வரதட்சிணை
“ பெண்ணைப் பெற்றவர் பிள்ளையை விலைக்கு வாங்கும் கொடுமைக்குக் கௌரவமான பெயர்
வரதட்சிணை. வரும் வரனுக்கு தட்சிணை என்று அர்த்தமும் செய்து கொள்ள முடியவில்லை.
ஏனென்றால் பிள்ளை பெண்வீட்டுக்கு வருவதில்லை. பெண்தான் பிள்ளையின் வீட்டைப்
புகுந்த வீடாக ஏற்றுப் போகிறாள். பெண்ணையும் கொடுத்துக் கூடவே பொருளையும் இழக்க
வேண்டிய ஒரு இழிவான நிலையில்நம் சமுதாயத்தில் எத்தனைக் குடும்பங்கள்தான் அல்லல்
பட்டிருக்கின்றன. ஆண்டவனின் படைப்பில் மனித குலம் தழைக்க சம பங்கேற்கும் பெண்ணினம்
பிறப்பதையே அஞ்சி நடுங்கும் நடுத்தரக் குடும்பங்கள் எத்தனை எத்தனை.இதற்கெல்லாம்
அடிப்படைக் காரணங்கள் எதுவாயிருந்தாலும் அவை எல்லாம் காலப்போக்கிலும் வளர்ந்து
வரும் சமுதாயக் கண்ணோட்டத்திலும் மாற வேண்டாமா.?ஆதியிலே நம் நாட்டில் வர்ணபேத
அடிப்படையில் சமூகம் இயங்கியது. இன்று தகர்த்தெறிய்ப்பட்டுக் கொண்டு
இருக்கவில்லையா. வர்ண பேதங்களினால் சமூகத்தில் ஒரு பகுதியினர் அடக்கி ஒடுக்கப்
பட்டு இருந்தனர். அவர்களே அதை உணர்ந்து போராடி ஜாதிமத பேதமற்ற சமுதாயத்தை
சிருஷ்டிக்கும் போது இது என்ன மட்டமான போலி
சம்பிரதாயம். ஆணுக்குப் பெண்.அடிமையா. இதற்கு முடிவு கட்ட வேண்டாமா.?நாமெல்லாம்
இங்கு கூடி கருத்துப் பறிமாறுகிறோம். வாய் கிழியப் பேசுவோம்.
அவ்வளவுதானா.?இதுவரையில் இந்த அளவில்தான் நடந்திருக்கிறது. இனிமேல் இதற்கு ஒரு
மாற்றம் தேவை. நம் எண்ணத்திலும் பேச்சிலும் தூய்மை உண்டென்று நாம் உண்மையில்
நம்பினால் அதைச் செயலில் காட்டத் தயக்கம் ஏன்.?பெண்ணினத்தவராகிய நாம் வரதட்சிணை
கொடுக்கக் கூடாது. என்று முழங்கும்போது, ஒன்றைமட்டும் மறந்து விடக்கூடாது.
வரதட்சிணை கேட்கவும் கூடாது. இந்தப் போலி சம்பிரதாயமும் வறட்டுக் கௌரமும்
தொடர்ந்து நீடிக்க நாம்தான் காரணம். ஏனென்றால் நம் பிள்ளைகளுக்கு நாம்தானே
சீர்வரிசையும் வரதட்சிணையையும் எதிர் பார்க்கிறோம். பெண்பிறந்தது என்றால்
சுணக்கமும் பிள்ளை பிறந்தது என்றால் மகிழ்ச்சியும் அடைவதும் நாம்தான். இந்த ஒரு
உணர்ச்சி நம் ரத்தத்தில் ஊறி ஆணுக்குப் பெண் தாழ்ந்தவள் என்ற ஒரு திடமான ஆனால்
தவறான மனப்பான்மையை வளர்த்துவிட்டது. ஆணும் பெண்ணும் சமம் என்று நாம் உண்மையிலேயே
நம்ப வேண்டும். அந்த நம்பிக்கையில் உள்ளத் தெளிவு காண வேண்டும். ஆணைப் போல்
பெண்ணையும் வளர்க்க வேண்டும். பெண்குழந்தைகளுக்கு வீண் பயத்தையும் போலி
அடக்கத்தையும் புகட்டாமல் பாரதி சொன்னபடி,’நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும்
‘கொண்டவர்களாக வளர்க்க வேண்டும். வாழ்க்கைப் பொறுப்பைத் தேடிக்கொள்ள சம உரிமை
அளிக்க வேண்டும். அதற்கு முக்கியமாக வேண்டியது நெஞ்சுரமும் தன் நம்பிக்கையும். இவை
வளர உலகப் பொது அறிவு வளர வேண்டும். அதற்கு கல்வி அவசியம். அந்தக் கல்வி
வளர்ச்சியும் பகுத்தறிவும் வளர்ந்தால் நம் பெண்களுக்கு தேவைப்பட்டால் வாழ்க்கையில்
தனித்தியங்கும் நம்பிக்கையும் துணிவும் வளரும். வரதட்சிணை என்னும் கட்டாயக்
கொடுமைக்கு ஆட்பட்டு அல்லல் படுவதைவிட இம்மாதிரி தனித்தியங்குவதையே பெண்கள்
விரும்புவார்கள் என்ற நிலை வந்து விட்டால்வரதட்சிணை கேட்பவர்கள் இருக்க மாட்டார்கள்.
பிறருக்குப் பாரமாக இல்லாமல் ஒரு பெண் அவளுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள
கல்வியும், பக்குவப்பட்ட மன முதிர்ச்சிக்கு வயதும் முக்கியம். பெண்கள் கட்டாயமாகக்
கல்வி கற்க வேண்டும். அவர்களாக அவர்கள் வாழ்க்கையை அமைக்கும்வரை திருமணம் செய்து
கொள்ளக்கூடாது. ஒரு ஆண் படித்து முடித்ததும் மணம் செய்து கொள்வதில்லை. ஒரு
வேலையில் அமர்ந்துநிரந்தர வருவாய் உண்டுஎன்று நிச்சயப்பட்ட பின்புதான் மணவினை
பற்றிச் சிந்திக்கிறான். இது ஒரு பெண்ணுக்கும் பொருந்த வேண்டும்.
பெண்கள் இருபது இருபத்திரண்டு வயதுக்கு மேல்தான் திருமணம்
செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு மனப் பக்குவம் அப்போதுதான் இருக்கும். கல்வி
கற்றவர்கள் அவர்களது சொந்தக் கால்களில் நிற்கத் துணிவு பெற வேண்டும்.
பெண்களை பாரமாக நினைக்காமல் ஆணும் பெண்ணும் உண்மையில் சமம்
என்று நம்பி , வரதட்சிணை வாங்கவும் கூடாது. கொடுக்கவும் கூடாது. என்று நாமே ஒரு
நல்ல முடிவு எடுத்துக் கொண்டு முயல்வோமேயானால்நம் சமூகத்திலிருந்து, வரதட்சிணை
என்னும் காட்டுமிராண்டித்தனமான
உளுத்துப்போன கொடிய பழக்கம்நிச்சயம் ஒழியும். அதை ஒழிக்க
வேண்டியது நம் எல்லோருடையக் கடமையும் ஆகும்.இந்த நேரத்தில் ஏன் நாம் அதைஒரு பிரதிக்ஞையாக
எடுத்துக் கொள்ளக்கூடாது.?
(1970-களின் முற்பகுதியில் எழுதியது இது. சுமார் நாற்பது வருடங்களுக்குப் பின்னும் நிலைமை மாறி
ருக்கிறதா.? எனக்கென்னவோ மாற்றங்கள் இருந்தாலும் போதிய அளவு இல்லை என்றே தோன்றுகிறது. பூவையர்கள் என்ன நினைக்கிறார்கள்.?)
ஆல் இந்தியா ரேடியோ திருச்சியில் பூவையர் பூங்கா
நிகழ்ச்சியில் என் மனை வி பெசியது