்த சிந்தனைக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete

 5. @ அப்பாதுரை
  முதல் வருகைக்கு நன்றி. ஆதங்கங்களடங்கவில்லை. அதனால்தான் மீண்டும் மீண்டும் கருத்திடுகிறேன். பிரக்யாதி என்றால் பெயர்பெற்ற ( famous ) என்ர பொருளில் என் தந்தையார் கூறியதாக நினைவு. ஒரு வேளை சம்ஸ்கிருதமோ.?நன்றி.

  ReplyDelete

 6. @ திண்டுக்கல் தனபாலன்.
  திருக்குறளின் விளக்கங்களைப் படித்துக் கொண்டு வரும்போது பொருள் கூறி எழுதியவர்கள் கூறும் பொருளிலேயே அவரவர் கொள்கைக்கேற்றபடி பொருள் கொளலை உணர முடிந்தது. இருந்தாலும் நீங்கள் சொல்வது போல் அவரவர் புரிந்து பொருள் கொள்வதே சிறந்தது என்று தோன்றுகிறது. நன்றி.

  ReplyDelete

 7. @ கரந்தை ஜெயக்குமார்.
  கல்வி யின் நிலை மாற வேண்டும். நடைமுறைக்கல்வியும் ஏற்றதாழ்வுகளை சமன் படுத்துவதில்லை. பள்ளியில் படிப்பவர் அனைவரும் சமம் என்னும் எண்ணம் விதைக்க எல்லோருக்கும் ஒரே கல்வி, சீருடை இலவச உணவு என்றிருந்தால் வேற்றுமை எண்ணங்கள் குறைய வாய்ப்புண்டு. There is a breed of race horses and there is A DOG'S RACE.

  ReplyDelete

 8. @ இராஜராஜேஸ்வரி.
  வருகைக்கும் உற்சாகமூட்டும் பாராட்டுக்கும் நன்றி.

  ReplyDelete
 9. இதற்காகவே கிராமங்களுக்கும் செல்லும் நவோதயா கல்வித்திட்டம், மத்திய அரசால் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது கொண்டு வரப் பட்டது. அண்டை மாநிலங்களில் எல்லாம் அதன் மூலம் பயன் கிடைக்கும்போது தமிழ்நாடு மட்டும் அதிலே ஹிந்தியும் ஒரு பாடம் என்பதால் ஒதுக்குகிறது. மத்திய அரசின் வீச்சு மிகப் பெரியது. அதன் இந்தக் கல்வித் திட்டமும் கற்றலை நேரடியாகப்புரிந்து கொள்வதன் மூலம் மாணாக்கர்களுக்கு மனப்பாடம் செய்து எழுதுவதைக் குறைக்கும் திட்டம் ஆகும். இதெல்லாம் இங்கே நினைத்துக் கூடப்பார்க்க முடியாத ஒன்று! :(((((

  ReplyDelete
 10. ஆங்கிலேயர் காலத்தில் தான் இந்தப் பிரிவினை ஏற்பட்டது என்பதற்கான சான்றுகள் நிறைய உள்ளன. நம்மிடம் உள்ள மாபெரும் குறையே எதுவும் மேல்நாட்டவர் சொன்னாலே ஒத்துப்போம். அப்படி மேல்நாட்டவர்களே சொல்லி இருக்கின்றனர். தற்சமயம் அவற்றைத் தேடி எடுக்க முடியாமல் இருக்கிறேன். :(

  ReplyDelete
 11. @ கீதா சாம்பசிவம்.
  என் கருத்துப்படி, கல்விசாலைகளில் பேதம் தெரியாமல் குழந்தைகள் வளர, எல்லோருக்கும் சமமான சீர் கல்வி, எல்லோருக்கும் சமமான இலவசமாக சீருடை. எல்லோருக்கும் சமமாக இலவசமாக மதிய உணவு என்று அரசாங்கம் செயல் படுத்தினால் வளரும் சிறார்கள் மனதில் ஏற்றதாழ்வும் வித்தியாசங்களும் தெரியாமல் இருக்கும் ஆங்கிலேயர் காலத்துக்கு முன்பே வள்ளுவன் காலத்திலேயே ஏற்றதாழ்வு பிரிவுகள் இருந்தன எனக் காட்டவே சில குறள்களைக் குறிப்பிட்டு இருக்கிறேன். நம்மிடமிருந்த பிரிவுகளை ஆங்கிலேயன் உபயோகப்படுத்திக் கொண்டான் என்பதே நான் சொல்ல வந்தது. அந்தச் சர்ச்சைக்குப் போக வேண்டாமென்றுதான், தீர்வாக நான் எண்ணியதை எழுதி உள்ளேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 12. ஆழமான சிந்தனை
  அனைவரையும் சமமாகக் கொள்ளும் எதுவுமே
  பயனுள்ளதாய் இருக்கும்,ஜாதி மதம்
  ஏழை பணக்காரன் என வித்தியாசப்படுத்தக் கூடிய
  எதுவும் நிச்சயம் அதற்கான பலனை
  அது முழுமையாகத் தராது
  அது ஜனநாயகமாயினும் கல்வி ஆயினும்
  ஆன்மிகமாயினும் என்பது எனது கருத்து
  பலர் தொடப்பயபப்டும் அரிய விஷயங்களை
  தொடப்படவேண்டிய விஷயங்களை
  முதிர்ச்சியான மனநிலையில் அலசி ஆராயும்
  உங்கள் பதிவு எனக்கு எப்போதும் ரொம்பப் பிடிக்கும்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. // வங்கிகளை அரசுடைமை ஆக்கியது போல் கல்வியும் அரசுடைமை ஆக்கப் பட வேண்டும். //

  நானும் உங்கள் பக்கம்தான். கல்வியை அரசுடைமை ஆக்கினால் நிச்சயம் எல்லோருக்கும் கல்வி நிடைக்கும்.

  ReplyDelete

 14. @ ரமணி
  @ தி. தமிழ் இளங்கோ
  என்னை மிகவும் பாதிக்கும் சிந்தனை. ஆதங்கங்களைப் பகிர்ந்து கொள்வதுடன் தீர்வு என்று ஒன்று இருக்குமானால் .இப்படி இருக்கலாமே என்ற எண்ணமே இப்பதிவு. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  ReplyDelete
 15. மண்ணாசையும் பொன்னாசையும் பணத்தாசையும் இருக்கும் வரை சாதியும் மதமும் தவிர்க்க முடியாதது.

  ReplyDelete
 16. சமூகத்தில் நிலவும் கல்வி குறித்த கவலை தரும் செய்திகளைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி. இங்கே ஆஸ்திரேலியாவில் அரசுப்பள்ளிகளின் தரம் தனியார் பள்ளிகளுக்கு நிகராக இல்லையென்றாலும் குறை சொல்ல இயலாதபடி எல்லா வசதிகளையும் உள்ளடக்கியது. ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும், பள்ளிகளின் தரமும், பாடத்திட்டங்களும், செயல்முறைகளும் என்று அனைத்துமே பலவகையிலும் போற்றத்தக்கவகையில் உள்ளன. அரசின் உதவி பலவகையில் பள்ளிகளுக்குக் கிடைக்கிறது. இங்கே மருத்துவர் பிள்ளைகளும், கொத்தனார் பிள்ளைகளும் ஒன்றாகப்படிக்கின்றனர். இந்நிலை இந்தியாவில் சாத்தியமா என்று தெரியவில்லை.

  \\சிலர் எழுதும் பதிவுகளில் இந்த சாதி குல வேறுபாடுகள் பண்டைக் காலத்தில் இருக்க வில்லை என்றும் இவை எல்லாவற்றுக்கும் ஆங்கிலேயர்களே காரணம் என்பதுபோலவும் எழுதுகின்றனர்.\\

  பண்டைக்காலத்தில் பிறப்பால் உயர்வு தாழ்வு இருந்த நிலையை இந்தப் பதிவிலும் காணலாம்.
  http://sgnanasambandan.blogspot.com.au/2013/05/blog-post_31.html

  ReplyDelete

 17. @ கவியாழி கண்ணதாசன்.
  @ கீதமஞ்சரி.
  எதுவும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கை தேவை. நான் பதிவு எழுதுவதால் மாற்றம் வரும் என்று நிச்சயமாக நினைக்கவில்லை. இருந்தாலும் என் பதிவு சிலரது சிந்தனைகளையாவது தூண்டுமானால் மாற்றத்துக்கு விதை விதைத்தவன் ஆவேன்.என்னிலும் முத்த தமிழறிஞரின் பதிவுக்கு அறிமுகம் செய்து வைத்த கீத மஞ்சரிக்கு நன்றி.

  ReplyDelete
 18. கல்வியே செல்வம்.என்பதில் ஐயமில்லை. ஆனால் செல்வம் இருந்தால் தான் கல்வியே என்பதும் மறுக்க முடியாத நிஜம்.
  அருமையான பதிவு/ நன்றி

  ReplyDelete
 19. ஏற்றத் தாழ்வுகளை நிர்ணயம் செய்வது பணம் ஒன்றுதான்..அதை கல்வியைக் கொண்டு தான்சமன் செய்ய முடியும் என்று தெளிவாக விளக்கியுள்ளீர்கள். ஆனால் இன்று கல்வியே வியாபாரம் ஆகிவிட்ட நிலையில் ?

  நல்லதொரு பகிர்வுக்கு நன்றிங்க ஐயா.

  ReplyDelete

 20. @ சசிகலா
  அதற்குத்தான் கல்வியை வியாபாரிகளிடம் இருந்து மீட்டு அனைவருக்கும் சமம் என்று எண்ண வைக்க அரசே அனைவருக்கும் இலவசக் கல்வி, இலவச உணவு இலவச சீருடைஎன்று கொடுத்தால் இளவயது முதலே உயர்வு தாழ்வு பற்றிய சிந்தனைகள் வராது. வருகைக்கு உங்களுக்கும் வலைச்சரத்துக்கும் நன்றி மேடம்

  ReplyDelete

 21. கல்வி நிலையில் சமநிலை வரவேண்டும் ஐயா.

  ReplyDelete
 22. ஐயா வணக்கம்.

  நீங்கள் சொல்வது உண்மைதான்.

  கல்வி நிச்சயமாய் ஏற்றதாழ்வினைப் போக்கக் கூடியதே!

  இந்த இடுகையில் இடம்பெற வேண்டிய முக்கியமான பாடலாக பின்வரும் பாடலைக் கருதுகிறேன்.

  இரண்டு காரணங்களுக்காக,

  ஒன்று நீங்கள் சொன்ன உயர்வு தாழ்வினைத் தீர்மானிக்கக் கூடிய அம்சமாக கல்வி இருக்கிறது என்பதற்காக.

  இன்னொன்று, இந்தச் சாதி என்பது பழந்தமிழகத்தில் இருந்தது என்பதற்கும், அதே நேரம், சாதியை அடிப்படையாகக் கொண்டு இன்னார்க்குக் கற்பதற்கு உரிமை உண்டு, இன்னார்க்குக் கற்கும் உரிமை இல்லை என்ற சூழல் வரைமுறைகள் பண்டைத் தமிழர் நெறியில் இல்லை என்பதற்கும்.

  உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
  பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
  பிறப்போர் அன்ன உடன்வயிற்று உள்ளும்
  சிறப்பின் பாலால் தாயும்மனந் திரியும்
  ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
  மூத்தோன் வருக என்னாது அவருள்
  அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்
  வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
  கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
  மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே!

  இதைப் பாடியவன் சாதாரண குடிமகன் அல்லன்.

  ஒரு ஆரியப்படை கடந்த பாண்டி நெடுஞ்செழியன் என்னும் அரசன்.

  ஒரு தாயின் பல மக்களுள்ளும் படித்தவன்பால் ஆர்வத்தோடு தாயின் மனமானது தங்கும் என்பதும்,

  ஏதேனும அலுவல் சம்பந்தமாக அரசன் ஒரு குடியை அழைக்கும்போது, அங்கு யார் வயதில் பெரியவர்கள் என்று கேட்காது, படித்தவன் யார்,.அவன் முன்னே வருக என்றே சொல்லும் என்பதும்,

  நால்வருண வேற்றுமை இருப்பினும், கல்வி கற்ற ஒருவன் கீழ்க்குடியினனாகக் கருதப் பட்டாலும் மேல்குடியினன் அவன்கீழ்தான் இருக்க வேண்டும் என்பதும்,

  அவ்வரசின் அரசின் நெறியாக அன்றே இருந்திருக்கிறது.

  ஒரு கட்டத்தில் கல்வியின் உரிமையைப் பறித்தால்தான் ஏற்றதாழ்வினை ஏற்படுத்த முடியும் என்று கண்டவர்கள் அதைச் செய்தார்கள்.

  கல்வியைக் கொடுத்தால்தான் அதைக் களைய முடியும் என்று இன்று அதைச் செய்கிறோம்.

  பலவற்றையும் சிந்திக்கச் செய்கிறது உங்கள் பதிவு.

  “ஆரியப் படை கடந்த” என்ற இந்தப் பாடலாசிரியரின் அடைமொழிக்குப் போலும் பொருளாழம் இருப்பதாகத் தோன்றுகிறது எனக்கு இந்தக் கணத்தில்.


  நன்றி.

  ReplyDelete

 23. @ கில்லர்ஜி
  கல்விநிலையில் சமநிலை வரவேண்டும் என்னும்ம் உங்கள் கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது, வலைச்சரத்துக்கும் உங்களுக்கும் நன்றி ஐயா.

  ReplyDelete

 24. @ ஊமைக்கனவுகள்
  ஐயா வணக்கம் . பதிவின் உட்பொருளை வாங்கிக் கொண்டு அதற்கு இணையான பழந்தமிழ் பாடல்களைக் கோர்த்து ஒரு பெரிய பின்னூட்டமே எழுதி இருக்கிறீர்கள். இந்த உயர்வு தாழ்வு வேற்றுமை என்னுள் பெரிய பாதிப்பையே ஏற்படுத்துகிறதுஅது பற்றி நான் எழுதுவதே இது யாரிடமாவது சிறிய சஞ்சலத்தையாவது ஏற்படுத்தாதா என்றுதான் ஆனால் இந்த சாதிக் கருத்துக்கள் நம் இரத்ததில் ஊறி விட்டன. ஒரு சமகல்வியாவது வரும் சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை உண்டுபண்ணக் கூடாதா என்னும் நப்பாசையே. பதவியில் இருந்தோர் முன் காலத்தில் அது பற்றி சிந்தித்து இருக்கலாம் ஆனால் நான் எழுதுவது காரணகாரியங்களுடன் தற்போதையநிலையைத்தான் வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 25. அரசுடைமையாக்கப்பட்டுப் பொதுக் கல்வி முறை வர வேண்டும், ஆனால் அது ஊழல் அரசியலில் சிக்கக் கூடாதென்றும் ஒரு கவலை வரத்தான் செய்கிறது ஐயா.
  கீதமஞ்சரி சொல்வது போல இங்கு அமெரிக்காவிலும் அரசுப் பள்ளிகள் தரமாகவே இருக்கின்றன. சில தனியார்ப் பள்ளிகளில் அதிகத்தரம் இருந்தாலும் அரசுப் பள்ளிகள் குறை சொல்லும் அளவிற்கு இல்லை. அனைத்துக் குழந்தைகளும் வேறுபாடின்றி ஒன்றாகப் படிக்கின்றனர்..ஒருவருடம் என் மகன் வகுப்பில் செனேட்டர் ஒருவரின் குழந்தையும் இருந்தது. அனைத்துப் பெற்றோரைப் போலவே பள்ளி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார்.
  //இருந்துவந்த வேறுபாடுகளை ஆங்கிலேயர்கள் உபயோகித்துக் கொண்டனர் என்பதும் அப்போது கல்வி கற்க அனுமதிக்கப் பட்டவர்கள் அவர்களுக்குத் துணை போனார்கள் என்பதுமே என் கட்சி// என் கட்சியும் அதுவே, இருந்த வேற்றுமைகளை ஊதிப் பெரிதாக்கித் தங்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொண்டனர் ஆங்கிலேயர்.

  ReplyDelete

 26. @ தேன் மதுரத் தமிழ் கிரேஸ்
  பள்ளிகளைப் பொறுத்த்வரை வியாபாரிகளிடம் இருக்கும் வரை ஊழல் தொடரும் அதனால்தான் அரசு உடைமை ஆக்கப் பட வேண்டும் என்கிறேன் அரசு உடைமை ஆக்கப்பட்டாலும் போதாது அனைவருக்கும் இலவசக் கல்வி இலவச உணவு. இலவச சீருடை கட்டாயமாக்கப் படவேண்டும் வருங்காலச் சந்ததியினர் மனதில் உயர்வு தாழ்வு வேறுபாடு தோன்றாது என்று நம்புகிறேன் வருகைக்கு நன்றி மேடம்.

  ReplyDelete
 27. சார்! கல்வி சமச்சீர் கல்வி, தமிழ் நாட்டில் வந்திருந்தாலும், இன்னும் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. பல விதமான பாடதிட்டங்கள். அதை எல்லாம் ஒழித்துவிட்டு நீங்கள் சொல்லி இருப்பது போல் எல்லா சாராரும் வேற்றுமை இன்றி கல்வி பயில வேண்டும் என்றால் இந்தியா முழுவதும் ஒரே விதமான கல்வி, எல்லோருக்கும் வர வேண்டும். தனியார் என்பது இருக்கக் கூடாது. தனியார் என்றால் வியாபாரம் இப்போது போல். ஆனால் அரசின் கீழ் வந்தாலும், ஊழல்கள் இருக்குமே. நமது ஊரில் ஏற்கனவே அரசு கல்வித் துறையிலும் ஊழல் செய்கின்றதே சார். இலவசக் கல்வி சரிதான். ஆனால், இலவசம் என்று வரும் போது அதன்மதிப்பு போய்விடாதோ சார்? அவரவர் நிதி நிலைமைக்கு ஏற்ப கல்வி கட்டணம் வசூலிப்பது என்பது நல்லதல்லவா சார்? - இருந்தாலும் ஊழல் இல்லாத, எல்லா தரப்பினருக்கும் பொதுவான கல்வி முறை வந்தால் நல்லதே....

  - இருவரும்....

  கீதா : அமெரிக்காவில் அரசு பள்ளிகள் கூட மிகவும் தரம் வாய்ந்தவையாக இருக்கின்றன சார். சுமார் 12 வருடங்களுக்கு முன்பு, அமெரிக்க அரசு பள்ளியில் கல்வி கட்டணம் வருடத்திற்கு $36 டாலர்தான். ஒரு நாள் ஒரு குழந்தை வரவில்லை என்றாலும், பள்ளிக்கு அரசு அளிக்கும் மானியத்தில் $16 கழிக்கப்பட்டுவிடும். எனவே பள்ளி லீவு எடுப்பதை அனுமதிப்பதில்லை. பள்ளியிலேயே புத்தகங்கள் வழங்கப்பட்டுவிடும். எல்லாமே நல்ல தரமான காகிதங்களில் மிகத் தெளிவான படங்களுடன், தடி தடியாக பாடப் புத்தகங்கள் போல் இல்லாமல், ரெஃபெரன்ஸ் புத்தகம் போல்...வழங்கினார்கள். அவற்றை நாம் மிகவும் கவனமாகக் கையாண்டு எந்தவித சேதமும் இல்லாமல் அந்த வருடம் முடியும் தருவாயில் பள்ளியிடம் ஒப்படைத்துவிட வேண்டும். மிக அருமையான பள்ளி, ஆசிரியர்கள், பாடம் கற்பிப்பதும் அவ்வாறே....அங்கு ஆசிரியர்கள்ம் வகுப்பில் சந்தேகம், விளக்கம், வினா கேட்கும் மாணவ மாணவிகளைத் தரக் குறைவாகப் பேச மாட்டார்கள். பாராட்டுவார்கள். பாராட்டிவிட்டு உடனேயே பதில் அளிப்பார்கள். தெரியவில்லை என்றால் உடனே இணைத்தில் கூகுளில் தேடி விடையைப் பகிர்வார்கள். அப்படியும் முடியவில்லை என்றால் அடுத்த நாள் வந்து சொல்லித் தருகின்றேன் என்று சொல்லி தனக்குத் தெரியாததை ஒப்புக் கொண்டு, விடை தேட முயலுவார்கள். அடுத்த நாள் வகுப்பிற்குள் வந்ததும், முதலில் முதல் நாள் எழுப்பப்பட்டக் கேள்விகளுக்கு விடை பகிர்ந்து விட்டுத்தான் அன்றைய பாடத்தை எடுக்கத் துவங்குவார்கள். அந்த அளவிற்கு ஈகோ இல்லாத ஆசிரிய மாணவ உறவு மிக அழாகாக அமைந்து கையாளப்படும் சார். இது போன்ற ஈகோ இல்லாத ஒரு உறவை இங்கு எதிர்பார்க்க முடியுமா சார்?

  இப்படி இங்கு செய்வார்களா? சார் முதலில் இங்கு இருக்கும் அரசு பள்ளிகள் ஒழுங்காக நடந்தாலே பெரிய விஷயம்....

  ReplyDelete

 28. @ துளசிதரன் ,கீதா
  என் பதிவின் அடிப்படை ஆதங்கம் புரியவில்லையோ என்னும் சந்தேகம் வருகிறது நான் சொல்ல விரும்பும் கல்வி முறையில் மனதளவில் சிறார்கள் எல்லா விதத்திலும் சமமே என்று உணரும் வாய்ப்பு அதிகம் இந்த உயர்வு தாழ்வு எண்ணங்கள் நம் ரத்தத்தில் ஊறியவை எளிதில் போகாது. எல்லாம் இலவசம் என்பதே எல்லோரும் சமம் என்பதை உணர்த்தவே, அரசுடமையானால் ஊழல் இருக்குமே என்பது நியாயமான கேள்வி கல்வியை அகில இந்திய அளவில் அரசுடமை ஆக்க இந்தியாவுக்கு ஒரு பெனெவொலெண்ட் சர்வாதிகாரியால்தான் முடியும். அப்போது ஊழல் இருக்காது என்று நம்பலாம் என் பதிவு சிந்தனையைத் தூண்டி இருப்பதே இப்போதைய வெற்றி.

  ReplyDelete