எண்ணக்கள் தொகுப்பு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எண்ணக்கள் தொகுப்பு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 2 ஜூன், 2015

எனக்கு நானே......கடிதமா....?


                       எனக்கு நானே...... கடிதமா......?
                      --------------------------------------------


அன்புள்ள ......
என்னை நானே எப்படி அழைத்துக் கொள்வது. . இருந்தாலும் எனக்கு நானே கடிதம் எழுத வேண்டும் போல் இருந்தது. என்ன எழுதுவது. அன்புள்ள என்று துவங்கி விட்டேன் எனக்கு நானே அன்புள்ளவனா... ஏன் இருக்கக் கூடாது. உன்னை நீ நேசிப்பது போல் அடுத்தவனை நேசி என்று பைபிளில் கூறி இருப்பதாகப் படித்திருக்கிறேன் LOVE THY NEIGHBOR  AS THYSELF என்னை நான் என் எல்லாக் குறைகளையும் சேர்த்து நேசிக்கிறேன் என்பது உண்மைதானே. உன்னை நேசிப்பது போல் அனைவரையும் நேசி என்றால் குறைகள் இல்லாத மனிதரே இருக்க வாய்ப்பில்லை. அந்தக் குறைகளையும் பொருட்படுத்தாமல் நேசிக்க வேண்டும் சொல்வது சுலபம் ஆனால் கடைப்பிடிப்பது சிரமம் நீ எப்படி? வஞ்சனை இல்லாமல் நேசிக்கிறாயா? கேள்வி கேட்டு விட்டேன் பதிலை கடிதத்தில் எதிர்பார்க்கிறேன் சுய சிந்தனை செய்.
கடிதம் எழுத முதலில் நலம் விசாரிக்க வேண்டும் என்று சொல்லப்படாத நியதி. உண்டு. உன்னிடம் நலன் பற்றிக் கேட்டால் அது உனக்குப் பிடிக்காது. என்று தெரியும். உனக்கு நீ உடல் நலமில்லாவிட்டாலும் நலமே என்றுதான் சொல்வாய். உள்ளுக்குள் சிறிது கோபம் கூட வருமே. ஆனால் பலருக்கும் நலம் விசாரித்தால்தான் நமக்கு அவர்கள் மீது அக்கறை என்பது தெளிவாகும்
ஆஹா..... ஒருவர் மீதுள்ள அக்கறையைக் காட்டத்தான் நலம் விசாரிக்கச் சொல்கிறேன் என்றோ நலம் விசாரிக்கிறேன் என்றோ பொருள் கொள்ளக் கூடாது. நீ அப்படி இல்லை என்று எ(உ)னக்குத் தெரியும்
 எனக்கு நானே ஆகவோ உனக்கு நீயே ஆகவோ கடிதம் எழுதுவது சிரமமாய் இருக்கிறது. எதையாவது எழுதுவதற்குள் உடனே அதில் கூறுவது நீயா அல்லது நானா என்று பிடிபடுவதில்லை

இருந்தாலும் வித்தியாசமாக எழுதத் துவங்கி விட்டேன் நீ ஏதாவது பதில் சொல்ல விரும்பினால் திண்டுக்கல் தனபாலன் சொல்வது போல் மனசாட்சியின்(உள்ளத்தின் குரல்) பதிலாக எடுத்துக் கொள்கிறேன் ஓக்கேவா.?
இருந்தால்தான் என்ன.?எழுதுபவனும் நானே எழுதப்படுபவனும் நானே கடவுளைப்போல
உன்னைப் பற்றி வலைஉலகில் என்னநினைக்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமா? வித்தியாசமான குழப்பவாதி என்றே நினைக்கிறார்கள். உன் பின்னூட்டங்கள் நீ மற்றவர்களை அனுசரித்துப் போகாதவன் என்பதைக் காட்டுகிறது. என்றும் நீ ஒரு மரை கழண்ட லூஸென்றும் உன்னிடம் சொந்த சரக்கு என்று ஏதும் இல்லையென்றும் பெரிய சீர்திருத்தவாதி போல் நடிக்கிறவன் என்றும் இன்னும் என்னவெல்லாமோ நினைக்கிறார்கள்.
இந்த இடத்தில் நான் பதில் சொல்லியே ஆகவேண்டும் .இந்த மாதிரி மனிதர்களைத்தான் நான் முன் பல்லில் சிரித்துக் கடைவாய்ப் பல்லில் கடிக்கிறவர் என்பேன் 
அது உன்னைப் பற்றிய விமரிசனம் என்பது உனக்கு எப்படித் தெரியும்?ஓ...அதைத்தான் நீயே சொல்லி விட்டாயே..........
இந்த வயதில் என்னால் சில விஷயங்களை அனுமானிக்க முடியும் என்றே நினைக்கிறேன்
இன்னொருவர் தன் பதிவில் எனக்கான ஒரு மறு மொழியில் என்னைப் புரிந்து கொள்வதே சிரமமாய் இருக்கிறதென்று எழுதி இருந்தார். இதை நான் வரவேற்கிறேன். என் குறையோ நிறையோ என்னிடமே சொல்லும் பக்குவம் பிடித்திருந்தது. அதற்கு மாறாக இன்னொருவர் வலைத் தளத்தில் நான் அதைப் படிப்பேன் என்று நன்கு அறிந்து தான் தோன்றித்தனமாக எழுதுவது சுத்த கோழைத்தனம் எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
உன்னைப் போல் அடுத்தவரையும் நேசி என்று கூறிவிட்டு இப்படி ஊர்ஜிதப் படுத்தப் படாத குற்றச் சாட்டுகள் தவறு என்று உனக்குத் தெரிவதில்லையேபோற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரித் தூற்றுபவர் தூற்றட்டும் என்று ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது.? உன்னிடம் எனக்குப் பிடித்ததே இதுதான் உன் குறை எது நிறை எது என்று பட்டவர்த்தனமாக ஆராய்கிறாயே I LIKE IT. அதைத்தான் உன் பலமாகவும் பலவீனமாகவும் கருதுகிறேன்
சரி  நீ ஒரு bundle of contradictions  என்பது சரியாய்த்தான்  இருக்கிறது.
அது சரி இல்லை. ஒருவேளை பிறருக்கு அப்படித்தோன்றலாம் ஆனால் என்னைப் புரிந்து கொண்டவர்களுக்கு என்னுடைய கன்ஸிஸ்டென்சி புரியும். எதைப் பற்றியாவது கருத்துக் கூற வேண்டும் என்றால் ஓரளவுக்காவது அது பற்றித் தெரிந்திருக்க வேண்டும் என்று நம்புகிறேன் எனக்கு அதற்குண்டான நூல்களைத் தேடிப்பிடித்து படிப்பது இயலாததாகி இருக்கிறது. கணினியின் உதவியுடன் பல விஷயங்களைக் கற்கிறேன்  
போதும் நிறுத்து. நான் உனக்குக் கடிதம் எழுதுவதில் இருப்பதை விட உன் பதிலில் நீ உன்னை நிரூபிக்கப் பார்க்கிறாய் அது சரி. கணினி உன் நேரத்தை மிகவும் ஆக்கிரமிக்கிறதுஎழுதுவது உன் சுதந்திரம். கருத்து சொல்வதும் சொல்லாததும் வாசிப்பவர் சுதந்திரம் நீ உன் எழுத்துக்களைப் பற்றி அதிகம் எடைபோடுகிறாய் என்றே தோன்றுகிறது
 இரு இரு இதற்கு நான் பதில் சொல்ல வேண்டும் நானும் பிறரது பதிவுகளைப் படிக்கிறேன் எல்லோர் கருத்துகளும் உடன்பாடு என்று சொல்வதற்கில்லை. இருந்தாலும் நாசுக்காக நான் அதை தெரிவித்துவிடுவேன் சிலர் ஒரே மாதிரி இடுகைகளைப் பதிக்கிறார்கள் அவற்றையும் படிக்கிறேன் ஆன்மீகப் பதிவுகளில் எதிர்மறைக் கருத்துக்கள் பதிப்பதில்லை. அவை மிகுந்த நம்பிக்கையோடு எழுதப் படுபவை. இருந்தாலும் நான் நினைப்பதைக் கூறி விடுவேன் அதே போல் என் பதிவுகளும் படிக்கப் படுகின்றன என்பதும் தெரியும் என் பதிவுகளில் நான் ஸ்ட்ராங்காக நினைப்பதை எழுதுகிறேன் அதுவும் ஒரு கலந்தாடலுக்குத்தான். ஆனால் பெரும்பாலான நேரங்களில் அது நடப்பதில்லை
எப்படி நடக்கும்? நீ விரும்பமாட்டாய் என்று சிலர் கருத்துக்களைப் பதிக்காமல் இருக்கலாம் .உனக்கு நினைவிருக்கிறதா? தஞ்சாவூர்க் கவிராயரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் எழுத்தாளனை ஊக்குவிப்பது அவன் படைப்பு பற்றிய சில நல்ல வாக்கியங்களே. பொன் தரவேண்டாம் பொருள் தரவேண்டாம் சில புகழ் வார்த்தைகளையாவது தாருங்கள் என்று படைப்பாளி ஏங்குவான் என்றது. அதற்காக இந்திரன் என வேண்டாம் சந்திரன் என வேண்டாம் ஊக்குவிக்க வேண்டும் என்றாரே
அவருக்குத் தெரியும் எப்படி மறைமுகக் கருத்துக்களை கூறவேண்டும் என்று. என் சிறுகதைத்தொகுப்புக்கு அவர் எழுதி இருந்த வாசகங்களே சான்று. அணிந்துரையில் அவர் ஜி.எம்.பாலசுப்பிரமணியத்தின் கதைகளைப் படித்துப் பார்த்தேன் இக்கதைகள் எந்தப் பத்திரிக்கையிலும் பிரசுரமானவை அல்ல.ஆகக் கூடியவையும் அல்லஎன்றும் “ எழுத்தாளர் ஆகவேண்டுமென்ற உத்தேசமோஅல்லது அவ்வாறு ஆகி இருப்பதை அடையாளப் படுத்தும் நோக்கமோ சிறிதுமின்றி, தன் எண்ணங்களைப் பதிவு செய்திருக்கிறார். வாசகர்களின் சுவாரசியத்துக்காகவும் இவை எழுதப் படவில்லைஎன்றும் எழுதி இருந்தார். இதைப் புகழாரமாகவோ அல்லாததாகவோ ஏற்றுக் கொள்ளலாம் எடுத்துக் கொள்பவரைப் பொறுத்தது அது
சிலர் உன் எழுத்துக்களைப் படிக்க வேண்டும் என்னும் ஆவல் உனக்கிருக்கிறதுஅது நடைபெறாமல் போகும் போது ஏமாற்றமும் இருக்கிறது தானே. 
ஆம் உண்மைதான் வலை உலகில் பலரது எழுத்துக்களைப் படிப்பவன் நான் சிறுகதை எழுதுவதில்பெயர் பெற்றவர்கள் என்று அறியப்பட்டவர்கள் என் கதைகளைப் படிக்க வேண்டும் என்னும் விருப்பம் உண்டு. அப்படி அறியப் பட்டவர் ஒருவருக்கு என் சிறுகதைத் தொகுப்பினை அனுப்பவா  விமரிசனம் செய்வீர்களா என்று கேட்டு எழுதி இருந்தேன். அவரும் ஒப்புதல் அளித்தபின் என் சிறுகதைத் தொகுப்பை அனுப்பினேன் மாதங்கள் ஓடி விட்டன. ஓரிரு முறை நினைவு படுத்தினேன் எனக்கு வந்த ஒரு பதில் எனக்கு இன்னும் புரியாததாய் இருக்கிறது. “ காரசாரமாய் சாடி ஒரு விமரிசனம் எழுதியதாகவும் அதன் காரம் குறைத்து ஒரு விமரிசனம் எழுத முயல்வதாகவும் கூறி இருந்தார். விமரிசனம் என்பது நடுநிலையோடு இருக்க வேண்டும். எழுதியவனை விமரிசிக்காமல் எழுத்தை விமரிசித்தல் அது எப்படி ஆயினும் தவறில்லையே. வலை உலகில் புரியாத விஷயம் இது.
சும்மா அல்ல பதிவர்கள் நினைப்பது உன்னைப் புரிந்து கொள்வதே கடினமப்பா. உனக்கு நினைவிருக்கிறதா?அவதாரக் கதைகள் நீ முதலில் எழுதத் துவங்கியபோது ஒரு சிறுமி தான் நாட்டியம் பயில்வதாகவும் தனக்கு இக்கதைகள் உபயோகமாய் இருப்பதால் தொடர்ந்து எழுத வேண்டி பின்னூட்டமிட்டபோது அதுவே உனக்கு ஒரு உந்து சக்தியாகி எல்லா அவதாரக் கதைகளையும் பதிவிட்டாயே..!
அவதாரக் கதைகள் என்று சொல்லும் போது ஒரு விஷயம் கூற விரும்புகிறேன் ஒன்பது அவதாரங்களிலும் அவதார புருஷர்களின் தோற்றம் இருக்கிறது தெரிகிறது கிருஷ்ணாவதாரத்தில்தான் கிருஷ்ணனின் மறைவு குறித்த தகவல் இருக்கிறது.மற்ற அவதாரங்களில் அவதாரங்களின் மறைவு பற்றி எங்கும் படித்த நினை வில்லை.
இதைப் படிப்பவர்கள் தங்களது கருத்துக்களைப் பதியும் போது யாராவது இதற்கும் பதில் சொல்லுவார்கள் என்னும் நம்பிக்கையோடு இரு. கடிதமாய்த் துவங்கி எப்படியோ போய் என்னவோ எழுதும் படி ஆகி விட்டது

அதனால்தான் என்னை நான் DIFFERENT என்று சொல்லிக் கொள்கிறேன்    
 

வெள்ளி, 6 டிசம்பர், 2013

மறதி போற்றுவோம்


                                         மறதி போற்றுவோம்
                                         -----------------------------
(மறதி என்பது ஒரு உடற்கூறின் குறைபாடு என்று கூறுகிறார்கள்( ALZEIMER  வியாதி) ஆனால் மறதி என்பது பெரும்பாலும் வரம் என்றே தோன்றுகிறது. அதன் விளைவே இப்பதிவு)




அங்கிங்கெனாதபடி    எங்கும்    அவலங்கள்       
ஆனால்   நமக்கோ   அவை -- வெறும்    நிகழ்வுகள்   செய்திகள்
அண்டை  வீட்டுக்காரன்   மண்டையைப   போட்டால்
நமக்கென்ன  பாதிப்பு   ?
ஊரில்   உலகில்   ஆயிரம்   சாவுகள்
வெள்ளத்தால்   மழையால்    மண்சரிவால்
பூகம்பத்தால்  சுனாமியால்   கொடிய   நோய்களால்
ஒரே  நொடியில்  கோடீஸ்வரன்  ஒட்டாண்டியாகிறான்
மாடு   மனை   வாசல்   எல்லாம் துறக்கிறான்
எண்ணவே   இயலாத   அவலங்கள்
அரை   நொடியில்   மண்ணில்   நிகழ்வது  நிஜம் .
எங்கோ  குண்டு   வெடிக்கிறது
மரண ஓலங்களும்   வலியின்  வேதனைகளும்
நமக்கென்ன   தெரியும்  ? அவை வெறும் செய்திகள்தானே .
மூக்கறுந்த  பெண்ணும்      மொய்க்கும்   குழந்தைகளும்
பத்திரிகையில்   செய்திகள்  தொலைக்காட்சிப்  படங்கள்
என்ன செய்வது,எல்லாம்  தலை  எழுத்து
நாம்  என்ன செய்ய ,--ஐயோபாவம்    என்று
"
ஊச் "  கொட்டுவோம் .
இழப்பு   நமக்கு   நேர்ந்தால்  தெரியும்
 
வலியும் வேதனையும்
ஊர்  கூட்டிக் கதறி  ஒப்பாரி ஓலமிட்டு
 
காட்டுவோம்    உலகிற்கு

நமக்கு   நேரும்  இழப்பும்   வலியுமே
காலத்தின்  போக்கில்  மறக்கும்   நமக்கு
மாற்றானின்   வலியும்   வேதனையும்
வெறும்  நிகழ்வுதானே   செய்திதானே
மறப்பது   மனசுக்குள்ள  மருந்து
காலம்  நமக்கு   கொடுத்த     வரம்
எதுவும்    கடந்து   போகும்
 மறதி     போற்றுவோம்   !