Sunday, February 20, 2011

விடியலுக்காக காத்திருக்கிறேன்

விடியலுக்காக காத்திருக்கிறேன். 
----------------------------------------------

          எப்பொருளையும் ஆக்கவோ அழிக்கவோ இயலாது.
          ஆக்கலும்  அழித்தலும் வெறும் தோற்றமே.,
          உண்மையோ முன்பிருந்த நிலையின் மாற்றமே.
          இது விஞ்ஞானம்  கூறும் தேற்றமே. 

இருளும் ஞாயிறும் விடியலும் 
மாற்றமிலா நிகழ்ச்சி போல் தோன்றினும், 
நேற்று போல் இன்றில்லை, இன்று போல் 
நாளையில்லை,இது நாமறியும் உண்மையே. 

           விஞ்ஞானக் கூற்று உண்மையாயின், 
            நேற்றிருந்த என் அப்பன் என்னானான்.?
            யாதாக மாறினான்.?உடலம் வெந்து 
            சாம்பலாயிருக்கலாம், இல்லை மண்ணில் 
            மக்கிக் காணாதிருக்கலாம்.ஆனால்,
           அப்பனாக எனக்குத் தெரிந்த அவன் 
            எங்கே என்னவாக மாறினான்,?

இன்று  நானாக அறியப்படும் நான் நாளை 
என்னாவேன், சாம்பலோ மண்ணோ  அல்லாமல்.
உயிரென்ற ஒன்று இருந்ததால்தானே 
என் அப்பன்  அப்பனாகவும், நான் 
நானாகவும் அறியப்படுகிறோம்.?
அந்த உயிரென்று அறியப்படுவது எங்கே உள்ளது.?
ஆன்மா என்றழைப்பின்  அதுவும் எங்கே  உள்ளது. ?
யுகயுகமாய் உலவி வந்த உயிர்களின் ஆன்மாக்கள் 
எண்ணிக்கையில் மாற்றம் இருக்கக் கூடாதே, 
விஞ்ஞானக் கூற்றுப்படி, விஞ்ஞானம்  விளங்க வில்லை. 

            ஊனென்றும் உயிரென்றும் ஆன்மா என்றும், 
            ஆயிரம்தான் கூறினாலும், அதெல்லாம் ஒன்றின் 
           வியாபிப்பே என்று மெய்ஞானம் கூறுகிறது. 

அறிந்தவர்கள் என்று அறிந்தவர்கள் கூறும் 
மெய்ஞான சூக்குமம் வசப்படும் முன் நானும் 
மண்ணோடு மண்ணாய்  மக்கிப் போவேன். 
அறிய முற்படுவோர் நிலையும்  அதுதான். 

            என்றோ எவனோ வரைந்து முடித்த வட்டத்தின் 
            தொடக்கப்புள்ளி தேடி ஏன் சோர்வுற வேண்டும்.?
            அறியாமை இருளில் இருப்பதே சுகம். 

அண்ட வெளியே இருட்டின் வியாபிப்பு 
அதில்  ஒளி  தருவதே ஞாயிறின் ஜொலிப்பு 
அறியாமையும் அவலங்களுமாய் இருண்டிருக்கும்
வாழ்வியலில் நம்பிக்கையே ஞாயிறின் ஒளி.

             ஹேஷ்யங்களும் கேள்விகளும் எனைத் துளைக்க 
             ஞாயிறின்  விடியலுக்காகக் காத்திருக்கிறேன். 
          ==============================================
  
 

21 comments:

 1. அம்மாடியோவ்.... யாருக்கு கிடைக்கக்கூடும் இதற்கான பதில்கள்..

  ReplyDelete
 2. அறிவியலையும், ஆன்மீகத்தையும் கேள்வி கேட்டு, அந்த இரண்டையும் குழைத்து கொடுத்திருக்கிறீர்கள். விடை தெரியா வினாக்களை எழுப்பியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 3. மயக்கம் தெளியவைக்கும் உங்கள் முயற்சியில் நான் மயங்கிப்போய்...

  ReplyDelete
 4. //அந்த உயிரென்று அறியப்படுவது எங்கே உள்ளது.?
  ஆன்மா என்றழைப்பின் அதுவும் எங்கே உள்ளது. ?//

  இதெல்லாம் கேள்வி கேட்டு பதில் சொல்வதில்லை, ஜிஎம்பீ சார்! அது இதுவோ என்று சலனமாக உணரப் படுவது.. உணர்ந்ததும் போக்குக் காட்டி இதுவில்லையோ என்று மயங்க வைப்பது. வார்த்தைகளால் விவரித்து இன்னொருத்தருக்குச் சொல்லமுடியாது, வியக்க வைப்பது. தானே தன்னுள் தோண்டி தானின் தரிசனம் காண்பது.
  கிட்டத்தட்ட இரண்டு பாகம், 90-க்கு மேலான அத்தியாயங்கள். என் பதிவில் 'ஆத்மாவைத் தேடி..'சுயதேடலாய் நீண்டிருக்கிறது. என்ன எழுத முயற்சித்தும் 'அ..ஆ'-வன்னா முதல் படியிலேயே நிற்பதாக உணர்வேற்படுகிறது..

  ReplyDelete
 5. "..ஆலையந்தோறும் அலைந்து திரிந்தது போரும் போரும்
  மனதாலயம் தன்னில் அரனாரிருப்பதைப் பாரும் பாரும்
  உன் தெய்வம் என்தெய்வம் என்று உழன்றதும் போரும் போரும்
  தன்னுள் தெய்வம் என்றெண்ணி இருப்பதைப் பாரும் பாரும்
  ஓதிப் படித்ததோர் மந்திர கர்மங்கங்களும் போரும் போரும்
  புத்தி யுக்தி அனுபவத்தால் முக்தி கிடைத்ததைப் பாரும் பாரும்..."

  --- ஆவுடையக்காளின் அமர வரிகள்.

  நன்றி: கபீரன்பனின் kabeeran.blogspot.com

  ReplyDelete
 6. இது ஒரு தொடர்கதை...விடை தெரியாத தேடல்....:-)

  ReplyDelete
 7. அய்யா அசத்துங்க.. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. கேள்விக்குள் பதிலை மறைத்து
  பதிலுக்குள் கேள்வியை விதைத்துச் செல்லும்
  உங்கள் பதிவு அருமை
  'உங்களைத் தொடர்வதில் பெருமிதம் கொள்கிறேன்
  வாழ்த்துக்களுடன்

  ReplyDelete
 9. ஆனால்,அப்பனாக எனக்குத் தெரிந்த அவன் எங்கே என்னவாக மாறினான்,?

  சாம்பலை தின்ற செடியாக இருக்கலாம்,.. நாம் அப்பனையே தேடுவதால் நம் கண்களுக்கு அது தெரிவதில்லை,.. ஒரு உயிரில் இருந்துதான் இன்னொரு உயிர் வர வேண்டும் என்பது அறிவியல் நியதி,..

  ReplyDelete
 10. //அறியாமை இருளில் இருப்பதே சுகம். //

  அறியாப்பிள்ளைகளுக்கு உங்களின் கடந்த அனுபங்களை புகட்டுங்கள் ,.. அவர்கள் முகத்தில் தெறிக்கிற சந்தோசத்தை பாருங்கள்,.. அதுதான் பரமசுகம்,..

  ReplyDelete
 11. //ஹேஷ்யங்களும் கேள்விகளும் எனைத் துளைக்க ஞாயிறின் விடியலுக்காகக் காத்திருக்கிறேன்.///

  அருமை,.. சிந்தனைகளும் எழுத்தின் ஆக்கமும்,..

  ReplyDelete
 12. ஆகா
  எத்தனை யோசிக்க வேண்டிய கேள்விகளும்
  எதார்த்தமான பதில்களும்
  அருமை ஐயா.

  தமிழும் இலக்கணமும்
  எதுகையும் மோனையும்
  ஒரு ஒரு பத்தியிலும் விளையாடுகிறது.
  வணக்கங்கள் ..

  ReplyDelete
 13. "ச‌ற்றே சும்மாயிரும் பிள்ளாய்"
  இருக்க‌ முடிய‌லையே ஐயா.
  ஒன்று, இர‌ண்டுன்னு தொட‌ங்கி
  இருப‌தாயிர‌ம், ல‌ட்ச‌ம் கோடின்னு
  ஓடிட்டே இருக்கோம், திசை மாறி.
  க‌ம்யூக்க‌ள் அழ‌காய் செல்வ‌து போல்,
  " ம‌ரங்க‌ள் அசையாதிருக்க‌ ஆசைப் ப‌ட்டாலும்,
  காற்று விடுவ‌தில்லையே" என் செய்ய‌?

  ReplyDelete
 14. என் பதிவுக்கு வருகை தந்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.ரமணி கூறுவதுபோல் கேள்விக்குள் பதிலும் பதிலில் கேள்வியுமாகத்தான் என் பதிவு எழுதியுள்ளேன்.ஜிவிக்கு ஒன்று கூற விரும்புகிறேன்.தன்னுள் தோண்டி தானிiன் தரிசனம் காண விழையும்போது, தன்னுள் ஒரு தான் இருப்பதாக எண்ணிக்கொண்டே தேடுகிறோமோ?இதுவோ அதுவோ என்று போக்கு காட்டும் ஒன்றை தன்னுள் தேடுதல், இந்த வாழ்வில் இயலாதது. மனிதாலயத்தில் அரனாயிருந்த எனும்போது, ஏதோ ஒன்றை முடிவாய் நினைத்து தேடுதல் போலாகும் . என் கூற்றை சற்றே கவனமாய்ப் பாருங்கள் அண்டமே ஒன்றின் , இருட்டின் வியாபிப்பு என்ற மெய்ஞானப்படி தேடுவதும், உயிரென்பதும் ஆன்மா என்பதும் எண்ணிக்கையில் மாற்றமில்லாதிருக்க வேண்டும் என விஞ்ஞானப்படி அறிவதும், வரைந்து முடித்த வட்டத்தின் துவக்கப் புள்ளியை தேடுவது போன்ற பலன் தராத ஒன்று. ஆகவே இருளில் இருப்பதே சுகம், நம்பிக்கையே ஞாயிறின் ஒளி என்று கூறி என்னை நானே தேற்றிக் கொண்டு அந்த விடியலுக்காக காத்திருக்கிறேன் என்றே கூறியுள்ளேன்.

  ReplyDelete
 15. தேடலின் நிழல் நீண்டு செல்கிறது ஒளி தேடி.பின் ஒளி மங்கி நிழல் மடிந்து ம்ற்றொரு விடியலுக்காய்க் காத்திருக்கிறது.

  அது எதுவென நினைக்கிறோமோ அது அதுவில்லை.

  புதிரும் விடையும் ஒன்றில் ஒன்றெனப் பிணைந்து படரும் இவ்வாழ்க்கையின் சக்கரத்தை நான் என் மகனிடம் கொடுத்துச் செல்வேன்.அவன் கேள்விகள் மேலும் தொடர அவன் மகனிடம் கொடுத்துச் செல்ல மெல்ல உருளும் நில்லாச் சக்கரம்.

  ReplyDelete
 16. எப்பொருளையும் ஆக்கவோ அழிக்கவோ இயலாது.
  ஆக்கலும் அழித்தலும் வெறும் தோற்றமே.,
  உண்மையோ முன்பிருந்த நிலையின் மாற்றமே.
  இது விஞ்ஞானம் கூறும் தேற்றமே.

  //இதுதான் மாயை. இதை உணர்தலே மெய்ஞானம்.//

  ReplyDelete
 17. யோசிக்கவேண்டியகேள்விகள், யதார்த்தமான பதில்கள். அசத்தல்.

  ReplyDelete
 18. சுந்தர்ஜி, காத்திருந்தேன் கடைசியில் வந்துவிட்டீர்கள் நன்றி. டாக்டர் ஐயாவுக்கு வருகைக்கு நன்றி. கோமு அவர்களுக்கு முதல் வருகைக்குநன்றி. தொடர்ந்து வந்து ஊக்கமளியுங்கள்.

  ReplyDelete
 19. This comment has been removed by the author.

  ReplyDelete
 20. தயவு செய்து இந்தக் கேள்விகளுக்கான விடையை உங்களுக்கு உள்ளே தேட முயற்சிக்கவும்.
  எத்தைகைய விஞ்ஞானியாலும் இதற்கெல்லாம் விடை சொல்ல முடியாது

  ReplyDelete