சனி, 9 ஜூன், 2018

என் வழி தனி வழி


                                                       என் வழி தனி வழி
                                                       ----------------------------
உனக்கு என்ன தெரியும் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். இப்பதிவு எனக்கு என்ன தெரியும் என்பதை கேள்வி பதிலாக எழுதி நான் கற்றதும் பெற்றதும் என்ன என்று தெரிவிக்கிறேன் இந்தக் கேள்விகளும் பதில்களும் சிலருக்குக் குதர்க்கமாய்த் தெரியலாம்..ஆனால் என்ன செய்ய. ? இது என் வழி... தனி வழி...! கற்றதும்  பெற்றதும் என்றவுடன்  பலருக்கு சுஜாதாவின் எழுத்துதான்நினைவுக்கு வரும்   அதைப் போக்கவே தலைப்பை மாற்றலாமா என்று இருக்கிறேன்  தலைப்பில் என்ன இருக்கிறது அது நன்றாக இருந்தால் தான்  சிலர் வாங்கவே செய்வார்களாம்  முந்தானையில் முடிக்கவோ தெரியவில்லை
 கேள்வி:- உனக்கு எந்தக் கடவுளைப் பிடிக்கும். ?
பதில்:-   எனக்கு எல்லாக் கடவுளையும் பிடிக்கும். ஏனென்றால் கடவுள் என நம்பப் படுகிறவர் நல்ல குணங்களின் சேர்க்கை.அந்த நல்ல குணங்களின் சேர்க்கையை என்னுள் கொண்டு வரமுடியுமானால் நானும்கடவுள். என்னுள்ளும் அவர் இருக்கிறார்.
கேள்வி:- அப்போது கடவுள் என்பவருக்கு ஒரு வடிவம் இல்லையா.?
பதில்:-   கடவுள் என்பதே ஒரு concept.வேதங்களிலும் உபநிஷத்துக்களிலும் குறிப்பிடப் படும்  பிரம்மன் ஆத்மன் புருஷன் போன்றவை எல்லாம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மூல ஆதார சக்தியைக் குறிப்பிடும் குறியீடுகளே தவிர கடவுள் என்பவரைப் பற்றிக் கூறுவதல்ல. அப்படிப்பட்ட சக்தியை நம்மால் ஒருமுகப் படுத்தி நினைக்க முடியாது என்பதால்தான், நம்மைப் போன்ற உருவங்களுடன் ஆன கடவுளைப் படைத்து அவர்களுக்கு ஆயுதங்களும் கொடுத்து அருளுபவர் என்றும் தண்டிப்பவர் என்றும் நம்பவைத்து நாம் நற்செயல்கள் புரியவும்  நம்மைக் கட்டுப் படுத்தவும் பயத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி வழி வகுத்துள்ளனர்.
கேள்வி:- இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா.?
பதில்:- பிரம்மா விஷ்ணு சிவன் ஆகியோர் முறையே ஆக்கல், காத்தல் அழித்தல் எனும் செயல் புரிபவர்களாக சித்தரிக்கப் படுகிறார்கள். இதையே சக்தியின் வெளிப்பாடாகவும் இருத்தலாகவும் மறைதலாகவும் கொள்ளலாம் இதையேmanifestation, establishment and withdrawal  ஆக எண்ணலாம் ஒரு சக்தியிடம் இருந்து வெளிப்பட்டு இருப்பதுபோல் இருந்து மறைவதைக் குறிக்கும்
கேள்வி: -இந்த விளக்கத்துக்கு முந்தையதே தேவலாம் போலிருக்கிறதே .உதாரணமாக ஏதும் கூற முடியுமா. ?
பதில்:- நான் ஓரிடத்தில் படித்ததைக் கூறுகிறேன் இதை விளக்க பிரதானமாக இரண்டு உதாரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று தூக்கம். மற்றொன்று மண்பாண்டம். ஆழ்ந்த தூக்கத்தில் நம் எண்ணங்கள் ஓய்ந்து விடுகின்றன. ஆனால் மறுபடி விழித்தவுடன் எண்ணங்கள் தோன்ற” ஆரம்பித்து விடுகின்றனஉருவாவது இல்லை. மனதின் வெளிப்பாடு (manifest) எண்ணங்கள். அப்படித் தோன்றி எண்ணங்கள் நம் மனதில்நிலையாக’ இருப்பது போல இருக்கின்றன. ஏன் போல”? மறுபடி தூங்கினால் அவை இருக்காது. நமது மனதினுள்ளே சென்று ஒடுங்கி (லயித்துwithdraw) விடுகின்றன. அதே போல மண்ணாய் இருந்ததுஒரு பானையாக மாறி பின் உடைந்தாலோ நீரில் கரைந்தாலோ மறுபடி மண்ணோடு மண்ணாய் ஒடுங்கி விடுகிறது

கேள்வி:- நாம் கேள்விப்படும் ஆண்டவனின் அவதாரங்கள் எல்லாம் பொய்யா.?

பதில் :- பொய் என்று ஏன் எண்ண வேண்டும்.?இந்தமாதிரி அவதாரக் கதைகள் மூலம் மக்கள் நல் வழிப்படுவார்களானால் அந்த நம்பிக்கைகள். இருந்து விட்டுப் போகட்டுமே. நான் கற்றதும் பெற்றதும் இதனால் என்னவென்றால் வாழ்க்கை முறை என்று எண்ணப்படும் நமது சனாதன மதத்தின் அடி நாதமாக இருக்கும் வேதங்களிலோ, உபநிஷத்துக்களிலோ இறைவனுக்குப் பெயர் கொடுத்து வழி பாடு இருந்ததாகத் தெரியவில்லை.

கேள்வி:- வேதங்களையும் உபநிஷத்துக்களையும் படித்திருக்கிறாயா.?

பதில்:- அவை படித்தறிந்து கொள்ளக் கூடியதல்ல. கேட்டறிந்து வருவதே ஆகும். படித்தும் கேட்டும் அறிந்தவரை நான் புரிந்து கொண்டதைத்தான் சொல்ல முடியும்

கேள்வி. :- வேதங்களில் இந்திரன் ,சூரியன் வருணன் என்னும் பல இறை வடிவங்களுக்கு செய்ய வேண்டிய வேள்வி முறைகளும் , கிரியைகளும் மந்திரங்களாகச் சொல்லப் பட்டிருக்கிறதாமே. உண்மையா.?

பதில்.:- நான் வேதம் படித்ததில்லை. மேலும் இந்த மாதிரியான விஷயங்கள் பற்றிக் கூற வேண்டுமானால். இவை ஆதி காலத்தில் நிர்ணயிக்கப்பட்டபோது இருந்த நடை முறைகள் இந்த காலத்துக்கு ஒத்துவருமா என்ற என் கேள்வியே பதிலாக இருக்கும். ஏன் என்றால் வேதங்களும் உபநிஷத்துக்களும் வாய்வழியே வந்தவை. காலத்துக்கு ஏற்றபடி இடைச் செருகல்கள் இருக்கலாம். வேதங்களைத் தொகுத்தவர் வேத வியாசர் என்று கூறப் படுகிறது. அவர் கூற அவரது சீடர்கள் மனதில் வாங்கி அவற்றை பலருக்கும் பரப்பி இருக்க வேண்டும். ஒரு விஷயம் வாய்வழியே பரப்பப்படும்போது நிறையவே மாற்ற்ங்களுக்கு உள்ளாகலாம். ஏன் ,அண்மைக்கால பாரதியின் பாடல்களிலேயே பாடபேதம் இருப்பது புரிகிறது. எந்தவிதமான பராமரிப்புகளும் இல்லாத வாய் வழிவந்த வேதங்கள் அவற்றின் ஒரிஜினல் ஃபார்மில் இருக்குமா.? நான் இவை எல்லாம் சரியில்லை என்று சொல்லவில்லை. ஆனால் சரியாக இல்லாமலிருக்க நிறையவே சாத்தியக் கூறுகள் இருக்கின்றன
.
கேள்வி:- பட்டும் படாமலும் பதில் சொல்லிவிடக் கூடாது. எதையாவது சொல்லி மாட்டிக் கொண்டுவிடக் கூடாது என்னும் எச்சரிக்கையா.?

பதில்:-  நான் தப்பித்துக் கொள்ள பதில் சொல்லவில்லை. ஏற்கனவே சொன்னதுபோல் நிறைய விஷயங்கள் ஆதியில் சொன்னதுபோல் இல்லையோ எனத் தோன்றுகிறது. கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்றபடி நிறையவே மாற்றங்கள் இருக்கிறது. உதாரணத்துக்கு வியாசரால் இயற்றப்பட்ட பாரதக் கதை 8000- அடிகளைக் கொண்ட தாக பாரதத்தின் ஆதிபர்வம் கூறுவதாகவும் அது வைசம்பாயனரால் ஓதப்பட்டபோது 24000 அடிகளிக் கொண்டிருந்ததாகவும் அதன் பிறகு உக்கிராசராவ சௌதி ஓதியபோது 90000 அடிகளைக் கொண்டிருந்ததாகவும் விக்கிப் பீடியாவில் படித்தேன். இந்த 8000 அடிக் கதை 90000 அடிகளாகும் போது அந்தந்த காலத்துக்கு ஏற்றபடி மாற்றங்கள் இருக்கத்தானே வேண்டும். அதேபோல் கி.மு. 8-ஆம் நூற்றாண்டுக்கு முன் எழுதப்ப்பட்டதாக ( ஓதப்பட்டதாகக் ) கருதப் படும் வேதங்களும் உபநிஷத்துக்களும் அவற்றில் முதலில் சொல்லப்பட்டது மாதிரியே இருக்கும் என்று எண்ண முடியவில்லை. . செய்யும் தொழில்முறைக்கேற்ப  பிரிக்கப்பட்ட நான்கு பிரிவினரும் இந்த இடைச் செறுகல்களால் மனுநீதி என்றும் , தர்ம சாஸ்திரம் என்றும் பெயர்களால் வகைப்படுத்தப்பட்டு இருக்க சாத்தியக் கூறுகள் நிறையவே இருக்கின்றன. எல்லோரும் வேதங்களும் உபநிஷத்துக்களும் அத்தியயனம் செய்ய அனுமதிக்கப் படவில்லை என்பது பலராலும் கூறப்பட்ட கருத்து.
எந்தவிதமான செய்தியும் ஆராயப்பட்டால் உயர்வு தாழ்வு என்று பாதிப்பின் காரணம் புரியும். புரிந்து கொள்ள மாட்டேன் என்று சொல்வது நான் அவர்களின் நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கிறேனோ என்ற எண்ணத்தாலா.?
கேள்வி:- உறங்குபவரை எழுப்பலாம். உறங்குவதுபோல் பாசாங்கு செய்வோரை எழுப்ப முடியுமா.?
பதில்:- தனிமரம் தோப்பாகாது. என்னைப் போல் சிந்தனை கொண்டவர்கள் இருக்கிறார்களா என்று அறிய விரும்புகிறேன். நடப்பவை எல்லாம் காலத்தின் கோலம் என்பது தெரிகிறது. தவறுகள் திருத்தப் படவேண்டும் charity begins at home  என்பார்கள். நாம் நமது எண்ணங்களை சீராக்கிச் செதுக்குவோம் . உண்மை நிலையை அறிவோம். நம்மை நாமே மாற்றிக்கொள்ள முயலலாமே என்பதுதான் என் ஆதங்கம். நான் கற்றதும் பெற்றதும் சரியோ தவறோ தெரியவில்லை. கற்றுப் பெற்றதை பதிவிடுகிறேன்.அவ்வளவுதான். .
-----------------------------------------------------------------------      
  






 -    

28 கருத்துகள்:

  1. தூக்கத்தில் எண்ணங்கள் நின்று விடுகின்றதா அல்லது தூக்கத்தில் தொடரும் எண்ணங்கள்தான் கனவாக வெளிப்படுகிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது அப்படி இருக்க முடியாது என்று நினைக்கிறேன். அதாவது எல்லாக் கனவும் எண்ணங்களின் தொடர்ச்சி இல்லை. இது பூர்வ ஜென்மத் தொடர்ச்சியாகவும் இருக்கலாம் இல்லை நமக்கு முன்னறிவிப்பாகவும் இருக்கலாம், அல்லது நாம் படித்து அந்த எண்ணங்களின் தாக்கமாகவும் இருக்கலாம். நீங்களே உங்களுக்கு வரும் கனவையெல்லாம் யோசித்தால் புரியும்.

      நான் கனவில் ஒன்றுக்கு மேல் சந்திரன்களை, பல தடவை கண்டிருக்கிறேன். புதையல் (காசுகளை) எடுப்பதுபோலும், பறப்பதுபோலும் பல தடவை கனவு கண்டிருக்கிறேன். In fact, என்னால் முயற்சி செய்தால் பறக்க முடியும் என்று இப்போவும் நம்புகிறேன் (சொன்னா சிரிப்பா இருக்கும், ஆனால் உண்மையாச் சொல்றேன், முடியாது என்று தெரிந்த போதும்). அப்புறம் கனவில் முன்னறிவிப்புகள் வந்திருக்கு, அவை நடந்தும் இருக்கு. ஜொள் கனவுகள், படித்த செய்திகளின் அல்லது ஆசைகளின் தாக்கமாக இருக்கும்.

      நீக்கு
    2. கனவுக்கும் நம் எண்ணங்களுக்கும் தொடர்பு இருப்பதாகத் தோன்றவில்லை உறக்கத்தில் எண்ணங்கள் ஓய்ந்து விடுகின்றனஆனால் மறுபடி விழித்தவுடன் எண்ணங்கள் “தோன்ற” ஆரம்பித்து விடுகின்றன. “உரு”வாவது இல்லை. மனதின் வெளிப்பாடு (manifest) எண்ணங்கள். அப்படித் ‘தோன்றி’ய எண்ணங்கள் நம் மனதில்‘நிலையாக’ இருப்பது போல இருக்கின்றன. ஏன் “போல”? மறுபடி தூங்கினால் அவை இருக்காது. நமது மனதினுள்ளே சென்று ஒடுங்கி (லயித்து / withdraw) விடுகின்றன.இதையே ஒரு சக்தியிடம் இருந்து வெளிப்பட்டு இருப்பதுபோல் இருந்து மறைவதைக் குறிக்கும்கனவுகள் குறித்து அறுதியிட்டு எந்த விவரமும் வந்ததாகத் தோன்றவில்லை எல்லாம்ஹேஷ்யங்களே

      நீக்கு
    3. @நெத கனவுகள் விசித்திரமானவை இருப்பதுபொல் ஒரு தாக்கத்த ஏற்ப்டுத்தி மறைபவை ஏன் நானே கனவில் கண்ட நிகழ்வு ஒன்றை மையப்படுத்தி ஒரு சிறு கதையே எழுதி இருக்கிறேன் கனவில் வந்தநிகழ்வுகளுக்கு கற்பன என்னும் முலாம் பூசி எழுதியதுஏன் என்றால் முழுக்கனவும் தெளிவாக நினைவுக்கு வராது

      நீக்கு
  2. கேள்வியும் நானே, பதிலும் நானே.
    ஸூப்பர் ஜயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கற்றதும் பெற்றதும் என்று தலைப்பிட விரும்பினேனனால் அந்த தலைப்பில் வேறு ஒருபிரபலம் எழுதியவற்றோடுஒப்பிடல்வரலாம் என்று தோன்றவே தலைப்பை மாற்றினேன்

      நீக்கு
  3. உங்கள் சில கேள்வி பதில்களில் உண்மை இருக்கிறது. ஒவ்வொன்றையும் நாம் ஆராய்வதற்கு உரிய நேரமும் அதற்கான அறிவும் எல்லோருக்கும் இருப்பதில்லை. வத்தக்குழம்புக்கு முதலில் ஒருவர் கூறும் ரெசிப்பியைப் பின்பற்றிச் செய்து பிறகு நமது விருப்பத்துக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்வது போலல்ல நம்பிக்கை. இது பல்வேறு ப்ராசஸ்களால் ஆனது. ஒவ்வொன்றையும் கேள்வி கேட்டு, பகுத்தறிந்து அதன் பின்பு நாம் ஒரு முடிவுக்கு வரமுடியாது. ஆனால். சிலவற்றை நாமே, இது தவறு என்று புரிந்துகொள்ளமுடிந்தால், அதனைத் தவிர்த்துவிடலாம். (உதாரணம்-பழைய துணிகளை ஆற்றில் எறிந்துவிடவேண்டும் என்ற பழக்கம் தவறு, நாம் தாயாக நினைக்கும் நீர் நிலையை மாசுபடுத்தக்கூடாது, போகி அன்று எல்லாவற்றையும் எரித்துவிடவேண்டும்-இது தவறு, சுற்றுச்சூழலை நாம் பாதிப்படையச் செய்கிறோம், பழைய காலம்போல் இயற்கையான பொருட்கள் நம்மிடம் இல்லை, அதனால் இப்போதும் அந்தப் பழக்கம் கூடாது என்பதைப்போல்)

    நம்ம வரலாற்றைச் சுருக்கமாக எழுதுவதற்கும், பிறகு நேரமிருக்கும்போது விரிவாக எழுதுவதற்கும், நாம் இடைச்செருகல் என்று சொல்லமுடியாது. மகாபாரதத்தைப் பற்றி உங்கள் கேள்விக்கு கீசா மேடம் பதில் சொல்வார்கள். இல்லைனா, நான் செக் செய்து எழுதுகிறேன்.

    மனிதர்களில் உயர்வு தாழ்வு இருக்க முடியாது. ஒவ்வொருவரின் அறிவினாலும், அவர்களது திறமையினாலும், அவர்கள் achieve செய்ததை வைத்தும்தான் பெருமையோ சிறுமையோ ஏற்படும். இருந்தபோதிலும், பிறப்பின்மூலம் பெருமை ஏற்படத்தான் செய்யும். எல்லோரும் ஒரே மாதிரி, உயர்வு தாழ்வு கிடையாது என்று சொல்லுதல் இயலாது. (உங்களுக்கான உதாரணம், அரசியலையோ, தொழிலதிபர்களையோ நோக்கினாலே தெரிந்துவிடும்)

    உங்கள் கருத்தையே, உங்கள் வீட்டில் எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்களா? நீங்களே 'உங்கள் வழி தனி வழி' என்று சொல்லியிருக்கிறீர்களே. அவரவர் சிந்தித்துப் பார்த்து எது சரி எது தவறு என்று எண்ணவேண்டும். அதற்கு நேரமோ விருப்பமோ இல்லாதவர்கள், அவர்கள் நம்பிக்கை வைத்திருப்பவர் என்ன செய்தாரோ அதையே ஃபாலோ பண்ணவேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்வரலாற்றை நாம் எழுதியதில் இருந்து கூட்டிக் கழித்து வெளியிடல்பின்பு அதுவே உண்மை என்று எண்ணுவது போலத்தான் இடைச்செருகல்சள் நான்மஹாபாரததை எடுத்துக் கொண்டது இருக்கும்தகவல்களினடிப்படையிலிதே போல் ராமாயணமும் அநேக உட்கதைகள் ஏற்படுத்தப்பட்டது வேதவியாசரும் வால்மீகியும் எழுதிய அல்லது சொன்ன வடிவில் இல்லை என்பதே திண்ணம் உதாரணமாக ஸ்கௌட்சில் ஆடும் விளையாட்டைக்குறிப்பிடலாம் முதலில் ஒருவருக்குச் சொன்ன செய்ரி பலரால் சொல்லப்படும்போது உருவே மாறி இருப்பதை காட்டும் என் கேள்விகளுக்கு யாரையும் பதில் சொல்லநான் கேட்கவிரும்புவதில்லை எல்லாமே அவரவர்கற்றதையும் பெற்றதையும் பொறுத்தே இருக்கும் சிந்தித்து செயல்பட வேண்டுகிறோம் மாட்டேன் நானிப்படித்தான் என்றால் யாரும் ஏதும் செய்ய முடியாது

      நீக்கு
  4. கேள்வி பதில் வாயிலாக உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டது சிறப்பு.

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எண்ணங்களை பகிரவே நான் எழுதுகிறேன் செயல்கள் அவரவரின் விருப்பம் வழி

      நீக்கு
  5. அவரவர்க்கு அவரவர் எண்ணங்கள் அவரவர் நம்பிக்கைகள்.. இதில் அடுத்தவர் பேச என்ன இருக்கிறது... என் வழியும் தனி வழிதான்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்தவர் எண்ணங்களைப் பற்றிப்பேசவில்லையே எவ்வழியும்நல்வழியானால் நலமே

      நீக்கு
  6. நானும் உங்க வழியிலேதான் வந்துக்கிட்டு இருக்கேன் சார். :)


    ***கடவுள் என்பதே ஒரு concept.***

    இதை வாசித்துவிட்டு எத்தனை பெரியவா சீரியஸா அஃபண்ட் ஆவா தெரியுமா சார்?! :))

    -------------------

    கடவுள் என்பது மனிதனின் கற்பனையே. இல்ல உண்மையிலேயே அப்படி ஒருத்தர் இருந்தால் அவர் ஒருவரே. அவர் பாட்டுக்கு இருந்துட்டு போகட்டும். பல மதங்கள் தேவையில்ல. பல தெய்வங்கள் தேவையில்லை. என் கடவுள் பெரியவர், உன் கடவுள் மட்டமானவர் என்பது போல் அபத்தம் தேவை இல்லை. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

    வெற்றீ பெற்றால் கடவுள் கிருபையால்..

    தோல்வியடைந்தால் கடவுள் சோதிக்கிறார்.

    தவறூ செய்துவிட்டால் மன்னிப்பு கேட்க இருக்கவே இருக்கார் கடவுள்.

    வேடிக்கையான உலகம். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுள் என்பது ஒரு கான்செப்ட் தானே இதில் அஃபெண்ட் ஆக என்ன இருக்கிறது நான் என் எண்ணங்களைப் பகிர்கிறென் தூற்றுபவர் தூற்றட்டும் கவலை இல்லை

      நீக்கு
  7. சிந்திக்க வைக்கும் பதில்கள்.

    பதிலளிநீக்கு
  8. தங்களின் வெளிப்படையான எண்ணங்களே - சிறப்பான எண்ணங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் எழுத்துகளைப் படிப்பவர்கள் புரிந்து கொண்ட செய்தி நன்றி டிடி

      நீக்கு
  9. எப்போதும் எதிலும் உங்கள் சிந்தனையின் வழி தனி வழி மட்டுமல்ல படிப்பவர்களின் சிந்தனையில் ஒரு சலனத்தை ஏற்படுத்திப் போகும் நனி வழி.எனக்கும் இருக்கிறதா இல்லையா என்கிற கேள்வியை விட வேண்டுமா வேண்டாமா என்கிற கேள்வியே அவசியமானதாகப்படும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேண்டுமா வேண்டாமா என்னும் கேள்விக்கு உங்கள் பதில் என்ன வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  10. நியாயமாகவும், உண்மையாகவும் உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்ட உங்கள் நேர்மையை வணங்குகிறேன்.
    // ஏனென்றால் கடவுள் எனநம்பப் படுகிறவர் நல்ல குணங்களின் சேர்க்கை.அந்த நல்ல குணங்களின்சேர்க்கையை என்னுள் கொண்டு வரமுடியுமானால் நானும்கடவுள்.என்னுள்ளும் அவர் இருக்கிறார்.//
    இதைத்தான் மகான்கள் கூறுகிறார்கள். அது உங்களுக்கு சுலபமாக புரிந்து விட்டது என்பது ஒரு பாக்கியம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. s/சுலபமாகப்புரிந்து விட்டது/........!?வருகைக்கு நன்றி மேம்

      நீக்கு
  11. கம்பராமாயணத்திலேயே இடைச்செருகல்கள் உண்டு என்று டி.கே.சி. சொல்லுவாராம். அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் போன்ற பல பிரபலமான கம்ப ராமாயண பாடல்களை அவர் ஏற்றுக் கொள்ள மாட்டாராம். ஷேக்ஸ்பியரின் கவிதைகளிலும் இடைச்செருகல்கள் உண்டு என்பார்கள். அப்படி இருக்க, மஹாபாரதத்தில் இடைச்செருகல் இல்லாமல் இருக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இடைச் செருகல்கள் இல்லை என்பதுதான் ஏற்க முடியாதுநான் அதைக் குறிப்பிட்டதே முன் காலத்தில் சொல்லச்ப்பட்டு வந்தவை அதே போல் இருக்கவாய்ப்பில்லை என்பதை கூறவே மஹாபாரத இடைச்செருகல்கள் பலரும் ஓதிய வற்றில் இருக்கும் வரிகளின் எண்ணிக்கையை வைத்துதான்

      நீக்கு
  12. தங்களின் கேள்வி பதில்களை ரசித்தேன் ஐயா

    பதிலளிநீக்கு
  13. தங்களின் கேள்விகளும் அதற்கு உண்மையான மனதின் உங்கள் பதிக்களும் அழகாய் இருக்கிறது படிப்பதற்கு ஐயா

    பதிலளிநீக்கு