செவ்வாய், 29 ஏப்ரல், 2014

மஹாபாரதக் கதைகள்--- ஜராசந்தன்


                     மஹாபாரதக் கதைகள்---- ஜராசந்தன்
                    ------------------------------------------------------


பலவகைத் தலைப்புகளில் பதிவுகள் எழுதியாகி விட்டது. சிலர் சில தலைப்புகளில் கண்டதையும் கேட்டதையும் எழுதும்போதுஅட, இந்தத் தலைப்பில் நாமும் எழுதி இருக்கிறோமே; என்னும் எண்ணம் வர அதைக்குறிப்பிட்டால் “ நீ எழுதாத தலைப்பே இல்லையாஎன்று கேட்கும் போது அதில் சில சமயம் ஒரு நையாண்டிச் சுவை தெரிகிறது. ஆகவே பதிவு எழுதப் போகும் முன் என்ன எழுதுவது என்னும் எண்ணம் மேலோங்கி நிற்கிறது. கண்ணதாசன் பாடல்கள் பலவற்றின் கருத்து நம் பண்டைய இலக்கியங்களில் இருந்தும் புகழ் பெற்றவர் எழுத்துக்களில் இருந்தும் கையாளப் பட்டதே. கருத்து அவர்களது எழுத்து இவரது. இப்படி எழுதியே மிக்கப் புகழ் பெற்றுவிட்டார். ஆகவே நம் இதிகாசங்களிலிருந்தும் இலக்கியங்களில் இருந்தும் கதைகளைச் சுட்டு என் வரிகளில் எழுதுவது தவறாகாது என்று எண்ணுகிறேன். அப்பாடா... எவ்வளவு பெரிய முன்னுரை வேண்டி இருக்கிறது . நானும் மஹாபாரதம் போன்ற இதிகாசங்களில் சொல்லப் பட்ட ஆனால் பரவலாக அறியப் படாத சில கதாபாத்திரங்கள்  பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன். இதில் எனக்கு முன்னோடியாக வலையுலகில் பிரசித்தி பெற்ற் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன் எழுதப்போவதாக அறிவிப்பு இருந்தது. ஆனால் எழுதியதாகத் தெரியவில்லை. ஆகவே நான் மகாபாரதத்தில் இருந்து சில கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து எழுதப் போகிறேன். நான் கேட்ட படித்த விவரங்களின் அடிப்படையில் எழுதப் போகிறேன். நடு நடுவே என் கருத்துக்களையும் கூறிப் போகலாம் It all depends…!
இது ஒன்றும் புதிதல்ல, என் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வருபவர்கள் நினைவுக்கு நான் பதிவிட்டிருந்த சாந்தனுவின் சந்ததிகள்என்ற பதிவைக் கொண்டு வருகிறேன்(சொடுக்கிப் பார்க்கவும்)  சரி .கதைக்குப் போவோமா...?

உக்கிரசேனர் என்பவர் மதுராவில் ஆட்சி செய்து வந்தார். அவரது மகன் கம்சன். கம்சனின் சகோதரி தேவகி. தேவகியின் எட்டாவது குழந்தையின் கையால் கம்சனின் மரணம் என்னும் அசரீரி வாக்கு கேட்டு தேவகியை அவள் கணவனுடன் சிறையில் அடைத்து வைத்தான் கம்சன் அவனையும் ஏமாற்றி ஆயர்பாடியில் யசோதையின் மகனாக வளர்ந்தான் கிருஷ்ணன்
ஒன்றைச் சொல்ல வரும்போது தொடர்புடைய கதைகளையும் தொட்டுச் செல்ல வேண்டி இருக்கிறது இந்த கம்சனுக்கு தன் இரு புதல்விகளைத் திருமணம் செய்து கொடுத்திருந்தான் ஜராசந்தன். தன் புதல்விகளை விதவைகளாக ஆக்கிய கிருஷ்ணனிடம் ஜராசந்தனுக்கு கடும் பகை. பல முறை கிருஷ்ணனிடம் போரிட்டு வந்தவனைத் தவிர்க்க  கிருஷ்ணன் மதுராவில் இருந்து துவாரகா என்னும் தீவில் இருந்து ஆட்சி செய்து வந்தான் கிருஷ்ணன். துவாரகை ஒரு தீவானதால் ஜராசந்தனால் கிருஷ்ணனை வெல்ல முடியவில்லை. இந்த ஜராசந்தனை தான் கடவுளின் அவதாரம் என்று தெரிந்த கிருஷ்ணனால் ஏனோ சம்ஹாரம் செய்ய முடியவில்லை. அல்லது கதையை நகர்த்திச் செல்ல வியாசரின் உபாயமோ விளங்கவில்லை.

இந்த ஜராசந்தன் ஒரு பராக்கிரமசாலி. இவன் பிறந்த கதையே அலாதியானது.
ப்ருஹத்ரதா என்னும் அரசன் மகத நாட்டை ஆண்டு வந்தான் அவன் ஒரு சிறந்த சிவ பக்தன். அண்டை அரசுகளை அடக்கி பேரும் புகழுமாக இருந்தான் பெனாரசின் இரட்டை அரச குமாரிகளை மணந்து அரசு செய்து வந்தவனுக்கு வெகுநாட்கள்வரை புத்திர பாக்கியமில்லாதிருந்தது மனம் வெறுத்துக் கானகம் சென்று சந்திரகௌஷிகா என்னும் முனிவருக்குப் பணிவிடை செய்து வந்தான்.இவனது நிலைகண்டு இரங்கிய முனிவர் பழம் ஒன்றைக் கொடுத்து அதை அவனது மனைவி உண்டால் குழந்தை பாக்கியம்கிடைக்கும் என்றார். இரு பெண்டாட்டிக்காரன் பழத்தினை இரு சம பாகமாக்கித் தன் இரு மனைவியருக்கும் கொடூத்தான் இருவரும் கர்ப்பமுற்றனர், குழந்தைகளும் பெற்றனர். ஆனால் ஒரு பழத்தை இரு பாதியாக்கி அரசன் கொடுக்க அவர்கள் உண்டதால் மனிதக் கூறின் இரு பாதிகளைப் பெற்றெடுத்தனர். அரசன் கோபமுற்று அந்த இரு கூறுகளையும் கானகத்தில் வீசி எறிந்தான் கானகத்தில் ஜைரை என்னும் அரக்கி அந்த இருகூறுகளையும் உண்ணப் போகும் முன் ஒன்றாக்கினாள். என்ன ஆச்சரியம்,,,,,! இரு கூறுகளும் ஓருயிராகி சத்தமாக அழத் துவங்கிற்று. உயிருள்ள குழந்தையை உண்ண விரும்பாத அரக்கி அந்தக் குழந்தையை அரசனிடம் கொடுத்து நடந்தவற்றைக் கூறினாள்.அரசன் அக்குழந்தைக்கு ஜராசந்தன் ( ஜைரையால் சேர்க்கப்பட்டவன்) என்று பெயரிட்டு வளர்த்தான். ஜராசந்தனும் ஒரு சிவ பக்தன். அவனுக்கு ஒரே குறை. ஆண்வாரிசுஇல்லாத ஜராசந்தன் தன் இரு புதல்விகளைக் கம்சனுக்குத் திருமணம் செய்வித்தான் கம்சன் கிருஷ்ணனால்கொல்லப்பட  ஜராசந்தனுக்கு கிருஷ்ணன் மேல் தீராத பகையும் அதன் விளைவாகப் பலமுறை போர் தொடுத்தலும் நிகழ்ந்தது. கதையின் முன் பாகத்திலேயே சொல்லப் பட்டது. துவாரகை மீது படை எடுத்துக் கிருஷ்ண்னைவெல்ல யாகம் செய்வதாயிருந்தான்.,இதை அறிந்த கிருஷ்ணன் ஒரு உபாயம் கண்டான் யுதிஷ்டிரன் ராஜசூய யாகம் செய்ய வேண்டுமானால் எல்லா அரசர்களும் அவன் தலைமையை ஏற்கவேண்டும் . பராக்கிரமசாலியான ஜராசந்தன் ஏற்க மாட்டான். ஆகவே யாகம் துவங்கும் முன்னே அவனை ஒழித்து விட வேண்டும் ஜராசந்தன் சிவ பூஜையில் இருந்து வெளிவந்தால் யாரும் கேட்டதை இல்லை என்று சொல்லாத வள்ளல்.அர்ச்சுனன் பீமன் கிருஷ்ணன்  மூவரும் அந்தண வேடம் தரித்து பூஜையில் இருந்து வெளிவந்த ஜராசந்தனைப் துவந்த யுத்தத்துக்கு(மல்யுத்தத்துக்கு) வருமாறு அழைத்து மூவரில் யாருடன் வேண்டுமானாலும் போரிடலாம் என்றனர். உடல் பலத்தில் சிறந்தவனாய்த் தோற்ற மளித்த பீமனுடம் ஜராசந்தன் பொருதத் தயார் என்றான் இரு மலைகள் மோதுவது போல் இருவரும் பல நாட்கள் இடைவிடாது யுத்தம் செய்தனர்.
பீமன் ஜராசந்தனை வீழ்த்தி அவன் உடலை இரு கூறுகளாக்கி எறிந்தான். ஆனால் ஜைரை கண்டதே இங்கும் நடந்தது. இரு கூறுகளும் ஒட்டிக் கொண்டு மீண்டும் ஜராசந்தனாகி யுத்தம் தொடர்ந்தது. செய்வதறியாது திகைத்த பீமன் கிருஷ்ணனை நோக்க அவன் உடலின் இருகூறுகளை திசை மாற்றி வலப் பாதி இடது புறமும் இடப்பாதி வலப்புறமும் வருமாறு எறிய ஒரு குச்சியை ஒடித்து சைகை காட்டினான் சமிக்ஞையைப் புரிந்து கொண்ட பீமன் அவ்வாறே செய்தான் திசை மாறிய இரு கூறுகளும் மீண்டும் ஒன்றாகச் சேர முடியாமல் ஜராசந்தன் மாண்டான்.
அவனால் சிறைபிடிக்கப்பட்ட அனைவரும் மீட்கப் பட்டனர்.
இந்தக் கதை எழுப்பும் சில கேள்விகளும் பொதுவாகக் கூறப்படும் பதில்களும் அவதாரக் கடவுள் கிருஷ்ணனால் வெல்ல முடியாதவனா ஜராசந்தன். ?ஜராசந்தனைப் பற்றிய கதைகளுள்  அவன் தீயவன் என்றோ துர்க்குணம் படைத்தவன் என்றோ கூறப்பட்டதாகத் தெரியவில்லை.அந்தக் கால அரசர்களுக்குள் இருந்தகுணங்கள்தான் ஜராசந்தனிடமும் இருந்தது.
அவதாரக் கடவுள் கிருஷ்ணன் கையால் கொல்லப் பட்டால் ஜராசந்தன் முக்தி அடைந்து விடுவான். அது நேராமல் தடுக்க கிருஷ்ணனின் உபாயம்தான் இந்த பீம ஜராசந்த மல்யுத்தம்.
யுதிஷ்டிரன் ராஜசூய யாகம் செய்து அதன் விளைவால் போர் நடந்து ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்கவே விரும்பினான். ஆனால் பீமனையும் அர்ச்சுனனையும் உசுப்பி விட்டு நேர் வழியில் செல்லாமல் பீமனுடன் மல்யுத்தம் செய்வித்து அவனை ஒழித்துக்கட்ட கிருஷ்ணனின் லீலை இது என்று பக்தர்கள் கூறுவார்கள்.
ஜராசந்தன் பீமன் துரியோதனன் கீசகன் பகாசுரன் அனைவருக்கும் நட்சத்திரம் ஒன்றே என்று கூறப் படுகிறது இதில் யாராவது ஒருவர் கையால் ஒருவர் மரணம் நேரிட்டால் அவர் கையாலேயே மற்றவரின் மரணமும் சம்பவிக்கும் என்பதால் பீமன் கையால் மற்ற நால்வருக்கும் மரணம் என்பது விதி என்றும் கதை உண்டு. ஜராசந்தனின் மனைவிக்கு கிருஷ்ணன் ஜராசந்தனைத்தன் கையால் கொல்ல மாட்டேன் என்று வாக்கு கொடுத்திருந்தாகவும் ஒரு கதை உண்டு.கதைகளைப் படிக்கும் போது பல துணைக்கதைகளும் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன.ஜராசந்தனைக் கொல்ல இரு கூறுகளும் திசை மாற்றிப் போட்டால் மீண்டும் சேராது என்பது கிருஷ்ணனுக்கு எப்படித் தெரியும்?அவர் எல்லாம் அறிந்த ஆண்டவன் அவதாரமல்லவா/?

சனி, 26 ஏப்ரல், 2014

பதிவுத் துளிகள்.


                                   பதிவுத் துளிகள்.
                                   ---------------------


சுமார் ஒரு மாதத்துக்கு முன் ஒரு ஆங்கிலக் கவிதைஒன்றை பதிவிட்டு வாசகர்களிடம் அதை மொழிபெயர்க்கவோ மொழியாக்கம் செய்யவோக் கேட்டு வேண்டி இருந்தேன் என் பதிவுகளைவாசிக்கும் பதிவர்களில் பலரும் இளங்கலைப் பட்டமும் முதுகலைப் பட்டமும் பெற்றவர்கள் என்று எனக்குத் தெரியும் நானே சிலருக்கு தனிப்பட்ட முறையில் வேண்டியும் எழுதி இருந்தேன் . மொழியாக்கம் செய்யுமளவுக்கு ஆங்கில அறிவு இல்லையென்று சிலர் பின்னூட்டமிட்டிருந்தனர், இருவர் மட்டும்முயற்சி செய்வதாய் கூறி இருந்தனர். ஆனால் இதுவரை யாரும் எழுதி அனுப்பவில்லை. ஆகவே நானே மொழியாக்கம் செய்யலாமென்று தீர்மானித்துவிட்டேன் நான் பட்டப் படிப்பு பெற்றவனல்ல. பட்டறிவே உள்ளவன். மொழிபெயர்ப்பதில் கவிதையின் சிறப்பைக் கொண்டு வரமுடியாது ( எனக்கு ) என்று தோன்றியது. ஆகவே மொழியாக்கம் கீழே. படித்துப் பார்த்து தட்டிக் கொடுக்கவோ குட்டிக் கொடுக்கவோ தயக்கம் வேண்டாம் ஆங்கிலக் கவிதை எழுதியவர் T.P.KAILASAM என்னும் பெயருக்குரிய தமிழர். கன்னட மற்றும் ஆங்கில இலக்கியங்களில் பெயர் பெற்றவர்

Drona

THY flaunted virgin phalanx cleft a two
By but a stripling, thine own pupil's son
Whose bow abash'd his sire's preceptor! You,
In pain of tortur'd vanity, let run
Thine ire to blind thee to the blackest deed
Besmirch'd the scroll of Aryan Chivalry!
The while thy master's ghoulish hate did feed
And fatten on thy victor's butchery,

Thy father's heart had it bore some pity
For Partha in his dire calamity,
Dread Nemesis had spar'd thine aged brain
The searing, killing agony accrued
Of death of thine own son. Thou didst but drain
The bitter gall thy vanity had brewed!

அடியேனின் தமிழாக்கம் கீழே.

பிளக்க முடியாது எனக் கருதி
அமைத்த வியூகம்,, நீயே வியக்கும் வண்ணம்,
உன் மாணாக்கன் மகனாம் ஒரு இளங்கன்றால்
உடைக்கப் பட்டதும்,, போர் முறை மீறி,
அவனை வீழ்த்த வேறொரு வியூகம் அமைத்தனை நீ.
அறிந்திலை அப்போது , அதே யுத்த தர்மம் மீறலால்,
பார்த்தனின் புத்திர சோகம் உனக்கும் புரியும் எனவே.
                 *****************

நான் வரைந்த இரண்டுபடங்களை கீழே வெளியிடுகிறேன் படங்களைக்கூர்ந்து பார்த்து அதில் இருக்கும் மறைந்த செய்திகள் ஏதாவது தெரிந்தால் கண்டுபிடிக்கவும் ஒரு சின்ன சோதனை .அவ்வளவே 


                          **************************



ஒரு சிறுகதை
முகநூலில் அவனும் அவளும்  அறிமுகமானார்கள். முகங்காணாப் பதிவர்கள் ஒருவரைப் பற்றி ஒருவர் அறிந்து கொள்வதைப்போல் முகநூலில் எழுதுவதன் மூலமே இருவரும் ஈர்க்கப் பட்டனர். கடைசியில் ஒரு பொது இடத்தில் ஒருவரை ஒருவர் சந்திக்க முடிவெடுத்தனர். அந்த நாளும் வந்ததுஆவலுடன் அவன் சென்றான் அவளும் வந்தாள். வந்தவளை இவன் கத்தியால் சரமாரியாகக் குத்தினான்.  பின் தன் கழுத்தையும் அறுத்துக் கொண்டு குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடந்தவன் தான் ஒரு பெண்ணைக் கத்த்தியால் குத்திக் கொலை செய்ததைக் கூறி இறந்தான் அவனுக்கு வயது 23. அவளுக்கு வயது 43.  22 வயதில் அவளுக்கு ஒரு மகள் இருக்கிறாள்
 என்ன நண்பர்களே கதை படித்தீர்களா. ?உங்கள் எண்ணங்களைப் பகிரலாமே.
                  ****************************************** 











 







      

வியாழன், 24 ஏப்ரல், 2014

சிறு வியாபாரம் -எண்ணச் சரடுகள்


                             சிறு வியாபாரம் -எண்ணச் சரடுகள்.
                             --------------------------------------------------



எனக்கு பணிமாற்றம் வ்ந்தபோது முதலில்மிகவும் கலங்கி விட்டேன். மாநிலம் விட்டு மாநிலம் என்று மாற்றங்கள் தொடர்ந்து வர வாய்ப்பிருந்தது. ஒரு சமயம் வேலையை ராஜினாமா செய்து ஒரு பெட்டிக்கடை போடலாம் என்னும் அளவுக்குபோயிருந்தேன் பணிமாற்றம் வந்தால் பிள்ளைகளின் படிப்பு மிகவும் பாதிக்கப் படும் என்ற அச்சம்தான். இப்போது நான் வேலையை ராஜினாமா செய்து வியாபாரம் என்று இறங்கி இருந்தால்  எப்படி இருந்திருக்கும் என்னும் கற்பனை நான் இப்போதுகாணும் சிறு வியாபாரிகளிடம் பேச வைத்தது. சிறு வியாபாரி என்றால் பெட்டிக்கடை போன்று கடை வைத்திருப்பவர்கள் என்று முதலில் நினைத்தேன் என்றைய நிலவரத்திலும் வியாபாரம் ஆகும் பணத்தில் 20% லாபம் கிடைக்கும் என்று கணக்கிட்டால் ஒரு நாளைக்கு டெர்ன் ஓவராக ரூ. ஆயிரத்துக்கும் மேல் ஆகவேண்டும் . அப்படி ஆகும் பட்சத்தில் சுமார் ரூ.200-/லிருந்து 300-/ வரை நம் செலவுக்குக் கிடைக்கலாம் . ஆனால் வியாபாரிக்கு உரிய எந்த குணமும் சாமர்த்தியமும் எனக்குக் கிடையாது. ஆகவே அன்று தொடர்ந்து நான் வேலையில் இருக்க எடுத்த முடிவே சரி என்று படுகிறது.
என் வீட்டின் முன் சிறு வியாபாரிகள் பலரைப் பார்க்கிறேன்  அவர்கள் தள்ளு வண்டியில் சீசனுக்கு ஏற்றாற்போல் பழவியாபாரம் செய்கிறார்கள். ஆரஞ்சு, திராட்சை. நுங்கு, தர்பூஸ் மாம்பழம் போன்ற பழங்களை வியாபாரம் செய்கிறார்கள். அதிகாலையில் சிடி மார்க்கெட், எசவந்தபுரா மார்க்கெட்போன்ற இடங்களுக்குச் சென்று ரூபாய் ஆயிரமோ அல்லது கூடக் குறைவோ அவர்கள் சக்திக்கேற்றபடி முத்லீடு செய்து மொத்த வியாபாரிகளிடம் இருந்துசரக்கு எடுக்கிறார்கள். உதாரணத்துக்கு தர்பூஸ் கேஜி பத்திலிருந்து பதினைந்துக்கு என்று வாங்கி அதை கேஜி ரூ,20/ -வரைக்கும் விற்கிறார்கள். என் வீட்டின் முன் விற்பவர் கூறிய தகவல்கள் இது. முதலீடு செய்த பணத்துக்கான மொத்த சரக்கும் விற்றுத் தீர்ந்தால் கையில் கணிசமான பணம் மிஞ்சும். இதில் இவர்கள் தள்ளுவண்டிக்கு தினம் ரூ.50-/ வாடகையாகத் தரவேண்டும் . போலிஸ் கெடுபிடிக்கும் பணிந்து போய் பணமாகவோ பொருளாகவோ கொடுக்கவேண்டும்
இன்னொருசிறு வியாபாரி நுங்கு விற்பவர். இவர் சீசனுக்கு சீசன் வியாபார்ம் செய்பவர். இவரது ஊர் ஆம்பூர் என்றார். இவர்கள் ஐந்தாறு பேர் கூட்டாக தொழில் நடத்துகிறார்கள். ஊரில் பனந்தோப்பை குத்தகைக்கு எடுக்கிறார்களாம் ஒரு மரத்துக்கு ரூ.நூறிலிருந்து நூற்றைம்பது வரை கொடுக்க வேண்டுமாம் . ஒரு பனை மரத்தில் ஏறி நுங்குகளைக் குலையோடு எடுக்க மரத்துக்கு ரூ. 50-/தரவேண்டுமாம்.. அப்படி தோப்பில் இருக்கும் மரங்களிருந்து கிடைக்கும் காய்களை லாரியில் ஏற்றி பெங்களூர் கொண்டு வந்து நண்பர்கள் பங்கு போட்டுப் பிரித்துக் கொண்டுபல இடங்களில் வியாபாரம் செய்கின்றனர். இந்தக் கணக்கில் ஒரு நுங்கு ஐந்து அல்லது ஆறு ரூபாய் கொள்முதலாகும். இவர்கள் அதை ரூ.15/லிருந்து ரூ.20-/ என்று விற்பனை செய்கிறார்கள் இப்படியான வியாபாரத்தில் சீசனுக்கு ஆளுக்கு  ரூ 10,000-/ வரை கிடைக்கலாமாம். ஆனால் நுங்கு சீவி விற்பது எளிதாகத் தெரியவில்லை.

என் வீட்டில் இருந்த இரண்டு தென்னை மரங்களில் ஒன்றைக் கருணைக் கொலை செய்து விட்டேன் . அது பற்றி ஒரு பதிவும் எழுதி இருந்தேன் . என் வீட்டில் இருக்கும் ஒரு தென்னை மரத்தில் இருந்த காய்களைப் பறிக்க யாரும் கிடைக்காத நிலையில் இருவர் வந்தனர். அவர்கள் குறி மரத்தில் இருந்த முற்றிய காய்கள் அல்ல. இளநீர்க் காய்களே என்பது பின்னர்தான் தெரிந்தது. ஒரு இளநீர் ரூ.8-/ என்று கணக்கிட்டு எடுத்துக் கொள்வதாகக் கூறினர். இரண்டு மணிநேரத்தில் இளநீர்க் காய்களும் முற்றியகாய்களும் என குலைகளாகவும் தனிக்காய்களாகவும் பறித்துக்கீழே இறக்கினர். அதற்குள் ஒரு தள்ளுவண்டியுடன் ஒருவன் வந்தான் . முற்றிய காய்களை எனக்குக் கொடுத்துவிட்டு இளநீர்க் காய்களை வண்டியில் ஏற்றினர். இள நீர்க் காய்களை எண்ணுவது போல்பாவனை செய்து நூறு இளநீர்க் காய்கள் என்று கூறி ரூ. 800-/ கொடுத்தனர். எனக்குத் தெரியும் அதில் 125-/ காய்களுக்கு மேல் இருந்தது என்று, தேங்காய்களாக சுமார் ஐம்பது காய்களும் ரூ.800/- ம் கிடைத்தது, பெங்களூரில் ஒரு இளநீர் ரூ.20-/ க்கும் மேல் விலையில் விற்கப் படுகிறது அந்த வியாபாரிகளுக்கு மரம் ஏறி காய்களை வெட்டிச் சாய்ப்பதும் இளநீர்க் காய்களை விற்பதும் வேலை. ஒரு மரத்தில் இருந்து செலவே இல்லாமல் ரூ. 1200-/ க்குக் குறைவில்லாமல் சம்பாதிக்க முடிகிறது என்றால் ஒரு தென்னந்தோப்பைக் குத்தகைக்கு எடுத்தால் என்ன லாபம் என்று என் மனசு கணக்குப் போட்டது. கூடவே உள்மனசு கையாலாகாதவன் கணக்குப் பார்க்கக் கூடாது என்றது.
இது இன்னொருவிதமான கடை. நான் முடிதிருத்திக் கொள்ளப் போகும் சலூனுக்கு சொந்தக் காரர் ஒருவர். சலூனுக்கு வாடகையாக மாதம் ரூ.5000-/ கொடுக்கிறார், காலை ஏழுமணிமுதல் கடை திறந்திருக்கும் மாலை எட்டு மணிவரை பணி செய்கிறார் என்று எடுத்துக் கொண்டால்சாப்பாடு காஃபி நேரம் போக சுமார் 12 மணிநேரம் பணி. ஒரு மணி நேரத்தில் நான்கு பேர் கடைக்கு வந்து முடி வெட்டிக் கொள்கிறார்கள் என்றால் ஒரு நாளில் 48பேர் என்று கணக்கிடலாம் அவர் முடிவெட்ட ரூ50-/ அதிகபட்சமாக வசூலிக்கிறார். அப்படியானால் ஒரு நாளில் ரூ.2400-/ சம்பாதிக்க வாய்ப்புண்டு. ஆனால் தினம் 48 பேர் வருவார்களா என்பது கேள்விக்குறியே. இவருக்கு மனைவி இரண்டு பெண்குழந்தைகள் இருக்கிறார்கள்.
இதுவன்றி என் கண்களில் தென்படும் காய்கறி வியாபாரிகள் காலையில் மார்க்கெட் சென்று சரக்கெடுத்து வந்து வியாபாரம் செய்ய வேண்டும் . இவர்கள் கொள்முதல் செய்யும் காய்கறிகள் ரூ.1000-/ தாண்டாது. கொள்முதல் செய்யப் பணம் இல்லாதவர்கள் காலையில் கந்து வட்டிக்காரனிடம்கடன் வாங்கி மாலையில் அப்பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என் வீட்டின் முன்னே நான் ஒரு ஆயாவைப் பார்க்கிறேன் காலை ஏழு மணிக்கு கடை பரப்பினார் என்றால் மாலை எட்டு மணிவரை வெயிலில் அமர்ந்திருப்பார். ஒரு கோணிப்பை மறைப்புக்கு வைத்துக் கொள்கிறார். அவரிடம் பேச்சுக் கொடுத்து விஷயம் தெரிய ஆவல் இருக்கிறது. மொழிப்பிரச்சனையும் ஒருவேளை அது அவருக்கு விருப்பபடாமல் போனாலோ என்னும் ஐயம் இதுவரை என்னை தடுத்து வந்திருக்கிறது சில வகைச் சிறு வியாபாரிகள் பற்றி எழுதிவிட்டேன். ஆனால் இந்த வியாபாரம் மூலம்குடும்பம் ரட்சிக்கப் பட்டு குழந்தைகள் படிக்க வைக்கப் பட்டு , வீட்டு வாடகை கொடுக்கப் பட்டு அப்பாடா. இவர்களால் எப்படி சமாளிக்க முடிகிறது. பிலோ பாவர்டி லைன் என்று இப்பேர்ப் பட்டவர்களுக்கு அரசு சலுகைவிலையில் அரிசி போன்ற அத்தியாவசியப் பண்டங்களைக் கொடுப்பதால் ( அரிசி ஒரு கேஜி ஒரு ரூபாய் என்று மாதம் முப்பது கேஜி )அவர்கள் பிழைப்பு நடப்பதாக எண்ணுகிறேன்
சரி தாய் தந்தை இரு குழந்தைகள் என்று இருக்கும் ஒரு குடும்பம் மானத்தோடு வாழ மாதம் எவ்வளவு ரூபாய்த் தேவைப்படும் ?  

என் வீட்டின் முன் 
  
என் வீட்டின் முன்

 




   

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

களவு கொடுத்த மற்றும் ஏமாந்த நிகழ்வுகள்


            களவு கொடுத்த மற்றும் ஏமாந்த நிகழ்வுகள் நினைவுகள்.

         ----------------------------------------------------------------------------------

எத்தனை பேருக்கு இந்த அனுபவம் இருந்திருக்கும் என்று தெரியாது. ஆனால் சென்னையில் பேரூந்தில் பயணம் செய்திருப்பவர் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். 1976 ல் என்று நினைக்கிறேன். திருச்சியில் பாரத மிகுமின் கொதிகலத் தொழிற்சாலையில் பணி செய்து கொண்டிருந்த என்னை சற்றும் எதிர்பாராத வகையில் பணி மாற்றம் செய்தார்கள். அனல்மின் தயாரிப்பு இந்தியாவின் பல பாகங்களில் நடந்து கொண்டிருந்தது. அதன் தென் பிராந்திய அலுவலகம் சென்னையில் இயங்கி வருகிறது. எனக்கு எந்த இடத்தில் போஸ்டிங் என்று தெரியும் முன் சென்னை அலுவலகத்தில் பணி. இடமாற்றம் பல பிரச்சனைகளை உருவாக்கியது. அதில் தலையாயது என் பிள்ளைகளின் படிப்பு. எங்கு போஸ்டிங் என்று தெரியாத நிலையிலும் , ஏற்கனவே பள்ளிகள் திறந்து விட்ட படியாலும் முதலில் அவர்களை சென்னையில் குடியமர்த்திவிட்டு பள்ளியில் சேர்த்து விடலாம் என்று முடிவெடுத்தேன் நுங்கம்பாக்கத்தில் ஒரு பள்ளியில் அட்மிஷன் வாங்கி கோடம்பாக்கம் ட்ரஸ்ட் புரத்தில் வீடும் பார்த்துக் குடியமர்த்தினேன். என்று எனக்கு எந்த இடத்துக்குப் போஸ்டிங் என்று தெரியாத நிலையில் தினமும் கோடம் பாக்கத்திலிருந்து நந்தனம் வரை பேரூந்தில் பயணம் என்பது வாடிக்கையாய் இருந்தது. அப்படி இருக்கும் போது ஒரு மாதம் சம்பளம் வாங்கி பேரூந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். ஏதோ உள்ளுணர்வு கூற என் பாண்ட் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்தால் என் பர்ஸ் போயிருந்தது. கூச்சல் போட்டு பேருந்தை நிறுத்தி காவல் நிலையத்துக்குப் போனோம். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் என்னை கடிந்து கொண்டார். சம்பளம் வாங்கிய ஒரு நாளாவது ஆட்டோவில் பயணிக்கக் கூடாதா என்றார். என்ன சொல்லி என்ன. பர்ஸ் போனது போனதுதான்
வீட்டில் மனைவியிடம் தெரியப்படுத்தி வாங்கிக் கட்டிக்கொள்வது நினைத்து மனம் சஞ்ச்லப் பட்டது நான் சம்பளம் வாங்கியதும் அதை பர்சில் வைக்க முயன்று அது மிகவும் பல்ஜ் ஆகி துருத்திக் கொண்டிருந்ததால் ஒரு நூறு ரூபாய் மட்டும் பர்சில் வைத்து மீதிப் பணத்தை பாண்ட் பாக்கெட்டில் தனியே வைத்திருந்தேன் ஆக என் பர்சும் அதில் இருந்த சில முக்கிய பேப்பர்களும் களவு போயிற்றே தவிர பணம் போகவில்லை. பர்ஸ்  களவு போயிருந்தாலும் என் சாமர்த்தியத்தால் சம்பளப் பணம் போகாமல் தப்பித்ததைக் கூறி என் மனைவியின் வசவுகளை மட்டுப்படுத்தினேன் ..!
ஒரு முறை என் மகன் பேரூந்தில் பயணிக்கும் போது ஒருவர் பர்சைத் திருடுவதைக் கண்ணால் கண்டு கத்த வாயெடுத்திருக்கிறான். அப்போது அவனது கழுத்தில் ஒருவன் கத்தியை வைத்து அழுத்திக் கத்தாதே என்றானாம் . இவன் வெலவெலத்துப் போய் ஏதும் செய்ய முடியாமல் இருந்திருக்கிறான் இதைப் பொருட்படுத்தாது அவன் கூச்சல் போட்டு இருக்க வேண்டுமோ...தெரியவில்லை.
ஒரு முறை ஒரு மழைநாளில் பஸ்ஸில் ஏறும்போது என் பாக்கட்டில் ஒருவன் கைவிட எத்தனித்த்போது நான் அவன் கையைப் பிடிக்க அவன் அதை உருவிக் கொண்டு கூட்டத்தில் மாயமானான்.
நானும் என் மனைவியும் மூகாம்பிகா கோவில் போய் திரும்பி வரும்போது என் மனைவியின் கைப்பை காணாமல் போயிருந்ததை நாங்கள் வீடு வந்த பிறகுதான் அறிந்தோம். அதில் அவள் பொக்கிஷமாய்க் கருதும் பல தோத்திரப் புத்தகங்களும் வீட்டின் உள் அறைச் சாவிகளும் இருந்தன. வீட்டுக்கு வந்து மெயின் கதவைத் திறந்து அறைக் கதவுளைத் திறக்க வேண்டியபோதுதான் கைப்பைக் காணாமல் போனது தெரிந்தது. உடனே ஆட்டோபிடித்து பஸ் டெப்போவுக்குப் போய் நாங்கள் வந்த பஸ்ஸைக் கண்டு பிடித்து  பை இருக்கிறதா என்று தேடினோம்  ஏமாற்றமுடன்  வீட்டுக்கு வந்து தாழ்ப்பாள்களை உடைத்து அறைக் கதவுகளைத் திறந்தோம்.
என் வீட்டில் அப்போது முதல் தளத்தில் தங்கிக் கொண்டிருந்தோம் . கீழ் போர்ஷனை வாடகைக்கு  ஒரு டாக்டருக்கு வாடகைக்கு விட்டிருந்தோம். வீட்டுக்கு யாராவது வந்தால் சன்னல் கதவு வழியே பார்த்து தெரிந்து கொள்வோம் . ஆள் யாரென்று தெரியாமல் கதவைத் திறப்பதில்லை. ஒரு நாள் மாலை சுமார் ஏழு மணி அளவில் ஒருவர் அவசரமாக மாடிக் கதவைத் தட்டினார், ஆசுபத்திரியில் யாரோ உடல் நலமில்லாமல் இருப்பதாகவும் அவருக்குக் காஃபி வாங்கிக்கொடுக்க ஒரு தெர்மோஸ்ஃப்லாஸ்க் எங்களிடம் வாங்கிக் கொள்ளுமாறு கீழ் வீட்டில் குடி இருந்த டாக்டர் சொன்னதாகவும் கூறினார். என் மனைவி எங்களிடம் இருந்த ஒரு பெரிய நல்ல ஃப்லாஸ்கை சன்னல் வழியே கொடுத்தார். இரவு டாக்டர் கிளினிக்கிலிருந்து வந்தவுடன் அவரிடம் நடந்ததைத் தெரிவித்தார். டாக்டர் தான் அப்படி யாரிடமும்சொல்ல வில்லை என்றதும் நாங்கள் ஏமாந்தது தெரிந்தது.



இதை எழுதும்போது நினைவுக்கு வருவது. நான் சிறு வயதில் என் தந்தைவழிப் பாட்டியின் வீட்டில் பாலக் காட்டில் கோவிந்தராஜபுரம் எனும் கிராமத்தில் சுமார் ஓராண்டு காலம் இருந்தேன். ஒரு நாள் இரவில் உறக்கத்தின் நடுவே என் பாட்டி என் அப்பா சித்தப்பா பெயர்களை சத்தமாகக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார் மறுநாள் காலை இது பற்றி அவரிடம் கேட்டபோது அவர் இரவில் ஏதாவது சந்தேகமான சப்தம் எழுந்தால் வீட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று (வந்த, வராத ) திருடனுக்குத் தெரிவிக்க என்றாரே பார்க்கலாம்.....!  . 
. 

   

 

ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

கல்லேக்குளங்கரை பகவதி க்ஷேத்திரம்


                  கல்லேக்குளங்கரை  பகவதி க்ஷேத்திரம்
                  ---------------------------------------------------------
அட.. என்ன இது ... இவனும் ஆன்மீகப் பதிவு போடுகிறானா என்று எண்ண வேண்டாம் அண்மையில் சில கோவில்களுக்குப் போய் வந்ததன் பாதிப்பே. மேலும் இந்தக் கோவில்தான் எங்கள் குலக் கோவில் என்று பல வருடங்கள்நம்பி வந்திருக்கிறேன் மேலும் சிறு வயதில் போய் வந்த nostalgic memories.!



வடமலக் காட்டின் வழியே  துர்க்கையைட் தரிசிக்க குருரும் கைமுக நம்பூதிரிகளும் சென்று கொண்டிருந்தபோது ஒரு அரிய காட்சியைக் கண்டனர்அன்னை தேவி.தகதகவென தங்க ஜ்வலிப்புடன் ஒரு மரத்தின் அடியில் யானையின் அருகே நின்று கொண்டிருக்கக் கண்டனர். வயது முதிர்ந்த குரூருக்கு கடினமான யாத்திரைகளை மேற்கொள்ளா முடியாமல் இருப்பது எண்ணி மனமொடிந்தார். அன்னை அவரது கனவில் தோன்றி தான் அருகில் உள்ள குளத்தில் காட்சியளிக்கப் போவதாகக் கூறினாள், மறுநாள் அங்கிருந்த குளத்தின் நடுவே முதலில் கைகள் வெளிப்பட்டடன. தடுக்க முடியாத ஆவலில் குருர் குளத்தில்  நீந்திப் போய் அன்னையின் கைகளைப் பற்றி கொள்ள உருவம் மேலெழும்பாமல் கையும் கல்லாய் மாறி நின்றுவிட்டது
பக்தன் ஒருவனுக்குக் கனவில் வந்து தான் அவனுக்குக் காட்சியளிக்கப் போவதாகவும் இதை அவன் யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் அன்னை தேவி கேட்டுக் கொண்டாள். ஆனால் இந்த அதிசய நிகழ்வை அவனால் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை, அதன் வினையே குளத்தின் நடுவே காட்சியளிக்க வந்த தேவியின் கரங்களை மட்டுமே தரிசிக்க முடிந்தது
இதையே அன்னை காட்சியளிக்கும் சமயம் ஆச்சரியம் பக்தி மேலிட பக்தன் கூக்குரலிடவும் அன்னை தன் கரங்களை காட்டியதோடு நின்று விட்டாள் என்றும் கூறுவர்.
இப்படியெல்லாம் சொல்லப் படும் கோவிலின் நாயகி ஏமூர் பகவதி (ஹேமாம்பிகா) என்னும்நாமத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள்
காலையில் சரஸ்வதியாகவும் மதியம் லக்ஷ்மியாகவும் மாலை துர்க்கையாகவும் வணங்கப்படும் அன்னையின் கைகள் ஒரு குளத்தின் நடுவே பிரதிஷ்டை ஆகி இருக்கிறது கல்லேகுளம் என்று அழைக்கப் படும் அந்தக்குளத்தைச் சுற்றி நான்கு குளங்கள் உள்ளன. அவை அம்பலக் குளம் , தெருக்குளம் ஆனக்குளம் பரக்குளம் என்று கூறப்படுகின்றன.
நீரில் தோன்றிய கரங்களுக்கு வழிபாடு செய்யப்பட்டு வரும் ஆலயம் பாலக்காடு நகரத்தில் இருந்து மலம்புழாவுக்குச் செல்லும் பாதையில் சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது “கைப்பதி அம்பலம் “ என்றும் ஏமூர் பகவதி ஆலயம் என்றும் அழைக்கப் படுகிறதுகாலை ஐந்து மணிமுதல் முற்பகல் பதினொன்றரை மணி வரையிலும் பின் மாலை ஐந்து மணிமுதல் இரவு எட்டரை மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்
பாலக்காடு அரசர்களின் குலக்கோவிலாக விளங்கும் இந்த ஆலயத்தில் ஒன்பது நாள் சிவராத்திரிப் பண்டிகை விசேஷம் நான் சிறுவயதில் (ஒன்பது பத்து வயதில்) என்   தந்தைவழி பாட்டியுடன் அருகில் இருக்கும் கோவிந்தராஜபுரம் எனும் கிராமத்தில் ஏறத்தாழ ஒரு வருடம் இருந்தேன் கல்பாத்தி புழையைக் கடந்து வந்து மாதம் ஒரு முறை எங்கள் வீட்டில் இருந்து பாயச நைவேத்தியம் செய்யப் படும் அந்தப் பிரசாதம் மிகவும் சுவையுடன் இருக்கும்.
இந்த ஆலயத்தை பற்றி இன்னொரு கதையும் (?) உண்டு, திருமதி. இந்திராகாந்தி திரு. கருணாகரனுடன் இந்த ஆலயத்துக்கு வந்து வழி பட்டதாகவும் ஆலயத்தில் கைகளாகக் காட்சிதரும் அம்மன் ரூபத்தில் லயித்துப் போய் “கையையே தன் கட்சி சின்னமாக வைத்ததாகவும் கூறப் படுகிறது
இன்றைக்கும் இந்தக் கோவிலில் மின்சார வசதி இல்லை என்று கேள்வி. ஆசிகளையும் எல்லா நலங்களையும் நல்கும் அன்னை எல்லோரையும்காக்கட்டும்      .     .       .  
 .
ஏமூர் பகவதி
( படம் இணைய உபயம் )    



   

 


வெள்ளி, 18 ஏப்ரல், 2014

கண்டு களிக்கக் காணொளிகள்


                                         கண்டு களிக்கக் காணொளிகள்
                                         =============================

ஹாரி சார்லியின் வாயில் விரல் கொடுத்து படும் பாடு . குழந்தைகள் உலகம் ரசிக்க



இருந்த இருப்பில் “கங்கம் ஸ்டைலில்” ஆடும் குழந்தை....!

இவர்கள் உடல் என்ன  ரப்பரால் ஆனதா....?


சாதாரணமாகக் குனிந்து நிமிரவே பிரயாசைப் படும் எனக்கு இவர்களைப் பார்க்கும்போது ஆச்சரியமும் பொறாமையும் ஏற்படுகிறது.



புதன், 16 ஏப்ரல், 2014

பயணம் அனுபவம் எண்ணங்கள் தொடர்ச்சி.


                             பயணம் அனுபவம் எண்ணங்கள் தொடர்ச்சி.
                            ------------------------------------------------------------------


மறுநாள்  என் மனைவியின் தகப்பனார் இடம் வெள்ளிநாழியில் நேர்த்திச் சடங்கு. அதிகாலையில் எழிந்து குளித்து புறப்பட்டோம். அங்கு சென்றுதான் காலை ஆகாரம் என்றார்கள். போகும் வழியில் மனைவியின் தந்தையாரின் குலக் கோவிலான மாங்கோட்டுக் காவுக்குச் சென்றோம் அந்தக் கோவிலில் பூரம் திருவிழாவுக்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. யானையை அலங்கரித்துப் பட்டம் கட்டி ஊரில் வலம் வருவார்கள். அப்போது பக்தர்கள் காணிக்கை பணமாகவோ பொருளாகவோ தருவார்கள், என் உறவினரும் பூரத் திருவிழாவுக்கு அவர்களால் முடிந்த காணிக்கை செலுத்தினார்கள்.
எங்களுக்கு வந்த அழைப்பில் அங்கு பானை எனும் வேண்டுதல் சடங்கு நடை பெறும் என்றார்கள். இந்தச் சடங்கில் முதலில் பானைப் பந்தல் என்று நிறுவுகிறார்கள். ஆறடிக்கு ஆறடி பந்தல் பெரும்பாலும் வாழை மட்டையில் தென்னை இள ஓலைகளைச் செருகி அலங்கரிக்கிறார்கள். அந்தப் பந்தலில் பகவதியைபிரதிஷ்டை செய்கிறார்கள்.மாஙோட்டுப் பகவதி க்ஷேத்திரத்தில் இருந்து வாள் ஒன்று கொண்டு வரப்பட்டு பகவதியுடன் ஆராதிக்கப் படுகிறது பந்தலைச் சுற்றிலும் வாழை இலையில் அரிசி மேல் தேங்காய் வைக்கப் பட்டிருக்கிறது. திசைக்கு நான்கு வீதம் பனிரெண்டு இலைகள். முதலில் கணபதி பூஜை. செய்விப்பவர் பூசாரியோ புரோகிதரோ அல்ல. இம்மாதிரி பூஜைகள் நடத்துவதில் பயிற்சி பெற்றவர் போலத் தெரிகிறதுஎந்த வித மந்திர உச்சாடனமும் இல்லை. எல்லாம் கையால் சைகைகள்தான் பஞ்ச வாத்தியங்களுடன் ஜெண்டை முழங்க பூஜை செய்கிறார். அருகே தோட்டத்தில் இருந்த பாலை மரக் கிளையை கொம்போடு வெட்டி எடுத்து வருகிறார்கள். இந்த சடங்குக்கு பெண்கள் கையில் தாலமேந்தி (தட்டில் விளக்கு ) செல்கிறார்கள் தாள வாத்தியத்துடன் அந்த மரக் கிளையை கொண்டு வந்து பந்த்லுக்குள் நடுகிறார்கள் அதன் பின் பூஜை செய்பவர் விஸ்தாரமாக திசைக்கு நான்கு இலைகளில் உள்ள தேங்காய் முன் நின்று தூப தீபம் காட்டுகிறார். ஒவ்வொரு இலையின் முன் நின்று செய்வது நிறையவே நேரம் எடுக்கிறது மொத்தம் 16 இலைகள் ஒவ்வொன்றின் முன்னும் மூன்று முறை அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று தெரியாமல் நமக்கு அவஸ்தை. ஒவ்வொரு முறையும் தூபமோ தீபமோ காட்டும் போது அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஏதோ நாட்டிய ஸ்டெப் போல இருக்கும் இது முடிந்து பந்தலைச் சுற்றி ஒன்பது முறை வலம் வருகிறார். ஒவ்வொரு திசை முன்பும் இந்த நாட்டிய ஸ்டெப்புடன்.... நிறையவே பொறுமை சோதிக்கப் படுகிறது. இது முடிந்தபின் குருதி பூஜை. ஒரு உருளியில் குங்குமம் மஞ்சள் கலந்த நீர் சிவப்பு நிறத்தில். இந்த நாட்டிய நடையுடன் மேள தாளங்கள் அதிரடி அடிக்க அவர் குருதியைக் குடிப்பதுபோல் பாவனை செய்கிறார். ஒவ்வொரு சுற்று முடியும் போதும் குருதியைக் கலைத்துக் குடிப்பது போல் பாவனை. ஒரு வேளையில் குருதி எல்லாம் கீழே சிந்தி ஜெண்டை முழக்கம் ஒரு crescendo  நிலையில் எல்லோரும் கட்டிப்போட்டு விட்டது போல் இருக்கிறார்கள். இவருடைய முறை முடிந்ததும் பந்தலைச் சுற்றி நாட்டிய பாவனையில் அதில் தேர்ச்சி பெற்றவர்கள் தீப்பந்தங்களுடன் ஆடியாடி சுற்றி வருகிறார்கள். ஒரு சமயம் பந்தலைச் சுற்றி ஆடி வருபவர் எண்ணிக்கை அதிகரித்து விடுகிறது. சிறு பிள்ளைகளும் கலந்து கொள்கிறார்கள் , இந்த சடங்கு முடியும் தருவாயில் கேரளத்துக்கே உரிய “ வெளிச்சப்பாடு வருகிறார்  அவர் குளித்து முடித்து தலை விரி கோலமாய் சிவப்பு உடையில் கயில் ஒரு பெரிய வாளுடன் முதலில் பூஜௌ செய்ய வருகிறார். அவரது சடங்கு தொடங்கும் முன்னே இந்தப் பானை பந்தல் பிரிக்கப் பட்டு விடுகிறது அவரும் பந்தலைச் சுற்றி வருகிறார். அதே நாட்டிய ஸ்டெப்புடன் . பிறகு தாள வாத்தியங்களின் துரித கதிக்கேற்ப ஓடுகிறார். பிறகு இந்த சடங்குக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் முன் வந்து அருள் வாக்கு சொல்கிறார். பெரும்பாலும் பகவதிக்கு மகிழ்ச்சி என்றே கூறு கிறார்கள், இபடியாக ஒரு வழியாகப் பானை நடந்து முடிந்தது.
இணையத்தில் இந்த சடங்கு குறித்துத் தேடினேன். சரியான விவரங்கள் கிடைக்கவில்லை. அங்கு வந்திருந்த பலரிடம் கேட்டதில் இது ஒரு நேர்த்திச் சடங்கு என்றே தெரிகிறது.எனக்கு கிராம தேவதைகளுக்குப் படையல் செய்வது பற்றி எதுவும் தெரியாது. இந்த வழிபாடு பிரத்தியேகமாக நாயர் ஜாதியில் காணப் படுவதாகத் தெரிகிறது மந்திரங்கள் ஏதும் இல்லை இருந்தாலும் பகவதிக்குப் ப்ரீதி செய்ய ஒரு அணுகு முறை என்றே தோன்றுகிறது அன்னை என்பவளை உக்கிரம் கொண்டவளாகப் பாவித்து அவளது அனுக்கிரகம் பெற குருதி பூஜை செய்கிறார்களென்றே தோன்றுகிறது முன் காலத்தில் விலங்குகளை பலியாகக் கொடுக்கும் வழக்கம் மறைந்து குருதியை நிவேதனம் செய்வதாக ஒரு பாவனை பிற்காலத்தில் வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது எது எப்படி இருந்தாலும் இந்தக் கலாச்சார வழிபாடுகள் மூலம் நம் பாரம்பரியக் கலைகள் முற்றிலும் அழிந்து விடாமல் இன்னும் இருக்கிறது என்று தோன்று கிறது. “ யாதேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஎன்று எண்ணும் எனக்கு அன்னையைக் கொடூரமானவளாகவும் ரத்த வாடை கொண்டவளுமாக நினைக்க முடியவில்லை. இம்மாதிரி வழிபாடுகள் primitive ஆகத் தோன்றுகிறது.
இந்த வழிபாடுகள் ஊடே வயிற்றுப் பாடும் கவனிக்கப் பட்டது. இந்தச்சடங்குகளை நான் என் விடியோ காமிராவில் பதிவு செய்திருக்கிறேன் இது முடிந்து மஹாராஜாவின் கொட்டாரம் செல்லும் முன் செருப்புளச்சேரி என்னுமிடத்தில் ஒரு ஐயப்பன் கோவில் காண  விரும்பினார்கள். அந்தக் கோவிலின் விசேஷமே அங்கிருக்கும் ஐயப்பன் நின்ற கோலத்தில் இருப்பதுதான். ஆனால் பேண்ட் அணிந்திருந்த எனக்கு அனுமதி இல்லை என்றார்கள். தூரதிலிருந்தே சேவித்துக் கொண்டிருந்த என்னையும் என் மச்சினன் ஒருவனையும் பார்த்த அந்தக் கோவிலில் பொறுப்புள்ள ஒருவர் நாங்கள் உள்ளே சென்று தரிசிக்க அனுமதி கொடுத்தார்
ஒரு வழியாய் அறைக்கு வந்து சேர்ந்தோம். மறுநாள் என் மாமியார் வீட்டுக்குலக் கோவிலுக்கு மீண்டும் சென்றோம் . இம்முறை என் கடைசி மச்சினியின் பிரார்த்தனை நிறைவேற்ற. அவளுக்கு ஒரு சாலை விபத்தில் உயிர் பிழைத்ததே அதிர்ஷ்டம் என்னும் நிலையில் ஒரு காலில் சிதைவு ஏற்பட்டு நிறையவே காஸ்மெடிக் சர்ஜெரி செய்து ஓரளவு நடமாடுகிறாள். அவளுக்குக் காலில் “ஆணி“ என்னும் தொல்லை வந்து குணமாக பரியாம்பட்தக் காவில் நேர்த்திக்கடன் கோவிலில் எண்ணையும் அப்பளமும் வாங்கிக் கொடுக்க அவர்கள் அவற்றைப் பொரித்துத் தருகிறார்கள் அந்த பொரித்த அப்பளங்களை பகவதியின் சன்னதி முன்னால் ஒரு வாழை இலையில் வைக்கிறார்கள். இவள் “ஆணியுள்ள  காலாஇ அதை மிதித்து நொறுக்க வேண்டும்  பிறகு அங்கிருந்த ஒரு ஓட்டலில் காலை ஆகாரம் நாங்கள் பத்து பேர் ( ட்ரைவர் உட்பட ) காலை உணவு வயிறார உண்டதற்கு ரூ. நானூறுக்குள்தான் ஆயிற்று. இதையே நாங்கள் இருந்த கொட்டாரத்தில் உண்பதாயிருந்தால் ரூபாய் ஆயிரத்தைநூறுக்கு குறையாமல் ஆகி இருக்கும். காலை பதினொன்றரை மணிக்கு பாலக் காட்டில் ரயில் ஏறினோம். பகல் வேளைப் பயணம் வெயிலின் தாக்கம் அதிகமாகவே தெரிந்தது. இரவு எட்டு மணி அளவில் வீடு சேர்ந்தோம் 
 இனி சில புகைப் படங்கள்.
பானை பந்தல் தயாராகிறது

பகவதி பிரதிஷ்டை வாளுடன் 
தூப தீப வழிபாடு 

பால மரக் கிளை பந்தலில் 



.
கேரளா ஸ்டைல்....!
      .  
 .
பரியாம் பத்தக் காவு முன் நாங்கள்,
.        

வெளிச்சப் பாடு வந்தாயிற்று .......!


   

 




திங்கள், 14 ஏப்ரல், 2014

பயணம் - அனுபவங்கள் எண்ணங்கள்.


                பயணம் - அனுபவங்கள் எண்ணங்கள்.
                ------------------------------------------------------


என் மனைவி( வலமிருந்து இரண்டாமவர்)  தன் உடன் பிறப்புகளுடன்
பயணம் செய்வது எனக்குப் பிடிக்கும் . அதுவும் என் சிந்தனைக்கு தீனி போடுவது என்றால் இன்னும் பிடிக்கும். தாய் மொழி எது என்று கேட்டு ஒரு பதிவு எழுதி நான் குழம்பியதல்லாமல் மற்ற வர்களையும் ( ? ) குழம்பவைத்த எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் வந்தது. குலதெய்வம் குடும்பக் கோவில் என்கிறோமே அது எது.எனக்கு என் தந்தையின்  குடும்பக் கோவிலாக பாலக் காட்டில் இருக்கும் மணப் புளிக் காவு என்பார்கள்.எனக்கும் அதுதான் குலக் கோவில் என்று அங்கு என் மனைவி மக்களுடன் சென்று வழிபட்டும் வந்திருக்கிறேன் என் மனைவியின் குலக் கோவில் பரியாம்பத்தக் காவு என்று சொல்லி இருந்தாள். அங்கும் என் பரிவாரங்களுடன் சென்று வந்திருக்கிறேன் இது வரை சரி. இந்த முறை அவள் தந்தையின் குலக் கோவிலுக்கும் அவருடைய தரவாட்டு ( குடும்ப ) வீட்டுக்கும் கோவிலுக்கும் செல்லவிரும்பினாள் . அவளது தந்தையின் இடத்தில் தற்போது வசிக்கும் உறவினர்கள் ( உரிமை இல்லாமலேயே வசிக்கும் ) ஒரு வழிபாடு செய்யப் போவதாகவும் நாமும் அதில் கலந்து கொள்ளஅழைப்பு இருப்பதாகச் சொன்னாள். அவளது உடன் பிறப்புக்ள் அனைவரும் கலந்து கொள்வதாகவும் கூறினாள். உடன் பிறப்புகள் அனைவரும் கலந்து கொள்ள இருக்கும் ஒரு வழிபாட்டைக் காண எனக்கும் ஆவல் பிறந்தது. அங்கு போனபோது மாங்காட்டுப் பகவதி அவளது தந்தையின் குலதெய்வம் என்றாள், அதுதான் என் சந்தேகத்துக்கு இன்னொரு வித்திட்ட்து. இப்போது குலதெய்வம் குலக் கோவில் என்று எதைக் கூறுவது. எங்கும் நிறைந்த ஆண்டவன் இருக்குமிடமெல்லாம் குலக் கோவில் என்று பதில் சொல்லித் தப்பிக்க என்னால் முடிவதில்லை. நாளைக்கு என் மக்கள் அவர்களது குலக் கோவில் எது என்று கேட்டால் நான் எதைச் சொல்ல.?என் மூதாதையரின் மணப் புளிக்காவையா, என் மனைவியின் தாய் வீட்டு பரியாம்பத்த பகவதி கோவிலையா.  அவளது தந்தை வீட்டு மாங்காட்டு பகவதி கோவிலையா?  இம்மாதிஎரி குலதெய்வக் கோவில்களை எப்படி நிர்ணயம் செய்வது. இந்த சந்தேகமே என் மாதிரியான காஸ்மோபாலிடன் குடும்பத்தில் எழாமல் இருக்க என்ன செய்யவேண்டும் ? பட்டும் படாமல் பதில் சொல்வதைத் தவிர்த்து உங்களுக்குத் தோன்றுவதைக் கூற வேண்டுகிறேன்.
எங்கள் குலக் கோவில் மணப்புளிக்காவில் மனைவி ,பேரன் பேத்தி, மருமகளுடன்
பரியாம்பத்தக் காவு க்ஷேத்திரம்
மாங்கோட்டு பகவதி கோவில்

பரியாம்பத்தக் காவு இன்னொரு கோணம்
மாங்கோட்டு பகவதி கோவில் யானை

இந்தப் பயணமும் ஊரில் நடைபெற்ற வழிபாட்டுச் சடங்குகளும்  அது குறித்த என் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். இனி ஆரம்பமுதல். , இந்தச் சடங்கில் கலந்து க்ள்ள அழைப்பு என்றதுமே என்ன் இப்போது இந்தச் சடங்கு என்னும் கேள்வியும் எழுந்தது. என் மனைவியின்  தந்தையின் குடும்பவீட்டில் அவரது சகோதரிகளின் வாரிசுகள் வசிக்கிறார்கள். அது பற்றி யாரும் கருத்துக் கூறவுமில்லை, உரிமை கொண்டாடவும் இல்லை. ஆனால் என் மனைவியின் தாயார் அவரது கணவரின் இருக்கும் நிலபுலன்களை விற்கவோ பங்கு போடவோ கூடாதென்பதில் உறுதியாய் இருந்தார். அந்த இடத்தை அனுபவிக்கும் உரிமையில் அவர்கள் “ பானை என்று கூறும் வழிபாட்டுச் சடங்கு செய்வதாய் வேண்டிக் கொண்டிருந்தனர். அதற்கே என் மனைவி மற்றும் உடன் பிறப்புகளுக்கு அழைப்பு. முன்பொரு முறை இந்த மாதிரிஒரு சடங்கைக் கண்டதுண்டு. இதைப் பற்றி கூகிளில் தேடினேன் . எனக்கு எதிர்பார்த்த விஷயங்கள் கிடைக்கவில்லை. ஆகவே இது பற்றிய ஒரு பதிவினைப் பகிர்ந்து கொள்கிறேன்
 நாங்கள் ஒன்பது பேர் பத்தாம் தேதி காலை எர்ணாகுளம்  இண்டெர்சிடி எக்ஸ்ப்ரெசில் பயணம் செய்ய முன் பதிவு செய்யப் பட்டிருந்தது. சடங்கு நடை பெற இருந்த இடம் “ வெள்ளிநாழி “ எனப் பட்டது. அங்கு தங்கும் வசதிகள் குறைவு என்பதால் ஒத்தப் பாலத்தில் தங்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஒத்தப் பாலத்தில் நாங்கள் பயணித்த ரயில் நிற்காதாகையால் பாலக்காடு வரை சென்று அங்கிருந்து எங்களை அழைத்துச் செல்லவும் நாங்கள் எங்கும் போக்வரவும் 12 இருக்கை கொண்ட வான் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இத்தப் பாலத்தில் எங்களுக்கு தங்க “மஹாராஜாஸ் கொட்டாரம் எனப் பட்ட
ஹோட்டலில் அறைகள் முன் பதிவு செய்யப் பட்டிருந்தது. மதியம் மூன்றரை மணி அளவில் ஹோட்டல் அடைந்தோம். சற்று சிரமப் பரிகாரம் செய்து விட்டு என் மனைவியின் தாயாரின் குலக் கோவிலுக்குச் சென்றோம். எங்களுக்கு எப்பொழுதும் ஒரு ராசி. நாங்கள் பயணிக்கத் துவங்கும் போது மழை வரும் அதேபோல் நாங்கள் சென்றடைந்த இடத்திலும் மழை வரும். நாங்கள் இரு முறை சென்னை சென்றிருந்தபோதும் மழை பெய்து பதிவர்கள் என்னை சந்திப்பதற்கு இடையூறு விளைத்தது. இப்போதும் நாங்கள் பெங்களூரை விடவும் மழை தொடங்கிற்று. மாலை பரியாம்பத்தக் காவு எனப் படும் தேவி க்ஷேத்திரத்துக்குச் சென்றபோதும் மழை பெய்தது. இந்தமழை எங்கள் தொழுகை முடிந்து புறப்படும் நேரத்தில் அடித்துக் கொட்டி வெப்பத்தின் தாக்கத்தை வெகுவாகக் குறைத்தது. அன்றிரவு கொட்டாரத்துக்கு (மாளிகை.?) வந்து உணவுண்டு உறங்கினோம்.

கொட்டார முகப்பில்
கொட்டாரத்தின் முன்னால்
        .  
 . .     மீண்டும் வந்து தொடர்கிறேன் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.