லக்ஷ்மி கல்யாண வைபோகம்
-------------------------------------------
”திருமணமண்டபத்துக்கு அட்வான்ஸ்
கொடுத்தாயிற்று.சமையல்காரர் ஏற்பாடு செய்ய வேண்டும்.நாதஸ்வரம் மேளம், வைதீகாள்
எல்லாருக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். எல்லாம் மலைப்பா இருக்கு. கடவுளே நீதானப்பா
எல்லாம் நல்ல படியாய் நடக்க அருள வேண்டும்.”
”கலியாண நாள் குறித்து, பத்திரிக்கை
அடித்து மண்டபம் ஃபிக்ஸ் ஆயிற்றே, அதுவே பெரிய வேலை. எல்லாம் நல்ல படியாய்
நடக்கும். இவளுக்குக் கல்யாணம் முடிஞ்ச கையோட அடுத்தவளுக்கும் வரன் தேட வேண்டும்.” – நடக்க
இருக்கும் திருமண நிகழ்வு பற்றியே ராகவன் தைலா தம்பதியினரின் பேச்சும் மூச்சும்
இருந்தது.
ஒரு நடுத்தரக் குடும்பத்தில் திருமணம் நடத்துவது
என்பது பெரிய காரியம்தான். நல்ல வேளை .ராகவன் தைலா தம்பதியினருக்கு இரண்டு பெண்கள்
மட்டும்தான். பெண்கள் காதல் கீதல் என்று எதிலும் இறங்கவில்லை. அப்படி
இருந்திருந்தால் ஒரு வேளை திருமணம் நடத்துவது எளிதாயிருக்குமோ.என்னவோ. எந்த
சம்பிரதாயத்தையும் விட முடியாது.. ஜாதகம் பார்ப்பது முதல் மாப்பிள்ளைக்குச் செய்ய
வேண்டிய சீர் செனத்திகள் எதையும் விடமுடியாது. லக்ஷ்மிக்கு ( அதுதான்
மூத்தவளுக்கு)ஜாதகப் பரிவர்த்தனை எல்லாம் முடிந்து, பொருந்தியதும், பிள்ளை
வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. லௌகீக விஷயங்கள் பேச வேண்டும். சரியாய் வந்தால்
பெண்பார்க்க வருவார்களாம். There was no choice. பெண்ணை அல்லவா பெற்றிருக்கிறார்கள். ராகவன் தன்
தம்பியைக் கூட்டிக் கொண்டு கேரளத்தில் பேரவூர் ( என்ன ஊரோ ) போயிருந்தார். பிள்ளை
எஞ்சினீரிங் படித்து நல்ல உத்தியோகத்தில் இருந்தார். தம்பி மூலம் விசாரித்ததில்
நல்ல பையன் என்று கேள்விப்பட்டார். கேரளத்தில் வீடு தேடிப் போனபோது அவர்கள்
இவர்களை வரவேற்ற விதம் திருப்தி அளிக்கவில்லை. ஏதோ இரண்டாம்தர மனிதர்கள் போல்
கருதினார்கள். என்ன செய்வது .? பெண்ணைப் பெற்றவர்கள் ஆயிற்றே. பல்லைக்
கடித்துக்கொண்டு ( முன் வாயால் சிரித்து கடைவாயைக் கடித்து ) எல்லாக்
கேள்விகளுக்கும் பதில் சொன்னார்கள். பையனுக்குப் பெண்ணைப் பிடித்திருந்தால் (
பெண்ணுக்குப் பையனைப் பிடிக்க வேண்டாமா.?)என்ன சீர் செய்வீர்கள் என்று அவர்கள்
கேட்க , என்ன எதிர்பார்க்கிறீர்கள் என இவர்கள் கேட்க சில நிமிஷ கபடி
ஆட்டத்துக்குப் பிறகு குறைந்தது முப்பது பவுன் நகை போடவேண்டும்; குடித்தனம் நடத்த
பாத்திரங்கள். வீட்டுக்குத் தேவையான பீரொ, கட்டில், மேசை சேர் பையனுக்கு கைக்
கடிகாரம் , கோட், சூட், என்று பெரிய பட்டியலே கொடுத்தார்கள். மொத்தத்தில் பையனை
விலை கொடுத்து வாங்க வேண்டும் என்பது புரிந்தது. அப்படியே விலை கொடுத்து
வாங்கினாலும் பெண்தான் பையன் வீட்டில் குடித்தன்ம் நடத்தவேண்டும். அங்கு மாமனார்
மாமியார் என்று எல்லோருக்கும் செக்கு மாடு மாதிரி உழைக்கவேண்டும். ராகவனுக்குத்
தலை தொங்கிவிட்டது. பரம்பரை சொத்து என்று ஏதும் கிடையாது. பெண்கள் பிறந்தது முதல்
கையைக் கட்டி வாயைக் கட்டி ஏதோ கொஞ்சம் சேர்த்து வைத்தது முதல் பெண்ணுக்கே காணாது
போல் தோன்றியது. இதெல்லாம் போக திருமண்ம் நடக்க வேண்டியதும் இவர்கள் செலவு. .” என்ன யோசிக்கிறீர்கள். பையன் மெத்தப் படித்த எஞ்சினீயர்,
கை நிறைய சம்பளம் வாங்குகிறான். அவனுக்குப் பெண்கொடுக்க நீ, நான் என்று தினமும்
வருகிறார்கள். நாங்கள் கேட்டதே சொல்பம்.இவ்வளவும் அதிகம் என்று தோன்றினால் நீங்கள்
தாராளமாக வேறு இடம் பார்க்கலாம் “ ஏதோ பிசினெஸ் பேசுவது போல் பேசிக் கொண்டே
இருந்தார். ராகவனின் தம்பிக்கு இடம் தகைந்து வராது என்று தெரிந்ததும் காட்டமாக
ஏதாவது சொல்ல வேண்டும் என்பது போல் இருந்தது. ராகவன்தான் அடக்கினார்.. ஊருக்குப்
போய் மனைவியையும்
கலந்தாலோசித்துப் பிறகு தெரியப் படுத்துவதாகக் கூறி வெளியே வந்து விட்டார். அவரைப்
பார்க்கவே பாவமாக இருந்தது ராகவனின் தம்பி மூலம் வந்த வரன் ஆனதால், பின்னொரு சமயம் அந்தப்
பையனிடம் அவர் பேசியபோது. பெற்றோர்களை மீறி ஏதும் செய்ய முடியாது என்று கூறி
மழுப்பி விட்டார், அந்த இக்காலப் பிரதிநிதி.
அந்த இடம்
சரியாகாததால் மீண்டும் வரன் தேடி இப்போது எல்லாம் கூடி வந்து வேறு ஒரு இடத்தில்
சம்பந்தம் கூடி வந்திருக்கிறது. மாப்பிள்ளை க்ராஜுவேட். ஒரு எண்ணை சுத்திகரிப்புக்
கம்பனியில் நல்ல உத்தியோகம் முடிந்தவரை திருமணத்தை சிறப்பாகச் செய்யுங்கள் என்றுமட்டும்
கூறினார்கள். என்ன ஒரு குறை என்று சொல்வதானால், அவர்கள் குடும்பம் பெரியது.
லக்ஷ்மி திருமணம் முடிந்து போனால் மாமியார், ( மாமனார் இல்லை ) மச்சினன்மார்,
நாத்தனார்கள் என்று இவள் இருக்குமிடம் அடையாளம் தெரியாமல் போய்விடும். செல்லமாகச்
சின்னக் குடும்பத்தில் வளர்ந்தவள்.. இவள்தான் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
தைலாவுக்கு ஐந்து
சகோதரர்கள் இரண்டு சகோதரிகள். ஒவ்வொருவரும் டிபிகல் கூட்டுகுடும்பப் பிரதிநிதிகள்.
இந்தியாவின் பலபகுதிகளில் பிழைப்புதேடிச் சென்றவர்கள். ராகவனும் ஒரு பெரிய
குடும்பத்தில் இருந்து வந்தவன் என்றாலும் கூட்டு குடும்பத்தில் வளர்ந்தவர் என்று
சொல்ல முடியாது வயதான பாட்டியிடம் வளர்ந்தவர். ஒரே சகோதரி பெரிய குடும்பி. இந்தத்
தலைமுறையில் நடக்கும் முதல் திருமணம். ஹைதராபாதில் நடக்க இருந்தது. அநேகமாக
எல்லோரும் திருமணத்துக்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர்.
யார் என்ன
திட்டமிட்டாலும் நடப்பவை எல்லாம் திட்டமிட்டபடியா நடக்கிறது.?மாப்பிள்ளைப் பையனின்
தங்கையின் கணவன். சென்னையில் ரெயில் டிக்கெட் வாங்க ஆட்டோவில் ஏறி ரயில்
நிலையத்துக்கு போகச் சொல்லி மிகவும் சோர்வாக இருந்ததால் சற்றே கண்
அயர்ந்திருக்கிறார். ரயில் நிலையம் வந்தும் அவர் இறங்காதது கண்டு ஆட்டோ ட்ரைவர்
அவரை எழுப்ப முயன்றவர் அதிர்ச்சிக்குள்ளானார் ஆட்டோவில் பயணித்தவர் எழுந்திருக்கவே
இல்லை. இறந்திருந்தார். யார் என்ன என்று ஒன்றுமே தெரியாத ஆட்டோ ட்ரைவர்
போலீசுக்குத் தகவல் கொடுக்க. அவர் உடைமைகளில் இருந்து ஒரு டெலிபோன் நம்பர் கிடைக்க.
தொடர்பு மேல் தொடர்பு கொண்டு ஹைதராபாதில் இருந்தவர்களுக்குத் தகவல் வந்து சேர ஒரு
நாள் பொழுதாகி விட்டது.
திருமண வீட்டில்
அனைவரும் இடிந்துபோய் இருந்தனர். ஏதும் செய்ய அறியாதவர்கள் முதலில் உற்ற உறவினர்
அனைவருக்கும் திருமணம் தள்ளிப் போடப் பட்டிருக்கிறது என்று தகவல் மட்டும்
கொடுத்தார்கள். திருமணத்தின் தடைக்கான காரணம் தெரியாமல் ஆளாளுக்கு தோன்றுவதைக்
கற்பனை செய்து கொண்டனர். ராகவன் தம்பதிகளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
சம்பந்திகளிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்றும் தெரியவில்லை. திருமணம்
தள்ளிப்போவதால் ஏற்கெனவெ செய்த செலவுகள் எல்லாம் வீண் என்றாகி விட்டது. ராசி
இல்லாத பெண் வருவதற்கு முன்பே ஒரு உயிரை காவு வாங்கி , நாத்தனார் ஆகப் போகிறவளை
விதவை யாக்கி விட்டாள். இந்தத் திருமணம் நடக்காது என்று சொல்லி
விட்டால்......ராகவன் தம்பதியரால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. பேசவும்
முடியாமல் பேசாமல் இருக்கவும் முடியாமல், ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு
மாப்பிள்ளையின் தாயாரைப் பார்க்கப் போனார்கள். முதலில் அந்த அம்மாள் முகம்
கொடுத்துக்கூடப் பேசவில்லை. பெண்ணைப் பெற்ற காரணத்துக்காக எதையும் பொருட்பத்தாமல்
திருமண விஷயம் பற்றிப் பிரஸ்தாபித்தார்கள். மாப்பிள்ளையின் அம்மா எப்படி
இருந்தாலும் மாப்பிள்ளையும் அவரது உடன் பிறந்தவர்களும் மிகவும் ப்ராக்டிகலாகப்
பேசினார்கள். எதிர் பாராமல் நடந்த நிகழ்வுக்கு லக்ஷ்மி எப்படிப் பொறுப்பாவாள்
என்று அம்மாவிடம் வாதாடினார்கள். இதில் கணவனை இழந்த அந்தப் பெண் எந்த அபிப்பிராயத்தையும்
கூறாமல் இருந்தது. ராகவன் தம்பதிகளுக்கு சற்று வருத்தமாக இருந்தது. கடைசியில்
இன்னொரு முஹூர்த்தம் பார்க்கப் பட்டது.
லக்ஷ்மியின்
கல்யாணத்துக்கு அநேகமாக எல்லா உறவினர்களும் வந்தனர். திருமணம் நடந்த காலம் நல்ல
வெய்யில் காலம். ஹைதராபாதில் காலைக் கீழே வைத்தாலெயே சுட்டது. வந்திருந்தவர்கள்
உறங்க திருமணத்துக்கு முதல் நாள் தைலாவின் சகோதரர்கள் திருமண சத்திரத்தையே நிறைய
தண்ணீர் விட்டுக் கழுவி ஓரளவு சூட்டைக் குறைத்தனர். கேலியும் கிண்டலுமாக யார்
மனதும் புண்படாத முறையில் குறிப்பிட்ட நேரத்தில்
மாதரார்
தங்கள் மகளென்று பார்த்திருக்க
மாப்பிள்ளை
முன் வந்து மணவறையில் காத்திருக்க
காதலாள் மெல்லக்
கால் பார்த்து நடந்துவர
கன்னியவள்
கையில் கட்டிவைத்த மாலைதர
காளை
திருக்கரத்தில் கனகமணி சரம் எடுக்க
ஆனந்தம்
பாடு என ஆன்றோர்கள் குரல் கொடுக்க
கொட்டியதுமேளம்
குவிந்தது கோடிமலர்
கட்டினான் மாங்கல்யம் மனை வாழ்க துணை வாழ்க
குலம் வாழ்க”
என லக்ஷ்மி கலியாண வைபோகம் நடந்தேறியது.
----------------------------------------------------
.