வெள்ளி, 30 ஜனவரி, 2015

சென்னைக்கு விடுப்பில்



                            விடுப்பும்  அனுபவங்களும்
                           -----------------------------------------


நாங்கள் வீட்டைப் புதுப்பித்ததும் இன் இளைய மகன் குடும்பத்துடன் வந்து பார்த்து நன்றாக வந்திருக்கிற்து என்று சொன்னான். தரை சற்று வழுக்கலாக இருக்கிறது கவனம் தேவை என்றும் கூறினான். எங்களை அவன் வீட்டுக்கு வந்து சில நாட்கள் இருக்கும் படிக் கேட்டுக்கொண்டான். அவனும் ஒரு பத்து மாடிக் குடியிருப்பில் ஏழாவது த்ளத்தில் அண்மையில் ஒரு த்ரீ பெட் ரூம் வீடு வாங்கி இருந்தான்.
 
இளையவனின் குடியிருப்பு முன்னால்


 லிஃப்ட் இன்னும் வராத நிலையில் அங்கு போக யோசனையாய் இருந்தது. அங்கும் எல்லோரும் பணிக்கும் பள்ளிக்கும் சென்று விடுவார்களாதலால் நாங்கள் தனியேதான் இருக்க வேண்டும். ஏதாவது வாரக் கடைசியில் அங்கு போய் ஓரிரு நாட்கள் இருப்போம் இப்போது லிஃப்ட் வந்து விட்டது. ஒன்று சொல்லியாக வேண்டும். என் மக்களிடம் போனாலும் அங்கும் தனியே நானும் இவளுமிருக்க வேண்டும் என்பதாலும் எங்கள் mobility –க்கு அவர்களையே சார்ந்திருக்க வேண்டும் என்பதாலும் போகும் முன் மிகவும் யோசிப்போம். ஆனால் என் மூத்த மகன்  (மகர் என்று சொல்ல வேண்டுமோ? மரியாதை...!) படத்தின் இடது ஓர மூலையைக் கவனிக்கவும்





எப்பொழுதும் பறந்து கொண்டிருப்பவன் இம்முறை நாங்கள் கட்டாயம் சில நாட்கள் சென்னையில் வந்து இருக்கவேண்டும் என்றும் அவனே வந்து கூட்டிப்போவதாகவும் சொன்னான்.15-ம் தேதி மூத்தமருமகள் மூத்த பேரன் சகிதம் வந்திருந்தான் வந்தவன் ஒரிரு நாட்கள் தம்பி குடும்பத்தாருடனும் இருக்க விரும்பி அன்றே எல்லோரும் இளைய மகன் இல்லம் சேர்ந்தோம். என் இரண்டாவது பேரன் was in clouds nine. என் மூத்த பேரன் தன் தம்பிக்கு hot wheel ஒன்று வாங்கி வந்திருந்தான் அதனை ஒருங்கிணைத்து காரை ஓட்டும் வரைஅவனுக்கு நிம்மதி யில்லை. 


(காணொளி) சின்னவனும் பெரியவனும் மீன் தொட்டி வைத்திருக்கிறார்கள். அந்த மீன்களைப்பார்த்துக் கொண்டிருப்பதே அலாதி சுகம். ஆனால் எனக்கென்னவோ பெரியவன் வீட்டுத் தொட்டியில் இருக்கும் ஒரு  ஷார்க்கைப் பார்க்கின்றபோது மச்சாவதார நினைவே வரும். இந்த மீன் சிறியதாக இருந்த போது வாங்கி வைத்தது. இப்போது வளர்ந்து இருப்பதைப் பார்த்தால் வளர்ந்து தொட்டி கொள்ளாமல் போய் மச்சாவதாரக் கதைபோல் ஆகிவிடுமோ என்னும் சந்தேகம் எழுகிறது.
சின்னவன் வீட்டு மீன் தொட்டி.


16-ம் தேதியும் 17-ம் தேதியுமிளையவனுடன் கழித்தோம். பெரிய பேரன் அவன் நண்பர்களுடன் 17-ம் தேதி காலையில் ஏற்காடுக்குச் சென்று விட்டான் . மறுநாள்18-ம்தேதி சென்னை போகும் வழியில் காலை சுமார் பதினொரு மணிக்கு கிருஷ்ணகிரி அருகே இருக்கும் A2Bயில் சந்திப்பதாக ஏற்பாடு.. இப்படியாக சென்னையில் எங்களுக்கான விடுப்பு துவங்கியது.
கிருஷ்ணகிரி அருகே பேரனைப் பிக் அப் செய்யவேண்டி இருந்ததால்காலை சுமார் பத்தரை மணிக்குக் கிளம்பினோம். நல்ல புது கார். நல்ல சாலை. நாங்கள் A2Bயை அடைந்தபோது சுமார் பனிரெண்டு மணி இருக்கும். பேரனுக்காகக் காத்திருப்பது என்று முதலில் நினைத்து அவனிடம் தொடர்பு கொண்டபோது அப்போது அவன் சேலத்துக்கே வந்து சேரவில்லை. அவர்கள் பயணப்பட்ட வண்டியில் ஏதோ பழுதாகி எப்போது வருவான் என்று சொல்ல முடியாத நிலை.சில நேரக் காத்திருப்புக்குப் பின் மதிய உணவு எடுத்துக் கொண்டு பி அவன் வரும்வரைக் காத்திருப்பது என்று முடிவாயிற்று. காத்திருந்த நேரத்தில் அங்கிருந்த இனிப்புப் பெட்டியில் ஒரு கரப்பான் பூச்சி இருப்பதைப் பார்த்து சிப்பந்தியிடம் கூறினோம். ஆனால் அந்தமாதிரிச் சூழலில் அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. உணவும் முடிந்தது. நேரம் இரண்டு மணியையும் தாண்டி இருந்தது. பேரனுடன் தொடர்பு கொண்டால் இதோ இப்போது வந்து விடுவேன் என்று சொல்லியே அரைமணி நேரத்துக்கும் அதிகமாகி விட்டது. A2Bக்கு அடுத்த டோலில் அவனை இறங்கச் சொல்லி நாங்கள் அங்கே அவனைப் பிக் அப் செய்யப் புறப்பட்டோம். வெயிலின் சூடு காருக்குள் இருந்தவரை தெரியவில்லை. பாவம் அவனும் பசியுடன் டோலில் காத்திருந்தான் நேரம் மணி மூன்றாகி இருந்தது. அவன் உண்டிருக்கவில்லை. போகும் வழியில் ஆம்பூர் ஸ்டார் பிரியாணி வாங்கிக் கொள்ளலாம் என்று சொன்னான். ஆம்பூரில் பிரியாணி வாங்கி அதை அவன் காரிலேயே உண்டான். இவ்வளவு விலாவாரியாக நான் எழுதக் காரணம் சென்னைக்கு நாங்கள் போய்ச் சேரும்போது இரவு மணி எட்டாகி விட்டது.

 
சென்னைக்கு காரில்

தொடரும்.

செவ்வாய், 27 ஜனவரி, 2015

விடுப்புக்கு முன்


                                             விடுப்புக்கு முன்
                                              __________________
      


ஓய்வில் வேலை வெட்டி இல்லாமல் இருப்பவனுக்கு விடுமுறையா என்று உங்களில் சிலர் முணுமுணுக்கலாம். என் வீட்டில் 1985-ம் ஆண்டில் கட்டியது, சில மராமத்து வேலைகள் தேவைப் பட்ட்து. தரையில் பதிக்கப் பட்டிருந்த மொசைக் தளம் பல இடங்களில் பெயர்க்கப்பட்டு பல் இளிக்க ஆரம்பித்து விட்டது. ரிபேர் செய்ய கை வைக்கப் பயமாக இருந்தது.நான் அந்தக் காலத்து மனுஷன். செலவின் எஸ்டிமேஷன் கேட்டுக் கேட்டே தளளிப்போட்டுக்கொண்டிருந்தேன். நான் வீட்டைக் கட்டியபோது செய்த செலவை விட ரிபேர் செலவு அதிகம் ஆகும் என்று தோன்றியது. இருந்தாலும் நாங்கள் வசிக்கும் வீடாவது எங்களைப்போல் இல்லாமல் பொலிவுடன் இருக்க வேண்டாமா.  செலவை விடப் பிரச்சனை என்னவென்றால்  வேலை முடியக் குறைந்தது பதினைந்து நாட்கள் கணக்கிட்டனர். அந்த சமயம் நாங்கள் எங்கு போவது.?பிள்ளைகளிடம் போகலாம் .ஆனால் வீடு முழுவதையும் வேலையாட்கள் பொறுப்பில் விட்டுச்செல்ல முடியுமா.வீடு பூராவும் ஏகப் பட்ட பொருட்கள். அவற்றை இடம் மாற்றி மாற்றி வைத்துத்தான் வேலை செய்ய வேண்டும் காலி செய்ய முடியாது. பிறகென்ன துணிந்து விட்டோம். எப்படியாவது பல்லைக் கடித்துக் கொண்டு எல்லா சிரமங்களையும் அனுபவிப்பது என்று தீர்மானித்தோம். ஒன்று சொல்ல வேண்டுமே. எங்களால் ஓடியாடி எந்தப் பொருளையும் வாங்கி வரமுடியாது. நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒப்பந்ததாரர் ஒருவரை எங்களுக்குத் தெரியும். அவருக்கும் எங்கள் மீது அன்பும் பணிவும் உண்டு. எல்லா வேலைகளுக்கும் அவரே பொறுப்பு. வீட்டில் எல்லா இடங்களிலும் மொசைக் தரையை மாற்றி விட்ரிஃபைட் டைல்ஸ் போட வேண்டும்வீட்டின் உட்புறம் முழுவ்தும் சுவர்களுக்குப் பெயிண்ட் அடிக்க வேண்டும். சமையலறையில் இப்போது இருந்த கடப்பாகல்லை எடுத்து கிரானைட் பதிக்க வேண்டும் பாத்திரம் கழுவும் இடத்தில் ஸ்டீல் சிங்க் பதிக்க வேண்டும். அதன் பின் அவ்வப் போது தோன்றும் சில்லரை வேலைகளையும் முடிக்க வேண்டும்.நாங்கள் வீட்டை விட்டு எங்கும் போக மாட்டோம். மிகக் குறைந்த தொந்தரவே தரலாம் என்று ஏகப்பட்ட கண்டிஷன்களுடன் வேலையை ஒப்படைத்தோம். சுருங்கச் சொல்லப் போனால் பழைய வீட்டைப் புதுப்பிக்க வேண்டும்.

வீட்டு வேலைகளின் போது சில புகைப் படங்கள் எடுத்திருந்தேன் 
வீட்டின் பல இடங்களில் மொசைக் தரை  இப்படி இருந்தது.
 
சுவர் ஓரங்களில் இருந்த sikrting tiles களை உடைத்து எடுத்து  இப்படி தயார் செய்ய வேண்டி இருந்தது
தரையெல்லாம் acid wash
 
இருந்த பொருட்களை அங்கும் இங்கும் அப்புறப்படுத்தி செய்ய வேண்டிய வேலை.
 
 புதிய விட்ரிஃபைட் டைல்ஸ் பதித்த பிறகு
சாப்பாட்டு+ பூஜை அறையில் படுக்கை
அவ்வப்போது இடம் மாற்றம் செய்யப் படும் பொருட்கள் -
ஹாலில் டைல்ஸ் பதிக்கப்படும்போது 
இம்மாதிரி வீட்டின் எல்லா அறைகளிலும் செய்யும்போது அறைக்கதவுகளை எடுத்து அடியில் சீவி உயரத்தைக் குறைக்க வேண்டி வந்தது. பல பொருட்கள் வீடின் போர்டிகோவிலும், வீட்டின் பின் புறத்திலும் அனாதையாக பல நாட்கள் இருந்தன. டைல்ஸ் பதிக்கும் வேலை முடிந்ததும் பெயிண்ட் வேலை செய்யும் போதும் இதே அவஸ்தை. எல்லா முடிந்து அப்பாடா என்று அமர்வதற்குள் போதுமடா சாமி என்றாகி விட்டது. எல்லாக் கஷ்டங்களுக்குப்பின் வீடு ஒரு புதுப் பொலிவுடன் காட்சி அளிப்பது சந்தோஷம் தருகிறது. இத்தனைக் கஷ்டஙளும் அனுபவித்த எங்களுக்கு சிறிது ஓய்வு வேண்டும் என்று என் மக்கள் கூறினர். என் மூத்த மகன் வந்து எங்களை சென்னைக்கு அழைத்துப் போவதாகக் கூறினான், அது பற்றி பின்னர்....... 

புதன், 14 ஜனவரி, 2015

சாமியே சரணம் ஐயப்பா....


                             சாமியே சரணம் ஐயப்பா....!
                             ----------------------------------------
ஸ்ரீ ஐயப்பன்




ஐயப்பத் திருவிழா
கார்த்திகை மாதம் பிறந்தாலேயே எங்கள் ஊர் களை கட்டிவிடும்.எங்கு பார்த்தாலும் கறுப்பு அல்லது காவி உடை யணிந்தோர் எண்ணிக்கை அதிகமாகும் ஏனென்றால் எங்கள் ஊரில் பெங்களூருவில்பிரசித்தி பெற்ற திரு ஐயப்பசாமி கோவில் இருக்கிறது. ஐயப்பன் கோவில் என்றாலேயே கணிசமான மலையாளிகள் எண்ணிக்கை இருக்குமிடமாக இருக்கும் நாங்கள் இருக்கும் இடம் ஒரு மினி கேரளா என்று சொல்லலாம் ஜலஹள்ளி ஐயப்பன் கோவில் பெங்களூருவில் ஒரு லாண்ட் மார்க் ஆகும். பிரதி வருடமும் மார்கழி ஒன்றாம் தேதி கோவிலில் கொடியேற்றி  பத்துநாள் உறசவம் நடக்கும் டிசம்பர் 26-ம் நாள் சபரி மலையில் மண்டல பூஜை நடைபெறும் நாளன்றுஇங்கும் விசேஷ் பூஜைகள் நடத்தப் பட்டு உற்சவம் நிறைவு பெறும். கொடி ஏற்றும் நாள் கோவில் அருகில் வசிக்கும் பக்தர்கள் சார்பாக ஏரியா பூஜை நடந்து கொடி ஏற்றுவதில் நிறைவு பெறும் ஊர் மக்களிடம் பணம் வசூலித்து சுவாமி ஊர்வலத்துடன் வாணவேடிக்கைகள் மற்றும் புராதன கலாச்சாரத்தின் மிகுதிகளான ஜண்டைமேளம், தாயம்பகா, கொம்பு ஊதல் தீயம் போன்றவற்றுடன் சுவாமி ஊர்வலம் வரும். இந்த வருடம் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் நரசிம்ஹ அவதார  மற்றும்சீதாதேவியுடன் லவ குச  ராமலக்ஷ்மண tableau வும் இருந்தது. சிங்காரி மேளம் என்னும் ஒரு வகை நடனம் என்னை மிகவும் கவர்ந்த்து. வீடியோவாக எடுத்திருந்தேன் ஆனால் துரதிஷ்டவசமாக சைஸ் பெரிதாக இருப்பதால் தளத்தில் அப்லொட் செய்ய முடியவில்லை.நூற்றுக்கணக்கான சிறுமிகள் தாலத்தில் விளக்கு ஏந்தி ஊர்வலத்தில் நடந்து வந்தது காண மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் தெருவே மக்கள் தலைகளால் நிரம்பி வழிந்தது. எது எப்படி இருந்தாலும் கோவில் விழாக்களினால் நம் பாரம்பரியக் கலைகள் இன்னும் உயிரோடிருக்கின்றன என்று தோன்றுகிறது. இப்போதெல்லாம் யானையை ஊர்வலத்தில் அனுமதிப்பதில்லை.மூன்று வருடத்துக்கு முந்திய ஓரிரு காணொளிகள் இத்துடன்





இந்த நேரத்தில் பறை அளப்பதாக வேண்டுதல் உள்ளவர்கள் அதற்கான பணம் கட்டி பறையில் நெல் அளக்கலாம் கோவிலுக்கு இதுவும் ஒரு வகையில் வருமானமே.பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை ஒன்றாம் நாளிலிருந்தே சபரிமலைப் பயணம் மேற்கொள்கின்றனர். மண்டல கால விரதம் எல்லாம் ஏதோ ஒரு சிலருக்குமட்டுமே என்றாகிவிட்டது.ஐயப்பன் கோவிலுக்கு விரிவு படுத்த நிலம் வேண்டுமாம் ஒரு சதுர அடிக்கு ரூ.7000/- செலுத்திப் பக்தர்கள் புண்ணியம் தேடிக்கொள்ளலாம் 
 இன்று மாலை  பொன்னம்பல மேட்டில் ஐயப்ப பக்தர்களை ஐயனின் மகர ஜோதி என்று மதி மயங்கச் செய்யும்  மனிதர்கள் ஏற்றும் தீப்பந்தம். நேரடி ஒளிபரப்பாகவும் காட்டப் போகிறார்கள். நம்பிக்கைக்கு ஒரு எல்லை இல்லை போலிருக்கிறது....!எத்தனை பேர் குளிர் காய்கிறார்களோ.?

திங்கள், 12 ஜனவரி, 2015

சாகசக் காணொளிகள்

         சாகசங்கள் பல விதம் . ஒவ்வொன்றும் ஒருவிதம்.எதையும் தவற விடாமல் முழுவதும் பாருங்கள். ரசிப்பீர்கள்.
   



சனி, 10 ஜனவரி, 2015

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை..?


                       கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை...?
                       --------------------------------------------------------------


இன்றைக்கு சத்குரு தியாகராஜ சுவாமிகளின்  168-வது ஆராதனை திருவையாறில் அமோகமாக நடந்தேறியது, இசை பற்றி ஏதுமே தெரியாத நான் அது குறித்துப் பதிவிடுவது சரியா. ?தலைப்பிலேயே சொல்லி இருக்கிறேனே.  1980-களில் ஒரு ஆண்டு இந்த ஆராதனைக்குச் சென்றிருக்கிறோம். இன்று நேரடி ஒளிபரப்பில் கண்டதுபோல் அவ்வளவு பெரியதாகப் பந்தல் இருக்கவில்லை. திருச்சியிலிருந்து காலை சுமார் ஆறு மணி அளவில் புறப்பட்டு அங்கே ஆற்றின் கரையில் அமர்ந்து காலை உணவு அருந்தியது நினைவுக்கு வருகிறது. ஆராதனை பற்றி ஏதும் எழுதாமல் என்னென்னவோ எழுதுகிறேன். அதுதான் தலைப்பிலேயே கூறிவிட்டேனே...!இன்று அதிகாலை இந்தியா ஆஸ்திரேலியா நான்காம் டெஸ்ட் மாட்சின் கடைசி நாள்.ஆட்டம் தொலைக்காட்சியில் காண உட்கார்ந்து விட்டேன். 349 ரன்கள் என்னும் இலக்கை அடைய 90 ஓவர்களும் ஆட்டக்காரர்கள் அனைவரும் இருந்தனர். முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த லோகேஷ் ராஹுல் 16 ரன்கள் எடுத்து அவுட்டானார். முதல் இன்னிங்சில் ரன் ஏதும் எடுக்காத முரளியும் ரோஹித் ஷர்மாவும்நின்று ஆடுவதைப் பார்த்ததும் புரிந்து போயிற்று. ஆட்டத்தை வெல்ல முயற்சிகள் இல்லையென்றும் எப்படியாவது சமன் செய்ய வேண்டும் என்றும் ஆடினார்கள். வழக்கப் படி நன்றாக ஆடிக்கொண்டிருப்பவர்கள் திடீரென்று ஆட்டமிழந்து நம்மை ஏமாற்றி விடுவார்கள். ஷர்மா ஆட்டமிழந்ததும் கோஹ்லி வந்தார். நத்தை வேகத்தில் போய்க் கொண்டிருந்த ஸ்கோரை முரளி ஒரு ஓவரில் 15 ஓ 16ஓ ரன் எடுத்து என்னை நிமிர்ந்து உட்காரச் செய்தார். இடையில் என் மனைவி ஆராதனை நேரடி ஒளிபரப்பு இருப்பதை நினைவூட்ட. இது கொஞ்சம் அது கொஞ்சம் என்று பார்க்கத் தொடங்கினேன். பஞ்சரத்ன கிருதி என் மனைவி கற்றுக் கொண்டிருக்கிறாள். பாடவும் தெரியும். ஆனால் நான் கேட்டுப் பாடியது இல்லை. மறுபடியும் digression. என்ன செய்வது ? கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை. கீர்த்தனை தெரியாவிட்டாலும் ஆண்டுக்கொரு முறை இசையால் வாழ்க்கை நடத்திப் பெயரும் புகழும் அடைந்தவர்கள் அந்த மகானை நினைத்து அவர் சமாதியில் பாடுவது மதிக்கப் பட வேண்டியதுதானே..ஆராதனை நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த என் மனதில் as usual  அதற்கு சம்பந்தப் படாத(?) எண்ணங்கள் வந்து போய்க் கொண்டிருந்தது. முதலில் மங்கல இசை. மங்கல இசையா மங்கள் இசையா திடீரென்று சந்தேகம். நாதஸ்வர வித்வான்கள் கிடைத்த வாய்ப்பைப் பயன் படுத்திக் கொண்டார்கள். நாதஸ்வரம் ஒரு அசுர வாத்தியமாமே. ஒரு பெண்மணி உட்பட பலரும் ஜோடி ஜோடியாக வாசித்தார்கள். என்ன பாட்டு வாசிக்கிறார்கள் என்று அனுமானித்துக் கொண்டுஇருந்தேன் எனக்கு திடீர் சந்தேகம் எழுந்தது. வாசித்தவர்களின் உடல் அடையாளங்கள் நிச்சயம் அந்தணர் அல்லாதவர் என்றே காட்டியது அசுர வாத்தியம் அந்தணர்களுக்கு வசப் படாதோ.? எனக்குத் தோன்றுவது தவறாயிருக்கலாம். அந்த இசை ஏதோ ஜாதிக்கு என்று ஒதுக்கி வைக்கப் பட்டதோ.? வாசிதவர்களில் ஒருவரையும் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லைஒரு சிலரது நாயனக்களில் தங்கக் காசுகள் தொங்கிக் கொண்டிருந்தன, அவர்களின் status ஐ பறை சாற்றுகிறதோ.?. அதன் பிறகு சேதுலரா என்று போட்டு புல்லாங்குழல் இசையைப் பலரும் தவழ விட்டார்கள். இந்த வரிசை ஏதாவது சம்பிரதாய்ப்பட்டதோ ’தெரியவில்லை’. மீண்டும் என் உள்மனசு குத்திக் காண்பித்தது, அதைத்தான் தலைப்பிலேயே சொல்லி விட்டாயே என்று- .சிறிது நேரத்தில் அபிஷேகங்களுக்கு இடையே ஆராதனை தொடங்கியது. தியாக ராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகள். இன்னும் ஒரு முறையாக என் மனைவி இந்த கீர்த்தனைகளைக் கூடவே பாடுவதைக் கேட்டேன். எனக்குப் பாட்டைவிட கூட்டத்தினரை ரசிப்பதில் மனம் சென்றது. அண்மையில் எங்கள் ப்ளாகில் ஆராதனையின் ஒரு பாட்டின் காணொளியை வெளியிட்டு யாரையெல்லாம் அடையாளம் தெரிகிறது என்று கேட்டிருந்தார்கள். இன்றைய நிகழ்ச்சியில் வந்திருந்த பலரில் சிலரை தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் மூலம் அடையாளம் கண்டு கொள்ள முயற்சித்தேன். இதன் நடுவே என் மனைவி அவளது சிநேகிதி ஒருத்தியை அடையாளம் கண்டுகொண்டாள். ஜீ.கே வாசனை அடையாளம் தெரிந்தது. அவரது தந்தை ஜீ.கே மூப்பனாரின் அடிச்சுவட்டில் இவரும் இசைக்குப் புரவலரோ ஐ மீன் ஆராதனை இசையின் ஏதாவது பொறுப்பில் உள்ளவரோ?இசைதவர்களில் பெண்கள் பலரும் அதீத மேக் அப்புடன் இருந்தனர். அவர்களில் ஒரு பெண்மணி வித்தியாசமாக இடது வகிட்டோடு அடிக்கடி புன்னகைத்து என் கவனம் அவர் மேலேயே இருக்குமாறு இருந்தார். இந்த வயதில் பெண்களின் அழகை ரசிக்கலாமா என்னும் கேள்வி எழுந்தாலும் A thing of beauty is a joy for ever என்று சமாதானப் படுதிக் கொண்டேன் பஞ்ச ரத்ன கீர்த்தனை பற்றி எழுதும் போது அவற்றை எழுதிப் பதிவிடவும்  வேண்டுமோ தெரியவில்லை. அண்மையில் மார்கழி மாதப் பதிவுகள் பலவும் திருப்பாவை திருவெம்பாவைப் பாடல்களுடன் வருவது கண்டு இந்த சந்தேகம் வேண்டுமானால் அந்தக் கீர்த்தனைகளை அவற்றின் ஸ்வரங்களுடன் பதிவிட முடியும்.. என்மனைவியிடம்தான் இருக்கிறதே. இருந்தாலும் இது ஒரு இசைப் பதிவானதால் கீர்த்தனையின் தலைப்புகளுடன் ராக தாளங்களையும் குறிப்பிடுகிறேன்.
 முதல் கீர்த்தனை-நாட்டை ராகத்தில் ஆதி தாளத்தில் ஜகதா நந்தகா ரக
  இரண்டாவது கீர்த்தனை கௌளை ராகம் ஆதி தாளம்துடுகு கல நந்நே தொ ர
  மூன்றாவது கீர்த்தனை ஆரபி ராகம் ஆதி தாளம்ஸா தி ஞ்செ னெ ஓ மனஸா
  நான்காவது கீர்த்தனை வராளி ராகம் ஆதி தாளம்கன கன ருசி ரா
  ஐந்தாவது கீர்த்தனை ஸ்ரீராகம் ஆதி தாளம்எந்தரோ மஹானு பாவலு

கீர்த்தனைகள் முடியக் காத்திருந்தேன் டெஸ்ட் மாட்சின் நேரடிஒளிப்பதிவைக் காண. சுலபமாக ட்ராசெய்யும் சாத்தியம் இருப்பதுபோல் இருந்த போது மள மளவென்று விக்கெட்டுகள் சரிந்து தோல்வியைத் தழுவும் நிலை. சரி இந்த இசைப்பதிவை எழுதலாம் என்று துவங்கினாலும் எழுத மனம் ஓடவில்லை. சுரேஷ் ரைனா இரண்டு இன்னிங்ஸிலும் 0 அடித்தது மிகவும் ஏமாற்றமாயிருந்தது. அஜின்க்ய ரஹ்னேவும் குமாரும் சமாளித்து ஆடி ட்ரா செய்தனர். பரவாயில்லை. ஆராதனைப் பதிவு எழுதும் போதுஒரு கேள்வி எழுந்தது வராளி ராகம் யாருக்கும்கற்றுக் கொடுக்கப் படுவதில்லையாமே. கற்றுக் கொடுக்கப் படாமலா இத்தனை பேரும் பாடுகிறார்கள் என்றுபதிலும் சொல்லிக் கொள்கிறேன். முன்பே கர்நாடக இசையும் நானும் என்று ஒரு பதிவு போட்டு இருக்கிறேன் என் இசைப்பயணம் அரை குறையாய்க் கேட்டு முழிப்பதிலேயே கழிந்து விட்டது. நான் அறிந்த பல பதிவாளர்கள் இசையில் கரை கண்டவர்கள். ஓரிருவரது குரலையும் நான் பதிவு செய்து வைத்திருக்கிறேன். அது அவர்களுக்கே கூட மறந்து போயிருக்கலாம்  


  .       

வியாழன், 8 ஜனவரி, 2015

ஆண்பெண் இரு பாலர் பற்றியும்.....


                              ஆண்பெண் இருபாலர் பற்றியும்......
                              ---------------------------------------------



வலை உலகில் என்னை அறிந்தவர்கள் ஒரு வேளை சில விஷயங்களை நான் சரியாகப் புரிந்து கொள்வதில்லையோ என்று நினைக்கலாம்(இது என் யூகமே).ஆனால் நான் ஆண் பெண் இருபாலரையும் திருப்தி செய்ய வேண்டாமா. ஆகவே இந்தப் பதிவில் இரு பாலருக்கும் justice செய்கிறேன் 
                     
                   பேசாமல் பெண்ணாய் பிறந்திருக்கலாம்
                   -----------------------------------

பேசாமல் நாமும் பெண்ணாகவே பிறந்திருக்கலாம்.
வயதானால் வழுக்கை விழாது , நகரத்தில்
நமக்காகவே சிறப்புப் பேரூந்துகள் இயங்கும்
தினமும் முகச் சவரம் செய்ய வேண்டியதில்லை.
சட்டங்கள் நமக்காக சாய்ந்திருக்கும் ,எப்போதும்
நம் செல் பேசி செயல் பாட்டிலேயே இருக்கும்
சடங்கானால் ஊர் கூடி சீர் செய்துக் கொண்டாடுவார்கள்
நாற்பது பேர் ப்ரொபோஸ் செய்வார்கள் , கல்யாணம்
மருதாணி ,நலங்கு ,பட்டுப்புடவை , வளைகாப்பு என
அநேக தருணங்களில் நாயகியாய் அமர்ந்திருக்கலாம்
காமக் கவிதை எழுதினால் உலகமே திடுக்கிடும்
கணவனுக்கெதிராகப் புகார் கொடுக்கலாம் -மூத்த
இலக்கியவாதி திருவனந்தபுர விடுதி முகட்டுக்கு நம்மை
அழைத்துப்போய் கடலைப் பார் எனக் காட்டுவார்-உனக்கு
இந்தக் காட்சி பிடிக்கும் என்று எனக்குத் தெரியும்  என்பார்
முகப் புத்தகத்தில் எவனையும் கவிழ்க்கலாம் -எவனாவது
ஒருவன் நமக்குத் தாஜ்மகால் கட்டுவான் -கிழவியானாலும்
ஒருவன் அருநெல்லிக்கனி தருவான். -ஒன்பதாம் வகுப்பே
படித்திருந்தாலும் கல்லூரிக்குப் பேச அழைப்பார்கள்.
மதுரையை எரிக்கலாம்-கூந்தல் வாசம் குறித்து ஐயம்
எழுப்பி ஆண்டவனையே அலைக் கழிக்கலாம்
நமக்கு நல்ல அடிமைகள் வாய்ப்பார்கள்.
டென்னிஸ் ஆடினால் உலகமே கவனிக்கும். -அரசு
விவகார அதிகாரியானால் பத்திரிகைகள் பின்னாலேயே
ஓடிவரும். -நம் வலைப்பூவில் நிறைய வண்டுகள் திரியும்
திடீரென்று நம் புத்தகங்கள் எஸ்கிமோ மொழியில்
பெயர்க்கப் படும்.-யார் அமைச்சராக வேண்டும் என்பதை
நாம் முடிவு செய்யலாம். - பேசாமல் நாமும்
பெண்ணாகவே பிறந்திருக்கலாம் -இல்லையா.?

(சத்தியமாக இது என் கற்பனை இல்லை. எனக்கு ஒரு மின் அஞ்சல் 
ஃபார்வேர்ட் செய்யப் பட்டிருந்தது. நான் பெற்ற இன்பம் பெறுக 
இவ்வையகம் என்னும் எண்ணத்தில் இதனைப் பதிவிடுகிறேன். )

பேசாமல் பெண்ணாய்ப் பிற்ந்து
இருக்கலாம் என்று ஒரு பதிவு இட்டிருந்தால் போதுமா.. அதன்
மறு பக்கமாக ஆண்கள் பற்றியும்  பின் ஆண், பெண் இருவர்
பற்றியும் ஆங்காங்கே கேட்டது. படித்தது என சிலவற்றை
ஒருங்கிணைத்து பதிவாய் இடுகிறேன். இதில் எதுவுமே என்
கற்பனை இல்லை.

ஆண்கள் சங்கட மற்றவர்கள்.
அவர்களது பெயர்கள் மாறுவதில்லை.(திருமணத்துக்கு முன் பின்)
அவர்கள் கர்ப்பம் தரிப்பதில்லை.
வெள்ளைச் சட்டை அணிந்து தோட்டத்துக்கு நீர் பாய்ச்சலாம்.எந்த
சட்டையும் அணியாமலும் நீர் பாய்ச்சலாம்.
பேசும்போது யாரும் அவர்கள் மார்பைப் முறைப்பதில்லை.
தொலை பேசியில் 30 செகண்டுகளில் பேசி முடிப்பார்கள்.
ஐந்து நாள் விடுமுறைக்கு ஒரு சிறு கைப்பெட்டிபோதும்.
எந்த நிகழ்ச்சிக்கு அழைக்காவிட்டாலும் நண்பர்களாகத்
தொடர்வார்கள்.
இரண்டு மூன்று ஜோடி காலணிகளே அவர்களுக்கு அதிகம்.
அவர்கள் அணியும் ஆடையில் சுருக்கம் தெரிவதில்லை.
அவர்களது முகத்தின் நிறம் அசலானது.
ஆண்டு முழுவதும், ஏன் ஆயுள் முழுவதும் ஒரெ ஹேர் ஸ்டைல்.
முகத்திலும் கழுத்திலும் முடி நீக்கினால் போதும்.
கால்கள் எப்படி இருந்தாலும் அரை நிஜாரில் அலையலாம்.
நகம் வெட்ட ஒரு பேனாக்கத்தி போதும்.
பண்டிகைக்கு முதல் நாள் பத்து பேருக்கு அரை மணியில்
உடைகள் வாங்குவார்கள்.

                    
இரு பக்கம்.
                                                     

ஆண்களும் பெண்களும்.
---------------------
ஆண் சிநேகிதர்கள் உரையாடும் போது செல்லப் பெயர்களில்
அழைத்துக் கொள்வார்கள். ( மச்சி, மோட்டு, சோடாபுட்டி )

பெண் சிநேகிதிகளுடன் உரையாடும்போது அவர்களது
பெயர்களிலேயே அழைக்கப் படுவார்கள். (காமினி,ரூபா, சந்தியா )

நான்கு ஆண்கள் வெளியில் சாப்பிடப் போனால் மொத்த பில்
ரூ.200-/ க்கு ஆளுக்கு ரூ.100-/ கொடுத்து பாக்கி பற்றிக் கவலைப்
பட மாட்டார்கள்.

நான்கு பெண்கள் வெளியில் சாப்பிடப்போனால் கால்குலேட்டரில்
கணக்குப் பார்ப் பார்கள்

ஆண் ஒன்றுக்கு இரண்டு விலை கொடுத்தாலும் தேவைப்
பட்டதை மட்டும் வாங்குவான்.

பெண் இரண்டுக்கு ஒன்று கொடுத்து தேவைப் படாததை
தள்ளுபடியில் வாங்குவாள்.

ஆண் குளியலறையில் டூத் ப்ரஷ்,பேஸ்ட், ரேசர், ஷேவிங் க்ரீம்,
சோப், டவல் ஆகியவை இருக்கும்.

பெண் குளியலறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சாதனங்கள்
இருக்கும். அதில் ஆணுக்கு அநேக பொருளின் பெயர் கூடத்
தெரியாது.

ஒரு வாக்கு வாதத்தில் பெண்ணின் பேச்சே கடைசி. அதன் பின்
ஆண் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இன்னுமொரு வாக்கு
வாதத்தின் துவக்கம்.

ஆண் திருமணம் ஆகும் வரை எதிர்காலம் பற்றிக் கவலைப்
படுவதில்லை.

பெண் திருமண்ம் ஆகும் வரைதான் எதிர்காலம் பற்றிக்
கவலைப் படுவாள்.

பெண் மாறமாட்டாள் என்று நினைத்து ஆண் மணக்கிறான்.
ஆனால் பெண் மாறிவிடுகிறாள்.

ஆண் மாறுவான் என்று நினைத்து பெண் மணக்கிறாள். ஆனால்
அவன் மாறுவதில்லை.


பெண் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் பிரத்தியேக உடை அணிவாள்

ஆண் திருமணம் சாவு இதற்கு மட்டும் பிரத்தியேகமாய்
உடை அணிவான்.

ஆண் தூங்கி எழும்போது அழகாய்த் தெரிவான்.

பெண் தூங்கி எழும்போது அழகைத் தொலைத்திருப்பாள்.

பெண்களுக்கு குழந்தைகள் பற்றி எல்லாமே தெரியும்.

ஆண்களுக்கு குழந்தைகள் வீட்டில் உலவும் சிறு உருவங்கள்.

(
ஒரு திருமணமான ஆண் அவனுடைய தவறுகளை மறக்க
 
வேண்டும். இருவரும் அதை நினைத்திருப்பதில் யாருக்கும்
எந்த பலனும் இல்லை. ).  

.


   










செவ்வாய், 6 ஜனவரி, 2015

உஷ்.......! தொந்தரவு செய்யாதீர்கள் இவனை.


                         உஷ்..........! தொந்தரவு செய்யாதீர்கள் இவனை.
                        ----------------------------------------------------------------


 ஓடியாடி, உழைத்துக் களைத்துஉறங்குகிறான் இவன் 
 உஷ்...........!   தொந்தரவு செய்யாதீர்கள் .இவனை. 
        
            ஆலை சங்கின் ஓலத்துக்குக் கட்டுப்பட்டவன்,
             காலை முதல் மாலை வரை உழைத்து ஓய்ந்தவன் ,
             கனவுத் தொழிற்சாலை கதாநாயகன் அல்ல இவன்
            ஒரே பாட்டில் உழைத்து முன்னேறி லட்சங்கள் சேர்க்க 
             உழைப்பதாக பாவனை காட்ட முடியாது.. 
             கதாநாயகன் கன்னியின் கைப் பிடிக்க .
             சுவை எல்லாம் கூடி விடும் திரைக் கதையில்
             சுமை எல்லாம் முடிந்து விடும் அவன் வாழ்வில்.-ஆனால்   
             அதற்குப் பிறகுதான் வாழ்வே துவங்கும் 
             சாமானியன் வாழ்க்கைப் பயணத்தில். 
             கனவுகளில் மகிழ்ந்து முறுவல் செய்கிறான் 
     உஷ்.......! தொந்தரவு செய்யாதீர்கள்.இவனை.


நனவில் இயலாத எத்தனையோ ஆசைகள்
கனவுலகில் நடத்தியும் கண்டும் களிக்கின்றான்
வானில் பறக்கின்றான், வெள்ளியினைத் தொடுகின்றான்,
கூடவே காதலியின் கண் பார்த்து மகிழ்கின்றான்.
எண்ணாமலேயே துணிய முடிந்த கனவுலகில்
நன்றாகவே இவன் மிதக்கின்றான் பாவம்.
உஷ் .........! தொந்தரவு செய்யாதீர்கள் இவனை. 

             தந்தையாகவும் தனயனாகவும் தான்படும் துயர் தீர்க்க
            
வாழ்க்கைத் தேரின் அச்சாணி இவன்- யாராரோ
            
ஏவியதெல்லாம் செய்தாக வேண்டும் வாழ்வில்.
            
அர்த்த மண்டபத்தில் அழகாகக் கொலுவிருக்கிறான்;
            
ஆரங்கே ,மாதம் மும்மாரி மழை பொழிகிறதா,
            
என்றே முழங்குகிறான். கைகட்டி, வாய் பொத்தி
             பதிலளிக்கப்(?) பலபேர் சூழ அழகாக
            
ஆட்சி செய்து மகிழ்கிறான் கனவில்
             உஷ்........!.தொந்தரவு செய்யாதீர்கள் இவனை.

கண்மூடித் துயிலும் போதாவது இவனை 
அண்டி நிற்கும் அவலங்கள் சற்றே மறையட்டுமே
 காதலியின் கடைக்கண் பார்வை கண்டு விண்ணேறி
நிலவைப் பிடிக்கின்றான்  அவள் மகிழக் காண முறுவல்
பூக்கின்றான் மனம் மகிழ்கின்றான்.
எண்ணாமலேயே துணிய முடிந்த கனவுலகில்
நன்றாகவே இவன் மிதக்கின்றான்
உஷ் .........! தொந்தரவு செய்யாதீர்கள்.இவனை
   

உறங்குகையில் மட்டும்
இவனே ராஜா, இவனே மந்திரி,
இதனால் யாருக்கென்ன நட்டம்.
யாரையுமே என்றுமே,
எதற்கும் ஏவ இயலாதவன்தானே-பாவம்
உஷ்.........! தொந்தரவு செய்யாதீர்கள் இவனை.
==============================================.      

 


 


.