Monday, May 5, 2014

நான் பிறந்த ஊரும் அதன் கோவிலும் ------


               நான் பிறந்த ஊரும் அதன் கோவிலும்
               -----------------------------------------------------


என் பெயர் G.M.Balasubramaniam என்பது அறிந்ததே. பெயரில் இருக்கும் G எங்கள் முன்னோர்களின் ஊரான கோவிந்தராஜபுரத்தைக் குறிக்கும் M என் தந்தையின் பெயரான மஹாதேவனின் முதல் எழுத்தைக்குறிக்கும். இது என் பதிவில் நான் என்றோ சொன்னது. ஒரு வேளை சொல்லாமல் விட்டது நான் பிறந்த இடம் பெங்களூரில் அல்சூர் என்பது. அதுபற்றிப் பதிவிட வேண்டும் என்னும் எண்ணம் திடீரென உதித்ததுநான் பிறந்த ஊரான பெங்களூர் என் வாழ்க்கையில் நிறையவே நிகழ்ச்சிகள் நடந்த இடம் இதெல்லாம் besides the point. சொல்லிக் கொண்டே போனால் சொல்ல வந்தது சொல்லப்படாமலே போக வாய்ப்புண்டு. ஆகவே விஷயத்துக்கு வருகிறேன்
 கோவில் அருகில் உங்கள் வீடு இருக்கிறதென்று நினைத்துக் கொள்ளுங்கள் திடீரென ஒரு நாள் நீங்கள் குடியிருக்கும் இடம் கோவிலுக்குச் சொந்தம் . உங்கள் வீடு ஒரு கோவில் திருக்குளத்தின் மேல் கட்டப் பட்டிருக்கிறது. உங்கள் வீடுகளை இடித்து அதன் அடியில் இருக்கும் கல்யாணியைக் (படிக்கட்டுடன் கூடிய குளம் )மீண்டும் கோவிலுக்கு உரித்தாக்கப் போகிறோம் என்றால் எப்படி இருக்கும் ?இதுதான் 2010-ம் ஆண்டு அல்சூர் சோமேஸ்வரசுவாமி கோவிலுக்கு முன்னால் வீடுகளில் குடியிருந்தோர் எதிர் கொண்ர்டது. அல்சூரில் பிறந்து HAL-ல் 1950- 1960-களில் வசித்து வந்த நான் என் தந்தையை இழந்ததும் அங்கே. மணமுடித்து வாழ்க்கை தொடங்கியதும் அங்கே அப்போதெல்லாம் இந்த மாதிரி கல்யாணி இருப்பது நினைத்தும் பார்க்காதது
இப்படிப்பட்ட அல்சூர் பற்றியும் அதில் இருக்கும் சோமேஸ்வரர் கோவில் பற்றியும் எழுதுகிறேன் அல்சூர் என்று பொதுவாக அறியப்படும் இடத்தின் உண்மைப் பெயர் ஹலசூர் என்பதாகும் இந்த இடத்தில் பலாத் தோப்பு இருந்ததாம் கன்னடத்தில் பலாப் பழத்தை “ஹலசின ஹன்னு “என்பார்கள் இதுவே ஹலசூர் என்று அறியப் பட்டது பிறகு ஆங்கிலேயர்கள் இங்கு ‘தண்டுஅமைத்தபோது அல்சூர் என்று குறிப்பிட அதுவே பெரும்பாலும் அறியப்பட்ட பேராக இருந்தது. நல்ல வேளை இப்போது அதன் மூலப்பெயரே புழக்கத்துக்கு வந்து கொண்டிருக்கிறது ( (இதே சமயம் ஒன்று குறிப்பிடத் தோன்றுகிறது தமிழில் ப வரும் இடங்களில் எல்லாம் கன்னடத்தில் ஹ வரும் உ-ம் பால்=ஹால், பாடு=ஹாடு போராட்டம் =ஹோராட்டம் இப்படி நிறையவே சொல்லிக் கொண்டு போகலாம் அதேபோல பலா ஹலா ஆக மாறி இருக்கலாம் )
ஒரு கோவில் என்று வரும்போது ஒரு கதையும் இருக்கும் அல்லவா.அதுபோல சோமேஸ்வரர் கோவிலுக்கும் ஒரு பின்னணிகதையாக உள்ளது இந்தக் கோவில் உருவான வருஷமோ கட்டியது யார் என்று நிச்சயமாகத் தெரியாத நிலையிலும் கதை மட்டும் உண்டு இக்கோவில் சோழர் காலத்தையது என்று ஒரு கூற்று உண்டு அடாவது 1200 களில் உருவாகி இருக்கலாம் கோவிலும் கட்டுமான படிவங்களும் சோழர் பாணி , விஜய நகரப் பாணி. பிந்தைய கௌடர்களின் பாணி எல்லாம் ஒருங்கே கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது
சரி கதைக்கு வருவோம் விஜய நகர மன்னர்களால் பெங்களூர் கிராமம் கெம்பே கௌடா( 1513-1569) என்பவருக்கு அளிக்கப்பட்டதாம்அவர் இந்தக் கோவிலைக் கட்டி இருக்கலாம் இவர் யெலஹங்கா எனும் இடத்தை தன் தலைமை இடமாக வைத்து இருந்தார். ஒரு நாள் வேட்டையாடி கொண்டே வெகுதூரம் வந்துவிட்டாராம் ( தற்போதைய யலஹங்காவுக்கும் ஹலசூருக்கும் இடையே 25 கி.மீ தூரம் இருக்கலாம் )வேட்டையாடிக் களைத்துப் போய் ஒரு மரத்தடியில் இளைப்பாறினாராம் அப்போதுஅவர் கனவில் சோமேஸ்வரர் வந்து அங்கு கிடைக்க இருக்கும் புதையல் கொண்டு அவருக்கு ஒரு கோவில் எழுப்பச் சொல்லி பணித்தாராம் இன்னொரு கதைப்படி ஜயப்ப கௌடா(1420-1450)எனும் சிற்றரசர் கனவில் ஒரு மனிதர் தோன்றி அவர் அப்போது இளைப்பாறிக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு லிங்கம் இருப்பதாகவும் அங்கு ஒரு கோவில் கட்டுமாறு பணித்ததாகவும் கூறப்படுகிறது இன்னொரு கதைப்படி இக்கோவில் சோழ பரம்பரையினரால் கட்டப்பட்டு யெலஹங்கா நாட்டுப் பிரபுக்களால் மெறுகேற்றப்பட்டதாகவும் கூறப் படுவதுண்டு. எது எப்படி இருந்தாலும் பெங்களூரின் புராதனக் கோவில் ஸ்ரீ சோமேஸ்வர சுவாமி கோவில்
இந்தக் கோவிலுக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு 04-05-2014-ல் சென்று வந்தேன் பதிவுலகில் பகிர்வதற்காக அக்கறையுடன் கோவில் தரிசனம் செய்து என் கண்ணுக்குப் பட்டவற்றை எல்லாம் புகைப்படமாக எடுத்து வந்திருக்கிறேன்
இந்தக் கோவிலில் பூப்பல்லக்குத் திருவிழா பெயர் பெற்றது அன்று சுற்று வட்டாரப் பகுதிக் கோவிலிலிருந்தெல்லாம் பூப்பல்லக்குகள் கலந்து கொள்ளும் எனக்குத் திருமணமாவதற்கு முன் ஒரு முறை இத்திருவிழாவைக் கண்டிருக்கிறேன், இரவு முழுவதும்பல்லக்குகளின் பவனி கண் கொள்ளாக் காட்சியாகும் சென்றமாதம் நடந்த பல்லக்குபவனியைக் காணக் கொடுத்து வைக்கவில்லை. இருந்தால் என்ன அன்னப் பட்சி அலங்காரத்தில் சோமேஸ்வரர் கோவில் பல்லக்கு வந்ததற்கு சாட்சியாக அந்தப் பல்லக்கின் ( பூ அலங்காரம் தவிர )கூடு இன்னும் கோவிலில் இருந்தது. புகைப்படமாக எடுத்துக் கொண்டேன்
வாரத்தில் கிடைக்கும் ஒரு நாள் ஓய்வையும் புறக்கணித்து என்னை வீட்டில் இருந்து காரில் கூட்டிச்சென்று காண்பித்த என் இளைய மகனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன் பதிவில் சொல்லாத பல விஷயங்கள் படங்களில் காணலாம்         

சோமேஸ்வரர் கோவில் பிரதான கோபுரமும்  அதில் காணும் சிற்ப வேலைப்பாடுகளும்
கீழே காண்பவை கோவிலின் உட்புறத்தில் இருந்து கோபுரக் காட்சிகள்

 தெருவில் இருந்து காண்க் கூடிய ஒரு சிற்பக் காட்சி 

 மண்டபத்தில் சில சிற்பங்கள்
கைலை மலையைத் தூக்க முயலும் இராவணன்
நரசிம்மர்?
மண்டபத்தில் கண்ணாடி அறையில் சோமேஸ்வரரும் காமாட்சிஅன்னையும்

மகுடிஊதும் பாம்பாட்டி
சிற்பத் தூண்
மண்டபத்துக்கு வெளியே பலிபீடம் துவஜஸ்தம்பம்  சிறு நந்தி
மண்டபத்துக்கு வெளியே துவஜஸ்தம்பம் அருகே சிறு நந்தி
ஊஞ்சல் ஆட்டும் நான்
மண்டபத்தில் நந்தி ( பெரியது )
பிரதானகோபுரம் முன் நிற்கும் கல் தூண் (close up)

 கோவிலின் கோபுரம் முன் நிற்கும் கல் தூண்
கோவில் பிடகாரத்தில் அனுமன் சன்னதி
கோவில் வளாகத்தில் நாகலிங்க மரம் --பூ
பூப்பல்ல்க்கின் கூடு அருகே நான்

கோவில் அருகே மீட்கப்பட்ட கல்யாணி
வேலி அமைக்கப் பட்ட கல்யாணி பற்றி அரசின்  அ றிவிப்பு

(.PHOTOGRAPHY  BY G.M.B. AND SON )

  .    

46 comments:

 1. வணக்கம்
  ஐயா..

  நன்றாக சொல்லியுள்ளீர்கள் படங்கள் பிரமிக்க வைக்கிறது பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. மலரும் நினைவுகளுடன்
  மலர்ந்த அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. மலரும் நினைவுகள்
  என்றுமே இனியவைதான்
  படங்களும் பகிர்வும் அருமை ஐயா
  நன்றி

  ReplyDelete
 4. பூப்பல்லக்கின் கூடு பார்ப்பதற்கு அழகாக உள்ளது. உங்களுடைய அனுபவத்தையும் அழகாக விவரித்துள்ளீர்கள்.

  ReplyDelete
 5. உங்கள் ஊர் பற்றி சொல்லும்போது கோவில் பற்றியும் அறிய முடிந்தது.

  ReplyDelete
 6. பிறந்த மண்ணைப் பற்றிப் பேசுவது அல்லது எழுதுவது என்பதில் கிடைக்கும் சுகமே அலாதி. அதைவிட சுகம் அதனைப் பிறருடன் பகிர்ந்துகொள்வது. மிக அருமையான நினைவுகள். நன்றி.

  ReplyDelete
 7. அல்சூர் பற்றியும் அங்குள்ள சோமேஸ்வரர் கோவில் பற்றிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி. புகைப்படங்கள் அருமை.

  ReplyDelete
 8. கோவில் பற்றிய சிறப்புகளுடன் பிறந்த ஊர் பற்றி பகிர்ந்து கொள்வதில் உள்ள சந்தோசமே தனி...

  மிகவும் மகிழ்ச்சி ஐயா... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 9. சிறப்பான பகிர்வு ..பெற்ற தாயையும் பிறந்த பொன் நாட்டையும்
  எண்ணி எண்ணி வாழும் வாழ்வில் எத்தனை சுகம் இருக்கிறது !
  எங்கு சென்றாலும் எவர் கையால் உணவு வாங்கி உண்டாலும்
  எங்களால் மறக்க முடியாத உணர்வே இது தான் .படங்கள்
  கண்டும் மகிழ்ந்தேன் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

  ReplyDelete
 10. படங்கள் நன்றாக இருக்கின்றன.

  கோவிலுக்கு சொந்தமென்று வீட்டை எடுத்துக் கொண்டால் compensation கொடுப்பார்களா கல்கண்டும் கடவுள் அருளும் கொடுப்பார்களா?

  ReplyDelete
 11. அடேங்கப்பா, எத்தனை படங்கள்!

  ReplyDelete

 12. @ ரூபன்
  முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

  ReplyDelete

 13. @ இராஜராஜேஸ்வரி
  நான் மலரும் நினைவுகளையா சொல்லி இருக்கிறென் இரு நாட்கள் முன்பு போய் வந்த இடம் கோவில் பற்றி அல்லவா எழுதி இருக்கிறேன்.பாராட்டுக்கு நன்றி

  ReplyDelete

 14. @ கரந்தை ஜெயக்குமார்
  அதென்ன...நீங்களும் நான் எழுதியதை மலரும் நினைவுகள் என்கிறீர் நான் பிறந்த ஊர் என்பதைக்குறிப்பிட்டுள்ளேன் . வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

  ReplyDelete

 15. @ டி.பி.ஆர்.ஜோசப்
  பூப்பல்லக்கினை சுமார் 500 கேஜி. வாசமுள்ள மலர்களால் அலங்கரிப்பார்கள். சுற்றுவட்டாரக் கோவில்களிலிருந்தெல்லாம் பல்லக்குகள் பவனி வரும்போது எங்கும் நறுமணமே திகழும் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி

  ReplyDelete

 16. @ ஸ்ரீராம்
  தொன்மை வாய்ந்த கோவில் பற்றிக் கூறும்போது நான் பிறந்த ஊர் பற்றி கூறாமல் இருக்கமுடியவில்லை வருகைக்கு நன்றி .

  ReplyDelete

 17. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  என் மூதாதையர் ஊர் பற்றி எழுதி இருக்கிறேன் அதிலிருந்து சற்றே பிரித்துக்காட்ட நான் பிறந்த ஊர் பற்றியும் எழுதி விட்டேன். வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி

  ReplyDelete

 18. @ வே. நடனசபாபதி
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete

 19. @ திண்டுக்கல் தனபாலன்
  பிறந்த ஊரிலேயே ( ஹலசூர் பெங்களூரின் ஒரு பகுதி) வாழ்வின் மாலைப் பொழுதைக் கழித்து வருகிறேன் வருகைக்கு நன்றி

  ReplyDelete

 20. @ அம்பாளடியாள்
  உங்கள் உணர்வுகள் புரிகிறது. அதையும் வலை மூலம் பகிர்ந்து கொள்ள முடிவது ஒரு ஆறுதல்வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

  ReplyDelete

 21. @ அப்பாதுரை
  என்னதான் காம்பென்சேஷன் கிடைத்தாலும் கடவுளின் அருகில் வசிக்கும் வாய்ப்பு போய் விட்டதே. வருகைக்கு நன்றி சார்/

  ReplyDelete

 22. @ டாக்டர் கந்தசாமி
  அண்மையி, அமேரிக்காவில் இருந்து வந்திருந்த நண்பர் ஒரு வீடியோ காமிரா கொடுத்துச் சென்றார். அத்ன் மூலம் சுட்டுத் தள்ளிய படங்கள். வருகைக்கு நன்றி

  ReplyDelete
 23. அல்சூர் - சோமேஸ்வரர் திருக்கோயில் பற்றிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி.

  தமிழக கோயில் ஒன்றினைத் தரிசித்தது போல இருக்கின்றது.

  அழகிய படங்களுடன் அருமையான பகிர்வு!..

  ReplyDelete
 24. நரசிம்மரா என நீங்கள் கேட்டிருப்பவர் உண்மையில் சரபர். சரபர் குறித்து நான் எழுதி இருக்கேன். தேடிப் பார்க்கிறேன். கிடைத்ததும் பகிர்கிறேன். அருமையான கோயில். அழகான படங்கள். ஒவ்வொன்றும் சிற்ப அற்புதம். இதைக்குறித்துக் கேள்விப் பட்டது இல்லை.

  ReplyDelete
 25. புராதன கோவில் பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 26. பழைமை வாய்ந்த சோமேஸ்வரர் கோயில் பற்றிய வரலாறுகள் சுவாரசியம். படங்களைப் பெரிதுபடுத்திப் பார்க்கையில் நேரில் பார்ப்பது போன்ற உணர்வு. அதிகம் கவர்ந்தவை பெரிய நந்தியும் பூப்பல்லக்கும்! பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 27. பேக்கு, மாடு மாதிரி சில வார்த்தைகளை சொன்னா கன்னடம்னு (ஜி, ஹை போட்டா ஹிந்திங்கற மாதிரி) நினைசுசுட்டிருந்தேன். ‘ஹ’ பத்தி இப்ப தெரிஞ்சதும் ‘ஹா!’.

  உங்கள் ஹதிவை ஹடித்ததன் மூலம் ஹல புதிய விஷயங்களை அறிய முடிந்தது. படங்கள் அனைத்தையும மிக ரசித்தேன்.

  ReplyDelete
 28. @பால கணேஷ்,

  'ஹல ஹுதிய விஷயங்களை அறிய முடிந்தது. ஹடங்கள் அனைத்தையும் மிக ரசித்தேன்."

  இப்படி இல்ல வந்திருக்கணும்? இம்பொசிஷன் எழுதுங்க. :)

  ReplyDelete

 29. @ துரை செல்வராஜு
  1950-களில் ஹலசூர் தமிழ்நாட்டின் ஒரு பகுதி போலவே இருந்தது.அப்போது இந்திராநகர் என்ற பகுதியே இல்லாமல் இருந்தது. இந்திராநகர் உருவாகத் தொடங்கிய காலத்தில் இருந்து கன்னடியர்களும் மற்றவர்களும் குடியேறி இப்போது அதன் தமிழ்த் தன்மையில் வெகு சிறிதே காணப்படுகிறது வருகை தந்து ரசித்ததற்கு நன்றி.

  ReplyDelete

 30. @ கீதா சாம்பசிவம்
  நான் முன்பு எழுதி இருந்த அடையாளங்கள் என்னும் பதிவைப் பாருங்கள். சில அடையாளங்களை வைத்தே நரசிம்மரா சரபரா என்று தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. எல்லாக் கடவுள்களின் எல்லா அடையாளங்களும் எனக்குத் தெரிய்வில்லை சரபர் என்று நீங்கள் சொன்னால் சரியாய்த்தான் இருக்கும் . வருகை தந்து சந்தேகம் தீர்த்ததற்கு நன்றி.

  ReplyDelete

 31. @ தளிர் சுரேஷ்
  நான் பிறந்த ஊர்க் கோவிலுக்கும் ஒரு கதை இருந்தது கண்டு பகிர்ந்தேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete

 32. @ கீத மஞ்சரி
  வருகைதந்து ரசித்துப் பாராட்டியதற்கு நன்றி மேடம்

  ReplyDelete

 33. @ பாலகணேஷ்
  நீங்கள் இப்படி நினைத்துக் கொள்வீர்கள் என்று ஐயா தெரியாதையா. சிறு வயதில் குதிரைக்கு குர்ரம் என்றால் யானைக்கு யர்ரம் என்று தமாஷாகச் சொல்வதுண்டு நான் எழுதியது பல இடங்களுக்குப் பொருந்தும் .அது எல்லா இடங்களுக்கும் அல்ல என்று தெரிவிக்காமல் விட்டது என் தவறுதான்

  ReplyDelete

 34. @ கீதா சாம்பசிவம்
  நீங்கள் சொன்னதுபோல் இம்பொசிஷன் எழுதத் துவங்கினால் இருக்கும் கொஞ்ச நஞ்ச கன்னடமும் மறந்து போகும் வருகை தந்து பின்னூட்டங்களை லைவ்லி ஆக்கியதற்கு நன்றி.

  ReplyDelete
 35. மலரும் நினைவுகளுடன்
  அருமையான பகிர்வு.

  ReplyDelete
 36. சந்தேகமே வேண்டாம், அவர் சரபரே தான். நரசிம்மரோட கோபம் அடங்குவதற்காக ஈசன் எடுத்த ஒரு அவதாரம்(?)னு சொல்லலாம். இன்னிக்குச் சில முக்கிய வேலைகள் இருந்ததால் சரபரைத் தேடி எடுக்க முடியலை. தேடுகிறேன்.

  ReplyDelete
 37. மறந்துட்டேனே, இம்பொசிஷன் உங்களுக்கு இல்லை:))) பால கணேஷுக்கு! எழுதுவார். :)

  ReplyDelete
 38. http://aanmiga-payanam.blogspot.in/2007/08/blog-post_05.html

  http://aanmiga-payanam.blogspot.in/2011/08/blog-post_20.html

  இரண்டு சுட்டிகள் கொடுத்துள்ளேன். இவற்றில் சரபர் குறித்த குறிப்புகள் கிடைக்கும். படத்தைப் பெரிது பண்ணித் தான் பார்த்தேன். நிச்சயமாய் சரபரே தான். என் கணவரிடமும் காட்டிக் கேட்டுட்டேன். சந்தேகமே வேண்டாம். :)))))

  ReplyDelete
 39. ஞாபக் மீட்டலும் படங்கள் பகிர்வும் அருமை போகும்
  வரம் கிடைத்தால் நிச்சயம் பார்க்கும் ஆசையைத்தருகின்றது பகிர்வு!

  ReplyDelete
 40. எங்கள் வங்கியின் ஒரு மாநாடு விஷயமாக அல்சூர் சென்று இருக்கிறேன். ஆனால் கோயிலுக்குச் செல்ல நேரம் இல்லாமல் போய்விட்டது. கல்யாணி என்பதற்கு படிக்கட்டுடன் கூடிய குளம் என்ற பொருளும் உண்டு என்பதனைத் தெரிந்து கொண்டேன். பிறந்து வளர்ந்து இத்தனை நாள் இருந்த இடம் கோயில் இடம் என்றால் யாரை நொந்து கொள்வது?

  படங்கள் எல்லாம் சிறப்பாக உள்ளன. நந்தியைப் பார்க்கப் பார்க்க கலை நுட்பம் தெரிகிறது. உங்கள் கேமராவுக்கு நன்றி!

  ReplyDelete

 41. @ மாதேவி
  வருகைக்கு நன்றி

  ReplyDelete

 42. @ கீதா சாம்பசிவம்
  தப்பித்தேன் .இம்பொசிஷன் எனக்கில்லை. சரபர் பற்றிய பதிவை படித்துப் பார்க்கிறேன் சீகாழியிலும் சிதம்பரத்திலும் சரபர் சன்னதி விசேஷம் . கண்டதுண்டு. நன்றி.

  ReplyDelete

 43. @ தனிமரம் நேசன்
  நம் நாட்டில் ஆயிரக் கணக்கில் கோவில்கள் உண்டு. ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் விசேஷம் நீங்கள் ஹலசூர் கோவில் வரும்போது தெரிவியுங்கள். என் வீட்டுக்கும் வரலாம் வருகைக்கு நன்றி.

  ReplyDelete

 44. @ தி. தமிழிளங்கோ
  கோவில் திருக்குளம் இருந்தது தெரியாமலா வீடு கட்டியிருந்தனர். ஆங்கிலேயர் தண்டு இறங்கியிருந்தபோது ஏதோ தொற்று நோய் பரவியதாம் அதனால் திறந்திருந்த நீர் நிலைகள் பலவற்றை மூடினர். அதில் இதுவும் ஒன்றாயிருக்கலாம் நடந்தது 1890-களில் என்றும் ஒரு தகவல் . முன்னோர்களின் பிழைக்கு அவர்களின் வாரிசுகள் அனுபவிக்க வேண்டியதுதானே. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.

  ReplyDelete
 45. இதே ஹல்சூரில் எனது சகோதரி இருந்தார் - early 1990's சமயங்களில். அப்போது இந்த கோவிலுக்குச் சென்றதுண்டு.

  படங்கள் மூலம் மீண்டும் கோவில் பார்க்க முடிந்தது....

  ReplyDelete
 46. படங்கள் மிக அருமை. இந்த கோவிலுக்குப் பல ஆண்டுகளுக்கு முன் சென்றிருக்கிறேன். உங்கள் பகிர்வு மீண்டும் செல்லும் ஆவலைத் தருகிறது.

  ReplyDelete