சனி, 31 ஆகஸ்ட், 2013

நான் கனாக் காண்கிறேன் நண்பா......


                                                 I HAVE A DREAM
                                                 ----------------------




இரண்டாம் உலகத் தமிழ்ப் பதிவர் விழாவில் பங்கெடுக்க வேண்டும் என்னும் ஆசை அளவில்லாமல் இருந்தது. எப்படியாவது பங்கேற்று விடலாம், அப்படி பங்கேற்க முடிந்தால் இவ்வுரையை அனைவர் முன்னிலையிலும் நிகழ்த்த வேண்டும் என்றிருந்தேன். ஆனால் என்னால் பங்கேற்க முடியவிலை. இருந்தால் என்ன. ? பதிவாக எழுதி விட்டேன்.

அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமாயுள்ள உலகத் தமிழ் பதிவர் பெருமக்களே,முதற்கண் என் வணக்கம் முகந்தெரியா நட்புகளை முகந்தெரிந்து முகமன் கூறி வரவேற்றுக் களிக்கும் நல் உள்ளங்களே, இந்த இனிய வேளையில் ஒரு கனமான தலைப்பில் நான் பேசுவேன் என்று நீங்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டீர்கள்.ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கான உள்ளங்களைச் சிந்திக்க வைக்க இது போன்ற சந்தர்ப்பம் அமையுமோ தெரியாது. அப்படியே அமைவதாய் இருந்தாலும் உங்களுடன் கருத்துக்களைப் பகிர நான் இருப்பேனோ தெரியாது. காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது சொல் வழக்கு, அதைத்தான் நான் செய்கிறேன்.


நண்பர்களே எனக்கு ஒரு கனவு உண்டு. “ பெரிய மார்ட்டின் லூதர் கிங் “ என்னும் நினைப்பு என்று நீங்கள் எண்ணலாம். ஏன் அவர் மட்டும்தான் கனவு காண முடியுமா.?அவர் அமெரிக்காவின் கறுப்பின மக்களுக்காகக் கனவு கண்டார். நான் நம் சமுதாய மககளுக்காகக் கனாக் காண்கிறேன்.
   கனவுகள் பகற்கனவாய் , நிகழ முடியாததாய் இருக்கக் கூடாது.உள்ளத்தின் ஆதங்கங்கள் நலம் விளைக்கும் கனவாய் மலர்ந்து நிஜமாய் நிகழக்கூடாதா.? பல முறை நான் என் பதிவுகளில் மனம் திறந்து பகிர்ந்து கொண்ட விஷயங்கள்தான் இப்போது உங்கள் முன் கொட்டக் காத்திருக்கிறேன். என் பதிவுகளைத் தொடர்பவர்கள் சுமார் நூறு பேர் இருக்கலாம். அவர்களிலும் எழுத்தை ஒருபொழுது போக்காய் நினைப்பவர்கள் அறுபது சதவீதத்துக்கும் மேலிருக்கலாம். மீதி இருப்பவர்களில் பலரும் கருத்துக்களில் இருந்து மாறுபடலாம். ஏதோ ஒரு சிலர் கருத்துக்களுடன் ஒன்று பட்டாலும் ஏதும் செய்ய முடியாது என்று எண்ணி தூரப் போகலாம். ஆனால் நான் கூறும் செய்திகளில் உண்மை ஒளிவீசுகிறது என்பதில் கருத்து வேறுபாடு இருக்காது என்பது அவரவர்  நன்னெஞ்சங்களுக்குத் தெரியும். இங்கு கூடியுள்ள அனைவருக்கும் தெரியும் , எல்லோரும் சொல்வதுதான் , வள்ளுவன் முதலே சொல்லி வருவதுதான். “பிறப்பொக்கும் இதை உண்மையில் உணர்கிறோமா. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மார்ட்டின் லூதர் கிங்   I HAVE A DREAM என்று சொன்னான் I have a dream that my four little children will one day live in a nation where they will not be judged by the colour of their skin but by the content of their character.”
இங்கு நான் சொல்கிறேன் “ நான் ஒரு கனவு காண்கிறேன். நம்மிடையே ஒரு சமுதாயம் உருவாகும் கனவு காண்கிறேன், அதில் ஏற்ற தாழ்வு என்ற ஒன்று இல்லாதிருக்கக் காண்கிறேன் அரசியல் சட்டம் உறுதி அளிக்கும் சமத்துவம் உரிமை எல்லாம் எல்லோருக்கும் சென்றடையக் கனாக் காண்கிறேன் ஏனென்றால் இவை எல்லாம் ஏட்டளவிலேயே இருக்கிறது ஏட்டளவில் உறுதியளித்திருந்தாலும் மனசளவில் ஏற்றுக் கொள்ளப் பட வில்லையே.
நண்பர்களே பலருக்கும் தெரிந்திருக்கும் இக்குறைபாடுகள் நீங்க என்ன வழி..?
பிறப்பொக்கும் என்று நம்பும் நாம் . அவரவர் வாழ்க்கைமுறை அமைவது அவர்களது பூர்வ ஜென்ம பலன் என்று தப்பித்துக் கொள்ள முடியாது. இந்த சமுதாய நடைமுறைகளுக்கு நாமோ நம்முடைய முன்னோரோ காரணம் என்பது நிச்சயமாகச் சொல்ல முடியும்.அற்றைக் காலத்தில் குறிப்பிட்ட காரணங்களுக்காக பகுத்து விடப்பட்ட பணி முறைகள் யாரும் எதிர்பார்க்கா விதத்தில் ஆதிக்க முறைகளுக்கு வழி வகுத்து விட்டது. சரி எது தவறு எது என்று கேள்வி கேட்கும் திறன் தரக்கூடிய கல்வி பலருக்கும் மறுக்கப் பட்டது
இது அந்நியரின் ஆட்சிக்  காலத்தில்தான் வேர் பிடித்தது என்று கூறி சமாதானம் அடைய முடியாது. காரணகர்த்தா யாராவது இருந்து போகட்டும். இன்றும் இந்நிலை நீடிக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. அங்கும் இங்குமாக COSMETIC  சரிகட்டல்கள் தென்படுகின்றன. ஒடுக்கப் பட்டோருக்கு ஒதுக்கீடுகள் என்று நடை முறையில் சில சட்டங்கள் காண்கிறோம் சட்டங்களால் கொண்டு வரக் கூடிய மாற்றங்கள் அல்ல.இவை. மன மாற்றங்கள் வர வேண்டும் அம்மாதிரியான மாற்றங்கள் நிகழ்த்தக் கூடிய சட்டங்கள் வேண்டும் எல்லோருக்கும் சம உரிமைகள்  என்பது மனசளவில் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டும் அது நடக்கும் என்று நான் கனாக் காண்கிறேன். சாதி மத பேதங்களும் ஏழை பணக்காரன் எனும் வேறுபாடுகளும் வளர்ந்து வரும் சமுதாயத்திடம் இருக்காது என்று கனாக் காண்கிறேன். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் வளரும் பிஞ்சுகள் . எதிர்காலத் தலை முறைகள் மனம் பாதுகாக்கப் பட வேண்டும். அது கல்விக் கூடங்களில்தான் தொடங்க வேண்டும். எல்லோருக்கும் கல்வியில் சம வாய்ப்பு என்று இருந்தால் சிறார்களின் சிந்தைகளில் வேற்றுமை எண்ணம் உருவாகாது. எல்லோருக்கும் இலவசக் கல்வி, இலவசச் சீருடை, இலவச உணவு என்று கட்டாயப் படுத்தினால் மலரும் பிஞ்சு மனங்களில் வேற்றுமை எண்ணங்கள் உருவாகாது. ஒதுக்கீடு என்று கீழே உள்ளோரை மேலே கொண்டுவரும் முயற்சியில் மேலே இருப்பவர் மனம் மாற வாய்ப்பில்லை. ஏழை பணக்காரன் என்று கல்வியை வியாபாரம் ஆக்கும் முயற்சி தொடரும். கல்வி என்பது அரசாங்கக் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் வர்க்க பேதமற்ற , ஏற்ற தாழ்வில்லாத கல்வி முறையே நம் அடுத்த சந்ததியினரிடமாவது “பிறப்பொக்கும் என்னும் உண்மை நிலையை நிலை நிறுத்தும் என்று நான் கனாக் காண்கிறேன்.

முகம் தெரிந்திராத பதிவுலக நண்பர்களைக் கண்டோம் , சிரித்தோம், உண்டோம் மகிழ்ந்தோம் என்று மட்டுமல்லாமல் சீரிய சிந்தனைகளின் விளை நிலமாகவும் இப்பதிவர் பெருவிழா இருக்க வேண்டும் என்ற  எண்ணத்தின் உந்தலே  இவ்வுரைக்குக் காரணம். அனைவருக்கும் வணக்கம். நன்றி.

புதன், 28 ஆகஸ்ட், 2013

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி.


                     
                   

  


ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி
கண்ணன் பிறந்த நாளான இன்று கண்ணனைப் பற்றிய நினைவலைகள் பதிவில். கண்ணன் என்றதும் அவனது மாயைகள் தான் நினைக்கத் தோன்றுகிறது. பிறக்கும்போதே தான் கடவுளின் அவதாரம் என்று தெரிந்தே வாழ்ந்த கிருஷ்ணன் அவ்வப்போது தன் மாயாஜாலங்களைக் காட்டிச் சொல்லிப் போனதுதான் என்ன.?
இல்லாததை இருப்பது போல் தோற்றுவதும் , இருப்பதை இல்லாதது போல் தோற்றுவிப்பதும்  மாயையின் விளைவு என்று புரிதல் தவறல்லவே .உலகே மாயம் வாழ்வே மாயம் என்பதும் சரிதானே.. நிரந்தரம் என்பது ஏதுமில்லை, நிகழ்வதுகளிலும் நிச்சயமில்லை.  
கருத்துப் பிழைகளும் காட்சிப் பிழைகளும் நிறைந்ததே வாழ்க்கை

மாயையின் பிடியில் மயங்கி இருப்பதே வாழ்க்கையின் நிதர்சனம்
னத்தின்  மயக்கமே  மாயை என்றறிவோம்
உண்டு உறங்கி எழுவது நிச்சயமில்லை போகுமிடம்
தெரியாமல் போகாத ஊருக்குப் பொருள் ஈட்டி யாருக்கென்ன லாபம்
பேதம் பாராமல் பகிர்ந்துண்டு  வாழ்தல்  பெருமை தரும் 
ஈதலின் இன்பம் கொடுத்தனுபவித்தால் புரியும் முன்பொரு முறை நான்   எல்லாமே மாயைதான் என்ற பதிவில் எழுதி இருந்தது.படிக்க விரும்புவோர் இதைச் சுட்டுங்கள்





அவன் பிறந்த நாள் என்று நாம் கொண்டாடும் இந்நாளில் இம்மாதிரி எண்ணங்கள் தோன்றுவதும் சரிதானே. ஆனால் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி என்னும் இந்நாளில் சில மனசுக்கு இதந்தரும் நினைவுகளும் இல்லாமல் இல்லை. பண்டிகைகள், திருவிழாக்கள் எனும் போது இளம்பிராயத்து நினைவுகளும் முட்டி மோதி முன் வருகிறது. நான் என்னுடைய பத்து பதினோரு வயதுகளில் என் தந்தை வழிப் பாட்டியின் வீட்டில் கோவிந்தராஜபுரம் என்னும் ஒரு அக்கிரகாரத்தில் ( கல்பாத்திக்குப் பக்கம்) இருந்தேன். ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அன்று சிறுவர்களுக்குக் கொண்டாட்டம்தான். அன்று கிராமம் பூராவும் குட்டிக் கிருஷ்ணர்களின் தோற்றமாகவே இருக்கும். சிறுவர்கள் கிருஷ்ண வேடத்தில் ஆளுக்கொரு கொம்பைக் கையில் ஏந்தி கையில் ஒரு சொம்பும் எடுத்துக் கொண்டு வீடு வீடாகப் போய் “ ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி, சிவராத்திரி ஜெயந்திஎன்று ஏதோ சொல்லிக் கொண்டு (சரியாக நினைவுக்கு வரவில்லை) போவார்கள். சில வீடுகளில் சிறுவர்களுக்குக் கோவணமாகத் துண்டுதுணிகள் குச்சியில் கட்டுவார்கள். சில வீடுகளில் கொண்டு போகும் செம்பில் எண்ணை ஊற்றிக் கொடுப்பார்கள்.சிறுவர்களே அன்றுமாலை சப்பரம் ஒன்று செய்து அதில் கண்ணனை இருத்தி ஊர்வலம் கொண்டு செல்வார்கள். பிற்காலத்திய நினைவுகள் ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைக் கண்ணனின் பாதச் சுவடுகளை அவன் வந்ததுபோல் தெரியப் பதிப்பார்கள்.பிறகு சீடை முறுக்கு போன்ற பட்சணங்கள் நாக்கைச் சப்பு கொட்ட வைக்கும். 





கிருஷ்ணனின் பிறந்த நாளில் நாங்கள் மதுராவுக்குச் சென்றுவந்ததும் நினைவுக்கு வருகிறது ஜெய்ப்பூரில் இருந்து மதுரா வந்தோம். என் அண்ணாவின் பெண் அங்கிருந்தாள். இரண்டு நாட்கள் தங்கினோம். கண்ணன் பிறந்த ஜென்மத் தலம் என்று கூறப்படும் சிறைச் சாலையையும் கண்டோம், அங்கு பாது காப்புக் கெடுபிடிகள் மிகவும் அதிகம். அதற்கான காரணம் அதற்கு முன் நிகழ்ந்திருந்த அயோத்தி பாபர் மசூதி இடிப்புத்தான் என்பது புரிந்தது..மத வெறியைத் தூண்ட ஒரு சிறு பொறி போதும். ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால் historically நம் பிரபலக் கோயில்களைச் சுற்றிலும் (அல்லது வெகு அருகாமையில்) மசூதிகள் இருக்கின்றன. காசி விசுவநாதர் கோயிலும் சரி , மதுரா கிருஷ்ணர் கோயிலும் சரி மசூதிகளை ஒட்டியே இருக்கின்றன, இனம் மதம் மொழி இவை எப்போதுமே மிகவும் சாக்கிரதையாக கையாளப் படவேண்டும் மனிதனை சிந்திக்க வைக்காமலேயே வன்முறையைத் தூண்டும் சக்தி அவற்றுக்கு இருக்கிறது


மதுராவைச் சுற்றி சுமார் முப்பது கிலோமீட்டருக்குள் கண்ணனின் லீலைகள் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் கோவர்தன், நந்த்காவ்ன்,,பர்சானா, த்வாரகேஷ் என்னும் இடங்கள், மற்றும் யமுனா நதி. அண்மையில் ISCON  நிறுவியுள்ள் கிருஷ்ணர் கோயில் எல்லாமே நினைவுக்கு வருகிறது. ISCON  கோயிலில் கண்ணாடிக்குள் கண்ணனின் லீலைகளைக் கூறும் பல சிலைகள் ( எல்லாம் அசைந்து செயல்படும்) இருக்கின்றன. கம்சனைக் கண்ணன் போரிட்டுக் கொல்வது அசையும் பொம்மைகளால் காட்டப் படுகிறது. அருகில் ராதா ராணி கோயில்
(பர்சானாவிலா?) அழகானப் பின்னணியில் காணப் படுகிறது. அங்கு அப்போது எடுத்த  புகைப் படங்களைப் பார்க்கும்போது மலரும் நினைவுகள் இனிமை சேர்க்கின்றன. புகைப் படச் சுருளில் எடுத்த படங்கள், பதிவில் சேர்க்கத் தெரியவில்லை.


அங்கு சென்றிருந்தபோது மனதை பாதித்த விஷயம் என்னவென்றால் கண்ணன் வாழ்ந்த இடங்களில் தற்சமயமிருக்கும் மக்களின் ஏழ்மையே.. தங்களை ப்ரிஜ்வாசிகள் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் மக்கள் அவன் பேரைச் சொல்லியே பிச்சை எடுக்காத குறைதான்

கடைசியாத் தோன்றுவது ஆண்டவனின் அவதாரமே என்று அறிந்தே பிறந்தவன் ஏதோ சாபத்தால் யாதவர்களிடையெ நிகழ்ந்த சண்டையில் காலில் அம்பு பட்டு இறந்தான் என்பது சீரணிக்க முடியவில்லை. அவதாரக் கதைகளும் அவற்றுக்கான காரணங்களாகச் சொல்லப் படும் கதைகளும் நம் சந்ததியினர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. ஆனால் இப்போது இருந்து வரும் nucleus  குடும்பங்களில் அவற்றைச் சொல்லிக் கொடுக்கவே ஆளில்லாதது பெருங்குறையே.
--------------------------------------------   


 


 


  

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

தொடரும் நடப்புகள் நிகழ்வுகள் ஒரு கருத்து


                        நாம் என்னதான் செய்யப் போகிறோம்..
                                            ( புலம்புவது தவிர )
                                             --------------------



மீண்டும் ஒரு பெண் சிதைக்கப் பட்டிருக்கிறாள்,அதுவும் மும்பையில். அதுவும் மும்பையில் என்று எழுதும்போது மும்பை மட்டும் மேலோர்கள் மட்டும் இருக்கும் இருப்பிடமா எனும் கேள்வி எழுகிறது. மும்பையில் வாழ்க்கை முறை பெண்களும் எல்லா நேரங்களிலும் வெளியே சென்று வரப் பழக்கப் பட்டவர்கள். ஒரு cosmopolitan வாழ்க்கை முறை. இம்மாதிரி நிகழ்வுகள் நடக்கும் வாய்ப்பு குறைவு என்பதே ஆகும். ஒவ்வொரு முறையும் இம்மாதிரி சம்பவங்கள் நடக்கும்போது மனம் ஆத்திரப் படுவதும், அட்டைகள் ஏந்தி எதிர்ப்பு தெரிவிப்பதும். குற்றவாளிகள் தண்டிக்கப் படுவார்கள் என்று காவல்துறையும் அரசாங்கமும் கூறுவது ஒரு ரிசுவல் ஆகிவிட்டது. மனிதனுக்க் வக்கிர எண்ணங்கள் இருக்கும்வரை இம்மாதிரி நிகழ்வுகள் தொடரும். ஆனால் எதையும் செய்து தப்பிக்கலாம் என்னும் எண்ணம் மட்டும் வரக் கூடாது சென்ற ஆண்டு டெல்லியில் நடந்த பலாத்காரத்துக்குக் காரணமானவரே இன்னும் தண்டிக்கப் படவில்லை. குற்றவாளிகளின் வக்கீல்கள் காலம் கடத்துகின்றனர் என்று ஒரு வாதம் வைக்கப் படுகிறது. ஒரு குற்றவாளி தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப் படக் கூடாது என்னும் கரிசனமே இம்மாதிரி நீதி வழங்கப் படுவதன் தாமதத்துக்குக் காரணமாயிருக்கலாம். என்ன இருந்தாலும் justice delayed is justice denied  என்பது மறுக்க முடியாதது. நம் இந்தியகுணாதிசயமே எல்லாக் காரியங்களையும் இழுத்தடித்தால்  அது மறக்கப்பட்டுவிடும் என்னும் உயர்ந்த எண்ணமோ என்னவோ. ?

சரி. இம்மாதிரி நிகழ்வுகளுக்குக் காரணம் என்ன. ஆணாதிக்க மனோபாவமா.?நம் சமூகத்தில் இருக்கும் வாழ்வின் நெறி முறைகளா.?இம்மாதிரி நம் நாட்டில் மட்டும்தான் நடை பெறுகிறதா. இல்லை உலகளாவிய நடப்புதானா. ? கேள்விகள். .... பெரும்பாலும் இம்மாதிரி ஈனச் செயல்களில் ஈடுபடுவோர் தம் வசத்தில் இருப்பதில்லை என்றே தோன்றுகிறது. குடிக்கோ போதைக்கோ அடிமையாய் இருந்திருக்க வேண்டும்..அது எப்படி ஒரு பெண்ணைச் சீரழிக்கும்போது அருகில் இருப்பவரும் சேர்ந்து இச்செயலில் ஈடுபடமுடியும். எந்த ஒரு தனி மனிதனும் தன் வசத்தில் இருக்கும்போது இம்மாதிரிச் செயல்களில் ஈடுபடுவான் என்று நம்பமுடியவில்லை. ஆனாலும் நடக்கிறதே.patriarchial society ல் தான் இம்மாதிரி நடக்கும். பெண்ணுக்குச் சுதந்திரம் என்பதை இந்த சமூகத்தால் சீரணிக்க முடியவில்லை என்றே தோன்றுகிறது சமூக ரீதியில் பெண் இன்னும் அடிமையாகத்தான் எண்ணப்படுகிறாள் நடத்தப் படுகிறாள். பெண்ணுக்கு உரிமை அதிகம் என்னும் matriarchial சமூகமாயிருந்த கேரளமே patriarchial  சமூகமாக மாறி வருகிறது.

இம்மாதிரி நிகழ்வுகளுக்குக் காரணம் இந்த சமுதாயத்தில் இருக்கும் ஏற்றதாழ்வுகளோ என்னும் எண்ணம் எனக்கெழுகிறது. இந்த மும்பை நிகழ்வுகளில் சம்பந்தப் பட்டவர்கள் தங்களது இருபதுகளில் இருப்பவர்கள். எத்தனையோ கனவுகள் அவர்களுக்கு இருக்கலாம். ஒரு சாராரின் வாழ்க்கை நிலையோடு தங்களை ஒப்பிட்டு நோக்கும்போது எதிர்மறை எண்ணங்கள் உதயமாகலாம். திரைப்படங்களில் காண்போரின் வாழ்க்கைமுறை சித்தரிக்கப்படுவதில் இருந்து தங்களது முடியாமைகள் மேலோங்கி நிற்கலாம். அதற்கேற்றவாறு தங்களது அழகைப் பறைசாற்றும் பல பெண்களைக் காணும்போது இயலாமையைதாங்கிக் கொள்ள முடியாத மனசு வக்கிர எண்ணங்களுக்கு இடம் கொடுக்கலாம். மும்பையில் நடந்த நிகழ்ச்சி திட்டமிட்டு செய்யப் பட்டது போல் தெரியவில்லை. காலாபானி எனும் சேரியில் வசிக்கும் அவர்களுக்கு சில நிமிஷ வெறியும் தாங்களும் ஹீரோக்களே என்று நிலைநாட்டும் நாட்டமும். இம்மாதிரி செயல்களை செய்யத் தூண்டி இருக்கலாம் THAT MAY BE JUST A SHOW OF BRAVDO அந்த நேரத்தில். 
இதற்குத் துணை போகும் பல்வேறு காரணங்களில் எனக்கு இந்தத் திரைப்படங்களும் விளம்பரங்களுமே முக்கியக்  காரணமாகத் தெரிகிறது திரைப்படங்கள் நீதி போதிக்க அல்ல. வெறும் பொழுது போக்க உதவும் சாதனமே என்று கூறுவோர் இதனை ஒப்புக்கொள்ளத் தயங்கலாம். ஆனால் DISPARITY IN LIVING STYLES AND A FEELING OF HELPLESSNESS  சில நேரங்களில் இம்மாதிரியான செயல்களுக்குக் காரணமாகிறதோ என்றும் தோன்றுகிறது. 
பெண்ணுரிமை பற்றிப் பேசுவோர் பெண்களைப் போகப் பொருளாக சித்தரிப்பதைத் தவிர்த்தால் இந்த மாதிரி செயல்கள் குறையலாம். எத்தனை பெற்றொர் வயது வந்த தங்கள் மக்களுடன் இந்தத் திரைப் படங்களைப் பார்க்க முடியும் என்று நெஞ்சைத் தொட்டு சொல்லட்டும். ஏதாவது சொல்லப் போனால் ஜெனெரேஷன் காப் என்று சொல்வார்கள். எங்கள் ஜெனெரேஷனில் இம்மாதிரி நிகழ்வுகள் நடந்திருந்தாலும் அவை மேல் தட்டு வர்க்கம் தமக்கு அடங்கியவர்களிடம் பிரயோகித்ததாய் இருந்திருக்கும். 
இது போன்ற செயல்களுக்கும் நிகழ்வுகளுக்கும் நிலவும் ஏற்ற தாழ்வும் ஒரு முக்கிய காரணமாகப் படுகிறது. 

பெண்களைப் பெற்றவர்கள் எப்போதும் பயத்துடனும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். பள்ளிகளில் தற்காப்புக் கலையும் கட்டாயமாகப் போதிக்கப் படவேண்டும். But what you can do if the animals hunt in herds.as it happened in Mumbai.”

ஒரு வர்மா கமிஷன் சில வழிமுறைகளைப் பரிந்துரைத்தால் அதை ஒட்டு மொத்தமாக ஏற்க இந்த அரசியல்வாதிகளுக்கு என்ன தயக்கம்.?இந்த வியாதி நம் சமூகத்தில் இப்போதுதான் வேர்விடுகிறதா? வேரோடு கிள்ளி எறிய என்ன செய்ய வேண்டும். எனக்கு என்னவோ ஒரு தலை முறையே சீரழிந்து விட்டதோ என்ற சந்தேகமெழுகிறது. ஒழுக்கமான வாழ்வு முறைகளை வாழ்ந்து காட்ட வேண்டியவர்கள், பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தி வாழ்க்கை நெறிமுறைகளைத் தொலைத்து விட்டார்களோ என்னும் கவலை எழுகிறது. என்னால் நான் ஒரு முறை எழுதியதை மீண்டும் நினைவு கூறாமல் இருக்கமுடியவில்லை.(இதைப் பார்க்க) 



ரூபாயின் மதிப்பு (?) சரிவு ,ஒரு புகம்பல் என்னும் எரிதழலின் பதிவைப் படித்தேன். நம் புலம்பலில் சிறிது நகைச் சுவையும் இருக்கட்டுமே.


 இந்தப் பதிவை நிறைவு செய்ய இதோ ஒரு எளிதான கேள்வி  I AM SURE YOU CAN SOLVE THIS.
உங்களிடம் ரூபாய் 15-/ இருக்கிறது. நீங்கள் சாக்கலேட் வாங்கப் போகிறீர்கள். ஒரு சாக்கலேட் விலை ரூ. ஒன்று. கடைக்காரர் ஒரு சலுகை தருகிறார். நீங்கள் வாங்கிய சாக்கலேட்டுகளின் மூன்று ராப்பர்களைக் ( WRAPPERS ) கொடுத்தால் அவர் உங்களுக்கு ஒரு சாக்கலேட் தருவார். இதோ கேள்வி. நீங்கள் பதினைந்து ரூபாய்க்கும் சாக்கலேட்டுகள் வாங்கினால் உங்களுக்கு எவ்வளவு சாக்கலேட்டுகள் கிடைக்கும்.?


  

சனி, 24 ஆகஸ்ட், 2013

வேதாளத்திடம் இருந்து தப்ப.


               கதை கதையாம் காரணமாம்.....
                ---------------------------------------



சேது அன்று மாலை வருவதாகத் தகவல் அனுப்பி இருந்தான்.தங்கமணிக்கு கொஞ்சம் ஆறுதல். ஏதோ இருக்க ஒரு வீடு இருந்தாலும் தினப்படி செலவுக்கு எங்கே போவது.? வயிற்றுப் பாட்டுக்கு கிராமத்தில் ஒன்றிரண்டு பட்டர் (பிராமணர்) வீடுகளில் பாத்திரம் தேய்த்து , முறிகளை அடிச்சு கோரினால்(பெருக்கி எடுத்தால்) அம்மியார் ( பிராம்மண அம்மணி) கொடுக்கும் சோறும் கூட்டானும் கொண்டு அவளும் அவளது தாயாரும் வயிறு நிறைக்கலாம். கூட இருக்கும் சகோதரி தேவானை அவள் வகையில் வீடுகளில் பணி செய்து அவளது வயிற்றுப் பாட்டைக் கவனித்துக் கொள்வாள். வாழ்க்கை என்பது வெறும் வயிற்றோடு முடிவதா என்ன.?இருக்க இடம் உண்ண உணவு மட்டும் போதுமா.?உடுத்தவும் மேனி அலங்கரிக்கவும் இன்னும் எத்தனையோ தேவைகள் இருக்கின்றனவே.. இந்த மாதிரித் தேவைகளைப் பூர்த்திசெய்ய சேது மாதிரியான  புண்ணியவான்கள் இருக்கவே இருக்கிறார்கள்.


தங்கமணிக்கு ஓரோர் சமயம் இந்த வாழ்க்கை சரியா என்ற எண்ணம் தோன்றும் சரியோ தவறோ இதுதான் வாழ்க்கை என்றாகிவிட்டது. கட்டின கணவனுக்கு என்ன காரணத்தாலோ இவளுடன் தொடர்ந்து வாழப் பிடிக்கவில்லை. ஆணும் பெண்ணும் சமம் என்றால் இவள் இஷ்டப்படி வாழ்வதிலும் கேள்வி வரக்கூடாது. வயசான அம்மா இருக்கும்வரை தலைக்குக் கூரை நிச்சயம். அம்மா போனாலும் இது தொடரும், கூடப் பிறந்த “ஆங்கள்” ( சகோதரர்கள்) தாயின் வீட்டில் பங்கு கிடைக்காதென்று தெரிந்து (மருமக்கத்தாயம்) அவரவர் வழிகளில் சென்று விட்டனர்.

( இந்த வேதாளம் மறுபடியும் முதுகில் ஏறிவிட்டது போல் தெரிகிறது. நிச்சயமாய் என்னிடம் கேள்வி கேட்டுக் குடையப் போகிறது. நான் எழுதுவதைப் படிக்காமல் இருக்கப் போகிறதா என்ன.?)


தங்கமணியின் வீட்டைப் பற்றிக் கூறவேண்டும். அவளது அம்மா அவரது தரவாடுபற்றி நிறையவே கூறி இருக்கிறார். இப்போது மிஞ்சி இருப்பது பெத்தப்பேர்மட்டும்தான். கூட்டுப்புறத்து வீடு என்றால் தெரியாதவர் கிடையாது. தங்கமணியின் அம்மாவுக்குக்  கூடப் பிறந்த சகோதரிகள் ஆறு பேர். அவரவருக்குக் குடும்பம் குழந்தைகள் என்று ஆனபிறகு இரண்டு கட்டுத் தரவாட்டு வீடு விற்றுப் பணமாக்கப் பட்டு பாகம் பிரிக்கப்பட்டு வந்த பணத்தில் தங்கமணியின் அம்மா இந்தக் குச்சு வீட்டைக் கட்டினாள். இவர்களும் கூட்டுப் புறத்து வீட்டின் பெயரில் அவகாசிகள் ( சொந்தம் )ஆனார்கள். இதே பெயருக்கு சொந்தம் கொண்டாட இவர்களுக்கு சந்தான சம்பத்து இல்லாமல் போயிற்று.



(வேதாளம் முதுகில் நிலை கொள்ளாமல் தவிக்கிறது. இவன் என்ன எழுத வருகிறான் என்று தெரியாமல் குழம்புகிறது என்று தெரிகிறது)

தங்கமணியின் அம்மா திண்ணையே கதி என்றிருப்பாள். திண்ணையை ஒட்டி ஒரு ரேழி . அதை அடுத்து சின்ன மித்தம் ( முற்றம்) அதன் இரு பக்கங்களிலும் இரண்டு முறிகள் ( அறைகள்) ஒன்றில் தங்கமணியும் மற்றதில் அவள் சகோதரி தேவானையும் உறங்குவது வழக்கம்.


சேது வரும் தகவல் தேவானைக்கும் தெரிந்தது. அவளுக்கு ஒரு விஷயம் தெரியாவிட்டால் தலை வெடித்துவிடும் போல் இருந்தது. இப்படி அடிக்கடி வந்து போகும் இந்த சேது அக்கிரகாரத்தில் இருப்பவன். தங்கமணியிடம் சம்பந்தம் வைத்துக் கொள்வானா இல்லை அவளைக் கை கழுவி விடுவானா?அவன் கொஞ்சம் பசையுள்ளவன். தொடர்ந்து வருபவனை வற்புறுத்திக் கல்யாணம் செய்து கொள்ள முடிந்தால் தங்கமணி அதிர்ஷ்டம் செய்தவள் ஆவாள். இல்லையென்றால் ......? இலையென்றால் என்ன.? நாடிவருபவர்கள் எல்லோரையும் திருமணம் செய்து கொள்ள முடியுமா என்ன.?

தங்கமணி சேதுவை நம்பி இருக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது.

( வேதாளத்துக்கு இருப்பே கொள்ளவில்லை. ‘ யோவ், நீ என்னதான் சொல்ல வருகிறாய்.?என்று காதருகே குசுகுசுத்தது. வேதாளத்துக்கு எழுந்த சந்தேகம் எனக்கும் இருந்தது. நான் என்ன எழுதப் போகிறேன், சொல்ல வருகிறேன் என்று எனக்கே தெரியாதே. கணினியின் முன் அமர்ந்து தட்டச்சுகிறேன். எண்ணங்கள் கோர்வையாய் வந்தால் கதையாக்கலாம் எண்ணங்கள் கோர்வையாக வராவிட்டால் என்னும் என் எண்ணம் வேதாளத்துக்குத் தெரிந்து விட்டது. அது சொல்லியது.தோன்றுவதை கொஞ்சம் விலாவாரியாக எழுதிக் கொண்டே போ. முடியும் வரை எழுது. நாளைக்கு வேறு ஏதாவது ஐடியா கிடைக்கும். அப்போது தொடரலாம் வேதாளத்தின் உத்தியை முயன்றுதான் பார்ப்போமே.)
இந்த சேதுவை முத்ன் முதலில் எங்கு கண்டாள் என்று நினைத்துப் பார்த்தாள். ஆம். ஒரு ஆறுமாதமிருக்குமா.?அக்கிரகாரத்தில் பணிமுடிந்தபின் தங்கமணி வந்துகொண்டிருந்தாள். எதிரே சற்று தூரத்தில் ஒரு கையில் குடையுடன் மறுகையால் வேட்டியின் நுனியைத் தூக்கிப் பிடித்தபடி ,ஆஜானுபாகுவாக என்று சொல்ல முடியாது; இருந்தாலும் அந்த சந்தி வேளையில் சற்று தூரத்தில் இருந்தே தெரிந்த பட்டை விபூதி நெற்றியுடன் நல்ல உயரத்துடன் அவன் வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் தங்கமணிக்கு மேனியெல்லாம் என்னவோ செய்தது. மனசு குறுகுறுத்தது. ;நமக்கும் ஒருவன் வாய்த்தானே என்னும் அலுப்பும் கூடவே வந்தது. இவளைக் கடக்கும் நேரம் அவன் நின்று “ ஆ.. தங்கமணியல்லே.? எவிடெக்கா ? வீட்டிலிக்கா.?என்று ரொம்பவே அறிமுகம் ஆன மாதிரி ‘சம்சாரிக்கத்தொடங்கினான். தங்கமணிக்கு தான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. வெட்கப் பட வேண்டுமா, தலையைக் குனிந்து கொள்ள வேண்டுமா ஒன்றும் புரியவில்லை. எல்லாம் கலந்த கலவையான ஒரு பாவம் வந்து போயிற்று. சேது தொடர்ந்தான் “ தங்கமணியக் கெட்டியவன் எவிடெ பணி எடுக்குன்னு.?
“ ஆ செத்தையினக் குறிச்சு ஒன்னும் கேழ்க்கண்டா சாமி என்றாள். இந்த பதில் சேதுவுக்குக் கொஞ்சம் தைரியம் கொடுத்தது..ஒன்னும் விஷமிக்கண்டா தங்கமணி. ஞங்கள் ஒக்க இல்லேஎன்று நூல் விட்டுப் பார்த்தான். தங்கமணி ஏதும் சொல்லாமல் தலையை நிமிர்த்தி பின் சரித்து ஒரு புன்னகையைத் தவழவிட்டாள்.இப்போது சேதுவுக்குத் தான் சொன்னது விளையாட்டுக்கு இல்லை உண்மைதான் என்று நிரூபித்துக்காட்ட வேண்டும் போல் இருந்தது.
நேர் எதிர்த் திசையில் போய்க் கொண்டிருந்தவன் இப்போது அவள் செல்லும் திசைக்கே திரும்பினான். அவளது எதிர்பார்ப்புகள் என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் அவளது நித்திய ஜீவனம் பற்றியும் அதை அவள் எப்படி சமாளிக்கிறாள் என்றும் கேட்டுத்தெரிந்து கொண்டான். தங்கமணியிடம் பேச்சுக் கொடுத்ததில் அவளைப் போலவே அவள் தங்கை தேவானையும் இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டான். அவன் உள்மனது முட்டைகள் பொரியும் முன்பே குஞ்சுகளைக் கணக்குப் போட ஆரம்பித்துவிட்டது.
பேசிப்பேசியே தங்கமணியின் வீட்டுக்கு வந்து விட்டான். வாசலில் நின்றவன்,
‘இன்னால் ஞான் போட்டேஎன்று இழுத்தான்.
“ உள்ளிலிக்கு வரூ. காப்பி குடிச்சிட்டுப் போகாம்என்று அவளும் வலை விரித்தாள்.
“ உன்னுடன் பிறந்தவள் எங்கே “
“எவிடெயெங்கிலும் போயிரிக்கும்
“அம்மை.?
“அது ஒரு பிரஸ்னமில்லா. கண்ணும் சரிக்கி காணில்லா. உள்ளிலிக்கு வரூஎன்று அவன் கையைப் பிடித்துக் கூப்பிட்டாள். சேதுவுக்கு இருந்த கொஞ்சம் நஞ்சமுமான தயக்கமும் போய் விட்டது.
அவளது முறிக்குக் கூட்டிக் கொண்டு போனாள். கதவைத் தாழ்ப்பாளிட்டாள் ஆரம்பத் தடுமாற்றங்கள் ஏதுமில்லாமல் இருவரும் இணைந்தனர். அவனருகே படுத்திருந்தவள் சற்று ஒருக்களித்து படுத்துக் கொண்டு “சாமிக்கு என்னே இஷ்டப் பட்டோ?என்று கேட்டாள். இஷ்டப்படாமலா இவ்வளவு நேரம் நடந்தது என்று நினைத்துக் கொண்டான். “ பின்னே.....என்று ஒரு நமுட்டுச் சிரிப்பினை உதிர்த்தான். சமயமாகி. பின்னெ நாளேக் காணாம் “ என்று கூறியவன் அவள் கையைப் பிடித்து அதில் சில ரூபாய் நோட்டுகளை அழுத்தினான். கதவு திறந்து வெளியே வரும்போது அங்கே தேவானை நின்று கொண்டிருந்தாள்.சேது அவளை ஒரு நமுட்டுச் சிரிப்புடன் கடந்தான்.  

தேவானைக்குத் தடுமாற்றம். தங்கமணியைவிட தான் எந்த விதத்தில் குறைவு என்னும் எண்ணம் எழுந்தது அது என்னவோ தெரியவில்லை. நமக்குத் தெரிந்தவர்கள் ஏறத்தாழ எல்லோருமே “ பர்த்தா இல்லாதவராகவே இருக்கிறார்கள். இது ஆண்களின் பொறுப்பின்மையா, அல்லது பெண்களின் ஆதிக்கக் காரணமா.... என்ன இருந்தாலும் வாழ்க்கை என்ற ஒன்றை வாழ்ந்துதானே ஆகவேண்டி இருக்கு. இந்த சேது ஆள் நன்றாகத்தான் இருக்கிறான். அவன் எதிர்பார்ப்பை தங்க மணி கொடுக்க முடியும் என்றால் தன்னால் முடியாதா என்ன.? எண்ணங்கள் திட்டங்கள்.... ...!

வந்து போன சேதுவுக்கும் தேவானையைப் பார்த்ததும் உடலில் ஒரு சூடு பொங்கி எழுந்து அடங்கியது. தேவானையும் லட்சணமாகப் பாந்தமாகக்கிண்என்று இருந்தாள். தங்கமணியுடன் சேர்ந்தால் தேவானையை ஒதுக்க வேண்டும் என்று ஒன்றும் இல்லையே. எண்ணங்கள்....திட்டங்கள்......

தங்கமணியும் தேவானையும் ஒருவரை ஒருவர் எதிரியாகப் பாவிக்கத் தொடங்கினர். சேதுவோடு இருக்கும்போது “ இந்தப் பெண்ணின் நோட்டமும் பார்வையும் சரியில்லையேஎன்று சற்று உரக்கவே கூறினாள். இவனோ “ பாவம், அவளும் உன்னைமாதிரிதானேஎன்று சொன்னான். அப்படியானால் அவளிடம் சேர்வதுதானேஎன்று கோபத்தில் கூறினாள் ‘ ஆஹா இந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று எண்ணியவன் “மாற்றமே வாழ்வின் சுவை
( variety is the spice of life) அனுபவிக்க என்ன செய்யலாம் என்றும் சிந்திக்கத் தொடங்கினான். இதற்கு ஒரே வழி இருவரும் இருக்கும் நேரத்தை ஒதுக்கிவிட்டு ஒருவர் இல்லாத நேரத்தில் ஒருவர் என்று கணக்குப் போட்டான். தங்கமணியை சந்தித்தபோது நடந்தவற்றை ரிபீட் செய்வதுதான் நல்லது என்று எண்ணி ஒரு நாள் தேவானை வேலை முடிந்து வரும்போது அவளை மடக்கினான்.இந்த சந்தர்ப்பத்துக்குத்தானே அவளும் காத்திருந்தாள். திட்டமிட்டபடி எல்லாம் நடக்க ஒரு நாள் இவன் தேவானையின் அறையில் இருந்து வெளியே வரும்போது தங்கமணி நின்றிருந்தாள். இவனைப் பார்த்ததும் மூஞ்சியை வெடுக்கெனத் திருப்பிக் கொண்டாள்.
இருந்தாலும் இருவருக்குமே வாழ்க்கையை வாழவேண்டுமென்றால் பல நேரங்களில் பல விஷயங்களையும் விட்டுக் கொடுக்க(compromise) வேண்டும் என்று புரிந்தது..

எதையும் கண்டுகாமல் சிவனே என்றிருந்த அவர்களது தாயாரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உசுப்பி விட்டனர். கிழவிக்கு தன் மகள்கள் யாருடனாவது சம்பந்தம் வைத்துக் கொள்வதில் தவறு தெரியவில்லை. ஆனால் இருவரும் ஒருவனையே என்று எண்ணிப் பார்பது கஷ்டமாக இருந்ததுஇதற்கு ஒரு முடிவு கட்டத் தீர்மானித்தாள் கிழவி.

கிழவி திண்ணையில் அரைகுறைத் தூக்கத்தில் படுத்துக் கிடப்பாள். சில நேரங்களில் சேது அவளைத் தாண்டிப்போக வேண்டி இருக்கும். ஒரு நாள் சேதுவுக்கு மகள்களில் யாரோ ஒருவருடன் கூடும் நாளும் நேரமும் பார்த்துக் காத்திருந்தாள் கிழவி. சேதுவும் கிழவிக்குக் கண்சரியாகத் தெரியாதே என்று அவளைத் தாண்டினான் உடனே “ ஐயோ... ஐயோ.. என்று கூக்குரலிட்டு வெளியே ஓடினான் கிழவி மனசுக்குள் நினைத்துக் கொண்டாள்.இனி உனக்கு இன்பம் தரும் உறுப்பின் முக்கியம்தான் இங்கு வரும்போது நினைவுக்கு வரும்தங்கமணியோ தேவானையோ (யாரோ ஒருவர்) ஏன் சேது அப்படி கத்திக் கொண்டு ஓடினான் என்று தெரியாமல் விழித்தாள்.

( உன்னைப் பார்க்கவே பயமாய் இருக்கிறது, எழுதுவதற்கு உத்தி சொன்னால் இப்படியா எழுதுவது,? இனி உன் வழிக்கே நான் இல்லையப்பா..என்று கூறிக்கொண்டேஎன் முதுகில் இருந்து அகன்றுவிட்டது.)  

 




 

புதன், 21 ஆகஸ்ட், 2013

துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே....


துணிந்தபின்  மனமே துயரம் கொள்ளாதே
-------------------------------------------------------


பதிவுகள் எழுதுவதில் தொய்வு
கற்பனை வற்றி விட்டதோ
எழுதியும் பலனேது என்னும்
எண்ணம் வந்து விட்டதோ
எழுதிக் கிழித்து என்ன கண்டோம்
என்ற சலிப்பு நல்லதல்லவே.
பாரதி எழுதாததா, நரேந்திரன் சொல்லாததா
பாவேந்தர் பகராததா  நான் என்ன புதிதாய்
சொல்லமுடியும்.? பெரியோர் சொன்னதை
மீண்டும்  மீண்டும் நாம் வாசிப்பதில்லையா
அன்று நான் எழுதியது என்றைக்கும்
பொருந்தும்போது, என் எழுத்தை மீண்டும்
வாசித்தவர் வாசிக்கலாமே, அன்றி
வாசிக்காதவர் சுவாசிக்கலாமே
குறை ஒன்றும் நிகழ்ந்து விடாதே
ஆகவே நண்பர்களே (இதை) சுவாசிப்பீர்.
வெற்றியும் தோல்வியும் பகலும் இரவும்போல
நாணயத்தின் இரு பக்கம் போல
தோல்வியில் துவளவேண்டாம்
வெற்றியில் தலைக் கனமும் வேண்டாம்.   
  

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

நினைவலைகள் அனுபவங்கள்.....


         நினைவலைகள் அனுபவங்கள்......
        ----------------------------------------------



      .வயது ஏற ஏற, வேலையற்ற நேரங்கள் அதிகமாக அதிகமாக, வாழ்ந்து வந்த பாதைகளை நினைத்தும் கிடைத்த அனுபவங்களை அசை போட்டுப் பார்ப்பதிலும் நேரம் செலவாகிறது. அத்தகைய அனுபவங்களைப் பதிவு செய்து வைத்தால் அது ஒரு நல்ல கதைபோல ( என் பார்வையில் ) இருக்கும். மேலும் ஒரு சாதாரணமானவன் வாழ்க்கையின் மேடு பள்ளங்களைக் கடந்து வந்ததைத் தன் சந்ததையினருக்கு (அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ) தெரியப்படுத்தி வைப்பதால் குறை ஒன்றும் இருக்கப் போவதில்லை. தெரியப் படுத்தாவிட்டாலும் குறை ஒன்றும் உணரப் படப் போவதில்லை. பின் ஏன் இந்த முயற்சி.?என் நேரத்தை நான் இப்படி செலவிட்டுக் கொள்ளப் போகிறேன். அவ்வளவுதான்

      நினைவுகள் எப்போதும் கோர்வையாக வருவதில்லை. ஒவ்வொரு சம்பவமும் அனுபவுமுமே எண்ணங்களாகத் தோன்றும். அப்படித் தோன்றும் எண்ணங்களையும் அனுபவங்களையும் கோர்வையாகக் கொண்டு வருவதே இந்த முயற்சி. இதை எங்கிருந்து தொடங்குவது.? எப்படித் தொடங்குவது.?


      இதை எழுதத் துவங்குகையில் மிக முக்கியமாக ஒரு கேள்வி எழுகிறது. நான் யார்.? நான் யாரென்று தேடி சரியான விடை கிடைத்து விட்டால் ஆன்மீக வழிப்படி சரியான பாதையில்தான் நான் சென்று கொண்டிருக்கவேண்டும். ஆனால் நான் கடந்து வந்த வாழ்க்கையும் பாதையும் வாழ்ந்த முறையும் அந்தத் தேடலின் விளைவா.? இன்னொரு முறைஇந்த வாழ்க்கையை மறுபடியும் வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் இதே முறையில்தான் மறுபடியும் வாழ்வேனா.? இல்லை, நிறைய மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு வேறு ஒரு வாழ்க்கையை வாழ்வேனா.? கடினமான கேள்வி. நிச்சயமாக சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். ஆனால் பெரிய மாற்றங்கள் நிச்சயம் இருக்காது. வாழ்வின் அனுபவங்கள் கற்றுத்தந்த பாடம் சில இடங்களில் சில செய்கைகளை மெருகேற்ற உதவியிருக்கலாம். ஆனால் வாழ்ந்த வாழ்க்கையிலும் கொண்ட கொள்கைகளிலும் பெரிய மாற்றங்கள் இருக்காது. என் சுபாவங்களைக் கொஞ்சம் மாற்றியிருக்கலாம். என் கோப தாபங்களையும் உணர்ச்சிகளையும் சற்றே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி இருந்திருக்கலாம். நான் நானாக இருப்பதற்கும் இருந்ததற்கும் நானேதான் காரணம். இதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கையில் அதிகமாகக் குறைபட்டுக் கொண்டதில்லை. இன்னும் உயர்வாக இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் சில சமயம் தோன்றக்கூடும். இன்னும் உயர்வாக என்றால் என்ன அர்த்தம். ? பணவசதி ,வாழ்க்கை முறை இவற்றிலா.? இவற்றைப் பற்றி எப்போதுமே நான் அதிகக் கவலைப் பட்டதில்லை. இருப்பதைக் கொண்டு திருப்தியுடனும் ,சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இதுவரை வாழ்ந்தாகி விட்டது. இன்னும் உயர்வாக இருந்திருக்கலாம் என்றால் பிறருக்கும் சமூகத்துக்கும் இன்னும் உபயோகமாக வாழ்ந்திருக்கலாம் ஆனால் சூழ்நிலைகளும் நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை முறையும் என்னை இப்படித்தான் இருக்கச் செய்திருக்கிறது. ”குறையொன்றும் இல்லை மறை மூர்த்திக் கண்ணா.!” காதலித்துக் கைபிடித்த அருமையான மனைவி அன்பான இரு புதல்வர்கள், பண்பான மருமகள்கள் என் பேர்சொல்ல வந்த பேரக் குழந்தைகள் மூவர். வேறென்ன வேண்டும்.? இனி இருக்கப்போகும் நாட்களை  நோயின்றி நிறைவாக வாழ்ந்து யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் என் வாழ்வு முடியுமானால் அதுவே என் பேறு. இனி இதுவரை வாழ்ந்த வாழ்க்கையைச் சற்றே அசை போடுவேன்.
( இந்தத் தொடரைத் தொடர்வேனா இல்லையா என்பது ஒரு பெரிய கேள்வி.பதிவிட தலைப்பும் பொருளும் கிடைப்பது அரிதானால் ஒரு வேளை அவ்வப்போது தொடரலாம் )


செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

வேதாளமும் நானும்


                                                             


வேதாள்மும் நானும்
-------------------


“ நீ விக்கிரமாதித்யன் கதைகள் படித்திருக்கிறாயா.? அதில் வரும் வேதாளம் தெரியுமா உனக்கு.?உன் கண்ணால் காணமுடியாது, ஆனால் உன்னால் உணர முடிகிறது .இல்லையா.

அதிகாலையில் எழுந்திருக்கும்போதே என் முதுகில் ஏதோ கனமாக உணர்ந்தேன், இது ஏதடா புதிய வலி என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதுதான், காதருகே கேட்டது குரல்
.
ஆஹா..இது என்ன புதிய அனுபவம்.?பதில் கூற வேண்டுமென்றாலும் யாரிடம் கூறுவது. நான் நினைப்பதைப் புரிந்து கொண்டு மீண்டும் அந்தக் குரல்

அதே வேதாளம்தான் . நான் உனக்கு ஒரு கதை சொல்கிறேன். முடிவில் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்

“ பதில் தெரியாமல் , சொல்லாவிட்டால்...?

“ அதை அப்போது பார்ப்போம். ஆனால் பதில் தெரிந்து சொல்லாமல் மட்டும் இருக்கக் கூடாது. பின் விளைவுகள் விபரீதமாயிருக்கும்

“ விளைவுகள் உன் கதையையும் கேள்வியையும் பொறுத்தது.என்றேன்

வேதாளம் கதை சொல்ல ஆரம்பித்தது.
“ஒரு ஊரில் ஒருவன் இருந்தான்

“ ஊரில் ஒருவன் மட்டும்தானா இருந்தான்.?
குறுக்கே பேசக் கூடாது

“ அது எப்படி.? நீதான் கடைசியில் கேள்வி கேட்பாயே. சரியாக விளங்கிக்கொள்ள வேண்டாமா.?என்றேன்
.
“அதி புத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைத்துக் கொள்ளாமல் சொல்வதைக் கேள் “ என்று சொல்லித் தொடர்ந்தது வேதாள்ம்.

“ஒரு ஊரில் ஒருவன் இருந்தானாம்.... அவனுக்குக் காது கொஞ்சம் மந்தம். சிறுவயதிலேயே அவனது குறை அறிந்து அவனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அந்த மருத்துவர் காது மூக்கு, தொண்டை நிபுணரிடம் அழைத்துச் செல்லுங்கள் என்றார். அவனது பெற்றோரும் அவனை நிபுணரிடம் அழைத்துச் சென்றனர்.அவர் ஒரு கருவியை சிறிது தட்டி அவன் காதருகே வைத்து சப்தம் கேட்கிறதா என்று கேட்டார். இவன் சற்று நேரம் யோசித்துவிட்டு  சப்தம் அடுத்த காதில் கேட்கிறது என்றான் டாக்டர் அதே கருவியைத் தட்டி மறு காதருகே வைத்து ‘சப்தம் கேட்கிறதாஎன்றார். இவனோ மறு காதில் கேட்கிறதுஎன்றான். டாக்டருக்குக் குழப்பமாகிவிட்டது. அவர் அதே பரிசோதனையை மீண்டும் மீண்டும் செய்ய , இவனும் கருவி இருக்கும் காதுக்கு மறு பக்கம் உள்ள காதில் கேட்கிறது என்றே சொல்லிக் கொண்டு வந்தான். டாக்டருக்கு கோபம் வந்து விட்டது. இவனது பெற்றோர்களிடம் ‘இவனை முதலில் ஒரு மனோ வைத்தியரிடம் அழைத்துச் செல்லுங்கள்என்றார்.இவனிடம் இந்தக் காதில் ஒலிக்கும் ஒலி எப்படி மறுகாதில் கேட்கிறது என்றாய் என்று கேட்டபோது அது அப்படித்தானே. இந்தக் காதில் வைத்தால் அதே காதில் எப்படி ஒலிக்கும் ‘என்று தர்க்கம்செய்தானாம்

இப்படியாக இவன் காதின் குறைபாடு குறையாமலேயே வளர்ந்து வந்தான். பள்ளியில் படிக்கப் போனால் அங்கு ஆசிரியர் சொல்வது ஏதும் கேட்காது. கண் இமைக்காமல் அவரது உதடுகளையே பார்த்துக் கொண்டிருப்பான். அவர் இன்னதுதான் சொல்லி இருப்பார் என்று இவனாகவே கற்பனை செய்து கொள்வான். தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்களையே பெற்று வந்து பெற்றோரிடம் அடி வாங்குவான்..புத்தி வளரவில்லை என்றாலும் உடல் வளர்ந்தது.பதினைந்து பதினாறு வயதிலேயே நன்றாக வளர்ந்திருந்தான். ஒரு முறை கட்டிடம் கட்டும் இடத்தில் சித்தாள்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான் என்ற புகார் வந்தது. இவனை அவர்களிடம் அடி வாங்காமல் மீட்டு வருவதற்குள் போடும் போதும் என்றாகி விட்டது

மாற்றுத் திறனாளி ( handicapped)  என்ற தகுதியில் ITI  பயிற்சி பெற்றான். சில நாட்களில் எப்படியோ அரசின் கழிவு நீர் வாரியத்தில் ஒரு வேலையும் கிடைத்தது. பிறகென்ன. ? திருமணமும் நடந்தது. பெண்ணும் ஏதோ கார்மெண்ட் தொழிற்சாலையில் வேலைக்குச் சென்றாள். நல்ல வேளை. இவனுக்குக் குழந்தைகள் ஏதும் பிறக்கவில்லை. இவனுக்கு யாரைப் பார்த்தாலும் அவர்கள் தன்னைப் பற்றியே பேசுகிறார்கள் என்னும் நினைப்பு வரும். இது இப்படியே தொடர்ந்து இவனுக்கு வயது 50-ம் நிறைந்து விட்டது.
இவனுடைய எண்ணங்கள் யாருடனும் பகிர முடியாது. ஒரு வித தனி உலகில் வாழ ஆரம்பித்தான். வேலைக்குச் செல்லவும் பிடிக்கவில்லை. இருந்தாலும் பணத்தேவையால் போகாமலும் இருக்க முடியவில்லை. திடீரென்று ஒரு ஞானோதயம் இவனுக்கா இல்லை இவன் மனைவிக்கா தெரியவில்லை. வேலைக்கே போகாமல் பாதி சம்பளம் கிடைக்கும் வழி கண்டு பிடித்தார்கள்.. இவன் வேலைக்குப் போவதுபோல் போய் கையெழுத்துப் போட்டு வருவான். இவனது வேலைகளை இன்னொருவன் செய்து முடிப்பான். அவனுக்கு இவன் பாதி சம்பளம் கொடுப்பான். இன்னும் வயதான பிறகு பென்ஷன் முழுவதும் இவனுக்குத்தானே.

இப்போது கதையின் முக்கிய பகுதிக்கு வருகிறேன். இவன் மனசில் என்ன என்னவோ எண்ணங்கள் ஓடும். அழகான பெண்களைப் பார்த்தால் மனம் தறிகெட்டு ஓடும் ஆனல் எதையும் செய்ய பயம் இடம் கொடுக்காது. வக்கிர எண்ணங்களுக்கு வடிகால் தேட ஒரு வழி கண்டு பிடித்தான். நெருங்கிய
உறவில் இருந்த ஒரு பெண்ணின் தொலைபேசி எண் கிடைத்தது. பப்ளிக் டெலிபோன் பூத்திலிருந்து அவள் எண்ணுக்கு ஃபோன் செய்வான். எடுத்ததும் கீழ்த்தரமான கொச்சை ஆசைகளை வெளிப்படுத்துவான், பாவம் அந்தப் பெண்பரிதவித்துப் போகும்மெல்லவும் முடியாமல் சொல்லவும் கூச்சப் பட்டு உழன்றது அந்தப் பெண். பொது தொலை பேசி இடங்களில் இருந்தௌ கால் வந்ததால் ஆளைப் பிடிப்பது கஷ்டமாயிருந்தது. ஒருமுறை இந்த மாதிரி தொடர்பு வந்தபோது அவள் போனை அருகில் இருந்த அவள் உறவினரிடம் கொடுத்தாள். நாராசமான கொச்சை வார்த்தைகளின் ஊடே அவனது குரல் மூலம் இன்னாரோ என்ற சந்தேகம் வந்தது.. காவல் துறைக்குச் சொல்லி அசிங்கப்படுவதை விட இதை வேறு மாதிரி கையாளலாம் என்று எண்ணினர். சந்தேகம் ஏற்பட்ட பிறகு ஓரிரு முறை டெலிபோன் வந்ததும் மாறி மாறி உறவினர்கள் கேட்டு குரலை ஊர்ஜிதம் செய்து கொண்டனர்.

இவன் வீட்டுக்கு ஒரு நண்பனை மஃப்டி போலிஸ் என்று சொல்லச் சொல்லி அனுப்பினர். போனவன் ஆஜானுபாகு. போலீசை விட போலீஸ் மாதிரி நடித்து  அவன் வீட்டுக்குச் சென்று “ இந்த மாதிரி செய்வது நீதான் என்று காவல் துறைக்குப் புகார் வந்திருக்கிறது. உன்னை கட்டி இழுத்துப் போய் முட்டிக்கு முட்டி தட்டவா?என்று பயமுறுத்தவே அவன் மிரண்டு போய்  தவறை ஒப்புக் கொண்டான். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் உத்தரவாதம் அளித்ததன் பேரில் அவனை தற்சமயம் மன்னிப்பதாகக் கூறி இனி இது தொடர்ந்தால் காவல்தான் தண்டனைதான் என்று மிரட்டி விட்டு வந்தார்.

சரி. கதையை நன்றாகக் கேட்டாயா.? இதோ என் கேள்வி.இவன் இம்மாதிரி நடந்து கொள்ளக் காரணங்கள் என்ன.?பதில் தெரிந்தும் சொல்லாமல் இருந்தால் ......

விளைவு என்ன. ? என்று கேட்டு . “ எதையும் யூகிக்க விரும்பவில்லை. என் பதிவில் எழுதுகிறேன். வாசிப்பவர்கள் என்னைவிட புத்திசாலிகள். அவர்களிடமிருந்து சரியான பதில்கள் வரும். அதுவரைப் பொறுத்துக்கொள் “ என்றேன்.

வேதாளம் எனக்கு இரண்டு நாள் சிறிது அவகாசம் கொடுத்திருக்கிறது. உங்கள் பதில் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.பதில் சொல்லாவிட்டால்...........? வேதாளம் என் முதுகில் இருந்து இறங்க பதில் சொல்லுங்களேன் ......! எனக்குக் கஷ்டம் என்றால் நீங்கள் தாங்கிக் கொள்வீர்களா.?.
---------------------------------------------------------