(நிறைவு) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
(நிறைவு) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

நினைவில் நீ.(அத்தியாயம் பத்தொன்பது)


                                    நினைவில் நீ. ( நாவல் தொடராக )
                                  -------------------------------------------------

                                                   -------  19  --------
                                                ( நிறைவுப் பகுதி )

                                      அமர கவி பாரதிக்கு சமர்ப்பணம்
                      -------------------------------

(அன்றிரவு படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தேன். உறக்கம் வருவது போல் இருந்தாலும் உள்ளுணர்வு மட்டும் விழித்துக் கொண்டு தான் இருந்தது. அன்று மாலை  நடந்த பாரதி விழா நிகழ்ச்சிகளை எண்ணிக்கொண்டே இருந்தவன் எப்போது உறங்கினேன் என்றே தெரிய வில்லை.

உடல் உறங்கிய நிலையில் உள்ளம் விழித்துக் கொண்டிருக்க வேண்டும். அந்த விழித்த நிலையில் நான் இந்தக் வையமே ஒரு கோள வடிவில் சுற்றிக் கொண்டிருப்பதைக் கண்டேன். மாறி மாறி இருளிலும் ஒளியிலும் இயங்கும் கோளத்தில் அந்தந்த தன்மைக் கேற்ப நிகழ்ச்சிகளும் நடக்கக் கண்டேன். இருளில் பொறாமை, குரோதம், அறியாமை இன்னது போன்ற பேய்களின் கூக்குரலும் ,ஒளியில் அன்பு ,நல்லெண்ணம்,அறிவாளியின் சந்துஷ்டி போன்ற மெய்ஞானப் பொலிவும் மாறி மாறிக் காட்சியளித்தது. இது மாறிவரும் உலக இயல்புகளைத் தெளிவுறத் தெரிவிப்பது போல் இருந்தது. சுற்றி கொண்டிருந்த கோளம் மெல்ல தன்னிலைக்கு வந்து நின்றபோது கோளத்தில் ஒரு பகுதி இருளிலும் ஒரு பாதி ஒளியிலும் இருக்கக் கண்டதும் நிகழ் கால நிகழ்ச்சிகள்தான் என் நினைவுக்கு வந்தது..விழித்துப்பார்த்ததும் கண்ட கனவுக்கு விளக்கம் காண முயன்றதன் விளைவே இந்த சிறிய எளிய என் முதல் நாவல்.

கண்ட விளக்கம் சரியா இல்லையா என்பதை இதைப் படித்துப் பார்த்த வாசக நண்பர்களுக்கே விட்டு விடுகிறேன். ) 


      எங்கு பார்த்தாலும் உன் பேச்சு. எங்கு பார்த்தாலும் உன் நினைவுகள்.எங்கு பார்த்தாலும் நீ நீயாக இல்லாமல் உன் நினைவாக மாறி இருக்கிறாய். பாபு.! மக்கள் மன்றத்தின் இந்த ஆண்டு விழா.மக்கள் உள்ளங்களில் களிப்பு விழாவாக இருந்திருக்கும் நீ நீயாக எங்கள் மத்தியில் இருந்திருந்தால்.....!

     சிந்திப்பவன் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும், சிந்திக்காதவன் சிந்திக்கத் துவங்க வேண்டும் என்று எங்களுக்கெல்லாம் கூறி வந்த நீ சிந்தித்தே மறைந்து விட்டாயே..! அதனால் தானே உன் பேச்சும் செயலும் புரியாத புதிராக இருந்தது.

    ஆயிரக் கணக்கானவர்கள் கூடும் கூட்டங்களிலெல்லாம் தனி மனிதன் என்ன நினைக்கிறான் எப்படி வாழ்கிறான் என்றெல்லாம் எண்ணிக் குழம்பும் நீ குழப்பத்தைத் தீர்த்துக் கொள்ளத்தான் எல்லோருடைய நினைவிலும் கலந்து விட்டாயா,? பாபு.! இந்தியா பெற்ற சுதந்திரம் ஒருவரால் கிடைக்கப் பெறாதது. அதுபோல் இந்த சமுதாய மாற்றமும் ஒருவரால் ஆகாது என்று எண்ணித்தான் உன்னையே அதற்காக அர்ப்பணித்துக் கொண்டாயா.? புகழ் பெற்று வளர்ந்திருந்த நம் மக்கள் அரித்தெடுக்கப் பட்ட ஓலைச் சுவடிகளாக மாறி வருவது காணப் பொறுக்காமல் புதிய நகல் எடுத்துப் புதுப்பிக்க முயன்றாயே. உன் முயற்சி வெற்றி அடைந்து வருவதை நீ காண்கிறாயா.? உனக்கு அது முடியும் ஏனென்றால் நீதான் நீயாக இல்லாமல் உன் நினைவாக மாறி எங்கும் இருக்கிறாயே. !

     கற்பூரப் பாத்தி கட்டி, கத்தூரி எரு போட்டுக் கமழ் நீர்ப் பாய்ச்சிப் பொற்பூர உள்ளியதனை விதைத்தாலும் அதன் குணத்தையே பொருந்தக் காட்டும் என்று உணர்ந்தவன் நீ, உன் தொண்டெல்லாம் விழலுக்கிறைத்த நீர் போலாகுமோ என்று கலங்கித்தான் காலனிடம் சென்று விட்டாயா.?

     தூங்கிக் கனாக் காண்பவர்களுக்கு வாழ்க்கை இன்ப வெள்ளமாகத் தோன்றும். விழித்துப் பார்ப்பவர்களுக்குத்தான் வாழ்க்கை ஒரு கடமைக் கடலாகத் தோன்றும் என்பாயே.! அந்தக் கடமைக் கடலிலேயே மூழ்கி விட்டாயே.! பாபு. ! நியாயத்தின் மாறி வரும் மதிப்புகளை வாழ்வில் புரிந்து கொள்ளாவிட்டால்.அது துன்ப மயமாகவே விளங்கும் என்று அறிவுறுத்துவாயே, புரிந்து கொண்ட உன் வாழ்க்கை இன்பமய மானதாகத்தான் இருந்ததா.?

    பசித்திருப்பவன் முன்பு ஆண்டவன் சோற்று உருவில்தான் வர முடியும் என்ற காந்தியின் வாக்கை நினைவுறுத்துவாயே ,உன்னால் அவர்கள் முன் உன் உருவில் வர முடியாது என்றுதான் நீ  நீயாக இல்லாமல் உன் நினைவாக மாறி விட்டாயா. ?

    பாபு எண்ண எண்ண சித்தம் கலங்குகிறது.மனத்தை இருள் சூழ்கிறது. இருண்ட வாழ்வின் விடி வெள்ளியாகத்தான் உன்னை நீயாக இல்லாமல் உன் நினைவாகக் காண்கிறோமா.!

   பாபு,! அஞ்சா நெஞ்சம் படைத்தவன் நீ உன் சொந்த வாழ்க்கையில் தோல்விகளைக் கண்டு அஞ்சி விட்டாயா.? உன் மறைவாவது அந்தத் தோல்வியை வெற்றிப் பாதையில் திருப்பும் என்றுதான் நீ நீயாக இல்லாமல் உன் நினைவாக மாறி விட்டாயா.?

   பாபு, ! நீயாக இல்லாமல் நினைவாக எங்கள் உள்ளங்களில் நந்தா விளக்காக எரியும் உனக்கு, நீ நினைத்த வற்றை முடிப்பதே நாங்கள் செய்ய வேண்டிய கடமை. ! நடத்தி முடிப்போம் என்று உறுதி கூறுகிறோம். அதுவே எங்கள் நினைவில் என்றைக்கும் இருக்கப் போகும் உனக்கு நாங்கள் செய்யும் அஞ்சலி.! “
------------------------------------------------------------------------

                         நிறைவடைந்தது
                        -----------------