Sunday, April 1, 2012

கோவிந்தராஜபுரம்

                                        கோவிந்தராஜபுரம்.
                                       ----------------------------

  சுமார் இரண்டு வருஷங்களுக்கு முன் பெங்களூரில் என் விலாசத்துக்கு கோவிந்தராஜபுரம் கிராமத்தில் இருந்து ஒரு கடிதம் வந்தது. அந்தக் கிராம கோவில் விசேஷம் ஏதோ குறித்து வந்திருந்தது. BY THE BY கோவிந்தராஜபுரம் பாலக் காட்டில் கல்பாத்திக்கு அருகிலுள்ள ஒரு அக்கிரகாரம். என் பெயரின் இனிஷியல்லில் இருக்கும்
G அதைத்தான் குறிக்கிறது. என் முன்னோர்களின் ஊர். என் அப்பா படித்த ஊர். இப்போது அங்கு நாங்கள் சொந்தம் கொண்டாட இந்த இனிஷியலைத் தவிர வேறு ஏதுமில்லை. என் பிள்ளைகளின் பெயர்களில் அந்த இனிஷியலும் இல்லை. இப்படி இருக்கும்போது எனக்கு வந்த கடிதம் எப்படி வந்தது ? .யாருக்குத் தெரியும் என் விலாசம்.? யாருக்குத் தெரியும் என் பூர்விக கிராமம் கோவிந்தராஜபுரம் என்று.?
என் எண்ணச் சிதறல்களை என் மனைவியுடன் பகிர்ந்து கொண்டேன். பத்து முதல் பதினொன்று வயதுக்குள் சில காலம் நான் அந்த கிராமத்தில் என் அப்பா வழிப் பாட்டி வீட்டில் இருந்தது காட்சிகளாக விரிந்தது. அண்மையில் அந்த கிராமத்தில் இருந்து
கோவிந்த ராஜபுரம் கிராம ஜன சமூகத் தலைவர் G.V. VENKATESH சில நண்பர்களுடன்
பெங்களூரில் என் வீட்டுக்கு வந்திருந்தார். கிராமக் கோவிலுக்கு விமரிசையாக கும்பாபிஷேகம் மே மாதம் 23-/ ம் நாள் நடக்க இருப்பதாகக் கூறி வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். www.govindarajapuram.com என்னும் தளத்தில் விவரங்கள் இருக்கின்றன. இந்த நிகழ்வுகள் கிளறிவிட்ட நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

  நான் ஏற்கனவே எழுதி இருந்த அரக்கோண நாட்கள் என்னும் என் பதிவின் தொடர்ச்சியாகவும் இது இருக்கும்.
 
    அப்போது ஐந்தாம் வகுப்பு முடிந்து ஆறாம் வகுப்புக்குப் போயிருந்த (ஃபர்ஸ்ட் ஃபார்மென்பார்கள்.)நேரம்.உடல் நலக் குறைவால் பள்ளிக்கே செல்லவில்லை. அதற்குள் அப்பாவுக்கு பூனாவுக்கு மாற்றல் உத்தரவும் வந்தது. என் தாயையும் (சித்தி) குழந்தைகள் நடராஜன் பாபுவையும் குஞ்சுக்குட்டி அம்மாளுடன் ( மாமியுடன் ) பாலக்காட்டில் அவர்கள் வீட்டிலேயும், என்னையும் சோமாவையும் எங்கள் தந்தை வழி பாட்டி வீட்டில் கோவிந்தராஜபுரத்திலேயும்,ஆச்சு அண்ணா ராஜியை பெங்களூரில் எங்கள் தாய் வழிப்பாட்டி வீட்டிலேயும் தங்க வைத்து அவர் பூனாவுக்குச் சென்றார். சுமார் ஓராண்டு காலம் பாலக்காட்டில் தங்கினோம், அங்கு தமிழ் வழிக் கல்வி இல்லாததால் நானும் சோமாவும் ஓராண்டு காலம் வெட்டியாகக் கவலையில்லாமல் திரிந்து காலங் கடத்தினோம்.
  பாட்டிக்கு வரும்படி ஏதும் கிடையாது. பிள்ளைகள் ஏதாவது பணம் அனுப்பினால்தான் வாழ்க்கைச் சக்கரம் ஓடும். அப்பா மாதம் ரூபாய் 40-/ அனுப்புவார். அது தெரியும். பாட்டியுடைய மற்ற பிள்ளைகள் மெட்ராசிலிருந்து சித்தப்பா கிருஷ்ணமூர்த்தியும் ,வரதராஜனும் ( ராசு சித்தப்பா )எவ்வளவு அனுப்புவார்கள்,எப்போது அனுப்புவார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. அதாவது அவர்களிடமிருந்து எவ்வளவு பணம் எப்போது வரும் என்ற நிச்சயமில்லாத்தன்மை நிலவியது. நாங்கள் அங்கிருந்ததால் அப்பா பணம் அனுப்ப வேண்டிய கட்டாயமிருந்தது. அவர் மூன்று இடங்களில் குடும்பத்தைப் பராமரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவருக்குப் பூனாவிலும், அம்மாவுக்கு மேமை வீட்டிலும் எங்களுக்குப் பாட்டியின் வீட்டிலும் பணம் அனுப்ப வேண்டும். அவருக்குக் கிடைத்த சம்பளத்தில் ரூபாய் 40-/ என்பது கடினமான காரியம்தான். அந்தப் பணத்தில் ஆறேழு பேர் வாழ்வது என்பது அதைவிடக் கடினம். அந்தக் காலகட்ட வாழ்க்கையில் எங்களுக்கு எதுவுமே தெரியாது. இப்போது எண்ணிப்பார்த்தால் எல்லோரும் எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார்கள் , எவ்வளவு மன உளைச்சல் இருந்திருக்கும் என்பது புரிகிறது. மாச முதல் வாரத்தில் மணி ஆர்டரை எதிர்பார்க்கத் தொடங்குவார்கள். கால தாமதம் ஆகும் போது என் சித்தப்பாக்கள் எல்லோரையும் சபிப்பார்கள். . ஆனால் பாட்டி பாவம் பரம சாது. தலை மழித்த விதவைக் கோலத்தில், காலையில் எழுந்து குளித்து ஜபங்கள் சொல்லி தன் வேலைகளைத் தானே செய்வார். “ ஐயனே, உம்முடைய அழகான பாதத்தை அர்ச்சித்திருப்பதும் நான் எப்போ.?_என்று பாடுவது என் மனதில் இன்றும் ரீங்கார மிடுகிறது. பாட்டிக்கு உறுதுணையாக எல்லாவற்றிலும் கூட இருந்து ஒத்தாசை செய்தது விச்சா சித்தப்பாதான். கோவிந்தராஜபுரம் கிராமம் அருகே கல்பாத்திப் புழை. (ஆறு )வரதராஜஸ்வாமி கோவில் கிராமத்தின் ஆரம்பத்தில் இருக்கும். அந்த அக்கிரகாரம் அந்தக் காலத்தில் எனக்கு ஏதோ பெரிய இடமாகத் தோன்றும். இந்தக் கால கட்டத்தில் போய்ப் பார்க்கும்போது (சுமார் இருநூறு மீட்டர் நீளம் இருக்கலாம் )எவ்வளவு பெரிய இடமாகத் தோன்றியது எவ்வளவு சிறியது என்று புரிகிறது. பெரியதும் சிறியதும் காலகட்டத்தின் உருவமே. சிறிய வயதுச் சிறுவன் எனக்கு எல்லாமே பெரிதாகத் தோன்றியது. இந்த காலத்துச் சிறுவர்களுக்கு அந்த மாதிரி எண்ணம் தோன்ற வாய்ப்பில்லை. ஏனென்றால் உலகத்தையே தங்களுடைய வரவேற்பறையில்காணும் வசதி பெற்றுள்ளதாக நாடும் விஞ்ஞானமும் வளர்ந்திருக்கிறது. கோவிந்தராஜபுரத்தில் இருந்த போது, நாட்களை வெட்டியாகவே, ஒரு உபயோகமுமில்லாமல் கழித்தது தெரிகிறது. கிராமங்களில் யாராவது ஒருவர் தெருவில் செல்கிறார் என்றால் யார், எதற்காக, எங்கிருந்து வருகிறார் என்றெல்லாம் அவர்களுக்கு அவசியம் தெரிந்தாக வேண்டும்.. இப்போதும் அப்படித்தானா என்று தெரியவில்லை.நாகரிகம் என்று நாம் கருதும் கலாச்சாரம் மற்றவருடைய வாழ்க்கையில் அக்கரையின்மையைக் குறிக்கும் குறியீடாக மாறி வருகிறது. நகரங்களில் வசிக்கும் பலருக்கு அடுத்த வீட்டில் இருப்பது யாரென்றோ, அவர்களைப் பற்றிய விவரங்களோ தெரிவதில்லை. ஆனால் அந்தக் காலத்தில் கிராமங்களில் எல்லோருடைய ஜாதகங்களும் விரல் நுனியில் வைத்திருந்தனர்..எது சரி எது தவறு என்பது அவரவர் கடந்து வந்த பாதையைப் பொறுத்தது.

  கிராமத்தில் எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் இருந்தார். பெயர் தெரியவில்லை. ஆனால் எல்லோரும் அவரை உறுமன் என்றே குறிப்பிடுவார்கள். அவருடைய மனைவியையும் உறுமி என்றே குறிப்பிடுவர். அவர்களுடைய மகன் அவர்களை அடித்து ,உதைத்துப் பூட்டி வைத்திருப்பார்.எல்லோருடைய சொந்த விஷயங்களில் அக்கறை கொள்ளும் கிராம மக்கள் அந்த அநியாயத்தைக் கண்டும் காணாமல் இருந்தது இப்போது எண்ணும்போது நிரடுகிறது. எங்களுடைய எதிர் வீட்டில் அம்பி என்றொருவர் இருந்தார்.அவர் சினிமாவில் நடித்த சில ஃபோட்டோக்களைப் பார்த்திருக்கிறோம். அவர் நடித்த சில படங்களையும் பார்த்த நினைவு. எங்களுடைய வீட்டின் இடப் புறத்தில் அப்பாவின் அத்தை மகனோ ,மகளோ( நினைவில்லை )அக்காளாம் என்பார்கள். கோவிலின் அருகே ரெஜிஸ்திரார் வீடு என்பார்கள். கிராமத்தின் கோடியை தாழத்தெரு என்பார்கள்.அங்கே ஒரு கிணறு தெருவின் நடுவே இருக்கும். அதன் அருகே என் தாய் வழி உறவினர் குடியிருந்தனர். இந்த நினைவெல்லாம் ,நான் இப்போது பாலக்காட்டுக்குப் போகும்போது எண்ணங்களாக மோதும். நான் பத்து வயது முதல் பதினோறு வயது வரை அங்கிருந்திருக்கலாம். ஒரு வருஷத்துக்கும் குறைவாகவே இருந்திருப்போம். கோவில் விசேஷங்களும் ஆற்றில் வெள்ளம் பொங்கி ஓடியதும், எங்கள் கிராமத்துத் தேர், மற்றும் கல்பாத்தித் தேர் போன்றவையும் மறக்க முடியாதவை. கிருஷ்ண ஜெயந்தி அன்று பிள்ளைகள் கிருஷ்ணன் மாதிரி உடையுடுத்தி, எல்லோருடைய வீட்டுக்கும் போய், ஸ்ரீஜெயந்தி பாலம், சிவராத்திரி பாலம் என்ற மாதிரிஏதோ கூறிக்கொண்டு, கையில் ஒரு கோலுடனும் பாத்திரத்துடனும் செல்வார்கள். ஒவ்வொரு வீட்டிலும் சிறிது எண்ணையோ, கோவணமோ கொடுப்பார்கள். இப்போதும் அது மாதிரி நடை பெறுகிறதா தெரிய வில்லை. ஊரில் சில பெரியவர்கள், முக்கியமாகப் பெண்மணிகள் காலையில் ஆற்றில் குளித்துவிட்டு, கோவிலில் கடவுளை வழிபட்டு, வீட்டுக்குத் திரும்புவார்கள். அப்போது “ மடியுடன்இருப்பதாகவும் அவர்களை யாரும் தொடக்கூடாது என்பதிலும் அக்கறையாக இருப்பார்கள். நாங்கள் சிறுவர்கள் வேண்டுமென்றே, தெரியாமல் தொடுவதுபோல், தொட்டுச் சீண்டுவோம். சிலர் எங்களைத் திட்டிக்கொண்டே மறுபடியும் குளிக்கச் செல்வது எங்களுக்கு உற்சாகம் கொடுக்கும். கோவிலுக்குச் சென்று பிரசாதம் வாங்குவதிலும், சிதறுத் தேங்காய் பொறுக்குவதிலும் அலாதி மகிழ்ச்சி.

          நாங்கள் கோவிந்தராஜபுரத்தில் இருந்த சமயம் வந்த தீபாவளி நன்றாக நினவுக்கு வருகிறது. அங்கு தீபாவளி அவ்வளவு விசேஷமில்லை. கேரளத்தில் தீபாவளியை விட விஷு அதிக விசேஷம். இருந்தாலும் கிராமத்தில் அக்கிரகாரத்தில் பிராமணர்கள் வசித்ததாலும் தமிழ் மொழி தாய் மொழியாய் இருப்பவர்கள் தீபாவளி கொண்டாடுவார்கள். எங்கள் வீட்டில் புதுத் துணியோ, பட்டாசுகளோ வாங்க முடியாத நிலைமை. மறு நாள் தீபாவளி .நாங்கள் ஏக்கத்துடன் இருந்தோம். அப்போது எங்கள் தாய் மாமா ஓரிருவர், ( யாரென்று நினைவில்லை )எங்கள் வீட்டுக்கு வந்து எங்கள் நிலையைக் கண்டு பரிதாபப்பட்டு, தீபாவளிப் பட்டாசுக்காக ரூபாய் இரண்டு கொடுத்துச் சென்றனர். எங்களுக்கு அளவுக்கு மீறிய சந்தோஷம். கொஞ்சம் ஓலைப் பட்டாசு வாங்கினோம். கொஞ்சம் கந்தகப் பொடி வாங்கினோம். சிகரெட் பாக்கெட்டில் இருக்கும் ஜிகினாப் பேப்பரைத் தேடிப் பொறுக்கினோம். ஒரு துளையுள்ள சாவியை தேடி எடுத்தோம். பின் என்ன.? நாள் பூராவும் வெடிதான். கந்தகப் பொடியை சிகரெட் பேப்பரில் போட்டு சிறு உருண்டைகள் தயார் செய்து, அவற்றை சாவித்துளையில் போட்டு, அதனுள் ஒரு ஆணியைச் செருகி, ஆணியை அடித்தால் “டமார் “ வெடிதான்.

  அருகில் நூரணி என்ற கிராமத்தில் ஆண்டு தோறும் ஸாஸ்தாப்ப்ரீதி கொண்டாடுவார்கள்.எல்லோருக்கும் இலவச அன்னதானம். ஏழெட்டு வகைப் பாயசங்களுடன் நடக்கும் “ சத்தி “வெகு பிரசித்தம். இப்போதும் நடக்கிறதா தெரியவில்லை. மாதம் ஒரு முறை “ கல்லேக்குளங்கரை “பகவதி கோவிலில், எங்கள் வீட்டிலிருந்து வழிபாடு செய்வார்கள். விச்சா சித்தப்பா வழிபாடு முடிந்து, கொண்டுவரும் பிரசாதப் பாயசம், இப்போதும் இனிக்கிறது. காலையில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் மாடுகளை மேய்ச்சலுக்குக் கூட்டிச் செல்ல ஒருவர் வருவார். மேய்ச்சல் முடிந்து திரும்பவும் கொண்டு விடுவார். எங்கள் வீட்டில் நாங்கள் இருந்தபோது மாடு இருக்கவில்லை. வீட்டின் கடைசிப் பகுதியில் மலங்கழிக்க கக்கூஸ் இருக்கும். இரண்டு தொட்டிகள் வைத்திருப்பார்கள். அதை தினம் அகற்றுவதற்கு ஒருவர் வருவார். அவர் வருவதற்கு வீட்டின் பின் புறம் ஒரு சந்து இருக்கும். அவர் வரும்போது குரல் கொடுத்துக் கொண்டு வருவார்.அப்போது யாரும் இருக்க மாட்டார்கள். மலங்களை தொட்டியிலிருந்து வேறு ஒரு பெரிய தொட்டிக்கு மாற்றி, இந்தத் தொட்டியைக் கழுவி வைத்துச் செல்வார்கள்.மனித மலங்களை மனிதர் அள்ளும் அந்தக் கொடிய பழக்கம் இன்றும் அங்கு நிலவுகிறதா தெரிய வில்லை. தீண்டாமை, சாதிக்கொடுமை போன்றவற்றின் வெளிப்பாடுகள்தான் அவையென்பது இப்போது புரிகிறது.
      அண்மையில் ஒரு முறை கிராமத்துக்கு என் மனைவி சாந்தியுடன் சென்றிருந்தேன். கோவிந்தராஜபுரம் கோவிலருகே கல்பாத்திப்புழை காணச் சென்றிருந்தோம். ஆறு முற்றிலும் மாறியிருக்கிறது. என் சிறிய வயது நினைவுகளில் ஆறும் மணல் படுகையும் அழகாகத் தெரிந்த இடங்கள் இப்போது முற்றிலும் களையிழந்து காணப்படுகிறது. புதர்களும் செடிகளும் மண்டிக்கிடக்கிறது.ஆற்றில் நீர் அழுக்காய் சிறிதே ஓடுகிறது. ஆற்றின் குறுக்கே தடுப்புப்பாலம் போல் ஏதோ கட்டப் பட்டிருக்கிறது. மலம்புழா அணைக்கட்டு வந்த பிறகு ஏற்பட்ட மாற்றம் என்று கூறுகிறார்கள். எனக்கு என்னவோ அந்த இடம் சோபையை இழந்ததுபோல் தோன்றுகிறது.


   நாங்கள் கோவிந்தராஜபுரத்தில் இருந்தபோது, அருகிலிருந்த மணல் மந்தையில் அம்மாவைக் காணச் சென்றுவிடுவோம். முதலில் அவர்கள் இருந்த இடம் தெரியாமல் இருந்தது. தத்தை என்ற பெண், அரக்கோணத்தில் எங்கள் வீட்டில் வேலையாளாக இருந்த பெண், ஒருமுறை எதேச்சையாக எங்களைப் பார்க்க, நாங்கள் அம்மாவின் வீட்டை அவள் மூலம் தெரிந்து கொண்டு சென்றோம். பாட்டிக்கு நாங்கள் அங்கு போய் வருவது அவ்வளவாகப் பிடிக்காது. எங்களை எங்கள் தாயார் எப்படி நடத்துகிறார்கள்.,சரியாக சாப்பாடு போடுவாளா, எவ்வளவு தோசை சாப்பிடுவோம், என்பன மாதிரியானக் கேள்விகளாகக் கேட்பார்கள்.எங்களுக்கு எந்தக் குறையும் இல்லையென்று தெரிந்து கொள்வார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த பதில் அதுவல்ல என்பது அப்போதே எனக்குப்புரிந்தது.

  
     கிராமத்து வாழ்க்கையை இவ்வளவு சிறிய சாதாரண நிகழ்ச்சிகளையெல்லாம் நினைவு கூர்ந்து நான் எழுதுவது அவையெல்லாம் எனக்குப் பிற்கால வாழ்க்கையில் எவ்வளவு தூரம் பாதித்திருக்கும் என்பதை அசை போட்டுப் பார்ப்பதற்குத்தான். 1949-1950 காலகட்டத்துக்கும் இன்றைய காலகட்டத்துக்கும்தான் எவ்வளவு மாறுபாடு. நம் வாழ்க்கை முறை இருந்தவிதமும், இப்போது இருக்கும்விதமும், இடைப் பட்ட காலத்தின் மாற்றங்களைக் கண் கூடாகப் பார்த்த அனுபவங்களும் , உண்மையிலேயேஅந்தக் காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும் பாலமாக இருக்கும் பெருமிதமும் அடைகிறேன். எவ்வளவோ சிறிய நிகழ்ச்சிகள் சொல்லப்படாமல் விடுபட்டிருக்கலாம். சொல்லப் பட்டவையும் முக்கியமானதாக அல்லாமலும் இருக்கலாம். இருந்தாலும் அவை என்னை உருவாக்கிய அனுபவங்கள். ஒரு வழியாக கோவிந்தராஜபுர வாழ்க்கை, அப்பாவின் இடமாற்றத்தால் ( கோயமுத்தூருக்கு) முடிவுக்கு வந்தது.எங்களை அழைத்துப்போக மாட்டு வண்டியுடன் அப்பா வந்தார். அந்த வண்டியில் அம்மாவும் நடராஜன், பாபு இருவரும் இருந்தனர். என்னையும் சோமாவையும் ஏற்றிக் கொள்ள வீட்டு வாசலில் வண்டி வந்து நின்றது. தொச்சாமி சித்தப்பாவும் ,விச்சா சித்தப்பாவும் எங்களுடைய சிறிய பைகளை வண்டியில் ஏற்ற உதவிக் கொண்டிருந்தனர். நான் அப்போது தொச்சாமி சித்தப்பாவிடம் ,நாங்கள் போவதில் உங்களுக்கு மிகவும் சந்தோஷம்தானே “ என்று சற்று சத்தமாகவே கேட்டேன். அவர்கள் அப்போது அதனை எப்படி எதிர் கொண்டிருப்பார்கள் என்று இப்போது யோசித்துப் பார்த்தால் என் தவறு புரிகிறது. அதற்குப் பிறகு அவரை நான் ஐம்பது வருடங்களுக்கும் மேற்பட்ட பிறகுதான் பார்த்தேன். அவரும் அவருடைய மனைவியும் மகளும் குஜராத்திலிருந்து பெங்களூர் வந்திருந்தனர். அவரது மகளின் எல். டி. சி. மூலம் அது நிகழ்ந்தது. நானும் என் மனைவி சாந்தியும் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்று பார்த்தோம். அவர்களுக்கு நேரமின்மையாலும் சித்திக்கு உடம்பு முடியாமல் இருந்ததாலும் அவர்களால் எங்கள் வீட்டுக்கு வர முடிய வில்லை. அவர்களுடன் புகைபடம் எடுத்துக் கொண்டோம். சிறிது நாள் கழித்து குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டபோது, பதறிப் போய் விசாரித்து, அவர்கள் நலமாக உள்ளனர் என்று தெரிந்து நிம்மதியடைந்தோம்.

 பாலக்காட்டில் கல்பாத்தி பிரசித்தி பெற்ற இடம். ஒவ்வொரு ஆண்டும் தேர்த் திருவிழா நடக்கும். பத்து வயதில் கண்டு களித்த தேர்த் திருவிழாவுக்கு என் மனைவியுடன் இரண்டு வருடங்களுக்கு முன் சென்று வந்தேன். பெரிய தேர் . யானை முட்ட தேர் பவனி கண் கொள்ளாக் காட்சி. நாங்களும் வடம் பிடித்தோம். சென்ற வருடத் தேரின்போது முட்டு வைக்கும் ஒருவர் முட்டு வைக்கையில் விபத்துக்குள்ளாகி உயிர் இழந்தார் என்று கேள்விப் பட்டேன். 

    இந்த முறை எங்கள் கிராமத் தேர்த் திருவிழா காண என் பரிவாரங்களுடன் செல்ல விருப்பம். நினைப்பது நடந்தால் மகிழ்ச்சி.
-------------------------------------------------------------


 
   

  
  

6 comments:

 1. ஐயாவின் கடிதம் ஊடே ஊர்க் கிராமத்தை மீளவும் பார்த்த போன்ற உணர்வையும் காலமாற்றத்தை கிராமம் தொலைந்து முறையையும் சொல்லும் பதிவு.

  ReplyDelete
 2. இந்த முறை எங்கள் கிராமத் தேர்த் திருவிழா காண என் பரிவாரங்களுடன் செல்ல விருப்பம். நினைப்பது நடந்தால் மகிழ்ச்சி.

  மலரும் நினைவுகள் ..........

  ReplyDelete
 3. I haven't read the series. so cant comment..just for attendence

  ReplyDelete
 4. கிராமத்தில் பயணித்தது போன்ற உணர்வு ஐயா

  ReplyDelete

 5. @ கில்லர் ஜி
  கோவிந்தராஜபுரம் கிராமத்தைக் காட்டவும் எங்கள் வீட்டைப் பார்க்கவும் ஊரைக் காட்ட தேரைக் காட்ட வேறைக்காட்ட என்னும் பதிவு மூலம் என் மகனையும் பேரக் குழந்தைகளையும் ஒரு தேர் திருவிழாவுக்குக் கூட்டிச் சென்றதை எழுதி இருக்கிறேன்

  ReplyDelete
 6. "நான் அப்போது தொச்சாமி சித்தப்பாவிடம் ,”நாங்கள் போவதில் உங்களுக்கு மிகவும் சந்தோஷம்தானே" என்று சற்று சத்தமாகவே கேட்டேன். அவர்கள் அப்போது அதனை எப்படி எதிர் கொண்டிருப்பார்கள் .. - வேறு எப்படி இப்படித்தான் >>>> கோவாலு கோவாலு ... மாப்பு ... ஐய்யய்யோ வச்சுட்டான்யா ஆப்பு ...>> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  ReplyDelete