சனி, 11 மார்ச், 2017

வேலை தேடவும் முன்னேறவும் நேர்காணல் சந்திப்பு

                            வேலைதேடவும்  முன்னேறவும்  நேர்காணல் சந்திப்பு



நேர்காணல் பற்றி நான் கூறும்போது அவற்றில் இருக்கும்  செய்திகள் என அனுபவத்தை பேஸ் செய்ததாக இருந்தால் உதவியாக இருக்கும்  என்று தோன்றியது
நேர்காணல் பற்றிய ஒரு காணொளியையும் இத்துடன்  இணைக்கிறேன் இதில் காண்பதுபோல் நேர்காணல்களில் செய்யக் கூடாது


     

நான்  என் வாழ்வில் ஓரிரு முறைதான்  இண்டெர்வியூவுக்குப் போய் இருக்கிறேன்  இருந்தாலும்  அந்த ஓரிரு அனுபவங்களே நிறையச் சொல்லும்  இப்போதெல்லாம் ஒரு நேர்காணலை எவ்விதம்  அணுக வேண்டும்  என்பது குறித்த நிறைய கைடன்ஸ் புத்தகங்கள் வந்து விட்டன. நேர்காணல் குறித்து நானே முன்பே பதிவிட்டிருக்கிறேன் ஆனால் அவை ஆண்டுகளுக்கு முந்தையது பலரது நினைவில் இருக்காது பதிவுலகில் நேர்காணலுக்குச் செல்லும்  வயதினர் மிகக் குறைவாகவே  பெரும்பாலானவர் ஓய்வு பெற்ற ஜாம்பவான்கள் அவர்களுக்கும்  இந்தக் குறிப்புகள் அவர்களைச் சார்ந்தவருக்குக் கூற உதவலாம்
என் முதல் இண்டெர்வியூ HINDUSTAN AIRCRAFT LTD  என்ற அந்தக்கால பெங்களூர் கம்பனிக்கு பயிற்சியில் சேருவதற்கு ஆனது. மூன்றாண்டுகள் பயிற்சி வெற்றிகரமாக முடித்தால் மெகானிக் பீ என்னும்  பதவி கிடைக்கும்  அந்தக் காலத்தில் மெகானிக் என்றாலேயே ஏதோ காருக்கு அடியில் படுத்துச் செய்யும் வேலை என்னும் அளவே தெரிந்து வைத்திருந்தேன்  எப்படியாவது ஒரு வேலையில் சேர வேண்டும்  என்னும்  ஆர்வம்  மிகுந்திருந்தது அந்தக் கால வழக்கப்படி நானும்  ஒரு அப்ளிகேஷன்  எழுதினேன்  அதைப் பார்க்கிறவர் என்  மேல் இரக்கப்பட்டு வேலை தருவார்கள் என்னும்  நம்பிக்கை.


 மனு செய்யும் விதமே இப்போது முற்றிலும் மாறியிருக்கிறது. அந்தக் காலத்தில் மனு செய்பவர் தங்கள் குடும்ப சூழ்நிலையை விளக்கி, இவர் வேண்டும் அந்த வேலை எவ்வளவு முக்கியமானது என்று கண்ணீர் வருத்தாத குறையாக எழுதி கடைசியில் I WILL TRY MY LEVEL BEST TO SATISFY MY SUPERIORS AND REMAIN FAITHFUL FOR EVER “ என்று முடிப்பார்கள். இப்போதெல்லாம் அவரவர் தகுதிகளைக் கூறி RESUME என்ற பெயரில்
சில தாள்களை அனுப்புகிறார்கள் அந்தத் தாள்களில் அவர்களைப் பற்றி இந்திரன்  சந்திரன் என்னும் வகையில் எழுதுகிறார்கள் பிற்காலத்தில் நானே வேலைக்கு வருபவர்கள் சிலரை நேர்காணல் செய்யும்  வாய்ப்பும் இருந்ததுண்டு. வருபவர்கள் எழுதிக் கொண்டு வரும்  செய்திகளே அவர்களுக்கு எதிராக முடியும்  வாய்ப்பும் உண்டு
 நேர்காணலுக்குச் செல்பவர்களை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். முதன் முதலில் வேலை தேடி செல்பவர் தான் இப்போதிருக்கும் நிலையை மேம்படுத்திக் கொள்ள செல்பவர் முதன் முதலில் வேலை தேடிச் செல்பவர் அதிகம் நெர்வஸாக இருக்க சாத்தியக் கூறுகள் அதிகம். நேர்காணலில் தங்கள் அறிவை சோதனை செய்கிறார்கள் என்று மட்டும் எண்ணக் கூடாது. கால்மணி முதல் அரை மணிக்குள் ஒருவரது அறிவை சோதித்து தெரிந்து கொள்ள முடியாது. அவர்கள் நோக்கமும் அதுவல்ல. உங்கள் அறிவை தெரியப் படுத்தும் சான்றிதழ்கள் அவர்களிடம் கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் ஆட்டிட்யூட்  மற்றும் பிறரை எப்படி எதிர் கொள்கிறீர்கள் என்பதை அறிய அவர்களது முயற்சியே. நேர்காணல். எந்த நிறுவனத்துக்கு வேலைக்கு மனு செய்திருக்கிறீர்களோ அந்த நிறுவனம் பற்றி சில விவரங்களாவது தெரிய வேண்டும். நான் முதன் முதலில் என் பதினேழாவது வயதில் பள்ளி இறுதி முடித்து HAL-ல் மெகானிக் பணிக்கான பயிற்சிக்குத் தேர்வு செய்ய நேர்காணலுக்கு அழைக்கப் பட்டிருந்தேன். நான் இருந்தது வெல்லிங்டனில். நேர்காணல் மதராசில். திரும்பி வருவதற்கான பணம் மட்டும்தான் என்னிடம் இருந்தது. ஆனால் உலகை வெல்லும் தைரியம் நிறையவே இருந்தது. நான் பட்ட பாடுகள் பற்றிக் கூறப் போவதில்லை. நேர்காணலுக்கு வந்திருந்தவர்களில் காலில் செருப்புடன் டை அணிந்து வந்தவன் நான் மட்டுமே. தமிழ்வழிக் கல்வியே படித்திருந்தாலும் ஆங்கிலத்தில் ஓரளவு சரளமாக என்னால் பேச முடிந்தது. என்னைப் பற்றியும் என் குடும்பத்தைப் பற்றியும் கேட்டவர்கள் நான் காம்பொசிட் மாத்ஸ் படித்தவன் என்று தெரிந்து என் அறிவை சோதிக்க பித்தாகோரஸ் தீரம் பற்றிக் கேட்டார்கள். நான் தமிழ் வழிக்கல்வியில் படித்ததால் தமிழிலேயே பித்தாகோரஸ் தேற்றம் கூறினேன்.தமிழ்வழிக் கல்வி படித்தும் ஆங்கிலத்தில் என்னால் உரையாட முடிவது கண்டு அவர்கள் அதே தீரத்தை(theorem) ஆங்கிலத்தில் சொல்ல முடியுமா என்று கேட்டார்கள். நான் ஒரு தாள் கேட்டு வாங்கி முடிந்தவரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறினேன்.அவர்கள் அப்போதே
கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். இதை எதற்கு கூறுகிறேன் என்றால் நாம் படிப்பது தேர்வுக்குச் செல்பவர்களுக்கு முக்கிய தேவை, நம்மால் முடியும் என்ற நம்பிக்கை.
தேர்வில் பாஸ்செய்ய மட்டுமல்ல. படிப்பதைப் புரிந்து கொண்டால் அதை விளக்கவும் முடியும். என்ன.. என்னால் அது முடியும் என்ற நம்பிக்கை வேண்டும் அந்த நேர்காணலில் நான் தேர்வு பெற்றேன் என்று கூறவும் வேண்டுமா. ? ஆனால் அதுவே விஷயம்  தெரியாமல் ஓவர்கான்ஃபிடென்சாக மாறினால் சொதப்பலில் முடியும்
 அதற்கும்  ஒரு உதாரணம்  கூறுகிறேன் 
நான் HAL-ல் வேலையிலிருக்கும்போது  மதராஸ் ப்ரேக்ஸ் இந்தியா நிறுவனத்துக்கு எஞ்சினீரிங் இன்ஸ்டரக்டர்ஸ் என்ற பணிக்காக வந்த விளம்பரம் கண்டு மனு செய்தேன். என் மனுவில் நான் பயிற்சியின்போது சென்ற இடங்களிலெல்லாம் தேர்ச்சி உள்ளவன் போல் எழுதி இருந்தேன். என்னை நேர்காணல் செய்ய வந்தவர் ஒரு ஆங்கிலேயர். என் மனுவைப் படித்த அவர் எனக்கு டூல் டிசைன் செய்ய வருமா என்று
கேட்டார். இரண்டே வாரம் அங்கு பயிற்சியில் இருந்தவன் நான். டூல் டிசைன் என்றால் என்ன செய்கிறார்கள் என்று தெரியும் அவர் கார் எஞ்சினின் ஒரு பாகத்தைக் காட்டி அதற்கு என்னால் டூல் டிசைன் செய்ய முடியுமா என்று கேட்டார். நேர்காணல் நடக்கும் நேரத்தில் எந்தக் கொம்பனாலும் டூல் டிசைன் செய்ய முடியாது என்று எனக்குத் தெரியும். என்னை டிசைன் செய்யச் சொல்ல மாட்டார்கள் என்றும் தெரியும். ஆகவே வீராப்பாக என்னால் முடியும் என்றேன். எவ்வளவு நேரமாகும் என்றார்கள் நான் குத்து மதிப்பாக பதினாறு மணி நேரம் ஆகும் என்றேன். அந்த ஆங்கிலேயருக்கு நான் புருடா விடுகிறேன் என்று நன்றாகத் தெரிந்து விட்டது. ஒரு வாரம் எடுத்துக் கொண்டாலும் என்னால் முடியாது என்று கூறியவர் முகம் சிவக்க எனக்கு எந்த பணியும் தர முடியாது என்று கூறினார். முகத்தில் அடித்தாற்போல் எந்த வேலையும் கிடையாது என்று சொன்னது எனக்கு பெருத்த அவமானமாக இருந்தது. நானும் என் பங்குக்கு எந்தப் பணியாவது கேட்டு நான் வரவில்லை, எஞ்சினீரிங்.இன்ஸ்ட்ரக்டர்  பதவிக்கு மட்டுமே மனு செய்திருந்தேன். அது மட்டும் இல்லை என்றுதான் அவர்கள் கூறலாம் என்று கோபமாகக் கூறி வெளியே வந்து விட்டேன். நேர்காணலில் தவறான அணுகு முறைக்கு இது ஒரு சாம்பிள்

என்ன அன்பர்களே இதே தலைப்பில் இன்னும்  நிறைய எழுதலாம் என் அனுபவங்களையே நான்  விள்க்கிப் பதிவிட்டிருக்கிறேன்

இப்போதெல்லாம்  முதலில் சேர்ந்த நிறுவனத்திலேயே தொடர்வது அருகி விட்டதுநாமும் காலத்துக்கு ஏற்றபடி மாறவேண்டாமா

ரசிக்க கொசுராக ஒரு காணொளி ஆனால் இது நேர்காணல் பற்றியது அல்ல 
 
 

     








           

42 கருத்துகள்:

  1. அந்தக் கால நேர்காணல் முறைகள் இந்தக் காலத்துக்குப் பொருந்தாது என்றே கூறவேண்டும்! நிறைய வித்தியாசங்கள். நானும் சில நேர்காணல்களுக்குச் சென்றிருக்கிறேன். அவற்றை நினைவு படுத்தியது உங்கள் பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்றிரண்டு வித்தியாசங்களைப் பகிர்ந்திருக்கலாமோ வருகைக்கு நன்றி ஸ்ரீ

      நீக்கு
  2. நல்ல அனுபவம் ஐயா.
    நானும் அபுதாபியில் நேர்காணலுக்கு போய் இருக்கிறேன் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு அரபியில் பதிலும், அரபியில் கேள்வி கேட்டு ஆங்கிலத்தில் பதிலும் கேட்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது மொழி அறிவைச் சோதிக்கவா அல்லது அவர்களுக்கு மொழி புரியாததாலா வருகைக்கு நன்றி ஜி

      நீக்கு
    2. இரண்டு மொழியும் தெரிகிறதா ? என்ற சோதனை ஐயா

      நீக்கு
  3. நான் கூட நேர்காணல் பற்றி பதிவு எழுத எண்ணியிருந்தேன். திரு ஸ்ரீராம் அவர்கள் சொல்லியிருப்பதுபோல தற்கால நேர்காணலுக்கும், அந்த கால நேர்காணலுக்கும் அதிக வித்தியாசம் உண்டு. தற்போதெல்லாம் முதலில் தொலைபேசியில் நேர்(?)காணலை நடத்திவிட்டு பின்னர் நேரே வரும்படி அழைக்கிறார்கள். இருப்பினும் தாங்கள் தந்திருக்கும் அறிவுரைகள் எல்லோருக்கும் பொருந்தும். எழுத்தாளர் சுஜாதா கூட இந்த நேர்காணல் பற்றி எழுதியிருப்பார்.
    நேர்காணல் காணொளியைக் கண்டு வயிறு வலிக்க சிரித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த முறை நேர்காணலாயிருந்தாலும் நமக்கு விஷயம் தெரிந்திருக்க வேண்டும் தன்னம்பிக்கையும் வேண்டும் பாடி ஆர்ட் பார்த்தீர்களா வருகைக்கு நன்றி ஐயா

      நீக்கு
  4. வங்கித் தேர்வுகளில் எழுத்துத் தேர்வு முடிந்ததும் நிறைய நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொண்டிருக்கிறேன். தற்சமயம் எப்படி என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேர்வு முடிவுகள் பற்றித் தெரிவிக்கவில்லையே வருகைக்கும் செய்திக்கும் நன்றி மேம்நானும் அம்மாதிரித் தேர்வு ஒன்றுக்குச் சென்றிருக்கிறேன் மைக்கோவில் நடந்தது. பதிவு நீளம் கருதி பகிரவில்லை

      நீக்கு
  5. பயனுள்ள பதிவு ஐயா
    நேர்காணல் அனுபவத்தினை சந்தித்ததில்லை ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேர்காணல் இல்லாமலேயே பணியில் அமர்ந்து விட்டீர்களா வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  6. பணி ஓய்வு பெற்றுவிட்டவர்களுக்கு உங்கள் பதிவினால் என்ன பயன் ? ஆனால் அழகான ஒரு காணொளியை கொடுத்தீர்களே, அதற்கு வாழ்த்துக்கள். உங்கள் இளமையின் ரகசியம் புரிந்தது.
    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது பற்றிப் பதிவில் இருக்கிறதே காணொளிப்பகிர்வுக்கும் இளமையின் ரகசியத்துக்கும் என்னசார் சம்பந்தம் வருகைக்கு நன்றி

      நீக்கு
  7. நேர்காணல் பற்றி அறியாதோர்
    அறிந்த பின் அங்கு சென்றால்
    ஐம்பது விளுக்காடு (50%) வெற்றி.
    எஞ்சிய
    ஐம்பது விளுக்காடு (50%) வெல்ல
    நேர்காணலுக்கு ஏற்றவாறு - தம்மை
    தயார் செய்து செல்ல வேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள் வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  8. எனது நேர்காணலில் அவர்கள் திகைத்த அனுபவம் உண்டு...(!)

    நேரம் இருக்கும் போது பகிர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதே பகிர்ந்திருக்கலாம். ஒரு வேளை அதற்கு ஏற்ற குறளும் திரைப்பாடலும் தேடுகிறீர்களோ வருகைக்கு நன்றி டிடி

      நீக்கு
  9. நல்ல பகிர்வு. பயனுள்ளதாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூடியவரை பயனுள்ள பதிவுகளைக் கொடுக்க முயற்சிக்கிறேன் வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  10. நல்ல அனுபவம் ஐயா....
    பயனுள்ள பகிர்வாய்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாம் அறிந்ததைப் பகிர்கிறேன் வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  11. மிகவும் பயனுள்ள பதிவு! உங்கள் அனுபவத்துடன்!

    துளசி: ஓரிருமுறை நேர்காணலுக்குச் சென்றதுண்டு. ஆசிரிய வேலைக்கு என்பதால் பிற வேலைகளைப் போல பெரிய நேர்காணல் இல்லை. வகுப்பு எடுக்கச் சொல்லித் தேர்ந்தெடுப்பார்கள் அவ்வளவே. இப்போதெல்லாம் கல்லூரியில் படிக்கச் சேர்வதற்குக் கூட நேர்காணல்கள் இருப்பது தெரியவருகிறது குறிப்பாக வெளிநாடுகளில் படிக்கச் செல்வதற்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசிரிய வேலைக்குச் செல்லும்போது மாணவர்களே இல்லாமல் வகுப்பு எடுக்கச் சொல்வார்களாமே அதுவும் சின்ன வகுப்புகளுக்குத் தேர்வாகும் போது ஆடிப்பாடி சிறார்களுக்குப் பாடம் எடுப்பதைக் காட்டல் கடினம் தானே வருகைக்கு நன்றி

      நீக்கு
  12. இப்போது,அரசுத் துறைகளில் நேர்காணலே ஒரு நாடகம் போலாகி விட்டது,பணம்தான் வேலையை செய்கிறது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசுத் துறை நேர்காணல் பற்றி அதிகம் தெரியாது வருகைக்கு நன்றி ஜி

      நீக்கு
  13. உங்கள் அனுபவத்தை சுவாரஸ்யமாக கூறி இருக்கிறீர்கள். நமக்கே நாம் உண்மையாக இல்லாவிட்டால்
    அது 'நேர்க்கோணல்' ஆகிவிடும். நல்ல ஆளுமையை வளர்த்துக் கொண்டால் வெற்றிக்கு வழிவகுக்கும்,
    உபயோகமானவை உங்கள் குறிப்புகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் வெற்றி பெற்ற ஆனால் ஏமாந்த நேர்காணலும் வேண்டாமென்று ஒதுக்கிய நேர்காணாலும் அனுபவத்தில் உண்டுபிறிதொரு சமயம் நேர்ந்தால் பகிர்வேன் வருகைக்கு நன்றி ஜி

      நீக்கு
  14. நேர்காணல் கான்செப்ட் காலங்கள் ஆனாலும் மாறாது. நேர்காணலின் PURPOSE TO BRING BEST OUT OF THE CANDIDATE AND THEN JUDGE. சில நேர்காணலில் எனக்கு ஏமாற்றம் நேர்ந்திருக்கிறது. நேர்காணலுக்கு நல்ல தயாரிப்பு அவசியம். அதுவும் நாமே, இந்த பதிலுக்கு எந்த மாதிரியான கேள்விகள் வரும் என்றெல்லாம் நமக்கே கேட்டுக்கொண்டு அதற்கான விடையையும் தயாரித்துக்கொண்டால் பெரும்பாலும் நேர்காணல் சுலபம்தான். நேர்மறைச் சிந்தனைகளையே நேர்காணலில் விதைக்கவேண்டும். ஏனோ தானோவென்று சென்றால் தோல்வி நிச்சயம், எத்தகைய அனுபவம் பெற்றிருந்தாலும். இரண்டுக்கும் உதாரணங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.

    சில சமயம் நேர்காணலில், நம்மை அலட்சியமாகக் கேள்வி கேட்பார்கள். அதுவும் நம்மைச் சோதிக்கும் முயற்சி என்று நேர்மறையாக எடுத்துக்கொண்டால் நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு ஜோக் படித்த நினைவு. ஒரு நேர்காணலில் தேர்வுக்கு வந்தவரை கெட் அவுட் என்பார்கள் தேர்வுக்குச் சென்றவர் வாசல் வரை சென்று மறுபடியும் வந்து சரியா எனக் கேட்பாராம் ஒரு நேர்காணலில் உங்கள் கீழ் வேலை செய்யும் பணியாளருக்கு ஒரு நாள்விடுமுறை கொடுக்க நீங்கள்மறுக்கிறீர்கள் அவர் கோபம் கொண்டு ஒரு திருப்பத்டில் உங்களுக்குத் தெரியாமல் உங்களைத் தாக்குகிறார் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டார்கள் அனுபவங்கள் கதை சொல்லும் சில கேள்விகளுக்குச் சரியான பதில் இதுதான் என்று உறுதியாகக் கூற முடியாது வருகக்கு நன்றி சார்

      நீக்கு
  15. 89ல் முதல் முதலில் பெரிய கம்பெனி ஒன்றில் தேர்வு + நேர்காணல் இரண்டையும் மிகவும் நிறைவாகச் செய்து முதலில் வேலையில் சேர்ந்தது என்றுமே மறக்க இயலாது. எல்லோரும் செய்வதுபோல், எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு மட்டும், அதற்குத் தயார் செய்து செல்லாததால் சொதப்பி, தவறான பதிலைச் சொல்லி நஷ்டப்பட்டேன். வேலையிலும் சேர்ந்தேன்.

    89ல், அபுதாபி ராணுவத்தின் கணிணிப் பிரிவுக்கான நேர்காணலில் (சென்னை சோழாவில் நடந்தது), பெரிய அளவிலான கேள்விகளோ, சோதனைகளோ இல்லை. அதனால், வேலை கிடைத்தபோதும் சேருவதற்கு அத்தனை விருப்பம் இல்லாமல் இருந்தது.

    94ல், துபாயில், எடிஸலாட் (நம்ம ஊர் பி.எஸ்.என்.எல் போல) வேலைக்கான நேர்காணல், மிகவும் கடினமாக இருந்தது. 7-8 பேர் கொண்ட குழு நேர்காணல் நடத்தியது. அதில் வெற்றி பெற்றது மனதுக்கு நிறைவாக இருந்தது. அப்போதுதான், இவ்வளவு வசதிகளோடு ஒரு பணியிடம் இருக்கமுடியும் என்றே தோன்றியது.

    99ல், கல்ஃப் ஏர்லைன்ஸில் கணிணிப் பிரிவுக்கான நேர்காணலும் CHALLENGINGஆக இருந்தது. நல்ல கேள்விகள் கேட்டு அதில் நாம் நிறைவாகச் செய்து வெற்றிபெறும்போது அதனுடைய திருப்தியே தனி.

    மேலே சொன்ன மூன்றிலும் தேர்வுபெற்றாலும், நான் பணியில் சேரவில்லை. (DESTINED NOT TO JOIN என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்)

    இத்தகைய நேர்காணல் அனுபவத்தை நினைவுகூற வைத்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்பதிவு உங்கள் நினைவுகளைக் கிளறி விட்டாலும் சுகானுபவம்தானே வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  16. உங்கள் தன்னம்பிக்கை, துணிச்சல், தெளிவு தெரிகிறது பதிவில்.
    நேர்காணல் சமயம் உதவும் குறிப்புகள் இருக்கிறது.
    பயனுள்ள பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக்காலத்தில் அவைதான் என் மூலதனம் வருகைக்கு நன்றி மேம்

      நீக்கு
  17. பதில்கள்
    1. காணொளிகளையும் பார்த்து ரசித்ததற்கு நன்றி மேம்

      நீக்கு
  18. இப்ப எல்லாம் நேர்காணல் மாறிவிட்டது கடந்த கால அனுபவத்தை மீட்டிப்பாக உதவியது உங்களின் பகிர்வு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னதான் மாறிவிட்டாலும் நேர்காணலுக்குச் செல்பவர்களுக்கு இது உதவும் என்றே தோன்றுகிறது வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  19. மிகவும் விளக்கமான பதிவு ..உண்மையில் இந்த மாதிரி 90 களில் வலைப்பூக்கள் போன்றவை இருந்திருந்தா இவை போன்ற நேர்காணல் பதிவுகள் எனக்கு உதவியாக இருந்திருக்கும் ..நான் சொதப்பாத இடமேயில்லை ..போஸ்ட் கிராஜுவேஷன் படிக்கும்போது நான் செய்த ப்ராஜக்டை விளக்க வேண்டிய நேரத்தில் கூட தலையை குனிந்தவாறு சொன்னேன் எங்க ப்ரொபஸர் திட்டினார் ..
    இங்கே வெளிநாடுகளில் self improvement மேனேஜ்மண்ட் என்று வகுப்புகள் இப்போ ஸ்பெஷலா நடத்தறாங்க ..நேர்காணலுக்கு நம்மை தயார் படுத்துவது மற்றும் தயக்கமின்றி உரையாடுவது அவர்கள் சொல்லித்தரங்க .
    என் மகள் இப்போ 11 அம வகுப்பு ஆனால் தனக்கு ஒரு எக்ஸ்பீரியன்ஸ் தேவை என்று 6த் form வேறு இரு பள்ளிகளில் இன்டெர்வியூ போகணும் என்றாள் ..எதுக்குன்னு கேட்டப்போ சொன்னா //அம்மா இதெல்லாம் நம்மை தயார்படுத்த //
    இந்த அறிவு அப்போ எனக்கிலையேன்னு சிரிச்சுக்கிட்டேன் ..
    இங்கே இங்கிலாந்தில் resume /cv அட்ராக்ட்டிவா இருக்கணும்னு சொல்வாங்க ..அதுவும் இன் கேள்விகளா இருக்கும் அப்ளிகேஷன்ல .குழப்பற மாதிரியே கேள்விகள் வரும் ..//நீ மிகவும் கூச்ச சுபாவம்//டோட்டலி அக்ரீ .பார்ஷியலி அக்ரீ ,நோ ஐ டோன்ட் அக்ரீ வித் திஸ் ஸ்டேட்மென்ட் இருந்தது ..உண்மையை மட்டுமே சொல்லணும்னு நான் டோட்டலி அக்ரீனு போட்டு வச்சேன் :) எனக்கு வேலை கிடைக்காத காரணத்தை அவங்க இதை மேற்கோள் காட்டி அனுப்பியிருந்தாங்க :) அது நினைவுக்கு வந்தது இந்த பதிவை பார்த்தப்போ
    காணொளிகள் அருமை அதுவும் அந்த ஆர்ட் செம ..ஓநாய் இறுதியில் வருவது அட்டகாசம் ,.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஏஞ்செலினுக்கு. என் பதிவுக்கு வந்தது மகிழ்ச்சி. /..//நீ மிகவும் கூச்ச சுபாவம்//டோட்டலி அக்ரீ .பார்ஷியலி அக்ரீ ,நோ ஐ டோன்ட் அக்ரீ வித் திஸ் ஸ்டேட்மென்ட் இருந்தது ..உண்மையை மட்டுமே சொல்லணும்னு நான் டோட்டலி அக்ரீனு போட்டு வச்சேன் :) எனக்கு வேலை கிடைக்காத காரணத்தை அவங்க இதை மேற்கோள் காட்டி அனுப்பியிருந்தாங்க :) அது நினைவுக்கு வந்தது/அந்த வேலை கிடைக்காததில் வருத்தமா?நாமாக இது சரி இது தவறு என்று எண்ணிக்கொண்டு உண்மைக்குப் புறம்பான பதில் கூறுவது தவறு என்று நினைக்கிறேன் இழப்பு அவர்களுக்குத்தான் தொடர்ந்து வரவும் என் பதிவுகள் உங்களை ஏமாற்றாது

      நீக்கு