சனி, 11 டிசம்பர், 2010

நான் ஏன் பிறந்தேன்..?

நான்  ஏன்  பிறந்தேன் .?
------------------------
கலாநேசன்   பதிவில்   அழைப்பொன்று ,
கவிதைப் போட்டி  காட்டுங்கள்  திறனென்று,
நான்  ஏன்  பிறந்தேன்,
மூன்று  வார்த்தைகள்  மூன்று வரிகளில்
வருதல்  வேண்டும், அதுவே  விதி.

      சிறுவயது  முதலே  என்  தேடலின்  வரிகள்;
      நானும்   எழுதினேன்
      "நான்  நானாக   இருக்கையில்
       நீ   மட்டும்  வேறாக
       பிறந்தேன் (பிறந்து  ஏன் ) பழி தீர்க்கிறாய் "

"நான்" நானாகவும் "நீ" என் மனமாகவும்
நான் படும்  பாட்டை  பகிரவே
வந்து விழுந்த  வரிகள்
நாமெங்கு  பிறந்தோம் , நம் வரவே
ஒரு விபத்தின்  விளைவன்றோ ?
(பார்க்க  என் பிறிதொரு  பதிவை)

       நிலையிலா  வாழ்வில்  நான்  எங்குள்ளேன்.?
        என்  எண்ணில் "நான்" போனால்
        நலம்  பல விளையலாம்.

நன்கு  பழகிய  நண்பரொருவர்
நலமெலாம்  விசாரித்து  பிரிய  மனமின்றி
பிரியா  விடை  பெற்றுச்  சென்றார்.
மறுநாள்  காலை  வந்தது  சேதி ,
தூங்கச்  சென்றவர்  துயிலெழ வில்லை
நேற்றிருந்தவர்   இன்றில்லை
நிலையிலா   வாழ்வில்  என்றுமவர்   இனி
வெறும்  நினைவாகவே  திகழ்வார்.
பெயர் ஒன்று  கொண்டு  புவியில்   திரிந்தவர்
போகையிலே  வெறும்   பிணமே  வெறும் சவமே
கையில்  கடிகாரம்  கட்டினால்
காலத்தை  வென்றவர்  ஆவோமா ?
பிறப்பும்  இறப்பும்  நம் கையில்  இல்லை
இன்றிப்போது  காண்பதே  இறுதிக்  காட்சியாகலாம் .
இருக்கையில்  வேண்டுமா  காழ்ப்பும்  கசப்பும்.?

       ஏனென்று  கேள்வி  கேள்
       உன்னை  நீ அறியலாம்,
       உரைத்தவன்  சாக்ரடீஸ்

        உண்மை  உணர்வதே
       வாழ்வின்  நோக்கம்,
        கூறினான்  காந்தி.

      அயலவனை  நேசி
       உன்னிலும்  மேலாக
       என்றவன்  ஏசு.

உண்மையும்  நேசமும்  ஒன்றாக  இணைந்தால்
பிறந்த  காரணம்  புரியலாம்  ஒருவேளை .
-----------------------------------------------------    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக