Friday, July 15, 2022

நான் யார்

 


                        நினைவலைகள்........அனுபவங்கள்.

                 ----------------------------------

      .வயது ஏற ஏற, வேலையற்ற நேரங்கள் அதிகமாக அதிகமாக, வாழ்ந்து வந்த பாதைகளை நினைத்தும் கிடைத்த அனுபவங்களை அசை போட்டுப் பார்ப்பதிலும் நேரம் செலவாகிறது. அத்தகைய அனுபவங்களைப் பதிவு செய்து வைத்தால் அது ஒரு நல்ல கதைபோல ( என் பார்வையில் )இருக்கும். மேலும் ஒரு சாதாரணமானவன் வாழ்க்கையின் மேடு பள்ளங்களைக் கடந்து வந்ததைத் தன் சந்ததையினருக்கு (அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் )தெரியப்படுத்தி வைப்பதால் குறை ஒன்றும் இருக்கப் போவதில்லை. தெரியப் படுத்தாவிட்டாலும் குறை ஒன்றும் உணரப் படப் போவதில்லை. பின் ஏன் இந்த முயற்சி.?என் நேரத்தை நான் இப்படி செலவிட்டுக் கொள்ளப் போகிறேன். அவ்வளவுதான்

 

      நினைவுகள் எப்போதும் கோர்வையாக வருவதில்லை. ஒவ்வொரு சம்பவமும் அனுபவுமுமே எண்ணங்களாகத் தோன்றும். அப்படித் தோன்றும் எண்ணங்களையும் அனுபவங்களையும் கோர்வையாகக் கொண்டு வருவதே இந்த முயற்சி. இதை எங்கிருந்து தொடங்குவது.? எப்படித் தொடங்குவது.?

      இதை எழுதத் துவங்குகையில் மிக முக்கியமாக ஒரு கேள்வி எழுகிறது. நான் யார்.?நான் யாரென்று தேடி சரியான விடை கிடைத்து விட்டால் ஆன்மீக வழிப்படி சரியான பாதையில்தான் நான் சென்று கொண்டிருக்கவேண்டும். ஆனால் நான் கடந்து வந்த வாழ்க்கையும் பாதையும் வாழ்ந்த முறையும் அந்தத் தேடலின் விளைவா.?இன்னொரு முறைஇந்த வாழ்க்கையை மறுபடியும் வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் இதே முறையில்தான் மறுபடியும் வாழ்வேனா.?இல்லை, நிறைய மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு வேறு ஒரு வாழ்க்கையை வாழ்வேனா.?கடினமான கேள்வி. நிச்சயமாக சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். ஆனால் பெரிய மாற்றங்கள் நிச்சயம் இருக்காது. வாழ்வின் அனுபவங்கள் கற்றுத்தந்த பாடம் சில இடங்களில் சில செய்கைகளை மெருகேற்ற உதவியிருக்கலாம். ஆனால் வாழ்ந்த வாழ்க்கையிலும் கொண்ட கொள்கைகளிலும் பெரிய மாற்றங்கள் இருக்காது. என் சுபாவங்களைக் கொஞ்சம் மாற்றியிருக்கலாம். என் கோப தாபங்களையும் உணர்ச்சிகளையும் சற்றே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி இருந்திருக்கலாம். நான் நானாக இருப்பதற்கும் இருந்ததற்கும் நானேதான் காரணம். இதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கையில் அதிகமாகக் குறைபட்டுக் கொண்டதில்லை. இன்னும் உயர்வாக இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் சில சமயம் தோன்றக்கூடும். இன்னும் உயர்வாக என்றால் என்ன அர்த்தம். ?பணவசதி ,வாழ்க்கை முறை இவற்றிலா.?இவற்றைப் பற்றி எப்போதுமே நான் அதிகக் கவலைப் பட்டதில்லை. இருப்பதைக் கொண்டு திருப்தியுடனும் ,சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இதுவரை வாழ்ந்தாகி விட்டது. இன்னும் உயர்வாக இருந்திருக்கலாம் என்றால் பிறருக்கும் சமூகத்துக்கும் இன்னும் உபயோகமாக வாழ்ந்திருக்கலாம் ஆனால் சூழ்நிலைகளும் நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை முறையும் என்னை இப்படித்தான் இருக்கச் செய்திருக்கிறது. குறையொன்றும் இல்லை மறை மூர்த்திக் கண்ணா.!காதலித்துக் கைபிடித்த அருமையான மனைவி அன்பான இரு புதல்வர்கள், பண்பான மருமகள்களென் பேர்சொல்ல வந்தப் பேரக் குழந்தைகள் மூவர். வேறென்ன வேண்டும்.?இனி இருக்கப் போகும் நாட்களைநோயின்றி நிறைவாக வாழ்ந்து யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் என் வாழ்வு முடியுமானால் அதுவே என் பேறு. இனி இதுவரை வாழ்ந்த வாழ்க்கையைச் சற்றே அசை போடுவேன்.

 

    

     கோவிந்தராஜபுரம் சுப்பிரமணியம் மஹாதேவன் பார்வதி தம்பதியினருக்குப் பிறந்த என் பெயர் பாலசுப்பிரமணியம். தாத்தாவின் பெயரில் என் தந்தைக்குப் பிறந்த முதல் குழந்தை குறை வயதில் இறந்து விட்டதால் நான்காவது பிள்ளையான எனக்கு பாலசுப்பிர மணியம் என்று பெயர் வைக்கப் பட்டது. நான் பெங்களூர் அலசூரில் 11-11-1938-ல் பிறந்ததாகச் சொல்வார்கள். மிருக சீருஷ நட்சத்திரத்தில் பிறந்ததாகவும் சொல்வார்கள். என் பிறந்த நாள் சான்றிதழோ, ஜாதகமோ என் கைவசம் இல்லை. என் தாய் பற்றிய என் நினைவுகள் மிகவும் குறைவு. எனக்கு அவர்கள் முகம் கூட நினைவில்லை. அவர்களுக்கு என் மேல் தனிப் பாசம் என்று சொல்லக் கேள்வி. அவர்கள் இறக்கும் தருவாயில் ஒவ்வொரு குழந்தையையும் அருகில் அழைத்துக் காண்பித்த போது என்னைக் கண்டதும் “ பாலாவா,என்று கூறி அணைத்தார்களாம். பெற்ற தாயின் அரவணைப்பை அறியாமல் போனேன் என்ற ஆதங்கம் வாழ்வின் மலைப் பொழுதில் இருக்கும்போது தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. என்னைப் பெற்ற தாய் இறந்த சில மாதங்களிலேயே என் தந்தை மறுமணம் செய்து கொண்டார். பிறப்பால் பிராமணனான என் தந்தை மறுமணம் செய்தது ஒரு நாயர் சாதிப் பெண்ணை. பெயர் தாட்சாயணி. அவர்கள் மணம் செய்து கொண்ட ஐந்தாறு மாதங்களில் நானும் என் அண்ணா ஹரிஹரனும் (ஆச்சு அண்ணா )என் தாய் தந்தையுடன் திருச்சிராப்பள்ளியில் வாழ வந்தோம். பெரிய அண்ணா வெங்கிடாசலம் என் தந்தையின் தாயாருடன் பாலக் காட்டில் வளர்ந்தான். என் ஒரே சகோதரி (மூத்தவள்) ராஜியும் என் தம்பி சோமனாதனும் பெங்களூரில் என் தாய் வழிப்பாட்டி  தாத்தாவுடன் இருந்தார்கள்.

 

       இப்போதும் நானும் ஆச்சு அண்ணாவும் அந்தக் கால நினைவுகள் சிலவற்றைப் பகிர்ந்துகொள்வோம். எனக்கு என் தாய் தந்தையுடன்( சிறிய தாயாரானாலும் அம்மா என்றே அழைத்தோம்.) மலைக்கோட்டைக்கும் கடைவீதிக்கும் சென்ற நினைவுகள் புகை மண்டலம் போல் காட்சி தரும். என்னை யானை மீதேற்றியது, கடைவீதியில் ட்ரன்க் பெட்டி வாங்கியது போன்ற நினைவுகள். ஆச்சு அண்ணா என்னைவிட ஐந்தாறு வயது மூத்தவன். அப்போது புழக்கத்தில் இருந்த ஓட்டை காலணாக்களால் மாலை செய்வோம். ஒரு சிறிய வெண்கல யானை வைத்து விளையாடுவோம். அவன் என்னிடம் இருந்து காசு வாங்கி எனக்குத் தெரியாமல் மறைத்து குட்டிச்சாத்தான் கொண்டு போய் விட்டது என்று ஏமாற்றுவான். அப்போது பள்ளிக்குச் சென்ற நினைவில்லை.

 

       அதற்கு முந்தைய கால நினைவுகளில் முக்கியமாக இருப்பது, நான் அலசூரில் இருந்தபோது என்னை என் விருப்பத்துக்கு மாறாக பள்ளிக்கு தர தர வென்று இழுத்துச் சென்றதும் அங்கே தலைப்பாகை அணிந்த ஒருவர் என்னை நைய்யப்புடைத்ததும் ஒன்றாகும். மேலும் ஒரு நாள் நான் என் தாய்வழித் தாத்தா மடியில் அமர்ந்து என் மாமா ஓட்டிய காரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு வளைவில் நான் கார்க் கதவை நோண்டிக் கொண்டிருக்க, கார் கதவு திறந்து நான் வெளியில் விழ, என்னைத் தொடர்ந்து என் தாத்தாவும் விழ காயங்களுடன் வீடு சேர்ந்த எங்களைக் கண்ட பாட்டியும் மற்றவர்களும் அழுதது நினைவுக்கு வருகிறது. வீட்டில் சில நேரங்களில்   இரவு முழுவதும் பஜனை நடக்கும். அகண்டதார பஜனை என்று பிறகு தெரிந்து கொண்டேன். அது இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த நேரம்.இரவில் திடீரென ஸைரென் ஒலி கேட்கும்.இரவில் எல்லா விளக்குகளையும் அணைத்து விடுவார்கள். தெருவில் இருப்பவர்கள் ஓடி ஒளிவார்கள். என்ன ஏது என்று தெரியாமல் முழித்த காலம் அது.

 

              என் தந்தைக்கு திருச்சியிலிருந்து சென்னைக்கு (அப்போது மெட்ராஸ்)மாற்றல் ஆயிற்று.பைக்ராஃப்ட்ஸ் க்ராஸ் ரோட் என்று நினைவு. அங்கு எங்கள் சித்தப்பா கிருஷ்ணமூர்த்தியின் வீட்டருகே எங்களுக்கும் வீடு கிடைத்தது. அங்கே என் தம்பி சோமாவும் சேர்ந்து கொண்டான். அவனைப் பற்றி எண்ணும்போது யாரோ ஒரு செக்கச் செவேலென்று ஒரு புதுப் பையனைப் பார்ப்பது போல் இருந்தது. சித்தப்பா சித்தி அவர்களுடைய குழந்தைகள் பொன்னம்மா பாலா ஜெயமணி மற்றும் நாங்கள்சம வயது விளையாட்டுக்காரர்கள். ஆச்சு அண்ணா ஜெயமணியை ,அவள் நிற்கும்போது, கால்களை இடர விட்டுக் கீழே வீழ்த்தி,அழவிட்டு விளையாடுவான். காலையில் வீட்டு முன்பாக மாடு கொண்டு வந்து கட்டி, பால் கறந்து ஊற்றுவார்கள். காலையில் தயிர்க் காரி தயிர் விற்க “ கூவென்று ஒரு வினோதமான ஒலி எழுப்பி வருவார்கள் . தெருவோரத்தில் ஒரு சேரி போல் இருந்ததாக0நிச்சயமற்ற நினைவு(தொடரும்)

12 comments:

  1. கடந்த கால நினைவுகளை அசைபோட்டுப் பார்ப்பதில் கிடைக்கும் இன்பதே தனிதான்.
    தொடருங்கள் ஐயா.
    தங்களின் அனுபவம் எங்களைப் போன்றவர்களுக்கு பாடமாக அமையும்

    ReplyDelete
    Replies
    1. தொடந்து வந்தால்என்னைப்பற்றிதெரிந்துகொள்ள உதவ்லாம் நன்றி

      Delete
  2. எழுதுவது எண்ணங்களின் வடிகால். தொடருங்கள். ஒரு சாதனை செய்த திருப்தி ஏற்படும். வேண்டுகோள் அன்றி அறிவுரை அல்ல.  
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. எண்ணி யபடி வாழ்ந்து இருகிறே னா என்பதை அறிய ஒரு இண்ட்ராஸ் பெக்ட் சன் எனக் கொள்ளலாமா

      Delete
  3. நல்ல தொடர்... அதைவிட நலைப்பு மிகவும் கவர்ந்த ஒன்று...

    ஒவ்வொரு செயலிலும் என்னைத் தொடரும கேள்வியும் அது - பல ஆண்டுகளாக...!

    இந்த கேள்விக்கான எண்ணம் தொடர்ந்து அதன் முடிவு பலவற்றை கற்றும் கொடுத்துள்ளது... பொறுமை, பணிவு, திருப்தி, அமைதி என எண்ணற்ற பண்புகள், சுருக்கமாக அறமும் மறமும்...

    ReplyDelete
    Replies
    1. கேள்வி கேட்பது என்சுபாவம் என்னையே கேட்டுக் கொள்ளும் முயற்சிதானோஇது

      Delete
  4. அந்த காலகட்டத்தில் ஊர்கள், மனிதர்கள் எப்படி இருந்தார்கள் என்றும் அறிய முடிகிறது. ஏதாவது புகைப்படங்கள் இருந்தால் சேருங்கள்.

    ReplyDelete
  5. உங்கள் நினைவலைகளின் மூலம் பல விஷயங்கள் தெரியவருகிறது என்பதை விட உங்களுக்கு இது நல்ல ஒரு அனுபவம். தொடருங்கள். பதிந்து வைப்பது நல்லதுதான் சார். உங்களைப் பற்றி நீங்கள் நிறைய சொல்லியிருக்கிறீர்கள். இதன் வழியும் அறியலாம்தான். தொடர்கிறேன்

    துளசிதரன்

    ReplyDelete
  6. சார், உங்கள் பழைய நினைவுகளைச் சொல்வது அசை போடுவது நல்ல விஷயம். வயதாகும் போது மனம் இப்படியானவற்றை நினைத்து மகிழ்வடைவதுடன் நீங்கள் எழுதவும் செய்வதால் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்று சொல்லப்படுவதுண்டு. எனவே தொடர்ந்து எழுதுங்கள் சார்.

    அந்தக் காலம் பற்றி அறிய இன்னும் ஆவல். தலைப்பா கட்டிய ஆசிரியர், போர்க்காலம் சைரன் ஒலி தயிர் விற்பவர் என்று ஒவ்வொன்றும் அறிய ஆசை. ரொம்பவே நன்றாக இருக்கிறது வாசிக்க!

    கீதா

    ReplyDelete
  7. உங்களின் நினைவுகள் அருமை.
    //குறையொன்றும் இல்லை மறை மூர்த்திக் கண்ணா.!காதலித்துக் கைபிடித்த அருமையான மனைவி அன்பான இரு புதல்வர்கள், பண்பான மருமகள்களென் பேர்சொல்ல வந்தப் பேரக் குழந்தைகள் மூவர். வேறென்ன வேண்டும்.?இனி இருக்கப் போகும் நாட்களைநோயின்றி நிறைவாக வாழ்ந்து யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் என் வாழ்வு முடியுமானால் அதுவே என் பேறு. இனி இதுவரை வாழ்ந்த வாழ்க்கையைச் சற்றே அசை போடுவேன்.//

    மனநிறைவுடன் வாழும் உங்களின் நினைவுகள் பகிர்வு அனைவருக்கும் உதவும்.

    உங்களின் ஆசீர்வாதம், வாழ்த்துகள் அனைவருக்கும் தேவை.
    உங்களின் அனுபவ தொடரை
    தொடர்கிறேன்.

    ReplyDelete
  8. ரசித்துப் படிக்கிறேன். //பெரும்பாலும் இப்படித்தான் வாழ்வேன்// என் பெண்ணிடம், let us go back by time machine to your 4th standard. அப்பா இன்னும் செலவழித்து, நீ கேட்ட ரெஸ்டாரன்டுக்குக் கூட்டிட்டுப் போறேன், வாரம் ஒரு தடவை எங்க ஸ்டோர்ல பிட்சா... என்றெல்லாம் சொல்லும்போது, அவள்... நீங்க வாங்கித் தந்துட்டாலும்.. you will be same in your thinkings என்பாள்.,

    ReplyDelete
  9. உங்கள் நினைவலைகள் பலதையும் பேசுகின்றன அக்கால வாழ்க்கை வித்தியாசமானது.

    ReplyDelete