திங்கள், 15 ஆகஸ்ட், 2016

நாட்டு நடப்பு


                                              நாட்டு நடப்பு
                                              ------------------
(சுதந்திரதினம் இன்று . நம் நாட்டு நடப்புபற்றிய ஒரு சிந்தனை)


நாடே பற்றி எரிகிறது. நமக்கென்ன ஆயிற்றுஎன்று இருக்க வேண்டியதுதான்  இருந்தாலும் நமக்கென்று ஏதாவது அபிப்பிராயம் இருக்குமல்லவா. வலை உலகில் இருந்தும் அதைப் பகிராமல் இருப்பது என்ன நியாயம் நாட்டின் வடமேற்கு எல்லையில் இருக்கிறது காஷ்மீர், கடந்த ஒரு மாதமாக ஊரே அடைந்து இருக்கிறது நாளும் துப்பாக்கிச் சூடு  கல்லெறி  கடையடைப்பு .இத்தனை தூரத்தில் இருக்கும் நமக்கில்லை அதன் பாதிப்பு. ஆனால் எங்கோ ஏதோ சரியில்லை என்று மட்டும் நன்கு தெரிகிறது மாநிலத் தேர்தல் நடந்தபோதே ஜம்மு வேறாகவும்  காஷ்மீர் வேறாகவும் ஓட்டளித்தது. மாநிலமே இரண்டாகப் பிளவுபட்டு நின்றது ஹிந்துக்கள் அதிகமாக உள்ள பகுதியில் இருந்து பாஜகபெரும்பான்மையுடனும்  முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதி மக்கள் ஜனநாயகக் கட்சியினர்  பெரும்பான்மையுடனும் வாக்குகள் பெற்றனர், இவர்களால் தனித்து ஆட்சி அமைக்க முடியாததால் கூட்டணி அரசு அமைக்க முன்வந்தனர். இது ஒரு சந்தர்ப்பக் கூட்டணியே தவிர இருகட்சிகளுக்கும்   எதிலும் ஒத்த கருத்து கிடையாது காஷ்மீரை எந்த சக்தியாலும் இந்தியாவில் இருந்து பிரிக்க முடியாது என்னும் பாஜக வினரும்
காஷ்மீரில் ஒத்தகருத்துக்கு  பாகிஸ்தானுடனும்  பிரிவினை வாதிகளிடமும் பேசி முடிவுக்கு வரவேண்டும்  என்று மக்கள் ஜனநாயகக் கட்சியும்  கொள்கை அளவில் மாறு பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் இந்தியக் குடியரசின் பிற பகுதிகளுள் இருக்கும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும்  தெரியவேண்டுவது அவசியமல்லவா. இந்நிலையில் கொஞ்சம் சரித்திரப் பின்னணிக்குப் போக வேண்டி உள்ளது
இந்தியாவுக்கு இங்கிலாந்து அரசு சுதந்திரம் வழங்க முன் வந்தபோது ஏகப்பட்ட அரசுகள் இருந்தன. அவர்கள் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ சேரும் உரிமை அளிக்கப் பட்டன. பெரும்பாலான அரசுகள் இந்தியாவுடன் சேர்ந்தன. முஸ்லிம்கள் பெருவாரியான பிரதேசங்கள் பாகிஸ்தானுடன் சேர்ந்தன. அப்போது காஷ்மீரை ஆண்டு வந்த ஹிந்து அரசன் மஹாராஜா ஹரி சிங் முதலில் சுதந்திரமாக இருக்கவே விருப்பப் பட்டார்  ஆனால் பிரிவினை முடிந்தவுடன் பாகிஸ்தானில் இருந்த பழங்குடியினர் அரசுக்கு எதிராகக் கலகம் செய்ய அதற்கு பாகிஸ்தானும் துணை போக மஹராஜா ஹரி சிங் இந்திய அரசின் உதவியை நாடினார் காஷ்மீர் இந்திய அரசுடன் இணைவதானால் உதவுவோம் என்னும் கண்டிஷன் பேரில் மஹராஜா இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தம் செய்தார் முன்னேறி வரும் பாகிஸ்தான் மற்றும் பழங்குடிப்படையை இந்தியா தடுத்து நிறுத்தியது. அவர்கள் ஆக்கிரமித்த பகுதி  பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் என்றும்  மற்ற பகுதிகள்  ஜம்மு லடாக் உட்பட்ட காஷ்மீர் மாநிலமாகவும் இருந்து வருகிறது  காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தபோது இந்தியா ராணுவம் செய்தித் தொடர்பு வெளி உறவு  போன்றவற்றுக்குப் பொறுப்பு என்றும்  மற்றபடி ஆட்சிக்கு ஆர்டிகிள் 370 தான் அடிப்படை என்றும் முடிவாகியது இந்த ஆர்டிகிள் காஷ்மீருக்கு நிறைய பிரத்தியேக  சலுகைகளை  வழங்கி இருக்கிறது
இப்படி இருந்தும்  காஷ்மீரில் வெகுஜன அதிருப்தியே நிலவுகிறது இதற்கான காரணங்களைக் கண்டாராய்வதை விட்டு காஷ்மீர் இந்தியப் பகுதி இதை யாராலும் மாற்ற முடியாது என்றும் அங்கு அமைதி நிலவ வேண்டும்   என்று பேச்சளவில் கூறுவதில் என்ன லாபம் அரசுக்கு எதிரான எதிர்ப்பின் காரணமே அவர்களுக்கு நிலவும் சூழ்நிலையில் திருப்தி இல்லை என்றும் தெரிகிறது  அடக்கு முறைகளால்  எதிர்ப்பை நீக்க முடியாது ஹிந்து முஸ்லிம்  புரிதல் இல்லை என்றே தெரிகிறது காஷ்மீருக்கு வழங்கப்பட்ட பிரத்தியேக ஸ்டேடஸை நீக்க வேண்டும் என்று முனைப்பில் இருக்கும் பாஜக அரசின் மீது காஷ்மீரிகளுக்கு நம்பிக்கை குறைகிறது எல்லாத்தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும்  மனோபாவம் அரசுக்கு வேண்டும் தொடர்ந்து போராட்டத்தில் காஷ்மீரிகள் ஈடுபடுகிறார்கள்  என்பது அரசின் ராஜதந்திரக் குறைபாடையே காட்டுகிறது 
பாகிஸ்தான் இந்தியா மீது படை எடுத்து வந்தபோது  அவர்களைத் தடுத்து நிறுத்தியது போதவில்லை.ஜம்மு காஷ்மீரிலிருந்து விரட்டி இருக்க வேண்டும்  என்ன செய்ய அப்போதைய பிரதமர் நேரு மிகவும் நல்லவராக இருந்தார்  ஹைதராபாதை வசப்படுத்தியது போல் ஜம்மு காஷ்மீரையும் முழுதும் வசப்படுத்தி இருக்க வேண்டும் எத்தனையோ தேர்தல்கள் நடந்து முடிந்த போதும் காஷ்மீரிகளுக்குத் திருப்தியான அரசு அமையவில்லை என்பதே நிதர்சனம் 
                           ---------------------------------------------
16 ஆண்டுகாலமாய் உண்ணாவிரதம் இருந்து வந்த மணிப்பூரைச் சேர்ந்த ஐரொம் ஷர்மிளா தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் அவரது கோரிக்கைதான் என்ன.?ராணுவத்துக்கு  வழங்கப்பட்டிருக்கும் அத்துமீறும்  கேள்வி கேட்கமுடியாத அதிகாரம்  நீக்கப் பட வேண்டும் என்பதே கலவரங்கள்  நடக்கும்  போது அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டால் செயலாற்றுவது கடினம்  என்று ராணுவத் தரப்பிலும் தேவையில்லாத  அதிகாரங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்று ஷர்மிளா தரப்பிலும்  கூறப்படுகிறது சில ஆண்டுகளுக்கு முன் ராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில்  பல பெண்கள் ஆடைகளை அவிழ்த்து  நிர்வாணப்போராட்டம் நடத்தியதும் மறந்திருக்காது இந்த அதிகார துஷ்பிரயோகத்தை நீக்க, தான் மாநில முதல்வராக வேண்டும்  என்று ஷர்மிளா கருதுகிறார் இவர் உண்ணாவிரதம் இருந்தது மருத்துவ மனையில் இப்போது அங்கிருந்து இடம் பெயர அவருக்கு என்று இடம் தருவார் இல்லை.  அவர் உண்ணா விரதம்  இருந்த போது இருந்த மவுசு அதை விட்ட பின் இல்லை என்பதே உண்மை. நம் மக்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவர் தொடர் உண்ணாவிரதம் இருப்பதே பலருக்கும் நன்மை என்று எண்ணத் தோன்றுகிறது ராணுவத்தின்  விசேஷ அதிகாரம் நீக்கப்பட்டால்தான் தன்  அன்னையை சந்திப்பேன் என்று ஷர்மிளா  கூறி இருந்தார் ராணுவத்துக்கு அதிகாரம் இருக்க வேண்டியதுதான்  ஆனால் அதை துஷ்பிரயோகம் செய்வது தடுக்கப்படவேண்டும்
                      ---------------------------------------------------
 வடமேற்கிலும் வடகிழக்கிலும் அமைதி இல்லாமல் நாடு அல்லலுறும் போது மற்ற இடங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக வன் முறைகள் தூண்டி விடப்படுகின்றது இதன் முன்னணியில்  உயர்வு தாழ்வு நீடிக்க வேண்டும் என்று கருதும் ஹிந்துத்துவ அணிகள் பெரும் பங்கு வகிக்கின்றன, பிரதமர் மோடியின் மாநிலத்தில் தலித்துகளின்  போராட்டம்  வலுக்கிறது பிரதமர் மோடியின் ஆட்சி எப்படி இருந்தாலும்  அவரைப் பற்றிய ஒரு  perception  இருக்கிறது ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்கின் கொள்கைகளுக்கு குந்தகம் விளையக் கூடாது என்று எண்ணுகிறார்
 தமிழ் நாட்டிலும்  சாதி இந்துக்களுக்கும் தலித்துகளுக்கும்  போராட்டம் தொடர்கிறது இவை கோவில் திருவிழாக்களிலும் கலப்பு சாதித் திருமணங்களிலும்  வெளிப்படுகிறது   தலித்துகள் கோவில் காரியங்களில்  தங்களுக்கும் முன்னுரிமை வேண்டும் என்றும்   திரு விழாக்களில்  அவர்களுக்கும்  மண்டகப்படி உரிமை வேண்டும்  கேட்கின்றனர்சாதிக்கலப்பு திருமணங்கள் வெட்டு குத்து கொலை என்றும் நீள்கிறது இதில் எந்த சாராருக்கும் எதிராக நடக்கும்  துணிவு தமிழக அரசுக்கு இல்லை என்றே எண்ணத்தோன்றுகிறது
 இந்த சாதிமதங்கள் நம் நாட்டின் சாபம் என்றே நினைக்கிறேன் என்ன செய்ய ஆண்டாண்டுகளாக  ரத்தத்தில் ஊறி விட்ட உணர்வுகள் எளிதில் நீங்குவதில்லை பசு ரட்சகர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் பசுக்களை ரட்சிப்பதை விட்டு பிற்படுத்தப் பட்டோருடன்  வன்முறையில் ஈடுபடுகின்றனர். மேலோட்டமாகப் பார்க்கும் போது மனித உயிர்களை விட பசுவின்  உயிர் முக்கியமாகப் படுகிறது  ஆனால்  பசுக்களை ரட்சிக்கும்  கோசாலையில் நூற்றுக் கணக்கான  மாடுகள் உயிர் துறந்தது  ஏனோ அதிகம் பேசப்படுவதில்லை. 
இந்தியா பலவிதக் கலாச்சாரங்களையும்  உணவு முறைகளையும் கொண்டநாடு இவர்கள் எல்லோரும் சேர்ந்து இருப்பதைத்தான் யூனிடி இன் டைவெர்சிடி  என்கிறோம்  ஹிந்துத்துவ சக்திகள் பல போர்வையில்  எதையோ அடைய நினைக்கிறார்கள்  அரசு என்பது எல்லோருக்குமானது  இறந்தபின்பும் பேதம்  பாராட்டும் வகையில் இடுகாடுகளும் சுடுகாடுகளும்..... எங்கு நோக்கிப் பயணிக்கிறோம் 
                     ------------------------------------------------------------
சுதந்திரம் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உண்டு.  நமக்கு அரசியல் சுதந்திரம் மட்டுமே கிடைத்திருக்கிறது  அதையே சரியாக உபயோகிக்கத்தெரியாமல் திண்டாடுகிறோம்  நாட்டு நடப்பில் பிரதானமாக வரும் என்  கருத்துக்களே பதிவில்
 பதிவை வாசிப்பவர்களாவது அவரவர் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன் ஒத்த கருத்து அமைவது சிரமம் என்பது தெரிகிறது அப்படி இருக்கும் சாத்தியங்கள் இருந்தால் இந்தமாதிரி பிரச்சனைகளே  இருக்காதே ,                      
-


 

32 கருத்துகள்:

  1. பகிர்வுக்கு நன்றி. காஷ்மீர் இந்தியாவுடன் பெரிதும் இணைய உதவியவர்களில் வல்லபாய் படேலும் ஜெனரல் கரியப்பாவும் முக்கியமானவர்கள். கரியப்பாவின் ஆலோசனையை அப்போதே ஏற்றுச் செயல்படுத்தாத பிரதமர் நேரு! :( என்ன செய்ய முடியும்! தொலைநோக்குப் பார்வை இல்லாததால் நீடித்த பிரச்னைக்கு வித்திட்டாயிற்று! :(

    பதிலளிநீக்கு
  2. மனதில் உள்ளதை சொற்சித்திரமாக வழங்கியிருக்கின்றீர்கள்..

    காஷ்மீரிகளின் இரத்தத்தில் - இந்திய எதிர்ப்பு என்பது ஊறி விட்டதைப் போலிருக்கின்றது..

    எல்லாருக்குமான நல்லது நடப்பது சிரமம் தான்..

    பதிலளிநீக்கு
  3. அருமை நண்பரே! தங்கள் கருத்தினை முழுதும் ஏற்றுக் கொள்கிறேன்!தெளிவான கருத்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. நம் நாட்டின் பிரச்சனைகள் பற்றிய உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டது நன்று. நிறைய பிரச்சனைகள் இப்படி.... எல்லாவற்றிலும் அரசியல் புகுந்து விளையாடுகிறது. பலரும் இதில் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். பண சம்பாதிப்பு இருக்கும் வரை இதில் எந்தப் பிரச்சனையும் தீராது.

    பதிலளிநீக்கு
  5. உள்ளதை உள்ளவாறு உணர்ந்து பகிர்ந்தமைக்கு நன்றி. பெருந்தன்மை என்பதைவிட பக்குவமான மனப்போக்கு இருந்தாலே போதுமானது. அதிலும் நாம் குறைந்துவிட்டோம் என்பது போலுள்ளது. நிலைமை விரைவில் சீரடையும் என நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  6. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. பழசைப் பேசி என்ன புண்ணியம். இப்போது ஒரு நல்ல தீர்வாக எடுத்தால் இந்தியாவுக்கு நல்லது. காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு எடுத்து அதற்கு ஏற்றமாதிரி நடந்துகொள்வதுதான் நல்லது. அதற்கு வேஸ்டாகச் செலவழிக்கும் பணத்தை ஆக்கபூர்வமான விஷயத்துக்குச் செலவழிக்கலாம்.

    தமிழக சாதிப் பிரச்சனை என்ன என்று தெளிவாகத் தெரிகிறது. அதைப் பற்றி நான் கருத்துச்சொல்வது ஒருபக்கச் சார்பானது என்று கொள்ளப்படும். அதனால் எஸ்கேப்.

    பதிலளிநீக்கு
  7. காஷ்மீர் தலைவலி தீர ஒரே வழி ,பொது வாக்கெடுப்பு !இந்தியாவுடன் சேர்ந்து இருக்க விருப்பமா ,பாகிஸ்தானுடன் சேர விருப்பமா அல்லது தனி நாடாக விருப்பமா என்று சர்வதேச கண்காணிப்புடன் வாக்கெடுப்பு நடத்தி அதன் படி பிரச்சினையைத் தீர்க்கமுடியும்!ஆனால் இது நடக்குமாவென்று தெரியவில்லை !
    ஜெரோம் ஷர்மிளா போராட்டம் சரியானதுதான் !ராணுவம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் செயல் பட வேண்டும் !
    தமிழகத்தில் சாதிப் பிரச்சினை சாதியக் கட்சிகள் தலையெடுத்த பின்னர்தான் அதிகரித்து உள்ளது !பொதுவான பெயரில் இயங்கும் ஜாதிக் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும் !

    பதிலளிநீக்கு
  8. காஷ்மீர் பிரச்சினை பற்றி பலரும் பேசத் தயங்கும் இந்தநாளில் தங்களது வெளிப்படையான கருத்து பாராட்டுதலுக்கு உரியது.

    // பிரதமர் மோடியின் ஆட்சி எப்படி இருந்தாலும் அவரைப் பற்றிய ஒரு perception இருக்கிறது ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்கின் கொள்கைகளுக்கு குந்தகம் விளையக் கூடாது என்று எண்ணுகிறார்//

    என்ற உங்களது கருத்து நாட்டின் உண்மையான நிலைமையை விளக்குகிறது. எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல வேண்டிய பிரதமர் எப்போதும் வெளிநாட்டுப் பயணத்திலேயே இருந்தால், உண்மையில் இங்கு தேசத்தை ஆள்வது யார் என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

    பசுசேவகர்கள் என்ற பெயரில், தலித்துகளின் மீது தாக்குதல் என்பது, அவர்கள் இந்து மதத்தில் இருந்தாலும் அவர்களை இந்துமதத்தினராக நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பது போல இருக்கிறது.

    இத்தனை வருட வாழ்க்கையில், இந்தநாட்டில் என்ன நடக்கிறது என்ற அனுபவபூர்வமான ஆதங்கத்துடன் கூடிய சிந்தனையின் வெளிப்பாடே உங்களது இந்த பதிவு.

    எனது உளங்கனிந்த இந்திய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. காஷ்மீரைத் தன் சுயநலத்திற்காக நேரு இந்தியாவுடன் இணைத்தார். ஏனெனில் அவர் காஷ்மீரத்திலிருந்து இந்தியாவிற்கு குடியேறியவர்களின் வம்சவளி ஆவார். காஷ்மீரை இந்தியாவுடன் சேர்க்காவிட்டால் அவருக்கு இந்திய பிரதமர் ஆவதற்கு தார்மீக உரிமை இல்லாது போயிருக்கும்.

    பதிலளிநீக்கு
  10. காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கியும் இத்தனை ஆண்டுகாலம் பயன் ஒன்றும் இல்லை. அதனால் எந்தவிதமான சுமுகமான சூழலும் உண்டாகவில்லையே.பாகிஸ்தானுடன் சேர்ந்தால் நிச்சயமாக இந்தியாவில் உள்ளதைப் போல சுதந்திரமாக இருக்க முடியாது.இங்கு கிடைக்கும் உரிமைகளும் சலுகைகளும் அங்கு கிடைக்க வாய்ப்பே இல்லை.

    பதிலளிநீக்கு
  11. சுதந்திரம் அடைந்து இத்துனை ஆண்டுகள் ஆகியும் நிம்மதி இல்லையே
    தீர்வு இல்லையே
    வருத்தம்தான் மிஞ்சுகிறது

    பதிலளிநீக்கு

  12. @ ஸ்ரீராம்
    பாராட்டுக்கு நன்றி ஸ்ரீ

    பதிலளிநீக்கு

  13. @ கீதா சாம்பசிவம்
    வல்லபாய் படேல் பிற அரசுகள் இந்தியாவுடன் இணைய வழிவகுத்தவர் என்று படித்திருக்கிறேன் காஷ்மீர்....?நல்லவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள் நேரு அதில் முக்கியமானவர். வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி மேம்

    பதிலளிநீக்கு

  14. @ துரை செல்வராஜு
    வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி ஐயா

    பதிலளிநீக்கு

  15. @ புலவர் இராமாநுசம்
    வருகைக்கும் கருத்தேற்புக்கும் நன்றி ஐயா

    பதிலளிநீக்கு

  16. @ வெங்கட் நாகராஜ்
    பணம் பாயாத இடமே இல்லையோ என்று தோன்றுகிறது வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  17. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    இனி நல்லதே நடக்கும் என்னும் நம்பிக்கையே துணை. வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  18. @ நெல்லைத் தமிழன்
    வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி ச்டார் காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு என்பது ஐ நா தீர்மானங்களில் ஒன்று. ஆனால் அதற்கு ஒரு CAVEAT இருந்தது பிரிவினையின் போது இருந்த நிலை வரவேண்டும் அது இனி சாத்தியமில்லை.

    பதிலளிநீக்கு

  19. @ கில்லர்ஜி
    வருகைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு

  20. @ பகவான் ஜி
    காஷ்மீரில் ஒரு பொது வாக்கெடுப்பு நிகழவேண்டும் என்றால் அது பிரிவினையின் போது இருந்த நிலை வரவேண்டும் ஒட்டுமொத்தக் காஷ்மீரிலும் அன்னியர்கள் யாரும் இருக்கக் கூடாது எல்லாத்தரப்புப் படைகளும் விலக வேண்டும் ஆனால் அது இன்றைய நிலையில் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது ஐ நாவின் அமைதிப்படை அங்கு இருப்பதும் ஒரு தமாஷ்தான்
    ராணுவத்தின் கைகளைக் கட்டி தீவிர வாதத்தை அடக்கச் சொல்கிறார்கள் என்று ராணுவம் நினைக்கிறது
    தமிழகத்தில் யாராவது எப்போதும் மேலானவராகக் கருதப்படுவது வழக்கமாகி விட்டது வருகைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு

  21. @ தி தமிழ் இளங்கோ
    இப்படியே போவது நம் நாட்டின் விதி என்று சொல்லலாமா. விதியை மீறவேண்டும் மதியை உபயோகிக்க வேண்டும் என்று நினைப்பவன் நான் வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  22. @ டாக்டர் கந்தசாமி
    தலைவர்களில் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர் நேரு என்பது என் கருத்து வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  23. @ டி என் முரளிதரன்
    காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண அணிகிய விதம் சரியில்லையோ என்றே தோன்றுகிறது அதிக சலுகைக்கள் கொடுத்தால் இன்னும் வேண்டும் என்று கேட்கும் நிலைக்குப் போய் விட்டார்கள் காஷ்மீரிலும் தேர்தல்கள் நடந்து அரசியல்வாதிகள் பதவிக்கு வந்திருக்கிறார்கள் இவர்களில் பலரும் சந்தர்ப்ப வாதிகளாகவே இருந்து விட்டனர் KASHMIR IS A DELICATE ISSUE வருகைக்கு நன்றி முரளி.

    பதிலளிநீக்கு

  24. @ கரந்தை ஜெயக்குமார்
    பல நாடுகளுக்குப் பயணம் செய்தே காலம் கழிக்கும் நம் பிரதமர் அயல் நாட்டினரின் அபிமானத்தைப் பெறவில்லை என்றே நினைக்கிறேன் வருகைக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  25. மக்களின் வாக்கெடுப்பே இந்த பிரச்சனைக்கு தீர்வளிக்கும் என்று தோன்றுகிறது! விரிவான தகவல்களுடன் நல்லதொரு அலசல்! நன்றி!

    பதிலளிநீக்கு
  26. நல்ல அலசல் ஐயா!

    காஷ்மீர் பிரச்சனையில் `மதம்` என்பது ஒரு முக்கியக் கருவியாக உள்ளது. அங்குள்ள பெரும்பாலான மக்கள் இந்தியாவுடன் இணைவதை விட பாகிஸ்தானுடன் சேர விரும்புவதாக பல்வேறான செய்திகள் உலாவருகின்றன. இதில் எவ்வளவு உண்மையென்பது தெரியாது!! ஊடகங்கள் என்ன சொல்ல நினைக்கிறார்களோ அதுதான் இங்கு செய்தி, மக்களிடம் போய் சேருகிறது. அங்கு வசிப்போரில் 68% மக்கள் இசுலாமிய மதத்தையும், 28% பேர் இந்து மதத்தையும் பின்பற்றுகின்றனர். காஷ்மீர் பிரச்சனை என்பது வெறும் எல்லை விஸ்தரிப்பு மட்டுமல்ல அதுவொரு மதம் சார்ந்த பிரச்சனை.

    ஒரு பேச்சுக்கு, காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைந்தால் இப்பிரச்சனை தீர்ந்த்விடுமா? நிச்சயம் முற்றுப் பெறாது, பிரச்சனை இன்னும் அதிகமாகவே செய்யும். ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப் என்று ஒவ்வொன்றாக நாம் தாரை வார்த்துக் கொடுக்க வேண்டிய நிலை வரும். தீவிரவாதம் தலைத்தோங்கி மும்பை குண்டு வெடிப்பைப் போல் நாடெங்கும் நிகழும்.

    பதிலளிநீக்கு
  27. சுதந்திர தின வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

  28. @ தளிர் சுரேஷ்
    மக்களின் வாக்கெடுப்பு நடந்து அங்கும் மாநில அரசு இருக்கிறதே ஒரு வேளை நீங்கள் ப்லெபிசைட் பற்றிக் கூறினால் அது நடக்க பாகிஸ்தானும் இந்தியாவும் 1947க்கு முந்தைய நிலைக்கு வரவேண்டும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

    பதிலளிநீக்கு
  29. @ அருள்மொழி வர்மன்
    காஷ்மீர் பிரச்சனையில் மதமும் பெர்ம்பங்கு வகிக்கிறது இந்தியாவின் ஜனத்தொகையில் 15 சதவீதத்துக்கும் மேலாக இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள் காஷ்மீர் இந்தியா பாக்கிஸ்தானுக்குமுள்ள பங்காளிச் சண்டை நல்ல ராஜதந்திரமுடன் அணுகவேண்டிய பிரச்சனை இந்தியாவிலும் மதம் தலை விரித்தாடுகிறது ஒவ்வொரு செயலுக்கும் காரணம் உள்ளது பார்ப்போம் என்னதான் நடக்கிறது என்று வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  30. @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
    நானும் உங்களுக்கு இந்த சம்பிரதாய சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் வருகைக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு