Thursday, December 23, 2010

எது கல்வி. மறுபக்கம்.

எது கல்வி. மறுபக்கம்.
---------------------------------
            எது கல்வி என்று திரு.சுந்தர்ஜி அவர்களுடைய கைகள் அள்ளிய  நீரில் விரிவாக விவாதித்திருக்கிறார். நம் கண் முன்னே விரியும், நடக்கும், நமக்கும், ஏன்  சமுதாயத்துக்கும் ஒவ்வாத ஒவ்வொரு நிகழ்வும் மிகப்பெரிய தாக்கத்தை  ஏற்படுத்துகிறது. முடிந்தால்  இந்த  உலகத்தையே  புரட்டிப் போட்டு  மாற்ற வேண்டும்  என்ற வேகமும்  எழுகிறது. நியாயமானதுதானே. நியாயத்துக்கும்  தர்மத்துக்கும்  கட்டுப் பட்டு நடக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும்  ஏற்படும்    எண்ணக்குவியலே    அவை. இருந்தாலும் நடப்பவைகள்  எல்லாமே  தவறானவை  அல்ல. வேண்டத்தகாதவைகள்  அல்ல.  இன்னும்  சிறப்பாக இருக்கலாமே, நன்றாக  இருக்குமே என்ற ஆதங்கமும், விருப்பமும்தான் மனதில் தோன்றுவது .அவர் எண்ணமும் வேகமும் என்னால் புரிந்து கொள்ள  முடிகிறது. ஏனென்றால் அவரில், நான் என்னைக் காண்கிறேன். இருந்தாலும் இந்த வேகம்  மட்டும்  போதாது..இன்னும் சிறப்பாக  இருக்க என்ன  செய்யலாம், என்று எண்ணும்போது, கூடவே இருப்பதில்  எதெல்லாம்  நல்லது ,நன்மை  பயப்பது என்றும் நாம் சிந்திக்கவேண்டும்.

             நூறு சதவீதக் கல்விதான் இலக்கு. ஆனால் அது இன்னும் எட்டப்படவில்லை. ஆனால் அது செயல்படுவதற்கு ஆங்காங்கே விதைகள் தூவப் பட்டுள்ளன.,என்பதை  மறுக்க  முடியாது. நூற்றாண்டுகாலமாக  இன்னாருக்குத்தான்  படிப்பு, இன்னாருக்கு  அது கூடாது, என்ற ஆதிக்க  மனப்பான்மையில்  பெரும்பாலோருக்கு  எழுத்தறிவே  செல்ல  இயலாத  நிலை  இருந்தது. எல்லோரும்  படித்து  முன்னுக்கு  வந்துவிட்டால், சிலருடைய  ஆதிக்கத்துக்கு  முற்றுப்  புள்ளி  வந்துவிடும் என்ற நிலையில்  ஒடுக்கி  வைக்கப்பட்ட  மக்கள்  தொகை மிகவும்  அதிகமாக  இருந்தது. ஆயிரங்காரணங்களை
கூறி  அடிமைப் படுத்தப்பட்டிருந்தனர் .காரணங்களை நான் விவரிக்க  விரும்பவில்லை. ஆனால் எல்லோரும்  படிப்பறிவு  பெற்றால் சுயமாக  சிந்திக்க  துவங்குவார்கள்  என்ற பயம்  ஆண்டைகளிடம்  இருந்தது. அடிமைத்தளை  இறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு அஸ்திவாரம் பலப்பட,
அவர்களது  அலுவலகப்  பணிகளுக்கு  குமாஸ்தாக்கள்  தேவைப்பட மெகாலே  கல்வி  நடைமுறைப்  படுத்தப்பட்டது. இதெல்லாம் சரித்திரம்.

              நாம் இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது சிந்திக்கத் தூண்டும்  கல்வி மறுக்கப் பட்டதே. கல்வி கற்றவர்கள் சிந்திக்கத் துவங்கி நாடு அடிமைத் தளையிலிருந்து விடுபட்டதும் வரலாறு.

              நம்மை  நாமே  ஆளும்போது ,நாம் எல்லோரும்  சமம்  எனும்போது , வாய்ப்புகளும்  சமமாக  இருக்க வேண்டும். வாய்ப்பு  வேண்டிப்  போராட  கல்வி அறிவு  அவசியம். அதுவும் பரவலான  நூறு   சதவீதக்   கல்வி அவசியம்.  நாம் படித்தவற்றை
பகுத்தறிந்து   உணர்ந்தால் அறிவுள்ளவர்களாக  ஆவோம். படித்தவர்கள்  எல்லோரும்    அறிவுள்ளவர்கள்  அல்ல. படிக்காதவர்கள்  அனைவரும்  அறிவில்லாதவர்களும் அல்ல.
ஆனால் ஒருவனை  அறிவாளியாகக படிப்பறிவு மிகவும் உதவும்.

              தற்சமயம்  நிலவி வரும் சூழ்நிலையில் கேக்   ஊட்டப்பட்டு   ஊக்கப்படுத்தப்   படுபவர்கள்  முகவரி  தெரியாமல்  போய்விடுகிறார்கள்  என்ற அச்சமும்  கல்வியறிவே  காசு கொண்டு  வாங்கப்பட  வேண்டிய  அவல நிலையில் நாம் உள்ளோம்  என்ற கவலையும்  இருப்பது சகஜம்

               மேலே குறிப்பிடப் பட்டுள்ள பிரிவில் படாமல் எந்த ஒரு உந்து   சக்தியும் இல்லாமல்  படித்துயர்ந்து  வந்தவர்களும்  ஏராளம்  உண்டு. நகரங்களில்  வசிக்கும்  நம் கண் முன்னே படுவது  கான்வென்ட்  படிப்பும்  கூடவே வரும் அதிக  செலவினங்களும்தான் .இல்லாதவன் தன  தலைமுறைக்குப்  பிறகு  தன பிள்ளைகள்  நன்றாக   இருக்கவேண்டும்  என்று பாடுபடுவதையும்  பார்க்கிறோம்.  இயற்கைதானே.  ஆனால் கான்வென்ட் படிப்பும் ஆங்கிலப்  படிப்பும்தான்  மேலானது  என்ற ஒரு மாயத் தோற்றத்துக்கு  அடிமையாகும்போதுதான்  சந்திக்கும்  இன்னல்கள்  ஏராளம்

               எழுத்தறிவும் கல்வியறிவும்   பரவலாக்கப்பட்டால் சுயமாக சிந்திக்கும்   திறனை அவர்கள் வளர்த்துக்கொள்வார்கள்.  முனிசிபல், கார்ப்பரேஷன்  பள்ளிகளில்  படித்துப்  பெயர் வாங்கும்  சிறார்  சிறுமிகளும்  இருக்கிறார்கள்.,என்பது நமக்குத்  தெரிந்ததே. நாம் எந்த   ஒரு விஷயத்தையும்  விவாதிக்கும்போது  மிடில்  கிளாஸ்  மேன்டாலிடியைத்தான் அளவு கோலாகப்  பயன்படுத்துகிறோம். ஏழை பாழைகளின்  கருத்தைக்  கேட்கவோ  எடுத்துச் சொல்லவோ  நம்மில் பலரும்  முன்  வருவதில்லை   இந்நிலையில் நூறு சதவீத எழுத்தறிவும்  படிப்பறிவும்  இருநதால்  அவர்களை  அவர்களே  மேம்படுத்திக்  கொள்வார்கள்

               நான் ஒரு முறை லலிதாம்பிகா   கோவிலுக்குச் செல்ல  திருமீயச்சூர்  சென்றிருந்தேன்  அங்கு  பள்ளிக்கு  சென்று வர  சீருடை  அணிந்த  சிறுவர்  சிறுமிகள்  சைக்கிளில்  செல்வதைக் கண்டபோது மனசுக்கு  கொஞ்சம்  உற்சாகமாக  இருந்தது.  பசியாற  மதிய  உணவு, சீருடை, மற்றும்  சென்றுவர  இலவச  சைக்கிள்  இவை எல்லாம்  கல்வியறிவு  பரவலாகச்  செய்யும்  உந்து  சக்திகள்தானே. மேலும்   தற்போது
கல்வி உரிமைச்  சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள் . இதன்படி  எல்லாப்  பள்ளிகளிலும் ( தனியார் உட்பட ) 25% இடங்கள்  ஏழைகளுக்கு  ஒதுக்கப்படவேண்டும் .
கல்வி போதிக்கும்  முறையில் ஏற்ற  தாழ்வு  குறைந்து  சம வாய்ப்பு   கிடைக்கும்  ஒரு திட்டம் .ஆனால் இதை  நடைமுறைப்படுத்த  ஏகப்பட்ட  எதிர்ப்புகள்.  இந்த எதிர்ப்புகளுக்கு  எதிராக  குரல்  கொடுப்போம்.

             சாதாரணமாகவே  இந்தியக்  குடிமகன்  லேசுப்பட்டவன்   அல்ல. அவனை  இன்னும் சக்தி   உள்ளவன் ஆக்க பரவலான கல்வியறிவு   அடிப்படை  அவசியம்.

             கல்வியை  வியாபாரமாக்கும் கும்பலுக்கு  நாம்தான்   துணை போகிறோம். அரசு  பள்ளிகளை  ஆதரித்து ,அதன்  தரம்  உயர  நாம் ஏன்  பாடுபடக்கூடாது. ?செல்வி. மாதங்கி  மாலி  சொல்லியதுபோல, There is a breed of race  horses.and I add  there  is a rat race.
========================================= .    .  .      .   
 .     

3 comments:

 1. உங்கள் கட்டுரை அபாரமான தளங்களுக்கு விரிகிறது பாலு சார்.

  உங்களில் என்னைக் காண நான் கொடுத்து வைத்தவன்.

  கல்வி கற்பிக்கப்படுவதில் ஏது தவறு? நூறு சதம் என்பது வேறுவகையான இலக்குகளைத்தான் நிணயிக்கிறது.

  அப்பனுக்கு வேலை செய்யும் நோக்கத்தை முற்றிலுமாகத் தவிர்த்துவ்ட்டு குடிக்கவும் வீட்டுக்கு இலவச அரிசி, தொலைக்காட்சி என்று பிள்ளைகள் வீட்டுக்குள் நுழைந்தால் படிப்பைத் தொடர முடியாத சாதகமற்ற சூழலை உருவாக்கும் அரசுகள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன.

  உழைத்து மேலேறித் தன் பையனை அவன் படிக்க வைப்பான். யாருக்கு யார் இலவசம் கொடுப்பது?
  வேலைவாய்ப்புக்களை உருவாக்க அரசு உண்மையாய் முனையட்டும்.

  சமையல் எரிவாயுவுக்கு எல்லோருக்கும் மான்யம். யார் கேட்டது?

  நன்றாகக் கவனித்தீர்களானால் நான் சாடியிருப்பது கல்விமுறையைச் சுற்றியுள்ள வியாபாரிகளைப் பற்றியதுதான்.

  எது சரியான கல்வியாய் இருக்கும் என்பதையும் எழுதுவேன்.எல்லோருக்கும் கல்வி தேவை என்பதற்கும் நூறு சதக் கல்வி என்பதற்கும் வித்தியாசமிருக்கிறதாய் உணர்கிறேன் பாலு சார்.

  ReplyDelete
 2. அன்பு சுந்தர்ஜி,உங்கள் பதிவில் நான் எழுதிய சில வரிகளுக்கு உங்கள் ம்றுமொழியால் நான் சிறிது வேதனைப்பட்டது உண்மை. வலைப்பூவில் பதிவுகள் என்ற என் கட்டுரைக்கு நீங்கள் எழுதிய வரிகளை மீண்டும் ஒரு முறை படியுங்கள். கூடவே திரு. அப்பாதுரையின் கருத்துகளையும் படியுங்கள்’எழுத்தின் வெளிப்பாடு பலசமயம் பலவித புரிதல்களை ஏற்படுத்தக்கூடியதால், படிப்பவரும் திறந்த மனத்தோடு அடிப்படை நம்பிக்கையோடு படித்தால், இணையத்தில் அருமையான கலந்தெழுத்தாடல்களில் கலந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்” என்று எழுதியிருந்தார்.நான் என்றும் என் கருத்துகளை எடுத்துச்சொல்ல தயங்கியதில்லை.எனக்கு யாருடைய தன்மானத்தையும் புண்படுத்தும் எண்ணமும். இல்லை.All is well that ends well.

  ReplyDelete
 3. இன்று கல்வி ஒருவனின் பொருளாதரத்தை ஆட்டிபடைக்க கூடியதாக இருக்கிறது என்பதில் யாருக்கும் அய்யம் இல்லை. ஆனால் அதை எதிர்த்துக் குரல் கொடுக்க யாருக்கும் துணிவும் இல்லை. சமச்சீர் கல்வி எவ்வளவு அவசியமோ அதே அளவிற்கு இங்கு இலவசக் கல்வியும் அவசியம். கல்வியை இலவசம் ஆக்க முடியுமா என்பது அனைவருக்கும் எழக்கூடிய கேள்வியே. எல்லாம் சாத்தியாமே, சுலபம் இல்லை எனினும். தனியார் பள்ளிகளை நம்பாமால் அரசுப் பள்ளிகளை நம்பி தங்கள் குழந்தைகளை அனுப்ப வேண்டும். (தனியார் பள்ளியில் படித்துக்கொண்டே டியூஷன் போகும் அவலம் வேறு நம் ஊரில் உண்டு). ஆனால் அதற்கு மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.முந்தைய நூற்றாண்டில் மக்களுக்காக தலைவன் போராடுவான். ஆனால் இப்பொழுதோ ஒவ்வொருவரும் தலைவர்களாக தங்களுக்கு தானே போராட வேண்டியுள்ளது!

  ReplyDelete