ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

நினைவில் நீ.(அத்தியாயம் பத்தொன்பது)


                                    நினைவில் நீ. ( நாவல் தொடராக )
                                  -------------------------------------------------

                                                   -------  19  --------
                                                ( நிறைவுப் பகுதி )

                                      அமர கவி பாரதிக்கு சமர்ப்பணம்
                      -------------------------------

(அன்றிரவு படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தேன். உறக்கம் வருவது போல் இருந்தாலும் உள்ளுணர்வு மட்டும் விழித்துக் கொண்டு தான் இருந்தது. அன்று மாலை  நடந்த பாரதி விழா நிகழ்ச்சிகளை எண்ணிக்கொண்டே இருந்தவன் எப்போது உறங்கினேன் என்றே தெரிய வில்லை.

உடல் உறங்கிய நிலையில் உள்ளம் விழித்துக் கொண்டிருக்க வேண்டும். அந்த விழித்த நிலையில் நான் இந்தக் வையமே ஒரு கோள வடிவில் சுற்றிக் கொண்டிருப்பதைக் கண்டேன். மாறி மாறி இருளிலும் ஒளியிலும் இயங்கும் கோளத்தில் அந்தந்த தன்மைக் கேற்ப நிகழ்ச்சிகளும் நடக்கக் கண்டேன். இருளில் பொறாமை, குரோதம், அறியாமை இன்னது போன்ற பேய்களின் கூக்குரலும் ,ஒளியில் அன்பு ,நல்லெண்ணம்,அறிவாளியின் சந்துஷ்டி போன்ற மெய்ஞானப் பொலிவும் மாறி மாறிக் காட்சியளித்தது. இது மாறிவரும் உலக இயல்புகளைத் தெளிவுறத் தெரிவிப்பது போல் இருந்தது. சுற்றி கொண்டிருந்த கோளம் மெல்ல தன்னிலைக்கு வந்து நின்றபோது கோளத்தில் ஒரு பகுதி இருளிலும் ஒரு பாதி ஒளியிலும் இருக்கக் கண்டதும் நிகழ் கால நிகழ்ச்சிகள்தான் என் நினைவுக்கு வந்தது..விழித்துப்பார்த்ததும் கண்ட கனவுக்கு விளக்கம் காண முயன்றதன் விளைவே இந்த சிறிய எளிய என் முதல் நாவல்.

கண்ட விளக்கம் சரியா இல்லையா என்பதை இதைப் படித்துப் பார்த்த வாசக நண்பர்களுக்கே விட்டு விடுகிறேன். ) 


      எங்கு பார்த்தாலும் உன் பேச்சு. எங்கு பார்த்தாலும் உன் நினைவுகள்.எங்கு பார்த்தாலும் நீ நீயாக இல்லாமல் உன் நினைவாக மாறி இருக்கிறாய். பாபு.! மக்கள் மன்றத்தின் இந்த ஆண்டு விழா.மக்கள் உள்ளங்களில் களிப்பு விழாவாக இருந்திருக்கும் நீ நீயாக எங்கள் மத்தியில் இருந்திருந்தால்.....!

     சிந்திப்பவன் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும், சிந்திக்காதவன் சிந்திக்கத் துவங்க வேண்டும் என்று எங்களுக்கெல்லாம் கூறி வந்த நீ சிந்தித்தே மறைந்து விட்டாயே..! அதனால் தானே உன் பேச்சும் செயலும் புரியாத புதிராக இருந்தது.

    ஆயிரக் கணக்கானவர்கள் கூடும் கூட்டங்களிலெல்லாம் தனி மனிதன் என்ன நினைக்கிறான் எப்படி வாழ்கிறான் என்றெல்லாம் எண்ணிக் குழம்பும் நீ குழப்பத்தைத் தீர்த்துக் கொள்ளத்தான் எல்லோருடைய நினைவிலும் கலந்து விட்டாயா,? பாபு.! இந்தியா பெற்ற சுதந்திரம் ஒருவரால் கிடைக்கப் பெறாதது. அதுபோல் இந்த சமுதாய மாற்றமும் ஒருவரால் ஆகாது என்று எண்ணித்தான் உன்னையே அதற்காக அர்ப்பணித்துக் கொண்டாயா.? புகழ் பெற்று வளர்ந்திருந்த நம் மக்கள் அரித்தெடுக்கப் பட்ட ஓலைச் சுவடிகளாக மாறி வருவது காணப் பொறுக்காமல் புதிய நகல் எடுத்துப் புதுப்பிக்க முயன்றாயே. உன் முயற்சி வெற்றி அடைந்து வருவதை நீ காண்கிறாயா.? உனக்கு அது முடியும் ஏனென்றால் நீதான் நீயாக இல்லாமல் உன் நினைவாக மாறி எங்கும் இருக்கிறாயே. !

     கற்பூரப் பாத்தி கட்டி, கத்தூரி எரு போட்டுக் கமழ் நீர்ப் பாய்ச்சிப் பொற்பூர உள்ளியதனை விதைத்தாலும் அதன் குணத்தையே பொருந்தக் காட்டும் என்று உணர்ந்தவன் நீ, உன் தொண்டெல்லாம் விழலுக்கிறைத்த நீர் போலாகுமோ என்று கலங்கித்தான் காலனிடம் சென்று விட்டாயா.?

     தூங்கிக் கனாக் காண்பவர்களுக்கு வாழ்க்கை இன்ப வெள்ளமாகத் தோன்றும். விழித்துப் பார்ப்பவர்களுக்குத்தான் வாழ்க்கை ஒரு கடமைக் கடலாகத் தோன்றும் என்பாயே.! அந்தக் கடமைக் கடலிலேயே மூழ்கி விட்டாயே.! பாபு. ! நியாயத்தின் மாறி வரும் மதிப்புகளை வாழ்வில் புரிந்து கொள்ளாவிட்டால்.அது துன்ப மயமாகவே விளங்கும் என்று அறிவுறுத்துவாயே, புரிந்து கொண்ட உன் வாழ்க்கை இன்பமய மானதாகத்தான் இருந்ததா.?

    பசித்திருப்பவன் முன்பு ஆண்டவன் சோற்று உருவில்தான் வர முடியும் என்ற காந்தியின் வாக்கை நினைவுறுத்துவாயே ,உன்னால் அவர்கள் முன் உன் உருவில் வர முடியாது என்றுதான் நீ  நீயாக இல்லாமல் உன் நினைவாக மாறி விட்டாயா. ?

    பாபு எண்ண எண்ண சித்தம் கலங்குகிறது.மனத்தை இருள் சூழ்கிறது. இருண்ட வாழ்வின் விடி வெள்ளியாகத்தான் உன்னை நீயாக இல்லாமல் உன் நினைவாகக் காண்கிறோமா.!

   பாபு,! அஞ்சா நெஞ்சம் படைத்தவன் நீ உன் சொந்த வாழ்க்கையில் தோல்விகளைக் கண்டு அஞ்சி விட்டாயா.? உன் மறைவாவது அந்தத் தோல்வியை வெற்றிப் பாதையில் திருப்பும் என்றுதான் நீ நீயாக இல்லாமல் உன் நினைவாக மாறி விட்டாயா.?

   பாபு, ! நீயாக இல்லாமல் நினைவாக எங்கள் உள்ளங்களில் நந்தா விளக்காக எரியும் உனக்கு, நீ நினைத்த வற்றை முடிப்பதே நாங்கள் செய்ய வேண்டிய கடமை. ! நடத்தி முடிப்போம் என்று உறுதி கூறுகிறோம். அதுவே எங்கள் நினைவில் என்றைக்கும் இருக்கப் போகும் உனக்கு நாங்கள் செய்யும் அஞ்சலி.! “
------------------------------------------------------------------------

                         நிறைவடைந்தது
                        -----------------

                  
  

6 கருத்துகள்:

  1. கேலிக் கூத்தாகும் அன்ன தானம்
    கேலிக் கூத்தாகும் அன்ன தானம்


    அன்ன தானம் என்பது ஒரு உயர்ந்த நெறி

    பசியால் வாடுபவருக்கு உள்ளன்புடன்
    உபசரித்து உணவு வழங்கும்
    ஒரு உயரிய பண்பு

    ஏனென்றால் உணவுதான் ஒரு உயிரை
    அது தங்கியுள்ள உடலிலிருந்து
    மரணமடையாமல் காப்பாற்றுகிறது
    அதனால்தான் உண்டி கொடுத்தோர்
    உயிர் கொடுத்தோரே என்றனர் நம் ஆன்றோர்

    திருவள்ளுவரும் இருக்கும் உணவு பொருளை
    தான் ஒருவரே மட்டும் அனுபவிக்காமல்
    பகுத்துண்டு பல்லுயிரும் ஓம்புதல் நூலோர்
    தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்று
    வலியுறுத்தியுள்ளார்

    இன்று எங்கு பார்த்தாலும்
    அன்னதானம் நடைபெறுகிறது
    ஆனால் அன்ன தானத்தில் வீணடிக்கப்படும்
    உணவு பொருட்கள் அளவு மிகவும் அதிகமாக உள்ளது

    இதை தவிர விழாக்களில் வீணடிக்கப்படும் உணவுபொருடகளின் அளவு
    கணக்கிடமுடியாது தங்கள் கௌரவத்தை காட்டவும் ஊரார் மெச்சவும்
    மக்கள் இது போன்ற அனாகநீகமான செயல்களில் ஈடுபடுகின்றனர்
    இவர்களை யார் திருத்துவது/

    உலகில் கோடிக்கணக்கான மக்கள் ஒருவேளை உணவுக்கு கூட
    வழியில்லாமல் மடிந்து போகின்றனர்
    பலர் வறுமையில் வாடி வதங்கி தவிக்கின்றனர்

    ஆனால் இப்படி விலை மதிக்கவொண்ணா உணவுபோருளை மக்கள்
    பாழ் செய்வது அவர்களை இந்த பிறவி அல்லது அடுத்த
    பிறவிகளில் வறுமையில் தள்ளி கொடுமைபடுத்தும் என்பதில்
    சந்தேகமில்லை
    .
    இதை உணர்ந்து கடவுளுக்கு சமமான உணவு பொருளை
    தேவையானவர்களுக்கு தேவையான அளவு வழங்கி
    பயன்படுத்தவேண்டும்

    இதை வழங்குபவர்களும் வாங்கி பயன்படுத்துபவர்களும்
    நினைவில் கொள்ள வேண்டும்

    முற்பிறவியில் உணவு பொருட்களை வீணடித்தவர்களும்
    பசியால் வாடும் ஏழைகளுக்கு தங்களிடம் உணவிருந்தும்
    பிச்சையிடாதவர்களும்தான் அடுத்த பிறவியில் ஒரு வேளை
    சோற்றுக்கு வழியில்லாமல் உலகில் திரிவார்கள் என்பது உண்மை

    அன்னபூரணியான பராசக்தியிடம் சிவ பெருமானே
    பிச்சை கேட்கும் நிலை உள்ளது
    ஆதலால் தெய்வம் போன்ற அன்னத்தை
    உரிய மரியாதையுடன் பக்தியுடன் பயன்படுத்தவேண்டும்

    வீண் ஆடம்பரத்திற்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர்
    இறைவனின் தண்டனைக்கு ஆளாவதுடன் துன்பத்திற்கும் ஆளாவது உறுதி.

    பதிலளிநீக்கு
  2. ப்லேஷ்பேக் உத்தி ஓரளவுக்குப் புரிந்திருந்தாலும் இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை. எனினும் இந்த முடிவே கதைக்கு ஒரு அழியாத்தன்மையைக் கொடுத்திருப்பதாக நினைக்கிறேன். அறுபதுகளில் எழுதப்பட்டக் கதையென்பதில் கொஞ்சம் புரட்சிதான்.

    பதிலளிநீக்கு
  3. ஐயா..

    தொடர்பணியோட்டம். இருப்பினும் காணும் ஆசையில் வந்தேன். விரைவில் நாவல் படித்து கருத்துரைப்பேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  4. :( ஏன் இப்படி முடித்தீர்கள்....
    அப்பாதுரை கூறியது போல் அது கதைக்கு வலு செர்க்கும் என்றாலும்... :(

    பதிலளிநீக்கு
  5. பாபு இறந்ததற்கான சரியான காரணம் சொல்லப்படவில்லையோ? ஏன் இறந்தான் என்பதே புரியவில்லை. என்ன வியாதி பாபுவுக்கு? அதுவும் சரியாகச் சொல்லப்படவில்லை.

    பதிலளிநீக்கு