Sunday, December 2, 2012

UTOPIAN DREAM...?


                   உத்தோப்பியக் கனவா,.?
                   -----------------------------------


திரு ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தியின் பிறப்பும் இறப்பும் என்ற பதிவினைப் படித்தேன். மிக அழகாகச் சில கருத்துக்களைச் சொல்லி இருக்கிறார். அதைப் படித்து முடித்த பிறகு என்னுள் இருப்பவர்களைப் பற்றிய சிந்தனை ஓடியது. வலைப்பூவில் எழுதுபவன் என்ற முறையில் நானும் ஒரு எழுத்தாளன்தானே.எழுத்தின்மூலம் எங்காவது ஒரு நல்ல , சிறிய மாற்றத்துக்கு விதை விதைத்தால் நல்லதுதானே. . ஒருமுறை திரு அப்பாதுரை,.எழுத்தின் வெளிப்பாடு பலசமயம் பலவித புரிதல்களை ஏற்படுத்தக்கூடியதால், படிப்பவரும் திறந்த மனத்தோடு அடிப்படை நம்பிக்கையோடு படித்தால், இணையத்தில் அருமையான கலந்தெழுத்தாடல்களில் கலந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்என்று எழுதியிருந்தார் நானும் என் கருத்துகளை எடுத்துச் சொல்ல என்றும் தயங்கியது இல்லை.

இருப்பவர் பற்றிய எண்ணங்களில் எப்பொழுதும் என்னை வருத்தும் மனிதரில் ஏற்ற தாழ்வின் காரண காரியங்கள் பற்றியே இப்போதும் எழுதுகிறேன் அனைவருக்கும் சம வாய்ப்பு இருந்தும் ஏற்ற தாழ்வுகள் நீடித்தால் யாரும் யாரையும் குறை கூற முடியாது. ஆனால் உண்மை அப்படி இல்லையே. போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் பந்தயத்தில் பங்கேற்கும் அனைவரும் , ஓட்டப் பந்தயமானால் ஒரே கோட்டிலிருந்தோ, , மல்யுத்தமாகவோ, குத்துச் சண்டையாகவோ இருந்தால் அதே எடை எதிராளியுடனோ மோதுவதுதானே நியாயம். ,? ஆனால் நம் சமூகத்தில் போட்டி மிகுந்த HANDICAP –உடன் அல்லவா நடக்கிறது.

எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானென்றாலும் போதிய அளவு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளதா என்பது சந்தேகத்துக்குரியதே.பிறப்பொக்கும் என்று வாய்கிழியப் பேசுவோர் உண்மையில் அதில் நம்பிக்கை கொண்டுள்ளனரா, ? சிந்தித்துப் பார்க்க வேண்டும். SURVIVAL OF THE FITTEST- எனும் தேற்றம் மனிதனைப் பொறுத்தவரையில் ஒரு மாற்றுக் குறைந்தே உண்மையாகி இருக்கிறது. இல்லையென்றால் பலம் மிகுந்த யானையையே அதன் பலம் தெரியாதபடி அடக்கி இருக்க முடியுமா. ? ஆதியில் உடல் பலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தவன் நாளாவட்டத்தில் புத்தியை உபயோகித்து செய்யும் தொழில் மூலம் பேதம் உண்டாக்கினான். கடவுள் என்றும் சாதி என்றும் மதம் என்றும் பாகுபாடுகள் ஏற்படுத்தி ஆண்டை என்றும் அடிமை என்றும் வகைப் படுத்தி அடுத்தவன் நிமிர முடியாமல் இருக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் செய்தான். செய்யும் தொழிலால் அடையாளப் படுத்தப்பட்டு இன்னாருக்கு இன்ன வேலை என்று கூறி மற்றவன் வேறு எந்த தொழிலுக்கும் போகமுடியாதபடி அடிமைப் படுத்த மதம் என்றும் சாதி என்றும் , மனுதர்மம் என்றும் சாஸ்திரம் என்றும் கூறி சிந்திக்க வைக்கும் கல்விஅவர்களுக்கு தேவை இல்லை என்று நியாயப் படுத்தினான். ஆண்டாண்டுகாலம் அடிமையாய் இருந்து பழகி விட்ட மக்கள் மாக்களாகவே நடத்தப் பட்டனர். ஆங்கிலேயன் ஆட்சிக்கு வந்தபோது அவனது ஆட்சிக்குத் துணைபோனது அப்போது ஆண்டையாகஇருந்தவர்கள்தான். அப்போது படித்தவர்கள் அவனது ஆட்சிக்கு தேவைப் பட்டனர். நம்மிடம் இருந்த மனோபாவத்தை நன்கு பயன்படுத்தி அவனது ஆட்சி விருட்சமாக வளர நம்மிடையே இருந்த பிரிவுகளைப் பயன்படுத்திக் கொண்டான். கல்வி பெற்றவர்கள் சிந்திக்கத் துவங்கியபோது அவனது ஆட்சி அசையத் தொடங்கியது.


கல்வி என்பது சிந்தனையைத் தூண்டுவது. சுதந்திரம் பெற்றபோது, சமூகத்தின் அடியில் இருந்த மக்களுக்கு கல்வி தேவை என்று உணரப் பட்டு 25 ஆண்டுகாலத்தில் ஒதுக்கீடு முறையில் அவர்களை மேலே கொண்டு வரலாம் என்று எண்ணப் பட்டது. ஆனால் 25 ஆண்டுகாலத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தாழ்த்தப் பட்டவர்களும் பின் தங்கியவர்களும் கல்வியிலும் HANDICAP  பந்தயத்தில் வெற்றிபெறும் வாய்ப்பு இல்லாமலேயே இருந்தனர்.

இம்மாதிரியான ஒதுக்கீடுகள் தேவையா என்னும் கேள்வி எழுகிறது. படித்த குடும்பப் பின்னணியில் இருப்பவன் படித்து முன்னுக்கு வருவது இயல்பே. ஆனால் ஆண்டாண்டுகாலமாக கல்வியறிவே இல்லாத குடும்பப் பின்னணியில் இருப்பவன் பந்தயத்தில் ஓடுவதே சிரமம் . அப்படி இருப்பவருக்கு சலுகை அவசியம்தானே. ஆனால்... எத்தனை ஆண்டுகள்.?ச்லுகை பெற்று முன்னுக்கு வருபவன் தன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள இவன் ஆண்டை மனோபாவத்தை வளர்த்துக் கொள்கிறான். இப்போதெல்லாம் முன்பு உயர் சாதி என்று கருதப் பட்டவர்கள் முகவரி காணாமல் போய் அவர்களது இடத்தை சாதி இந்துக்கள் எடுத்துக் கொண்டு விட்டார்களோ என்றே தோன்றுகிறது. கிராமங்களில் மதில் சுவர்களும் தேனீர் குடிக்கத் தனி குப்பிகளும் யார் கடை பிடிக்கிறார்கள் ? சிந்திக்க வேண்டும். .

அரசு கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர முயல்வது தெரிகிறது. இலவச மதிய உணவு, சீருடை, பேரூந்துகளில் சலுகை, இலவச சைக்கிள், என்றெல்லாம் கொண்டு வந்தாலும் அளிக்கப் படும் கல்வி தரமாயில்லை என்று உணர்ந்து சமச்சீர் கல்வி என்று கொண்டுவந்தாலும் கல்வியின் தரம் போதுமானதாக இல்லை. இப்போது கல்வி ஒரு வியாபாரமாகி விட்டது. ஆங்கிலக்கல்வி, கான்வெண்ட் கல்வி என்று புற்றீசல்போலக் கல்விக் கடைகள் எங்கும் வியாபித்து இருக்கிறது. நான் கல்வி கற்றது தமிழ்வழியில்தான் ஏறத்தாழ எல்லா பள்ளிக்கூடங்களிலும் தமிழ் வழியில்தான் கற்பித்தனர். கல்வி வியாபாரமாகக் கருதப் படவில்லை. இந்த மாற்றத்துக்கு ஈடு கொடுக்கவே ஏழைகளுக்கு 25 % இட ஒதுக்கீடு எல்லாப் பள்ளிகளிலும் இருக்க வேண்டும் என்று சட்டம் வந்திருக்கிறது. அதை அமல் படுத்துவதில் ஏகப்பட்ட தடங்கல்கள்.

இப்போதெல்லாம் நாம் எந்த விஷயத்தையும் நடுத்தர வர்க்க மனப் பான்மையுடனே அணுகுகிறோம் கல்வியில் மூன்று வயதுக் குழைந்தையைப் பள்ளியில் சேர்க்க அதிகாலை நான்கு மணிக்கே வரிசையில் நின்று ஆண்டொன்றுக்கு ரூ.50,000/ தருவதை பெருமையாய் நினைக்கிறோம். கேட்டால் தரமான கல்விக்கு அவ்வளவு செலவு செய்யத்தான் வேண்டி இருக்கிறது என்று மூக்கைச் சிந்துகிறோம். அதிகப் பணம் கொடுத்துப் பெறுவது எல்லாம் தரமானது என்னும் தவறான எண்ணம் நம்மை ஆட்கொண்டு விட்டது. இந்த மனோபாவம் சிறிது சிறிதாக சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் பரவி வருவது வருந்தத்தக்க விஷயம் நகர வசதிகள் கொண்ட கிராமப்புறங்கள் எதிர்மறை விளைவுகளைக் கொண்டு வருகிறதோ என்னும் ஐயம் ஏற்படுகிறது.

மனிதரில் இருக்கும் ஏற்ற தாழ்வுகள் மறைய வேண்டுமென்றால்  நூறு சதவீதக் கல்வி அவசியம். அதுவும் எல்லோருக்கும் சம மாயிருக்க வேண்டும். இதை அமல் படுத்த வேண்டுமானால் கல்வி அரசுடமை ஆக்கப் பட வேண்டும். கல்வி வியாபாரம் முற்றிலும் ஒழிக்கப் பட வேண்டும் இருப்பவன் இல்லாதவன் என்ற பாகுபாடு இல்லாமல் கல்வி இலவசமாக அனைவருக்கும் வழங்கப் பட வேண்டும். சமச்சீர் கல்வி சமச்சீர் உடை, சமச்சீர் உணவு என்று எல்லோருக்கும் கட்டாயமாக்கப் பட வேண்டும்.அந்த விதத்தில் பிஞ்சு உள்ளங்களில் உயர்ந்தவன் ,தாழ்ந்தவன், ஏழை பணக்காரன் என்ற என்னாண்ங்கள் எழாமல் அனைவரும் சமம் என்னும் எண்ணம் வளரும். வாய்ப்புகள் சமமாயிருக்கும்போது வாழ்க்கையில் போட்டி ஆரோக்கியமானதாக இருக்கும்.   

 தேவைப் பட்டால் தனி மனித உரிமை இவற்றில் மறுக்கப் பட வேண்டும் இதை நிறைவேற்ற ஒரு BENEVOLENT  சர்வாதிகார ஆட்சி வந்தாலும் நல்லதே. இது நடந்தால் நமது வருங்காலத் தலை முறையில் ஏற்ற தாழ்வு இருக்காமல் இருக்கலாம் என்று நம்புகிறேன். ஆனால் மனசின் இன்னொரு மூலையில் நான் நினைப்பது ஒரு UTOPIAN  தேசத்தில்தான் சாத்தியம் என்று தோன்றுகிறது.      
           
. 



   



  

                   

5 comments:

  1. உங்கள் எண்ணங்கள் போல் முதலில் கல்வித் 'தொழில்' - 'சேவை'யானால் சரி...

    ReplyDelete

  2. இட்ட பதிவு சரியாக வந்திருக்கிறதா என்று பார்க்கும்போதே திரு .தனபாலன் பின்னூட்டத்தின் வேகம் வியக்க வைக்கிறது. நன்றி நண்பரே.!

    ReplyDelete
  3. சர்வாதிகார அரசு வந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  4. உத்தோப்பியா.. நல்லாவே இருக்கு.
    பழனி கந்தசாமிக்கு ஒரு ஜே.

    இந்தியாவில் கல்வி ஒரு வியாபாரமாகியிருப்பது போல் உலகில் நான் பார்த்த நாடுகளில் வேறெங்கும் இல்லை. இந்த வியாபாரம் ஒதுக்கீடுகளை எல்லாம் மீறி வளர்ந்திருப்பது ஆச்சரியம். ஒதுக்கீடு என்பது அந்த நாளில் "கல்வி மற்றும் பண வசதி குறைவான பரம்பரையில் பிறந்த" தவறுக்காக ஒரு சமூக ஈடாக இருந்தது.. இப்போது ஒதுக்கீடோ இல்லையோ எல்லாருமே பணம் கொடுக்க வேண்டியிருக்கிறதாமே? எங்கிருந்து இந்த சிஸ்டம் உருப்படும்? அதற்கு மேல் லட்சக்கணக்கில் செலவு செய்து எஞ்சினியரிங் படிப்பவர்கள் ஜாவா ஜோமா என்று ஏதோ அரைக்காசுக்கு எழுதிக்கொண்டிருப்பது பெற்ற கல்விக்கு பொருந்தாமல் அழிகிறது.. இது இந்தியாவுக்குப் பெரிய நஷ்டமாகாமல் இருக்க தொழில்நுட்ப ஆய்வுக்கூடங்கள் வளரவேண்டும். இல்லையெனில் மிகவும் சிரமமான சூழல் வரக்கூடும்.

    என்ன கஷ்டமானாலும் எப்படியோ புரண்டு அடித்து படித்து முடித்து வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் என்னை ஆச்சரியப்படுத்துகிறார்கள் - அவர்களுக்கு ஏமாற்றங்கள் குறைவாக இருக்க வேண்டுமே என்று மனதின் ஏதோ ஒரு மூலையில் முனகல்..

    ReplyDelete

  5. @ அப்பாதுரை-- வாய்ப்புகள் குறைவாய் இருக்கும்போதே முக்கி முனகி முன்னுக்கு வருபவர்கள் என்னையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்கள். வாய்ப்பும் கிடைத்துவிட்டால் எப்படி ஜொலிப்பார்கள் என்னும் ஆதங்கமே என் பதிவு. நீங்கள் படித்து கருத்திட்டது நிறைவாய் இருக்கிறது.

    ReplyDelete