அனுபவி ராஜா அனுபவி --------- ஒரு சிறு கதை
"என்னடி அம்மா இது ! இந்த போஸ்ட்மேனை இன்னும் காணலை. இவனும் இவன் கொண்டுவந்து கொடுக்கும் பிச்சைக்காசும் ....எல்லாம் சவம்டியோ ....."அவனைப்பார்த்ததும் இந்த டயலாக்தான் சுந்தாவுக்கு நினைவுக்கு வந்தது .மேலத்தெருவில் பக்கத்து வீட்டில் இருந்த லட்சுமியம்மாளின் மகனல்லவா இது ? சதாசிவம் என்ற பெயரை வைத்துக்கொண்டு சதா எல்லோரையும் சவமாகத்திட்டுவானே ---- ஒ ! எத்தனை வருஷங்களாச்சு இவனைப்பார்த்து .ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகி இருக்கும்.." சதா... சதா.. " என்று சற்று உரக்கவே கூப்பிட்டான் சுந்தா.
"எந்த சவம்டா என்னை சதான்னு கூப்பிடறது ?" என்று சற்று உரக்கவே கூறி திரும்பியவனைப பார்த்ததும் சுந்தாவுக்கு அவன்தான் என்று நிச்சயமாகத தெரித்தது .
" ஐயாம் ஸாரி..... நான்தான் மேலத்தெருவில் ...உங்க பக்கத்து வீட்டு ...."
"சுந்தா ...! அடடா ..! நீயா அடையாளமே தெரியலியே ..."
பின்னே ... ஐம்பது வருஷம்னா சும்மாவா ..வாயேன் வீட்டுக்கு பக்கத்திலேதான் இருக்கு ..நிறையப் பேசலாம் "
"ஹூம் , என்னத்தப் பேசப் போறோம் , சரி வா ," என்று சற்றே சலிப்புடன் கூறிய
சதாசிவம் கொஞ்சமும் மாறவில்லையோ என்று தோன்றியது சுந்தாவுக்கு
மாசத்தின் முதல் நாளே போஸ்ட்மேனின் வரவை எதிர் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் லட்சுமி அம்மாளும் பிள்ளைகளும் . அன்றைக்கு இல்லாவிட்டால் மறு நாளாவது கட்டாயமாக மணியார்டர் வர வேண்டும் . கடன்காரர்களுக்கு எவ்வளவு நாள் வாய்தா சொல்ல முடியும் . கடன் வாங்காமல் இருக்கலாம் என்றால் முடியவா செய்யும் ? அந்த மட்டிலாவது குடும்பம் ஓடியது அவர்கள் வீட்டு மூத்த பிள்ளை கிச்சா
அனுப்பும் ரூபாய் நூறால்தான்..வீட்டிற்குப போகும் வழியில் பழைய எண்ணங்களில் நினைவோடியது .
"என்ன ஒரு சவமடி --மாத்திக்கட்ட நல்ல வேஷ்டியும் ஷர்ட்டும் இல்லாம---சே ! நான் ஒரு நல்ல ஸ்திதிக்கு வந்து ஒரு டஜன் வேஷ்டி ஒரு டஜன் ஷர்ட் ஒரு டஜன் பேன்ட் எல்லாம் வாங்கி ஆசை தீரப போட்டுக்கணும் ...இஷ்டப்படி சாப்பிட வேண்டும் ..வாழ்க்கையை நன்னா அனுபவிக்கணும் ".
சதாசிவம் இப்போது சுமாராக உடுத்தியிருந்தான் . பார்த்தால் ஓஹோ என்ற நிலைக்கு வந்த மாதிரித தெரியவில்லை .
வீட்டிற்கு வந்ததும் , "கமலா, இது சதாசிவம் . கிராமத்தில் எங்கள் வீட்டுக்கு அடுத்த வீடு . ஐம்பது வருஷங்களுக்குப பிறகு பார்க்கிறோம் .நல்ல காப்பி போட்டுக்கொண்டுவா ", என்று கூறி மனைவிக்கு அறிமுகப்படுத்தினான் .
" சொல்லு சதா .உன்னைப் பார்த்ததும் அந்தக் கால நினைவுகள் வந்து தாக்குகிறது .வீட்டில் எல்லோரும் சவுக்கியமா ....குழந்தை குட்டிகள் ....."
"நிறுத்து .. நிறுத்து ..நானே சொல்கிறேன் . எனக்கு வேலை கிடைத்த கையோடு அம்மா போய்ச் சேர்ந்து விடடாள். என்னோட துரதிர்ஷ்டம் நான் நன்னா இருக்கிறதப் பார்க்க அவளுக்கு கொடுத்து வைக்கவில்லை ,. என்ன இருந்து என்ன பயன் ? வாழ்க்கையை அனுபவிக்கவும் மச்சம் வேணும் "
சதா பேசப்பேச அவனுடைய அடிப்படைப் பிரச்சினை -- எதிலும் ஒரு விரக்தி ...கொஞ்சம் கூட மாறாமல் இருந்தது சுந்தாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. இதற்கு என்ன காரணம் என்று அறியும் ஆவலும் அதிகமாயிற்று .
" என்ன சதா சலிச்சுகறே....வாழ்க்கை வாழ்வதற்குத்தானே ! பெரியவனாகி சம்பாதிக்கும்போது அப்படி இருப்பேன் இப்படி இருப்பேன் என்றெல்லாம் சொல்லுவாயே "
"இல்லை சுந்தா . அது ஒரு கதை . நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்று எனக்கே புரியாத சவம் ..டா ."
சுந்தா அவனே மேலும் சொல்லட்டும் என்று மௌனமாக இருக்க சதாசிவம் தொடர்ந்தான்
" பார் , எனக்கு வேலை கிடைத்ததா ---வாழ்க்கையில் முன்னேறணும்னு அப்படி ஒரு வெறி .கண் மண் தெரியாமல் உழைத்தேன் . சப்பாதிக்கும்போது சரியாக சாப்பிடாமல் , தூங்காமல் வேலையே கதி என்றிருந்தேன் .அதற்கு நல்ல பலனும் கிடைத்தது .நான் இப்போது ஒரு நல்ல நிலையில் ஒரு கம்பெனியின் மேனேஜராக வேலை பார்க்கிறேன் .
சதாசிவம் ஒரு கம்பனியின் மேனேஜரா ? நம்பவே முடியவில்லை சுந்தாவுக்கு . ஒட்டிய கன்னமும் கூன் விழுந்த முதுகும இடுங்கிய கண்களும் பஞ்சத்தில் பரிதவிப்பவன் போலல்லவா இருக்கிறான் . உடை விஷயத்திலும் வெகு சுமாராகத்தான் இருக்கிறான்
ஒரு கம்பனியின் மேனேஜர் என்கிறாய் . பார்த்தால் ....."என்று சுந்தா சந்தேகம் தெரிவிக்க ,
"அதுதான் சொன்னேனே ,வாழ்க்கையை அனுபவிக்கவும் மச்சம் வேண்டும் என்று "
" அது உனக்கு இல்லையா ஏன்?
"சுந்தா , கஷ்டத்திலும் இல்லாமையிலும் இருந்தே பழ்ச்கிவிட்ட எனக்கு , நான் சம்பாதிக்கும் காசை செலவு பண்ண மனசு வரமாட்டேங்குது . ஐயோ எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிச்சது , இதை செலவு செய்யலாமா , நமக்கு தேவைதான் என்ன ... உடுக்க ஏதோ துணியும் உயிர் வாழ உணவும் போதாதா ? தேவைக்கு மேல் செலவு செய்பவன் எங்கோ ஒரு பிச்சைக்காரனையோ திருடனையோ உருவாக்கு கிறான் என்று காந்தி சொன்னதாகப்படித்த ஞாபகம் . அதுவுமில்லாமல் யாராவது
நல்ல முறையில் உடுத்தினாலோ நன்றாக சாப்பிட்டாலோ எனக்கு என்னையும் அறியாமல் அவர்கள் மேல் கோபம் வருகிறது. கஷ்டப்பட்டிருந்தால்தானே சுகத்தின் அருமை தெரியும் . இவர்கள் எல்லாம் கஷ்டப்படாமலேயே அனுபவிக்கிறார்கள் என்று பொறாமையாகக்கூட இருக்கும் . எனக்கே இது அவ்வளவு சரியில்லையோ என்று கூடத்தோன்றும் . இருந்தாலும் வாழ்க்கையை அனுபவிக்க சவம் - மனசு வர
மாட்டேன் என்கிறது "
சதாசிவம் சொல்லச்சொல்ல சுந்தாவுக்கு நினைத்துப் பார்க்கவும் முடியாத ஒரு கோணம் வாழ்க்கையில் இருப்பதும் தெரிந்தது . ஆனால் இப்படியுமா ?
----------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக