செவ்வாய், 7 மே, 2013

IGNORANCE IS BLISS.


                                     அறியாமை எனும் வரம்.
                                       --------------------------------  


இன்று மே மாதம் ஏழாம் நாள். சில நாட்கள் மறக்க முடியாதவை.அந்த நாளின் நினைவுகள் மனதில் மோதி ஒரு introspection-க்கு வழி வகுக்கிறது.என் இரண்டாம் மகன் பிறந்த நாள். நாங்கள் அப்போது BHEL  குடியிருப்பில் இருந்தோம்.அன்று விடியற்காலை சுமார் நான்கு மணி இருக்கும். என் மனைவி எழுந்து குளித்து அறையில் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தாள். நான் விழித்துக் கொண்டு என்ன ஆயிற்று என்று கேட்டேன். பிரசவ நேரம் நெருங்கி விட்டது போல் தெரிகிறது என்றாள். நானும் என் நண்பனும் ( அவன் அப்போது என்னுடன் தங்கிக் கொண்டிருந்தான்)தயாராகி BHEL மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றோம். அது எங்கள் வீட்டில்

இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும். நான் ஒரு புறமும் அவன் மறுபுறமும் நடந்து வர அவளைக் காலையில் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் சென்றோம். அவளது நிலையைப் பரிசோதித்த டாக்டர் அவளை நேராக லேபர் வார்டில் அட்மிட் செய்தார். அவ்வளவு தூரம் நடந்து வந்தீர்களா என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அட்மிட் செய்த ஒரு மணி நேரத்தில் என் இரண்டாம் மகனைப் பிரசவித்தாள்.


இப்பொழுதும் ஏதாவது பேச்சின் ஊடே “ என்னைப் பிரசவத்துக்கு நடத்திச் சென்றீர்களே . ஏதாவது ஏடாகூடமாய் நடந்திருந்தால் “ என்று சொல்லிக் காட்டுவாள். என்ன செய்வது. ? சில நேரங்களில் IGNORANCE IS BLISS என்று நினைத்துக் கொள்வேன். அவளை அன்று லேபர் வார்டில் பார்த்தபோது அவள் முகத்தில் தெரிந்த வலியின் வேதனையைக் கண்டு  தீர்மானம் செய்தேன்..இதற்கு மேல் குழந்தைகள் வேண்டாம். இவள் இந்த அவஸ்தைக்கு இனி உள்ளாகக் கூடாது” என்று. இரண்டாவது குழந்தை பெண்ணாக இருக்க விரும்பினாலும் ஆணாகப் பிறந்தாலும் மூன்றாவது குழந்தை என்னும் பேச்சுக்கே இடம் கொடுக்கவில்லை.

என்னவாயிருந்தாலும் அவளுக்கு என் அறியாமையை ( அலட்சியம் என்பாள் அவள் ) சுட்டிக்காட்ட அது ஒரு வாய்ப்பாக இருக்கிறது (இன்றும்)


ஞாயிறு, 5 மே, 2013

எனக்கொரு GIRL FRIEND வேண்டாம்....!



                      எனக்கொரு GIRLFRIEND வேண்டாம்.
                    --------------------------------------------------
( பதிவில் காதலி என்று வருமிடத்தில் GIRLFRIEND  என்று நினைத்துக் கொள்ளவும் )



பாவையரைப் பார்க்கக் குற்ற உணர்ச்சி
ஏதும் வேண்டாம். எனக்கொரு காதலி வேண்டாம்

பாங்குடனே பரிசுப் பொருள் வாங்கவே செலவேதும்
செய்ய வேண்டாம்- எனக்கொரு காதலி வேண்டாம்

பரீட்சையில் தோல்வி தரும் சிந்தனையை
தேங்கச் செய்யும் எனக்கொரு காதலி வேண்டாம்

அவளது அன்பு என்றும் உளதோ எனவே
தவிக்க வைக்கும் எனக்கொரு காதலி வேண்டாம்.

அலைபேசியின் ஓசைக்காக ஏங்கி ஏமாந்து
நிற்க வைக்கும் எனக்கொரு காதலி வேண்டாம் 


செய்வனவற்றில் சரியெது குறையெது எனக்
குத்திக்காட்டும் எனக்கொரு காதலி வேண்டாம்.

உறவுகள் யாருக்கும் பரிசுகள் தந்து மகிழ்ந்தால்
இதம் தர மறுக்கும் எனக்கொரு காதலி வேண்டாம்.

நட்புகளின் எண்ணிக்கை கூட்டலாம் நேரம்
கழிக்கலாம் தடையாய் எனக்கொரு காதலி வேண்டாம்.

ஊக்கத்துடன் உடலம் பேணலாம் காதல் திரைப்படம்
காணக் கட்டாயப் படுத்த எனக்கொரு காதலி வேண்டாம்.

பொய் பேசிப் பாவம் கூட்டவேண்டாம் உள்ளதைக்
கூறத் தயங்க வைக்கும் எனக்கொரு காதலி வேண்டாம்.

இதந்தரும் இனிய கனவுகள் காணலாம் வீணே
பகல் கனவில் மூழ்கடிக்கஎனக்கொரு காதலி வேண்டாம்

நான் நானாக இருக்கலாம் நினைக்கு முன்னே
கண்ணீர் சிந்த எனக்கொரு காதலி வேண்டாம். 
 



வெள்ளி, 3 மே, 2013

திருமணங்கள் பலவிதம்.


                                    திருமணங்கள் பல விதம்.
                                    -----------------------------------



 நேற்று ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தோம். திருமணங்களில்தான் இப்போதெல்லாம் உறவுகளைப் பார்க்க முடிகிறது. பார்க்க முடிகிறது என்று சொல்வதைவிட அறிமுகப் படுத்திக் கொள்ள முடிகிறது என்பதே நிஜம்.மாமாக்களும் அத்தைகளும், சித்தப்பா சித்திகளில் ஓரிருவரைத்தவிர பலரும் பரகதி அடைந்து விட்டதால் அவர்களின் அடுத்த தலைமுறையினர், இன்று சீனியர்களாகி கூடியவரையில் திருமணம் போன்ற விசேஷங்களுக்கு அழைக்கிறார்கள் .அப்படி அழைக்கப் பட்ட ஒரு திருமணம் ஆரிய சமாஜ் முறைப்படி நடந்தது. மணமகன் வெள்ளையினத்தவன். வரனும் வதுவும் காதலித்து முறைப்படி பெற்றோர் அனுமதியுடன் ( கொடுக்காவிட்டால் நிற்கவா போகிறது.?) திருமணம் நடக்க அது காணச் சென்றிருந்தோம். மந்திரங்கள் சமுஸ்கிருதத்தில் கூறப் பட . உடனே அதை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து விளக்கப் பட்டது. சடங்குகளின் காரணங்களும் விளக்கப் பட்டது.(வெள்ளைக்காரர்களுக்காக ஆங்கில மொழிமாற்றம்.!மற்றவர்களுக்கு எல்லாம் தெரியும் என்ற அனுமானம்.!) ஆனால் அந்த நிகழ்ச்சி அதன் solemnity இழந்து தமாஷாகவே அணுகப் பட்டது,போல் தோன்றியது. அங்கு மட்டுமல்ல, பெரும்பாலான திருமணங்களில் சடங்குகள் ஏதோ செய்ய வேண்டுமே என்பதுபோல் செய்யப் படுகின்றன.

முன் காலத்தில் இளவயதுகளில் திருமணம் செய்வித்தபோது, மணப்பெண்ணும் பையனும் ஒருவரை ஒருவர் நன்றாக விளையாட்டாக அறிந்துகொள்ள ஏற்படுத்தப் பட்ட நிகழ்ச்சிகளே, மாமன் தோளில் அமர்ந்து மாலை மாற்றுவதும், நலங்குக்கு தேங்காய் உருட்டி விளையாடுவதும், குடத்தில்கைவிட்டு மோதிரம் எடுப்பது போன்றவை இருந்திருக்க வேண்டும். அவற்றை ( just imagine the plight of those who shoukder the bride and groom  with their sixty kg weight.!) இன்று பார்க்கும்போது தமாஷல்லாமல் வேறென்ன.?

ஒரு திருமண விழாவுக்குச் சென்றபோது , முதலில் எனக்கு ஏதுமே விளங்கவில்லை. திருமணம் நடத்திவைக்கும் புரோகிதர் கழுத்தில் மாலையுடன் நின்றிருந்தார். கூட்டத்தில் நாங்கள் பின்னால் நின்றிருந்தோம். பிறகு பார்த்தால் புரோகிதரே பெண்ணுக்குத் தாலியும் கட்டினார். அப்புறம்தான் தெரிந்தது. அவர் புரோகிதர் அல்ல. அவர்தான் மாப்பிள்ளை என்று. .அந்த மாப்பிள்ளை இன்றைய ( அல்ல நாளைய ) சமுதாயத்தின் பிரதிநிதி என்று, குடுமி வைத்து, தாடியுடன் கடுக்கன் எல்லா அணிந்திருந்த அவர் ஒரு MNC-ல் ஒரு உயர்ந்த பதவியில் இருக்கிறார் என்று. Appearances can be deceptive  என்று விளங்குகிறது.நேற்றைய வழக்கங்கள் இன்றைய ஃபாஷனோ.?

இப்போதெல்லாம் திருமணத்துக்குச் சென்றால் உறவுகளுக்கு தேங்காய் வெற்றிலைப் பாக்குடன் வேறு பொருளும் அன்பளிப்பாகத் தருகிறார்கள். நாங்கள் நேற்று சென்ற திருமணத்தில் எங்களுக்கு ஒரு Bed spread-ம் இரு தலையணை உறைகளும் அன்பளிப்பாகக் கொடுக்கப் பட்டது. Can you beat it.?

புதன், 1 மே, 2013

சிந்திக்க ஒதுக்குங்கள் சில நொடிகள்.


                               சிந்திக்க ஒதுக்குங்கள் சில நொடிகள்.
                               ---------------------------------------------------
கேள்விகள்.
-----------------


1) ஜானியின் தாயாருக்கு மூன்று குழந்தைகள்.மூத்தவன் பெயர் ஏப்ரல், இரண்டாமவன் பெயர் மே. மூன்றாவது குழந்தையின் பெயர் என்ன.?

2) எவரெஸ்ட் சிகரம் கண்டுபிடிப்பதற்கு முன் உலகின் உயர்ந்த சிகரம் எது.?

3) இரண்டடிக்கு மூன்றடிக்கு நான்கடிக் குழியில் எவ்வளவு மண் இருக்கும்.

4) 1975-ல் ஜனாதிபதியின் பெயர் என்ன. ?

5) ஒரு ஓட்டப் பந்தயத்தில் இரண்டாவதாக வருபவனை நீ முந்தினால் நீ எந்த இடத்தில் இருப்பாய்?

6) ஒரு குடியானவனுக்கு ஒரு தளத்தில் மூன்று வைக்கோல் போற்களும் இன்னொரு தளத்தில் ஐந்து வைக்கோல் போற்களும் இருக்கின்றன. அவன் அவற்றை இன்னொரு தளத்தில் சேர்த்துவைத்தால் எத்தனை வைக்கோல் போற்கள் இருக்கும்.? 



7) ஒரு லாரி நிறைய பொருட்களுடன் ஒரு அண்டர்பிரிட்ஜ் அடியே செல்லவேண்டும். லாரியின் பொருட்களுடனான உயரம் பிரிட்ஜின் அடிபாகத்தை உரசும். அதே வழியில்தான் செல்ல வேண்டும். அன்லோட் செய்து போகக் கூடாது. என்ன செய்வீர்கள்.?


   பதில்கள் 
   --------


1)      ஜூன் அல்ல. ஜானிதான்.
2)      எவெரெஸ்ட்தான்.  அதை யாரும் கண்டு பிடிக்கவில்லை. அது ஏற்கனவே இருந்தது.
3)      குழியில் மண் ஏதும் இருக்காது. இருந்த மண் எடுத்ததால் குழியானது.
4)      இன்றுள்ள அதே பெயர்தான்.
5)      இரண்டாவது இடத்தில். இரண்டாமவனை முந்தித்தான் அந்த இடத்துக்கு வந்தாய்
6) ஒரே வைக்கோல் போற்தான் இருக்கும். முதலாவது, இரண்டாவது தளத்தில் இருந்த வைக்கோலை மூன்றாவது தளத்தில் சேர்த்து வைக்கிறான்.

7)  என்பேரக் குழந்தைகள் சொன்ன தீர்வு. லாரியின் நான்கு சக்கரங்களிலும் இருந்து கொஞ்சம் காற்றை இறக்கினால் லாரியின் உயரம் குறையும்.இடிக்காமல் போகலாம்.......! 
( சில சீரியசான பதிவுகளுக்குப் பிறகு ஒரு லைட்டான பதிவு...!)



திங்கள், 29 ஏப்ரல், 2013

வயது முதுமை சில விளக்கங்கள்.


                   வயது, முதுமை , -சில விளக்கங்கள்.
                  ---------------------------------------------------


மனம் நினைத்ததைச் செய்ய உடல் ஒத்துழைக்க வில்லை என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடேசெய்யாத குற்றம் எனும் பதிவும்  ஏன் ஏன் என்ற பதிவும்.திண்டுக்கல் தனபாலனுக்கு, எனக்கு மனதளவில் வயோதிகம் ஞாபகத்துக்கு வந்துவிட்டதோ என்ற சந்தேகம்.  முதுமை எனக்கு  ஒரு பொருட்டே அல்ல. இரண்டு ஆண்டுகளுக்குப்பின் இது மீள்பதிவாகிறது என்றால், மனதோடு உடலின் ஒத்துழைப்பு குறைகிறது என்றே பொருள். கோமதி அரசு, முதுமையை நான் சாபம் என்று எண்ணுகிறேனோ என்று கேட்கிறார்  .இல்லை  . தண்டனையோ என்பதுதான் என் கேள்வி. முதுமை பற்றிய எனது இன்னொரு பதிவும் நீங்கள் படித்தால் புரியும். உண்மையில் என் வாழ்விலேயே நான் மகிழ்வாயிருப்பதாகக் கருதுவது இப்போதுதான். இந்தியர்களின் சராசரி வயதையும் தாண்டி வாழ்க்கையை மிகவும் சுதந்திரமாக அனுபவிக்கிறேன். கிடைத்த அனுபவங்கள் ஏராளம். . பல செய்திகளை ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்



ஏன் என்று பல கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவில்லை. எல்லாம் தெரிந்ததுபோல் நினைக்கவும் முடியவில்லை. வலைத்தளம் ஒரு வரம். நினைப்பதை பகிர முடிகிறது. நான் சொல்ல வருவது சில சமயங்களில் சென்றடைகிறதா என்ற சந்தேகம் வரும். அதைப் பற்றியெல்லாம் இப்போது அதிகம் கவலை கொள்வதில்லை.


இதில் எங்கெல்லாம் தன்னிலையில் நான் என்று கூறுகிறேனோ அது என்னொத்த வயதுடையோருக்கும் பொருந்தும்.என்று நம்புகிறேன்
 இப்போது நான் மீள் பதிவுடும் முதுமையின் பரிசு எல்லோருக்கும் பொருந்துமா , தெரியவில்லை. முதுமையின் பரிசு என்னவென்றறிய  சொடுக்குங்கள் இங்கே

  
 

சனி, 27 ஏப்ரல், 2013

ஏன்....? ஏன்....?



                                                    ஏன்.....? ஏன்.....?
                                                     ---------------



அப்போது இவனுக்கு வயது ஆறிலிருந்து  பத்துக்குள் இருக்கும் அரக்கோண வாசம். வீட்டிற்கு இரவு படுக்க வருவது மட்டும் தவிர்க்க முடியாதது எந்த தடப வெப்ப நிலைக்கும் அஞ்சியதில்லை. சுட்டெரிக்கும் சூரியனும் வீசிக் கொடுக்கும் காற்றும். மாரியின் மழை பொழிவும் எல்லாமே மகிழ்ச்சி தந்தவை.

அதன் பிறகு அங்கும் இங்கும் இருந்து மலையரசியின் மடியில் நான்காண்டுகள் ஜீவிதம். வாட்டி எடுக்கும் குளிரிலும் காலுக்கு அணி ஏதுமிருக்காது. இதமளிக்கும் கம்பளி ஆடைகள் கிடையாது.குளிர்ந்த நீரில் குளித்து அரை நிஜாரில் பவனி வந்த நாட்களின் மகிழ்ச்சி இன்றும் நினைவில்.

அதன் பின் ஓய்வு பெற்றோரின் சொர்க்கம் எனப்படும் பெங்களூர் வாசம் சில வருஷம். அப்போதெல்லாம் உஷ்ணமானி டிகிரி 34—35—செல்ஷியஸ் தொட்டால் வானம் இருண்டு மழை நிச்சயம்.வியர்வை சிந்த உழைத்தாலும் வியர்க்காது. அதுவும் ஒரு காலம்.


நின்றால் சுடும் , சுவரைத் தொட்டால் சுடும், சீதோஷ்ணம் அதிக வெப்பம் மிக அதிக வெப்பம் என்று வந்தபோது பயமுறுத்திய திருச்சியில் பலவருஷ வாசம். அதன் நடுவில் BLAZEWADA என்று வெள்ளையர்களால் செல்லமாக அழைக்கப் பட்ட விஜயவாடா வாசம் நான்காண்டுகள். கோடையில் வெகு சாதாரணமாக 115 டிகிரி F.  கொளுத்தும். சுற்றிலும் கருங்கல் மலைப் பிரதேசம் .பகலை விட அதிக வெப்பம் இரவில் தாக்கும். வெட்ட வெளியில் அத்தனை வெப்பத்தையும் தலையில் இறக்கி பணி புரிந்ததும். நினைவலைகளில் மோதும்.  அவ்வப்போது நடு நடுவே நாக்பூர், டெல்லி என்றெல்லாம் பயணித்திருந்த அனுபவங்களும் நினைவில் வருகிறது. அணிந்திருந்த உடைகளை துவைத்து காயப் போட்டால், குளித்து வருவதற்குள் காய்ந்திருக்கும். 


இந்த நினைவுகள் எல்லாம் இப்போது ஏன் தாக்க வேண்டும்..? அன்றைக்கிருந்த  உடல்தான் இன்றும். மன நிலையும் ஏறத்தாழ அதேதான். இருந்தாலும் இப்போதெல்லாம் சீதோஷ்ண நிலைகள் சமாளிப்பதே என்பாடு உன் பாடு என்றாகிறது. மனம் என்ன நினைத்தாலும் உடல் ஒத்துழைப்பதில்லையே. மனம் விழைவதைச் செய்ய உடல் மறுக்கிறதே மனதை இளமையாய் வைக்க முடிகிறது.உடலின் மேல் control இல்லையே.. இந்த நாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே அது ஏன்....? ஏன்...? 
-------------------------------------------------------  

 


 

வியாழன், 25 ஏப்ரல், 2013

செய்யாத குற்றம்.-மீண்டும்.


                                         சில மீள் பதிவுகள்.
                                        -------------------------

சில பதிவுகள் எழுதி காலங்கள் கடந்தாலும், அன்று எழுதியபோது வாசகர்களாக இல்லாதிருந்தவர்கள் ,  இன்று அவற்றைப் படித்தால்  ரசிப்பார்கள் என்னும் நம்பிக்கையே அவற்றில் சிலவற்றை மீள்பதிவாக இடும்படித் தூண்டுகிறது. அதில் ஒன்று இதோ.