புதன், 29 ஜூன், 2016

Small things make perfection but perfection is no small thing


          Small things make perfection but perfection is no small thing
         --------------------------------------------------------------------------
                           சின்னச் சின்ன  விஷயங்கள்.......!
                           -----------------------------------------------
இந்த ஆண்டு மே மாதம்  17-ம் தேதி என்னைக் காணச் சில பதிவுலக நண்பர்கள் வருவார்கள் என்று அந்த தேதிக்கு முந்தைய பதிவில் எழுதி இருந்தேன்  நான் எதிர் பார்த்தபடியே நண்பர்கள் வந்தனர் நான் எதிர்பார்த்தபடியே அவர்களை வரவேற்க  என் வீட்டு ஃபுட்பால் லில்லி மலர்ந்து நின்று வரவேற்றது. வந்தவர்களில் இருவர் பெண்கள் மூவர் ஆண்கள் யாரென்று நான் சொல்லப் போவதுஇல்லை. படிக்கும் போது சிலரால் யூகிக்க முடியலாம்
நான் சென்ற ஆண்டு பாலக் காட்டுக்குச் சென்றபோது என்னை நேர்காணல் செய்ய வேண்டும் அதற்கு பெங்களூர் வருவேன் என்று  நண்பர் கூறி இருந்தார்  அந்த நேர்காணலுக்காக அவர் தன் குழுவுடன் வந்திருந்தார்  ஆனால் நேர்காணல் என்பது இங்கு வேறு  கேள்விகள் கேட்கப் பதில் சொல்வது அல்ல இது.நான் என்ன சொல்ல வேண்டும் என்று இவர்களாகவே முன் கூட்டியே தீர்மானித்திருந்தார்கள்
அதுவும் வார்த்தை பிறழாமல் அவர்கள் சொல்லித்தந்ததையே கூற வேண்டுமாம்  அவர்கள் சொல்ல வேண்டுவதை உள்வாங்கி அதே அர்த்தத்தில் நான் சொல்ல விரும்பினாலும் அது சரிவராது என்றனர்.என் குணம் அதற்குச் சரியாக ஒத்துழைக்கவில்லைநான் சொல்வதைப் படமெடுத்துக் கொண்டிருந்தார்கள் பலமுறை. படமெடுக்கும்போது பேசியதையே மீண்டும் தனியே பேச வைத்துக் குரலைப் பதிவு செய்தார்கள் எனக்கென்னவோ இதெல்லாம் சற்று ஓவராகவே தெரிந்தது.  ஆனால் என் மனைவிக்கு அது தேவை என்றும் அந்த சின்னச் சின்ன  விஷயங்கள் என்ன மாற்றம் காட்டும் என்று புரிந்திருந்தது
 நான் என் இளவயதில் நாடகங்களை இயக்கி இருக்கிறேன் நடித்திருக்கிறேன் நடிகர்களுக்கு சில உரிமைகளைக் கொடுத்திருக்கிறேன் சொல்ல வந்தது சரியாகப் போய்ச் சேர்ந்தால் போதும் என்னும் எண்ணம் கொண்டவன்  ஆனால் இந்த அனுபவம் வேறு அதுதான் தலைப்பின் செய்தி அதில் நண்பர் குறியாகவே இருந்தார் 

இப்போது வாசகர்களின் திறன் காண ஒரு சோதனை  கீழே உள்ள படத்தில் என்ன எழுதி இருக்கிறது நான் எதிர்பார்த்ததைவிட சுலபமாகவே இருக்கிறது

 .   
,
   
                                                



                   
                    

ஞாயிறு, 26 ஜூன், 2016

நண்பர்கள் சங்கமம் ( ALUMNI MEET)


                                             நண்பர்கள் சங்கமம்
                                             -------------------------------
AAAA என்னும் Ats Ambernath Alumni Association  Bengaluru chapter –இலிருந்து ஒரு சொவனீர் வந்தது. 9”x11”x 240 பக்கங்கள் அதில் ஒரு காணொளி குறுந்தகடு நிகழ்ச்சிகளின் தொகுப்பு , இன்னொரு குறுந்தகடு  புகைபடங்கள் அடங்கியது அதைப் பார்த்ததும் இந்த ஆண்டு  ஃபெப்ருவரி மாதம் 27, மற்றும் 28-ம் தேதிகளில் நடந்த பழைய மாணவர் கூடல் நினைவுக்கு வந்தது இது குறித்து நான் ஏற்கனவேஒரு பதிவு எழுதி இருக்கிறேன் பார்க்க  பின் இது எதற்கு என்னும்  கேள்வி எழலாம் அதிகார பூர்வமாகச் சில தகவல்கள் கொடுக்கப் பட்டு இருப்பதைப் பகிர்ந்து கொள்கிறேன்  இதை  நம் வலைப் பதிவர் திரு விழாவுடன் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.  ஒப்பிடுவதற்கு பதில் இந்த ஆலும்னி அசோசியேஷன் நடத்திய  திருவிழாவின்  சில தகவல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்  இந்த மீட்டில் கலந்து கொண்டவர்களின் சராசரி வயது74. அனைவரும் வாழ்க்கையின் ஆரம்பகால பணியை இங்கேதான் கற்றுக் கொண்டார்கள் அங்கு சேரும்போது இவர்களின்  சராசரி வயது 18க்கும் கீழ்தான்  இன்று உலகின் பல பாகங்களிலும்   சிறப்பாக வாழ்க்கை நடத்துகிறார்கள்இவர்களின் இந்த நிலைக்குக் காரணம்  அம்பர்நாதில் எடுத்த பயிற்சிதான்  என்று நம்புகிறார்கள் அங்கு படித்த தெரிந்த தெரியாதபலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பாகக் கருதினர்

இந்த AAAAக்குஒரு மைய அமைப்பு இருக்கிறது பழைய மாணவர்களின்  கூடல் இந்தியாவின் பல பகுதிகளில் ஆண்டு தோறும் நடைபெறுகிறது ஆயுள் சந்தாவாக ரூ. 1000-. செலுத்த வேண்டும் ஆனால் அப்படி உறுப்பினர் ஆவது கட்டாயமில்லை. இதுவரை 214 நபர்கள் ஆயுள் உறுப்பினராக இணைந்திருக்கிறார்கள்

 மைய அமைப்பு வரவு செலவு கணக்குகளைக் காட்டி வங்கியில் கையிருப்பாக ரூ 52665-/ காட்டி இருக்கிறார்கள் மேலும் ரூ 225000-/ கார்பஸ் ஃபண்டாக வங்கியில் இருப்பதாகவும் காட்டி இருக்கிறார்கள்  பெங்களூருவில் நடந்த கூட்டத்துக்குமொத்தம் 322 பேர் வருகை தந்திருந்தனர்  இதில் அவரவர் துணையுடன்  வந்தவர்களும் அடக்கம் . இவர்களில் 184 பேர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டது
தனி நபர் பங்கேற்க ரூ 1500-/ வசூலிக்கப் பட்டது துணைவியாருடன் வந்தால் ரூ.2500 -/ வசூலிக்கப்பட்டது
27-ம் தேதி காலை 6.30 முதல் 7,30 வரை பிஸ்கட் டீயுடன்தொடங்கியது காலை 8.30 முதல் 9.30 வரை காலை உணவு இட்லி வடை உப்புமாசாம்பார் சட்னியுடன்  பைன் ஆப்பிள் கேசரிபாத், காஃபி அல்லது டீ.
 மதியம் ஒரு மணி முதல் இரண்டு வரை தவா சப்ஜி,கார்ன் மசாலா மலாய், தால் மகானி, வெஜிடபிள் பிரியானி, டொமாடோ கீரா ரைதா (பூண்டு வெங்காயம் தவிர்த்தது),பிசி பேளா பாத், சாதம்  .ரசம் , மாதுளையுடன் கூடிய தயிர் சாதம் தந்தூரி ரோடி, ரசமலாய் இத்தியாதி, மாலை நான்கு மணிக்கு பிஸ்கட்டுடன் டீ, இரவு உணவுக்கு பட்டர் சிக்கன், ஃபிஷ் ஃப்ரை, ஷஹி பன்னீர், மசாலா பிந்தி, , மட்டர் புலவ், மிக்ச்ட் தால், , தஹி பட்டா, தந்தூரி நான், புதினா கல்சா, ஜிலேபி, ஐஸ்க்ரீம்  இத்தியாதி. இவை எல்லாமே பஃப்ஃபே முறையில் வழங்கப்பட்டது  அடுத்த நாள் 28-ம் தேதியும் ஒரு சில மாற்றங்களுடன் உணவு வகைகள்

 சூவனீருக்காக நான் எழுதிக் கொடுத்திருந்த இரண்டு பதிவுகளும் ( ஆங்கிலத்தில்) வெளியாகி இருக்கிறது அதில் ஒன்று நான் தமிழில் எழுதி இருந்த “ செய்யாத குற்றம் “என்னும்  பதிவின் ஆங்கில மொழி பெயர்ப்பு (நன்றி திரு அப்பாதுரை ) இன்னொன்று The lingering memories அம்பர் நாத் நினைவலைகள் 

கூடலுக்கு வந்திருந்தவர்களின்  பெயர்கள் , முகவரி  தொலைபேசி எண்கள் இமெயில் முகவரி , இருப்பிடம் போன்ற அனைத்து தகவல்களும்சுமார் 22 பக்கங்களில் தொகுத்துக் கொடுத்திருக்கின்றனர்

சில நாட்களுக்கு முன் வலைப்பதிவர் மைய அமைப்பு பற்றி சில கருத்துக்களை எழுதி இருந்தேன் அது குறித்து மேலும் கருத்துகள் பகிரப் பட்டு வலைப் பதிவர் சங்கமத்தை நடத்தும் வழிமுறைகளை ஆராய முன்னோடிகள் முயற்சிக்கலாம் அந்தப் பதிவின் சுட்டி கீழே மைய அமைப்பு/ l அடுத்த வலைப் பதிவர் திருவிழாவுக்கு இப்பதிவு ஏதேனும் விதத்தில் உதவலாம் என்னும் நம்பிக்கை இருக்கிறது

                         பெங்களூரு சாப்டர் விழாக்குழு 
                     மாஜி எச் ஏ எல்  லிலிருந்து கலந்துகொண்டோர் 

                                   விழா சூவனீர்

 
விழாக் கணக்கு விபரம் 
                           
என் படைப்பு(செய்யாத குற்றம் ) ஆங்கில மொழி பெயர்ப்பு  by அப்பாதுரை
 
                                                                                   
என்படைப்பு நினைவிலாடும் சில நினைவுகள்


   செய்யாத குற்றம்  
   -------------------------------
தொலைகாட்சி   நிகழ்ச்சிகள்
நிறையவே   பார்த்து  விட்டு,
நித்திரை  செல்லப் போகுமுன்,
அன்றைய   நிகழ்வுகள் 
நினைவினில்  நிழலாடும்.

என்னென்னவோ   செய்ய  எண்ணியவை
செய்தே   முடிக்காமல்   மறக்கப்பட்டிருக்கும்.
மறந்தாலும்   பாதகமில்லை
முக்கியமானதாய்   இல்லாதவரை.

கண்ணயர  சில நேரம்   பிடிக்கும்
பின் கண்   மூடி உறங்கிவிட்டால்
கலர்கலராய்க்  கனவுகள், அலை அலையாய்
கதை போல  விரிந்து  பரவும்.

எழுத்தில்   கொண்டு வந்தால்
இனிதே   ரசிக்கலாம்,
இடுகையில்   பதிக்கலாம்
என்றெல்லாம்   கனவினூடே  
நினைவுகளும்   கூடவே   வரும்


விடியலில்   எழுந்து  இனிய   கனவுகளை
அசை   போட  முயன்றால், மசமசவெனத்
தெளிவின்றித்  தோன்றுவதை  எழுத்தில்
வடிக்க  வார்த்தைகளும்  வராது,
கற்பனையும்   கை  கொடுக்காது.
     
அதிகாலை   நடை பயிலுகையில்
எழுதுவதற்கு   விஷயங்கள்  யோசிக்க
நடையினூடே   வார்த்தைகளும்
அழகாக  வந்து   வீழும்.

சற்றே  மலர்ந்து  வீடு  வந்து,
பேனா   பிடித்தால்   என்னதான் 
எழுதுவது,  ஒன்றும்   தோன்றாது
நினைப்பது   ஏன்  மறக்க  வேண்டும்..?

பார்த்த   முகம்  பரிச்சயமானது , பேர்மட்டும்
வேண்டும்போது   நினைவுக்கு   வராது.
ஆடும்   சிறார்  கண்டு  மனம்  மகிழும்
கூடவே   ஓடியாட  உடல்   மறுக்கும்

.
எண்ணங்களில்   இளமை  என்றுமிருக்கும்
உடல் உபாதைகள்  முதுமையை  நினைவூட்டும்.
வேண்டியதை  விரும்பிச்  செய்ய  விழையும் மனமே,
உன்னால்  முடியாது  என்று  கூடவே   கூறும்

.
உலகோரே   உங்களிடம்   கேட்கிறேன்
வயோதிகம்   என்பது  செய்யாத   குற்றத்துக்கு
விதிக்கப்பட்ட   தண்டனையா..?
------------------------------------------------------------------

 பதிவின் ஆங்கில மொழியாக்கம்( திரு. அப்பாதுரை 
1)  IS OLD AGE A PUNISHMENT FOR A CRIME NOT COMMITTED
----------------------------------------------------------------------------------------------------

Eyes drift away from the tube   
as body retires to sleep;
the mind starts to ruminate
all day's events in keep

planned tasks are many; lay forgotten
incomplete, or left in abandon;
omission seems acceptable, if
the important ones are done

slumber isn't imminent; and when
eyes swoon down to sleep
colorful dreams parade in waves
like a story broad and deep.

dreams crafted in words
a thing of pleasant savor;
be posted in blogs - such
thoughts in dreams waver

attempts to translate dreams.
get foggy; lost in reformation
failed by elusive language
let down by own imagination


in early morning strolls - words
that tend to flow in a stream,
when armed with pen on return
why disappear as if in a dream?


faces remain familiar
but names tend to fade
mind desires to play with children
yet body has become a jade.

thoughts remain forever young
bodily discomforts, those bookmarks of age!
mind pursues what it desires; yet
alerts nothing can be done at this stage.

oh, dear world
to you this question is remitted
is dotage a fit retribution
for a crime never committed?


2) THOSE  LINGERING  MEMORIES ( G.M.Balasubramaniam)
----------------------------------------------------------
It was on 22nd  March 1957 that we fifty of us  , boarded the train from Bangalore  to go to Ambarnath.If my memory is right we reached Ambarnath late in the evening the next  day , and we were surprised to see some of the boys of ATS who were there to receive us. That was a pleasant surprise. Because some of us were expecting to be subjected to ragging…!On the other hand we were warmly received  to start our life in the hostel We were the first batch of trainees from HAL to be trained there.  I am at a loss for words to describe our life there for next  two years. I will just touch a few incidents.
 Almost all of us were south  Indians, The food served to us were chappathis and subjis. We were not used to it. We demanded to be served rice sambar rasam etc. They refused the same. .And like true gandhians we refused to partake the food. And any amount of cajoling went into our deaf ears. The boycott went on. Our  training manager from Bangalore came down . We were not in a position to listen. They gave an argument that their cook did not know to prepare sambar or rasam. Our boys gave a suggestion that they will teach the cook. .Finally our unity won  and we were promised south Indian food.
There were five  buildings to accommodate the trainees. Each building could accommodate 100 trainees, 50 on the ground floor and fifty on the first floor. There used to be anthakshari singing competitions against  each building. Oh … it was quite enjoyable
There was a Lahore shed which housed indoor game facilities. People with varied interests  made use of the facilities like gymnasium, badminton , table tennis etc..One night the whole Lahore shed  burnt down may be because  somebody threw a burning cigarette or something like that. .All the regular users were summoned by the warden and house master,Mr Patwardhan and Mr,Paradkar. No body could throw light on the accident. Later on a new facility was built.
And there were unforgettable practical and theory teachers. One Mr,  Thomas a theory teacher, used to refer his perod when he was in England, Our boys used to taunt him by often saying” When we were in Bangalore……”And therewas this practical teacher MrPendse if my memory is right, who used to “Call all” when someone made  mistakes like switching the machine on with one’s leg..There wasMr. Anbu who used to say , there was no language like English, where you can address a stranger with a “Hello.!”
I can never forget the first Holi we spent there. Very early in the morning many north Indian friends barged into our rooms and splashed colours.


We spent two years there,a place which was virtually a mini India. Oh those lingering  memories still haunt me.
                                                    -----------------------------------------

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      

வியாழன், 23 ஜூன், 2016

When opportunity knocks at the door, do not complain about the noise


 வாய்ப்பு கதவைத் தட்டும்போது  ஓசை பற்றிக் குறைபடாதே
----------------------------------------------------------------------------------------------
சில கருத்துக்களைச் சொல்ல முற்படும்போது என்னையே முன் நிறுத்திச் சொல்ல முயற்சிக்கிறேன் எந்த ஆசிரியரையும் பாடலையும்  சுட்டிக் காட்ட வேண்டிய அவசியம்  இல்லாமல் என் வாழ்க்கையே இருக்கிறது இது சிலருக்குச் சுய சரிதையாய்ப் படுகிறது என்னைத் தவிர்த்து சொல்ல வந்த விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டால் பதிவின் பலன் கிடைக்கும்

எனக்கு திருச்சியிலிருந்து மாற்றல் என்று ஆர்டர் வந்தது பள்ளி இறுதிப்படிப்பே முடித்திருந்த என்னை நிர்மாணப் பணிக்கு அனுப்பும் முகாந்திரமாக வந்த ஆர்டரைக் கண்டதும்  எனக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை தொழிற்சாலையில் தரம் மற்றும் உற்பத்திப்பிரிவில் பணி செய்து பழக்கப்பட்ட என்னை மாற்றுவது முதலில் ஏதோ பழிவாங்கும்  நடவடிக்கை என்றே எண்ண வைத்தது. என் மக்களின் படிப்பு என்னாகுமோ என்னும்  பயம் இருந்ததுஎந்த ஊருக்கு மாற்றல் என்றும்  இருக்கவில்லை.பேசாமல் நான் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஒரு பெட்டிக்கடைவைத்துப்பிழைக்கலாமா என்னும் தீவிர சிந்தனை எழுந்தது.  ஆனாலும்  சவால்களைக் கண்டு அஞ்சுபவன் அல்ல நான் ஆகவே எதையும் எதிர்கொள்வது என்று தீர்மானித்தேன் எந்த இடத்துக்கு மாற்றல் என்னும் விபரம் தெரியாத நிலையிலும் பிள்ளைகளின்  படிப்பை உத்தேசித்தும்  நான் மட்டும் பணியில் சேர்வது என்றும் பிள்ளைகளையும் மனைவியையும் சென்னையில் அம்மா தம்பிகளிடம் விட்டுப் போகலாம் என்றும் நினைத்தேன் ஆனால் என்ன ஒரு ஏமாற்றம் சென்னையில் ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு அம்மா தம்பிகளுடன்  என்மனைவி பிள்ளைகளையும்  குடி வைப்பது என்னும்  எண்ணத்துக்கு அம்மா ஒப்புக் கொள்ளவில்லை. அது சரிவராது என்றார்கள்  அப்பா இறந்து ஓரளவு நிர்க்கதியாய் இருந்த அம்மாவுக்கும் தம்பிகளுக்கும் என் உதவி தேவையாய் இருந்தது எனக்கு என்று ஒரு தேவை வரும்போது உதவ மனம் வரவில்லை. என் மனம் ஒடிந்து விட்டதுஎத்தனை அன்புடனும் ஈடுபாட்டுடனும்  அவர்களை நான் கவனித்துக் கொண்டிருந்தேன் என்பதை மறந்து விட்டார்கள் என் அன்புக்கும்  பரிவுக்கும்  சரியான அடிஅது  இருந்தாலும்  என்னால் என் மனைவி குழந்தைகளைத் தனியே சென்னையில் குடி வைத்தும் பார்த்துக் கொள்ள முடியும்  என்னும் வைராக்கியம் என்னுள் எழுந்தது நண்பன் சின்னிகிருஷ்ணா  கோடம்பாக்கத்தில்  ட்ரஸ்ட் புரத்தில் ஒரு வீடு பார்த்துக் கொடுத்தான் நுங்கம் பாக்கம் கிருஷ்ண ஸ்வாமி ஹையர் செகண்டரி பள்ளியில் மனோவை ஐந்தாவதிலும் பிரசாதை மூன்றாவதிலும் சேர்த்தோம் திருச்சியிலிருந்து ட்ரஸ்ட் புரம் வீட்டுக்கு வந்து கூட எங்களைப் பார்க்காத அம்மா மீது முதன் முதலாக எனக்கு மதிப்பு குறைந்தது சே என்றாகி விட்டது பள்ளியில் சேர்ந்த இரு மாதங்களுக்குள் எனக்கு  விஜயவாடாவுக்கு போஸ்டிங்  என்று தெரிய வந்தது
 விஜயவாடா அனல் மின் நிலையத்துக்கான  ஆரம்பப் பணிகளே துவக்க நிலையிலிருந்தது திரு கே பி. ராஜ்குமார் அங்கு டிஜிஎம் பொறுப்பேற்க இருந்தார்  அவர் என்னிடம் முதலில் விஜயவாடா சென்றுபள்ளிகளில் அங்கு வருவோரின் குழந்தைகளுக்கு  அட்மிஷனுக்கு  ஏற்பாடு செய்யும் படியும்  எனக்காக ஒரு வீடு பார்த்துக் கொள்ளூமாறும் சொல்லி அனுப்பினார்  அங்கு எனக்கு முன்னால் பணியில் இருந்து ஆரம்ப வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தவருக்கு என்னைப் பிடிக்கவில்லை. ஏன்  என்றால் நான் அவருக்கு மேலதிகாரியாகப் பொறுப்பு ஏற்க இருந்தேன் இருந்தாலும்  நாட்பட நாட்பட அவருக்கு என் மேல் மதிப்பும்  மரியாதையும்  வந்தது வித விதமான மனிதர்களையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்று நான் உணரத் துவங்கினேன்

விஜயவாடாவில் பென்ஸ் சர்க்கிள் அருகே எங்கள் அலுவலகம் இருந்தது எனக்கென்று அதன் அருகிலேயே வீடும் கிடைத்தது படமட்டா என்னும் இடத்தில் ஓரளவு பிரசித்தி பெற்ற பள்ளி  NSM PUBLIC SCHOOL. வரப்போகும் வேலையாட்களின் குழந்தைகளை அங்கு சேர்க்கும்  பணியாக நான் அந்தப் பள்ளியின் ப்ரின்சிபாலைக் கண்டேன்  அவருக்கு விஜயவாடா அனல் மின் நிலையம் பற்றிக் கூறி பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்க உதவுமாறு வேண்டிக்கொண்டேன் பள்ளியில் மாணவர்களைச் சேர்த்தால் நாங்கள் பள்ளிக்கு என்ன செய்வோம் என்று கேட்டார்நாங்கள் உற்பத்தி செய்யப்போகும் மின்சாரம்  அனைவருக்கும் உதவுமே என்றேன்  அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவரும் கூனூர் அந்தோணியார்  உயர் நிலைப் பள்ளியில் படித்தவர் என்றும்  எனக்கு மூன்றாண்டுகள்  ஜூனியர் என்றும் தெரிய வந்ததுபள்ளிக்கு ஒரு வகுப்புக்கான  மேசை நாற்காலிகளைத் தர முயற்சி செய்கிறேன் என்று  வாக்குக் கொடுத்தேன் எனக்கு எந்த அதிகாரம் இருந்தது என்றெல்லாம்  யோசிக்க வில்லை. வேலைக்கு வருவோர் நிம்மதியாகப் பணி புரிய அவர்களது  பிள்ளைகள் பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும் திரு ராஜ்குமார் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது ஆக பிள்ளைகளின் பள்ளி சேர்க்கை உறுதி ஆயிற்று. ஆனால் அங்கு  தமிழ் போதிக்கப் படவில்லை. என்  மக்கள் ஹிந்தி கற்றாக வேண்டும்
1976-ம் ஆண்டு விஜயவாடா சென்றேன்  அனல் மின் நிலைய நிர்மாணப் பணிகளுக்காக முதலில் காலம்கள் எனப்படும் ராட்சதத்  தூண்களை எழுப்ப வேண்டும் அடித்தளத் தூண்களை ஒன்றோடு ஒன்று  இணைக்கும் படி விதானம் கட்ட வேண்டும் . எனக்கோ இதெல்லாம் மிகவும் புதியது. ஒப்பந்ததாரர்களை நட்பாக்கிக் கொண்டு அவர்கள் மூலம் இவற்றின் நெளிவு சுளுவுகளைக் கற்றேன்  ஆனால் அந்த ஆண்டு வீசிய புயலில்  நிர்மாணித்திருந்த தூண்கள் எல்லாம் சரிந்து விட்டன. ஏறத்தாழ இரண்டு மூன்று மாதப் பணி வேஸ்டானது. மனம் ஒடியும் நேரமா அது/. மீண்டும் அதிக முயற்சியுடன் அந்த வேலைகள் முடிக்கப் பட்டன. அந்தப் புயலின்  போது எங்கள் வீட்டின் வெராந்தாவில் வைக்கப் பட்டிருந்த ஒரு நீள பென்ச் காற்றில் பறந்தது மாடியிலிருந்து கீழே விழுந்து கிடந்தது…!
அனல் மின் நிலையத்தில் இணைக்கப் பட வேண்டிய முக்கிய பார்ட்  பாய்லர் ட்ரம் எனப்படுவதாகும் சுமார் ஒன்றரை மீட்டர் விட்டத்தில் 100 மி மீ கனத்தில் 10 மீட்டர் நீளத்தில்  சுமார் 130 டன் எடையுள்ள பகுதியை பாய்லரின்  மேல் ஏற்றிப் பொறுத்த வேண்டும்  
இதை ஒரு தனி வாகனில் ஏற்றி அனுப்புவார்கள் ரயிலில் வந்த ட்ரம்மை அதற்காக நிறுவப்பட்ட ரயில் பாதையில் பணி நடக்கும்  சைட்டுக்குக் கொண்டு வர வேண்டும்  இதைக் கையாள் இரண்டு பெரிய க்ரேன்கள் தேவைப் படும்  அதை வாகனிலிருந்து இறக்கும் போது  க்ரேன் சரிந்து விட்டு மண்ணில் புதைந்தது  ட்ரம் அந்தரத்தில் எங்கும் எடுக்க முடியாமல் தொங்கிக் கொண்டிருந்தது  அந்த இக்கட்டான நிலையை நான் சமாளித்ததைச் சொன்னால் பதிவு மிக நீண்டுவிடும். ஆனால் ஒன்றை மட்டும் சொல்ல வேண்டும் ட்ரம்மை சரியான இடத்துக்குக் கொண்டுவர எங்களுக்கு இரண்டு பகல் களும் இரண்டு இரவுகளும் தேவைப்பட்டது  தொடர்ந்து வேலையில் இருக்கும் நாங்கள் எப்படி இதை சமாளிக்கப் போகிறோம் என்பதை வேடிக்கைப் பார்க்க ஒரு கும்பல் இருந்தது

இதல்லாமல் பாய்லரை இயக்க FANS  என்று கூறப்படும் காற்றூதிகள் முக்கியமானவை அவை போபாலிலிருந்து உதிரி பாகங்களாக வந்தன. அவற்றை ஒருங்கிணைப்பது மிகவும் கடினமான பணி ரோட்டார் மற்றும் ஸ்டேட்டாருக்கான இடைவெளி  இரண்டு மிமீ க்கும் குறைவே  இதைஒன்றுடன் ஒன்று மோதாமல் பொறுத்துவது பிரம்மப் பிரயத்தனம் வேடிக்கைப் பார்ப்பவர்களைத் தவிர்க்க ஒரு ஞாயிற்றுக் கிழமையில் வெற்றிகரமாகப் பொறுத்தினோம் 
இதை எல்லாம் நான் கூறக் காரணமே பதிவின் தலைப்பைப் பார்த்தால் தெரியும் உற்பத்தி மற்றும் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவில்  தொழிற்சாலையில் மட்டுமே பணி புரிந்த நான் புதிய உத்திகளைக் கையாண்டு கிடைத்த வாய்ப்பைப் பயன் படுத்திக் கொண்டேன்
 நிர்மாணப் பணிகள் எல்லாம் முடிந்து நான் மீண்டும் திருச்சிக்கு மாற்றல் ஆகிப் போகும்  போது VTPS –ன் SUPERINTENDING  ENGINEER  சொன்ன வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் ரீங்கரிக்கிறது. அவர் சொன்னார்,BALU WHENEVER I COME NEAR THESE MACHINES  I WILL HEAR THEM CALL –BALU, -BALU” இருபது வருடங்களுக்குப் பிறகு 2001-ல்
நான் அந்த அனல் மின் நிலையம் சென்று என்னால் கட்டி முடிக்கப் பட்ட மெஷின்களின் அருகே நின்று புகைப் படம் எடுத்துக் கொண்டபோது எனக்கு அவை என்னை “ பாலு .பாலு “ என்று கூப்பிடுவதுபோல் இருந்தது.
நான் கடைசியாக விஜயவாடா சென்று ஆயிற்று 15 வருடங்கள் அந்த அனுபவங்கள் கற்றுக் கொடுத்த பாடங்கள் ஏராளம்  அவற்றில் மிக முக்கியமானது  வாய்ப்புகள் வந்து கதவைத் தட்டும் போது அதன் ஓசையைக்கேட்டு குறை பட்டுக் கொள்ளாதே  என்பதாகும்
விஜயவாடாவில் பணி புரியும் போது புகைப்படங்கள் ஏதும்  எடுத்துக் கொள்ள வில்லை.நான் 2001-ல் சென்றபோது  புகைப்படம் எடுப்பது தடுக்கப் பட்டிருந்தாலும்  எனக்காக விசேஷ சலுகையில்  சில படங்கள் எடுத்துக் கொண்டேன்  அவற்றில் சில  கீழே 
விஜயவாடா அனல் மின் நிலையம்  ஒரு தோற்றம் 
மின் நிலையத்துக்குத் தேவையான  கரியைத் தூள் செய்யும் பௌல் மில் 


எஃப் டி  ஃபேன் எனப்படும் காற்றாலை( forced draught  fan )


ஐடி ஃபேன் எனப்படும் காற்றாலை(  Induced draught  fan )






திங்கள், 20 ஜூன், 2016

தொடரும் எட்டெட்டு.....


                     வாழ்க்கை எட்டெட்டாக தொடர்கிறது
                       --------------------------------------------------------

மூன்றாவது எட்டு(1954-1962)
 நான் என் தந்தையை இழந்தகாலம் எனக்கு பயிற்சியுடன் கூடிய ஒரு உத்தியோகம் கிடைத்ததும் என்னால் வாழ்க்கையை எதிர் நோக்க  முடியும் என்னும் தன்னம்பிக்கையை நான் வளர்த்துக் கொண்ட  காலம் என் பொறுப்புகளை நான் நிறைவேற்றத் துவங்கி இருந்த காலம் வாழ்க்கையை நிர்ணயிக்கும் மணவினைக்கு வித்தாக காதல் அரும்பிய காலம்
வாழ்க்கையில் மேடு பள்ளங்களை நான் எதிர் கொண்ட காலம்  எதையும் செய்ய முடியும்  என்னும் திண்ணமும்  நம்பிக்கையும் வளர்த்துக் கொண்ட காலம்சில பல நிகழ்வுகளை நான் பதிவாக்கி இருக்கிறேன்

நான்காவது எட்டு( 1962—1970)
-பல சவால்களை சந்திக்க நேர்ந்த காலம்நிறைய படிப்பினைகளையும்  கற்றுக் கொண்ட காலம்  ஏமாற்றங்களின் வலி உணர்ந்த காலம் பணியில் என்னை நான் செலுத்தி அதன் மூலம் என்னைச் செதுக்கிக் கொண்ட காலம்  நான் என்  ஏமாற்றங்களை அதிகம் பகிர்ந்து கொண்டதில்லை.  மகிழ்ச்சிகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்ட  அளவு  ஏமாற்றங்களைப் பகிராத காலம்
ஐந்தாவது எட்டு
 1970 முதல் 1978 வரையிலான சமயம் முற்றிலும் எதிர்பார்க்காமல் என்னை பவர் ஸ்டேஷன் நிர்மாண வேலைக்கு அனுப்பப்பட்ட காலம் ஒரு சமயம் என் பிள்ளைகளின் படிப்பும் எதிர்காலமும்  கருதி வேலையைக் கடாசிவிட்டு  ஒரு பெட்டிக்கடை வைத்துப்  பிழைக்கலாம் என்று தீவிரமாக நினைத்த காலம் பதவியில் மேம்பாட்டை எதிர் நோக்கி  அது வெகு தாமதமாக வந்தநேரம்விஜயவாடா அனல் மின் நிலையம் நிர்மாணப் பணியில்  எனக்காக ஒரு  இடத்தை தக்க வைத்துக் கொண்ட காலம்வாழ்க்கையில் எந்த சவாலையும் சமாளிக்கும் திறமையையும்  தைரியத்தையும் வளர்த்துக் கொண்ட காலம்  என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்த காலம்  என் அனுபவங்கள் சிலவற்றைப் பதிவுகளாக்கிக் இருக்கிறேன்
ஆறாவது எட்டு (1978—1986)
 உடல் உபாதை காரணமாக 1980ல் மீண்டு திருச்சி கனமின் கொதிகலத் தொழிற்சாலைக்கு வந்தகாலம்  தொழிற்சாலையில் எனக்கென்று ஒரு இடமும் பேரும் இருந்ததுஎன்னதான் அழுத்தி வைத்தாலும் மேல் நோக்கி வரும் சக்தியை உணர்ந்தேன் நான் எனக்குச் சொந்தமாக பெங்களூரில்  ஒரு வீடு கட்டிக் கொண்டேன் கார் ஒன்று வாங்கினேன்  தொழிற்சாலை  வாயிலாக ஜப்பானுக்கு அனுப்பப்பட்டேன் பதவி உயர்வும் கிடைத்தது பதவி காலத்தின் ஆரம்பகால இழப்புகள் என்னுள் பாதிப்பை ஏற்படுத்தத் துவங்கியது நான் எங்கோ இருந்திருக்க வேண்டியவன் அது பற்றி ஏதும் வேண்டாமே

ஏழாவது எட்டு (1986-1994)
என் மகன்கள் படிப்பை முடித்து பணியில் அமரத் துவங்கி இருந்த காலம் என் மூத்தமகனின் திருமணமும் நடந்தது அவனுக்கு பெங்களூரில் வேலை என்றானதும் என் மனதில் வேறு சிந்தனைகள் உருவாயிற்று  இத்தனை காலமும் என்னைப் பெற்றவருக்காகவும் நான் பெற்றதுகளுக்காகவும் உழைத்தாயிற்று  நான் எனக்காக வாழ்வதுதான் எப்போது என்னும் சிந்தனை அதிகரிக்க என் வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றேன் 53 வயதுக்குள் ஓய்வா என்று எல்லோரும் கேட்டார்கள் பைத்தியக் காரன் என்றார்கள் நான் என்றைக்குமே பணத்தின்  பின் சென்றது கிடையாது உயிர் வாழத் தேவையான பணம் போதும் என்றே நினைத்தேன் . என் முடிவில் என் மனைவிக்கு அவ்வளவு விருப்பம் இல்லையென்றாலும்  என் முடிவுக்கு ஒத்துழைத்தாள் நான் என் மகனுடன் பெங்களூருக்கே வேலையை விட்டு விட்டு வந்து விட்டேன் சுத்தியல் பிடித்தவன் கை சும்மா இருக்குமாஇரு வருடங்கள்   ஒரு சில கம்பனிகளுக்கு  தர ஆலோசகனாக இருந்தேன் 
எட்டாம் எட்டு (1994-2002)
 நான் எடுத்த முடிவு தவறல்ல என்று என்னை நினைக்க வைத்த வருடங்கள் என் இரண்டாம் மகனின் திடுமணமும் நிகழ்ந்தது என்னுடைய சஷ்டியப்த பூர்த்தி விழா திருக்கடையூரில் என் மகன்களாலும் என் சின்ன மச்சினனாலும் எளிதாக மிகக் குறைவான பேருக்கே தெரியப்படுத்தி  நடந்தது தாத்தா பாட்டிக்குக் கல்யாணம் என்று என் பேரக் குழந்தைகள் மகிழ்ந்தது கண்டு மனம் நிறைவடைந்தது. உடல் நலமும் நன்றாய் இருந்தது பேரன் பேத்தியுடன் எந்தக் கவலையும் இல்லாமல் செலவழித்த காலம் சுருங்கச் சொன்னால் என் வாழ்நாளில் நான் மிக்க மகிழ்வுடன் இருந்த பீரியட் எனக்குப் பிடித்த சில பயணங்களையும் மேற்கொண்டேன்

ஒன்பதாம் எட்டு(2002-2010)
-------------------------------------------
என் மக்கள் அவரவர் பணி நிமித்தம்  தனியே வெளியூர்ப் போக நேர்ந்து நானும் என் மனைவியும் தனித்து இருக்க வேண்டிய சூழ்நிலை என் சுபாவத்துக்கு நான் தனியே இருப்பதே நல்லது என்று தெரிந்ததுஅவ்வப்போது மகன்களிடம் போய் இருந்து வருவோம் 2010 ஆண்டு முடிவில் எனக்கு ஒரு மைல்ட் இருதய அட்டாக்  வந்தது. மருத்துவமனையில் ஸ்டெண்ட் பொறுத்தப் பட்டது  என் தனிமையைத் தவிர்க்க ஒரு வலைப் பூவைத் தொடங்கிக் கொடுத்தான் என் பேரன்  என்னுடைய இன்னொரு பரிமாணமாகிய எழுத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன் என் உடல் என் கட்டுக்குள் இருப்பதற்குப் பதில் அதன் கட்டுக்குள் இருக்க வலியுறுத்தப்பட்டேன்
 
பத்தாவது எட்டு ( 2010—இன்றுவரை )
----------------------------------------------------------------
இப்போது என் பத்தாவது எட்டில் நான்காண்டுகள் ஆகிவிட்டன. காலனைக் காலால் ஒரு முறை எட்டி உதைத்ததும் இந்தக் காலத்தில்தான். பிள்ளைகள் அவரவர் பணி நிமித்தமும் அவரவர் கடமை நிமித்தமும் ஓடிக் கொண்டிருக்க தனிமையை உணரத் துவங்கிய காலம். நினைவுகளே துணையாய் நடந்தவற்றை எடைபோட்டு நாளும் INTROSPECTION –ல் பொழுதைக் கழிக்கும் காலம். உலகின் பல மூலைகளில் இருப்பவர் அறிய என்னையும் என் எண்ணங்களையும் யாரும் கேட்காமலேயே, வேண்டாமையிலேயே அள்ளி அள்ளித் தருகிறேன் இணையத்தில் இணைந்து என் வலைத் தளம் மூலம்

 உடல் என்  கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்று தெரிய ஆரம்பித்தது அப்போது சில எழுத்துகள் நான் எழுதியது எனக்கே பலமும் பெருமை தருவது மாக இருந்தது கண்கள் இரண்டிலும்  அறுவை சிகிச்சை செய்யப்பட்டது காது கேளாமை அதிகரித்து நான் கூட்டுக்குள் முடங்கி விடுவேனோ என்னும் அச்சமும் எழுந்தது எத்தனையோ மேடு பள்ளங்களைக் கண்ட நான் மனம் தளராமல் ஹியரிங் எய்ட் வாங்கிப் பொருத்திக் கொண்டேன் வயதாவது செய்யாத குற்றத்துக்குத் தண்டனையா என்னும் கேள்வி எழ  அது தவறு என்று நினைத்து முதுமையின் வரம் என்றும் எழுதினேன் இப்போது நானும் என் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக  எங்கள் நாட்களைத் தள்ளிக் கொண்டு இருக்கிறோம் நான் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பைப் புத்தக வடிவில் கொண்டு வந்தேன் கூட்டுக் குடும்பம் என்பது தற்கால நிலைக்குச் சரிப்பட்டு வராது என் மக்களுக்கும் அவரவர் வாழ்வில் முன்னேறவும் அவரவர் குடும்பத்தைப் போஷிக்கவும் வேண்டிய கடமை இருக்கிறதே மனதில் தோன்றுவதை எழுத்தில் வடித்து வடிகாலாக்கிக் கொள்கிறேன்

இப்போது இப்பதிவின் முக்கிய நோக்கம் பற்றிக் கூறுகிறேன் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை எட்டெட்டாகப் பிரித்து எழுதி இருக்கிறேன் என் வாழ்க்கையை நான் மீண்டும் வாழ விரும்பி ஏதாவது ஒரு எட்டைத் தேர்ந்தெடுக்கலாம் என்றால் நான் எனது எட்டாவது எட்டையே தேர்ந்தெடுப்பேன்   ( முற்றும் ) 

வெள்ளி, 17 ஜூன், 2016

வாழ்க்கை எட்டெட்டாக.......


                       வாழ்க்கை எட்டெட்டாக
                       ---------------------------------------

எட்டெட்டாக வாழ்க்கை
முதல் எட்டு (1938—1946)
------------------------

 ஒரு பதிவு எழுதி இருந்தேன்  அதை என்னதான் தேடியும் எடுக்க முடியவில்லை. இருந்தால்தான் என்ன. நினைவிலிருந்து மீண்டும் எழுத முடிகிறதா பார்ப்போம் முதல் எட்டு பற்றி அதிகம் பதிவில் எழுத வில்லையாததால் இப்போது சற்றே விரிவாக.  
வாழ்க்கையை எட்டு எட்டாகப் பிரித்துப் பாடும் ஒரு பாடல் திரைப் படம் ஒன்றில் வரும்  அதுவே என் பதிவுக்கு வித்து.  எனக்கு இப்போது 78 வயதாகிறது  எட்டு எட்டாகப் பிரித்தால் என் பத்தாவது எட்டில் இருக்கிறேன்எந்த எட்டை நான் மீண்டும் வாழ விரும்புவேன் என்பதைத் தீர்மானிக்க  
  ஒவ்வொரு எட்டு வயதையும் திரும்பிப் பார்க்கும் போதுமனதில் ஓடும் எண்ணங்களே இப்பதிவு முதல் எட்டில் ஏதும் சரியாக நினைவில்லை அதிலும் முதல் ஐந்து வயதின் நிகழ்வுகள் ஏதோ  மசமசவென்றே வருகிறது என் மூன்றாவது வயதில் என் அன்னையை இழந்தேன்  இப்போது அவர்களின் உருவம் சுத்தமாக நினைவில் இல்லை.
 என் அம்மா
 புகைப்படத்தில் பார்த்து இப்படி இருந்திருப்பார்கள் என்பதே கணிப்பு  அவருக்கு என் மேல் அலாதிப் பிரியம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்  அவர் சாகும் தருவாயில்  பெற்ற பிள்ளைகள் அனைவரையும்  அருகே வரவைத்துக் காட்டினார்களாம்  என்னைக் கண்டதும் “ பாலாவா” என்று கேட்டு ஆரத் தழுவினார்களாம் என் அம்மா இறந்த ஆறே மாதத்தில் என் அப்பா மறு மணம் செய்து கொண்டாராம்
 நானும் என் சின்ன அண்ணாவும் எங்கள் மாற்றாந்தாயிடம்தான் வளர்ந்தோம்அப்பாவுக்கு அப்போது திருச்சியில் வேலை  நாங்கள் மன்னார் புரத்தில் இருந்தோம்வீட்டின் அருகே ஒரு குளம் இருந்த நினைவு அப்போதெல்லாம் ஓட்டைக் காலணாக்கள் புழக்கத்தில் இருந்தன அவற்றை மாலையாக்கி  விளையாடுவோம்  என் அண்ணா என்னை விட நாலரை வயது மூத்தவன் என்னிடம் இருந்த காசைப் பிடுங்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்தில் போடுவதாகப் பாவனை செய்வான் பிறகு குட்டிச்சாத்தானிடம் சொல்லி அதை வரவழைப்பது போல் காட்டுவான்  எல்லாவற்றையும்  நம்பும்  பிறவி நான் ஒரு வெண்கல யானையும் என் விளையாட்டுப் பொருள் . ஐந்து வயது வரை பள்ளிக்கூடம்  போன நினைவில்லைஆனால் எங்கள் பெற்றோருடன் திருச்சியில் தங்க வரும் முன் பெங்களூரில் அலசூரில் என் பாட்டி வீட்டில் இருந்து என்னை பள்ளிக்கு  அனுப்பியதும்  ஒரு தலைப் பாகை அணிந்த ஆசிரியர் என்னை பிரம்பால் விளாசியதும் லேசாக நினைவில் வருகிறதுஒரு முறை என் மாமாவுடன்  காரில் பயணிக்கும் போது நான் என்  தாத்தாவின்  மடியில் அமர்ந்து கார் கதவை நோண்டியபடி இருந்தேன்  ஒரு வளைவில் கார் கதவு திறந்து வெளியே விழுந்து விட்டேன்  என் தாத்தாவும் கூடவே விழுந்து இருவருக்கும் நல்ல காயம்  வீடு வந்து சேர்ந்தபோது பாட்டி முதல் எல்லோரும் அழுததைப் பார்த்த நினைவும் நிழலாடுகிறது  அப்போதெல்லாம் இரவில் சில நாட்களில் எங்கள் வீட்டில் பஜனை நடக்கும் நடனமாடியபடி சுற்றி சுற்றி  வருவார்கள் அதுதான் அகண்ட தார பஜனை  என்றுபின்னர் அறிந்து கொண்டேன் அப்போது இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது.  திடீரென்று சைரென் சப்தம் கேட்கும் விளக்கெல்லாம் அணைக்கப் பட்டு விடும்   சாலையில் இருந்தால் குண்டடியிலிருந்து தப்பிக்க ஆங்காங்கே ஓடிப் பதுங்குவார்கள்  சிறிது நேரத்தில் இன்னொரு சைரென் ஊத எல்லாம் சரியாகி விடும்  இதெல்லாமே வெகு லேசாகவே நினைவில் இருக்கிறது

அப்பா திருச்சியில் இருந்த போது மலைக் கோட்டைக்கு வந்து யானைமேல் ஏறியதும் ஒரு ட்ரங்க்பெட்டி வாங்க பெரிய கடை வீதிக்குப் போனதும் மசமசஎன்று நினைவில் அவருக்கு மதராசுக்கு மாற்றல் ஆகியதுஎங்கள் வீடு பைக்ராஃப்ட் சாலையில் என்  சித்தப்பாவின் வீட்டருகே இருந்தது தெரு முனையில் ஒரு சேரி மாதிரி ஏதோ இருந்த நினைவு.  வீட்டின் முன் பசுமாட்டைக்கட்டி பால் கறந்து தருவார்கள்  காலையில் தயிர் விற்பவர்கள் ”கூ” என்று ஒருவித ஓசை எழுப்பிக் கூவி விற்பார்கள் என் சித்தப்பாவீட்டில் இரு சகோதரிகளும்  ஒரு சகோதரனும் ஏறத்தாழ ஒத்த வயதுடையவர்கள் என் சின்ன அண்ணா சித்தப்பா பெண்களின் பின்னால் இருந்து அவர்கள் காலை வாரிவிடுவான் சித்தப்பா பெண் ஒருத்தி எங்கள் வீட்டுக்கு வந்து ”இன்னிக்கி பூரியா சித்தம்மே” என்று கேட்பது நன்கு நினைவில் இருக்கிறது  பெங்களூரில் என் தாத்தா பாட்டி வீட்டிலிருந்து என் தம்பி எங்களுடன் மதராசில் இருக்க வந்தான்  செக்கச் செவேலென்று ஒரு சிறுவனைப் பார்த்ததுதான் நினைவில்
 வருகிறது சில நாட்களுக்குப் பின் அப்பாவுக்கு அரக்கோணத்துக்கு மாற்றல் ஆகியது அந்த நாட்களின் நினைவுகளை நான்  என் அரக்கோணம் நாட்கள் என்னும் பதிவில் பகிர்ந்திருக்கிறேன்
 வாழ்க்கையின் முதல் எட்டு வருடங்களில்  நினைவில் ஓடியதைப் பகிர்ந்திருக்கிறேன் ( அரக்கோண நாட்கள்) அரக்கோணத்தில்தான் நான்  டௌன் ஹால் பள்ளிக்குச் சென்றது நினைவுக்கு வருகிறது ஆறாம் வகுப்பு படிக்கும் போது  டைஃபாய்ட் ஜுரம் வந்து மருத்துவமனையில் அட்மிட் ஆகவும் அப்போது என் அப்பாவுக்கு பூனாவுக்கு மாற்றல் ஆகவும்  போன்ற விஷயங்கள் எல்லாம் என் பதிவுகளில் இருக்கிறது
 இரண்டாம் எட்டு(1946—1954)
 -------------------------------
இரண்டாவது எட்டு என்றால்  என் பதினாறு வயது வரை. என்  அப்பாவுக்கு பூனாவுக்கு மாற்றல் ஆனபோது எங்களை( என்னையும்  என் தம்பியையும்  பாலக் காட்டில் என் அப்பாவழிப்பாட்டி வீட்டில் விட்டார்கள்  என் சின்ன அண்ணா பெங்களூர் சென்றான் ஏறத்தாழ ஒரு வருடம் பாட்டி வீட்டில் கிராமத்தில் இருந்தோம் அந்த நாட்கள் குறித்தும் பதிவிட்டிருக்கிறேன் பார்க்க………. அதன் பின் அப்பாவுக்கு கோயமுத்தூருக்கு மாற்றல் ஆக நாங்கள் எல்லோரும் கோவைக்குக் குடி பெயர்ந்தோம்  கோவையில் ராமநாதபுரம் முனிசிபல் உயர் நிலைப் பள்ளியில்  தேர்ட்  ஃபார்மில் சேர்ந்ேன் மூன்றுவருடங்களே பள்ளியில் படித்திருந்த நான் எப்படி எட்டாம் வகுப்பில் சேர்ந்தேன் என்பது குறித்தும் எழுதி இருக்கிறேன் ( இது லஞ்சமா)  ஃபோர்த் ஃபார்ம் முடிந்ததும் அப்பாவுக்கு  வெல்லிங்டனுக்கு மாற்றல் ஆயிற்று  புனித அந்தோணியார் உயர் நிலைப் பள்ளியில்  சேர்ந்து பள்ளி இறுதி படிப்பை முடித்தேன்  அப்போது என்  பதினாறாம் வயதுநடந்து கொண்டிருந்ததுபள்ளியிறுதிப் படிப்பு முடிந்ததும்  நான் என் மாமா வீட்டுக்கு வந்தேன்  அங்கே நான் முதன் முதலில்  வேலைக்குச் சேர்ந்த அனுபவத்தை “ பூர்வ ஜன்மகடன் “ என்னும்  பதிவில் எழுதி இருக்கிறேன் அந்த அனுபவத்துக்குப் பின் நான் மீண்டும் வெல்லிங்டன் வந்ததும்  நான் வேலை தேடி அலைந்த அனுபவங்களையும் :” வேலை தேடு படலம் என்னும் பதிவில் எழுதி இருக்கிறேன் ( சுட்டியில் இருக்கும் பதிவுகள் ஒரு நல்ல இன்சைட் தரலாம்  ( தொடரும் )


திங்கள், 13 ஜூன், 2016

NOTHING IS OPENED MORE OFTEN BY MISTAKE THAN THE MOUTH


                              வார்த்தைகள் விளையாட்டல்ல ..........
                                                  ---------------------
 NOTHING IS OPENED MORE OFTEN BY MISTAKE THAN THE MOUTH
ஆங்கிலத்தில் என்னைக் கவர்ந்த  சொல்லாடல்களில் இதுவும் ஒன்று

          வெறும் வார்த்தை என்று நாம் எண்ணுபவை சில ,உள வெளிப்
பாடுகள் ஆகும்  அவை , எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பது பற்றிய .
சிந்தனைகள் நூற்றாண்டுகளுக்கு முன்பே
இருந்திருக்க வேண்டும். “ தீயினால் சுட்ட புண் உள்ளாறும்,
ஆறாதே நாவினால் சுட்ட வடு.” “ இனிய உளவாக இன்னாத
கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.” என்பன போன்றும்,
உதிர்க்கப்பட்ட வார்த்தைகளை அள்ள முடியாது என்பன
போன்றும், சொல்லப்படாத வார்த்தைகளுக்கு நாமே எஜமானர்
என்பன போன்றும் பல எண்ணங்கள் மனசில் வந்து மோதுகிறது.


       சில நேரங்களில் உணர்ச்சிப் பெருக்கால் உமிழப்படும்
வார்த்தைகள் எவ்வளவு தீவிரமாகக் காயப்படுத்துகிறது
என்பதையும் சிந்திக்க வைக்கிறது

         நான் என் மகனிடம் சின்ன வயதில் நடந்ததில் அவன்
நினைவுக்கு திடீரென்று வருவது என்ன என்று கேட்டபோது.
அவன் சொன்ன பதில் என்னை ஆட வைத்து விட்டது. எனக்கு
நன்கு படிக்கும் பிள்ளைகள் கணிதத்தில் ஈடுபாடு கொண்டவர்
களாக இருப்பார்கள் என்றும் கணிதத்தில் ஈடுபாடு உள்ளவர்
புத்திசாலிகள் என்றும் எண்ணம் இருந்திருக்கிறது. அதை நான்
நியாயப் படுத்த வில்லை. அவன் கணிதத்தில் குறைவான
மதிப்பெண்கள் எடுக்கும்போது நான் அவனைக் கடிந்து கொண்டு
வாழ்வில் அவன் உருப்படுவது கஷ்டம் என்ற முறையில்
கூறியிருக்கிறேன் சாதாரணமாகப் பெற்றோர்களின் நிலையில்
இருந்து நான் அவனைக் கடிந்து கொண்டது அவனுக்கு மனசில்
ஆழமாக வலி ஏற்படுத்தி இருக்கிறது. என் எண்ணம் தவறு
என்று எனக்குணர்த்த அவன் பின் ரசாயனப் பிரிவில் பட்டப்
படிப்பு முடித்து பிறகு எம். பி. தேறி இன்று ஒரு உன்னத
நிலையில் இருக்கிறான். அவனை அந்தக் காலத்தில் கடிந்து
கொண்டதால் தான் ஒரு வெறியுடன் முன்னுக்கு வந்ததாய்
என்னை சமாதானப் படுத்துகிறான். இதுவே நேர் மாறான
விளைவுகளை ஏற்படுத்தி இருந்தால் என் ஆயுசுக்கும் நான்
வருத்தப்பட்டுக் கொண்டுதான் இருந்திருப்பேன். என் நண்பன்
ஒருவன் அவனது மகனைக் கணினி கற்றுக்கொள்ள கம்ப்யூட்டர்
பாயிண்ட் என்ற நிறுவனத்தில் விசாரித்திருக்கிறான். அங்கு என்
மகன் பணியாற்றிக் கொண்டிருந்தது தெரியாத அவன் என்னிடம்
அதன் மார்க்கெடிங் அதிகாரி எஸ்கிமோக்களிடமே
ரெஃப்ரிஜிரேட்டர் விற்றுவிடும் திறமை படைத்தவராக
இருக்கிறார் என்று கூறிய போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு
ஈடே இருக்கவில்லை.


         எனக்குத் தெரிந்த ஒருவர் கடற்படையில் பயிற்சியில்
சேர்ந்திருந்த காலம். விடுமுறை முடிந்து பயிற்சிக்குத்
திரும்பியவர், வீட்டு நினைவில் சற்றே கவனக் குறைவாக
இருந்திருக்கிறார். பயிற்சி அளிப்பவர் இந்தியில் அவரை அம்மா
பெயருக்குக் களங்கம் விளைக்கும் ஏதோ ஒரு வார்த்தையை
உபயோகித்திருக்கிறார். ஆத்திரமடைந்த என் நண்பர், கையில்
இருந்த ரைஃபிளால் பயிற்சியாளரை ஓங்கி அடித்திருக்கிறார்.
பிறகு அதன் பலனாக தண்டனையாக மருத்துவமனையில் மன
நோயாளிகள் பிரிவில் சில நாட்கள் காலங் கழிக்க வேண்டி
இருந்தது.

         
சில வருடங்களுக்கு முன்னால் இந்திய கிரிக்கட் அணி
ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது நமது ஆட்டக்காரர் ஹர்பஜன்
சிங் இந்தியில்மாகிஎன்று ஏதோ சொல்லப்போக அது ஆண்ட்ரூ
சைமண்ட்ஸ் காதில்மங்கிஎன்று கேட்கப்போக அது ஒரு பெரிய
இனப் பிரச்சனையை இரு அணிகளுக்கும் இடையில் தோற்று
வித்ததை யாரும் மறந்திருக்க முடியாது.


          சில வார்த்தைகள் உச்சரிக்கப்படும் விதத்திலும்
தொனியிலும் மாத்திரையிலும் வேறு வேறு பொருள் கொடுக்கும் உதாரணத்துக்கு இந்த ஓரெழுத்து வார்த்தை
என்னவெல்லாம் பொருள் கொடுக்க முடியும் என்று முயற்சித்துப்
பார்த்தால் தெரியும்.

       
ஒரு வார்த்தை ஒரு லட்சம் என்னும் நிகழ்ச்சியில் கொடுக்கப்
படும்க்ளூக்கள்உதவி கொண்டு வார்த்தை கண்டு பிடிக்கப்பட
வேண்டும். சுவாரசியமான விளையாட்டு. விஜய் தொலைக்
காட்சியில் காணலாம்.

       
என்னைப் பொறுத்தவரை இரண்டு வார்த்தைகள் என்
வாழ்க்கையின் பெரும்பகுதியை ஆக்ரமித்திருக்கின்றன. ஒன்று
அன்பு, மற்றது ஏமாற்றம். நான் யார் யாரிடம் அன்பு செலுத்தி
மகிழ்ந்தேனோ அவர்களில் பலரும் ,அதில் ஒரு பங்காவது
திருப்பிச் செலுத்தாதது என்னை மிகவும் ஏமாற்றத்துக்கு
உள்ளாக்கியிருக்கிறது.
வார்த்தைகளின் பிரயோகம் எங்ஙனம் தவற்றில் கொண்டு விடுகிறது என்பதற்கு சிலப் பதிகாரத்தில்  பாண்டிய மன்னனின்  கூற்றே ஒரு சான்று
தாழ்பூங் கோதை தன்கால் சிலம்பு
கன்றிய கள்வன் கைய தாகில்
கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கென
காவலன் ஏவ……………. ....'
அரச மாதேவியின் கால் சிலம்பு இந்த பொற்கொல்லன் கூறிய கள்வன் கையில் இருக்குமானால் (அவனைக் கொல்வதற்கு அச்சிலம்புடன் இங்கு கொண்டு வருக என்று சொல்ல நினைத்தவன் அவ்வாறு கூறாமல்)
அவனைக் கொன்று இச்சிலம்பை இங்கு கொண்டு வருக!' என்று மன்னன் காவலர்க்குக் கட்டளையிடு கிறான். இது திரு ஜீவி அவர்களின் நினைவில் அடிக்கடி வரும்  சிலப்பதிகாரப் பாடல் என்று அறிகிறேன்   
ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும்   வார்த்தைகளைக் கடந்த நிலைக்கு ஒருவரால் வரமுடியும் என்றால் அதுதான் தெய்வ நிலை. மொழி நமது பலவீனம் சிலர் பதிவுகளுக்குப் பின்னூட்டம் இடும்போது கூட அவர்கள் கருத்தை வலியுறுத்தாமால் இந்திரன் சந்திரன் என்று கூறுவதும் வார்த்தைகளைச் சரியாகப் பயன் படுத்தும்  தைரியம் இல்லாததுதான் பிறர் மனம் நோகாமல் நம் கருத்தை கூறுவதற்குத்தான் வார்ர்த்தைகளே இருக்கின்றன