ஞாயிறு, 27 நவம்பர், 2011

என்னை நானே உணர வை......

                                     என்னை நானே உணர வை.
                                     -------------------------------------

ஆண்டொன்று கூட அகவை ஒன்று கூடுகிறது.
அதோடு சில வேண்டாத குணங்களும் கூடுகிறது..
ஆண்டவனே, நான்வேண்டுவதெல்லாம்-என் பேச்சைஅடக்கு
 எங்கும் எதிலும் என்னை வெளிப்படுத்த விரும்பும்
என் எண்ணங்களுக்குக் கடிவாளம் இடு.

மற்றோரின் குறைகளுக்கு தீர்வு கண்டு அதை
நீக்க முயலும் என் முனைப்புகளை உடை.

எல்லாவற்றையும் அடிமுதல் நுனி வரை ஆராய
நினைக்கும் என் மேதாவித்தனத்தை மாற்றிவிடு.

வட்டமாய் சிறகடித்து மேலிருந்து கீழே நேராய்
இரையை நாடும் பறவையைப் போல் சொல்ல
நினைக்கும் புள்ளியை நானடையக் கற்றுக்கொடு.

நான் படும் வேதனைகளை, வலிகளை
அடுத்தவன் முன் கொட்டித் தீர்க்க நான் வாய்
திறந்தால் அதனை அக்கணமே மூடிவிடு.

அடுத்தவனுக்கு உதவிட என்றும் நினைக்க வை கூடவே
 நானும் தவறிழைக்கலாம் என என்னையும் எண்ண வை.

நான் பட்ட அனுபவங்கள் ஏராளம் இருக்கலாம்.
படிப்பினைகள் ஆங்காங்கே கிடைத்தாலும் கிடைக்கலாம்.
அவரவர் வாழ்க்கை அவரவரே வாழ வேண்டும்.

இவ்வையகம் விட்டு நான் அகலும்போது என்னை
நண்பனாய், நல்லவனாய் நினைக்க நால்வர் வேண்டும்.
                             -----------------------------------------


புதன், 23 நவம்பர், 2011

கணவன் ..விற்பனைக்கு.

                                           கணவன் விற்பனைக்கு...
                                          ----------------------------------

(எனக்கு ஒரு மின்னஞ்சல்  வந்தது.  யான் பெற்ற பேறு பெருக இவ்வையகம்.
 தமிழ் படுத்தி இருக்கிறேன்.)


நியூ யார்க்கில் புதிதாக ஒரு விற்பனையகம் தொடங்கப் பட்டது
அங்கு கணவர்கள் விற்பனைக்கு என்று அறிவிக்கப்பட்ட பலகை
யில் கணவரைத் தேர்ந்தெடுக்க சில விவரங்கள் இருந்தது.

நீங்கள் ஒரு முறைதான் கடைக்கு வருகை தரலாம். 


ஆறு மாடிகள் உள்ள இக்கட்டிடத்தில் கணவர்களின் தகுதிகள்
ஒவ்வொரு மாடியின் நுழைவாயிலில் எழுதப்பட்டு இருக்கும். 
அங்கிருந்து ஒருவரை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.அல்லது
அடுத்த மாடிக்குச் சென்று அங்கிருந்து தேர்ந்தெடுக்கலாம். ஒரு 
மாடியிலோ அல்லது அடுத்த மாடியிலோ கணவரை வாங்கலாம்.
ஆனால் ஒரு விதி.! ஒரு தளத்தை விட்டு வெளியே வந்தால் 
மீண்டும் அத்தளத்துக்கு வர அனுமதி கிடையாது 


ஒரு பெண் கணவனை வாங்க அக்கடைக்குச் சென்றார். முதல் 
தளத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது


தளம்..1.:-இதிலுள்ள ஆண்கள் பணியிலிருப்பவர்கள். கடவுளை 
                   நேசிப்பவர்கள். (இதை விட்டு அடுத்த தளம் சென்றாள்)

தளம் 2:- இதிலுள்ள ஆண்கள் பணியிலிருப்பவர்கள் கடவுளை 
                  நேசிப்பவர்கள். குழந்தைகளிடம் அன்பாயிருப்பார்கள் 
                  (இதையும் விட்டு அடுத்த மாடிக்குச் சென்றாள். )


தளம் 3:-இதிலிருக்கும் ஆண்கள் பணியிலிருப்பவர்கள்.கடவுளை 
                 நேசிப்பவர்கள் குழந்தைகளிடம் அன்பாயிருப்பார்கள்.
                 அழகாயிருப்பார்கள். 


”வாவ்.  மேலே பார்க்கலாம் . எப்படி என்று “ என நினைத்துக்
கொண்டே நான்காவது மாடிக்கு வருகிறாள்.

தளம் 4:-இதிலுள்ள ஆண்கள் பணியிலிருப்பவர்கள்.கடவுளை 
                நேசிப்பவர்கள்.குழந்தைகளிடம் அன்புள்ளவர்கள்.
                வசீகரிக்கும் ஆணழகர்கள். வீட்டுப் பணிகளில் உதவி
                செய்வார்கள்.


ஆர்வம் மேலிட அடுத்த தளத்தில் என்ன சிறப்பு என்றறிய
ஐந்தாவது மாடிக்கு வருகிறாள். விழிகள் விரியப் படிக்கிறாள்.


தளம் 5:-இதிலுள்ள ஆண்கள் பணியில் இருப்பவர்கள். கடவுள் 
                 பக்தி உள்ளவர்கள். குழந்தைகளிடம் பிரியமாய் இருப்
                 பவர்கள். வசீகரிக்கும் ஆணழகர்கள் விட்டு வேலை
                 களில் ஒத்தாசை செய்பவர்கள். சிறந்த காதலர்களாக
                 இருக்கும் தகுதி பெற்றவர்கள். 


அடுத்த மாடியில் இன்னும் சிறந்த கணவன் கிடைக்கலாம் ,
என்னும் எதிர்பார்ப்புடன் ஆறாவது தளத்துக்குச் செல்கிறாள்.
அங்கே....


தளம் 6:-நீங்கள் இத்தளத்துக்கு வரும் 4,363,012-ஆவது நபர். 
                இந்தத் தளத்தில் கணவர்கள் விற்பனைக்கு இல்லை
                பெண்களை திருப்தி செய்ய முடியாது என்று நிரூபிக்
                கவே இந்த மாடி.


                கணவர்களை விற்பனை செய்யும் கடைக்கு நீங்கள் 
                வருகை புரிந்ததற்கு நன்றி. படிகளில் இறங்கும் போது
                கவனமாயிருங்கள். இது நல்ல நாளாயிருக்கட்டும்.
                 ------------------------------------------------------------------------------- 


  
                   

சனி, 19 நவம்பர், 2011

விபரீத உறவுகள்...

                            விபரீத உறவுகள் ( ஒரு சிறு கதை )
                            -------------------------------------------------    
                                             
( பதிவுலகில் ஒருவர் படம் எடுக்கப் போவதாகவும்,அதற்கு கதை தேர்வு செய்ய, 
  கதாசிரியர்களிடம் மனுப் போடும்படிக் கேட்டிருப்பதாகவும், செய்தி வந்தது. 
  கதைக்கான பாத்திரங்களும் நிகழ்வுகளும் கண் முன்னே விரிய கதை சொல்ல 
  நான் தயாராகிறேன் )


          ஆசுபத்திரியில் அவர் படுத்திருக்கிறார். தற்கொலை முயற்சி
இத்தனைக்கும் அவர் ஒரு மருத்துவர். ஏதோ வீரியம் இல்லாத
மருந்தைக் குடித்து வாந்தி எடுத்துக் கீழே விழ அவரைப் பார்க்க
வந்த அவருடைய நோயாளி வாடிக்கையாளர் யாரோ அவரை
அந்த ஆசுபத்திரியில் சேர்த்ததாகத் தெரிகிறது.

ஒரு ஃப்ளாஷ்பேக்:-  

          மருத்துவரும் அவருடைய தமக்கை என்று சொல்பவரும்
அவரது ஒரு மகன் மகளுடன் குடியிருக்கவும், மருத்துவம்
ப்ராக்டிஸ் செய்யவும், இடம் தேடிவர, “வீடு வாடகைக்கு “என்ற
போர்ட் போட்டிருந்த வீட்டின் அழைப்பு மணியை அழுத்துகிறார்
கள்.கதவு திறந்தவுடன், ‘ நமஸ்காரம். மாடிவீடு காலியாக இருப்
பதாகச் சொன்னார்கள்.அதான் பார்க்கலாம் என்று.....” என்று
இழுத்தார்.

          வீட்டு சொந்தக்காரர் அவர்களைஒரு முறை பார்த்துவிட்டு,
“ உள்ளே வாருங்கள். நீங்கள் யார்.?உங்களைப் பற்றிய விவரங்கள்
சொல்லுங்கள். எங்களுக்குத் திருப்தியாக இருந்தால் வீட்டைக்
காட்டுகிறோம்”,என்றார்.

           “நான் ஒரு டாக்டர். நல்ல இடம் கிடைத்து நான் தொழில்
செய்தால் என்னால் பலரும் பயனடைவார்கள்”

           “இப்போது எங்கு ப்ராக்டிஸ் செய்கிறீர்கள்.?”

          ”தற்சமயம் மங்களூர் பக்கம் இருக்கிறேன்.இது என் அக்கா.
கண்வனை இழந்தவர். இரண்டு வளர்ந்த பிள்ளைகள்.இங்குதான்
பக்கத்தில் இருக்கிறார். நான் இங்கு வந்து மருத்துவம் ப்ராக்டிஸ்
செய்தால்,அவர்களுக்கும் உதவியாக இருக்கும். “

          “ஐயா, எனக்குத் தெரியாத ஊரிலிருந்து வருகிறீர்கள்.யார்
என்றும் தெரியாது. எப்படி சீடு கொடுக்க முடியும்.?”

          “இதே ஊரில் ஒரு தொழில் நிறுவனம் நடத்தும் ஒருவர்
எங்களுக்குப் பரிச்சயம். அவருடன் வருகிறோம். அவர் எங்களுக்கு
உத்தரவாதம் தருவார். அவருடன் நாளை வருகிறோம்.”என்று
சொல்லி அவர்கள் அனைவரும் கிளம்பினர்.

           சொன்னபடியேஅடுத்த நாள் அந்த தொழில் அதிபருடன்
அவர்கள் வந்தனர். அந்தத் தொழில் அதிபரையும் வீட்டுச் சொந்தக்
காரருக்குத் தெரியவில்லை.அவரும் அவரைப் பற்றிக் கூறிவிட்டு
அவருடைய விசிடிங் கார்ட் ஒன்றையும் கொடுத்தார். வந்தவர்கள்
நல்லவர்கள் என்றும் ,தவறாது வாடகை தருவார்கள் என்றும்
அதற்கு அவர் உத்தரவாதம் என்றும் கூறினார்.

         சிலருக்கு முகராசி என்று ஒன்று உண்டு. ஏதோ ஒரு
விதத்தில் மற்றவர்களை ஈர்க்கும் சக்தி உண்டு. இந்த மருத்துவர்
(இனி இவரை வைத்தியர் என்றேஅழைப்போம்.)ஆயுர்வேத
சிகிச்சையில் நிபுணராம். மசாஜிங் ,உழிச்சல் என்று ஏதேதோகூறி
வீட்டு சொந்தக்காரரை வீடு வாடகைக்கு விட சம்மதிக்க
வைத்தார்.

         நல்ல வாட்டசாட்டமான தேகம். மாநிறத்துக்கும் சற்றே
கூடுதல் நிறம். எப்பொழுதும் சிரிப்பு தவழும் முகம். மொத்தத்தில்
வீட்டுக்கு குடி வந்த சில நாட்களிலேயே சுற்று வட்டாரத்தில்
பிரபலமானார். ஏன், தூரத்து இடங்களிலிருந்தும் அவரைத் தேடி
வந்து சிகிச்சை பெற்றனர். வைத்தியருடைய சிகிச்சை கொஞ்சம்
காஸ்ட்லி விஷயம்தான். சாதாரணமாக மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகள் போலல்லாமல், நடக்க முடியாதவர்கள் , கொஞ்சம்
கைகால் விளங்காதவர்கள் ,ஏன் ஓரளவு மனநிலை பாதிக்கப்
பட்டவர்கள்கூட இருந்தனர். சில நோயாளிகளை வீட்டிலேயே
தங்க வைத்து ஒரு வாரம் பத்து நாட்கள் என்று சிகிச்சை அளிப்பார்.
மற்றபடி வந்து போகிறவர்கள்தான் அதிகம். அவருடைய தமக்கை,
அவர் பெண் வைத்தியருக்குக்கூடமாட ஒத்தாசைசெய்தனர் ஓரிரு
மாதங்களில் வைத்தியரின் வாழ்க்கை நிலையே மாறிவிட்டது.
வைத்தியர் எங்கும் நடந்து செல்ல மாட்டார். நோயாளிகளின்
உறவினர்கள் அவருக்கு ஆட்டோ ரிக்‌ஷாவோ, டாக்சியோ ஏற்பாடு
செய்து விடுவார்கள்.
     
          வீட்டு சொந்தக்காரருக்கு பல சந்தேகங்கள்.வைத்தியம்
பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகமில்லாவிட்டாலும்
செலவு செய்ய வைக்கும் வைத்தியமே தொழிலாயிருந்தது.
இருந்தாலும் வைத்தியர் வீட்டில் வாஷிங் மெஷின், டிவீ,ஃப்ரிட்ஜ்,
உயர்ரக சோஃபா செட்கள், கட்டில்கள் எல்லாம் ஒன்றன்பின்
ஒன்றாய் வர ஆரம்பித்தது. வைத்தியரிடம் கேட்டே விட்டார்.

         “உங்கள் வருமானம் தொழிலிலிருந்து கிடைப்பது மட்டும்
தானா..இல்லை வேறு ஏதாவது சட்ட விரோதமாகச் செய்கிறீர்
களா. ? ஏனென்றால் பிற்பாடு எனக்குப் பிரச்சனையாகக் கூடாது
அல்லவா..அதனால்தான் கேட்கிறேன்.”

         “ஒவ்வொரு பைசாவும் தொழில் செய்து கிடைப்பதுதான்.
என்னிடம் மருத்துவம் செய்வது செலவு பிடிக்கக் கூடியது.
வேண்டுமானால் டீவி விளம்பரங்களில் வருகிறதே சில டாக்டர்
களுடைய மருத்துவம் பற்றி. விசாரித்துப் பாருங்களேன் “என்று
பதில் கூறிவிட்டார்.

        ஒரு நாள் வைத்தியரிடம் அவருக்குக் கல்யாணம் ஆயிற்றா
என்று கேட்டபோது, “எனக்கு வயது நாற்பது;கல்யாணமாகி இரு
குழந்தைகள் இருக்கிறார்கள். என் மனைவி என்னைவிட நன்கு
படித்தவர். பணக்காரி;என்னுடன் வாழப் பிடிக்காமல் பிள்ளை
களுடன் ஊரில் தனியே இருக்கிறார் “ என்றார்.

        “விவாகரத்து செய்து மறுமணம் செய்து கொள்ளலாமே ..
யோசிக்கவில்லையா.”

        “யோசனை இருக்கிறது. எனக்கு இங்கிருக்கும் என் அக்கா
மகளிடம் ஒரு ஆசை. அவளுக்கும் என்னிடம் விருப்பம்தான்.
எப்படி செயல்படுத்துவது என்று தெரியவில்லை :எனக் கூறினார்.

        அதற்கு வீட்டுக்காரர், “நான் வேண்டுமானால் உங்கள் அக்கா
விடம் பேசட்டுமா ?”என்று கேட்டார்.

         “வேண்டாம் ,வேண்டாம் அதற்கு நேரம் இன்னும்
வரவில்லை ”என்று தடுத்து விட்டார்.

         இருந்தாலும் வீட்டுக்காரர் சும்மாயிருக்கவில்லை. ஒருநாள்
அந்த அக்காளின் மகனிடம் ( இவன் பெரியவன் )அவன் தங்கைக்
கல்யாணம் பற்றி யோசிக்கவில்லையா என்று கேட்டார். அவனும்
அதற்கு”நேரம் காலம் கூடி வந்தால் செய்துவிட வேண்டியதுதான்”
என்றான்.

         ”ஏன் உன் மாமாவுக்கே உன் தங்கையைக் கலியாணம் செய்து
கொடுக்கலாம் இல்லையா.?”என்று வீட்டுக்காரர் எடுத்துக்
கொடுத்தார்.

         ”செய்து கொடுக்கலாம்தான் ஆனால் அம்மா இதற்கு சம்மதம்
தருவார்கள் என்று நம்பிக்கையில்லை “என்று பதில் கொடுத்தான்
அதற்கு மேலும் அவர்கள் சொந்த விஷயங்களில் தலையிடுவது
சரியாகாது என்று அந்தப் பேச்சை வீட்டுக்காரர் அத்துடன் விட்டு
விட்டார்.

            ஒரு நாள் வைத்தியரைத் தேடி ஒரு பெண்மணி வந்தாள்.
வைத்தியர் மணப்பெண் கேட்டு விளம்பரம் செய்ததாகவும் அவரை
பார்த்துப் பேசிவிட்டுப் போகலாம் என்று வந்ததாகவும் அந்தப்
பெண்மணி கூறினாள்.முப்பது முப்பத்தைந்து வயதுக்குள்
இருக்கலாம். குட்டை முடியுடன் பௌடர்,லிப்ஸ்டிக், எல்லாமும்
சேர்ந்த நவநாகரீக மங்கையாகத் தோன்றினார். அவள்
வைத்தியரைப் பார்க்கச்சென்ற சில நிமிடங்களிலேயே
அவசரமாகத் திரும்பிச் சென்று விட்டார்.

           அன்றிரவு பத்து மணியளவில் வைத்தியர் வீட்டிலிருந்து
“ஐயோ..ஐயோ.”என்ற சப்தம் கேட்டு வீட்டுச் சொந்தக்காரர் மேலே
ஓடிப்போய்ப் பார்த்தார். வைத்தியர் அக்காளின் மகனை மிதித்துக்
கொண்டிருந்தார்.அவரை விலக்கி விட்டு சற்றுக் கோபமாகவே
“இந்த மாதிரித் தொடர்ந்தால் உங்களை வீட்டைக் காலி செய்யச்
சொல்ல வேண்டி வரும் “ என்று எச்சரித்துவிட்டு வந்தார்.

           மறுநாள் காலை வைத்தியர் “இது மாதிரி இனி நடக்காது.
நான் உத்தரவாதம். சின்னப் பையன் பெரிய வார்த்தைகளால்
என்னைச் சீண்டினான்.அதுதான் நான் அப்படி நடக்க நேர்ந்தது.
மன்னித்துக் கொள்ளுங்கள்”என்று கேட்டுக் கொண்டார்.

           எல்லாக் குடும்பங்களிலும் மனஸ்தாபங்களும் சண்டை
சச்சரவுகளும் அவ்வப்போது நடப்பதுதானே என்று வீட்டுசொந்தக்
காரரும் சமாதானப் பட்டுக் கொண்டார்

          அன்று மாலை அந்த அக்காளின் மகளைக் காணவில்லை.
வைத்தியரும் அந்தப் பையனும் எங்கெல்லாமோதேடினர்.பெண்
கிடைக்கவில்லை. அதற்கு அடுத்த நாள் வைத்தியருக்கு சிபாரிசு
செய்த தொழில் அதிபரின் வீட்டில் அந்தப் பெண் இருப்பதாகத்
தகவல் வந்தது. அந்த அம்மாளிடம் பெண் வீட்டை விட்டுப் போன
தற்குக் காரணம் கேட்டபோது,அவர்கள் வீட்டுச் சொந்தக்காரர்
வீட்டுக்குள் வந்து ஏதோ சொல்ல ஆரம்பித்தார். அதைப் பார்த்த
வைத்தியர் ஓடிவந்து அவருடைய அக்காளைத் தரதரவென
இழுத்துக் கொண்டு போய் விட்டார். சற்று நேரத்தில் அந்த
அக்காளின் அலரல் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அவர்
வீதிக்கு வந்து சத்தம் போட ஆரம்பித்து விட்டார். அழுது அலறி
சத்தம் போட்டது பெரிதில்லை. ஆனால் அவர் கூறிய
வார்த்தைகள் யாருமே எதிர் பார்க்காதது.

          “என்னை வைத்துக் கொண்டு ,காப்பாற்றுகிறேன் என்று
கூட்டிக் கொண்டு வந்து , இப்போது என் மகளையே மணம் பேசக்
கேட்கிறாயே,உனக்கு அம்மா போதாததற்கு மகளும் வேண்டுமா”
என்ற ரீதியில் ஊரைக் கூட்டி சத்தம் போட்டுக் கொண்டேயிருந்
தார். அவருடைய பேச்சும் அதன் முழு அர்த்தமும் விளங்குவ
தற்கே அங்கிருந்தவர்களுக்கு நேரம் தேவைப் பட்டது. அந்த
அம்மாள் அன்று வீட்டுக்கு வரவில்லை.

            இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வைத்தியருக்கு
அவமானம் அதிகமாயிற்று. போதாததற்கு வீட்டுச் சொந்தக்காரர்
இனி அந்த வீட்டில் அவருடைய அக்காள் என்று சொல்லிக்
கொண்டவருக்கு இடமில்லை என்றும் , கூடிய சீக்கிரத்தில்
வைத்தியரும் வீட்டைக் காலி செய்ய வேண்டுமென்றும்
கண்டிப்பாகக் கூறிவிட்டார்.

          வைத்தியரின் அக்காவை பல நாட்களுக்கு யாரும் பார்க்க
வில்லை. வைத்தியரும் வீட்டைக் காலி செய்து அதே தெருவில்
சற்றுத் தொலைவில் இன்னொரு வீட்டுக்குக் குடி போய் விட்டார்.

          வைத்தியரைத் தேடி நிறைய பேர் வரத் தொடங்கினார்கள்.
நிறையப் பேரிடம் கடன் வாங்கி இருந்திருக்கிறார். வீட்டு
வாடகைப் பத்திரத்தைக் காட்டி, (PROOF OF ADDRESS) நிறைய
வங்கிகளிலும் கடன் வாங்கி இருக்கிறார். அவர் வாங்கிய
( மருமகனுக்கு )மோட்டார் சைக்கிளுக்கு தவணை கட்டாததால்
அதனை மீட்க இரண்டு மூன்று அடியாட்கள் அவரைத் தேடிக்
கொண்டிருந்தனர். க்ரெடிட் கார்டுக்குப் பணம் கட்ட ஏகப்பட்ட
கடிதங்கள் வர ஆரம்பித்தன.

          இதன் நடுவே வீட்டு சொந்தக்காரர் சில நாட்கள் வெளியூர்
செல்ல வேண்டி இருந்தது திரும்பி வந்தபோது கேட்டசேதிதான்
முதல் பாராவில்கண்டது. சரி ,அவரைப் பார்க்கலாம் என்று
ஆசுபத்திரிக்குப் போனால் வைத்தியர் யாரிடமும் சொல்லிக்
கொள்ளாமல் எஸ் ஆகியிருந்தார்.
---------------------------------------------------------------------------


.








  
.









   

புதன், 16 நவம்பர், 2011

கடவுளோடு ஒரு உரையாடல்....

                               கடவுளோடு ஒரு உரையாடல்..
                              --------------------------------------------
( கனவொன்று கண்டேன்.அதில் கடவுளைக் கண்டேன். 
  அவருடன் உரையாடினேன். விழித்துப் பார்த்தேன். கண்டது 
  அனைத்தும் தெளிந்தும் தெளியாமலும் உள்ளத்தில் ஓட, 
  காகிதத்தில் எழுதி வைத்தேன்.உங்களிடம் பகிர்கிறேன். ) 


கடவுள்:-என்னைக் கூப்பிட்டாயா.?

நான் :-    கூப்பிட்டேனா.? இல்லையே...யார் நீங்கள் .?

கடவுள்:-நான் தான் கடவுள். உன் வேண்டுதல்கள் எனக்குக்
                  கேட்டது.உன்னுடன் கொஞ்சம் உரையாடலாமே
                  என்று வந்தேன்.

நான்:-    நான் அவ்வப்போது வேண்டுவது உண்டு. வேண்டும்
                போது மனம் லேசானதுபோல் தோன்றும். இப்போது
                 நான் மும்முரமாய் ( BUSY )இருக்கிறேன்


கடவுள்:-நீ எதில் மும்முரமாய் இருக்கிறாய்.? எறும்புகளும்தான்
                  வேலையில் மும்முரமாய் இருக்கின்றன..

நான்:-    தெரியவில்லை. ஆனால் எனக்கு நேரம் கிடைப்பது
                 இல்லை. வாழ்க்கை எப்போதும் ஒரே ஓட்டமாய்
                 இருக்கிறது

கடவுள்:-உண்மைதான். செயல்பாடுகள் (ACTIVITIES )உன்னை
                 மும்முரமாக்கும். பயன்பாடுகள் (PRODUCTIVITY )பலனை
                 தரும்.செயல்பாடுகள் நேரத்தைக் குடிக்கும். பயன்பாடு
                 அந்தத் தளையிலிருந்து விடுவிக்கும்.

நான்:-    புரிகிறார்போல் இருக்கிறது. இருந்தாலும் பூராவும்
                 விளங்க வில்லை. எப்படியானாலும் நீங்கள் பேசவருவீர்.
                கள் என்று நான் எண்ணவில்லை.

கடவுள்:-உன் நேரத்துக்கு எதிரான போராட்டத்துக்கு தீர்வு
                 காணவும்,சில தெளிவுகளைச் சொல்லவும் வந்துள்ளேன்

நான்:-    வாழ்க்கை ஏன் இவ்வளவு சிக்கலாக இருக்கிறது.?

கடவுள்:-முதலில் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்வதை நிறுத்து.
                  வாழ்க்கையை வாழ். அதை ஆராய்ச்சிசெய்வதே அதை
                  சிக்கலாக்கும்.

நான்:-    ஏன் வாழ்க்கை எப்போதும் சந்தோஷமாக இல்லை.?

கடவுள்:-உன்னுடைய இன்று பற்றி, நேற்றின் நாளையாய் இருந்த
                  போதேஆராயத் தொடங்கி விட்டாய்.ஆராய்ந்து கவலைப்
                  படுவதே உன் வாடிக்கையாகிவிட்டது அதுவே நீ மகிழ்ச்சி
                  யாக இல்லாததன் காரணம்.

நான்:-     இவ்வளவு நிச்சயமில்லாத்தன்மை இருக்கும்போது
                  எப்படிக் கவலைப்படாமல் இருக்க முடியும்.?

கடவுள்:-நிச்சயமின்மை தவிர்க்க இயலாதது. கவலை தேவை
                  இல்லாதது; தேடிக்கொள்வது.

நான்:-     நிச்சயமின்மை வலி தருகிறதே.

கடவுள்:-வலி தவிர்க்க முடியாதது; ஆனால் வேதனையாக
                  எண்ணுவது நாமே தேடுவது. ( PAIN IS INEVITABLE. BUT
                  SUFFERING IS OPTIONAL )

நான்:--  வேதனையால் வாடுவது நாம் தேடுவதென்றால் ஏன்
                 எப்போதும் நல்லவர்கள் கஷ்டப் படுகிறார்கள்.?

கடவுள்:-வைரம் அறுக்கப்படாமல் பளபளப்பாகாது,மின்னாது.
                  தங்கம் நெருப்பில் புடம் போடாமல் புனிதமாகாது.
                  நல்லவர்கள் சோதனைக்கு உள்ளாவார்கள்,ஆனால்
                  வேதனைப்பட மாட்டார்கள். வாழ்வின் அனுபவங்கள்
                 அவர்களை சிறப்பிக்கும். கசப்பிக்காது.

நான்:-    இந்த வெதனைகளும் சோதனைகளும் உதவும் என்று
                 சொல்கிறீர்களா.?

கடவுள்:-அனுபவம் ஒரு ஆசான். அவன் முதலில் தேர்வு வைத்து
                  பின் அதன் மூலம் பாடம் கற்பிக்கிறான்.

நான்:-    இருந்தாலும் நாம் ஏன் இந்த சோதனைகளுக்கு உட்பட
                 வேண்டும். ?இவற்றிலிருந்து விடுபட முடியாதா.?

கடவுள்:-சோதனைகள் என்பது, மனோதிடத்தை அதிகரிக்க 
                  உதவும் ,விதிக்கப்பட்ட தடைக் கற்கள் தரும் 
                  பாடங்களே. போராட்டங்களிலும் சகிப்பிலுமே மன
                  வலிமை வரும். சோதனைகள் இல்லாதபோது அல்ல.

நான்:-    உண்மையில், இவ்வளவு வேதனைகளுக்கு உள்ளாகியும்
                 எங்குதான் போகிறோம் என்பதே புரிவதில்லை.

கடவுள்:-புறமே தேடினால் போகுமிடம் தெரியாது. உன் அகத்தில்
                  தேடு. வெளியே தேடினால் கனவாய்த் தெரியும். உள்ளே
                  தேடினால் காட்சிகள் விரியும். கண்களால் காண்பது
                  பொருட்களின் காட்சி. இதயக் கண் காட்டும்
                  பொருண்மையின் மாட்சி.

நான்:-     நேரான வழியில் செல்வதைவிட, வேகமாக வெற்றி
                  கிடைக்காதிருப்பதே நோகிறது. இதற்கு என்ன செய்ய.?

கடவுள்:-வெற்றி என்பது மற்றவர் தரும் குறியீடு. கடக்கப்போகும்
                   பாதையை உணர்ந்து, நீ நிர்ணயிக்கும் திருப்தி எனும்
                  வெற்றியின் அளவுகோல் கடந்துவந்த பாதையினால்
                  ஏற்பட்டதைவிட சிறப்பாக இருக்கும்.நீ திசைமானியை
                  உபயோகி. மற்றவர்கள் கடிகாரத்தை உபயோகிக்கட்டும்.

நான்:-     கஷ்ட காலங்களில் எப்படி திசை நோக்கி நிற்பது.?

கடவுள்:-கடக்கப்போகும் பாதையைவிட கடந்து வந்த பாதையை
                  கணக்கில் கொள்.உனக்குக் கிடைத்த வரங்களை
                  எண்ணில் கொள்.கிடைக்காததையும் தவறவிட்டதையும்
                  நினைத்துத் தளராதே.

நான்:-     மக்களிடம், உன்னை ஆச்சரியப் படுத்துவது எது.?

கடவுள்:-கஷ்டங்களை அனுபவிக்கும்போது “ ஏன் எனக்கு “
                  என்பவர்கள் வளர்ச்சி யடைகையில் ”எனக்கு ஏன் “ என்று
                  கேட்பதேயில்லை. உண்மை அவர்கள் பக்கம் இருப்பதை
                  விரும்புவோர் அநேகர். உண்மையின் பக்கம் இருப்பதை
                  விரும்புவோர் சிலரே.

நான்:-   சில நேரங்களில்“ நான் யார்.? நான் ஏன் இங்கிருக்கிறேன்?”
                 என்று கேள்வி எழுகிறது. பதில்தான் கிடைப்பதில்லை.

கடவுள்:- நீ யார் என்று கேள்வி கேட்டு வீணாகாதே. நீ யாராக
                   வேண்டும் என்று தீர்மானி. ஏன் வந்தேன் என்று
                   கேட்காதே. காரணத்தை ஏற்படுத்து. வாழ்க்கை என்பது
                   கண்டுபிடிப்புகளின் ( DISCOVERY ) தொகுப்பல்ல.
                  தோற்றுவிப்பின் செயல்பாடே. (WORK OF CREATION.)

நான்:-      வாழ்வில் ஏற்றமளிக்க ,பலன் கிடைக்க என்ன செய்ய
                   வேண்டும்.?

கடவுள்:-கடந்த காலத்தை கலக்கமில்லாமல் உணர்ந்து கொள்.
                  நிகழ் காலத்தை ஊக்கத்துடன் அணுகு. வருங்காலத்தை
                  தைரியமாக எதிர்கொள்.

நான்:-     கடைசியாக ஒரு கேள்வி சில நேரங்களில் என் வேண்டு
                 தல்களுக்கு விடை கிடைப்பதில்லை என்று
                 உணர்கிறேன்.

கடவுள்:-விடை கிடைக்காத பிரார்த்தனைகள் என்று சொல்வதை
                  விட, விடை “ இல்லை “ என்பதே பதிலாயிருக்கும்.

நான்:-    உங்கள் வரவுக்கும் அறிவுரைக்கும் நன்றி.புதுப்பொலி
                வுடன் ஒவ்வொரு புது நாளையும் எதிர் கொள்வேன்.

கடவுள்”-நன்று. பயத்தைக் களை. நம்பிக்கையை தக்கவை.
                  சந்தேகங்களை நம்பாதே. நம்பிக்கையை
                  சந்தேகிக்காதே.
                  -----------------------------------------------------------------------      


 



திங்கள், 14 நவம்பர், 2011

மன(பய) சாட்சி........ நாடகம்

                        மன ( பய ) சாட்சி ( ஒரு நாடகம் )
                         --------------------------------------------
                                     ( ஒரு மாற்றத்துக்கு. )


கதாபாத்திரங்கள்:- கனகசபை--( தந்தை )
                                        வேதா--------( மனைவி )
                                        சபாபதி-------( மகன் )
                                        குடுகுடுப்பைக்காரன். 


காட்சி--1.     இடம்-- கனகசபை வீடு.
    ( திரை உயரும்போது வீட்டு ஹாலில் சோபாவில் ஒரு
ஓரமாக ஒடுங்கி கனகசபை உட்கார்ந்திருக்கிறார்.அவர்
மனைவி வேதா வருகிறார்.)

வேதா:-  என்னாச்சு உங்களுக்கு.?நானும் பார்க்கறேன் கொஞ்ச
                 நேரமா ஏதோ பித்து பிடிச்சாப்போல உக்காந்திருக்கிங்க.
                 ஒடம்புக்கு ஒன்னும் இல்லியே.?

கனக:-  ஒடம்புக்கு என்ன கேடு. அது எங்கெ போனாலும் கூடவே
                வருது கழுதை...மனசுதான் படபடப்பா இருக்கு...

வேதா:-மனசு படபடப்பா...உங்களுக்கு மனசுன்னு ஒண்ணு
                இருக்கா என்ன.? தலைக்கு மேலே ஆயிரம் வேலை
                இருக்கு. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு
                ஒரு பிள்ளை. அவனுக்கு காலா காலத்துலெ ஒரு
                கலியாணம் பண்ணி வைக்கணும்னு தோணலியா.?

கனக:-  அட ..யார்ரா இவ...மனசு கெடந்து படபடக்குதுன்னு
                சொல்றேன்...கழுதைக்கு கலியாணமொண்ணுதான்
                பாக்கி.

வேதா:-எதுக்கு படபடப்பா இருக்குன்னு சொல்லித் தொலைக்க
                வேண்டியதுதானே. இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி
                மூஞ்சிய வெச்சுக்கிட்டு சோபா மேல உக்காந்திருக்கறதப்
                பாத்தா ஏதாவது தெரியுமா.?

கனக:- அத எங்க சொல்லவிட்டெ நீ. ! நம்ம ஃப்ரெண்ட் பரமசிவம்
               தெரியுமில்லையா...அவன் போலீஸுலெ கம்ப்லைண்ட்
               கொடுத்திருக்கானாம்.

வேதா:-யாரு...? அந்த பட்டாசுக் கடை பரமசிவமா....அவன்
                கடையே கதின்னு இருந்தீங்களே..எதுக்கு போலீசாம்..?

கனக:- அவன் கடைல பட்டாசு திருட்டுப் போயிடுத்தாம்.பிராது
               கொடுத்திருக்கான்..எல்லாம் என் தலைவலி...

வேதா:-அவன் ப்ராது குடுத்தா உங்களுக்கு ஏங்க தலைவலி..?

கனக:-நான் அவன் கடைக்கு அடிக்கடி போவேனா..அதான்....
              பயம்மா இருக்கு...

வேதா:-நீங்க எதுக்கு பயப்படணும் ?நீங்க என்ன..பட்டாசு
                திருடினீங்களா.?

கனக:- ஐயோ வேதா சத்தமா பேசாதே யாருக்காவது கேக்கப்
               போவுது.( அப்போது நாயொன்று குரைக்கும் சப்தம்
               கேட்கிறது. கனகசபை இன்னும் பயந்து )பொலீஸ்ல
               இருந்து நாயெல்லாம் வருமா... அந்தக் கதவைச்
               சாத்தேன். ( வேதா தலையிலடித்துக்கொண்டு கதவை
               சாத்தப் போகிறாள் )
                                                 (திரை)

காட்சி:-2        இடம்.:- கனகசபை வீடு.
                           பாத்திரங்கள்:-கனகசபை, சபாபதி, குடுகுடுப்பை

              ( திரை உயரும்போது நாய் குரைக்கும் சத்தம் கேட்டு
                 கனகசபை சோபாவில் இன்னும் ஒடுங்கிக் கொள்ள
                வெளியே குடுகுடுப்பைக்காரன் )

குடுகுடு:- நல்லகாலம் பொறக்குது..நல்லகாலம் பொறக்குது.
                   ஜக்கம்மா சொல்றா.. மல போல வந்த கஷ்டம் பனி
                   போலப் போயிடும். ஐயாவோட தாராள மனசு ஐயாவ
                   காப்பாத்தும்.  நல்ல காலம் பொறக்குது,நல்லகாலம்
                   பொறக்குது.

கனக:-     டேய்..சபாபதி.அந்த நாயை வெரட்டுடா...சனியன்
                  கொரச்சுக் கொரச்சு உயிரெடுக்குது

சபா :-     ஐயோ...அப்பா...அது குடுகுடுப்பைக்காரனப் பாத்துக்
                 குரைக்குது. நீ ஏன் பயப்படரெ...

கனக:-.  ஆமா...நான் ஏன் பயப்படறேன்னு ஒங்கிட்ட வெலா
                 வாரியா சொல்றேன். சுத்த இவனாயிருக்கியே
                ( கொஞ்சம் யோசிக்கிறார். திடீரென்று அவர் முகம்
                  பிரகாசமடைந்து .அவர் உள்ளே போய் ஒரு வேட்டி,
                  சொக்காய், மேல்துண்டு,எல்லாவற்றையும் எடுத்து
                  வந்து குடுகுடுப்பைக்காரனுக்குக் கொடுக்கிறார்.)

குடுகுடு:-நல்லகாலம்பொறக்குது, ஐயாவுக்கு நல்ல காலம்
                   பொறக்குது.தாராள மனசுக்கு எந்த கொரையும்
                   இருக்காது.தேவி ஜக்கம்மா சொல்றா, நல்லகாலம்
                  பொறக்குது.

சபாபதி:-அப்பா... என்ன பண்றீங்க..இப்பத்தானே வாங்கினெ
                  அந்த வெட்டியும் சொக்காயும்...அதைப் போய் இந்த
                  குடுகுடுப்பைக்காரனுக்குக் கொடுத்திட்டு...அம்மா..
                  இந்த அப்பாவுக்கு என்னாச்சு..?

வேதா:-( வந்துகொண்டே)அதாண்டா எனக்கும் தெரியல..
                  நேத்துலேந்து உங்கப்பா ஒரு மாதிரியா இருக்கார்.
                   இப்பப்பாரு நல்ல துணிகளெ குடுகுடுப்பைக்குக்
                   கொடுத்திட்டு...

கனக:-   ஐயோ வேதா.நான் எது செய்தாலும் ஒரு காரணத்
                 தோடுதான் செய்வேன்.பட்டாசுக்கடை பரமசிவம்
                 போலீசுல பிராது கொடுத்திருக்கான் இல்ல..போலீஸ்
                 ஒருசமயம் நாயோட வந்தா.....

வேதா:- வரட்டுமே..உங்களுக்கென்ன...நீங்க திருடினீங்களா.?

கனக:-  ஐயோ அதுக்கில்ல வேதா...நான் அவன் கடைக்கு
                அடிக்கடி போறவன்.அந்த நாய்க்கு எங்க தெரியப்போகுது.
               அது என்னைக் காட்டிக் கொடுத்திட்டா..அதுதான்
                அன்னக்கி போட்டிருந்த துணிகள குடுகுடுப்பைக்குக்
                கொடுத்திட்டேன். ..இப்ப அந்த நாய் என்ன செய்யும்....?

சபாபதி:-அப்ப உங்க ஜட்டி பனியன் எல்லாம் சேர்த்தில்ல
                கொடுத்திருக்கணும்.

கனக:- இவன் ஒருத்தன்..என்னை ஏண்டா பயமுறுத்தறே...
              ( நாய் குரைக்கும் சத்தம் கேட்டு அலறி உள்ளே ஓடுகிறார்.
                                                             (திரை )

காட்சி-3.        இடம்-கனகசபை வீட்டுப் பின் புறம்
                           பாத்திரங்கள் - கனகசபை, வேதா.

               (திரை உயரும்போது, கனகசபை வீட்டின் பின்புறம்
                ஒரு மரத்தின் மேல் ஏற முயற்சிக்கிறார்.)

வேதா:-என்னாச்சு இந்த மனுஷனுக்கு....இந்த வயசில மரத்தில
                ஏறிண்டு...

கனக:- சபா சொன்னானே, இந்த ஜட்டி பனியன என்ன பண்றது?
              அத மரத்து மேல வச்சிட்டா...நாய்க்கு மரம் ஏற முடியுமா..
              அதான்....

வேதா:-டேய் ..சபா..இங்க வா..நீ போய் அந்த பட்டாசுக்கடை
               பரமசிவத்துக்கிட்ட கேளு..போலீசில என்ன பிராது
               கொடுத்திருக்கார்ன்னு...

கனக:- வேற வெனையே வேண்டாம்..நீயே என்னைக் காட்டிக்
               கொடுத்திடுவ போலிருக்கே...தீபாவளிக்குப் பட்டாசு
               வெடிக்கணும்னு ஆசை. ஆனா அது விக்கிற வெலயில
               வாங்கிக் கட்டுப்படியாகுமா..?அதான் கொஞ்சம்
               அள்ளிட்டு வந்தேன். போதும்டா சாமி...இப்படி பயந்து
                சாகறத விட , அத அவங்கிட்ட அப்படியே கொடுத்திட்டு
                மன்னிப்பும் கேட்டுடறேன். ( அப்போது நாய் குரைக்கும்
                சத்தம் கேட்க )நல்லா கொரை..எனக்கொண்ணும்
                பயமில்லையே..!
                                                 ( திரை )
                                               (முற்றும் )
                ----------------------------------------------------------------------------                      



..
                     
                  

  




   

வெள்ளி, 11 நவம்பர், 2011

மன சாட்சி.....

                       
                       மன சாட்சி ( சற்றே பெரிய சிறுகதை.)                   
                      ------------------------------------------------------                              
  (1970-ஆம் வருடம் எழுதப்பட்ட கதை இது.நாடகத்துக்காக                                                   
    கூடுதல் பாத்திரங்களுடன் மேடைக்கதை எழுதப் பட்டு 
திருச்சிராப்பள்ளி பி. எச்.ஈ.எல் கம்யூனிடி செண்டரில் மேடை
ஏற்றப்பட்டது. ஆரம்பத்தில் கதாநாயகன் பாத்திரத்தில் நடிக்க
பலரும் தயங்கினர். நாடகம் மேடையேற்றப்பட்டபிறகு,அபார வரவேற்பு 
 கிடைத்தது. அக்காலத்தில் கதையின் கரு வித்தியாசமாகப் பட்டது )
--------------------------------------------------------------------------------------------------------------------


    அழகாக உடுத்தியிருந்தான் அவன் ”ஸ்பாட்லெஸ் வைட்”
தூய்மையான வெண்மை. “போ டை “ அணிந்திருந்தான்.
விளம்பரங்களில் வரும் ஆண் மாடல்கள் கெட்டனர்.நல்ல
உயரம்;உயரத்திற்கேற்ற பருமன்;தன்னம்பிக்கை மிகுந்த
நடை. ஆனால் கண்களில் மட்டும் விவரிக்க முடியாத ஏதோ
ஒரு ஏக்கம். - வெறும் பிரமையாக இருக்கலாம்.

பொன்னிற மேனி;துடிக்கும் அதரங்கள்;படபடக்கும் இமைகள்;
வண்டாடும் விழிகள்;கொடியிடை; மென்னடை;”சிக்”ஆக உடை
அணிந்திருந்தாள்.புன்னகைத்த முகம் இடையிடையே இதழ்
விரியும்போது பளிச்சிட்டு தெரிந்தன விளம்பரப் பற்கள்.

மொத்தத்தில் ரவி ஒரு ஆணழகன்.மாலதி ஒரு பெண்ணழகி.
இருவரும் அந்த டான்ஸ் ஹாலில்தான் சந்தித்துக் கொண்டனர்
முதல் சந்திப்பிலேயே மாலதி தன் மனசை முழுமையாக
அவனிடம் பறி கொடுத்து விட்டாள்.

துரித கதியில் அடித்த “பீட்”டுக்கு ஏற்ப டான்ஸ் ஆடிக்கொண்டு
இருந்தனர்.தனித்தனியே ஆடாமல் ஓரத்திலேயே நின்று
கொண்டிருந்த இருவரும்,ஒருவரை ஒருவர் நோக்கினர்.
கண்ணசைவிலேயே இசைவினை உணர்ந்தனர். அவன் அவள்
இடையைப் பற்றினான். அவள் அவன் மீது கொடியெனத்
துவண்டாள்.நன்கு தேர்ச்சி பெற்ற பாதங்கள்” மொசைக் “
தரையில் இசைக்கேற்ப நழுவின. உடல்கள் ஒன்றையொன்று
தழுவியது.

“ யூ ஆர் ப்யூட்டிஃபுல் “

“ஓ..யூ ஆர் மார்வலஸ் “

கண்டு களித்ததிலும் பேசி மகிழ்ந்ததிலும் கொண்ட இன்ப
உணர்வு உடற் சோர்வு கொள்ளாமல் தடுத்தது. ஆடினர், ஆடினர்
விடாமல் ஆடினர்;மேலும் ஆடியிருப்பார்கள் ,ஆட்டிப்படைத்த
இசை மட்டும் தொடர்ந்திருந்தால்

டான்ஸ் முடிந்ததும் ஒருவரையொருவர் பிடித்திருந்த பிடியும்
நழுவியது. நிலைத்திருக்கும் அதே ஏக்கப் பார்வையுடன், --
இதுவும் பிரமையோ?--ரவி அவளைக் கண்டான். அவளோ
எதையோ நினைத்துக் கொண்டவள் போலதிடீரெனச் சிரித்தாள்
புரியாத அந்தச் சிரிப்பில் அவனும் கலந்து கொண்டான்.

“ஓ...மறந்துவிட்டேனே.. ஐ யாம் மாலதி.”

“ஐ யாம் ரவி. “

கை குலுக்கல்கள் .அர்த்தமற்ற சிரிப்பு. அதே ஏக்கப் பார்வை.

“ பார்” -க்கு போவோமே. பல நாள் பழகியவர்கள் போல் கை
கோர்த்துச் சென்றனர்.

“வைன் ?”

“ நோ. தாங்க்ஸ்.சாஃப்ட் ட்ரிங்க்ஸ் “

பிரகு பேசினார்கள் பேசினார்கள் என்னென்னவோ பேசினார்கள்
எதேச்சையாகப் பழக்கப் பட்டவர்கள் அடிக்கடி கண்டு களித்தனர்
கூடிக்குலவினர்.;தொட்டு மகிழ்ந்தனர்.மொத்தத்தில் நிரந்தரமாக
இன்புற்றிருக்கவென்றே ஒருவரைஒருவர் நாடினர்.

மாலதிக்கு ரவியிடம் காதல் ஏற்பட்டுவிட்டது. “எவ்வளவு
கண்ணியமானவர். எந்த நிலையிலும் தன்னிலை இழக்காத
உன்னத புருஷர். மணந்தால் இவரைத்தான் மணக்க வேண்டும் “
கன்னியவள் கற்பனையில் சிறகடித்துப் பறக்கத் தொடங்கினாள்

”மாற்றங்கள் மாறி மாறிவரும் நிகழ்ச்சி நிரலின் மறுபெயர்தான்
வாழ்க்கை என்றாலும் அடிப்படை எப்போதுமே ஏமாற்றமாகத்தான்
இருக்க வேண்டும் என்பது என்ன நியதி.?தனக்காகவே ஏங்கும்
ஒருத்தியும் இல்லாமல் போய்விடவில்லை. நிரந்தரமாக
நெஞ்சில் குடிகொண்டுள்ள ஏக்கம் தீராதா என்ன.?”- இது மட்டும்
பிரமை அல்ல.ரவியும் சிந்திக்கத் தொடங்கினான்

“நம் திருமணத்தைப் பற்றிஎன்ன நினைக்கிறீர்கள் ரவி.?”ஆரம்பத்
திலிருந்தே அறியத் துடித்ததை கேட்டே விட்டாள் ஒரு நாள்.

ரவிக்கு நெஞ்சே வாய்க்குள் வந்து விடும் போலிருந்தது. இந்தக்
கேள்வியை அவன் எதிர்பார்த்துத்தான் இருந்தான். என்றாலும்
அதற்கான பதில் மட்டும் அவனால் சிந்திக்கப் படாமலேயே
இருந்தது. மேலெழுந்தவாரியாகக் கிளுகிளுப் பூட்டும் அந்தக்
கேள்வி, அவனது நெஞ்சின் அடித்தளத்தில் நெருஞ்சி முள்ளின்
நெருடலைத்தான் உண்டு பண்ணியது.

ஆவலோடு கண்ணிமைக்காமல் தன்னையே நோக்கிக் கொண்டி
ருக்கும் கன்னியிடம் என்ன பதில் கூறுவது.?சமாளித்துப்
பார்க்கலாமே..

“திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன மாலதி.
மேலும் நாம் திருமணம் செய்துகொண்டுதான் ஆக வேண்டியது
என்ன.?”--அவனுக்கே அவனுடைய பதில் உள்ளத்தைப்புண்
படுத்துவதாக இருந்ததை அவன் உணர்ந்தான். மாலதியின்
கண்களில் நீர்த் திரையிட்டது.

“ ஸோ ,யூ டோண்ட் லவ் மீ.  நீங்கள் என்னை காதலிக்கவில்லை
விரும்பவில்லை.”

“நீ தவறாக எண்ணுகிறாய் மாலதி. திருமணம் என்பது ஒரு
லைஸென்ஸ் கேவலம் மனிதர்களது அப்பட்டமான மிருக
வெறியை, உடற்பசியைத் தணித்துக் கொள்ள ஊருலகம்
வழங்கும் ஒரு பர்மிட். அது இருக்கிறது என்னும் ஒரே காரணத்
துக்காக மனித நிலையிலிருந்து மாறுகிறோம். தூய அன்பு
புறக்கணிக்கப்படுகிறது. நாம் பாவிகளாகிறோம்.அது
இல்லாமலேயே நாம் அன்பில் இணைய முடியாதா.?”

“ஆண்களுக்கு அது சரியாகத் தோன்றலாம். கண்ணிறைந்த
புருஷ்னுடன் நீங்கள் கூறும் திருமண லைசென்ஸ் பெற்று
கருத்தொருமித்து வாழ்வதுதான் பெண்களுக்கு அணிகலன்.
அதை பாவச் செயலின் வித்து என்று குதர்க்கமாகக் கூறுவது
வாழ்வின் அடிப்படைத் தத்துவத்திற்கே விரோதமான பேச்சு. “

பேச்சின் போக்கே ரவிக்கு என்னவோபோல் இருந்தது. ஆனால்
ஒன்றை மட்டும் நிச்சயமாகத் தெரிந்து கொள்ள விரும்பினான்.

“ நம் திருமணத்தின் முக்கிய நோக்கமே, இருவருக்கும் உள்ள
பரஸ்பர அன்பினை ஊருலகத்துக்கு தெரியப் படுத்தவேண்டும்
என்பது மட்டுந்தானா.?”

“இதைப் புரிந்து கொள்ள இவ்வளவு நேரமா உங்களுக்கு..”

“அதுவானால் நான் திருமணத்துக்கு உடன்படுகிறேன். ஐ எக்ரீ!”

ரவிக்கும் மாலதிக்கும் திருமணம் முடிந்தது.இருவரது வாழ்விலும்
திருமணம் வெறும் உறவாக மட்டும் அமைந்தது. மற்றபடி
எல்லாம் பழையபடிதான் இருந்தது. ரவி அதே ஆணழகனாக ,
கண்ணியமுள்ளவனாக ,கண்களில் ஏக்கம் சற்றே குறையப்
பெற்றவனாக --இது பிரமை யா.?--தொடர்ந்திருந்தான். அடிக்கடி
--மனிதனை மிருகமாக்கும் உடலுறவை வெறுக்கிறேந்-என்றும்
கூறி வந்தான்.

வெறுக்கிறேன் என்று அவ்வளவு எளிதில் கூற முடிகிறதா ?அப்படி
கூறமுடிந்தாலும் அது உண்மை உள்ளத்துப் பிரதிபலிப்பா?
வெறுமே உதட்டசைவின் விளைவா.?

அது சரி. இந்த ஆராய்ச்சிகளெல்லாம் எதற்கு.?பேரமைதி என்று
இல்லாவிட்டாலும் அமைதி என்று ஒப்புக்கொள்ளும் அளவுக்கு
நிச்சலனமாக இருந்த வாழ்க்கை நதியில் சூறாவளியின்
கொந்தளிப்பு குமிழியிடுகிறதோ என்று மட்டும் அடிக்கடி
தோன்றும்.

மாலதிக்கு ஒன்றுமே விளங்க வில்லை. விளங்கியது போல்
தோன்றினாலும் உள்ளம் ஒப்புக்கொள்ள வேண்டாத ஒரு
வேதனை. மாலதி மனம் வாடி இளைக்கத் தொடங்கினாள்

குழந்தை இல்லாக் குறைதான், ஏக்கம்தான் இதற்குக் காரணம்
இது நிங்க, பிள்ளிவரம் வேண்டி, ஆலய தரிசனம் செய்ய
அறிவுரையும் வழங்கினர் பெற்றோர்.

“பிள்ளை பெற்றுத்தான் தீரவேண்டும் என்று அப்படி என்ன
கட்டாயம்?அதற்கு ஆலய தரிசனமாம், ஆண்டவன் வழிபாடம்!
ஸில்லி.!--ஒரேயடியாக அடக்கி விட்டான் ரவி.

சாதாரணமாக கிடைக்கும் பொருளை,நாமாக வேண்டுமானால்
வேண்டாம் என்றால் ஒதுக்கலாம், சஞ்சலமிருக்காது.மணவினை
யின் இன்பங்கள் தற்காலிகமாக நிறுத்தப் பட்டு ஒதுக்கப்
பட்டுள்ளன என்றுதான் மாலதி முதலில் நம்பினாள்.ஆனால்.....
ஆனால் அதுவே தொடர்ந்து அரிதாக இருப்பதை உணர்ந்த போது
ஏக்கம், ஏமாற்றம் பதின்மடங்காக இருப்பதை அறிந்தாள்.

ரவி இன்றைய நாகரிகத்தின் வாரிசாக இருக்கலாம்.பொருளாதார
முறையில் தரம் தெரிந்தவனக இருக்கலாம். ஆணும் பெண்ணும்
சமம் என்று உணர்ந்தவனக இருக்கலாம். இருந்தாலும் அவனும்
சாதாரண மனிதந்தான்.மாலதி தன்னிடம் இருந்து விலகிச் செல்
வதை உணர்ந்தான். காரணம் தெரிந்தும் ,அதை நீக்க வழி
தெரியாமல்--தெரியாமலென்ன...முடியாமல் வேதனைப் பட்டான்.

நாளாக ஆக, ஏக்கமும் தாபமும் அதிகரித்தது. பலர் முன்னிலை
யில் வெளியிடப்படாதஏக்க உணர்ச்சி சாசுவதமாக முகத்தில்
தெரியும் அளவுக்கு இருவரும் மனம் வேதனைப் பட்டனர்.

ஒரு நாள் ,”மாலதி டியர், இந்த மாதிரி வருத்திக்கொண்டும்
ஏங்கிக் கொண்டும் இருப்பதில் பயனில்லை. பிள்ளைச் செல்வம்
வேண்டும் என்ற ஆசை, உனக்கிருக்கும் அளவுக்கு, எனக்கும்
உள்ளது. ஒருபடி மேலாகவே உள்ளது என்று வேண்டுமானாலும்
சொல்வேன். காரணம் ..நான் ஒரு ஆண்பிள்ளை.என் ஆண்மை.....
என் வீரியம்....சே...!என் மனசே வெடித்துவிடும் போல் இருக்கிறது.
கையாலாகாதவன் என்று வெறுக்கிறாயா மாலு.?--சொல்லப்
படாமல் நினைக்கப்பட்டே வந்த எண்ணங்கள் கூறப்பட்டு
விட்டன.

அழகன் ,வலியவன் போல் தோன்றிய ரவி ,மாலதிக்கு அரை
நொடியில் ஒரு பேடிபோல் காட்சி அளித்தான். அதே வினாடியில்
அடி வயிற்றிலிருந்து குமட்டிக் கொண்டும் வந்தது அவளுக்கு.
ஆண் ஆணாக உள்ளவரையில் எது நேர்ந்தாலும் எதிர்த்துப்
போராடும் மனவலிமை பெண்களுக்கு உண்டு. ஆனால் நிலைமை
மீறினால். .....பெண்ணே ஆணுக்கு ஆறுதல் கூறவோ, கொண்டு
நடத்த வேண்டிய குண்ம் கொள்ளவேண்டும் என்றால், ........
அகிலமே அப்படி மாறுகிறது என்றால் ...பூமி தாங்காது. வெறுமே
வெடித்துவிடும்.

ஆத்திரம்,வெறுப்பு, பச்சாத்தாபம், ஆகிய உணர்ச்சிகள் மாலதிக்கு
மாறிமாறி வந்தன முதன் முதலாக ரவியிடம் மதிப்பு குறைவதை
உணர்ந்தாள்.ரவிக்கு மாலதி அவனை நன்றாகப் புரிந்து கொள்ள
வேண்டும் என்ற எண்ணம். மாலதிக்கோ அவன் இரக்கம்
நாடுகிறானென்று உணர்ந்ததும் ஒருவித தலைக்கனம்அவனிடம்
இல்லாத ஒன்று தன்னிடம் இருப்பதைப் போல், ஒரு எண்ணம்
மின்னல் காட்டி மறைந்தது

“இப்போது வெறுத்து என்ன பயன்.?”

 “ஸோ , யூ ஹேட் மீ..?”

“அதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா.?என்ன இருந்தென்ன?
வாழ்க்கையை ருசிக்க முடியாத அளவுக்கு வெறுத்து விட்டது. “

“குழந்தை இல்லாத ஏக்கம் உன்னை வெகுவாக பாதித்து விட்டது.
என்ன பேசுகிறோம் என்றே புரியாத அளவுக்கு உன் கண்ணையும்
பகுத்தறிவையும் மறைக்கிறது.”

“ ஷட் அப்.!குழந்தை இல்லா ஏக்கமாம் ....மண்ணாங்கட்டியாம்...!
ஒரு உண்மையான ஆணோடு வாழ்ந்தால் குழந்தை ஏன் பிறக்காது
யூ ஆர் இம்பொடெண்ட்..!  ஐ ஹேட் யூ...! உங்களை வெறுக்கிறேன்.!
இங்கிருந்து போய் விடுங்கள். ..! “

சும்மாக் கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம். ஸோ.. தட் இஸ் இட்.
அதுதான் விஷயம். குழந்தை இல்லாத ஏக்கம் என்பதெல்லாம்
போலி. வாழ்க்கையை ருசிக்க முடியவில்லையே என்ற ஏக்கமே
காரணமா.  பாவி ..பிள்ளை இல்லாத ஏக்கத்தால் பரிதவிக்கிறாள்
என்று பச்சாதாபப்பட்டால், என் மீதே சாடுகிறாளே...!  அவளைச்
சொல்லியும் குற்றமில்லை.அவள் கூறியது அத்தனையும்
உண்மைதானே. வேறு எந்தப் பெண்ணோடு நான் வாழ்ந்தாலும்
இதே கதைதான். ஆனால்..அவள்......

முதன் முதலில் ரவிக்கு தன் இதயத்தில் ஒரு விரிசல் கண்டு
விட்ட உணர்ச்சி.தன் மீதே வெறுப்பும் நஞ்சு போல் கலந்து
பரவத் தொடங்கியது. திடீரென்று சுவற்றில் மண்டையை மோதிக்
கொள்ளத் தொடங்கினான்.கையாலாகாத்தனம் மீறும்போது
தன்னையே வருத்திக் கொள்வதில் கொஞ்சமாவது நிம்மதி
தோன்றுகிறதோ என்னவோ...

ஆண்மையின்மை என்ற உண்மையை மீறி ஆலய தரிசனங்களும்
ஆண்டவன் வழிபாடுகளும், பிள்ளை பெறச் செய்து விடுமா,?
பிள்ளைத் தவமாவது ஒன்றாவது..!  எல்லாமெ வாழ்க்கையை
வாழ்கிறோம் என்று நிரூபிக்கத்தானே என்று சற்று முன்புதானே
உணர்த்தினாள். அப்படியில்லை என்றால் வாழ்க்கையை
நாங்கள் அனுபவித்து வாழவில்லை என்ற உண்மை
எல்லோருக்கும் தெரிந்து விடுமா.?என்னுடைய இயலாமை
வெட்ட வெளிச்சமாகி விடுமா..? என்னால் தாங்க முடியாது. இது
நடக்கக் கூடாது.

“வீடு வரை உறவு..!வீதிவரை மனைவி..!
காடுவரை பிள்ளை ! கடைசிவரை யாரோ..!”

தெருக்கோடியில் ரெகார்ட் அலறிக் கொண்டிருந்தது.நாராசம்
போல் காதில் விழுந்தது. சுவற்றில் மோதிய தலை விண் விண்
என்று வலிக்கத் தொடங்கியது. “கடக்..கடக் ”வீட்டுக் கூரையில்
இருந்து சப்தம். அண்ணாந்து நோக்கினான். ஓடியது ஒரு பல்லி.
எதிர் கொண்டழைத்தது இன்னொன்று. ஒரு வினாடி வாலைத்
தூக்கிப் போருக்கு ஆயத்தம் செய்வதுபோல் நின்றது ஒன்று.
அழைப்பை உணர்ந்தது மற்றொன்று. அருகில் சென்றது
முதலாவது. அணைப்பில் தம்மை மறந்தன இரண்டும். .இவற்றுக்
கல்லவா வேண்டும் குடும்பக் கட்டுப்பாடு....!

சன்னல் வழியே வெளியே நோக்கினான்.ஒரு நாயைத் தொடர்ந்து
பல நாய்கள் .ஒன்று மட்டும் அடுத்துஓடியது. மற்றவை தொடர,
ஓட்டம் ..ஓட்டம் அப்படியொரு ஓட்டம் வாழ்க்கையை அனுபவிக்க
நாய்களுக்குள்ளேயே அப்படி ஒரு ஓட்டம் என்றால்.....

“எண்ணித் துணிக கருமம் “ என்றான் வள்ளுவன். எண்ணாமல்
துணிந்து விட்டான் ரவி உண்மையில் எண்ணாமலேயே துணிந்து
விட்டானா.? சூனியத்தில் நிலைத்த பார்வையில் ஒரு சின்ன ஒளி.
“ஆம்.. அதுதான் சரி.”.என்ன இது ஞானோதயம் பிறந்து விட்டதா
இவனுக்கு..?

“மாலதி , விரும்பியோ விரும்பாமலோ நாம் மணந்து இதுவரை
சேர்ந்தும் வாழ்ந்தாகிவிட்டது. உனக்கு என்மேல் வெறுப்பு
ஏற்பட்டுப் பலனில்லை. ஒரு சமயம் நாம் விவாகரத்து செய்து
கொள்ளலாம். இந்த சமுதாயத்தில் நான் விரும்பினால் பிறகு
மறுமணம் செய்து வாழலாம். என் சக்தி எனக்குத் தெரிந்து நான்
மறுபடியும் மணப்பது என்று நினைத்தாலே அது பைத்தியக்காரத்
தனம். ஆனால்... நீ... ?  என்னதான் இந்த சமூகம் முன்னேறி
இருப்பது போலத் தோன்றினாலும், ஏற்கனவே மணந்த ஒரு
பெண்ணை மறுமணம் செய்து வாழ்வளிக்க வருபவர் மிகவும்
அரிது. மணம் செய்யாமல் கட்டுக்கடங்காமல் பெண்மையைப்
புணர வேண்டுமானால் ஆயிரமாயிரம் பேர் கிடைப் பார்கள் இதை
நீ விரும்ப மாட்டாய். உன்னைப் போலுள்ள எவரும் விரும்ப
முடியாது. அதனால் டிவோர்ஸ் இஸ் அவுட் ஆஃப் க்வெஸ்டின்.
என்னோடு வாழ்ந்தே ,என் மனைவி என்ற ஸ்தானத்தில் இருந்தே
நீ வாழ்க்கையை அனுபவிக்க முடிந்தால்....ஐ யாம் அஷேம்ட் டு
ஸே.. சொல்வதற்கே வெட்கப் படுகிறேன். --எனக்கு ஆட்சேபணை
இல்லை..நீ அனுபவிக்கலாம். என் மனசாட்சிக்கு விரோதமில்லா
மல் நான் கூறுவதை நீ எப்படி வரவேற்பாயோ...என்ன எண்ணு
வாயோ எனக்குத் தெரியாது. “.

இரத்த நாளங்கள் புடைக்க , உணர்ச்சிப் பெருக்கீட்டினால், ஒரே
மூச்சில் கூறிய ரவியை ஒரு புழுவைப் பார்ப்பதுபோல் அருவருப்
போடு பார்த்தாள் மாலதி. ஆனால் அவன் கூறியவற்றின் சாராம்
சம் சம்மட்டி கொண்டு அடித்ததுபோல் தலைக்கேறியது.

“ப்ளீஸ் ..லீவ் மி எலோன்.என்னைத் துன்புறுத்தாதீர்கள்.என்னை
நிம்மதியாக இருக்க விடுங்கள். “

ஸ்டாண்டில் கிடந்த கோட்டை எடுத்துத் தோளில் போட்டுக்
கொண்டான். சற்றே அவளை தலை தூக்கிப் பார்த்தான். ஆயிரம்
கதைகள் கூறியிருக்கும் பார்வைஎன்று வேண்டுமானாலும்
கூறலாம், இல்லை அர்த்தமற்ற சூனியப் பார்வைஎன்று வேண்டு
மானாலும் கொள்ளலாம். ரவி சென்றுவிட்டான். விரக்தியே உருக்
கொண்டு செல்வதுபோல் அவன் போவதையே மாலதி கண்டாள்.

இருந்த நிலையுணர இரண்டு மணி நேரம் பிடித்தது.உணர்ந்ததும்
தன்னை சுதாரித்துக் கொள்ள இரண்டே வினாடிகள் தான் பிடித்தது
அவளுக்கு உடனே தன் காலேஜ் பாய் ஃப்ரெண்ட்ஸ் ஒவ்வொருவர்
முகமும் அவள் அகத்தில் திரையிடப்பட்டுக் காட்டப் பட்டது.
கூடவே ரவியின் நண்பர் சிலரும் அவள் மனத்திரையில்
தோன்றினர். அகம் சிறிதே மலர்ந்திருக்க வேண்டும். ஒரு சிறிய
கீற்றுப்போல் புன்னகை இதழ் ஓரங்களில் நெளிந்தது.

சொன்னபடியே நடந்தும் காட்டினான் ரவி. தன் நண்பர்களை
வீட்டிற்கு அடிக்கடி வரவழைத்தான். மாலதியோடு கலந்து
உரையாட வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுத்தான். “ஹை
ஸொசைட்டி “அல்லவா.கண் முன் நடப்பவற்றைக் காணாதது
போலிருக்கவும் முடியும் என்று எண்ணினான். ஆனால் அவன்
எதிர்பார்த்த அளவுக்கு எதுவும் நடக்கவில்லை. மாற்றான்
மனைவி என்ற முறையில் வந்தவர்கள் ஒரு வரம்புக்குள்ளேயே
தான் பழகவும் செய்தனர். ரவிக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது.
அவன் கவலை அவனது இயலாமை எங்கே மற்றவர்களுக்குத்
தெரிந்துவிடுமோ என்பதுதா. அப்படித் தெரியாமல் இருக்க
எதையும் செய்யத் துடித்தான் ரவி.

அவனுடைய போக்கில் கண்ட மாற்றத்தைக் கண்டும் காணாதது
போல் இருக்க முயன்றாள் மாலதி. மேலும் என் மனைவி என்ற
ஸ்தானத்தில் இருந்து உனக்குத் தோன்றுகின்ற முறையில்
வாழ்க்கையை நீ அனுபவி என்று ரவி கூறியதன் அர்த்தமும்
விளங்கியும் விளங்காததுபோல் இருந்தது.

“மனசாட்சிக்கு விரோதமில்லாமல் கூறுகிறாராமே ? மனசாட்சி
தான் என்ன.?கொண்ட கொள்கைகளின்மேல் ,எண்ணத்தின்மேல்
இருக்கும் அசையாத நம்பிக்கையின் நிரந்தரமான சாசுவதத்
தன்மையைக் குறிப்பிடுவதல்லவா..?அப்படியானால் கொள்கை
கள் அல்லது எண்ணங்கள் -- அவைகள் சரியாகவும் இருக்கலாம்
தவறாகவும் இருக்கலாம்---காரணமாக எழும் செயல்கள் மன
சாட்சியின் பிரதிபலிப்பாகும் அல்லவா.? அதாவது செய்யும் எல்லா
செயல்களுக்கும் காரணங்காட்டி, தெளிவு படுத்தி, ஏதாவது ஒரு
கோணத்திலிருந்தாவது மனசாட்சிக்கு விரோதமில்லாதது என்று
நிரூபிக்கமுடியும்“தர்க்க குதர்க்க வாதங்களின் மூலம்,தன்னையே
தேற்றிக்கொள்ளவோ இல்லை மாற்றிக் கொள்ளவோ மாலதி,
மிகவும் சிரமப் பட்டாள் தானாக முன்னின்று இன்னபடி
செய்யலாம், இன்னபடி வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்று
தலைமை தாங்கி நடத்தும் அளவுக்குபக்குவம் அவளுக்கு ஏற்பட
வில்லை என்றாலும் கால வெள்ளத்தின் சுழற்சியில் அடித்துச்
செல்லப் பட்டால்,சந்தர்ப்பங்கள் சரியாக வாய்த்தால், எதிர்த்துப்
போராடாமல் அனுபவிக்க வேண்டிய அளவுக்கு தன்னைத்  தயார்
செய்து கொண்டாள். எதற்கும்தான் சமாதானம் கற்பித்துக்
கொள்ளலாமே.

சந்தர்ப்பங்களை மறைமுகமாக ஏற்படுத்திக் கொடுத்தாலும்
அவற்றைப் பற்றிக் கொண்டு, செயலாற்ற யாரும் முன் வராத
நிலையில் ரவி நேரடித் தாக்குதலில் இறங்கினான். உற்ற நண்பன்
சேகரிடம் மனந்திறந்துக் கொட்டி விட்டான் எல்லாவற்றையும்
ஒரு நாள்.

“எனக்கு வேண்டியது ஒரு குழந்தை சேகர். என் மனைவிக்குப்
பிறந்தாக வேண்டும். என் ஆண்மையின்மை யாருக்கும் தெரியக்
கூடாது. எங்கே மாலதியே என்னைக் காட்டிக் கொடுத்து
விடுவாளோ என்று பயமாக இருக்கிறது. வில் யூ ப்ளீஸ் ஹெல்ப்
மீ அவுட்.?எனக்கு நீ உதவுவாயா சேகர். ?

இந்த உலகம் கரும்பு தின்னக் கூலியா கேட்கும்.?வலிய வருவதை
விரும்பி அனுபவித்தான் சேகர். மாலதியும் மனசாட்சியின் துணை
யோடு வாழ்க்கையை அனுபவித்தாள் .ஆண் பெண் புணர்ச்சியில்
விளையும் விபத்தும் நேர்ந்தது. மாலதி கருவுற்றாள்.

ஆரம்பத்தில் மகிழ்ந்த ரவியும் நாளாவட்டத்தில் எதையோ பறி
கொடுத்த எக்கம் தன்னை வாட்டுவதை உணர்ந்தான். என்ன
இருந்தாலும் அவன் ஒரு ஆண் மகனல்லவா.?ஆண்டவனே
தனக்கு துரோகம் செய்து விட்டதுபோல் வெதும்பினான். உடல்
நலிந்தான். உள்ளம் குமைந்தான். மொத்தத்தில் வாழ்க்கையில்
இருந்த பிடிப்பையே விட்டொழிந்தான். நடை பிணமானான். ஒரு
நாள் அவனுக்குச் சித்தம் கலங்கி, பைத்தியமே பிடித்து விட்டது

“நான் ஒரு ஆண்பிள்ளை.என் மனைவி கருவுற்றிருக்கிறாள்.
எனக்குக் குழந்தை பிறக்கப் போகிறது. ...ஹா ..ஹா..ஹா. நான்
ஒரு ஆண்பிள்ளை” என்று கத்தவும் தொடங்கி விட்டான்.

இதுகாறும் தன்னோடு ஒத்து வந்த மனசாட்சி திடீரென்று கட்சி
மாறிவிட்டதை மாலதி உணர ஆரம்பித்தாள் ஆரம்பத்தில் சரி
கட்ட முயன்றாள். முயல முயல அது மூர்க்கமாக அவளை
எதிர்த்துச் சாடியது. தன் வயிற்றில் உள்ள கருவின் அசைவினை
உணரும்போதெல்லாம். தன் உடல் சில்லிடுவதைப்போல்
உறைவதை உணர்வாள். கற்பு நெறி பற்றி கட்சி சார்பற்ற
உண்மைகளை எண்ணி அலசுவாள். எப்படி முயன்றாலும்
அவளால் அவளையே சமாதானப் படுத்தி கொள்ள முடிய
வில்லை. மனதின் அடித்தளத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒரு
-சிவப்பு ஒளி- “முணுக் முணுக் “கென்று தோன்ற ஆரம்பித்து
சற்றைக்கெல்லாம் பூதாகாரமாக “நி ஒரு பாவத்தின் சின்னத்தை
தாங்கிக் கொண்டிருக்கிறாய். ..நீ பாவி ..பழிகாரி”என்று ஒளி
போட்டு -சிவப்பு ஒளிதான் -பிரகாசிக்கவும் தொடங்கியது.
மாலதிக்கு நிலை கொள்ளவில்லை ஆயிரம் யானைகள் நெஞ்சில்
ஏறி மிதிப்பதுபோல் இருந்தது.

கண்நிறைந்த கணவன் கருத்திழந்து, பித்துப் பிடித்த நிலையில்
இருக்க, கருத்திசைந்து கணவனுடன் வாழ வேண்டியவள்,பொலிவு
இழந்து, புன்னகை இழந்து, கற்பு நெறி தவறி மனசாட்சியை
துணைக்கழைத்தாள். அது ஏன் வருகிறது.?அவளை “அம்போ”என
விட்டு விட்டதும் அல்லாமல், குத்திக் குதறி கத்திக் கதறவும்
வைத்தது.

நெஞ்சத்து வலியோடு, உடல் உபதையும் சேர தாங்கமுடியாதவள்
தன்னிலை தவறினாள். மனசாட்சியின் பூதாகாரமான சிவப்பு ஒளி
உள்ளமெங்கும் ஒளியூட்டி வியாபிக்க, உடலிலும் சிவப்பு நிறம்
பரவியது.- சிவப்பு ரத்தத்தால்.-எல்லாமே தெளிவாக உணர்வது
போல் ஒரு பிரமை. கண்கள்,காணும் காட்சிகள் அனைத்தையும்
காணவே விரிந்தனவோ.!செவிகள் கேட்கும் அனைத்தையும்
கிரகிக்க முடுக்கி விடப்பட்ட நிலையடைந்ததோ..!மாலதிக்கு
ஒரு சில வினாடிகளுக்கு நினைவு மீண்டது. அப்போது அவள்
ரவி அவளையே வெறி பிடித்து நோக்குவதைக் கண்டாள். “நான்
ஆண்மையுள்ளவன்...எனக்குக் குழந்தை பிறந்து விட்டது..”
ரவியின் அலறல் அவளால் கேட்டு கிரகிக்கப்பட்டவுடன் அவள்
தலை சாய்ந்தது. பிறகென்ன..?அமைதி....ஒரே மயான அமைதி....
--------------------------------------------------------------------------------!


.













.










   

புதன், 9 நவம்பர், 2011

ஆண்டவன்முன்



                      ஆண்டவன் முன்...
                      ----------------------------------


பிஷேக அலங்கார ஆராதனைகள் ஆண்டவனுக்கு
பூ,பழம், காயுடன் படைப்பாகப்பின் நிவேதனங்கள் முடிந்து, 
தீப ஒளியில் திவ்ய தரிசனம் காணக் கண் கோடி வேண்டும். 
இருப்பினும் இருப்பதோ இரண்டுதானே.
அடுத்து சென்றால் அழகாக தரிசிக்கலாம்.
அதற்கும் ஏற்பாடு செய்யலாம் காசிருந்தால். !

தட்டேந்தி வரும் அர்ச்சகர் முகத்தில் அலாதி பூரிப்பு. 
காணிக்கையாய்க் கொட்டும் காசு கண்டு
பணம் கொடுத்து ஆண்டவன் அருகே சென்றவர்
தட்டினில் இட்டனர் ரூபாய் நோட்டுக்கள். 
வரிசையில் வந்தோரும் தவறாது தட்டில் இடும் 
காசின் சப்தம் அர்ச்சகர் காதுக்கு சங்கீதம். 

யார் சொன்னது ஆண்டவன் சந்நதியில் 
அனைவரும் சமம் என்று.?

தூரத்தே நின்று கண்கள் மூடி 
ஆண்டவனைக் காண்போர் அறிவர்
தட்டிலிடக் காசில்லை என்றால் சபிக்கப்படலாம். 

அன்றொரு நாள் சிறான் ஒருவன் 
தீபம் ஒற்றியெடுக்க ,கையில் 
காசில்லாமல் தயங்கியது கண்டு -சிந்தையில் 
தோன்றியது எழுத்தில் விழுந்தது.

( என்னிடம் பதிவொன்று கேட்டார். நானும் அனுப்பினேன். பிரசுரம் குறித்து 
எந்த தகவலும் இல்லாத நிலையில் நானே பதிவாக இடுகிறேன்.)


வியாழன், 3 நவம்பர், 2011

ஏறி வந்த ஏணி.....

                              ஏறி வந்த ஏணி.....( ஒரு சிறு கதை )
                             ------------------------------------------------
  ஹாலில் நான் சேரில் அமர்ந்திருந்தேன்,பேருக்காக
பேப்பரை புரட்டியபடி.வாசல் பக்கம் யாரோ வந்தமாதிரி
இருந்தது.சடாரென்று எழுந்துபோய்ப் பார்த்தால் அங்கே,


அங்கிள், உங்களைத் தேடிக்கொண்டு ஒருத்தர் எங்கள்
வீட்டுக்கு வந்திருக்கிறார்.கீழே வரச் சொன்னாலும் வர
மாட்டேன் என்கிறார்.என்ன செய்ய...”என்று கூறிக்கொண்டு
உள்ளே வந்தாள் மாடிவீட்டுச் சிறுமி.

என் மனைவி அந்தப் பெண்ணுடன் சென்றாள். சிறிது நேரத்த்தில்
நண்பன் சேகரனுடன் கீழே இறங்கி வந்தாள்.வந்த சேகரன்
“தொப்”பென்று அங்கிருந்த சோஃபாவில் சாய்ந்தான். பிறகு ஒரு
அசட்டுச் சிரிப்புடன்,  “ தெரியாமல் மேல் வீட்டுக்குப் போய்
விட்டேன். நீங்கள் யாராவது வந்து கூட்டிக் கொண்டு வருவீர்கள்
என்று தெரியும் . அதனால்தான்....”என்று கூறினான். அவன்
பேச்சும் நடவடிக்கையும் அவன் குடித்திருக்கிறானோ என்று
சந்தேகப் பட வைத்தது. சைகையால் என் மனைவியிடம்
கேட்டேன். இல்லை என்று தலையாட்டினாள்.

சேகரன் களைப்புடன் காணப்பட்டான். “ நான் கொஞ்சம் ரெஸ்ட்
எடுத்துக் கொள்கிறேன்.பிறகு பேசலாம் “ என்று சோஃபாவில்
இன்னும் சாய்ந்துகொண்டு கண்களை மூடிக் கொண்டான்.

“ காஃபி டி ஏதாவது குடிக்கிறாயா, இல்லை நேராகவே சாப்பிட
லாமா “என்று கேட்டேன்

“சே ..சே.. ஒண்ணும் வேண்டாம்..இப்போதுதான் சாப்பிட்டு
வந்தேன் “..அவன் சொல்லும்போதே அது பொய் என்று
தெரிந்தது.

என் மனைவி எதுவும் கேட்டுக் கொண்டிருக்காமல் அவனுக்கு
சாப்பாடு எடுத்து வந்து , முன்னால் ஒரு ஸ்டூலில் வைத்துச்
சாப்பிடச் சொன்னாள். அவனும் கொஞ்ச தயக்கத்துக்குப்
பிறகு வேக வெகமாகச் சாப்பிடத் தொடங்கினான்.

சேகரன் ஒரு தனியார் தொழிற்சாலையில் ஃபோர்மேனாகப்
பணியாற்றி வந்தான்.சில மாதங்களுக்கு முன்பு அந்த
வேலையை விட்டுவிட்டு தனியாக ஏதோ தொழில் தொடங்கி
இருப்பதாகக் கூறியிருந்தான். தன் மனைவி, மகன் மகளுட்ன்
நன்றாகவே இருப்பதாகவும், ஒரு வீடு கட்டிக் கொண்டு
இருப்பதாகவும் கூறியிருந்தான். என்ன ஏது என்று துருவிக்
கேட்கும் பழக்கம் இல்லாதிருந்ததால் , மேற்கொண்டு எதுவும்
எனக்குத் தெரிய வில்லை. மகன் பெரியவன் டிகிரி முடித்து
வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும், பெண்
அப்போதுதான் படிப்பு முடித்திருந்ததாகவும் கேள்விப்பட்டேன்
என்னதான் வேண்டப் பட்டவர்களாக இருந்தாலும் சில கால
கட்டங்களில் அன்னியர்கள் போலத்தான் வாழ வேண்டி
உள்ளது.எது எப்படியிருந்தாலும் ஏதோ நல்ல படியாக இருக்
கிறார்கள் என்னும் சேதியே எல்லோரும் கேட்க விரும்புவது.

நான் சென்னைக்கு வரும்போது இரண்டு மூன்று நாட்கள் என்
மகனுடன் தங்குவேன். குறிப்பாகச் சொல்லப் போனால் ,
அத்தியாவசியமல்லாமல் எங்கும் போக மாட்டேன். கம்ப்ளீட்
ரெஸ்ட் தான்.

உணவு உட்கொண்டதும் சற்றே தெம்புடன் எங்களைப் பார்த்து
நலம் விசாரிக்க ஆரம்பித்தான். அவன் எங்களைப் பார்த்துப்
பேசிய விதத்தில் முகத்தில் ஏதோ வித்தியாசம் தெரிய என்ன
என்று கேட்டேன்.

“ எனக்கு ஒரு கண் சரியாகத் தெரிவதில்லை.சக்கரை வியாதி
என்று சொல்லுகிறார்கள் “

”டாக்டரிடம் காட்டிகண்ணுக்குக் கண்ணாடி வாங்கிக் கொண்
டிருக்கலாமே “,என்றேன்

“ இப்போது அது ஒன்றுதான் குறைச்சல் “,என்று முணு
முணுத்தான்.

” என்னையா, என்னாச்சு,?ஏதாவது ப்ராப்ளமா.?தொழில் எல்லாம்
சரியாகத்தானே போய்க் கொண்டிருக்கிறது ? “.

“ தொழில் என்று ஏதாவது இருந்தால்தானே சரியாகப் போக.”

“என்ன சொல்றெ நீ.?சொந்தத் தொழில் செய்வதாகத்தானே
சொல்லிக் கொண்டிருந்தாய்.வேலை என்னாயிற்று.?”

“ பின் என்னங்க..வேலை இல்லை சும்மா இருக்கிறேன் என்றா
சொல்லிக் கொள்ள முடியும்.”

“ வேலையிலிருந்து VRS வாங்கிக் கொண்டு தொழில் செய்வதாக
சொல்லிக் கொண்டிருந்தாயே”

“அதெல்லாம் சும்மா. VRS-ம் வாங்கலை, தொழிலும் செய்யலை.
என்னை அனுப்பி விட்டார்கள் “

“ அடடா...15/-வருஷத்துக்கு மேலா வேலையில் இருக்கும்
உன்னை எப்படி அவர்கள் அனுப்ப முடியும்.?”

“நான் வேலையிலிருந்தது ஒரு தனியார் தொழிற்சாலை-ன்னு
உங்களுக்குத் தெரியும்.அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால்
அனுப்பிவிடலாம். ஒன்றும் கேட்க முடியாது.”என்று சொல்லிக்
கொண்டு வந்தவன் கூறியதிலிருந்து,

மெக்கானிக்காகச் சேர்ந்தவன் ஃபோர்மனாகப் பதவி உயர்வு
பெற்று நன்றாகவே இருந்தான். ஒரு முறை வாடிக்கையாளர்
களுடனான ஒரு மீட்டிங்கில் இவனும் கலந்து கொண்டிருந்த
போது, வந்தவர்களுக்கு தண்ணீரும் காஃபியும் கொடுக்க
இவனுடைய அதிகாரி இவனிடம்கூறியிருக்கிறார். “நான்
என்ன ப்யூனா.. ஆஃபீஸ் பாயா...நனொரு ஃபோர்மன் என்னால்
முடியாது “ என்று இவன் கூறியிருக்கிறான். வந்தவர்கள்
முன்னால் எதிர்த்து வாயாடிய இவனுக்கு கல்தா கொடுத்து
விட்டார்கள்.இதை சொல்லவும் முடியாமல் மெல்லவும்
முடியாமல் எல்லோரிடமும் வீ.ஆர். எஸ் -ல்வந்து விட்டதாக
கூறி வந்திருக்கிறான்.

தன்னிலை உணர்ந்து கொள்ள முடியாதபடி ஈகோவும் அகம்
பாவமும் அவனை அலைக் கழித்துக் கஷ்டப்பட வைத்து
விட்டது. போதாக் குறைக்கு தொழிற்சாலையில் கிடைத்த
பணத்தில்வீடு கட்டத் துவங்கி முடிக்க முடியாமல் திண்டாடிக்
கொண்டிருந்தான். அங்கும் இங்கும் கடன் வாங்கி வட்டியும்
கட்டமுடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவன் நான்
சென்னை வந்தது எப்படியோ தெரிந்து , விலாசம் வாங்கி
என்னை காண வந்திருக்கிறான்.

“ சரி.. விஷயத்துக்கு வா ,”என்றேன்.

“என் பையனின் பரீட்சைக்குப் பணம் கட்ட வேண்டும். இரண்டு
நாள்தான் இருக்கிறது. வீடு கட்ட வாங்கிய கடனுக்கு வட்டி
வேறு கட்ட வேண்டும்”

“பையன் டிகிரி முடித்து விட்டான் என்றல்லவா சொல்லி
இருந்தாய்.”

“எங்கே முடித்தான்...அரியர்ஸ் இருக்கிறது “

“எவ்வளவு பணம் தேவைப்படும்.?”

” இப்போதைக்கு ஒரு மூவாயிரம் தேவைப் படும்.”

”  இந்த மூவாயிரத்தால் உன் கஷ்டங்கள் தீர்ந்து விடுமா.?”

“கஷ்டம் எங்கே தீரும்...இப்போதைக்கு சமாளிக்கலாம்.
அவ்வளவுதான் “

“ நான் ஊர் விட்டு ஊர் வந்திருக்கிறேன். என்னிடம் அவ்வளவு
பண்ம் இல்லை.ஊருக்குப் போன பிறகு வேண்டுமானால்
முயற்சிக்கலாம். ஆனால் அது உன் பிரச்சனைக்குத் தீர்வு
ஆகாது. ‘என்று நான் சொன்னதும் அவன் முகம் வாடி விட்டது.

“ நம்பிக்கையோடு வந்தேன் “ என்றான்.

“ நீ எங்கிருக்கிறாய்.?உன் விலாசம் சொல்லு. நான் உன் வீடு
வந்து உன் மனைவியையும் மக்களையும் பார்க்க வேண்டும் “
என்றேன்.விலாசம் கொடுத்தான். திருவொற்றியூரிலிருந்து
வந்திருந்தான்.

“ நீ எப்படி வந்தாய்.. உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது”
என்று கேட்டேன்.

”எப்படி எப்படியோ வந்தேன் “என்று சொல்லி ஒரு ஐந்து ரூபாய்
நாணயத்தைக் காண்பித்தான்.

ஒரு பஸ்ஸில் ஏற வேண்டியது.அது போகாத இடத்துக்கு
டிக்கெட் கேட்பது, கண்டக்டரிடம் திட்டு வாங்கி அடுத்த
நிறுத்தத்தில் இறங்கி விடுவது இப்படியே இவ்வளவு தூரம்
வந்து விட்டதாகச் சொல்லி சிரித்தான்.எனக்குப் பாவமாக
இருந்தது. என்னிடம் அப்போது இருந்த ரூ.500/- ஐ அவனிடம்
கொடுத்து, அவனை வீட்டில் பார்ப்பதாகக் கூறி அனுப்பி
வைத்தேன்.

அடுத்த நாள் அவன் வீட்டுக்குப் போயிருந்தேன். அவன் அங்கே
இருக்கவில்லை. அவன் மகன் ஸீக்ஸ்பாக் உடம்புடன் இருந்தான்
போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கு முயற்சிப்பதாகக்
கூறினான். அவனுக்கு எந்தக்கவலையும் இருப்பதாகத் தெரிய
வில்லை.அப்பாவுக்கு சக்கரை வியாதியால் கண் பாதிக்கப்பட்டு
இருப்பது தெரியுமா என்று கேட்டபோது, அவருக்கு வயசாகி
விட்டது என்று விட்டேத்தியாக பதில் கூறினான். அவனது
மனைவியோ வீட்டில் இருந்த நாய்க்கு உணவு ஊட்டிக்கொண்டு
இருந்தாள். சற்று நேரத்தில் பெண் வந்தாள்.சூட்டிகையான பெண்
போல் காணப்பட்டாள் வேலைக்கு முயற்சி செய்வதாய்க்
கூறினாள்.பசித்தவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட மீன்
பிடிக்கக் கற்றுக் கொடுப்பதே மேல் என்று தோன்றியது.
நிலையான வருமானம் இல்லாதவனுக்குப் பணம் கொடுப்பதை
விட நிலையான வருமானத்துக்கு வழி செய்வது சிறந்தது எனத்
தோன்றியது. அப்போது அங்கு வந்த சேகரன் என்னைப் பார்த்து
மகிழ்ச்சியடைந்தான்..எனக்கு அவனைப்பார்க்கப் பாவமாக
இருந்தது. நன்றாக இருந்த காலத்தில் யாரையும் மதிக்காமல்
இருந்துவிட்டு, இல்லாதபோது யாரும் கவனிப்பதில்லையே
என்று கவலை கொள்வதில் எந்த பலனும் இல்லை.

நல்ல வேளை ..அப்போதே எனக்குத் தெரிந்த நண்பனுக்குப்
ஃபோன் போட்டு, ( அவன் ஒரு எம்ப்ளாய்மெண்ட் கன்சல்டன்சி
வைத்திருந்தான்.) சேகரனின் மகளுக்கு வேலைக்கு ஏற்பாடு
செய்ய முடியுமா என்று கேட்டேன். அதிர்ஷ்டவசமாக,மறுநாளே
வந்தால் ஒரு வேலையில் சேரலாம் என்றான்.இந்த
மகிழ்ச்சியான சேதியை அவர்களிடம் கூறி விடை பெற்றேன்.

சேகரன் இறந்து பத்து வருடங்கள் ஓடி விட்டன. அன்றைக்கு
வழி காட்டப்பட்ட பெண் நன்றாக இருக்கிறாள்.மகனும் ஏதோ
வேலையில் இருக்கிறான்.இருவருக்கும் மணமாகி விட்டது.
அவனது மனைவி இன்றைக்கும் நாய்க்கு உணவு ஊட்டிக்
கொண்டிருக்கிறாள்.யாருக்காவது சேகரனைப் பற்றிய
நினைவோ,ஏறி வந்த ஏணிபற்றிய எண்ணமோ இருப்பதாகத்
தெரியவில்லை.
------------------------------------------------------------------------------------















.






செவ்வாய், 1 நவம்பர், 2011

பசி......

                                             பசி...
                                         ---------

       அன்றொரு நாள் சாலையில் ஒரு சிறுவன் அழுது கொண்டு
இருந்தான்.என் பேரனிடம் அவன் அழுவதன் காரணம் தெரியுமா
என்று கேட்டேன்.பசியாயிருக்கும் என்றான்.பசி என்றால் என்ன
என்று தெரியுமா என்று கேட்டேன்.வயிறு காலியாயிருக்கும்
போது சாப்பிட வேண்டும் என்று தோன்றும் உணர்வே பசி
என்றான்.

       பசியைப் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது. நாம்
உணவு உண்ணும்போது அதை செரிக்கச் செய்ய,வாயில் உமிழ்
நீர் முதல், குடலில் செல்லும்போது சுரக்கப்படும் திரவங்கள்
வரை, உடல் உற்பத்தி செய்கிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில்
உண்ணும் பழக்கத்தினால்,அந்த நேரத்தில் அவற்றைச் செரிக்க
இந்த திரவங்கள் அந்த நேரத்தில் சுரக்கத் தயாராய் இருக்கும்.
உணவு உள்ளே சென்றால் சுரக்கப்படும் திரவங்களுக்குப் பணி.
உணவைச் செரிக்க வைப்பது. உணவு செல்லாவிட்டால்
சுரக்கப்படும் திரவங்கள் தனது வெளிப்பாடைக் காட்டும். குடலை
லேசாக அரிக்கும். அந்த உணர்வைப் பசி என்று கொள்ளலாமா.?
அந்த நேரத்தில் உணவு உட்கொண்டால் செரிமானம் சரியாக
நடக்கும். நேரத்துக்கு உணவு உட்கொள்ளாவிட்டால் சுரக்கப்படும்
திரவங்கள் தன் கைவரிசையைக் காட்ட ஆரம்பிக்க குடல் புண்
போன்ற வியாதிகள் வர வாய்ப்பு அதிகம்.

        ஆகவே நேரத்துக்கு உண்பது அவசியமாகிறது.பசிக்கும்
நேரத்தில் உணவு கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
பசிக்கு உணவு கிடைக்காதபோது இருப்பது பட்டினி எனப்படும்.

         சிலர் வேண்டுமென்றேஉபவாசம் என்ற பெயரில் பட்டினி
கிடப்பார்கள்.அவர்களும் ஒரு விதத்தில் கொடுத்து வைத்தோரே.
ஏனென்றால் அது அவர்களாகவே மேற்கொள்வது.அதிலும் சிலர்
உபவாசம் என்னும் பெயரில் பல காரங்களாக பல ஆகாரங்கள் 
சாப்பிடுவதும் உண்டு. ஆனால் நம் நாட்டில் பசிக்கு உணவு
கிடைக்காமல் அரைப் பட்டினி,முழுப் பட்டினி, கொலைப் பட்டினி
என்று இருப்பவர்கள் ஏராளம். இவர்களை வறுமைக் கோடு
என்ற ஒன்றை உருவகப் படுத்தி அதற்குக் கீழே இருப்பவர்கள்
மேலே இருப்பவர்கள் என்று ஏதேதோ கூறுகிறார்கள்.

        ‘தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை
அழித்திடுவோம்”என்று பாரதி பாடினான். அன்று.அப்படிச் செய்
வதாயிருந்தால் இந்த ஜகம் என்றோ அழிக்கப்பட்டு அழிந்து
இருக்கவேண்டும். கூடவே அவனே “வாய்ச் சொல்லில் வீரரடி”
என்றுமல்லவா பாடிச் சென்றிருக்கிறான்.( புத்திசாலிதான் )

       ஆதங்கங்களில் எழும் எழுத்துக்களும் உணர்வுகளும் செயல்
படுத்த முடியாதபோது ஒரு கையாலாகாத்தனம் தோன்றுகிறது.

       நாளும் பாடுபட்டு உழைத்தும் இந்த ஒரு சாண் வயிற்றுக்கு
உணவு கொடுக்க முடியவில்லை என்றால் யாரை நோவது.?
பசித்திருப்பவன் முன் கடவுளே உணவு ரூபத்தில்தான் வர
வேண்டும். சில இடங்களில் இருப்பவனுக்கு சாப்பிடத் தடை.
இல்லாதவனுக்கு சாப்பாடு கிடைப் பதில் முடை.

       லட்சக் கணக்கில் பணம் செலவு செய்து பட்டினி கிடப்பதைப்
பறை சாற்றிக் கொண்டு, புகழ் தேடும் பாவி மனிதர்களுக்கு
இல்லாதவனின் கொடுமை எங்கே தெரிகிறது.?

        சில நேரங்களில் இந்தப் பூவுலகில் இருப்பது எல்லோருக்கும்
பொதுவாக இருக்கும்போது, இருப்பதை அனைவருக்கும் பங்கு
போட்டுக் கொடுக்கும் சித்தாந்தம் ஏதாவது நடைமுறைக்கு
வந்தால் நலமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

       பசியில் ஏழையின் பசி ஒருவகை.அவனுக்கு அது பழக்கப்பட்டு
வருகிறது.பணக்காரனின் பசி வேறு வகை.உடல் நலனுக்காகத்
திணிக்கப்படுவதுநடுவில் இருக்கும் மத்தியதரத்தினரின் பசிதான்
கொடுமையானது. கேட்டுப் பெறாதது; இரந்துண்ணவும் முடியாது.
ஒளவையார் பாடல் நினைவுக்கு வருகிறது. “ ஒரு நாள் உணவை
ஒழியென்றால் ஒழியாய்; இரு நாளைக்கு ஏலென்றால் ஏலாய்.
இடும்பைகூர் வயிறே ,உன்னோடு வாழ்தல் அரிது “என்ன
பிரயோசனம். வாழ்ந்துதானே ஆக வேண்டும்.சிலப்பதிகாரத்தில்
வரும் அட்சய பாத்திரம் எங்காவது கிடைக்குமா.?கிடைக்கா
விட்டால்தான் என்ன... இருப்பவன் ஒவ்வொருவனும் இல்லாத
ஒருவனுக்கு தினமும் ஒரு வேளை உணவாவது அளிக்கலாமே.
கொடுப்பதில் இன்பம் இருக்கிறது என்றும் உணர்ந்து கொள்ளலாம்

கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்
குடிக்கத்தான் கற்பித்தானா
இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான்
கொடுத்துத்தான் ரட்சித்தானா
அல்லைத்தான் சொல்லித்தான் யாரைத்தான்
நோவத்தான் ஐயோவெங்கும்
பல்லைத்தான் காட்டத்தான் பதுமற்றான்
புவியிற்தான் பண்ணினானே.
(இது பழங்காலப் புலவர் ஒருவரின் புலம்பல் )

      என்னென்னவோ நினைத்து என்னென்னவோ எழுதி விட்டேன்.
இன்னதுதான் எழுத வேண்டும் என்று ஒன்றுமில்லையே. எப்படி
இருப்பினும் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளேனே.!
---------------------------------------------------------------------------------