Tuesday, July 19, 2022

நான் யார் ,,,,,,3

 நினைவலைக்ள்

N

       அரக்கோணத்தில் இருந்தபோது பள்ளிக்குப் புத்தகம் இல்லாமல் போய் வகுப்புக்கு வெளியே நிறுத்தப் பட்டதும் அங்குள்ள ஆசிரிய ஆசிரியைகள் “ துரை வீட்டுப் பிள்ளைகளே இப்படியெல்லாம் செய்யலாமாஎன்று குறை கூறியதும் நினைவை விட்டு அகலவில்லை. அப்பா அலுவலகத்தில் படிப்படியாக முன்னேறி லோவர் டிவிஷன் க்ளார்க், அப்பர் டிவிஷன் க்ளார்க், ஹெட் க்ளார்க், ஸப் டிவிஷன் ஆஃபீசர் என்று பொறுப்பாக இருந்திருக்கிறார். அந்தக் காலத்தில் இருந்த நிலையில் அவருடைய பதவி அவரை துரைகளுக்குச் சமமாக மதிக்க வைத்தது. அப்படி இருந்தவர் SDO விலிருந்து LDC யாக பதவி இறக்கப்பட்டு, தண்டிக்கப் பட்டது அவரை மிகவுமே பாதிதுவிட்டது.

 

       அம்மாவின் ஒரு ஒன்றுவிட்ட மாமன், சேது என்று பெயர், அப்பாவின் சிபாரிசால் அப்பாவின் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தவர். அவர் மேல் ஏதோ பழி ஏற்படுத்தப்பட்டு, அவருக்கு உதவியாக மனு எழுதுவதிலும் மேல்முறையீடு செய்வதிலும் அப்பா உதவி இருக்கிறார். அது அப்பாவின் மேலதிகாரிக்கு பாதகமாக முடியலாம் என்ற நிலையில்,அவர் சேதுவின் மேலிருந்த பழியில் அப்பாவுக்கும் பங்குண்டு என்று நடவடிக்கை எடுத்ததால், வேலையில் பதவியிறக்கம் அடைந்தார். தகாத நடவடிக்கைகளில் அவர் சம்பாதிக்கவில்லை என்று எங்களுக்குத் தெரியும். ஏனென்றால், அப்படி இருந்திருந்தால் எங்கள் வாழ்க்கையின் நிலைமை அவ்வளவு சரிந்திருக்கத் தேவையில்லை. ஒரு முறை நான் பிற்காலத்தில் அவரிடம் கேட்டபோது, அவர் மேல் எந்தக் குறையும் இல்லை என்று கூறினார். எனக்கு நன்றாக விவரம் தெரிந்து நிலைமையை முழுதுமாகப் புரிந்து கொள்ளுமுன் அவர் போய்ச் சேர்ந்து விட்டார். அவர்மீது பழியில்லை என்றும் குற்றமற்றவர் என்றும் வாதாடி நிரூபிக்கப் போதிய பணமில்லாமையே அவர் குற்றமற்றவர் என்று எங்களுக்குப் புரிய வைத்தது. இருந்தாலும் ஆறாத மனப் புண்ணும் வீண்பழியும் சேர்ந்து அவருடைய வாழ்க்கைக்கே ஊறு விளைந்தது. அரக்கோண வாழ்க்கையில்தான்.

 

           அரக்கோணத்தில் இருந்தபோதுஅப்பவின் தம்பி ராமச்சந்திரன் வேலை தேடி அங்கு வந்தார். அவருக்குக் கண் பார்வை குறைவாக இருந்ததால் பெரிய தடிமனான கண்ணடி அணிந்திருப்பார். லிப்டன் டீ கம்பனியில் டீ போட்டுக் காண்பிக்கும் டெமாஸ்ட்ரேடராக தெருத்தெருவாய்ப் போய் வீடுகளில் டீ போடும் முறையை விளக்கிக் காண்பிக்க வேண்டும். ஒரு ஸ்டவ் கெட்டில் போன்ற சாதனங்களுடன் திரிய வேண்7lடும் பாவம் கண்பார்வை சரியாக இல்லாததால் ஒரு முறை கையில் சுடுநீர் பட்டு வெந்து வேதனைப் பட்டார். அத்துடன் அந்த வேலையும் விட்டார். பிறகு பழையபடி பாலக்காட்டுக்கே சென்று விட்டார். பிற்காலத்தில் ஒரு மருந்து கம்பனி ஏஜென்சி எடுத்து நிறைய சம்பாதித்து நல்ல நிலையில் வாழ்ந்தார். அவரை என் பேன் விபுவுடைய சோறூட்டுக்கு, குருவாயூர் சென்றபோது, அவர் வீட்டில் சந்தித்தோம். கண்பார்வை முழுவதுமாக இழந்திருந்தார். அவர் சொன்ன ஒரு வார்த்தை என் மனதை மிகவும் நெகிழச் செய்தது. கண்பார்வை போன பிறகு திருமகளின் பார்வை அவர் மீது பட்டதாகக் கூறினார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு முறை அவரை பெங்களூரில் என் அத்தை மகளின் பெண் கல்யாணத்தில்தான் பார்த்தேன் உறவுக்காரர்களை அடிக்கடி சந்திக்கவோ பேசி மகிழவோ முடியாதஒரு வாழ்வின் சூழலில் வாழ்ந்து விட்டோம். அரக்கோண நினைவுகள் தடம் புரண்டு வேறெங்கோ கொண்டு வந்து விட்டது.

 

       அரக்கோணத்தில் இருந்தபோது மேமை, குஞ்சுகுட்டி அம்மாள் எங்களுடன் இருந்தார்/.கூடவே வேலைக்கு ஒரு பெண்ணும் ,தத்தை என்று பெயர், இருந்தாள். மேமைக்கு சோமாவின் மேல் பிரியம் அதிகம். அவனும் அவர்களை நேசித்தான். அவர்கள்தான் எங்களுக்கு நம்முடைய இதிகாசங்களை அறிமுகப் படுத்தியவர். அவர் சொல்லக் கேட்டுத்தான் ராமாயணம் மஹாபாரதம் போன்ற கதைகளின் சாரம் முதலில் புரிய ஆரம்பித்தது.

 

 

                 அந்த மேமையை, அம்மா எங்கள் வீட்டு வேலை செய்பவர் என்று எல்லோருக்கும் அறிமுகப்படுத்தியிருந்தார்.நாயராகப் பிறந்த அவர் ஒரு பிராமணனுக்கு வாழ்க்கைப்பட்டு பிராமணப் பெண்ணாகவேஅடையாளப்படுத்திக்கொண்டு, வாழ்ந்தார். அவர்கள் தாய் மொழி மலையாளம்.எங்கள் வீட்டில் தமிழில்தான் பேசுவோம். அம்மா ஊருலகத்துக்குத் தன்னை ஒரு பிராமணப்பெண்ணாகவே காட்டிக்கொண்டார். அப்பாவும் அவரை ராஜம் என்று பெயரிட்டேக் கூப்பிடுவார். என்ன இருந்தாலும் இப்போது நினைக்கும்போது அம்மா நடந்து கொண்ட முறை, தன் சொந்தச் சித்தியை வேலைக்காரி என்று அறிமுகப்படுத்தி வாழ்ந்தது நிரடுகிறது. அதன் அழுத்தம் அவர்களே என் அப்பாவின் வீட்டில் வேலைக்கு இருந்தவர் என்று உணரப்படும்போது அதிகரிக்கிறது. இடம் பொருள் அந்தஸ்து,மக்களை எந்த அளவுக்கு மாற்றும் என்பதை, பிற்காலத்தில் உணர வைத்த அனுபவங்கள்தான் அவை.அப்பா இறந்தபோது மறுபடியும் அதே சித்தியுடன் அவர்கள் நிழலில் வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. மேலும் அம்மாவுக்கு உறவு என்று சொல்லிக் கொள்ளவோ சென்று வரவோ வேறு போக்கிடமே இல்லை என்பதும் நிதர்சனம். அந்தக் கால சூழலில் அப்பாவின் மறுமணம் அவர்களை அப்படி வாழ வைத்ததோ என்னவோ.

 

 

         இந்த சம்பவங்கள் நினைவுக்கு வரும்போது, அப்பாவின் மறுமணம் பற்றிக் கேள்விப்பட்ட செய்திகளும் மனசில் நிழலாடுகிறது. கூடவே அவரைப் பற்றியும் அவர் குடும்பம் பற்றியும் அறிந்தவையும் நினைவலைகளாகத் தோன்றுகிறது.

 

 

         கோவிந்தராஜபுரத்தில் கண்மணி ஐயரென்ற பெயரில் இருந்த என் தாத்தா சுப்பிரமணியம்-சுப்புலட்சுமி தம்பதியினருக்குப் பிறந்த மூத்த மகன் எங்கள் அப்பா மஹாதேவன். அவருக்கு ஐந்து சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருந்தனர். இந்த உறவுகளில் என் நினைவுக்கு வருபவர்கள் பாட்டி மற்றும் என் எல்லா சித்தப்பாக்களும், ஒரு அத்தை ராசம்மா- மட்டும்தான். என் தாத்தா பற்றிய நினைவே இல்லை. அவர்கள் குடும்பத்தில் என் அப்பாதான் மெத்தப் படித்தவர். B.A.தேறியிருந்தார். ஹரிஹர ஐயர் அனந்த லட்சுமி தம்பதியினருக்குப் பிறந்த பார்வதியை என் அப்பா மணந்தார். என் தாயையே எனக்கு நினைவில் இல்லாதபோது அவர்கள் மண வாழ்க்கைப் பற்றி அறிந்தவை எல்லாமே கேள்விப்பட்டதுதான். என் தாய்க்குக் கூடப் பிறந்தவர்கள் ஆறு சகோதரர்கள்,இரண்டு தங்கைகள். இவர்கள் எல்லோரும் ஓரளவுக்கு நன்கு அறிமுகமானவர்கள்.பெரிய மாமா டாக்டர் சேஷன், மற்றவர்கள்விஸ்வனாதன், கிருஷ்ணன்,நாராயணன் ,ரங்கனாதன் சுப்பிரமணியம் எனும் அம்பி, சித்திகள் சுபத்ரா, மற்றும் சாவித்திரி.

 

 

                      அப்பா மணமாகி குடித்தனம் நடத்தத் துவங்கிய காலங்களில்மாமனார் மாமியார் உதவி நிறையவே தேவைப்பட்டதாம். அவருடைய வாழ்வில் அந்தக் காலத்திலேயே மிகவும் கஷ்டப்பட்ட வாழ்வு என்றும், என் தாத்தா பாட்டிக் குடும்ப உதவிகளாலேயே ஓரளவு வாழ்ந்தார்கள் என்றும் சொல்லக் கேள்வி. இந்த வாழ்க்கையில் புத்திர செல்வங்களாக ஐந்து பிள்ளைகளும் ஒரு பெண்ணும் பெற்றுக்கொண்டனர்.அதில் மூத்த பிள்ளை இளவயதிலேயே இறந்து விட்டது.வென்கடாசலம், ஹரிஹரன், ராஜலட்சுமி, பாலசுப்பிரமணியம், சோமனாதன்

என்ற குழந்தைகள்தான் செல்வங்கள்.செல்வங்களா என்ற கேள்விக்குறி இப்போது எழுகிறது.பெற்ற குழந்தைகள் வளர்ந்து ஆளாகி அவர்களை பேணிப் பாதுகாப்பது கொடுத்து வைக்காமல்மகராசி தன்னுடைய 2728-/வயசிலேயே இறந்து போனார்.

 

 

        இந்த நிலையில் என் தாய் மாமா விஸ்வனாதனுக்கும் என் அத்தை ராசம்மாவுக்குமொரு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அம்மா இறந்தபோது உறவு விடாதிருக்க, என் தாத்தாவும் பாட்டியும் என் சித்தி சாவித்திரியை, என் அப்பாவுக்கு மறுதாரமாக மணமுடிக்க விரும்பினர். அப்பா ஏதோ சால்ஜாப்பு கூறி,அதனைத் தள்ளிப்போட்டு என் மாமா விஸ்வனாதனுக்கு,என் அத்தை ராசம்மாவை மண முடித்து வைத்தார். பிறகு சிறிது காலத்திலேயே என் மாற்றாந்தாயை ( அவர்கள் அப்போது என் தந்தைவழிப் பாட்டி வீட்டில் பத்து பாத்திரம் தேய்க்கும் வேலையில் இருந்தார் )காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டார். அப்பாவின் இந்த செய்கை என் தாய் வழித் தாத்தா பாட்டி வீட்டில் ஒரு பெரிய மனக் கசப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் வெளிப்பாடுகள் விளைவுகள் எல்லாம் சில பல நிகழ்வுகளுக்கு வித்தாயிருந்திருக்கலாம் என்பதே என் கருத்து. காலத்தின் தேவைகளுக்கேற்ப சூழ்நிலைகளுக்கும் உளைச்சல்களுக்கும் உட்பட்டு அவரவர்கள் எடுத்த முடிவுகளில் எது சரி எது தவறு என்று கணிக்கும் செயலில் ஈடுபடுவது சரியல்ல. அவரவர்கள் எடுத்த முடிவுகளுக்கேற்ப ,அவரவர்கள் வாழ்க்கை அமைந்து, வாழ்ந்தும் இறந்தும் போய் விட்டார்கள்.ஆனால் அப்படிப்பட்ட முடிவுகள் மற்றவர்களின் வாழ்க்கையையும் பாதிக்கும், மாற்றும் என்பதும் தவிர்க்க முடியாத உண்மை.

 

 

         இவ்வளவு நிகழ்வுகளும் எண்ணங்களும் எந்த அளவுக்கு என் மாற்றாந்தாயைப் பாதிதிருக்கலாம்,அவர்களுடைய வாழ்க்கை முறைக்குக் காரணமாயிருந்திருக்கலாம் என்பதோடு, என் அப்பாவின் சிந்தனைகளும் செயல்களும் பாதிப்படைந்திருக்கக் கூடும் என்பதும் வெறும் யூகங்களாகவே இருக்கும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். எங்களுடைய வாழ்க்கையில்( என் சகோதர சகோதரி )அவரவ்ர்கள் அறிந்து கொண்ட முறையில் அவரவரது எண்ணங்களுக்கேற்ப ,நடவடிக்கைகளுக்கு கார்ண காரியங்கள் கற்பித்து, வாழ்க்கையை வாழ்வதற்கும், வாழ்ந்த முறையை நியாயப் படுத்துவதற்கும், எங்கள் பெற்றோரின் வாழ்வும் அணுகு முறைகளும் முக்கிய காரணங்களாகவே இருக்கும். எந்த ஒரு செயலையும் விருப்பு வெறுப்பின்றி ஆராய வேண்டும். விருப்பத்தால் குறையும், வெறுப்பால் குணமும் வெளிப்படாமல் போகும். பிறருடைய வாழ்விலிருந்தும் நாம் அனுபவம் பெற வேண்டியது அவசியம். (தொடரும்)







6 comments:

  1. // எந்த ஒரு செயலையும் விருப்பு வெறுப்பின்றி ஆராய வேண்டும்...

    விருப்பத்தால் குறையும், வெறுப்பால் குணமும் வெளிப்படாமல் போகும்... //

    ஆகா...! உண்மை... இந்தப் புரிதல் ஒன்றே போதும்... ஆனால் இந்த எண்ணம் பலருக்கும் அரிதே... காரணம் :-

    // பிறருடைய வாழ்விலிருந்து"ம்" //

    "ம்" இங்கே மிகவும் முக்கியம்... அதனுள் பல பாடங்கள் மறைந்து உள்ளன...

    ReplyDelete
  2. பாடங்கள்பலரும் அறிந்ததேட

    ReplyDelete
  3. சுய சரிதை நன்றாக உள்ளது. சில சமயம் எண்ணங்கள் அலைபாய்வதால் பாரதக் கதைகளைப் போல் கிளைக் கதைகளுக்கு சென்று விடுகிறது. என்றாலும் மூலக்கதைக்கு பாதிப்பு இல்லாமல் திரும்பி விடுகிறீர்கள். தொடருங்கள்.

    ReplyDelete
  4. எவ்வளவு நினைவுகள்! வாழ்வில் நிறைய அனுபவங்கள்.

    //எந்த ஒரு செயலையும் விருப்பு வெறுப்பின்றி ஆராய வேண்டும். விருப்பத்தால் குறையும், வெறுப்பால் குணமும் வெளிப்படாமல் போகும். பிறருடைய வாழ்விலிருந்தும் நாம் அனுபவம் பெற வேண்டியது அவசியம்//

    ஆமாம் , உண்மை.

    ReplyDelete
  5. அவரவர் விருப்பத்துக்கு அவரவர் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும்போது அது மற்றவர்கள் வாழ்க்கையையும் பாதிக்கும் என்பது புரிவதில்லை என்பது சத்தியமான உண்மை.  தங்கள் செயல் நியாயம் என்றே நினைக்கிறோம் அப்போது!

    ReplyDelete
  6. நிறைந்த அனுபவங்களைத் தந்துள்ளீர்கள்.

    ReplyDelete