திருச்சிராப்பள்ளி மெட்ராஸ் நினைவுகள் ஒரு
நிழலாகத்தான் தெரிகிறது. இவற்றை நினைவு கூர்வதில் முக்கியம் ஏதுமில்லை. அங்கும்
பள்ளிக்குச் சென்றதாக நினைவில்லை. எது எப்படி நடந்திருந்தாலும் என் நினைவுக்கு
வருபவை பொரி உருண்டை விரும்பி உண்டது, எப்போதோ வாணியம்பாடிக்குச் சென்றது, புகை
வண்டியின் பெட்டிகள் பிரிக்கப்படும்போது, இரயில் உடைந்து விட்டது என்று ஏமாந்து
போனது போன்றவைதான். அதன் பிறகு சிறிது காலம் நாங்கள் பெங்களூரில் என் பாட்டியுடன்
இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் அது என் தாய் முதற்கருவுற்றிருந்த காலமாய்
இருக்க வேண்டும். அதன் பிறகு என் தந்தைக்கு அரக்கோணத்துக்கு மாற்றலாய் நாங்கள்
அங்கு வந்தோம்.
அரக்கோணத்துக்கு நாங்கள் வந்தபோது எனக்கு
வயது ஆறாக இருக்க வேண்டும். அரக்கோணத்தில் நாங்கள் நான்கு வருடங்கள் இருந்தோம்.
மொத்தமாக மூன்று வீடுகளில் இருந்திருக்கிறோம். தர்ம ராஜர் கோவில் அருகே ஒரு வீடு.
எங்கள் வீட்டுக்கு அருகே ஒரு
டூரிங் கொட்டகை இருந்தது. வீட்டில் இருந்து கொண்டே சினிமா வசனங்களையும்
பாடல்களையும் கேட்கலாம். எங்கள் வீட்டருகிலேயே டௌன்ஹால் பள்ளியின் தலைமை ஆசிரியர்
வீடு இருந்ததாக நினைவு. இரவு நேரங்களில் அவர் வீட்டிலிருந்து, அவர் குடித்துவிட்டு
வந்து போடும் சப்தங்கள் கேட்கும். எங்கள் தந்தையிடம் அவருக்கு பயம் கலந்த மரியாதை
உண்டு. டௌன்ஹால் பள்ளியில்தான் நான் முதன்முதலாக மூன்றாவது வகுப்பில்
சேர்ந்திருக்க வேண்டும். எனக்கு முதல் இரண்டு வகுப்புகள் பள்ளிக்குச் சென்றதே
நினைவில்லை. ஆறாம் வகுப்பு படிக்கும்போது எனக்கும் ராஜிக்கும், டைஃபாய்ட் வந்து
சென்னை ராயப்பேட்டா ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்தார்கள். ஏற்கனவே என் தாயாருக்கு
டைஃபாய்ட் வந்து குணமாகிற நிலையில் எங்களுக்கும் வந்ததால், நாங்கள் அங்கேயே
இருந்தால், அவர்களுக்கு மறுபடியும் வர வாய்ப்பிருந்ததால், அப்படி வந்தால் அது
மிகவும் கவலைக்கிடம் தரும் என்பதால், எங்களை சென்னையில் சேர்த்தார்கள். குணமாகி
வந்த நிலையில் எங்கள் தந்தைக்கு அலுவலகத்தில் அவர் பெயருக்குக் களங்கம் விளைவிக்கப்பட்டு,பதவியிறக்கம்
செய்து பூனாவுக்கு மாற்றினார்கள். எங்கள் படிப்பு பாதிக்கப் பட்டு, நாங்கள்
பாலக்காட்டிற்கு இட மாற்றம் செய்யப்பட்டோம். இடைப்பட்ட இந்த நான்கு ஆண்டுகளின் என்
பிள்ளைப் பிராய நினைவுகள் எல்லாம் நிழலாடுகின்றன.
நான் ஏற்கனவே சொன்னபடி, வீட்டின் அருகே
இருந்த டூரிங் கொட்டகையி பின்புறம் அமர்ந்து நிழலாகப் படங்களைப் பார்ப்போம்.
நன்றாகக் கேட்போம். அந்தக் கொட்டகையைச் சுற்றிக் காவலாட்கள் நடந்து
கொண்டிருப்பார்கள். யாரும் அத்து மீறி டிக்கட் இல்லாமல் நுழையக்கூடாது என்பதற்காக.
ஒரு நாள் என் தம்பி சோமா, காவலாட்களுக்கு டிமிக்கி கொடுத்து உள்ளே நுழைந்து
விட்டான். இரவு வீட்டில் அவனைத் தேட, அவன் டூரிங் கொட்டகைக்குள் நுழைந்து
இருக்கலாம் என்று தோன்றியது. படம் முடியாமல் வெளியே வர முடியாது. அவன் அங்குதான்
இருக்கிறான் என்று நிச்சயமுமில்லை. அப்போது ஆச்சு அண்ணா, உள்ளே போய்ப் பார்த்து
விட்டு வருவதாகக் கூறிக் கிளம்பினான். அவனும் கொட்டகைக்குள்
புகுந்து படம் பார்க்க முயற்சி செய்வதாகக் கூறி, அவனை உள்ளே அனுமதிக்க மறுத்து
விட்டார்கள். அப்போது அவனும் சிறிய பையன் தானே. ஆச்சு அண்ணா தன்
தம்பியைத்தேடித்தான் போவதாகவும் படம் பார்க்க அல்ல என்றும் வாதாடினான். அவர்கள்
அப்போதும் விடவில்லை. அப்போது ஆச்சு அண்ணா தன் சட்டையைக் கழற்றிக் கொடுத்து பணயமாக
வைத்துக் கொள்ளக் கூறி உள்ளே சென்று, சோமாவுடன் திரும்பி வந்து தன் சட்டையைத்
திரும்ப வாங்கிக் கொண்டார். அது அப்போது எனக்கு பெரிய வீரச் செயலாகப் பட்டது.
அருகே இருக்கும்
தருமராஜர் கோவிலில், ஒவ்வொரு வருஷமும் திருவிழா நடக்கும். பத்து நாட்கள் மஹாபாரதக்
கதை தெருக்கூத்து முறையில் நடத்தப்படும். கடைசி நாளன்று துரியோதனனை பீமன் கொல்வது
நடத்திக் காட்டப்படும். துரியோதனின் உருவம் தரையில் மண்ணால் சிலைபோல் வடிவமைக்கப்
பட்டிருக்கும். அதன் தொடையின் உள்ளே, ஒரு மண் குடத்தில் செந்நீர் வைத்து மூடப்
பட்டிருக்கும். பீமன் வேடமணிந்தவன் வசனம் பேசி (பாடிக்)கொண்டே வந்து கிருஷ்ணனின்
சைகைக்குப் பிறகு,தன்னுடைய கதையால் துரியோதனன் தொடையில் அடிக்க,ரத்தம் பீரிடுவது
போலவும் , திரௌபதி அதனை எடுத்துத் தன் கூந்தலில் தடவி தன் தலை முடியைக் கட்டுவது
கண்டும் பிரமிப்பாக இருக்கும். நம்முடைய பாரம்பரியத் தெருக்கூத்துகளைக் கண்டு
களித்த அனுபவம் நினைவுகளை அசை போடும்போது நிறைவைத் தருகிறது.
அதன் பிறகு தீ மிதி நடைபெறும். நிறைய
விறகுகள் கரி முதலியவற்றால் சுமார் நாற்பது ஐம்பது அடி நீளமும், இருபது முப்பதடி
அகலமும் கொண்ட பெரிய நெருப்புப் படுக்கை உருவாக்கப் படும். அதைச் சுற்றி சவுக்குக்
கட்டைகளைக் கொண்டு வேலி அமைக்கப்படும். தீ மிதி நேரத்தில் எல்லோரும்
சுற்றியிருந்து பார்ப்பதற்காகவும், விபத்து நெராமல் இருக்கவும் இந்த ஏற்பாடு. ஒரு
சிறிய பையனாக இதைக் காணும் ஆர்வத்தில் அந்த சவுக்கு வேலிக்கு அருகிலேயே இடம்
பிடித்துக் காத்திருப்பொம். ஒரு முறைக் கூட்டம் நெருக்கியடித்து முன் தள்ளி
சவுக்குக் கட்டையின் ஒரு கூறான பகுதி என் தொடையின் பின் புறத்தில் நன்றாகக்
குத்திவிட, காயம் அதிகமாகி ரத்தம் பீரிட்டது. வீட்டில் சொன்னால் திட்டுவார்கள்,
அடியும் கிடைக்கலாம். ஆழமான காயத்துக்குள்
தெருவில் கிடந்த சில காகிதங்களை கிழித்து எச்சிலால் ஈரப்படுத்தி அதற்குள் அமுக்கி
விட்டேன். வலி அதிகமாக இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் யாருக்கும் தெரிவிக்காமல்
இரண்டு நாள் கழித்து விட்டேன். மூன்றாம் நாள் என்னைக் குளிப்பாட்ட வந்த என் தாய்க்குத் தெரிந்து
திட்டு வாங்கினது எல்லாம் பசுமையான நினைவுகள். அந்தக் காயத்தின் வடுதான் என் பள்ளி
இறுதி சான்றிதழில் என்னுடைய அடையாளங்களில் ஒன்றாகக் குறீப்பிடப்பட்டுள்ளது.
இப்போதைய என் சம வயதுக்காரர்களில் மஹாத்மா காந்தியடிகளை
நேரில் பார்த்தவர்கள். நான் அறிந்த வரையில் மிகவும் சொற்பமே.எனக்கு அந்த பாக்கியம்
கிடைத்தது.மெட்ராஸுக்கு மஹாத்மா காந்தி வருகை தருவது தெரிந்ததும், அப்பாவுக்கு
அவரைப் பார்க்க ஆவல். அதற்காகவே அரக்கோணத்திலிருந்து மெட்ராஸ் சென்றார். அப்போது
என்னையும் கூட்டிக்கொண்டு செல்ல, வாழ்க்கையின் ஒரு அரிய வாய்ப்பு எனக்குக்
கிடைத்தது. மஹாத்மாவைசுமார் இருபதடி, முப்பதடி தூரத்தில் இருந்து தரிசித்தோம்.
அவரிடத்தில் கூட்டத்தில் இருந்து யாரோ என்னவோ கேட்க “ சும்மா உக்காருப்பா” என்று தமிழில்
காந்திஜி கூறியது நன்றாக நினைவில் உள்ளது. இப்போதும் அந்த நிகழ்ச்சியை விபு,
டாலியிடம் கூறிப் பெருமைப் படுவதுண்டு.
மஹாத்மா காந்தியின் நினைவு வரும்போது, அவர்
சுட்டுக்கொல்லப்பட்ட நாள் நன்றாக நினைவுக்கு வருகிறது. நாங்கள் மாலையில் தெருவில்
“பேந்தா”
என்ற
விளையாட்டு ஆடிக்கொண்டிருந்தோம். அப்போது சுவால்பேட்டை தாசில்தார் தெருவில் ஒரு
வீட்டில் வசித்து வந்தோம். இரண்டு வீடுகள் தள்ளியிருந்த வீடு,சினிமாக் கொட்டகைக்
காரரின் வீடு. அவர் வீட்டில் இருந்த ரேடியோவில் இருந்து வந்த செய்தி சிறு
பிள்ளைகளான எங்களுக்கு திடுக்கிடலாகக் கேட்டது. காந்தி இற்ந்த செய்தியை தெரு
முழுக்கக் கூவித் தெரியப் படுத்தினோம். அன்று இரவு எங்கள் வீட்டிலேயே சாவு விழுந்த
மாதிரியான ஒரு சூழ் நிலை நிலவியது. அப்பா அழுததும், வீட்டில் அம்மாவின் சித்தி “
மேமை”
(விட்டில்
உதவியாக இருந்தவர்),மாடியில் சென்று தேம்பித் தேம்பி அழுததும் இப்போது நினைக்கும்போது,
காந்தியின் செல்வாக்கும் பேரும் புகழும் எப்படி மிகச் சாதாரண மக்களையும் வெகுவாகப்
பாதித்தது என்பது புரிகிறது. காந்திஜியின் பாதிப்பு வாழ்க்கையில் இல்லாதவர்கள்
அந்தக் காலத்தில் இருப்பதே நினைக்க முடியாதது.
அடுத்த வீட்டு டூரிங் டாக்கீஸ்காரர் ஒருமுறை எங்களைப் படம் பார்க்கக் கூப்பிட்டு(சிறுவர்களை)அனுப்பினர். எங்களுக்கு சேரில் இருக்க அனுமதி இருந்தாலும் நாங்கள் தரையில் அமர்ந்து பார்த்ததாகத்தான் நினைவு. அப்போதே எது நமக்கு நிலையாகக் கிடைக்குமோ அதுவே போதும் என்ற எண்ணம் வந்திருக்குமோ என்னவோ.!அவர் வீட்டுக்குக் காந்திக்குல்லாய் அணிந்தவர்கள் நிறையபேர் வருவார்கள். அவர்களில் பிற்பாடு பிரபலமாக அறியப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணனும் ஒருவர் என்று என்மனதில் எங்கோ சொல்கிறது( தொட்ரும்)
நிகழ்வுகளில் ஒன்றிப்போனேன். உங்களிடத்தில் நான் இருந்ததாக உணர்ந்து மகிழ்ந்தேன்.
பதிலளிநீக்குஅனுபவப் பகிர்வு தொடரட்டும்.
நிகழ்வுகளை கோர்வை யாக எழுதுவது சிரமமாய் இருக்கிறது
நீக்குநல்ல நிகழ்வுகள். உங்க மனம் அசைபோடுகிறது. விபு, டாலி?
பதிலளிநீக்குவிபு டாலி என் பேரக் குழந்தைகள்
நீக்குநினைவுகள் அழியாத கோலங்கள். பிள்ளைப் பிராய நிகழ்ச்சிகள் என்றும் மறைவதில்லை. சுவாரசியமாக இருக்கின்றது. அப்புறம் ? என்று எதிர்பார்ப்பு எழுகின்றது. தொடரட்டும்.
பதிலளிநீக்குநினைவுகள் கோர்வயாய் வருவத்ல்லை
நீக்குமகாத்மா மறைவின் பாதிப்பு புரிந்து கொள்ள முடிகிறது...
பதிலளிநீக்குகொன்றவர்கள் இன்றைய ஆட்சியில் - நாடு வெளங்குமா...?
போற்றுபவ்ர் போற்றட்டும்
நீக்குமஹாத்மா காந்தி வருகை, அவர் இறப்பு பற்றி முன்பு பதிவு செய்து இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குதெருக்கூத்து, தீமிதி, டூரிங்க் கொட்டகை , செய்திகள் எல்லாம் நினைவுகளில் மறக்க முடியாதவை.
தொடர்கிறேன்.
பதிவுகளி ல் குரிப்பிட்டுஇருக்கலாம்
நீக்குஅரக்கோணம் என்றதுமே நீங்கள் முன்பு சொல்லியிருந்த டூரிங்க் டாக்கீஸ், மற்றும் சைக்கிள் எல்லாமே நினைவுக்கு வந்தது சார். மஹாத்மா காந்தி வருகை எல்லாம் நினைவுக்கு வந்தது,
பதிலளிநீக்குகீதா
மறக்காமல் ருப்பது நல்லதே
நீக்குஇது முன்பு வாசித்த நினைவு இருக்கிறது என்றாலும் நீங்களும் சொல்லியிருந்தீர்கள் மீள்பதிவுதான் என்று, இந்த நினைவுகள்தான் நம்மை வயதாகும் போது நடத்திச் செல்லும். தொடர்கிறேன்
பதிலளிநீக்குதுளசிதரன்
ஆங்காங்கே பதிவுகளில் வந்திருக்கலாம்
நீக்குதொடருங்கள்
பதிலளிநீக்குநல்ல நினைவுகள் நாங்களும் படித்து அறிந்தோம்.
பதிலளிநீக்கு