வியாழன், 18 ஆகஸ்ட், 2016

மாறிவரும் காலமும் எழுத்தும்


                        மாறிவரும் காலமும் எழுத்தும்
                         -------------------------------------------------
நான் எழுதும் போது என்னையும் அறியாமல் அந்தக் காலத்துக்குப் போய் விடுகிறேன் எல்லாம் வயதின் கோளாறு என்றே தோன்றுகிறது. ஒரு முறை நண்பர் ஏகாந்தன்  என் வீட்டுக்கு வந்திருந்தார்( ஒரு முறைதான் வந்திருக்கிறார் ) என் பழைய எழுத்துக்களோடு ஒப்பிடும் போது இப்போது எழுதுபவை ஒரு மாற்றுக் குறைவு போல்  இருக்கிறது என்றார்  அது சரியோ என்ற எண்ணம் எனக்கும் இருக்கிறது என்  பழைய எழுத்துக்கள் சிலவற்றைப் படிக்கும் போது எனக்கு இனி அம்மாதிரி எழுத வராது என்றே தோன்றுகிறது
இதைப் பாருங்களேன்
வெண்ணிற  மேனியாள்  எனக்கு
மிளிரும்  நீலவானம்   சரிதுகில்
பன்நிறம்  தெரியப   பதித்த  மணிகள்
 
மின்னும்    தாரகை   நல்லணிகலன்
எனக்கு   நிகர்   யாரே    இப்புவிமீதே   எனவே
 
உன்னாது  இயம்பும்   மதியும் --கிளியே
 
கறை   துடைத்த   மதி  வதனம்   அவள்    மேனிக்கணியும்
பட்டோ   மற்றோ   பொலிவுறும்  பேருண்மை ---ஆங்கு
 
இதழிலோடும்   புன்னகையும்   நன்னகையாம்
 
வண்டென    விரைந்தாடும்   மலர்  விழிகளும்
 
கண்டதும்   கவி  பாடத்தூண்டும் ---என்
 
காதல்   ஜோதி  ! கன்னல்  மொழியினள்---அவள்
 
காண்பார்   கண்   கூசும்   பேரெழில் ---கண்டும்
 
செருக்கொழிந்தாளிலை -- ஏன்  ?
காதல் வயப்பட்டிருக்கும் போது வந்து விழுந்த வார்த்தைகள் இனி அம்மாதிரி காதல் வசப்பட சாத்தியமும் இல்லை எழுதவும்  இயலாது
அமர காதல் என்று கூறப்படுபவை எல்லாம் வெற்றி பெறாத காதல்களே ஒரு வேளை காதலில் வெற்றி பெறாமல்  இருப்பதே அமர காதல் என்று எண்ணும் அளவுக்கு  சிந்தனைகள் இருந்தது அமர காதல்கள் என்று கூறப்படுவதெல்லாம் லைலா மஜ்னு, அம்பிகாபதி அமராவதி  போன்ற கதைகளே இதுவே என்னை ஒரு கதை எழுதத் தூண்டிற்று அது இதோ. இந்தக்கதை  1950களின் கடைசியில் எழுதியது கற்பனை என்றாலும் றெக்கை கட்டிப் பறந்த காலம் அது அதிலிருந்து சில பகுதிகள்
அவனுக்கு அவள்மேல் காதல்,
அவளுக்கு அவன்மேல் காதல்
காதலுக்குக் காரணம் என்ன.?
அழகு, அறிவு, படிப்பு, அந்தஸ்து.?
எல்லாவற்றுக்கும் மேம்பட்டது
எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது,
காதல் இருப்பது உண்மைதானா.?
அவனுக்கு வந்தது திடீர் சந்தேகம்.
உயிரினும் மேலான காதலுக்கு அவள்
உயிரையே தருவாளா. ? சோதித்துப்
பார்க்க அவன் துணிந்து விட்டான்.
காதலின் பிரதிபிம்பமே அவர்கள்-இதை வெட்டென விளங்கச்
செய்ய அவர்கள் அமர காதலர்களாவது.. முடிவு தெரியாக்க்
காதலைவிட முடிவு தெரிந்த சாதல் சிறந்தது உண்மைக் காதல்
என்றால் இருவரும் சேர்ந்தே உயிர் விட்ல் வேண்டும்.
இல்லையெனில் ஒருவரை ஒருவர் மறக்க வேண்டும்.
என்னென்னவோ சொல்லிக் குழப்பினான் .கட்டிளங்குமரியவள்
குழம்பித் தெளிந்தாள்.ஒரு நாள் அவகாசம் கேட்டாள்.
இருவரும் சேர்ந்திருந்து மறு நாள் ஊர்ப்புறத்தே இருந்த
ரயில் தண்டவாளத்தில் கையுடன் கையும் மெய்யுடன் மெய்யும்
இணைந்து இருவரும் சேர்ந்தே தலை கொடுக்க முடிவாயிற்று.
ஆண் பெண் ஒருவரை ஒருவர் நாடி ,கண்டு மகிழ்ந்து
அளவிலா அன்பு கொண்டு , மட்டற்ற காதல் ஊற்றாய் ஊறி
ஆறாய்ப் பெருக்கெடுத்து பின் சங்கமிப்பதே குடும்ப சாகரம்.
அதில் அமைதியும் இருக்கும் கொந்தளிப்பும் இருக்கும்
அனுபவித்து அறிவதே மனிதகுலக் கடமை. .அவள் அவனது
மனச் சுவற்றில் எழுதிய சித்திரமா இல்லை கடைத்தெரு
கத்தரிக்காயா. ? இவன் வருமுன் காப்பவனா வாழப் பயந்தவனா.
வரும்முன் காப்பது அழித்துக் கொள்வதில்தான் இருக்குமா.?
வாழப்பயந்தவனாகத்தானிருக்க வேண்டும். அணு அணுவாய் பயந்து
சாகும் கோழையுடன் வாழ்வதை விட ....அட வாழ்வாவது ஒன்றாவது.
அதைத்தான் முடித்துக் கொள்ளலாம் என்கிறானே.-மங்கையவள்
மருகினாள் மாய்ந்து மாய்ந்து உருகினாள்.
(பெண்கள் பற்றிய அவனது கற்பனையைப் பாருங்கள்)
பொற்சரிகை விளிம்பு  கோர்த்து, மிளிரும் நிலப் பட்டாடைஉடுத்து,பல வண்ண முழுமணிகள் அழுத்தி முற்றிய நல்லணிகலன் பல அணிந்து,நறு மணங்கமழும் கூந்தலுடன்,உறுப்புத் திருத்தி ஒய்யாரங்காட்டி,உவகை பொருத்தி உரிய அன்பின் சில்லுரை இன்புற மொழிந்து,ஒரு ஆண்மகனை வயப் படுத்தும் நங்கையினும், இயற்கை நலம் பெற்றாள்,கருகி நீண்ட விரிகுழற் கற்றையுடையாள் மொய்க்கும் வண்டென விரைந்தாடும் விழியுடையாள், கொவ்வைப் ப்ழத்தைப் பழிக்கும் செவ்விய இதழாள்,கடைந்துருட்டியதன்ன பச்சிளந்தோளுடன்,பூங்கொம்பின் ஒசிவுடையள்,கிள்ளை மொழியாள் மயிலென உலவி, அவள்மேல் முதிர்ந்த அன்பு கொண்ட அவனுடன்,ஒருமித்து உள்ளம் உருகி,அவனை அவள் வயப் படுத்தும் மங்கை நல்லாள் அவளே சிறந்தவள் …………….
உயிர் விடத் துணிந்தவளுக்கு சோதனையில் வெற்றி பெறுபவளுக்கு வாழ்நாளெல்லாம் இன்பம் தரலாமே. சோதனைதான் என்று தெளிவிக்க இன்னும் சில மணித் துளிகளே உள்ளன. அதோ அவளும் வருகிறாள். ஊருக்கு வெளியே ஒன்றாய் போக வேண்டும் கடைசி நொடியில் தெரிவித்தால் வாழ்வில் பற்று இன்னும் கூடக் கூடும்”.
மனதில் தோன்றும் உணர்ச்சிகளை மனதின் அடித்தளத்தில் அழுத்திப் புதைத்தால் அவ்வுணர்ச்சிகள் வடி வதங்கி இறந்து விடுகின்றன. உணர்ச்சிகளுக்கு அதனால் ஏற்படும் எண்ணங்களுக்கு வார்த்தைகளால் உயிர் கொடுத்து தெளிவிக்காவிட்டால் உணர்ச்சிகளின் உண்மைத்தன்மை மறைந்து எதிர்பாராத விபரீதங்கள் விளையலாம்.

ஊரின் வெளிப்புறப் பிரதேசம். அமைதியைக் கிழித்துக் கொண்டு தூரத்தில் புகை வண்டி அசுர வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு வினாடிகளில் தண்ட வாளத்தை அடையலாம் அருகில் புஸ்ஸென்ற சப்தம் கேட்டு அவனும் அவளும் திடுக்கிட்டனர். சாகும் தருவாயிலும் ஏனோ அந்த பயம். அவனுக்கு திக் திக்கென்று அடித்துக் கொண்டது. அவள் சமாளித்துக் கொள்கிறாள். .பிறகு என்னதான் தோன்றியதோ சீறிவரும் பாம்பிடம் கை கொடுக்கிறாள். அதற்கென்ன. .?கொட்டிவிட்டு ஆத்திரம் தீரச் சென்றுவிட்டது. அவன் அலறுகிறான்,புரளுகிறான்,பிதற்றுகிறான்.புலம்புகிறான். அவள் அவனது விருப்பத்தை நிறைவேற்றி விட்டாள். விபரீதம் விளைந்து விட்டது.!

இந்தமாதிரியான அதீதக் கற்பனைகள் இவனுக்கு இனிவர வாய்ப்பில்லை

இருந்தாலும் இந்த ஒப்பிடல் மட்டும் போகவில்லை தலை முறை இடைவெளி என்று தெரிந்தும் மனம் ஏனோ சமாதான மடைவதில்லை  எனக்கு 24 வயதாகிவிட்ட என் பேரனைப் பார்க்கும்போது சில எண்ணங்கள் எழுவதைத் தடுக்க முடியவில்லை
   மூன்றாண்டு   முற்றுப்   பெறாத   இளவயது,
      
எண்ணமும்   சொல்லும்   இணையப்   பெறாத   மழலை,
      
சொல்வதை,   கேட்பதைகிரகிக்க  விழையும்   தன்மை,
                            
அது  அந்தக்  காலம் !
      
கதை    கேட்கும்    ஆர்வம்,
      
கதா   பாத்திரமாகும்   உற்சாகம்,
      
ராமனாக , அனுமனாகஅரக்கி  சூர்ப்பனையாக,
      
மாறுவான்  நம்மையும்   மாற்றுவான்,
                             
, அது   அந்தக்   காலம்.  !
      
நான்கு   மாடுகள்   கதையில்   அவனே  சிங்கம் ,
      
முதலையும்   குரங்கும்   கதையில்   அவனே  குரங்கு,
      
பீமன்    வால   நகர்த்த   திணறும்  கதையில்  அவனே  அனுமன்,
                              
 , அது    அந்தக்   காலம்,  !
     
ஆறு    காண்ட   ராமாயணம்   அழகாக   சொல்லுவான்,
,      
கலைஞரின்   வீரத்தாய்   வசனமும்  விட்டு வைத்தானில்லை,
                               
, அது   அந்தக்  காலம், !
      
விநாயகர்  துதி   பாடுவான், வள்ளிக்  கணவன்  பெயர்  பாடுவான்,
       
கண்ணனின்   கீதை  சொல்லுவான், காண்பவர்  கேட்பவர்
      
மனம்  மகிழ  திரை  இசையும்   பாடுவான்,
                              
, அது    அந்தக்   காலம்,  !
     கதை   சொல்லி  மகிழ்ந்தேன் , அவனோடு  நானும் நடித்தேன் ,
      
அவனைப்  போல்  என்னை   நான் மாற்ற ,  என் வயதொத்தவன்   போல்
      
அவன்  மிளிர , எனக்கு  அவன், அவனுக்கு  நான் என,
                               
, அது   அந்தக்    காலம்,   !
       
காலங்கள்    மாறும்  காட்சிகள்    மாறும்,
       
காலத்தின்   முன்னே   எல்லாம்   மாறும்,
      
மாற்றங்கள்   என்றால்   ஏமாற்றங்களா, ?
   அன்று போல் இன்றில்லையே
      
நேற்று   இன்றாகவில்லைஇன்று   நாளையாகுமா, ?
      
ஓராறு   வயதில்  இல்லாத  எண்ணம்,
     
நாலாறு   வயதில்  வருவது    ஏனோ, ?
      
இதுதான்    தலைமுறை   இடைவெளியோ, ?
      
கடந்த   நிகழ்வுகள்   நினைவுகளாய்த்   திகழ,
     
நடக்கும்   நிகழ்வுகள்   மகிழ்வாக   மாற ,
      
இன்றும்    ஒரு நாள் , அது   அந்தக்   காலமாகும், !

      







32 கருத்துகள்:

  1. நன்றாயிருக்கிறது. ரசிக்க முடிகிறது. ஆனால் சற்றே நீளம்.

    பதிலளிநீக்கு
  2. எல்லோரும் காலம் மாறுவதோடு தாங்களும் மாறுவதாகச் சொல்கின்றனர். ஆனால் நான் மாறி இருக்கேனா? இல்லைனே நினைக்கிறேன். உங்கள் எண்ண ஓட்டங்களை அருமையாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. சரியான காதல் நாயகன்தான் நீங்க!

    பதிலளிநீக்கு
  4. காலம் மாற மாற எண்ண ஓட்டங்களும் மாறத்தானே செய்யும் ஐயா
    அருமை

    பதிலளிநீக்கு
  5. அடேங்கப்பா ,எழுத்தில்என்னவொரு சிருங்கார நடை ?எழுதியது நீங்கள்தானா என்று கேட்கத் தோன்றுகிறது !
    அன்றைய தேவதைகள் எல்லாம்,இன்று தேவைதானா என்றாகி விட்டதால் கற்பனை வளம் குறையத் தானே செய்யும் :)

    பதிலளிநீக்கு
  6. சுவாரஸ்யமாக இருக்கிறது. காதல் வயப்பட்டால் கவிதை தன்னாலே வருகிறது
    ஒன்று செய்யுங்கள் ... வயசு...முதிர்ச்சி அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரு புதிய காதல் கதை எழுதுங்கள். இளமை துள்ள வேண்டும்... நோ உபதேசம்.... டார்கெட் ஆடியன்ஸ் 25 வயதுக்குள் இருப்பவர்கள். காத்திருக்கிறேன் சார்!

    பதிலளிநீக்கு
  7. உங்களது கட்டுரையைப் படித்தவுடன் எனது நினைவுக்கு வந்த தமிழ் சினிமாப் பாடல் (படம்: போலீஸ்காரன் மகள்)

    // ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
    அதற்கு முன்னாலே வா வா வா வா
    அழகுடன் இளமை தொடர்ந்து வராது
    இருக்கின்ற போதே வா வா வா //

    எல்லோருமே அப்படியே இளமைக் காலத்திலேயே இருந்திவிடத்தான் ஆசைப் படுகிறோம். உங்களுடைய “ ஒ , அது அந்தக் காலம் ‘ – என்ற கவிதை வரிகள் ஏனோ எனக்குள் ஒரு நெருடலை ஏற்படுத்தி விட்டது. ‘ ஆசையே அலைபோலே … இளமை மீண்டும் வருமா? முதுமையே சுகமா?”

    பதிலளிநீக்கு
  8. ஸ்வாரஸ்யம். மோகன்ஜி சொன்னது போல ஒரு கதை எழுதுங்கள். காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  9. இளமை இலட்சியங்களின் பூக்காடு.

    எப்படி இப்படியெல்லாம் கவைக்குதவாத கற்பனைகளில் உங்களை மூழ்கடித்துக் கொண்டீர்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

  10. @ ஸ்ரீராம்
    /ரசிக்க முடிகிறது.ஆனால் சற்றே நீளம் /தவிர்க்க முடியவில்லை கவனித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் ஒரு பாதி கற்பனையின் அதீதம் இன்னொரு பாதி ஆதங்கத்தின் வீச்சு. காலத்தின் கோலம் பற்றிக் கூற முயலும்போது இரண்டையும் இணைத்தேன் வருகைக்கு நன்றி ஸ்ரீ

    பதிலளிநீக்கு

  11. @ கீதா சாம்பசிவம்
    காலம் நிச்சயம் மாற்றம் ஏற்படுத்தி இருக்கும் திரும்பிப் பார்த்தால் தெரியும் பாராட்டுக்கும் வருகைக்கு நன்றி மேம்

    பதிலளிநீக்கு

  12. @ டாக்டர் கந்தசாமி
    /சரியான காதல் நாயகன் தான்/ ஒப்புக் கொள்கிறேன் இருந்தாலும் காதலிலும் ஸ்ரீராமனைப் போன்றவன் வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  13. @ கரந்தை ஜெயக்குமார்
    மேடம் கீதாவின் பின்னூட்டத்தைபொ பார்க்கக் கோருகிறேன் வருகைக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு

  14. @ பகவான் ஜி
    எனக்கே அந்த சந்தேகம் வருகிறது இப்போது எழுதினால் ஒரே தேவதையின் நினைவுதான் வருகிறதுஅது அந்தக் காலம் பற்றி ஏதும் கூறவில்லையே வருகைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு

  15. @ மோகன் ஜி
    ரசித்ததற்கு நன்றி சார். பிரச்சனையே காதல் என்றாலேயே சொந்த அனுபவமே நினைவுக்கு வருகிறது25 வயதுக்குள் இருப்பவர்களுக்காகவும் எழுதி இருக்கிறேன் காதலைப் பற்றியும் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது பற்றியும் எழுதி இருக்கிறேன் இன்னொரு காதல் கதை முயற்சித்துப் பார்க்கலாம் வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  16. @ சூப்பர் டீல்
    என் தளம் விளம்பரத்துக்காக அல்ல என்று முன்பே குறிப்பிட்டு இருக்கிறேன்

    பதிலளிநீக்கு

  17. @ தி தமிழ் இளங்கோ
    என் வரிகளைப் படிக்கும் போது சினிமா வரிகள் நினைவுக்கு வருகிறது என்பதை என் துரதிர்ஷ்டம் என்று சொல்லலாமா. என் எழுத்துக்களில் சினிமா பாதிப்பு இருக்கக் கூடாது என்று நினைப்பவன் நான் நிச்சயமாக இளமைக் காலத்திலேயே இருக்க ஆசையில்லை. நினைத்துப் பார்க்கும் போது மாற்றங்கள் தெரிவது ஆதங்கமாக வெளிப்படுகிறது தலை முறை இடைவெளி என்று சமாதானப்படுத்திக் கொள்ள நினைக்கிறேன் வருகைக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  18. @ வெங்கட் நாகராஜ்
    கதை எழுத எனக்கும் விருப்பம்தான் ஆனால் என் கதைகளில் நான் வெளிப்படுவதை தவிர்க்க முடியுமா தெரியவில்லை வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  19. @ ஜீவி
    /இளமை இலட்சியங்களின் பூக்காடு / இலட்சியம் வேறு வாழ்க்கை வேறு வாழ்க்கை இலட்சியங்களின் அடிப்படையில் இல்லாமலும் போகலாம் எல்லோர் எழுதுவதும் கவைக்கு உதவும் எழுத்து என்னும் எண்ணம் எனக்கில்லை அது அந்தக்காலம் எழுதியது கற்பனை அல்ல. நிஜங்களின் உண்மை ஸ்வரூபம் வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  20. ஆஹா... அசரடிக்கும் எழுத்து ஐயா...
    அருமை.

    பதிலளிநீக்கு
  21. ஆரம்பத்தில் வந்த அசத்தல் கவிதையை ரசித்தேன்! நமக்கு வயதாகலாம்! எழுத்துக்கு வயசாகலாம்! ஆனால் மனசுக்கு வயதாகாது! உண்மைதானே ஐயா?

    பதிலளிநீக்கு
  22. இலட்சியம் வேறு; வாழ்க்கை வேறு அல்ல. மனதை ஆக்கிரமிக்கும் இலட்சியங்களை நிறைவேற்றுவதற்குத் தான் வாழ்க்கையே.. இரண்டும் வேறல்ல; ஒன்றில் ஒன்று புதைந்தது.

    வாழ்க்கைப் போக்கு எப்படி மாறிப் போனாலும் கொண்ட இலட்சியம் மாறாது. என்றென்றும் மனசில் அதன் மேம்பட்ட உயர்வுகளுக்காக வாழ்ந்து கொண்டே இருக்கும். கொண்ட இலட்சியங்களுக்கு மாறான வாழ்க்கை அமைந்து போனாலும் எந்த மாறிய வாழ்க்கை அமைப்பின் இடுக்கிலும் அவரவர் இளமையில் கொண்ட இலட்சியங்கள் வாழ்ந்து கொண்டே இருக்கும். இது தான் இலட்சியங்களின் சிறப்பு.

    தான் கொண்ட இலட்சியம் தன்னில் சாக வேண்டும் எனில், தான் கொண்ட இலட்சியத்தின் தவறுகளை தன் வாழ்க்கையில் தரிசிப்பதின் ஒன்றினாலே தன்னில் அதன் சாதல் நிகழும். அப்பொழுது தான் மனதும் அதன் சாதலை மனசார ஏற்றுக்கொள்ளும்.

    பதிலளிநீக்கு

  23. @ பரிவை சே குமார்
    வருகைக்கும்பாராட்டுக்கும் நன்றி சார்

    பதிலளிநீக்கு

  24. @ தளிர் சுரேஷ்
    பதிவின் பின் பாகத்தில் கவிதைபோல ஒன்று எழுதி இருக்கிறேன் ஆரம்பத்தில் வந்த அசத்தல் கவிதை எது என்று புரியவில்லை. வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  25. @ ஜீவி
    நான் கூறுவதை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள விரும்பவில்லை.வாழ்க்கையில் இலட்சியம் இருக்கலாம் வாழ்க்கையே இலட்சியத்தை நோக்கம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை நிறைவேற்ற முடியாத சமயங்களிலும் லட்சியங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. புரிந்து கொள்ள முடியாதைச் சொல்வதுதான் ஜீவியின் சிறப்பு என்றும் தெரிந்தபின் அந்த விவாதத்தை தொடர விரும்பவில்லை. மீள்வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  26. @ தளிர் சுரேஷ்
    ஆரம்பத்தில் வந்த அசத்தல் கவிதை கவனித்துப் பாராட்டியதற்கு ந்சன்றி சார் முந்தைய மறு மொழியில் நாந்தான் சரியாகக் கவனிக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  27. அது எதற்கு அந்தப் பழைய சட்டை.. கிழியாமல் நன்றாக இருந்தாலும் போட்டுக்கொள்ள சரியாக இருக்காது!.. - என்பதாலேயே பலரும் சும்மா (!) இருக்கின்றோம்..

    ஆனால் - எல்லாவற்றையும் கலந்து கட்டி, அடித்துக் கலக்குபவர்களும் உண்டு!..

    கட்டிக் கொடுத்த சோறு வீணாகப் போனாலும் கற்பனைக்குள் பொங்கிய ஊற்று வற்றுவதே இல்லை..

    இப்போதும் இளமை .. - தங்களுடைய எழுத்துக்களில்!..

    நல்விருந்தளித்தமைக்கு மகிழ்ச்சி.. வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  28. மன்னிக்கவும். எல்லோரிடமும் இதையெல்லாம் நான் எழுத மாட்டேன்.

    தங்களிடம் என் எதிர்பார்ப்பு அதிகம். அதுவே எழுதச் சொன்னது.

    அதுவும் தவிர நாம் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டவர்கள். கிட்டத்தட்ட நெருக்கமான வயது கொண்டவர்கள் என்ற எண்ணமும் சேர்ந்து கொண்டது. கொண்ட எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே இருவருக்கும் முக்கியம் என்பதும் முக்கியமாகிப் போனது. போலியாக எதுவும் இருவருக்குமே எழுதத் தெரியாது என்பதையும் சொல்லியாக வேண்டும். எந்த நேரத்தும் இடையில் எப்படிப்பட்ட பள்ளம் விழுந்தாலும் நம்மால் அதை சமன்படுத்திக் கொள்ள முடியும் என்ற திடம் கொண்ட மனசும் காரணம்.

    அடிப்படையில் கலையுள்ளம் வாய்க்கப் பெற்றவர்கள் நீங்கள். இளம் வயதில் மேடை நாடகம் போடவும், நடிக்கவும், நாடக வசனங்கள் எழுதுவும் ஆல் இன் ஆலாக ஜெலித்திருக்கிறீர்கள். சின்ன வயதிலிருந்தே மனசில் படிவதை எழுத்தில் வடிக்கும் ஆற்றலும் பெற்றிருக்கிறீர்கள். இதற்கெல்லாம் சம்பந்தமில்லாத வாழ்க்கைக்காக சம்பாதிப்பதற்காக ஒரு வேலை. அதையும் இன்னொரு பாதையில் நடக்க வேண்டிய நடையாகக் கொண்டு திறன்பட நிறைவேற்றியிருக்கிறீர்கள். அந்த நேரங்களில் உங்கள் கலை உள்ள வெளிப்பாடுகளுக்கு தகுந்த வாய்ப்புகள் இல்லையெனிலும் அந்த உள்ளம் உங்களில் செத்துப் போகவில்லை. தூங்கிக் கொண்டு தான் இருந்திருக்கிறது.

    இப்பொழுது அந்தத் தூக்கம் கலைந்து எழுந்திருக்கிறது. வாய்ப்பு கிடைத்திருக்கிற இந்த நேரத்து வலையுலகில் தனிக்காட்டு ராஜாவாக அரசாட்சி செய்கிறது. வீறு நடை போடுகிறது. ஒரு புத்தகத்தை இந்த வயதில் வெளியிட வைத்திருக்கிறது. தன்னை ஒத்த சகாக்களிடம் அது பற்றிய அபிப்ராயங்களைப் பெற்று பெருமை பட்டிருக்கிறது; வயதாகி விட்டது என்று ஒதுங்கிப் போகாமல் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் நண்பர்களுடன் கலந்து உரையாடி சந்தோஷப்பட வைத்திருக்கிறது. எது பற்றியும் தன் எண்ணங்களைப் பதிய வைக்கிறது. மாறுப்பட்ட கருத்துக்களுக்குய் பதில் சொல்ல வைக்கிறது. இதில் கிடைக்கிற திருப்தியை மனசார நேசிக்கிறது. இளமையில் உங்களில் வாய்த்திருந்த கலையுள்ளம் அதன் துடிப்பு எல்லாவற்றின் நீட்சி தான் இந்த வயதில் இந்த செயல்பாடு.

    தான் கொண்ட இலட்சியம் தன்னில் சாகாது என்பதற்கு இதுவே உதாரணம். இலட்சியம் என்பதற்கு அடையாளம் அது தொடர்ந்து மனசில் வாழும் என்பது தான். அது சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் எல்லாவிதங்களும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும்.

    இப்பொழுது புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

    தங்கள் அன்பான பதிலுக்கு நன்றி, ஐயா!

    பதிலளிநீக்கு

  29. @ துரை செல்வராஜு,
    ஐயா வணக்கம் எதையும் சற்று வித்தியாசமாய்ச் செய்ய வேண்டும் என்ன் உம் எண்ணமே என்னை இப்படியெல்லாம் எழுத வைக்கிறது வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்

    பதிலளிநீக்கு

  30. @ ஜீவி ,
    சற்றே விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி நிறைவேற்ற முடியாத சமயங்களிலும் லட்சியங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதை என்னையே உதாரணம் காட்டிப் புரியச் செய்தமைக்கு நன்றி சார் இலட்சியங்களே இலக்காக இல்லாததாலும் வாழ்க்கை நதியில் அடித்துக் கொண்டு போகப்பட்டதாலும் என் புரிதலில் மாற்றுக் குறைவாக இருந்திருக்கிறது என்று எண்ணுகிறேன் என் எண்ணங்களை விமரிசிப்பதை நான் என்றும் தவறாக எண்ண மாட்டேன் சில நேரங்களில் அதை விரும்பவும் செய்கிறேன் என்மேல் எல்லாவித உரிமைகளையும் எடுத்துக் கொள்ளும் உரிமை உங்களை விட்டால் யாருக்கு இருக்கும் என் மறுமொழியால் தவறான கருத்து எழுந்திருக்குமானால் மன்னிக்கவும் நீண்ட பின்னூட்டத்துக்கு மீண்டும் நன்றி சார்

    பதிலளிநீக்கு
  31. உண்மையில் தங்களின் அன்றைய எழுத்துக்களை வாசிக்கும்போது பிரமிப்பாக உள்ளது. அருமையான எழுத்து நடை, வாசிப்பவர்களை நிச்சயம் சுண்டி இழுக்கும்.

    முதுமையிலும் காதல் வராதா என்ன அல்லது நினைவுகள் தான் அவ்வளவு எளிதில் அழிந்திவிடுமா? உங்களுடைய பழைய நினைவுகளை எழுத்தாக்கி அளியுங்கள்,வாசிக்க ரசிகர்களாகிய நாங்கள் ரெடி!!!

    பதிலளிநீக்கு

  32. @ அருள்மொழி வர்மன்
    என் பழைய அனுபவங்களை பதிவுகளில் நிறையவே எழுதி இருக்கிறேன் காதல் பற்றியும் நிறைய எழுதியாய் விட்டதுஎழுத்துக்களில் வித்தியாச முயற்சிகள் பலவும் செய்திருக்கிறேன் நேரம் கிடைப்பின் என் பழைய பதிவுகள் சிலவற்றைப் பாருங்கள் சாதாரணன் ராமாயணம் என்று ஆறு காண்டங்களை ஒரே வாக்கியத்தில் எழுதி இருக்கிறேன் பழைய சுட்டிகள் தேவைப் பட்டால் கேளுங்கள் அனுப்பி வைக்கிறேன் உங்கள் மின் அஞ்சல் முகவரி தேவை

    பதிலளிநீக்கு