சனி, 26 அக்டோபர், 2013

மீண்டும் நினைவுகள் தொகுப்பு.


                     மீண்டும் நினைவுகள் ... தொகுப்பு.
                    ----------------------------------------------

வாய் முஹூர்த்தம்
-----------------------------


நான் சும்மா இருக்கும்போது- நான் எப்போது சும்மா இருக்கிறேன்.? எதையாவது சிந்தித்துக் கொண்டிருப்பது சும்மா இருப்பதாகுமா.?இப்போது நான் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்?சும்மா இருக்கும் போது ( மீண்டும் சும்மா) எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் சிலரது முகங்கள் கண்முன்னே ( மனக் கண்ணில் ) காட்சி அளிக்கின்றன. அப்போது அவரைப் பற்றிய சில நினைவுகள் முட்டி மோதுகின்றன. பொதுவாகவே நான் யாரையும் குறிப்பிட்டு எழுதுவதில்லை. என்றாலும் அம்மாதிரி பாத்திரங்கள் பல சமயங்களில் என் எழுத்துக்களில் புகுந்து விடுவது உண்டு. நானும் அந்த மாதிரி எழுதும்போது யார் மனதும் புண்படாதபடி எழுதுவதில் கவனமாய் இருப்பேன். இப்போது ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறேன். அந்த நண்பர் என் வீட்டுக்கு வந்திருந்தார். எனக்கு ஒரு பழக்கம். நான் எதையும் துருவித் துருவி கேட்பதில்லை. . இந்த நண்பர் என் வீட்டுக்கு வந்திருந்தபோது எதையோ என்னிடம் சொல்லத் துடிக்கிறார் என்று தெரிந்தது. முகம் மிகவும் வாடி இருந்தது. பொதுவாக அனைவரும் நலமா என்று கேட்டேன். அனைவர் என்ன இருப்பது நானும் என் மனைவியும் மட்டும்தான்என்று சலித்துக் கொண்டார். குழந்தைகள் பற்றிக் கேட்டேன். ஐந்து முறை கர்ப்பம் தரித்தும் அனைத்துமே குறைப் பிரசவமாகி விட்டது என்று கூறி கண்கலங்கினார்.இந்த முறை ஆறாவது கர்ப்பம் ஆறு மாதமாகிறது கவலையாய் இருக்கிறது என்றார். நான் அவரைத் தேற்றும் விதத்தில் “ இந்த முறை கவலைப் படாமல் இரு. உன் மனைவி நிச்சயமாய் ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுப்பாள் என்று கூறினேன். பிறகு அவர் மனம் உற்சாகப் படும் விதத்தில் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அவர் போன பிறகும் அவரது நிலை குறித்த எங்கள் கவலை தொடர்ந்தது.
இது நடந்து சிலகாலம் வரை அந்த நண்பர் என் வீட்டுக்கு வரவில்லை. திடீரென்று ஒரு நாள் முகமெல்லாம் பூரிப்புடன் வந்து எங்களுக்கு இனிப்பு கொடுத்தார். அவரது மனைவி ஒரு பெண்மகவை நலமாக ஈன்றெடுத்திருக்கிறாள் என்று சொன்னார். அத்துடன் விடவில்லை “ உங்கள் வாய் முகூர்த்தமும் ஆசியுமே எனக்குப் பெண்ணாய் பிறந்திருக்கிறது. நாங்கள் முருகனை சேவிப்பவர்கள். நீங்கள் முருகக் கடவுள் சம்பந்தப் பட்ட ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொடுங்கள் அந்தப் பெயரையே வைக்கிறோம்என்றார். இந்த எதிர்பாராத வேண்டுதலைத் தட்ட முடியவில்லை. பிறந்தது பெண்குழந்தை ஆதலால் “ கிருத்திகா அல்லது கார்த்திகாஎன்று பெயர் சூட்டுங்கள் என்றேன் அவர் முகமும் அந்த நிகழ்வும் எந்த முகாந்திரமும் இல்லாமல் நினைவுக்கு வந்து எழுதிவிட்டேன்.இப்போது அவரும் அவரது மகளும் எங்கோ நலமாயிருக்க வேண்டுகிறேன்

கைராசி முகராசி
------------------



எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் சில நிகழ்வுகள். காரண காரியங்கள் இருக்கலாம். ஆனால் அவை எல்லாம் ஏதோ abstract  எண்ணங்களின் வெளிப்பாடே. இந்த நிகழ்ச்சியும் நாங்கள் திருச்சியில் குடியிருப்பிலிருக்கும்போது நிகழ்ந்தது. ஒரு விடுமுறை நாள். ஒருவர் எங்கள் வீட்டுக்கு வந்தார். அவரும் குடியிருப்பில் வசிப்பதாகக் கூறினார். அறிமுகப் படுத்திக் கொண்டவர் பின் அவர் மகன் பெயரில் திருவெறும்பூரில் ஒரு மின்சாரக் கருவிகள் சேல்ஸ் அண்ட் செர்வீஸ் கடை திறக்க இருப்பதாகக் கூறினார். முன் பின் பழக்கமில்லாத எங்களிடம் இதை எல்லாம் சொல்ல வேண்டிய காரணம் என்ன என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே அவர் அந்த விண்ணப்பம் வைத்தார். அவர் புதிதாகத் திறக்க இருந்த கடையை என் மனைவி  குத்து விளக்கேற்றி திறக்க வேண்டும் என்றார். முதலில் அவர் விலாசம் தவறி வந்து விட்டார் என்றே நினைத்தேன். அப்போது BHEL  நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்தவர் பெயரும் என் பெயர்தான். என் இனிஷியல் ஏதோ தவறுக்கு வழி வகுத்துவிட்டதோ என்று சந்தேகம் வந்தது.எத்தனையோ பெரிய பிரமுகர்கள் இருக்கும்போது எங்களைஅழைத்தது ஏன் என்று அவரிடம் மீண்டும் கேட்டபோது அவர் என் மனைவியைக் கோயிலில் பார்த்திருப்பதாகவும் அவர் மேல் ஒரு மரியாதை எழுந்து அவரே அந்தப் புதுக் கடையை விளக்கேற்றி திறக்க வேண்டுமென்று தோன்றியதாகவும் கூறினார். பூவுடன் சேர்ந்த நாரும் மணக்கும் என்பது போல் என் மனைவியால் எனக்கும் மரியாதை கிடைத்தது அது நடந்து சில காலத்துக்குப் பின் இன்னொரு திறப்பு விழாவுக்கும் என் மனைவியை  (கூடவே என்னையும் ) முதல் கடை நன்றாக இயங்கியதால் அழைத்தார்

கருவேப்பிலை
------------
ஒரு முறை சாலையில் நடந்து கொண்டிருந்தபோது  எதிரே வந்த ஒருவர் புன் முறுவலுடன் என்னை நிறுத்தி நலம் விசாரித்தார். நானும் அவர் கேட்ட கேள்விகளுக்கு அனிச்சையாக பதில் சொல்லிக் கொண்டு வந்தேன். இருந்தாலும் “ இவர் யார் “ என்ற கேள்வி மனசைக் குடைந்து கொண்டே இருந்தது. ஒரு ஐந்து நிமிட விசாரிப்புக்குப் பின் அவர் போகத் தொடங்கினார். என் மன அரிப்பு , “ நீங்கள் யார் .? நினைவுக்கு வரவில்லையே “ என்றேன். அவ்வளவுதான். அவருக்குஒரேயடியாகக் கோபம் வந்து விட்டது. “ நீங்களெல்லாம் ஒரே மாதிரிதான்காரியம் ஆக வேண்டி இருந்தால் காலைப் பிடிப்பீர்கள். தேவை முடிந்து விட்டால் கருவேப்பிலை போல் தூக்கி எறிவீர்கள்என்று பொரிந்து தள்ளிவிட்டார். அவரை சமாதானம் செய்து என் மறதிக்கு என்னை மன்னிக்கும்படி வேண்டிக் கொண்டு மீண்டும் அவர் யார் என்று கேட்டேன். HAL -ல்  பயிற்சியில் இருக்கும்போது வாரம் ஒரு இடம் என்று அநேக பிரிவுகளுக்குப் பயிற்சிக்கு அனுப்புவார்கள். அந்த மாதிரி ஒரு பத்து பன்னிரண்டு பிரிவுகளாவது இருந்திருக்கும். அப்படிப்பட்ட காலத்தில் ஏதோ ஒரு பிரிவில் ( என்ன பிரிவு என்று இப்போது நினைவுக்கு வரவில்லை)ஒரு வாரகாலம் பயிற்சியில் இருந்தபோது இவரது அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. அது முடிந்து ஆண்டுகள் பல கழிந்து விட்டிருந்தன. திடீரென அவர் சாலையில் என்னைப் பார்த்துப் பேசியிருக்கிறார். இதைய்நெல்லாம் அவரிடம்விளக்கிக் கூறியும் அவர் சமாதானமாகாமலேயே சென்றுவிட்டார்.  சரி. இதை நான் இப்போது எழுதக் காரணம் என்ன.?நம்பினால் நம்புங்கள் திடீரென அவர் முகமும் அந்த நிகழ்வும் மனத்திரையில் ஓடியதுதான். பொதுவாக இளவயதில் பார்த்தவர்களின் உருவம் இப்போது நினைத்துப் பார்க்கும் போது ஒரு நிழலாகத்தான் தெரியும். ஆனால் எப்போதோ நடந்த நிகழ்ச்சி இவ்வளவு தெளிவாகத் தோன்றுவதன் காரணமென்ன?
.
இன்னும் ஒரு கருவேப்பிலை
-------------------------


நாங்கள் பயிற்சி முடிந்து HAL AERO ENGINE DIVISION-ல் பணிக்கு அமர்த்தப் பட்டோம். அப்போது அது துவக்க நிலையிலேயே இருந்தது. பணி செய்யத் தேவையான மெஷின்கள் வந்த வண்ணமும் அவற்றை நிறுவுவதுமே முக்கிய பணியாக இருந்தது. அங்கிருந்த மெயிண்டெனன்ஸ் துறையின் மேற்பார்வையில் மெஷின்கள் நிறுவப் பட்டுக் வந்தன. அப்போதைய அந்தத் துறையின் மேலாளர் சொன்னது இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது “ இந்தத் தளவாடங்கள் நிறுவப்படும் வரையில் எங்களுக்கு மரியாதை. முன் வாசலில் வரவேற்கப் படுவோம். நிறுவி முடித்த பின்னர் எங்களை யாரும் சீண்டக்கூட மாட்டார்கள். நீங்கள் பரவாயில்லை. இங்கே வேலையில் தொடர்வீர்கள்  எங்களை கருவேப்பிலை மாதிரி ஒதுக்கி விடுவார்கள்வாழ்க்கையின் ஒரு அழகான தத்துவத்தை அவர் போதித்தார். ஒருவருக்கு நம்மால் காரியம் ஆகும் வரையே மதிப்பு முக்கியத்துவம் எல்லாம். பிறகு கருவேப்பிலை மாதிரி ஒதுக்கப் படுவோம். இதுதான் வாழ்க்கை. .
 
 

21 கருத்துகள்:

  1. //ஒருவருக்கு நம்மால் காரியம் ஆகும் வரையே மதிப்பு முக்கியத்துவம் எல்லாம். பிறகு கருவேப்பிலை மாதிரி ஒதுக்கப் படுவோம். இதுதான் வாழ்க்கை.//

    இது பொதுவாக உண்மை தான்.

    ஆனால் எல்லோரும் எல்லோரிடமும் இப்படி இருக்க மாட்டார்கள், ஐயா.

    விதிவிலக்குகள் நிறைய உண்டு. நானே ஒரு விதி விலக்கு தான்.

    நான் எந்த ஒரு நிகழ்ச்சியையுமே லேஸில் மறக்க மாட்டேன்.

    அதுவும் எனக்கு ஒரு மிகச் சிறிய உதவி செய்தவர்களைக்கூட என்றுமே மறக்க மாட்டேன்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  2. //“ உங்கள் வாய் முகூர்த்தமும் ஆசியுமே எனக்குப் பெண்ணாய் பிறந்திருக்கிறது.//

    கேட்கவே சந்தோஷமாக உள்ளது. ;)

    பதிலளிநீக்கு
  3. //அவர் என் மனைவியைக் கோயிலில் பார்த்திருப்பதாகவும் அவர் மேல் ஒரு மரியாதை எழுந்து அவரே அந்தப் புதுக் கடையை விளக்கேற்றி திறக்க வேண்டுமென்று தோன்றியதாகவும் கூறினார். //

    மிக்க மகிழ்ச்சி. ;)

    பதிலளிநீக்கு
  4. //அப்படிப்பட்ட காலத்தில் ஏதோ ஒரு பிரிவில் ( என்ன பிரிவு என்று இப்போது நினைவுக்கு வரவில்லை)ஒரு வாரகாலம் பயிற்சியில் இருந்தபோது இவரது அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. அது முடிந்து ஆண்டுகள் பல கழிந்து விட்டிருந்தன. திடீரென அவர் சாலையில் என்னைப் பார்த்துப் பேசியிருக்கிறார். //

    இதுபோன்ற பலர் பல இடங்களில் என்னையும் சந்திப்பார்கள்.

    அவர்களுக்கு என்னை நன்கு தெரிந்திருக்கும்.

    எனக்கும் அவர்களைத் தெரிந்திருக்க வேண்டும் என்பது எப்படி சாத்தியமாக முடியும்.

    நான் நமது ஆலையில் முக்கியப்பிரிவான CASH SECTION னில், இருந்ததால் அங்கிருந்த REGULAR + NMR + LCS உள்பட 20000 ஊழியர்களுக்கும் என்னை நன்கு தெரியும்.

    எனக்கு சுமார் 2000 பேர்கள் வரை மட்டுமே, அவர்களின் பெயர், இலாகா, பதவி, ஊழியர் எண் உள்பட நினைவில் நிற்பது உண்டு.

    சுமார் 100 பேர்களின் குடும்பத்தார் உள்பட எனக்கு நன்றாகப் பழக்கம் உண்டு.

    தங்களின் இந்தப்பதிவினில் தங்கள் அனுபவங்களை நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  5. உங்கள் நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி GMB சார்.

    நீங்கள் 'இன்னும் ஒரு கருவேப்பிலை '
    நிகழ்ச்சியில் என் கருத்து என்னவென்றால் நாம் செய்யும் வேலைக்கு சம்பளம் வாங்கி விடுகிறோம். அதற்கு மேல் மரியாதை எதிர்பார்ப்பது கூடாதோ? இது என் சொந்த அபிப்பிராயம் மட்டுமே.

    பதிலளிநீக்கு
  6. உங்கள் நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி GMB சார்.

    நீங்கள் 'இன்னும் ஒரு கருவேப்பிலை '
    நிகழ்ச்சியில் என் கருத்து என்னவென்றால் நாம் செய்யும் வேலைக்கு சம்பளம் வாங்கி விடுகிறோம். அதற்கு மேல் மரியாதை எதிர்பார்ப்பது கூடாதோ? இது என் சொந்த அபிப்பிராயம் மட்டுமே.

    பதிலளிநீக்கு
  7. உன் மனைவி நிச்சயமாய் ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுப்பாள்” என்று கூறினேன்.//
    நல்லோர் வாக்கு பலித்து விட்டது மகிழ்ச்சி.
    உங்கள் மனைவி விளக்கேற்றி ஒரு கடை இரண்டு கடை ஆனது மகிழ்ச்சி,
    உங்கள் மனைவி, நீங்கள் சம்பந்தபட்ட விஷயங்கள் எல்லாம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  8. நீங்கள் எழுதியதிலிருந்து ஒரு விஷயம் நிச்சயமாகத் தெரிகிறது. உங்களிடம் ஆசிபெற்று எந்தக் காரியம் செய்தாலும் அது நன்றாக நடக்கும் என்பதே அது.இப்போது என் மனதில் ஒரு நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கம் நிறைவேற அங்கிருந்தே ஆசி வழங்கும்படி கோருகிறேன். பதிலுக்கு எனது உறுதிமொழி இதோ: உங்களைக் கறிவேப்பிலை போல் எறிந்துவிடமாட்டேன்!

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்
    ஐயா

    ஒருவருக்கு நம்மால் காரியம் ஆகும் வரையே மதிப்பு முக்கியத்துவம் எல்லாம். பிறகு கருவேப்பிலை மாதிரி ஒதுக்கப் படுவோம். இதுதான் வாழ்க்கை
    மனித வாழ்கையில் நடக்கும் சிலமனிதர்களின் குணப்பண்பு வெளிப்படுத்திய விதம் நன்று
    எல்லோரும் என்று சொல்ல முடியாது.. சில மனிதர்கள்
    வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. உங்களது நினைவுகள் மிகவும் மகிழ்ச்சியை தருகிறது ஐயா...

    /// ஒருவருக்கு நம்மால் காரியம் ஆகும் வரையே மதிப்பு முக்கியத்துவம் எல்லாம். பிறகு கருவேப்பிலை மாதிரி ஒதுக்கப் படுவோம். இதுதான் வாழ்க்கை... ///

    100% உண்மை... ஆனால் ஒதுக்கப்படுவோம் என்று தெரிந்திருந்தாலும், காரியம் நல்லபடியாக முடிக்க வேண்டும் எனும் எண்ணம் மட்டும் இருந்தால் போதும்... மற்ற எவ்வித எதிர்ப்பார்ப்பும் இருந்தால் சந்தோசம் காணாமல் போய் விடும்...

    பதிலளிநீக்கு
  11. //ஒருவருக்கு நம்மால் காரியம் ஆகும் வரையே மதிப்பு முக்கியத்துவம் எல்லாம். பிறகு கருவேப்பிலை மாதிரி ஒதுக்கப் படுவோம். இதுதான் வாழ்க்கை.//

    இப்படியெல்லாம் மனம் தளர வேண்டியதில்லை. எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை தானே!..

    நல்ல மனம் வாழும். வாழ்த்தும். வழிகாட்டும்.

    பதிலளிநீக்கு
  12. //ஒருவருக்கு நம்மால் காரியம் ஆகும் வரையே மதிப்பு முக்கியத்துவம் எல்லாம். பிறகு கருவேப்பிலை மாதிரி ஒதுக்கப் படுவோம். இதுதான் வாழ்க்கை.//
    வாழ்க்கை என்பதே மேடு பள்ளங்கள் நிரம்பியதுதானே.
    விதிவிலக்கானவர்களும் உண்டு.
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு

  13. # கோபு சார்
    / இது பொதுவாக உண்மைதான்/ பதிவில் நண்பர் சொன்னதும் பொதுவான கருத்துதான். விதி விலக்குகள் இருக்கலாம், உங்களைப் போல/உங்கள் வாய் முகூர்த்தமும் ஆசியுமே எனக்குப் பெண்ணாய் பிறந்திருக்கிறது.//அது அவரது குணத்தைக் காட்டுகிறது. எதார்த்தமாகச் சொன்னது நடந்ததில் மகிழ்ச்சி, எனக்கும் உண்டு.அந்த நண்பர் கடிந்து கொண்டபோது எனக்கே என் மேல் கோபம் வந்தது. இப்போது நினைத்துப் பார்க்கும்போது அது பெரிய விஷயமல்ல என்று தெரிகிறது. என் கேள்வியே அந்த நிகழ்வு ஏன் நினைவுக்கு வரவேண்டும்.?

    @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    எல்லா உழைப்பும் வெறும் கூலிக்காக மட்டுமா மேடம்.?
    @ கோமதி அரசு
    மனம் நிறைந்த பாராட்டுக்கு நன்றி மேடம்
    @ செல்லப்பா யஞஸ்வாமி
    நல்ல எண்ணங்களுக்கு வலு இருக்கிறது என்பார்கள். ( வேதாத்ரி மகரிஷி. கோமதி மேடம் உறுதி செய்வார்கள்....!)
    @ 2008rupan
    பொதுவாகத்தான் கூறி இருக்கிறேன்
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அடிக்கடி எதிர்பார்க்கிறேன்
    @ திண்டுக்கல் தனபாலன்
    எதிர்பார்ப்புகள் இல்லாமல் காரியம் ஆற்றவேண்டும்தான். ஆனால் நாம் சாதாரண மனிதர்கள் தானே. ஒரு ஷொட்டு ஒரு தட்டு நல்ல செயலுக்கு எதிர்பார்க்கலாம்தானே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    @ அபயா அருணா
    / உண்மைதான்./........? வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  14. @ துரை செல்வராஜு
    @ கரந்தை ஜெயக்குமார்.
    பதிவில் சொன்னது பொதுவான உண்மை. விதி விலக்குகள் என்றும் உண்டு. மேலானவருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. Dear GMB Sir,

    //அந்த நண்பர் கடிந்து கொண்டபோது எனக்கே என் மேல் கோபம் வந்தது.

    இப்போது நினைத்துப் பார்க்கும்போது அது பெரிய விஷயமல்ல என்று தெரிகிறது.

    என் கேள்வியே அந்த நிகழ்வு ஏன் நினைவுக்கு வரவேண்டும்.? //

    அந்த நிகழ்வு ஏதோ ஒரு வகையில் உங்களை சற்றே பாதித்துள்ளது. ஆழ் மனதில் பதிந்து போயும் உள்ளது. அதனால் அதுபோன்ற நிகழ்வுகள் அவ்வபோது நினைவில் வரக்கூடும் என நான் நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு

  16. @ கோபு சார்
    காரணம் தெரியவில்லை. ஒருவேளை நீங்கள் சொல்வது போல் இருக்கலாம். மீண்டும் வந்து கருத்திட்டதற்கு நன்றி
    @ டாகடர் கந்தசாமி.
    பதிவை ரசித்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. எனக்கும் இப்படி பல சமயங்களில் நடந்திருக்கிறது. குறிப்பாக வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள். அவர்களுக்கு என்னை மட்டும் நினைவிலிருந்தால் போதும். ஆனால் ஒரு நாளைக்கு பல வாடிக்கையாளர்களை சந்திக்கும் என்னைப் போன்ற மேலாளர்களுக்கு அனைவரையும் நினைவில் வைத்துக்கொள்வது மிகவும் சிரமம். சாலையில் எதிரில் வாகனத்தில் கடக்கும்போது கையை உயர்த்தி ஹலோ சார் என்று யாராவது சொன்னால் நானும் உடனே அப்படியே சொல்லிவிட்டு செல்வது வழக்கம். அவர்கள் பலரும் கடந்து சென்றுவிட்ட பிறகும் எனக்கு அவர்கள் யார், எவர் என்றே தெரியாது. ஆனாலும் அவர்களுக்கும் நம்மை நினைவில் வைத்திருக்கிறாரே என்ற திருப்தி, எனக்கும் அவரை நாம் மறந்துவிட்டோம் என்று அவருக்கு தெரியாமல் மறைத்துவிட்டோமே என்ற திருப்தி. நீங்கள் சொல்வதுபோல் சிலரை மட்டும் நம்மால் மறக்க முடிவதே இல்லை..... விசித்திரம்தான்.....

    பதிலளிநீக்கு
  18. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

  19. // நான் சும்மா இருக்கும்போது- நான் எப்போது சும்மா இருக்கிறேன்.? //

    அதானே என்று உங்கள் மனைவி சொல்வது காதில் விழுகிறது.
    வெவ்வேறு வகையான வாழ்க்கை அனுபவங்கள். படிக்கப் படிக்க சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  20. @ டி.பி.ஆர். ஜோசப்
    @ தி. தமிழ் இளங்கோ
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு