புதன், 9 அக்டோபர், 2013

நம்பிக்கைகள்.... நிகழ்வுகள்


                            நம்பிக்கைகள் .... நிகழ்வுகள்.
                            -----------------------------------------



ஒரு சில நிகழ்வுகளை ( என் சொந்தக் கருத்துக்கள் ஏதுமில்லாமல் ) பதிவிடுகிறேன் இதையும் நான் எழுதியிருக்கத் தேவை இல்லை.என் செய்ய? HABITS DIE HARD….!

எனக்கு ஒரு நண்பன் இருந்தாr. எங்களுக்குள்  ஆழமான நட்பும் புரிதலும் இருந்தது. ஓரிரு வருடங்களில் ஓய்வு பெறும் வயதிலிருந்தார். ஒரு பெண்ணும் ஒரு ஆணுமாக இரண்டு பேர் அவர் பெற்ற செல்வங்கள். பெண் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். மகன் ஹைஸ்கூலில் இருந்தான் ஓரளவு வசதி வாய்ந்த குடும்பம்.
ஒரு நாள் அவருக்கு உடல் நலமில்லாமையால் மருத்துவ மனையில் சேர்த்தார்கள். மருத்துவர்கள் அவருக்கு இதய நோய் என்றும் ஹார்ட் அட்டாக் வந்ததாகவும் கூறி சிகிச்சை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.1982-83-ம் வருடம் என்று நினைவு. சிகிச்சை நடந்து கொண்டிருக்கும்போதே  அவருக்கு இரண்டாம் முறையும் அட்டாக் வந்தது. ஐசீயூ வில் வைத்திருந்தார்கள். நண்பருக்கு நோயின் தீவிரம் தெரிந்திருக்க வேண்டும். மண வயதில் ஒரு மகள்  படித்துக் கொண்டிருக்குமொரு மகன் அவ்வளவு ஒட்டுதல்கள் இல்லாத உறவுகள். அவருக்குப் பின் குடும்பம் என்னாகுமோ என்னும் தவிப்பு.தனக்கு மரணம் சம்பவிக்குமோ என்னும் பீதி..! .அதே சமயம் சுரம் வேறு வந்து அவர் கிட்டத்தட்ட ஹிஸ்டீரிகல் நிலைமைக்குப் போய்விட்டார். மனசுக்கு மிகவும் வேதனையாய் இருந்தது. வேண்டாத நினைவுகளிருந்து அவருக்கு ஆறுதல் அளிக்கவும்  அவர் நலம் பெற வேண்டியும் அருகில் இருந்த ஆலடத்துக்குச் சென்று அர்ச்சனை செய்து வேண்டிக் கொண்டு விபூதிப் பிரசாதத்துடன் அவரைப் பார்க்கப் போனேன். அவருக்குக் கடவுள் பக்தி ஏதும் கிடையாது. நாத்திகர் என்றும் சொல்லலாம். இருந்தாலும் நான் அந்த விபூதிப் பிரசாதத்தை அவர் நெற்றியில் இட்டேன். அவரும் மறுப்பேதும் சொல்லாமல் இருந்தார். சிறிது நேரம் வெளியில் இருந்தோம். திடீரென்று அவர் கூச்சல் கேட்டது. ஒரு வகை DELIRIUM  போல் தோன்றியது. அவருக்கு மூன்றாம் முறை வலி வந்திருக்கிறது. சாவை எதிர்நோக்கி இருந்த அவர் என்னை பார்த்ததும் நீயும்  உன் விபூதியும் நீயே வைத்துக் கொள் என்று சத்தமிட்டார். அரைமணி நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது.
                  --------------------------
அப்போது நாங்கள் விஜயவாடாவில் இருந்தோம். என் மனைவியின் இடது கையில் கட்டை விரலின் பின் புறத்தில் ஒரு மரு ( பாலுண்ணி ) வந்தது. அது சிறிது சிறிதாகப் பெரியதாகத் தொடங்கியது. மருத்துவரிடம் காண்பித்தோம். அதனால் பாதகமேதுமில்லை. வேண்டுமானால் அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிடலாம் என்றார். பாதகம் ஏதுமில்லாததால் இருந்து போகட்டும் என்று விட்டு விட்டோம். அதன் பிறகு நான் மீண்டும் திருச்சிக்கே மாற்றல் கேட்டு வாங்கிவந்தேன். கையில் இருந்த அந்தப் பாலுண்ணி சற்றே பெரிதாகவும் அருகேயே இன்னும் ஒன்றிரண்டு கூடவே தென்படவும் செய்தது. பாதகம் இல்லாவிட்டாலும் பார்க்க ஒரு மாதிரி அருவருப்பாகத் தென்பட்டது. மருத்துவமனையில் தோல் நிபுணரிடம் ( skin specialist )  கன்ஸல்ட் செய்தோம். அவர் எங்களை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்து “ இதற்கு மருத்துவம் ஏதும் தேவை இல்லை. வைத்தீஸ்வரன் கோயிலில் உப்பு மிளகிட்டு குளத்தில் வெல்லம் கரைத்து விடுங்கள் எல்லாம் சரியாகும் “ என்றார். நாங்களும் அவ்வாறே செய்தோம். சில நாட்கள் கழித்துப் பார்த்தால் எங்களுக்கே தெரியாமல் அந்த பாலுண்ணிகள் காணாமல் போயே போச். !
                     -----------------------------
அது 1970-ம் வருடம். கம்பெனிக் குடியிருப்பில் இருந்தோம். சபரி மலைக்குச் செல்வோர் குடியிருப்பில் பலர் இருந்தனர் . குறிப்பிட்ட நேரத்தில் ஐயப்பனை ஜோதி வடிவில் தரிசிப்பது நன்மை பயக்கும் என்றார்கள். நானும் மாலை போட்டு ஒரு கன்னி ஐயப்பனாக தீவிர விரத அனுஷ்டானங்களில் ஈடு பட்டேன். எல்லா புலன்களையும் ஒரு மண்டல காலம் கட்டுப்படுத்தி வந்தால் நம்மை நாமே வெல்லும் வாய்ப்பு என்றதால், அட்சர சுத்தமாகக் கடை பிடித்தேன்.  தினம் ஒருவர் வீட்டில் பஜனை நடைபெறும். அந்த வீட்டின் அன்னதானத்தை ஏற்பது கொடுப்பவருக்கும் திருப்தி, பெறுபவரும் அகந்தை அடங்க வாய்ப்பு. பஜனை சமயத்தில் ஒரு சிலர் உணர்ச்சி வசப்பட்டு சாமியாடுவார்கள். அவர்களை மற்றவர் பக்தியுடன் பார்ப்பார்கள்.குடியிருப்பில் இருந்து பேரூந்து ஏற்பாடு செய்யப் பட போகும்போது பல ஆலய தரிசனத்த்டன் எருமேலி சென்று பேட்டை துள்ளி ( நான் எனும் அகம்பாவம் எல்லாம் போய்விடும்) சன்னிதானம் அடைந்து நெய்யபிஷேகம் செய்து , அன்று அங்கு அங்கப் பிரதட்ஷிணம் செய்து ஜோதி தரிசனத்துக்காக காத்து இருந்தோம். ஆ  அதோ ஜோதி தெரிகிறது என்ற பக்தர்களின் ஆர்பரிப்பில் ஜோதி தரிசனம் காணும்போது அந்த ஆண்டவனையே நேரில் தரிசித்த அனுபவத்தில் மெய் உருகி கண்ணீர் மல்க கதறி அழுதேன். பின் எல்லோரும் நலமாக வீடு வந்து சேர்ந்தோம்.
அந்த அனுபவ அடிப்படையில் அடுத்த ஆண்டும் மாலை போட்டேன். கூடவே என் ஐந்து வயது மூத்த மகனையும் கூட்டிச் சென்றேன். எருமேலி சென்றோம். அந்தப் பேரூந்து ஓட்டுனர் அதற்கு மேல் பம்பா வரை வண்டி ஓட்ட முடியாது என்று சொல்லி விட்டார். பேரூந்தில் முதியவர்களும் குழந்தைகளும் இருந்ததால் எருமேலியிலிருந்து பெரிய பாதையில் நடந்து செல்ல முடியாது என்பதால் பம்பா வரை சென்று அங்கிருந்து மலைஏறுவதாகத் திட்டம் இட்டிருந்தோம். இப்போது எருமேலியிலேயே பேரூந்தை நிறுத்தி விட்டால்..... எல்லா திட்டமும் தரை மட்டமாகி விடும். அந்த ஓட்டுனரின் காலைப் பிடிக்காத குறை தொலைபேசியில் பேரூந்து ஓனரைத் தொடர்பு கொண்டால் அவர் ஓட்டுனரை எப்படியாவது சம்மதிக்கச் செய்யுங்கள். எருமேலி செல்லவே பெர்மிட் என்பதால் அவரால் ஏதும் செய்ய முடியாது என்றார். ஓட்டுனருக்கு கையூட்டு கொடுத்து , வழியில் போலீஸ் கெடுபிடி இருந்தால் எங்கள் பொறுப்பு என்று ஏற்றுக் கொண்டு பம்பா வந்து மலை ஏறி ஐயப்பன் தரிசனம் செய்தோம். இந்த முறை ஜோதி தரிசனம் செய்யும்போது I was composed. வரும் வழியில் அதிகாலை இரண்டு மணி அளவில் குருவாயூர் வந்தோம்..அப்போது அங்கே கிருஷ்ணாட்டம் நடந்து கொண்டிருந்தது. பலரும் அதைப் பார்க்கச் சென்று விட்டனர். பேரூந்தில் முதியோர் குழந்தைகள் தவிர்த்து ஐந்தாறு பேர் இருந்தனர். அப்போது ஒரு ஆறடி உயரமுள்ள ஐயப்பன் ஒருவர் பேரூந்தில் ஏறி முன் இருக்கை ஒன்றில் அமர்ந்து , கேட்கத் தகாத கெட்ட வார்த்தைகளைக் கூறிக் கொண்டு கையில் இருந்த கத்தியால் பேரூந்தின் இருக்கையைக் குத்த ஆரம்பித்தார். . நன்றாகக் குடித்திருந்தது தெரிந்தது. அவரிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்து அவரை இருக்கையில் படுக்க வைத்து அவரிடம் இருந்த கத்தியையும் இடுப்பில் இருந்த பெல்டையும் எடுத்துவிட்டால் அவரால் ஆபத்து நேராது என்ற எண்ணத்தில் சிலர் அவர் பெல்டில் கை வைத்ததும் அவர் காலால் எட்டி உதைத்து கத்தியால் குத்த வந்தார். ஒரு வழியாய் இருந்த ஐந்தாறு பேரும் அவரை அமுக்கி கையைப் பின் புறத்தில் கட்டி அவரை பேரூந்திலிருந்து இறக்கி விட்டதும் அவர் போதையில் விழுந்து விட்டார். அருகில் இருந்த காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தால் அங்கிருந்து பஸ்ஸை அகற்றிப் போகுமாறு கூறினர். யாரும் இடத்துக்கு வரவில்லை. சரி, பஸ்ஸை நகர்த்திச் செல்வோம் என்று முயலும் போது அங்கிருந்த கடைகளில் இருந்து சிலர் வந்து “ தமிழன்மார் மலையாளி ஐயப்பனைத் தல்லிக் கொன்னு “ என்று கூச்சல் இடக் கேட்கவா வேண்டும். கும்பல் கூட. ஒரே களேபரம். பஸ்ஸைத் தீ வைத்துக் கொளுத்துவதாகப் பயமுறுத்தினர். மண்ணையும் கல்லையும் வீசினர். அந்த நேரத்தில் நாங்கள் பயத்தில் உறைந்து விட்டோம். ஒரு சில நிமிடங்களில் எங்கள் குருசாமி வந்தார். மலையாளி ஐய்ப்பனிடமிருந்து எடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்க வற்புறுத்தினர். வீடு திரும்பும் எங்களிடம் பணம் மிகவும் சொற்பமே இருந்தது. எல்லோரிடமிருந்தும்  இருந்ததை வாங்கி இருநூறு ரூபாய் வரைத் தேற்றி அந்தக் கும்பலில் இருந்த லீடர் போலிருந்தவனிடம் கொடுக்க அவன் பஸ்ஸில் ஏறிப் படியில் நின்று கொண்டு “ போலாம் ரைட்..!என்றான்.
------------------------------------------------------      . .     


    
 
      

                       

30 கருத்துகள்:

  1. திகைக்கவைக்கும் வித்யாசமான அனுபவங்கள்..!

    பதிலளிநீக்கு
  2. //சாவை எதிர்நோக்கி இருந்த அவர் என்னை பார்த்ததும் நீயும் உன் விபூதியும் நீயே வைத்துக் கொள் என்று சத்தமிட்டார். அரைமணி நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது. //

    வருத்தம். ;(

    //மருத்துவமனையில் தோல் நிபுணரிடம் ( skin specialist ) கன்ஸல்ட் செய்தோம். அவர் எங்களை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்து “ இதற்கு மருத்துவம் ஏதும் தேவை இல்லை. வைத்தீஸ்வரன் கோயிலில் உப்பு மிளகிட்டு குளத்தில் வெல்லம் கரைத்து விடுங்கள் எல்லாம் சரியாகும் “ என்றார். நாங்களும் அவ்வாறே செய்தோம். சில நாட்கள் கழித்துப் பார்த்தால் எங்களுக்கே தெரியாமல் அந்த பாலுண்ணிகள் காணாமல் போயே போச். !//

    ஆச்சர்யம். ;)

    //ஒரே களேபரம். பஸ்ஸைத் தீ வைத்துக் கொளுத்துவதாகப் பயமுறுத்தினர். மண்ணையும் கல்லையும் வீசினர். அந்த நேரத்தில் நாங்கள் பயத்தில் உறைந்து விட்டோம்.//

    திகில் !

    வித்யாசமான அனுபவங்கள் தான்.



    பதிலளிநீக்கு
  3. பேட்டை துள்ளினாலே அனைத்தும் காணாமல் போய் விடும்...! நிகழ்வுகள் சுவாரசியம்...!!!

    பதிலளிநீக்கு
  4. நாத்திக நண்பர் நீங்கள் கொடுத்த விபூதி பிரசாதத்தை தனது நண்பருக்காக அதனை ஏற்றுக் கொண்டவர், கடைசியில் தனது வைராக்கியத்திற்காக உதறிவிட்டார்.

    வைத்தீஸ்வரன் கோயிலில் உப்பு மிளகிட்டு குளத்தில் வெல்லம் கரைத்து விட்டவுடன் காணாமல்போன பாலுண்ணிகள். நம்ப முடியாத அதிசயம்தான்.

    எருமேலியிலேயே உங்களுக்கு ஒரு தடங்கல். இடையூறின் அறிகுறி! எப்படியோ தப்பினீர்கள்!

    மூன்று நிகழ்விலுமே ஏதோ ஒரு நம்பிக்கைதான் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  5. எல்லா சம்பவங்களுமே - நம்பிக்கை எனும் நூலிழையில் பின்னப் பட்டவை. விரலில் வந்த மரு மட்டுமா!.. கர்ப்பப் பையை எடுத்தாக வேண்டும் என்று சொல்லி விட்ட பிறகு - மிக வருத்தமடைந்த அந்த தம்பதியினர் செய்த முதல் வேலை - சிவதரிசனம். மூன்றே திருக்கோயில்கள். அதில் ஒன்று வைத்தீஸ்வரன் கோயில். அது ஆயிற்று 12 வருடங்களுக்கு மேல். இன்றும் பூரணநலத்துடன் இருக்கின்றார்கள். ஐயப்ப தரிசனத்திற்கு இருமுடி கட்டிய பிறகு ஒவ்வொரு சொல்லும் செயலும் அர்த்தமுள்ளவை. எருமேலியில் தடங்கல் வந்தபோதே நிதானித்து இருக்கவேண்டும். ஸ்வாமி சரணம்!..

    பதிலளிநீக்கு
  6. //அவன் பஸ்ஸில் ஏறிப் படியில் நின்று கொண்டு “ போலாம் ரைட்..!” என்றான்.//

    ஆழ்மனத்தில் பதியும் நிகழ்வுகளின் காட்சிப் பிரதிகள் நினைக்க நினைக்க ஆச்சரியம் கொடுப்பது. எப்பொழுது வேண்டுமானாலும் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை--அந்த போலாம் ரைட் வரை-- தடங்கல் இல்லாமல் இப்படியே சொல்ல முடியும் உங்களால். எப்பொழுது சொன்னாலும் அந்த போலாம் ரைட்டுக்கு அப்புறம் ஒரு வரி கூட சொல்ல மாட்டீர்கள்.
    அந்த 'போலாம் ரைட்'டோட அந்த நிகழ்வு முடிவதாக உங்கள் மனம் தீர்மானமாக நம்புகிறது. அதான் விஷயம்.

    இந்த நிகழ்வையே கதையாக எழுத வேண்டும் என்று என்னைக் கேட்டுக் கொண்டால், முதல் வரியே, "போலாம், ரைட" என்று தான் கதையை ஆரம்பிப்பேன். நடந்த விஷயங்களோடு நடக்காத சில சமாச்சாரங்களும் சேரும்.

    நடந்த மனத்தில் படிந்த ஒரு நிகழ்வை
    வாய்மொழியாக விவரிப்பதற்கும் அந்த நிகழ்வையே ஜிகினா வேலைப்பாடு களுடன் கதையாக ஆக்குவதற்கும் இதான் வித்தியாசம்.

    அதனால் தான் ஒரு கதையை கதையாகப் படிக்க வேண்டும் என்கிறார்கள். இணையப் பதிவுலகில்
    கதையைக் கதையாகப் படிப்பவர்கள் ரொம்ப குறைச்சல். அதையும் இந்த நேரத்தில் சொல்லிவிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. அன்புள்ள ஜிஎம்பி ஐயா

    வணக்கம்.

    தங்களின் அனுபவங்களைப் போலவே எனக்கும் நிறைய உண்டு. அவை என் நினைவில் மிதக்கின்றன மறுபடியும் வந்து.

    உண்மைதான்.

    நம்பிக்கை கொள்வாருக்கு என்றுமே அந்த நம்பிக்கை தோற்றதில்லை. அது நேராக இருந்தாலும் சரி எதிராக இருந்தாலும் சரி.

    பதிலளிநீக்கு
  8. அனுபவங்கள் வித்தியாசமானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மன நிலையைக் கொடுத்தவை.

    பதிலளிநீக்கு
  9. வித்தியாசமான அனுபவர்கள் ஐயா. மருத்துவமனையில் இருந்தும் உயிர் விடும் நண்பர், வைத்தீஸ்வரம் கோயிலுக்குச் செல்லப் பரிந்துரைக்கும் மருத்துவர்...

    பதிலளிநீக்கு
  10. அருமையான அனுபவப்பதிவுகள். நம்பிக்கைதான் வாழ்க்கை.

    பதிலளிநீக்கு
  11. நிகழ்வுகளின் பகிர்வுகள் அருமை. சொந்தக்கருத்துக்கள் ஏதுமில்லாவிடினும் நிகழ்வுகளை எழுத்தால் சொல்கின்ற விதம் சொல்லாத கருத்துக்களையும் சொல்லிப்போகிறது. ஜீவி சார் அவர்களின் பின்னூட்டம் பதிவைத் தாண்டிய சிந்தனையை எழுப்புகிறது. பகிர்வுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  12. @ இராஜராஜேஸ்வரி
    /திகைக்க வைக்கும் வித்தியாசமான அனுபவங்கள்/
    ஆம். இதே போன்ற அனுபவங்கள் நம் சிந்தனைகளைச் செதுக்கும் என்று நினைக்கிறேன்
    வருகைக்கும்கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  13. @ கோபு சார்
    வருத்தம் ஆச்சரியம் திகில் நிறைந்த நிகழ்ச்சிகள்தான் இவற்றின் பாதிப்பே என் சில சிந்தனைகளுக்குக் காரணம் என்று நினைக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  14. @ திண்டுக்கல் தனபாலன்
    / பேட்டை துள்ளினாலே அனைத்தும் போய் விடும்/ சபரிமலைப் பயண விதிகளை ஒழுங்காகக் கடைப் பிடித்தால் விளையும் நன்மைகளில் நான் எனும் அகங்காரம் அகலும்என்பதும் ஒன்று. வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  15. @ தி. தமிழ் இளங்கோ
    ஒரே நிகழ்வு எப்படி வித்தியாசமான புரிதலைக் கொடுக்கிறது என்பதை காட்டுகிறது உங்கள் பின்னூட்டம். விபூதியை ஏற்றுக் கொண்ட நண்பர் தன் வைராக்கியத்தை உதறி விட்டார் என்கிறீர்கள். நீரில் மூழ்குபவன் ஒரு துரும்பாவது உதவாதா என்ற மன நிலையில் அவர் பிரசாதம் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். அது பலன் தரக் காணோம் என்னும்போது விரக்தியின் எல்லையில் சாமியாவது ஒண்ணாவது என்று நினைத்திருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்
    பாலுண்ணிகள் மறைந்தது நம்பிக்கையின் காரணம் என்று என் மனைவி நினைக்க வாய்ப்பிருக்கிறது
    எருமேலி இடையூறு சரியாகத் திட்டமிடாததால் வந்த வினை. சகுனத் தடை என்பது வேறொரு நம்பிக்கைக்கு வித்திடுவதாகும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  16. @ துரை செல்வராஜ்
    கருப்பப் பை எடுத்தாக வேண்டும் என்று சொல்லப் பட்ட தம்பதியினர் அதை எடுத்தார்களா என்று சொல்லவில்லையே. சில சமயங்களில் மருத்துவர்களின் கணிப்பு தவறாகிற வாய்ப்பும் சாதாரணமே. ஐயப்ப தரிசனத்துக்குச் செல்லும்போது கடை பிடிக்க வேண்டிய விஷயங்கள் பலவும் அந்தக் காலப் பயண முறைகளைச் சமாளிக்க ஏற்படுத்தப் பட்டது. மண்டல கால கடும் ச்விரதம் இந்திரியங்களை கட்டுப்படுத்த உதவும் என்று நானும் நினைக்கிறேன்
    எருமேலியில் தடங்கல்காரணமே வேறு. சரியான திட்டமிடல் இல்லை. அதற்கு நாங்களே பொறுப்பு.நிதானித்து இருக்க வேண்டும் என்றால் பயணத்தை நிறுத்தி இருக்க வேண்டுமா இல்லை பரிகாரங்கள் ஏதவது செய்திருக்க வேண்டுமா. என்ன செய்வது எதை எழுதினாலும் புரிதல்களை எப்படி ஏற்பது தெரியவில்லை.எனக்கு என் தரப்பு புரிதலைச் சொல்ல வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி

    பதிலளிநீக்கு

  17. @ ஜீவி
    /எப்பொழுது சொன்னாலும் அந்த போலாம் ரைட்டுக்கு அப்புறம் ஒரு வரி கூட சொல்ல மாட்டீர்கள்/ அத்துடன் அந்த நிகழ்வு முடிவதாக உங்கள் மனம் தீர்மானித்து நம்புகிறது/ ஜீவி சார் அத்துடன் நான் நிறுத்திக் கொண்டதே to elicit opinions. பதிவின் ஆரம்பத்திலேயே என்கருத்து பதிவில் இடம் பெறக் கூடாது என்று நினைத்தேன். பதிவில் கூறப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் என் thought process யே பாதித்திருக்கிறது.
    நிகழ்வுகளையே கதையாக எழுதினால்.........நிச்சயம் என் எண்ண ஓட்டங்களும் நான் நினைக்கும் நிதரிசன உண்மைகளும் இடம் பெற்றிருக்கும்.கதாசிரியனின் சுய எண்ணங்களை மறைத்துக் கதை எழுதினால் நம்பகத் தன்மை போய்விடும். நீங்களே சொல்லி இருக்கிறீர்கள் எழுதுவது எண்ணங்களைக் கடத்த என்று. நம் இயல்புக்கு மாறாக எண்ணங்களைச் சொன்னால் அது நம்மை நாமே ஏஆற்றிக் கொள்வதுபோலாகும். கதையைக் கதையாகப் படிக்க வேண்டும் என்றால் அதில் சொல்லப் பட்டிருக்கும் நம்பிக்கைகள் உணர்வுகள் எல்லாமே கற்பனை என்று நினைக்க வேண்டுமா.?கதைகளைப் படிக்கும்போது அதில் காணும் கதாபாத்திரங்கள் நம்முள் சதையும் எலும்புமாக வளைய வருபவர்களாகத்தான் படிப்பவர் உணர வெண்டும். இங்கு நான் எழுதியவை கதை அல்ல நிஜம் உங்கள் பின்னூட்டம் கதைகள் நிஜங்கள் பற்றி என் கருத்தைப் பகிர கிடைத்த வாய்ப்பாகக் கருதுகிறேன் நன்றி ஜீவிசார்.

    பதிலளிநீக்கு

  18. @ ஹரணி
    உங்கள் மேலான வருகைக்கு நன்றி ஐயா. உங்கள் அனுபவங்களையும் பகிரலாமே.

    பதிலளிநீக்கு
  19. என் 'இனி' தொடர்கதை பின்னூட்டத்தில் நான்:

    நம்பிக்கை பெற்றவர்களுக்கு அந்த நம்பிக்கை உடலுள் ஒரு ஹார்மோன் போலச் செயல்படும்.

    பிறருக்கு கெடுதல் விளைவிக்காத எந்த நம்பிக்கையும் நேர்மறைச் சிந்தனைகளைத் தன்னில் இயல்பாகவே கொண்டிருக்கும்.

    இந்த நேர்மறை சிந்தனை என்பது ஒரு வரம். வாழ்க்கைக் கடலைக் கடக்க கிடைத்த தோணி.

    உங்களின் 'நெஞ்சு பொறுக்குதில்லையே'
    பதிவில் நீங்கள்:

    இந்த மாதிரி நம்பிக்கையைத் தவறு என்று கூறப் போனால் நம்மை முட்டாள் என்று நினைப்பவரே அதிகம்.

    அப்படியே ஏதாவது கேட்கப்போய் பிறருக்கு கேடு விளைக்காத எந்த நம்பிக்கையுமே நேர்மறை சிந்தனையின் வெளிப்பாடுதான் என்று அறிவுறுத்தப் படுவோம்.

    உங்களின் இப்பொழுதிய 'நம்பிக்கை..நிகழ்வுகள்' பதிவில் நீங்கள்:

    //பாலுண்ணிகள் மறைந்தது நம்பிக்கையின் காரணம் என்று என் மனைவி நினைக்க வாய்ப்பிருக்கிறது.. //

    எப்பொழுதாவது உங்கள் வாய்மொழியாகவே ஒப்புதல் வரும் என்று தெரியும்.

    பதிலளிநீக்கு
  20. //கதாசிரியனின் சுய எண்ணங்களை மறைத்துக் கதை எழுதினால் நம்பகத் தன்மை போய்விடும்.//

    'நடந்த விஷயங்களோடு நடக்காத சில சமாச்சாரங்களும் சேரும்' என்று சொல்லியிருக்கிறேன். 'நடக்காத சமாச்சாரங்கள் என்றால் நடக்காத வேறு சில கற்பனையான நிகழ்வுகள்' என்று பொருள் கொள்ள வேண்டும்.

    புனைகதை என்பது சமூக நிகழ்வுகளை 'அப்படியே' எழுதுவது அல்ல. அதற்கு இலக்கிய ரூபம் கொடுக்க வேண்டும்.
    நிகழ்வுகள் கொள்ளும் ஒருங்கிணைவும் உருமாறுதல்களும் தான் உண்மையி லேயே கதை வடிவம் கொள்கிறது.

    சுய எண்ணங்கள மறைத்து எழுத வேண்டும் என்று நீங்களாக பொருள் கொண்டிருக்கிறீரகள்.

    பதிலளிநீக்கு

  21. @ டாக்டர் கந்தசாமி
    @ கரந்தை ஜெயக்குமார்
    @ உமேஷ் ஸ்ரீநிவாசன்
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிஜத்தின் வெளிப்பாடுகள் கற்பனையை விட சில சமயங்களில் ஆச்சரியமானது.

    பதிலளிநீக்கு

  22. @ கீத மஞ்சரி
    /...சொல்லாத கருத்துக்களையும் சொல்லிச் செல்கிறது /நம்பிக்கை, நம்பிக்கையின்மை, அவநம்பிக்கை என்று பலவிதங்களில் கருத்துக்களை எடுத்துக் கொள்ளலாம் நான் மன அமைதி கிடைக்கும் என்று நம்பிச் செய்த செயல் பலன் இல்லை என்று தெரிந்ததும் ஆற்றாமையால் நீயே வைத்துக் கொள் என்று சொன்னாரா இல்லை இவை எல்லாம் எதற்கும் பலனில்லாதது என்று செய்தாரா விளங்கவில்லை. ஆனால் நம்பிக்கையால் பலனுண்டு என்று நிச்சயம் தெரியாவிட்டால் அவநம்பிக்கையே தலை தூக்குகிறது. மருக்கள் மறைந்தது நம்பிக்கையின் விளைவு என்று என் மனைவி நினைக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறேன்.சுகக்கெடுகளை நீக்கும் என்னும்நம்பிக்கைகள் ஒரு வேளை மன தைரியத்தைக் கொடுக்கலாம்.நான் குறிப்பிட்டுள்ள இரண்டு நிகழ்ச்சிகளூம் இரு வேறு செய்திகளைச் சொல்கின்றன.
    சபரி மலைக்குச் சென்றுவந்த இரு அனுபவங்களையும் கூறி இருக்கிறேன்.மனிதனால் ஏற்றப்படும் தீபம் என்று புரியாத நிலையில் கடவுளையே ஜோதிஸ்வரூபனாக கண்டேன் என்று எழுதி இருக்கிறேன்.அது அப்போது இருந்த என் மனநிலை. ஆனால் உண்மை அது அல்ல.நம்பிக்கை என்னும் பெயரால் ஏமாற்றப் பட்டிருக்கிறேன்.ஆனால் கற்பனையில் என்னை இழந்தது நிஜம்.இப்போது நினைத்துப் பார்க்கும் போது பலரும் நான் அன்று இருந்ததுபோல்தான் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. இரண்டாம் அனுபவம் என்னை தீவிரமாக சிந்திக்கச் செய்கிறது.விரதம் இருந்து இருமுடிகட்டி கரடுமுரடான பாதையில் நடந்து மலை ஏறி தரிசனம் செய்வது கடவுள் நம்பிக்கைக்கும் அப்பாற்பட்ட பலன்களைத் தரக் கூடியது. ஆனால் அந்த மாதிரியல்லாமல் செய்யக் கூடாத செயல்களை எல்லாம் செய்தும் ஓரிரு நாட்கள் மட்டும் வேஷம் கட்டி தரிசனம் காணப் போகும் pseudo பக்தர்கள் நேர்மறை நம்பிக்கை கொண்டவர்களையும் அவநம்பிக்கை கொள்ளச் செய்கிறார்கள்.இப்போதும் சொல்கிறேன் எனக்கு யாருடைய நம்பிக்கையும் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ என்னை பாதிக்கத வரையில் எப்படியோ போகட்டும் என்று இருக்க முடியவில்லை. நம்பிக்கையின் பெயரால் ஏமாறுபவர்களையும் ஏமாற்றுபவர்களையும் காணும் போது உண்மையிலேயே ‘நெஞ்சு பொறுக்குதில்லையே”

    பதிலளிநீக்கு
  23. சுவாரசியமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி .

    பதிலளிநீக்கு
  24. நிகழ்வுகள் நிஜமாயினும்
    நம்பிக்கைகள் அவர் அவர்
    நிலைகளைப் பொறுத்தே

    (சாவோம் என உறுதியாகத் தெரிந்ததால்
    விபூதியை எறிந்தார் எனவும் சொல்லலாம்

    விபூதியை எறியாமல் இருந்தால்
    பிழைத்திருக்கவும் வாய்ப்புண்டு
    எனவும் சொல்லலாம்தானே )

    பதிலளிநீக்கு
  25. அனுபவங்கள் பலவித நம்பிக்கைகளை சொல்கிறது.
    வைத்தியர், வைத்தியநாதரிடம் போக சொன்னது மிகவும் ஆச்சிரியம், அவர் இறை நம்பிக்கை உடையவர் என தெரிகிறது.
    எங்கள் பக்கம் சங்கரன் கோவிலில் புத்து மண் கிடைக்கும் அதை உரசி போடசொல்வார்கள் பாலுண்ணிகளுக்கு.
    மாயவரம் பக்கம் எல்லோரும் வைத்தீஸ்வரன் கோவில் போய் வெல்லம் கரைத்து, உப்பு, மிளகு வாங்கி போடுங்கள் சரியாகி விடும் என்று சொல்வார்கள்.
    நம்பிக்கைகள் வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது என்பது உண்மை.

    பதிலளிநீக்கு

  26. @ அபயா அருணா
    என் வலைப்பூவுக்கு( முதல் முறை?)வருகை தந்ததற்கு நன்றி.பல சுவாரசியமான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு வருகிறேன். தொடர்ந்து வாருங்கள்
    .
    @ ரமணி.
    /நம்பிக்கைகள் அவரவர் நிலைகளை பொறுத்தே/ நம்பிக்கைகள் சிறுவயதிலிருந்தே jndoctrinate செய்யப்பட்டு வளர்க்கப் படுகிறது.அனுபவங்கள் அவற்றை சீர்தூக்கிப் பார்க்க வைக்கிறது நான் நண்பருக்கு மன அமைதி கிடைக்கட்டும் என்று விபூதி பிரசாதம் கொடுத்தேன் .முதலில் அவரும் வாங்கிக் கொண்டார் .நம்பிக்கையோடுதான். ஆனால் பலன் ஏதும் கிடைக்காததால் என்னிடம் கோபம் கொண்டார்

    @ கோமதி அரசு
    /நம்பிக்கைகள் வாழவைத்துக் கொண்டு இருக்கிறது என்பது உண்மை./ அறியாமையால் வளர்க்கப் படுகிறது. சிந்திக்க விடாமல் தடுக்கிறது என்பதும் உண்மை
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. இன்னும் என்னென்ன நினைவுகள் கவனத்திற்கு வருகிறதோ, எல்லாவற்றையும் எழுதிவிடுங்கள். வாழ்க்கை என்பதே நினைவுகளின் தொகுப்பு தானே! - இமயத்தலைவன்

    பதிலளிநீக்கு
  28. நான் இட்ட கருத்துரை வரவேயில்லையே? Spamல் போய்விட்டதா:(

    பதிலளிநீக்கு

  29. @ செல்லப்பா யக்ஞஸ்வாமி
    வருகைக்கு நன்றி ஐயா. என் பதிவின் பக்கம் அடிக்கடி வாருங்கள். என் பதிவுகளில் பெரும்பான்மையானவை நினைவுகள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே.

    டி.பி.ஆர். ஜோசப்
    கருத்துரை வருகிறதா இல்லையா என்பது உடனுக்குடன் தெரிந்து விடுமே. பின்னூட்டங்களை நான் வடிகட்டுவதில்லை. SPAM இலும்ஏதுமில்லை. முடிந்தால் மீண்டும் கருத்து தெரிவிக்கலாமே. நன்றி.

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் ஐயா!.. அறுவை சிகிச்சை இரண்டு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டது. அந்த தம்பதியர் செய்த வேண்டுதலுக்குப் பிறகு கர்ப்ப பையை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இன்று எந்தக் குறையும் இல்லாமல் இருக்கின்றனர்.

    பதிலளிநீக்கு