வியாழன், 31 அக்டோபர், 2013

தீபாவளி நினைவுகள்.

                            தீபாவளி நினைவுகள்......
                           ------------------------------



எத்தனையோ தீபாவளித் திரு நாட்கள் வந்து போய் விட்டன. இருந்தாலும் நினைவை விட்டகலாத தீபாவளி என்று சொல்ல வேண்டுமானால் அது நாங்கள் கோவிந்தராஜபுரத்தில் எங்கள் பாட்டியின் வீட்டில் இருந்தபோது எனது பத்தாவதோ பதினோறாவதோ வயதில் வந்ததுதான். நாங்கள் இருந்த அக்கிரகாரத்தில் (கிராமம் என்பார்கள்) வசித்தவர்கள் எல்லாம் தமிழ் பேசும் பிராம்மணர்கள். கிராமம் இருந்த கேரளத்தில்.தீபாவளிப் பண்டிகைக்கு மவுசு கிடையாது. புதுத் துணி, பட்டாசுகள் எல்லாம் விஷ்வுக்குத்தான். வீடுகளில் காலையில் எண்ணைக் குளியல் இருக்கும். ஏதோ பெயருக்கு சில இனிப்புகள் செய்வார்கள். நானும் என் தம்பியும் தீபாவளியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். புதிய ஆடைகள் பட்டாசுகள் இனிப்புகள் என்று ஏதேதோ எண்ணிக் கொண்டிருந்தோம், பாட்டி எங்களுக்குப் புத்தாடைகள் ஏதும் கிடையாதென்று சொல்லிவிட்டார். பாவம் அவரால் ஒன்றும் செய்ய முடியாத குடும்ப நிலை. அக்கம் பக்கத்து வீடுகளில் பட்டாசுகள் வெடிக்கத் துவங்கி விட்டன. ( பட்டாசுகள் இல்லாமல் இல்லை. ஆனால் அவை மிகவும் அவசியம் என்று கருதப்படாத ஒரு சூழல் )நாங்கள் முகம் வாடி இருந்தபோது, தற்செயலாக எங்கள் தாய் மாமா ஒருவர் அங்கு வந்தார். எங்கள் நிலைகண்டு இரக்கப் பட்டு ரூபாய் இரண்டு கொடுத்துப் பட்டாசுகள் வாங்கிக் கொள்ளச் சொன்னார். எங்களுக்கு திடீர் என்று உற்சாகம் வந்தது. கிராமத்தின் அருகே ஓடும் நதியின் அக்கரையில் கந்தகத் தூள் விற்கிறார்கள் என்று கேள்விப்பட்டுஒரு ரூபாய்க்கு கந்தகத் தூள் வாங்கினோம். சிகரெட் பாக்கெட்டுகளில் இருக்கும் ஜிகினா ஃபாயில்களைப் பொறுக்கினோம். ஒரு நீளக் கோலில் துளை இருக்கும் பெரிய சாவி ஒன்றைக் கட்டினோம். ஜிகினாப் பேப்பரைத் துண்டுகளாக கத்தரித்துக் கொண்டு ஒவ்வொன்றிலும் சிறிது கந்தகத் தூளைப்போட்டு சிறு உருண்டையாகச் சுருட்டிக் கொண்டோம். அந்த உருண்டைகளை சாவித்துவாரத்தில் போட்டோம். ஒரு நீள ஆணியை  அந்தக் கோலில் கட்டி  ஆணியைத் துளையின் மேல் வைத்து ஓங்கிப் அடித்தால் டமார்என வெடி....! இந்த improvised   வெடியை நாள் முழுவதும் வெடித்துக் கொண்டு தீபாவளி கொண்டாடினோம் மீதி இருந்த ஒரு ரூபாய்க்கு ஓலை வெடியும் வெங்காய வெடியும் .கொண்டாட்டம்தான்.
இன்னொரு தீபாவளியும் மறக்க முடியாது. தீபாவளி அன்று விடியற்காலையில் பட்டாசுகள் எல்லாம் வெடித்து விட்டு  பலகாரம் எல்லாம் சாப்பிட்டு விட்டு வெடிக்காத பட்டாசுகளைத் தேடி எடுத்துக் கொண்டிருந்தான் என் தம்பிகளில் ஒருவன். ஒரு கையில் பட்டாசும் மறு கையில்  பற்றவைத்த ஊதுபத்திக் குச்சியையும் அருகே வைத்து ஊதிக் கொண்டிருந்தவன் , திடீரென்று “ அம்மா செத்தேன்என்று கூச்சலிடவே வந்து பார்த்தால் அந்த ஊசி வெடி வெடித்து அவன் முகமெல்லாம் கரியுடன்......! அன்று அது சிறிய ஊசி வெடியாய் இருந்ததால் சேதம் இல்லாமல் தப்பினான்.
திருமணமாகி எங்கள் பிள்ளைகளுடன் தீபாவளி அன்று அதிகாலையில் ஒரு பட்டாசு கொளுத்தி வெடி போட்டு . குளியல் எல்லாம் முடிந்து பிள்ளைகள் பட்டாசு வெடித்து மகிழ்வது காணக் கண் கொள்ளாக் காட்சியாகும். இப்போதெல்லாம் தொலைக் காட்சி பெட்டி முன் அமர்ந்து பட்டிமன்றம் நிகழ்ச்சிகளைக் காண்பதோடும் உலகத் தொலைக் காட்சி வரலாற்றிலேயே முதன் முதலாக என்று ஒளிபரப்பாகும் திரைப் படங்களைப் பார்ப்பதிலும் தீபாவளி சென்று விடுகிறது.....!  
   
ஆயிரம் தீபங்கள் உங்கள் வாழ்வில் ஒளியேற்றட்டும்.


.......
            
                            ------------------------------

செவ்வாய், 29 அக்டோபர், 2013

தீபாவளி நன்று கொண்டாடுவோம்


                  தீபாவளி நன்று கொண்டாடுவோம்.
                  -------------------------------------------------



பண்டிகைகள் கொண்டாடவே; ஆயிரம் காரணங்கள்
புராண ஆதாரங்கள் காரணம் பல காட்டினாலும்
பண்டிகைகள் கொண்டாடவே; மகிழ்வாய் இருக்கவே.
நரகாசுரன் இறக்கும்போது கேட்ட வரமோ, ராமனின்
வனவாசம் முடிந்து திரும்பும் நாளோ, சக்தியின்
கேதாரகௌரி விரதம் பூர்த்தியாகிப் பின்னர்
அர்தநாரீஸ்வரியான (ரரான) தினமோ, ஏதானால் என்ன ?
தீபாவளிப் பண்டிகை நாள் நன்று கொண்டாடுவோம்.
அகில இந்தியாவிலும் , ஏன் உலகின் பிற பாகங்களிலும்கூட
தீபாவளி கொண்டாடப் படுகிறது. சீக்கியர் பொற்கோயில்
கட்டத் துவங்கிய தினமென்றும்,  சமணர் மகாவீரர் நிர்வாணம்
அடைந்த தினமென்றும், கொண்டாட்டம் நன்று கொண்டாடுவோம்
ஆண்டில் ஒரு நாள் உற்றமும் சுற்றமும் கூடி மகிழவும்
அகத்தின் அகந்தை, பொறாமை, அறியாமை, இருள் நீக்கி
தீப ஆவளியில்  ஒளிவரிசையில் வெளிச்சம் பெற
தீபாவளிப் பண்டிகை நன்று ;கொண்டாடுவோம்.
உறவுகள் கூடவும், கோடி உடுத்தி மகிழவும், பெரியோர்
ஆசியில் நனையவும், தீபாவளி நன்று கொண்டாடுவோம்
வேண்டாதன விட்டொழிப்பதை தலை முழுகுதல் எனக் கூறுவர்
கங்கா ஸ்நானமும் ஒரு தலை முழுகலே நம்மில் இருக்கும்
“நான்ஐ பட்டாசு வாணங்களில் கொளுத்தித் தலைமுழுகி
இனிப்பதனைப் பகிர்ந்துண்டு தீபாவளிப்
பண்டிகை நன்று கொண்டாடுவோம்  


                     வாண வேடிக்கை கண்டு மகிழுங்கள்

   
 
 
              தீபாவளி இனிப்புகள் .போதுமா இன்னும் வேணுமா.?
  ( அனைவருக்கும்  தீபாவளி வாழ்த்துகள் )

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

படங்களே பதிவாய்

https://pbs.twimg.com/media/BJNiHZqCYAEg_8T.jpg:large
பச்சோந்திக் குட்டிகள்


https://pbs.twimg.com/media/BJRmEWNCEAAn0qr.jpg:large
என்னை நானே ஒரு படம் எடுத்துக் கொள்கிறேனே

படங்களே பதிவாகிறது. உங்கள் ரசனைக்கு. திரு.H.N.S. மணிக்கு நன்றி.








https://pbs.twimg.com/media/BJmPgwoCAAEjZDd.jpg:large
என்னைவிட வேகமாக ஓட முடியுமா.?













https://pbs.twimg.com/media/BJRio7NCcAAKo-x.jpg:large
கால் சுடுதே கால் சுடுதே
https://pbs.twimg.com/media/BJcHF9zCcAAkOjk.jpg:large
எய்ஃபெல் டவர் அருகே முத்தம்
https://pbs.twimg.com/media/BJcFVXXCIAAfbpU.jpg:large
நாங்களும் கட்டி அணைப்போமே
https://pbs.twimg.com/media/BJhm6_dCcAAO2Bn.jpg:large
எனக்கு பயமே இல்லையே

https://pbs.twimg.com/media/BJmaOapCMAE3Mtd.jpg:large
நீலவிழிகளும் பொன்னிறக் கோடுகளும்  நான் வித்தியாசமானவன்

சனி, 26 அக்டோபர், 2013

மீண்டும் நினைவுகள் தொகுப்பு.


                     மீண்டும் நினைவுகள் ... தொகுப்பு.
                    ----------------------------------------------

வாய் முஹூர்த்தம்
-----------------------------


நான் சும்மா இருக்கும்போது- நான் எப்போது சும்மா இருக்கிறேன்.? எதையாவது சிந்தித்துக் கொண்டிருப்பது சும்மா இருப்பதாகுமா.?இப்போது நான் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்?சும்மா இருக்கும் போது ( மீண்டும் சும்மா) எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் சிலரது முகங்கள் கண்முன்னே ( மனக் கண்ணில் ) காட்சி அளிக்கின்றன. அப்போது அவரைப் பற்றிய சில நினைவுகள் முட்டி மோதுகின்றன. பொதுவாகவே நான் யாரையும் குறிப்பிட்டு எழுதுவதில்லை. என்றாலும் அம்மாதிரி பாத்திரங்கள் பல சமயங்களில் என் எழுத்துக்களில் புகுந்து விடுவது உண்டு. நானும் அந்த மாதிரி எழுதும்போது யார் மனதும் புண்படாதபடி எழுதுவதில் கவனமாய் இருப்பேன். இப்போது ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறேன். அந்த நண்பர் என் வீட்டுக்கு வந்திருந்தார். எனக்கு ஒரு பழக்கம். நான் எதையும் துருவித் துருவி கேட்பதில்லை. . இந்த நண்பர் என் வீட்டுக்கு வந்திருந்தபோது எதையோ என்னிடம் சொல்லத் துடிக்கிறார் என்று தெரிந்தது. முகம் மிகவும் வாடி இருந்தது. பொதுவாக அனைவரும் நலமா என்று கேட்டேன். அனைவர் என்ன இருப்பது நானும் என் மனைவியும் மட்டும்தான்என்று சலித்துக் கொண்டார். குழந்தைகள் பற்றிக் கேட்டேன். ஐந்து முறை கர்ப்பம் தரித்தும் அனைத்துமே குறைப் பிரசவமாகி விட்டது என்று கூறி கண்கலங்கினார்.இந்த முறை ஆறாவது கர்ப்பம் ஆறு மாதமாகிறது கவலையாய் இருக்கிறது என்றார். நான் அவரைத் தேற்றும் விதத்தில் “ இந்த முறை கவலைப் படாமல் இரு. உன் மனைவி நிச்சயமாய் ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுப்பாள் என்று கூறினேன். பிறகு அவர் மனம் உற்சாகப் படும் விதத்தில் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அவர் போன பிறகும் அவரது நிலை குறித்த எங்கள் கவலை தொடர்ந்தது.
இது நடந்து சிலகாலம் வரை அந்த நண்பர் என் வீட்டுக்கு வரவில்லை. திடீரென்று ஒரு நாள் முகமெல்லாம் பூரிப்புடன் வந்து எங்களுக்கு இனிப்பு கொடுத்தார். அவரது மனைவி ஒரு பெண்மகவை நலமாக ஈன்றெடுத்திருக்கிறாள் என்று சொன்னார். அத்துடன் விடவில்லை “ உங்கள் வாய் முகூர்த்தமும் ஆசியுமே எனக்குப் பெண்ணாய் பிறந்திருக்கிறது. நாங்கள் முருகனை சேவிப்பவர்கள். நீங்கள் முருகக் கடவுள் சம்பந்தப் பட்ட ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொடுங்கள் அந்தப் பெயரையே வைக்கிறோம்என்றார். இந்த எதிர்பாராத வேண்டுதலைத் தட்ட முடியவில்லை. பிறந்தது பெண்குழந்தை ஆதலால் “ கிருத்திகா அல்லது கார்த்திகாஎன்று பெயர் சூட்டுங்கள் என்றேன் அவர் முகமும் அந்த நிகழ்வும் எந்த முகாந்திரமும் இல்லாமல் நினைவுக்கு வந்து எழுதிவிட்டேன்.இப்போது அவரும் அவரது மகளும் எங்கோ நலமாயிருக்க வேண்டுகிறேன்

கைராசி முகராசி
------------------



எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் சில நிகழ்வுகள். காரண காரியங்கள் இருக்கலாம். ஆனால் அவை எல்லாம் ஏதோ abstract  எண்ணங்களின் வெளிப்பாடே. இந்த நிகழ்ச்சியும் நாங்கள் திருச்சியில் குடியிருப்பிலிருக்கும்போது நிகழ்ந்தது. ஒரு விடுமுறை நாள். ஒருவர் எங்கள் வீட்டுக்கு வந்தார். அவரும் குடியிருப்பில் வசிப்பதாகக் கூறினார். அறிமுகப் படுத்திக் கொண்டவர் பின் அவர் மகன் பெயரில் திருவெறும்பூரில் ஒரு மின்சாரக் கருவிகள் சேல்ஸ் அண்ட் செர்வீஸ் கடை திறக்க இருப்பதாகக் கூறினார். முன் பின் பழக்கமில்லாத எங்களிடம் இதை எல்லாம் சொல்ல வேண்டிய காரணம் என்ன என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே அவர் அந்த விண்ணப்பம் வைத்தார். அவர் புதிதாகத் திறக்க இருந்த கடையை என் மனைவி  குத்து விளக்கேற்றி திறக்க வேண்டும் என்றார். முதலில் அவர் விலாசம் தவறி வந்து விட்டார் என்றே நினைத்தேன். அப்போது BHEL  நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்தவர் பெயரும் என் பெயர்தான். என் இனிஷியல் ஏதோ தவறுக்கு வழி வகுத்துவிட்டதோ என்று சந்தேகம் வந்தது.எத்தனையோ பெரிய பிரமுகர்கள் இருக்கும்போது எங்களைஅழைத்தது ஏன் என்று அவரிடம் மீண்டும் கேட்டபோது அவர் என் மனைவியைக் கோயிலில் பார்த்திருப்பதாகவும் அவர் மேல் ஒரு மரியாதை எழுந்து அவரே அந்தப் புதுக் கடையை விளக்கேற்றி திறக்க வேண்டுமென்று தோன்றியதாகவும் கூறினார். பூவுடன் சேர்ந்த நாரும் மணக்கும் என்பது போல் என் மனைவியால் எனக்கும் மரியாதை கிடைத்தது அது நடந்து சில காலத்துக்குப் பின் இன்னொரு திறப்பு விழாவுக்கும் என் மனைவியை  (கூடவே என்னையும் ) முதல் கடை நன்றாக இயங்கியதால் அழைத்தார்

கருவேப்பிலை
------------
ஒரு முறை சாலையில் நடந்து கொண்டிருந்தபோது  எதிரே வந்த ஒருவர் புன் முறுவலுடன் என்னை நிறுத்தி நலம் விசாரித்தார். நானும் அவர் கேட்ட கேள்விகளுக்கு அனிச்சையாக பதில் சொல்லிக் கொண்டு வந்தேன். இருந்தாலும் “ இவர் யார் “ என்ற கேள்வி மனசைக் குடைந்து கொண்டே இருந்தது. ஒரு ஐந்து நிமிட விசாரிப்புக்குப் பின் அவர் போகத் தொடங்கினார். என் மன அரிப்பு , “ நீங்கள் யார் .? நினைவுக்கு வரவில்லையே “ என்றேன். அவ்வளவுதான். அவருக்குஒரேயடியாகக் கோபம் வந்து விட்டது. “ நீங்களெல்லாம் ஒரே மாதிரிதான்காரியம் ஆக வேண்டி இருந்தால் காலைப் பிடிப்பீர்கள். தேவை முடிந்து விட்டால் கருவேப்பிலை போல் தூக்கி எறிவீர்கள்என்று பொரிந்து தள்ளிவிட்டார். அவரை சமாதானம் செய்து என் மறதிக்கு என்னை மன்னிக்கும்படி வேண்டிக் கொண்டு மீண்டும் அவர் யார் என்று கேட்டேன். HAL -ல்  பயிற்சியில் இருக்கும்போது வாரம் ஒரு இடம் என்று அநேக பிரிவுகளுக்குப் பயிற்சிக்கு அனுப்புவார்கள். அந்த மாதிரி ஒரு பத்து பன்னிரண்டு பிரிவுகளாவது இருந்திருக்கும். அப்படிப்பட்ட காலத்தில் ஏதோ ஒரு பிரிவில் ( என்ன பிரிவு என்று இப்போது நினைவுக்கு வரவில்லை)ஒரு வாரகாலம் பயிற்சியில் இருந்தபோது இவரது அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. அது முடிந்து ஆண்டுகள் பல கழிந்து விட்டிருந்தன. திடீரென அவர் சாலையில் என்னைப் பார்த்துப் பேசியிருக்கிறார். இதைய்நெல்லாம் அவரிடம்விளக்கிக் கூறியும் அவர் சமாதானமாகாமலேயே சென்றுவிட்டார்.  சரி. இதை நான் இப்போது எழுதக் காரணம் என்ன.?நம்பினால் நம்புங்கள் திடீரென அவர் முகமும் அந்த நிகழ்வும் மனத்திரையில் ஓடியதுதான். பொதுவாக இளவயதில் பார்த்தவர்களின் உருவம் இப்போது நினைத்துப் பார்க்கும் போது ஒரு நிழலாகத்தான் தெரியும். ஆனால் எப்போதோ நடந்த நிகழ்ச்சி இவ்வளவு தெளிவாகத் தோன்றுவதன் காரணமென்ன?
.
இன்னும் ஒரு கருவேப்பிலை
-------------------------


நாங்கள் பயிற்சி முடிந்து HAL AERO ENGINE DIVISION-ல் பணிக்கு அமர்த்தப் பட்டோம். அப்போது அது துவக்க நிலையிலேயே இருந்தது. பணி செய்யத் தேவையான மெஷின்கள் வந்த வண்ணமும் அவற்றை நிறுவுவதுமே முக்கிய பணியாக இருந்தது. அங்கிருந்த மெயிண்டெனன்ஸ் துறையின் மேற்பார்வையில் மெஷின்கள் நிறுவப் பட்டுக் வந்தன. அப்போதைய அந்தத் துறையின் மேலாளர் சொன்னது இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது “ இந்தத் தளவாடங்கள் நிறுவப்படும் வரையில் எங்களுக்கு மரியாதை. முன் வாசலில் வரவேற்கப் படுவோம். நிறுவி முடித்த பின்னர் எங்களை யாரும் சீண்டக்கூட மாட்டார்கள். நீங்கள் பரவாயில்லை. இங்கே வேலையில் தொடர்வீர்கள்  எங்களை கருவேப்பிலை மாதிரி ஒதுக்கி விடுவார்கள்வாழ்க்கையின் ஒரு அழகான தத்துவத்தை அவர் போதித்தார். ஒருவருக்கு நம்மால் காரியம் ஆகும் வரையே மதிப்பு முக்கியத்துவம் எல்லாம். பிறகு கருவேப்பிலை மாதிரி ஒதுக்கப் படுவோம். இதுதான் வாழ்க்கை. .
 
 

வியாழன், 24 அக்டோபர், 2013

அடையாளங்கள்......


                                               அடையாளங்கள்
                                                -----------------------


உனக்கு கிருஷ்ணமூர்த்தியைத் தெரியுமா.?
“ யார்... அந்த சொட்டைத்தலை இரட்டை மண்டை கிருஷ்ண மூர்த்தியா.?
“ இல்லை ....கல்பாத்தி பாகவதர் சுந்தாவின் பிள்ளை.
எத்தனையோ கிருஷ்ணமூர்த்திகள் தெரியும் இருந்தாலும் குறிப்பிட்டவரைத் தெரிந்து கொள்ள அடையாளங்கள் தேவைப் படுகிறது. சொட்டைத்தலைஇரட்டை மண்டைபாகவதர் பிள்ளை என்றால்மட்டும் போதாது கல்பாத்தி பாகவதர். பிள்ளைஎன்பன போன்றவற்றால் அடையாளம் காட்டப் படுகிறது



ஒருவரை ஒருவர் நினைவில் வைத்துக்கொள்ள உதவுவதே இந்த அடையாளங்கள்தான் எனக்கு அவ்வப்போது ஒரு சந்தேகம் வரும்.பறவைகலள் மற்றும் சில விலங்குகள் என் கண்ணுக்கு ஒரே மாதிரி தெரிகிறது. அவை ஒன்றை ஒன்று எவ்வாறு இனங்கண்டுகொள்கின்றன. ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் கருப்பினத்தோர் சட்டெனப் பார்த்தால் ஒரே மாதிரி தெரிகிறார்கள். சுருட்டை முடி, கறுப்பு நிறம் பெரிய உதடுகள் இன்னபிற features அவர்களை ஒரே மாதிரி காட்டுகிறதோ என்னவோ.அதேபோல் நம் இந்தியாவிலும் சில பிராந்தியக் காரர்களுக்கு சில தனித்தன்மைகள் உண்டு. நடை உடை பாவனைகளை வைத்து அடையாளம் காணலாம்சிலர் ஆங்கிலம் பேசும்போது அவர்களை இன்னார் என்று தெரிந்து கொள்ளமுடியும்.
சிறு குழந்தைகள் என்னை எங்கள் குடும்பத்தில் மீசை தாத்தா என்று அடையாளம் காட்டுவார்கள் என் மாமியாரை என் பேரன் அந்த ஏழு பேரின் தாயா என்று கேட்டுப் புரிந்து கொள்வான்
இந்த இயற்கை அடையாளங்கள் தவிர தங்களை வித்தியாசமாகக் காட்டி தங்கள் அடையாளத்தை பறை சாற்றுவார்கள். வீணை வித்வான் ராஜேஷ் வைத்யா, வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவி ஷங்கர். பாப் பாடகி உஷா உதுப், போன்றோர் இதற்கு எடுத்துக்காட்டு. நெற்றியில் விபூதி அல்லது நாமம் உடலெங்கும் சந்தணத் தீட்டுகள் தலையில் வைக்கும் குல்லா, அல்லது தலைக்கட்டு போன்றவை அவர்கள் சார்ந்திருக்கும் மதம் அல்லது ஜாதி அல்லது பிரிவு போன்ற வற்றை அடையாளம் காட்டும் பிராம்மண குடும்பங்கள் சிலவற்றில் பெரியோரிடம் தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளும்போது  ”அபிவாதயே சொல்லி ஆசிவாங்குவார்கள். தான் இன்ன குலத்தில் இன்ன கோத்திரத்தில் இன்ன ரிஷியின் பரம்பரையில் வந்த இன்னாரின் பேரன் , இன்னாரின் புத்திரன் என்று சொல்வதுபோல் அமைந்திருக்கும். ஊரின் பெயர் , தந்தையின் பெயர் போன்றவற்றின் முதல் எழுத்தை இனிஷியலாக வைப்பார்கள். கேரளத்தில் இன்ன வீட்டைச் சார்ந்தவர் என்று அறிமுகப் படுத்துவர். பெரும்பாலும் மருமக்கத்தாய முறையைப் பின் பற்றுபவர்கள்.ஆனால் பல குடும்பங்களில் இது மாறி தந்தையின் பெயரிலுள்ள முதல் எழுத்து இனிஷியல் ஆக மாறிவருகிறது
திருச்சியில் நான் பணி செய்து கொண்டிருந்த போது, என் உறவினர் தீ அணைப்புப் படையின் தலைவராக திருச்சியில் பொறுப் பேற்று வந்தவருக்கு என் விலாசம் தெரிய வில்லை. BHEL தீ அணைப்பு படையில் இருந்த ஒருவரிடம் என் பெயரைச் சொல்லி  (இனிஷியல் சொல்ல வில்லை அல்லது தெரிய வில்லை?)நான் ஒரு பொறுப்பான பதவியில் இருப்பதாக மட்டும் தெரியும் என்றிருக்கிறார். பாவம் அந்த மனுஷன், பாலசுப்பிரமணியம் என்ற பெயரில் உள்ளவர்களை எல்லாம் டெலிபோன் டைரக்டரி  பார்த்துக் கூப்பிட்டு ஒரு வழியாய் என்னையும் கூப்பிட்டு தீ அணைப்பு அதிகாரியைத் தெரியுமா என்று கேட்டார். நான் தெரியும் என்று சொன்னவுடன் என்னைத்தேடி ஓடி வந்து அப்பாடா என்று பெருமூச்சு விட்டது நினைவுக்கு வருகிறது. என்னைப் பற்றிய சரியான அடையாளங்கள் தெரியாததால் மிகவும் சிரமப் பட்டு விட்டார்.
ஊர் பேர் அங்க அடையாளங்கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல கடவுளர்களுக்கும் உண்டு. குழல் வைத்துக் கொண்டிருப்பவன் கண்ணன், முருகனுக்கு வேல், லக்ஷ்மிக்கு தாமரை, சரஸ்வதிக்கு வீணை, பெருவிழிகளுடன் நாக்கைத் துருத்திக் கொண்டிருந்தால் காளி சிவனுக்கு பாம்பு சூலம், கொண்டையில் அரை நிலா இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் படுத்துக் கொண்டிருந்தால் அரங்கன் , நின்று கொண்டிருந்தால் பெருமாள், தவழ்ந்து கொண்டிருந்தால் கண்ணன், கோவணத்துடன் இருந்தால் குமரன். நமக்கு இருக்கும் அங்க லட்சணங்களை கடவுளுக்கும் வைத்து நம்மைப் போல் அவருக்கும் உருவம் கொடுத்து நம்மில் அவரைக் காணும்( அல்லது அவரில் நம்மைக் காணும்) பாங்கு வியக்க வைக்கிறது. உருவமே இல்லாதவன் என்று சொல்லும்போதும் படைப்பின் உருவகமாக லிங்கம் ஆவுடையார் என்று உருவகப் படுத்தி இருப்பார்களோ என்னும் ஐயம் எழுவதுண்டு. இப்படி நினைப்பதே தவறு என்று கூறி அடிக்க வந்தாலும் வருவர்.
என்னதான் சொன்னாலும் எல்லோருக்கும் அடையாளங்கள் தேவை என்பது மறுக்க முடியாது. சில அடையாளங்கள் சரித்திர நிகழ்வுகளை கண்முன் நிறுத்தும். வீர பாண்டியக் கட்ட பொம்மனின் மீசை. சர்ச்சிலின் வெற்றியைக் குறிக்கும் V விரல் அடையாளம், ஹிட்லரின் அடையாள மீசை, காந்திஜியின் பொக்கைவாய்,கண்ணாடி கைத்தடி அரை ஆடை,, நேருவின் ஷெர்வானியும் ரோஜாவும் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஒருவன் இருந்து மறைந்ததற்கு என்னதான் அடையாளமாக விட்டுச் செல்ல வேண்டும்? சிந்திக்க வைக்கிறது. .                

    
 
 

திங்கள், 21 அக்டோபர், 2013

மனம் போன போக்கில்......எழுத்து.


                         மனம் போன போக்கில் .........எழுத்து
                         -------------------------------------------------


நண்பர் ஒருவர் பதிவினில் “ வீசு தென்றல் காற்றிருக்க வேறெதுவும் வேண்டுவரோஎன்னும் சொற்றொடர் என்னைக் கவர்ந்தது. இதையே தலைப்பாக்கி ஒரு கவிதை எழுதலாமா என்ற எண்ணம் உதித்தது. வழக்கம்போல் எழுத ஆரம்பித்தேன் மூன்று நான்கு வரிகள் எழுதியதும் என் சிந்தனை என்னை வேறு பாதையில் இழுத்துச் சென்றது. அது போன போக்கிலேயே எழுதியதையும் பதிவிடுகிறேன்




வீசு தென்றல் காற்றிருக்க  வேறெதுவும் வேண்டுவரோ
பேசும் பொற்சித்திரம் அருகிருக்க அருகினிலே
ஓடும் ஓடையின் தண்ணீரும் சுவை தருமோ 



தென்றல் காற்று , தண்புனல் சித்திரம்போல் பாவை
போதுமா இப்புவியில் வேறெதுவும் வேண்டாமா
.
பசிக்கும் வேளை புசிக்க உணவு அது ஒன்றே
போதும் என்று சொல்ல வைக்கும். பாரீரே அறிவீரே.

கொடுப்பதன் இன்பம் அதை எடுக்கவிட்டுக்
கொடுப்பதில் கூடும் இன்பம் உணர்வோமே.
கொடுத்துத்தான் பார்ப்போமே
 ;
ஈசன் அருளைப் பெற ஈதல் ஒன்றே நல்வழி-அதைவிட்டு   
அவன் சொன்னான் இவன் சொன்னான் எனக் கூறி
பாலையும் பழத்தையும் தேனையும் தீஞ்சுவை இளநீரையும்
பூசனை என்ற பேரிலும் அபிஷேகம் எனும் பேரிலும்
கல் மீதும் மண் மீதும் பொழிந்தே வீணடித்தல் ஏனோ? முறையோ.?
ஈசன் அருளைப் பெறவே இத்தனையும் தேவை என்றால்
அறிவீரே அன்பர்காள், அத்தனையும் அறியாமையின் வழிமுறை

பக்தி செய்யவே பாசாங்கு வேண்டியதில்லை. எங்கும்
நிறைந்த ஈசன் என்னிலும் உள்ளான் எவரிலும் உளான்
இதுவன்றோ உண்மை நிலை.?ன்பே சிவம் எனச்
சொல்வதோடு நில்லாமல் நேசி ; உன்னை நேசி; இவனை நேசி
அவனை நேசி; உவனை நேசி. அனைவரையும் நேசி
.
பாரினில் பிறக்கும் போது என்ன கொண்டு வந்தோம்.
போகும்போது என்ன கொண்டு போவோம்.
இருப்பதனைத்தும் எனக்கென்றால் அது
என்னுள் உறையும் இறைவனுக்கும்தானே
என்னுள் இருப்பவன் அவனிலும் உளான் ஆக
எனதெல்லாம் அவனுக்கும் உரிமைதானே
கிடைத்ததெல்லாம் அவன் கொடுத்தது- அது
அனைவருக்கும் உரியது. .இருப்பவன் என்று
என்னையோ உன்னையோ தேர்ந்தெடுத்தான் என்றால்
உன் மூலம் என் மூலம் இல்லாதோர் பெற
வேண்டும் என்பதே அவன் சித்தமாயிருக்கலாம்

 
 


செவ்வாய், 15 அக்டோபர், 2013

பல்சுவைப் பதிவு.


                                 பல்சுவைப் பதிவு.
                                 -----------------------
படித்தது
------------


ஒரு இளைஞன் பண்ணையாரிடம் அவர் மகளை மணமுடித்துத் தர வேண்டினான். அவர் “ என்னிடம் மூன்று காளைகள் இருக்கின்றன, நீ அவற்றில் ஏதாவது ஒரு காளையின் வாலைப் பிடித்து இழுத்தால் உனக்கு என் மகளை மணமுடிக்கிறேன் “ என்றார். இளைஞன் ஒப்புக்கொண்டான். வடிவாசல் கதவு திற்க்கப் பட்டு முதல் காளை அவிழ்த்து  விடப்பட்டது. கொழு கொழுவென்றிருந்த அந்தக் காளை சீறிப் பாய்ந்து வந்தது, அந்த இளைஞன் ‘அடுத்த காளை இவ்வளவு சீற்றத்துடன் இருக்காது, அதைப் பிடிக்கலாம்என்று விட்டுவிட்டான். அதன் பின் அடுத்த காளை அவிழ்த்து விடப்பட்டது. அதுவும் வாட்ட சாட்டமாக சீவிய கொம்புகளுடன் பாய்ந்து வந்தது. இளைஞன் மூன்றாவது காளையின் வாலை எப்படியும் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் இரண்டாவது காளையையும் விட்டுவிட்டான்.. மூன்றாவது காளையும் வந்தது. இளைஞன் அது ஒரு நோஞ்சான் காளையாய் இருப்பது பார்த்து அதன் வாலை எப்படியும் இழுத்து விடலாம் என்று அதை நோக்கி ப் போனான். ஆனால்..... என்ன துரதிர்ஷ்டம்...! மூன்றாவது காளைக்கு வாலே இருக்கவில்லை.....!!! நீதி.:-வாய்ப்புகள் ஒன்றுபோல் ஒன்று இருப்பதில்லை. கிடைக்கும் முதல் வாய்ப்பை பயன் படுத்த வேண்டும்

கேட்டது
------



இரண்டு சுட்டிப் பையன்கள்.குறும்பும் துடுக்கும் நிறைந்தவர்கள். அவர்கள்மேல் வரும் புகார்கள் அவர்களது தாயைக் கவலைப்பட வைத்தது. ஊரிலொரு பெரிய மனிதர்.கம்பீரமான உருவம் கணீர்க் குரல். அவரிடம் தாய் சென்று முறையிட்டாள். அவரும் குழந்தைகளைத் திருத்த ஒப்புக்கொண்டார். ஒருவருக்குப் பின் ஒருவரை அனுப்பச் சொன்னார். முதலில் இளையவனை அனுப்பினாள். பெரிய மனிதர் அந்தச் சிறுவனை நல் வழிப்படுத்த வேண்டி அவனிடம் “கடவுள் எங்கே இருக்கிறார் தெரியுமா.?என்று கேட்டார். சிறுவன் மிரள மிரள விழித்தான். . அவர் சற்றே குரலை உயர்த்தி “ கடவுள் எங்கே.?என்று கேட்டார். சிறுவன் முகம் வெளிறி பதில் ஏதும் கூறாமல் விழித்தான்.ஊர்ப் பெரிய மனிதருக்குக் கோபம் வந்தது. பதில் ஏதும் தராத சிறுவனை நோக்கி “கடவுள் எங்கே சொல்.? என்று சத்தம் போட்டார். சிறுவன் பயந்து போய் ஓடி தன் வீட்டுக்குள் நுழைந்தான். அவனது அண்ணன் அவனிடம் வந்து நடந்தது என்ன என்று கேட்டான் அதற்கு அவன் “கடவுளைக் காணோமாம். நாம்தான் அவரை எடுத்து மறைத்து வைத்து விளையாடுகிறோம் என்று சந்தேகப் படுகிறார்கள் என்றான்....!

புடவை வாங்கிய கதை அனுபவம்
-------------------------------



முன்பொரு முறை (1970களில்) நானும் என் மனைவியும் மதுரை சென்றிருந்தோம். கோயிலின் அருகே இருந்த கடைகளில் இருந்து புடவைவாங்க அழைப்பு வந்த வண்ணம் இருந்தது. நாங்களும் ஒரு உந்துதலில் ஒரு கடை ஏறினோம். அங்கிருந்த பல புடவைகளில் ஒன்றின் மேல் என் மனைவியின் கண் சென்றது. புடவைக் கடைக்காரர் வியாபார நுணுக்கம் தெரிந்தவர். புடவையை பற்றி ஒரு லெக்சரே கொடுத்தார். சுங்கிடி வகையைச் சேர்ந்தது அம்மாதிரி எங்கும் கிடைக்காது என்றெல்லாம் கூறினார். என் மனைவி என் முகத்தைப் பார்க்க நான் புடவை வாங்கக் காசை செலவு செய்தால் மற்றபடி திட்டமிட்டபடி ஏதும் செய்ய முடியாது என்றேன். புடவைக் கடைக்காரர் விடாக் கொண்டர். “ அம்மா ஆசைப்படறாங்க . வாங்கிக் கொடுங்க சார். பணமில்லைன்னா என்ன ? உங்கள் முகவரி தாருங்கள் புடவையை vpp இல் அனுப்புகிறோம் என்றார்.நானும் சரியென்று சொல்ல நாங்கள் பயணங்களை முடித்துவிட்டு ஊர் திரும்பிய அடுத்த நாள் புடவை வந்திருந்தது..!. என் மனைவிக்கு அந்தப் புடவை மிகவும் பிடித்திருந்தது.
அண்மையில் நாங்கள் மதுரை சென்றிருந்தபோது ஒரு நல்ல சுங்கிடிப் புடவை வாங்க விரும்பினார். நல்ல மதுரைச் சுங்கிடிப் புடவைகள் எங்கே கிடைக்கும் என்று உள்ளூர்ப் பிரமுகர் ஒருவரைக் கேட்டார், அவரும் எங்களை ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமாக நடத்திச் சென்று அங்கே இருந்த POTHYS துணிக் கடையைக் காண்பித்துச் சென்றார். மதுரைச் சுங்கிடிப் புடவை வாங்க தமிழகத்தின் எல்லா முக்கிய நகரங்களிலும் உள்ள POTHYS  கடை காண்பிக்கப் பட்டதும் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்கள், என்றால் புடவை வாங்கியப் பணம் கட்ட நான் DEBIT கார்ட் கொடுத்தும் அங்குள்ள மெஷின் ஏற்காததால் கைவிட்டு இருக்கும் பணத்தை கொடுத்து அடுத்த நாள் ATM ல் பணம் எடுத்து பயணம் தொடர்ந்தோம்.

பார்த்தது
---------
தேள் வைத்த இந்த மாதிரியான லாலி பாப்கள் அமெரிக்காவில் விற்கிறார்களாம். முந்தைய நாள் அங்கிருந்து வந்தவர் காட்டியதும் படம் பிடித்து பதிவில் பகிர்கிறேன் 

scorpion embedded lollipop
          . .     
காணொளி கண்டு மகிழ.
========================
---------------------

    
.
..

புதன், 9 அக்டோபர், 2013

நம்பிக்கைகள்.... நிகழ்வுகள்


                            நம்பிக்கைகள் .... நிகழ்வுகள்.
                            -----------------------------------------



ஒரு சில நிகழ்வுகளை ( என் சொந்தக் கருத்துக்கள் ஏதுமில்லாமல் ) பதிவிடுகிறேன் இதையும் நான் எழுதியிருக்கத் தேவை இல்லை.என் செய்ய? HABITS DIE HARD….!

எனக்கு ஒரு நண்பன் இருந்தாr. எங்களுக்குள்  ஆழமான நட்பும் புரிதலும் இருந்தது. ஓரிரு வருடங்களில் ஓய்வு பெறும் வயதிலிருந்தார். ஒரு பெண்ணும் ஒரு ஆணுமாக இரண்டு பேர் அவர் பெற்ற செல்வங்கள். பெண் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். மகன் ஹைஸ்கூலில் இருந்தான் ஓரளவு வசதி வாய்ந்த குடும்பம்.
ஒரு நாள் அவருக்கு உடல் நலமில்லாமையால் மருத்துவ மனையில் சேர்த்தார்கள். மருத்துவர்கள் அவருக்கு இதய நோய் என்றும் ஹார்ட் அட்டாக் வந்ததாகவும் கூறி சிகிச்சை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.1982-83-ம் வருடம் என்று நினைவு. சிகிச்சை நடந்து கொண்டிருக்கும்போதே  அவருக்கு இரண்டாம் முறையும் அட்டாக் வந்தது. ஐசீயூ வில் வைத்திருந்தார்கள். நண்பருக்கு நோயின் தீவிரம் தெரிந்திருக்க வேண்டும். மண வயதில் ஒரு மகள்  படித்துக் கொண்டிருக்குமொரு மகன் அவ்வளவு ஒட்டுதல்கள் இல்லாத உறவுகள். அவருக்குப் பின் குடும்பம் என்னாகுமோ என்னும் தவிப்பு.தனக்கு மரணம் சம்பவிக்குமோ என்னும் பீதி..! .அதே சமயம் சுரம் வேறு வந்து அவர் கிட்டத்தட்ட ஹிஸ்டீரிகல் நிலைமைக்குப் போய்விட்டார். மனசுக்கு மிகவும் வேதனையாய் இருந்தது. வேண்டாத நினைவுகளிருந்து அவருக்கு ஆறுதல் அளிக்கவும்  அவர் நலம் பெற வேண்டியும் அருகில் இருந்த ஆலடத்துக்குச் சென்று அர்ச்சனை செய்து வேண்டிக் கொண்டு விபூதிப் பிரசாதத்துடன் அவரைப் பார்க்கப் போனேன். அவருக்குக் கடவுள் பக்தி ஏதும் கிடையாது. நாத்திகர் என்றும் சொல்லலாம். இருந்தாலும் நான் அந்த விபூதிப் பிரசாதத்தை அவர் நெற்றியில் இட்டேன். அவரும் மறுப்பேதும் சொல்லாமல் இருந்தார். சிறிது நேரம் வெளியில் இருந்தோம். திடீரென்று அவர் கூச்சல் கேட்டது. ஒரு வகை DELIRIUM  போல் தோன்றியது. அவருக்கு மூன்றாம் முறை வலி வந்திருக்கிறது. சாவை எதிர்நோக்கி இருந்த அவர் என்னை பார்த்ததும் நீயும்  உன் விபூதியும் நீயே வைத்துக் கொள் என்று சத்தமிட்டார். அரைமணி நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது.
                  --------------------------
அப்போது நாங்கள் விஜயவாடாவில் இருந்தோம். என் மனைவியின் இடது கையில் கட்டை விரலின் பின் புறத்தில் ஒரு மரு ( பாலுண்ணி ) வந்தது. அது சிறிது சிறிதாகப் பெரியதாகத் தொடங்கியது. மருத்துவரிடம் காண்பித்தோம். அதனால் பாதகமேதுமில்லை. வேண்டுமானால் அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிடலாம் என்றார். பாதகம் ஏதுமில்லாததால் இருந்து போகட்டும் என்று விட்டு விட்டோம். அதன் பிறகு நான் மீண்டும் திருச்சிக்கே மாற்றல் கேட்டு வாங்கிவந்தேன். கையில் இருந்த அந்தப் பாலுண்ணி சற்றே பெரிதாகவும் அருகேயே இன்னும் ஒன்றிரண்டு கூடவே தென்படவும் செய்தது. பாதகம் இல்லாவிட்டாலும் பார்க்க ஒரு மாதிரி அருவருப்பாகத் தென்பட்டது. மருத்துவமனையில் தோல் நிபுணரிடம் ( skin specialist )  கன்ஸல்ட் செய்தோம். அவர் எங்களை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்து “ இதற்கு மருத்துவம் ஏதும் தேவை இல்லை. வைத்தீஸ்வரன் கோயிலில் உப்பு மிளகிட்டு குளத்தில் வெல்லம் கரைத்து விடுங்கள் எல்லாம் சரியாகும் “ என்றார். நாங்களும் அவ்வாறே செய்தோம். சில நாட்கள் கழித்துப் பார்த்தால் எங்களுக்கே தெரியாமல் அந்த பாலுண்ணிகள் காணாமல் போயே போச். !
                     -----------------------------
அது 1970-ம் வருடம். கம்பெனிக் குடியிருப்பில் இருந்தோம். சபரி மலைக்குச் செல்வோர் குடியிருப்பில் பலர் இருந்தனர் . குறிப்பிட்ட நேரத்தில் ஐயப்பனை ஜோதி வடிவில் தரிசிப்பது நன்மை பயக்கும் என்றார்கள். நானும் மாலை போட்டு ஒரு கன்னி ஐயப்பனாக தீவிர விரத அனுஷ்டானங்களில் ஈடு பட்டேன். எல்லா புலன்களையும் ஒரு மண்டல காலம் கட்டுப்படுத்தி வந்தால் நம்மை நாமே வெல்லும் வாய்ப்பு என்றதால், அட்சர சுத்தமாகக் கடை பிடித்தேன்.  தினம் ஒருவர் வீட்டில் பஜனை நடைபெறும். அந்த வீட்டின் அன்னதானத்தை ஏற்பது கொடுப்பவருக்கும் திருப்தி, பெறுபவரும் அகந்தை அடங்க வாய்ப்பு. பஜனை சமயத்தில் ஒரு சிலர் உணர்ச்சி வசப்பட்டு சாமியாடுவார்கள். அவர்களை மற்றவர் பக்தியுடன் பார்ப்பார்கள்.குடியிருப்பில் இருந்து பேரூந்து ஏற்பாடு செய்யப் பட போகும்போது பல ஆலய தரிசனத்த்டன் எருமேலி சென்று பேட்டை துள்ளி ( நான் எனும் அகம்பாவம் எல்லாம் போய்விடும்) சன்னிதானம் அடைந்து நெய்யபிஷேகம் செய்து , அன்று அங்கு அங்கப் பிரதட்ஷிணம் செய்து ஜோதி தரிசனத்துக்காக காத்து இருந்தோம். ஆ  அதோ ஜோதி தெரிகிறது என்ற பக்தர்களின் ஆர்பரிப்பில் ஜோதி தரிசனம் காணும்போது அந்த ஆண்டவனையே நேரில் தரிசித்த அனுபவத்தில் மெய் உருகி கண்ணீர் மல்க கதறி அழுதேன். பின் எல்லோரும் நலமாக வீடு வந்து சேர்ந்தோம்.
அந்த அனுபவ அடிப்படையில் அடுத்த ஆண்டும் மாலை போட்டேன். கூடவே என் ஐந்து வயது மூத்த மகனையும் கூட்டிச் சென்றேன். எருமேலி சென்றோம். அந்தப் பேரூந்து ஓட்டுனர் அதற்கு மேல் பம்பா வரை வண்டி ஓட்ட முடியாது என்று சொல்லி விட்டார். பேரூந்தில் முதியவர்களும் குழந்தைகளும் இருந்ததால் எருமேலியிலிருந்து பெரிய பாதையில் நடந்து செல்ல முடியாது என்பதால் பம்பா வரை சென்று அங்கிருந்து மலைஏறுவதாகத் திட்டம் இட்டிருந்தோம். இப்போது எருமேலியிலேயே பேரூந்தை நிறுத்தி விட்டால்..... எல்லா திட்டமும் தரை மட்டமாகி விடும். அந்த ஓட்டுனரின் காலைப் பிடிக்காத குறை தொலைபேசியில் பேரூந்து ஓனரைத் தொடர்பு கொண்டால் அவர் ஓட்டுனரை எப்படியாவது சம்மதிக்கச் செய்யுங்கள். எருமேலி செல்லவே பெர்மிட் என்பதால் அவரால் ஏதும் செய்ய முடியாது என்றார். ஓட்டுனருக்கு கையூட்டு கொடுத்து , வழியில் போலீஸ் கெடுபிடி இருந்தால் எங்கள் பொறுப்பு என்று ஏற்றுக் கொண்டு பம்பா வந்து மலை ஏறி ஐயப்பன் தரிசனம் செய்தோம். இந்த முறை ஜோதி தரிசனம் செய்யும்போது I was composed. வரும் வழியில் அதிகாலை இரண்டு மணி அளவில் குருவாயூர் வந்தோம்..அப்போது அங்கே கிருஷ்ணாட்டம் நடந்து கொண்டிருந்தது. பலரும் அதைப் பார்க்கச் சென்று விட்டனர். பேரூந்தில் முதியோர் குழந்தைகள் தவிர்த்து ஐந்தாறு பேர் இருந்தனர். அப்போது ஒரு ஆறடி உயரமுள்ள ஐயப்பன் ஒருவர் பேரூந்தில் ஏறி முன் இருக்கை ஒன்றில் அமர்ந்து , கேட்கத் தகாத கெட்ட வார்த்தைகளைக் கூறிக் கொண்டு கையில் இருந்த கத்தியால் பேரூந்தின் இருக்கையைக் குத்த ஆரம்பித்தார். . நன்றாகக் குடித்திருந்தது தெரிந்தது. அவரிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்து அவரை இருக்கையில் படுக்க வைத்து அவரிடம் இருந்த கத்தியையும் இடுப்பில் இருந்த பெல்டையும் எடுத்துவிட்டால் அவரால் ஆபத்து நேராது என்ற எண்ணத்தில் சிலர் அவர் பெல்டில் கை வைத்ததும் அவர் காலால் எட்டி உதைத்து கத்தியால் குத்த வந்தார். ஒரு வழியாய் இருந்த ஐந்தாறு பேரும் அவரை அமுக்கி கையைப் பின் புறத்தில் கட்டி அவரை பேரூந்திலிருந்து இறக்கி விட்டதும் அவர் போதையில் விழுந்து விட்டார். அருகில் இருந்த காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தால் அங்கிருந்து பஸ்ஸை அகற்றிப் போகுமாறு கூறினர். யாரும் இடத்துக்கு வரவில்லை. சரி, பஸ்ஸை நகர்த்திச் செல்வோம் என்று முயலும் போது அங்கிருந்த கடைகளில் இருந்து சிலர் வந்து “ தமிழன்மார் மலையாளி ஐயப்பனைத் தல்லிக் கொன்னு “ என்று கூச்சல் இடக் கேட்கவா வேண்டும். கும்பல் கூட. ஒரே களேபரம். பஸ்ஸைத் தீ வைத்துக் கொளுத்துவதாகப் பயமுறுத்தினர். மண்ணையும் கல்லையும் வீசினர். அந்த நேரத்தில் நாங்கள் பயத்தில் உறைந்து விட்டோம். ஒரு சில நிமிடங்களில் எங்கள் குருசாமி வந்தார். மலையாளி ஐய்ப்பனிடமிருந்து எடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்க வற்புறுத்தினர். வீடு திரும்பும் எங்களிடம் பணம் மிகவும் சொற்பமே இருந்தது. எல்லோரிடமிருந்தும்  இருந்ததை வாங்கி இருநூறு ரூபாய் வரைத் தேற்றி அந்தக் கும்பலில் இருந்த லீடர் போலிருந்தவனிடம் கொடுக்க அவன் பஸ்ஸில் ஏறிப் படியில் நின்று கொண்டு “ போலாம் ரைட்..!என்றான்.
------------------------------------------------------      . .     


    
 
      

                       

திங்கள், 7 அக்டோபர், 2013

ACTIONS--REACTIONS கேள்விகள் பதில்கள்.


                    ACTIONS--- REACTIONS..கேள்விகள் பதில்கள்.
                    -------------------------------------------------------------



இத்தனை நாட்கள் பதிவு  எழுதி வந்தாலும், பதிவுகள் மூலம் நான் சொல்ல வருவது சிந்தனைகளைக் கிளரச் செய்கிறதா என்பது தெரியாமலேயே இருந்து வந்தது. ஆனால் என் கடந்த பதிவில் எழுதியகருத்துக்களுக்கு சிலர் தொடை தட்டி ஆர்பரிக்காத குறையாகவும், சிலர் என் புரிதல்கள் சரியில்லை என்பதை நாசூக்காகவும், சிலர் பதிவு குறித்த அபிப்பிராயம் ஏதும் கூறாமலென் சொந்த வாழ்வில் நான் எப்படி என்று தெரிந்து கொள்வதில் ஆர்வமாகவும் பின்னூட்டங்கள் எழுதி இருந்தனர். அனைவருக்கும் நான் சொல்லிக் கொள்வது இதுதான். நான் என் கருத்துக்களை சொல்லும்போது அது சிந்தனையைக் கிளர வேண்டும் என்ற எண்ணமே என் கருத்துக்கலையும் என் மனைவியின் குணாதிசயங்களோடு பின்னிப் பிணைத்து எழுதி இருந்தேன். எங்கள் வாழ்வில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டிருப்பது எங்கள் பேறாகும்.. அதையும் குறிப்பிட்டும் ஒரு பின்னூட்டமிருந்தது மகிழ்ச்சியளிக்கிறது.

எனக்கு இறை நம்பிக்கை இல்லாமல் இல்லை.. ஆனால் இறை நம்பிக்கை என்னும் பெயரில் பகுத்தறியும் ஆற்றலை நாம் இழக்கக் கூடாது என்று நினைக்கிறேன்.நாம் நமக்குத் தெரியும் என்று நினைப்பதைவிட ஒரு துளிகூட நமக்குக் கூடுதலாகத் தெரியாது என்றும் பெண்ணின் அறிவை எந்த அளவு கோல் கொண்டு அளக்கிறேன் என்று கேட்டும் வந்துள்ள கேள்விகளுக்கு நான் நிச்சயம் react செய்ய வேண்டும். எனக்கு என்ன தெரியும் என்றே எனக்குத் தெரியாது. ஆனால் தெரியாதது மலையளவு என்று நிச்சயம் தெரியும். இன்னும் தெரிந்துகொள்ள வேண்டும் என்னும் உந்துதல் நிறையவே இருக்கிறது. அதே சமயம் தெரியாததைத் தெரிந்ததாக நினைத்து சில நம்பிக்கைகளுக்கு (அவை மூட நம்பிக்கை என்று எனக்குப் பட்டாலும் அவ்வாறு சொல்வதை , பிறர் மனம் புண்படலாம் என்னும் காரணத்தால், தவிர்க்கிறேன்) என்னால் துணை போக முடியவில்லை.நான் வாழ்க்கையில் கண்டுணர்ந்தபடி , என் சிந்தனைகள் அமைந்திருக்கின்றன. அதை நான் பதிவினில் பகிர்து கொள்கிறேன். என் எண்ணத்தில் கல்மிஷம் இல்லை. அதனால் பகிர்ந்து கொள்வதை , வெகு ஜன எண்ணங்களுக்கு மாறாகத் தோன்றினாலும்  தவிர்ப்பது இல்லை.
அளவுகோல் என்று வரும்போது இது ஒரு ஒப்பீடலே. நான் என் மனைவியுடன் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாகப் பழகி வருகிறேன். அதனால்தான் ஒப்பீட்டுக்கு என் மனைவியின் நம்பிக்கைகளைத் தேர்ந்தெடுத்தேன். அதைப் பதிவிடும் முன்பே அவளிடம் படித்துக்காட்டி ஒப்புதல் பெற்றே எழுதினேன். நான் பார்த்துப் பழகி கண்டு வந்த பெரும்பாலோர் இவள் மாதிர்த்தான் என்று தோன்றியதால்தான்  எழுதினேன்

திரு.அப்பாதுரை அவர்களின் பதிவொன்றைஅண்மையில் படித்தேன். அவர் அதில் அடிமைத்தனம் என்பது என்ன என்று இளைஞர்களிடம் கேள்வி கேட்டு பதில்  பெற்றுத் தருகிறா அதற்குப் பின்னூட்டமாக
/அடிமைத்தனம் என்பது செய்கையா? உணர்வா? பாதிப்பா? பயமா? குணமா?
போதைகளை நாடுவதைப் போலவே கடவுள் நம்பிக்கையும் ஒரு வகை அடிமைத்தன வெளிப்பாடா?/ கேள்விகள்...கேள்விகள்...பள்ளி மா
ண்வரிடையே கேட்ட கேள்விக்கு பதில்கள் பதிவுக்குப் பலம் சேர்க்கிறது.இந்த முறையான வழிமுறைகளுக்குப் பதில்களில் கடவுள் நம்பிக்கையும் அடிமைத்தனத்தின் வெளிப்பாடு என்று வந்திருக்கிறதா.? என்று எழுதி இருந்தேன்
 அடிமைத்தனம் குறித்து அவர் கொடுத்திருந்த பதில்கள் சில சிந்திக்க வைக்கின்றன.அடிமைத்தனம் என்பது"எதையும் ஆராயாமல் கேளாமல் இன்னொருவர் சொற்படி ஏற்று நடப்பதாகும்"/"தன்னிச்சையான எண்ணம் செயல் போன்ற சுதந்திர வெளிப்பாடுகளை இனம்புரியாத காரணங்களுக்காக அடக்கியோ ஒடுக்கியோ வைக்கும் மனநிலை.."/ "மரபு.. வழக்கம் என்ற ஒரு விளங்காத விளக்கமுடியாத முறைக்குட்பட்டு நடப்பது.."/ "அறியாமல் செய்த தவறை, அறிந்தே தொடர்ந்து செய்வது.. செய்யத்தூண்டுவது.."
சிந்தித்துப் பார்த்தால் நாம் செய்யும்பல செயல்களுக்கு இம்மாதிரியான மனப்போக்கே காரணம் என்று விளங்கும்.என்னைப் பொறுத்தவரை கடவுள் நம்பிக்கை வேறு,நம்பிக்கை என்னும் போர்வையில் நாம் செய்யும் சில செயல்கள் வேறு.
கடவுள் என்னும் சக்தி இருக்கிறது என்று அனுமானித்து செயல்படுவது, காரணம் தெரியாத, விளக்க முடியாத செயல்களுக்கு அந்த சக்தி மேல் பழி போட்டு மனப் பாரத்தைக் குறைத்துக் கொள்ளலாம்.

காண முடியாத சக்தியை சிலரால் உணர முடிகிறது என்கிறார்கள். கடவுள் உண்டு என்று கூறுபவர்கள் அனைவரும் அந்த சக்தியை உணருகிறார்களா என்ற கேள்வி   எழுந்தால், 90  விழுக்காட்டுக்கு  மேல்  உணராதவரே  இருப்பார்கள். பின்  கடவுள் நம்பிக்கை என்பதே பிறந்து  வளர்ந்த  சூழல் , வளர்க்கப்பட்ட  முறைகற்றுத்தேரிந்த  விஷயங்கள்  என்பதைச் சார்ந்தே  அமைகிறது.
எங்கும் நிறைந்தவன் கடவுள், அவனன்றி ஓரணுவும் அசையாது; நாம் செய்யும் செயல்களைக் கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்; நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப கடவுள் பரிசோ தண்டனையோ தருவார் என்று நாம் பிறந்தது முதல் தயார்  செய்யப்பட்டு வளர்க்கப்படுகிறோம்.
ஒரு காண முடியாத சக்தியை நம்மில் பலரால் கற்பனை செய்து பார்க்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடுதான் விக்கிரக ஆராதனையின் முக்கிய காரணமாய் இருந்திருக்கவேண்டும். ஆண்டவனுக்கு நம்மில் ஒருவன் போல் உருவம் கற்பித்து அவனுக்கு ஏகப்பட்ட சக்தியையும் கொடுத்து காப்பவனாகக் கருதி  வழிபடும்போது மன அமைதி கிடைக்கிறது. அழிப்பவனாகக் கருதி வழிபடும்போது   தீய செயல் செய்வதை பயத்தால் செய்யாமலிருக்கச் செய்கிறது. கடவுளுக்கு ஏராளமான சக்தி உண்டு என்று நாம் நம்ப, அவனுக்கு பிரம்மா, விஷ்ணுசிவன்  முறையே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று செயல்களின் வெளிப்பாடுகளாக அறிவிக்கப்படுகிறோம். இன்னும் கடவுளை ராமனாகவும் கண்ணனாகவும், முருகனாகவும்  கற்பிதம் செய்து அவர்களின்  சக்திகளில்  நம்பிக்கை  வைத்து  அவர்களை  வழிபாடு செய்தால் நலம்  பெறுவோம் எனும்  நம்பிக்கை  சிறு  வயது  முதலே  வளர்க்கப்படுகிறது. தாயே  மனிதனின்  முதல் தெய்வம்  என்று  கருதப்படும்  நம் நாட்டில், கடவுளை அன்னையின்  வடிவத்திலும்  வழிபடுகிறோம்.  சரஸ்வதியாக , லட்சுமியாக , பார்வதியாகஒவ்வொரு  தெய்வமும்  ஒவ்வொரு  சக்தியின் பிரதிபலிப்பாக  வணங்க  வளர்க்கப்படுகிறோம்.
இந்தக் கடவுள்களின் சக்தியில் நாம் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதற்காகவே  ஆயிரமாயிரம்   கதைகளும்  புனைவுகளும்   ஏற்பட்டிருக்க வேண்டும்.

சூனியமான இருண்ட அண்டத்தில் சூரியனின் ஒளியே வாழ்வின் ஆதாரமாக இருப்பதால் ஆதியில்  சூரிய  வழிபாடும்பிறகு உயிர்  வாழப்  பிரதானமான  ஆகாயம் , காற்று , நீர் , மண்  போன்றவைகளும்  வழிபாட்டுக்கு  உரியனவாயின
என் கடந்த பதிவின் கடைசியில் என் மாறுபட்டக் கருத்துக்களுக்குச் செவிமடுக்கும் அவள் இந்த நிலையே சௌகரியமாக இருக்கிறது என்று சொல்லாமல் சொல்லிச் செல்வாள் என்று எழுதி இருந்தேன்.. அப்படி சிந்தனைகள் ஏதும் இல்லாமல் யாரோ என்னவோ சொல்லிச் சென்றார் அதன்படிதான் நடப்பேன் என்பது சுதந்திர எண்ணமில்லாத அடிமைத்தனத்துக்குச் சமம் இருந்தாலும் எல்லோரையும் நேசிக்கும் குணம் எனக்கு ஏற்புடைத்தே. அதையே நான் கடவுள் என்பது உணர்வா , அறிவா என்று எழுதி இருந்தேன். இங்கே சொடுக்கிப் பார்க்க.
இந்தப் பதிவு என்னென்ன reactions  ஏற்படுத்துமோ பார்க்க வேண்டும்.   .