வாழ்வியல்-அன்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்வியல்-அன்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 பிப்ரவரி, 2012

காதலுக்கு வயதில்லை


                   காதலுக்கு வயதில்லை
                   ---------------------------------

    காதல் கவிதை ஒன்று எழுத எண்ண மனதில்

  வந்துதித்த கற்பனைக் கண் கண்ட கன்னி

  என்றோ நான் கண்டெடுத்துக் கைத்தலம்

  பற்றிய சுந்தரி, என் துணைவி யன்றோ.

  இவளா என் பாட்டில் அடங்குவாள்.?


         
     என் துயர் துடைக்க வந்த

  என் நலம் காணும் நாயகி

  நான் நாளும் மதிக்கும் நல்லாள்,

  என் இமையுள் உறைகின்ற மங்கை

  ஒளிர்கின்ற கோணங்களில் எல்லாம்

  மிளிர்கின்ற மாணிக்கம் நான்

  வாழப் பிடியாய் இருப்பவள்

  தஞ்சம் பிறிதில்லை, நெஞ்சம் நினைக்கவே

  அஞ்சும் இவளின்றி நானில்லை.

  மொழிக்குள் அடங்காது என் விழிக்குள்

  அடங்கும் இச்செங்கமலத் திரு உரு பற்றி

  அன்றிசைத்த பாடலில் உடலழகு முன் நிற்கும்.

  நிலவைப் பழிக்கும் முகம்

  அதில் நினைவைப் பதிக்கும் கண்கள்

  படர்கொடி வெல்லும் துடியிடை

  இடர் சேர்க்க இடையிடையாட

  என்றெல்லாம் எழுதிக் குவித்தேன்.

  இன்றும் அவளெழில் குறைந்தாளில்லை

  கூறப் போனால் அக அழகு

  மாற்றேற்ற மெருகு கூடியே உள்ளது.

  காதலுக்குக் கண் இல்லை என்பர். நான்

  ஓங்கி உரைப்பேன், காதலுக்கு வயதுமில்லை.
--------------------------------------------             .                                  .                                    
  

சனி, 10 டிசம்பர், 2011

அம்மா..

                                            அம்மா
                                            ----------

( ஒரு திருமணத்துக்காக நாங்கள் எல்லோரும் குடும்பத்துடன் சென்னை 
   சென்றிருந்தோம். என் முதல் பேரன் தான் வரவில்லை என்றும் தனியாக
   சில நாட்கள் இருக்க விருப்பம் என்று கூறினான். நாங்கள் திரும்பி வந்த 
   போது அவன் தாயின் பிரிவை ஆங்கிலத்தில் எழுத்தில் வடித்திருந்தான்.
  அதன் தமிழாக்கமே இது.)


         
                தளைகளும் கட்டுப்பாடும் அற்ற தனிமையில்
நானிருந்தபோது விடுதலை உணர்விருந்தது.
ஆனால் நீ இல்லாதது வெறுமை உணர்த்தியது
அன்புடன் உன அதட்டலும்,அதிகாரமும் இல்லாதிருந்தது
என்னுள் ஏக்கத்தை ஏற்படுத்தியது.

உன் உதிரத்தின் உயிராய் தொப்புள் கொடி
உறவாய் உதித்தவன் நான்.காலங் கடந்து
உணர்கிறேனோஅம்மா, நீயின்றி நானில்லை என்று ?. 

என்னுள் மாற்றங்கள் நிகழ்கிறது நான் அறிவேன்
அவை நல்லதோ அல்லதோ நானும் அறியேன் -ஆனால்
அறிகிறேன் அம்மா, என் அன்பு என்றும் மாறாதது.

விடியலில் என்னை எழுப்பும் ஆதவன் நீ
அந்தியில் என்னை உறக்கும் நிலவும் நீ
என் எண்ணத்தில் உன்னை நிறுத்தி
நீயில்லா வெறுமையை விரட்டினேன்.

இனிமையின் இருப்பு நீ,பூரணத்தின் பொலிவு நீ
என்னுள் என்னை மிளிரச் செய்பவள் நீ
எல்லாம் எனக்கு நீயே அம்மா
உலகில் சிறந்தவள் நீயே அன்றோ.!
-------------------------------------------------------