Sunday, April 22, 2012

இலக்கியம் இன்பமே....!.


                                                 இலக்கியம் இன்பமே.!
                                                 --------------------------------

நட்பும் உறவுமான ஒருவரை அவர் உயிருடன் இருக்கும்போதே
சந்திக்க வேண்டும் என்றே எண்ணி இருந்தேன்.. நினைத்தபடி
நானும் செல்ல அனுமதி இல்லை, என் வயசே காரணம்.
வரிசையில் காத்திருக்கிறோம் யார் எங்கு என்றே அறியாமல்.

என்னை முந்தியவனைப் பிரிந்தவற்கு ஆறுதல் கூறல்
அவசியம் என்ற என்னோடு உற்ற உறவினர் தொடரச்
சென்றிருந்தேன். சென்ற இடத்தில் சேதி ஒன்று வந்தது
அடுத்த வீட்டு அம்மணி உறக்கம் எழாமல் உயிர் நீத்தார் என்று.

அடுத்தடுத்த இழவுச் செய்திகள் அலைக்கழிக்கின்றன.
காலையில் எழுந்தவுடன் மூச்சிருக்கிறதா என
எனக்கு நானே சோதிக்கும் அறியாப்பேதைமை. !
உறக்கத்தில் உயிர் விட்ட சேதி கேட்டு,
உறங்காமல் பரிதவிக்கும் பாமரத்தனம். !
உண்ணும்போது உயிர் விட்டான் தந்தை என
உண்ணாமலேயே உயிர் வாழ நினைத்த தனயன்.!
அடுத்துறங்கும் மனைவியை அர்த்த ராத்திரியில்
அசைத்துப் பார்க்கும் அவலத்திலும்,
பாரதிதாசன் பாட்டொன்று இதழ்களில் முறுவல் சேர்க்கிறது.

” கிளையினில் பாம்பு தொங்க ,
விழுதென்று குரங்கு தொட்டு,
விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கெனக் குதித்ததைப் போல்,
கிளை தோறும் குதித்துத் தாவி,
கீழுள்ள விழுதையெல்லாம்,
ஒளிப் பாம்பாய் எண்ணி எண்ணி,
உச்சி போய் தன் வால் பார்க்கும்.”
-------------------------------------------

                                         
       -

7 comments:

 1. நெகிழ வைக்கிறது. அவலச் சிந்தனையும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் தேவைப்படுகிறது. உங்கள் மனநிலை ஓரளவுக்குப் புரிகிறது.
  பாரதிதாசன் வரிகளைப் இப்போது தான் படிக்கிறேன். நன்றி.

  ReplyDelete
 2. //காலையில் எழுந்தவுடன் மூச்சிருக்கிறதா என எனக்கு நானே சோதிக்கும் அறியாப்பேதைமை. !//

  //உறக்கத்தில் உயிர் விட்ட சேதி கேட்டு,உறங்காமல் பரிதவிக்கும் பாமரத்தனம். !//

  //அடுத்துறங்கும் மனைவியை அர்த்த ராத்திரியில் அசைத்துப் பார்க்கும் அவலம்//

  நெகிழ வைக்கும் இந்த வரிகளில், நிச்சயமற்ற நம் வாழ்க்கையின் நிதர்சனம் பொதிந்துள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை, ஐயா.

  பாரதிதாசன் அவர்களின் வரிகளும் அருமை.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 3. ரசித்தேன் கவிதையை.

  ReplyDelete
 4. பாரதிதாசன் பாட்டொன்று இதழ்களில் முறுவல் சேர்க்கிறது.

  மரணத்தை மறந்து சந்தோஷமாய் ரசியுங்கள் வாழ்க்கையை..!

  ReplyDelete
 5. @ அப்பாதுரை,
  @ கோபு சார்,
  @ டாக்டர் கந்தசாமி,
  @ இராஜராஜேஸ்வரி.

  அவல சிந்தனைகள் சில நேரங்களில் ஆட்டி வைக்கும். மனித குணத்துக்கும் பாரதிதாசனின் பாடலில் வரும் குரங்கின் குணத்துக்கும் உள்ள ஒற்றுமையைக் காட்டவே இந்த பதிவு. மற்றபடி மரணம் குறித்த கவலை ஏதும் இல்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 6. மரணம் எப்போது வேண்டுமானாலும் வரக்கூடும் என்றாலும் முதுமையின் அதன் எதிர்பார்ப்பு கூடும். அதுவும் ஒத்த வயதுடையோரின் இழப்பு, எப்படிப்பட்ட மன உறுதியையும் அசைத்துவிடும். நம் உணர்வுகளை, ஒத்த நிகழ்வுகளை பகிரும் நட்பு வட்டாரமோ, உறவோ இனி இல்லையென்னும் நினைவில் உண்டாகும் வேதனை மரணத்தை விடவும் வலி தரக்கூடியது. தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய விதமும், அதற்கேற்ற பாரதிதாசன் பாடல் வரிகளும் மனம் நெகிழ்த்துகின்றன. இலக்கியம் இன்பமே என்று மீண்டும் உணரவைக்கின்றன. நன்றி ஐயா.

  ReplyDelete
 7. எனினும் இன்றைய தினம்.. இந்த நிமிடம் நாம் கையில். ரசித்து வாழ்வோம்!

  ReplyDelete