Tuesday, April 10, 2012

நினைவில் நீ..(சில சிந்தனைப் பகிர்வுகள்.)


நினைவில் நீ ( சில சிந்தனைப் பகிர்வுகள்.)
              ----------------------------

”நினைவில் நீ” நாவலைத் தொடராக வெளியிடும் முன்பே அது எந்த சூழலில், காலத்தில் எழுதப் பட்டது என்பதைக் கூறி இருந்தேன். நெடுங்கதைகளை ஊன்றி வாசித்து ரசிப்பதோ, விமரிசிப்பதோ பதிவுலகில் அருகி விட்டது தெரிந்தும், பதிவுலகில் நான் மதிக்கும் சிலரது ஊக்க வார்த்தைகளே தொடராக வெளியிடத் தூண்டியது. கலைமகளில் ஒரு போட்டிக்காக எழுதியது என்றும்,அறுபதுகளின் பின் புலத்தில், ஒரு கீழ் நடுத்தர வர்க்க இளைஞனின் அபிலாக்ஷைகளைக் கூறவும் எழுதப் பட்டது அது. அந்தக் காலத்தில் பிரபல எழுத்தாளர்கள் மத்தியில் இது ஏற்கப் படுமா என்றெல்லாம் நான் சிந்தித்ததில்லை. என் எழுத்திலும் வடிவமைப்பிலும் இருந்த நம்பிக்கையே என்னை எழுதத் தூண்டியது .இவன் என்னதான் எழுதிக் கிழித்து விடப் போகிறான் என்று எண்ணாமல், கதையை FOR WHAT IT IS WORTH  படித்தால்தான் நேர்மையான கருத்தோ விமரிசனமோ வரும்.


இந்த ஒரு நாவல்தான் பத்திரிகைக்காக நான் எழுதியது. ஆனால் என் துரதிருஷ்டம், நான் முன்பே கூறி இருந்தபடி பத்திரிகை அலுவலகத்தையே எட்டிப் பார்க்காமல் எங்கோ தொலைந்து விட்டது. (COURTESY;POSTAL DEPT.)

கதாசிரியர்கள் எழுதும்போது, ஏதோ ஒரு வரைமுறைக்கு உட்பட்டு கற்பனை செய்கிறார்கள்-.நிகழ்வுகளை நினைவில் பதித்து, அதற்காக பாத்திரங்களை சிருஷ்டிப்பது, இல்லை பாத்திரங்களை மனதில் இருத்தி, அதற்கேற்ப நிகழ்வுகளை நிர்ணயிப்பது.-. கற்பனைக் கதாபாத்திரத்தில் எல்லா குணங்களும் நல்லதாகவே காட்டுவது இயல்புக்கு ஏற்றதாக இருக்காது. ஆனால் எந்த ஒரு கதாபாத்திரமும் நூறு சதவீதம் நல்லவர்களாகவோ அல்லது நூறு சதவீதம் கெட்டவர்களாகவோ இருப்பதில்லை. நல்ல குணம் ,கெட்ட குணம்,நல்ல செய்கை தீய செய்கை எல்லாம் கதாபாத்திரத்தை அணுகும் முறையில்தான் இருக்கும். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் அவரவர் செய்கை சரியானதாகவே இருக்கும். செய்யும்போது எதுவும் தீது என்று நினைத்துச் செய்யப் படுவதில்லை. நல்லது கெட்டது என்பதற்கு UNIVERSALLY ACCEPTED YARD STICK எதுவும் கிடையாது. இதையேதான் நான் மனசாட்சி என்பதற்கு வெவ்வேறு அளவு கோல்கள் உண்டென்று முன்பே எழுதி இருக்கிறேன்.யாரும் அவரவர் மனசாட்சிக்கு எதிராகச் செயல் படுவதில்லை. செய்யும் செயல்கள் எல்லாம் மனசாட்சியின் பெயரால் நியாயப் படுத்தப் படும்

”நினைவில் நீ” நெடுங்கதையில் வாழ்க்கையில் நாம் அனுதினம் காணும் மனிதர்களையே சித்திரப் படுத்தி இருக்கிறேன்.

பாட்டி, கண்ணன் கல்யாணி அம்மா, பாபு மாலதி, சியாமளா, கமலம், சிவராமன், போன்றோர் எல்லோரும் நம் கண் முன்னே நடமாடும் பாத்திரங்களே. அவரவர் குணாதிசயத்துக்கு ஏற்றபடி சித்தரிக்கப் பட்ட வெகுஜன மக்கள். இவர்கள் மூலமாக சொல்லப்பட்ட கருத்துகளின் மறு பக்கமும் விவரமாக விஸ்தரிக்கப் பட்டிருக்கும். படிப்பவர் விருப்பு வெறுப்பின்றி கவனித்தால் நன்கு விளங்கும்

பதிவுகளைப் படித்துக் கருத்திடுபவர்களுக்கும் , ஜீவியின் அண்மைய நாவலின் ஒரு பதிவில் கூறி இருக்கும் எழுத்துப் பட்டறை ( WORKSHOP) போன்ற அமைப்பு அவசியமோ என்று எண்ணத் தூண்டுகிறது.நாம் எந்தக் கருத்தைக் கூற முனைகிறோமோ, எதை சிந்தித்து ரசித்து எழுதுகிறோமோ அது சிறிதும் உணரப் படாமலேயே ,பின்னூட்டம் என்ற பெயரில் பெரும்பாலும் பதிவின் கடைசி வரிகளையே எடுத்தாண்டு கருத்தாக வரும். என் பதிவுகள் சிலவற்றுக்கு ஒருவர் எழுதிய கருத்துரையே காப்பி பேஸ்ட் செய்தது போல் அடுத்து வருவது கண்டிருக்கிறேன். மறுபடியும் ஜீவி அவர்களையே மேற்கோள் காட்டுகிறேன். எண்ணங்களைக் கடத்துவதற்கு எழுதுகிறோம் என்று அவர் கூறி இருந்தார்.கடத்தப் படும் எண்ணங்கள் எல்லோருக்கும் உடன்பாடாக இல்லாமல் இருக்கலாம்.அவர்கள் அதை தாராளமாகப் பதிவிடலாம். என் பதிவுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. மாற்றுக் கருத்துக்கள் எழுதுபவரைக் காயப் படுத்தாமல் இருந்தால் சரி. கருத்துகளில் வேறுபட்டு இருக்கலாம்.


சில நிகழ்வுகள் கதையில் வரும்போது அதை எழுதும் முன் எவ்வளவு சிந்தனை தோன்றி இருக்க வேண்டும் என்று யாராவது சிந்திக்கிறார்களா தெரியவில்லை. என் எழுத்துக்கள் பொழுது போக்குக்காக எழுதப் படுவது அல்ல. என் வலையின் முகப்பில் காணும் வரிகளுக்கு வடிவம் கொடுத்து உள்ளத்து உணர்ச்சிகளுக்கு உயிர் கொடுக்க எழுதுவது..

”நினைவில் நீ” தொடரில் வரும் சம்பவங்களும் நிகழ்வுகளும் எங்கும் நடக்கக் கூடியதே. பாபுவின் மரணம் உட்பட. எந்த மாற்றமும் ஒரே நாளில் (OVERNIGHT) நடை பெறுவதில்லை. ஒரே மனிதனால் நடத்தப் படுவதும் இல்லை.எண்ணங்களை விதையாக்கி, செயல்களை உரமாக்கி, விருட்சம் வளர்ந்து பலன் கொடுக்கக் காலமாகும். சில நேரங்களில் ஒரு வாழ்வும் போதாது. பாபு உயிருடன் இருந்து எல்லாப் பலன்களையும் கண்ணாரக் காண்கிறான் என்று முடித்திருந்தால் அது முரணாக இருக்கும். அதே சமயம்
அவனது மரணமும், அவனுக்கு ஒரு PREMONITION ஆகத் தெரிந்து நடப்பதுபோல் இருந்தால் நாவலின் சுவை கூடலாம்.,நிகழ்வுகளுக்கு நியாயம் கற்பிக்கலாம் என்று சிந்தித்தே எழுதப் பட்டது.

பத்தொன்பது அத்தியாயங்களைத் தாங்கி தொடராக வந்த நாவல் ”நினைவில் நீ”; பதிவுலகில் கதைகளைப் படிப்பவர்கள் படிக்காமல் இருந்தால் நஷ்டம் எனக்கில்லை. படிக்க கொடுத்து வைக்காதவர்களுக்குத்தான்.  ஏனென்றால் நான் தான் எழுதி முடித்ததாயிற்றே...!.
--------------------------------------------------------      .   
                .

.
  

11 comments:

 1. உள்ளத்து உணர்ச்சிகளுக்கு உயிர் கொடுக்க எழுதிய சிந்தனைப் பகிர்வுகள் நிறைய சிந்திக்கவைக்கின்றன்....

  ReplyDelete
 2. அவ்வப்போது மேலோட்டமாகத்தான் படித்தேன். முழுவதும் படிக்க அவா. எப்போது நிறைவேறும் என்று சொல்லமுடியவில்லை.

  ReplyDelete
 3. கோர்வையாக எழுதுகிற மாதிரி இந்தளவுக்கு இணையப் பதிவுகள் வளர்ச்சியடைந்ததே அதிசயம்!

  'ரிபீட்டு' போன்ற ஒற்றை வார்த்தையைத் தாண்டி பின்னூட்டங்களும் இப்பொழுதைய நிலையை அடைய நான்கு ஐந்து வருடங்கள் வேண்டியிருந்திருக்கிறது.

  நெடிய அலுவலக வேலைகளுக்கிடை யே ஒரு டைம் பாஸாக, நீண்ட அலுப்புக்கு ஒரு மாற்றாக, ஒரு ரிக்கிரியேஷனாக, மேலோட்டமாக வலம் வருவதற்காகத் தான் இன்றும் பதிவுகள் பார்வையில் படுவதாக எண்ணவும் தோன்றுகிறது. பலர் ஒரு பதிவுக்கு வந்து தங்கி படிக்கும் நேரம்
  ஒரு வினாடி அல்லது இரு வினாடிகளே!

  'எப்பொழுதுமே எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது பற்றி ரொம்ப எதிர்பார்ப்பு வேண்டாம்; பதிவைப் படித்த பின்னூட்டமிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளும் நாலைந்து பேருடனான பகிர்தல் நிறைந்த மன மகிழ்ச்சியையும், ஆத்ம திருப்தியையும் கொடுக்கும் என்று'
  அதற்காகத் தான் ஒருமுறை சொன்ன
  நினைவு வருகிறது.

  உங்கள் 'நினைவில் நீ' தொடரை, ஒருசேரப் படித்து நான் உணர்வதை கூடிய விரைவில் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

  இந்த வயதில் தங்கள் மனத்தில் படுவதை தொடர்ந்து தாங்கள் எழுதி வருவதற்கு மிக்க நன்றி, ஜிஎம்பீ சார்!

  ReplyDelete
 4. பத்தொன்பது அத்தியாயங்களையும் படித்து விட்டு கருத்து சொல்கிறேன் சார்.

  முடிந்த போது ஒவ்வொன்றாய் படித்து கருத்து சொல்கிறேன்.

  ReplyDelete
 5. உங்களுக்கு ஏன் இப்படிக் விரக்தி/ கோபம் வருகிறது என்று கேட்க அனுமதிப்பீர்களா?

  ReplyDelete
 6. நெடுங்கதை என்றில்லை - எதையுமே ஊன்றி வாசிப்பது அருகி வருவதாகத் தோன்றுகிறது. எஸ்எம்எஸ் யுகம்.

  ReplyDelete
 7. //'ரிபீட்டு' போன்ற ஒற்றை வார்த்தையைத் தாண்டி பின்னூட்டங்களும்...

  :))

  ReplyDelete
 8. சமுத்ரா தங்களைப்பற்றி பெருமையுடன் கூறி இருக்கிறார்..தளம் முழுக்க வாசித்துவிட்டு விரைவில் கருத்திடுகிறேன்

  ReplyDelete
 9. @ இராஜராஜேஸ்வரி,
  @ டாக்டர் கந்தசாமி,
  @ஜீவி,
  @ கோமதி அரசு,
  @ அப்பாதுரை,
  @ ஷைலஜா, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
  ஜீவி மற்றும் கோமதி அர்சின் விமரிசனங்களுக்குக் காத்திருக்கிறேன்.
  எனக்கு விரக்தி - கோபம் வருகிறதா.?
  நான் அப்படி நினைக்க வில்லை. எண்ணங்கள் வார்த்தைகளால் உருவம் கொடுக்கப் படாவிட்டால் வாடி சருகாகும். நினைக்கப் பட்டது சொல்லாமலேயே விடப் பட்டதால் சில இழப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கிறேன். நிறைய ஆதங்கங்கள் உண்டு.
  ஷைலஜா உங்கள் வலை என் புக் மார்க்கில் குறித்திருக்கிறேன்.
  மீண்டும் நன்றி.

  ReplyDelete
 10. //பாபு உயிருடன் இருந்து எல்லாப் பலன்களையும் கண்ணாரக் காண்கிறான் என்று முடித்திருந்தால் அது முரணாக இருக்கும். அதே சமயம்
  அவனது மரணமும், அவனுக்கு ஒரு PREMONITION ஆகத் தெரிந்து நடப்பதுபோல் இருந்தால் நாவலின் சுவை கூடலாம்.,நிகழ்வுகளுக்கு நியாயம் கற்பிக்கலாம் என்று சிந்தித்தே எழுதப் பட்டது.
  //

  வித்தியாசமாக சிந்தித்திருக்கிறீர்கள்....... நல்ல எழுத்து....மீண்டும் மீண்டும் தொடருங்கள்.

  உண்மை தான் பாபு, கண்ணன், மாலதி எல்லோரும் நம்முடன் வசிக்கும் பாத்திரங்கள்.

  ReplyDelete
 11. சில நேரங்களில் ஒரு வாழ்வும் போதாது. பாபு உயிருடன் இருந்து எல்லாப் பலன்களையும் கண்ணாரக் காண்கிறான் என்று முடித்திருந்தால் அது முரணாக இருக்கும். அதே சமயம்
  அவனது மரணமும், அவனுக்கு ஒரு PREMONITION ஆகத் தெரிந்து நடப்பதுபோல் இருந்தால் நாவலின் சுவை கூடலாம்.,நிகழ்வுகளுக்கு நியாயம் கற்பிக்கலாம் என்று சிந்தித்தே எழுதப் பட்டது...

  வித்தியாசமான சிந்தனைதான் என்றாலும் ஏன் இப்படி என்றே தோன்றுகிறது. என்றாலும் மத்தவங்க சுயநலத்துக்குப் பலியானான் என்பதையும் ஏற்க முடியவில்லைதான். :(

  ReplyDelete