நாங்கள் கூனூரிலும் வெல்லிங்டனிலும் இருந்தபோது
மிகவும் கஷ்டத்துக்கு உள்ளாகி இருந்தோம். ஆனால் அவையெல்லாம் கஷ்டங்கள் என்று
இப்போதுதான் தெரிகிறது. அந்தக்காலத்தில் வாழ்க்கை அப்படித்தான் என்றும், அதைவிட
வசதியும் சுகமும் இல்லையே என்ற ஏக்கம் ஒருபோதும் எனக்கிருந்ததில்லை. அந்தக் குளிர்
பிரதேசத்தில் அரை நிஜாரும் சொக்காயும்தான் உடை. கம்பளி உடை அணியவோ,
உபயோகப்படுத்தவோ வசதி இருக்கவில்லை. இல்லையே என்ற ஏக்கமும் இருந்ததில்லை. காலணி
என்பதே கிடையாது. ஃபௌண்டன்பென் உபயோகித்ததே பள்ளியிறுதி வகுப்பில்தான். கிட்டப்
பார்வை குறை தெரிந்தும், அதை சோதித்துப் பார்க்கவோ, கண்ணாடி அணியவோ, வசதி
இருந்திருக்கவில்லை.அத்ற்கு உதக மண்டலத்துக்கோ, கோயமுத்தூருக்கோதான் செல்ல
வேண்டும். வசதி இருக்கவில்லை. இல்லையே என்பது எனக்கு ஒரு குறையாகத் தோன்றினதே
இல்லை. இப்போது யோசித்துப் பார்க்கும்போது அந்த BASIC
அனுபவங்கள்தான் என் குணாதிசயங்களுக்குக் காரணமாக இருந்திருக்கும் போலிருக்கிறது.
பள்ளியில் படிக்கும்போது ( ஃபிஃப்த் மற்றும்
சிக்ஸ்த் ஃபார்ம் )நான் சராசரிக்கும் சற்று மேலான மாணவனாகவெ என்னை
உணர்ந்திருக்கிறேன். பள்ளிப் பரீட்சைகளில் முதல் ஐந்து மாணவர்களுக்குள்தான் நான்
இருந்தேன். ஆங்கிலத்தில் முதலாவது மாணவனாகவே ஏற்றுக் கொள்ளப் பட்டேன். அப்பாவின்
அலுவலகத்திலிருந்து காகிதங்கள் கொண்டு வருவார். பழுப்பு நிறக் காகிதங்கள்.
அவற்றைத் தைத்து நோட் புத்தகங்களாக வைத்துக் கொள்வேன். ஒரே தடிமனான புத்தகத்தில்
நான்கைந்து பிரிவுகளாகப் பிரித்து,ஒவ்வொரு பாடத்துக்கும் இடம் ஒதுக்கி, அந்தந்த
இடத்தில் அந்தந்த பாடக் குறிப்புகளை எழுதிக் கொள்வேன். கணக்குக்கு மட்டும் தனி
நோட் புக். கட்டுரை எழுதக் கடையிலிருந்து வாங்கிய புத்தகம். பாடப்புத்தகங்கள்
எல்லாமே செகண்ட் ஹாண்ட். படிக்கும் காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டோ, உடலை வருத்தியோ
நான் படித்ததில்லை. எனக்குத் தெரியும் என்ற அகம்பாவம் பள்ளி இறுதி நாட்களில் வர
ஆரம்பித்து, என் புத்தகங்களையும்குறிப்புகளையும் சக மாணவர்களுக்குக் கொடுத்து,
அதனால் இன்னும் நன்றாகச் செய்திருக்க வேண்டிய இறுதிப் பரீட்சையில் எதிர்பார்த்த
அளவு மதிப்பெண்கள் எடுக்க முடியவில்லை. 1954-ம் வருடம் மார்ச் மாதம் பள்ளி இறுதிப்
படிப்பை முடித்தபிறகு நான் என்னைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். அப்பொழுது என்
உயரம் நான்கடி ஏழு அங்குலம். எடை சுமார் முப்பது கிலோ.(70 பௌண்ட்)நான் எப்படி
இருந்திருப்பேன் என்பது ஓரளவு புரிகிறதல்லவா,?எனக்கு என்னைப் பற்றிய தாழ்வுணர்ச்சி
தலை தூக்க ஆரம்பித்தது. மனசளவில் நான் பெரியவனாகவும் பொறுப்புள்ளவனாகவும் உணர
ஆரம்பித்தேன். ஆனால் உடலளவில் மிகவும் சிறியவனாகவும் இருந்தேன். என்னென்னவோ செய்ய
வேண்டும் என்று எண்ணங்கள் தோன்றும். எதுவுமே செய்ய முடியவில்லையே என்ற ஏக்கமும்
இருக்கும்.சில நேரங்களில் என்மீதே எனக்கு
எரிச்சலும் கோபமும் வரும். என்னையே எனக்கு சில சமயங்களில் வெறுக்கவும் தோன்றும்.
பதினைந்து வயது ஆறு மாதங்களில் பள்ளியிறுதிப் படிப்பில் தேறினேன். மேல் படிப்பு
என்ற பேச்சுக்கே இடமில்லை. தட்டெழுத்து சுருக்கெழுத்து படிக்கவும்வசதி
இருக்கவில்லை.அல்லது அதற்கான முழு முனைப்பு என் தரப்பில் இருக்கவில்லை.
சும்மா இருந்த நாட்களில் மனசில் ஆயிரம்
கேள்விகள் தோன்றும். எதையும் செய்து பார்க்க வேண்டும் என்று தோன்றும். அப்போது
ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்பட்டு நிறைய கேள்விகளுக்கு விடை தேட ஆரம்பித்தேன்.
விடியற்காலையில் எழுந்திருந்து, அந்த மலைப் பிரதேசத்தில் குளிர்ந்த நீரில்
குளித்து, ஒரு அறையில் சென்று அமர்ந்து கொண்டு, கண்களை மூடிக் கொண்டு, “ ஓம், ஓம்,
“ என்று சொல்லிப் பார்ப்பேன். தியானம் என்றால் என்ன என்று தேடுவதன் முயற்சி.
எனக்கு நாராயண குரு எழுதிய புத்தகம் ஒன்று கிடைத்தது. அதனைப் படித்து ஓரளவு
புரிந்து கொள்ள முயன்றேன். அப்போது இது இவ்வளவுதானா என்ற எண்ணம் ஏற்பட்டு எல்லாம்
தெரிந்து விட்டது போல எண்ணத்தொடங்கினேன். சுவாமி விவேகாநந்தர், ராமகிருஷ்ண பரம
ஹம்ஸர் இவர்களைப் பற்றியெல்லாம், அங்கும் இங்குமாய்ப் படித்து கொஞ்சம் புரிந்து
கொண்டேன் தினமும்,சர்க்கிள்
குவார்டர்ஸிலிருந்து ஒன்றரை மைல் தூரத்தில் ஒரு நாவிதன் கடைக்குச் செல்வேன் அதன் உரிமையாளர்,
மோகன் என்ற பெயர் கொண்டவர் நண்பரானார். அவருடைய கடையில் செய்திப் பத்திரிகை வாசிக்கவே செல்வேன்.படித்த
செய்திகளை அப்பாவுடன் பகிர்ந்து கொள்வேன். அவரும் என் பேச்சுக்கு முக்கியத்துவம்
கொடுத்து செவி சாய்ப்பார். இபோதும் வட கொரிய, தென் கொரிய சண்டைகளை விலாவரியாக
விவாதித்ததும்,சண்டை நிறுத்தம் ஏற்பட்டு, ஐ.நா. சமாதானப் படைகள் அங்கு போனது
பற்றியெல்லாம் விவாதித்தது நினைவுக்கு வருகிறது. அப்பாவுக்கு R.M.D.C.குறுக்கெழுத்துப் போட்டியில் கலந்து
கொள்வதில் ஆர்வம் அதிகம். காரணம், அதில் ஏதாவது அதிர்ஷ்டம் அடித்து, பெரிய தொகை
பரிசாகக் கிடைக்காதா என்ற ஆதங்கம்தான். ஆனால் வாரத்துக்கு எட்டணா மேல் செலவு
செய்யமாட்டார்.ஒரு போட்டிக்கு நாலணா வீதம் இரண்டு பதில்கள்
எழுதுவார். அதில் வரும் குறிப்புகளைக் கொண்டு, சரியான வார்த்தையைக் கண்டு பிடிக்க
வேண்டும். எது சரியான பதில் என்று என்னிடம் கேட்டு காரசாரமான விவாதங்களுக்குப்
பிறகு பதில் எழுதுவார். எனக்குத் தெரிந்து ஒரே ஒரு முறை பரிசாக ரூபாய் நூறு
வந்ததாக நினைவு. அது போதாதா, மேலும் மேலும் தொடர....மாலையில் சர்க்கிள்
குவார்டர்ஸிலிருந்து, வெல்லிங்டன் டௌனுக்குச் சென்று, வீட்டிற்கு வேண்டிய
சாமான்களை வாங்கி வருவோம். அப்பாவுடன் போகும்போதும் வரும்போதும் நிறையவே பொது
விஷயங்களைப் பற்றி விவாதிப்போம். ஒவ்வொரு முறையும் போகும்போது ஒரு குறிப்பிட்ட
கடையில்,வெள்ளையாடை அணிந்திருந்த ஒரு வயசான பாட்டியிடம், வேர்க்கடலை கொஞ்சம்
வாங்கிக் கொள்வார். வரும்போது உரித்துத் தின்று கொண்டே வருவோம்..ஒருமுறை
வேர்க்கடலை வாங்க, கைக்குட்டை எடுத்துச் செல்லவில்லை. அதற்குப் பதிலாக, தவறுதலாக
அம்மாவின் பாடி ஒன்றை எடுத்து வந்திருந்தார். கைக்குட்டைக்குப் பதிலாக பாடியைக்
கண்டதும் ,அந்த வேர்க்கடலைக் கிழவி, அப்பாவை மிகவும் கிண்டலடித்துவிட்டார்.
அப்பாவுக்கு வெட்கம் .இருந்தாலும் என் மனைவியின் பாடிதான் என்று சொல்லி வழிந்தார்.
அப்பாவுக்கும் எனக்கும் ஏற்பட்ட ஒரு நெருக்கத்துக்கு மேலே குறிப்பிட்டுள்ள
நிகழ்ச்சிகளும் முக்கியமானவை. என்னை ஒரு நண்பன் போல் நடத்திய என் தந்தையின்
நினைவுகள் பசுமையானவை.
நான் பள்ளியிறுதிப் படிப்பு படித்துக்
கொண்டிருந்த கால கட்டத்தில் (1953-1954 )ராஜிக்குத் திருமணம் நடந்தது. பெங்களூரில்
தாய் வழிப் பாட்டியவர்கள் மாப்பிள்ளை பார்த்து, அவளுடைய திருமணம் நடந்தது.
ராஜியின் கணவருக்கு பெங்களூரில் HAL-ல் மெகானிக்காக வேலை.
அப்போது அவருக்கு ஜோத்பூரில் போஸ்டிங் இருந்தது. அவளுடைய திருமணத்தின்போது நான்
அவளுக்கு தமிழில் ஒரு வாழ்த்துக் கவிதை எழுதிக் கொடுத்தேன். அவளுடைய
மணவாழ்க்கைக்கு முருகனையும் கணபதியையும் பெற்ற கயிலாய சிவ பெருமானின் அருள்
கிடைக்கட்டும் என்ற அர்த்தத்தில் எழுதியிருந்த கவிதை. என் எழுத்துக்களைப் படித்து,
ஊக்கப்படுத்தவோ, உற்சாகமூட்டவோ யாரும் செய்யவில்லை. அதை வேறெவருக்கும் காட்டாமல்
அவளுக்குத் தனிமையில் கொடுத்தது காரணமாயிருக்கலாம். அவள் என்னைவிட இரண்டே வயது
மூத்தவள்.அதிகம் படிக்காதவள்.
பள்ளி விடுமுறை நாட்களில் நாங்கள் பெங்களூருக்குச் செல்வோம். அப்போது என் பாட்டி வீட்டில் இருந்த புத்தகங்கள் பலவற்றைப் படித்திருக்கிறேன். விக்கிரமாதித்தன் கதைகள், வால்மீகி ராமாயணக்கதைகள் என்று எந்தப் புத்தகம் கிடைத்தாலும் படித்துவிடுவேன். படிப்பதில் ஒரு ஆர்வமிருந்தது. ஏதாவது ஒரு புத்தகம் கிடைத்துவிட்டால் ,முழுமையாகப் படிக்காமல் விட மாட்டேன். எவ்வளவு மோசமானதாகவும் ,பிடிக்காததாகவும் இருந்தாலும் முடிக்காமல் விட மாட்டேன். இதனால் மோசமான ( ஆங்கிலத்தில் TRASH என்று சொல்லலாம் )எழுத்துக்களிலும் எங்காவது நமக்குப் பிடித்தமானது கிடைக்குமா என்ற தேடல் இருந்தது. குறிப்பிட்ட எழுத்தாளர்கள்தான் பிடிக்கும், மற்றவர்கள் பிடிக்காது என்று பகுத்துப் பார்க்கும் பழக்கம் இருக்கவில்லை.
மேலும் பெங்களூர் பயணங்களில் ,குறிப்பாக
பள்ளியிறுதிப் படிப்பு, மற்றும் அதற்கு முன்பும் மேற்கொண்ட காலங்களில் ,என் மாமா
மகன் ஹரியுடன் சேர்ந்து விளையாடிய விளையாட்டுகளும் அடங்கும். ஹரிக்கு POLE VAULT எனும் கம்பு கொண்டு உயரம் தாண்டும் முறையைக்
கற்றுக் கொடுத்தேன். அதற்கும் முன்பாக நான் சோமா ஹரி மூவரும் சேர சோழ
பாண்டியர்களாக மாறி சண்டை போட்டு விளையாடுவோம். சில நினைவுகள் சம்பந்தா சம்பந்தம்
இல்லாமல் நுழைவதுதான், நான் இதையெல்லாம் எழுதக் காரணம்.
அப்பாவுக்கு நீரிழிவு
நோய் இருந்திருக்கிறது.வருடம் ஒருமுறை மிலிடரி ஆஸ்பத்திரியில் சோதனை செய்வார்கள்.
சிறுநீரில் சர்க்கரை சோதனையில் அவருக்கு அதன் அளவு அதிகமாயிருந்தால் அவருடைய
வேலைக்குப் பங்கம் வருமோ என்ற பயத்தில், அவருடைய சிறுநீருக்குப் பதிலாக என்னுடையதை
சோதனைக்குக் கொடுத்து விடுவார்.சோதனையில் அவருக்கிருந்த நோய் தெரியாமல்
போய்விடும். அதனால் அதற்கான மருந்துகளும் எடுக்காமல் இருந்து விட்டார்.
அந்தகாலகட்டத்தில் நான் பள்ளியிறுதி
முடித்திருந்த நேரம். அம்மாவுக்குப் பிரசவம்.(ஏழாவது குழந்தை )கூனூர் லாலி
ஆஸ்பத்திரியில் நடந்தது. பிறந்தது பெண்குழந்தை. சர்க்கிள் குவார்டர்ஸிலிருந்து
ஆஸ்பத்திரிக்கு சுமார் மூன்று நான்கு மைல்கள் இருக்கும். அங்கு யாராவது ஒருவர்
இருக்கலாம். குழந்தைக்கு பிறந்ததிலிருந்தே உடல் நலமில்லாமல் இருந்தது. கழுதைப்
பால் கொடுத்தால் சரியாகலாம் என்று சொல்லக் கேட்டு, மேட்டுப்பாளையம் சென்று கழுதைப்
பால் எல்லாம் வங்கி வந்தார் அப்பா. ஒருமுறை அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமல்
போக இரவு நேரம் பத்து மணி இருக்கும். அங்கிருந்து தகவல் சொல்ல சோமா தனியாக வந்து
அப்பாவைக் கூட்டிக்கொண்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றான். அவனுக்கு பயமென்பதே
தெரியாது. என்னால் அவ்வளவு தைரியமாக தனியாக வந்திருக்க முடியாது. வரும் பாதையும்
அகன்ற சாலையல்ல. செடிகொடிகள் சூழ்ந்த பாதை. என்ன செய்தும் பலனில்லாமல் அந்தக்
குழந்தை இறந்து விட்டது.அம்மாவுக்குப் பிறந்த ஏழு குழந்தைகளில் மூன்று பெண்கள்.
எதுவுமே தங்கவில்லை.
பள்ளியிறுதி படித்துவிட்டு வேலைவெட்டியில்லாமல் விரயமாக இருக்கிறேன் என்ற தாழ்வு மனப் பான்மை என்னை முழுமையாக ஆக்ரமித்திருந்த காலம் அது. வீட்டிலே வசதிகளும் மிகவும் குறைவு. நான் முன்பே கூறியிருந்ததுபோல வளர்ச்சியும் இல்லாமல் மிகவும் சிறிய பையன் போல் காட்சியளித்திருந்தேன். இருந்தாலும் வேலைக்குப் போய் வீட்டிற்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மனம் முழுக்க வியாபித்திருந்த காலம். ஏதாவது வேலைக்குப் போக வேண்டும் என்று அப்பாவை நச்சரிக்க ஆரம்பித்தேன். என் தொந்தரவு தாங்க முடியாமலும், என்னால் ஏதாவது உதவி வராதா என்ற நப்பாசையிலும், அவர் அவருடைய நண்பர்கள் சிலரிடம் என் வேலைக்காக கூறியிருந்தார். கோவையில் ஒரு நண்பருடைய கடையில் வேலைக்கு எஸ்.எஸ். எல். சி. படித்த ஒருவர் தேவைப் படுவதாகக் கேள்விப்பட்டு, அந்த நண்பரிடம் பேசியிருக்கிறார். அவரும் என்னை அனுப்பச் சொல்லிக் கேட்டார். எனக்கு தலைகால் புரியாத சந்தோஷம். முதன் முதலாக இரண்டு கால்சராய்களும், (பேண்ட்) ஒரு ஜோடி செருப்பும் வாங்கப் பட்டது. போக வேண்டிய இடம் நாங்கள் ஏற்கெனவே கோயமுத்தூரில் குடியிருந்த குவார்டர்ஸ் வளாகம்தான். கையில் ரூபாய் 10-/ டன் கோயமுத்தூர் போய்ச் சேர்ந்து, அந்த நண்பரின் கடையை அடைந்தேன். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அப்பா அனுப்பிய பள்ளியிறுதி படித்த அவருடைய மகன் நான் தான் வேலைக்கு வந்திருப்பதாகக் கூறினேன். அவர் என்னைக் கீழிருந்து கீழாக ( மேலிருஎது கீழாக என்று சொல்லிக் கொள்ளும்படி நான் இருக்கவில்லை.)ஒரு முறை நோக்கி,”தம்பி, மஹாதேவன் படித்த பையன் இருப்பதாகச் சொன்னபோது, நான் ஒரு வளர்ந்த பையனை நினைத்திருந்தேன். நீ ஒரு குழந்தை போலிருக்கிறாய். உனக்கு வேலை தரும்நிலையில் நீ இல்லை. அப்பாவிடம் விவரம் கூறி, என்னைத் தவறாக நினைக்க வேண்டாம் என்று கூறிவிடு “என்றார். எனக்கு அழுகை வந்து கண்களில் நீர் தளும்ப “நான் நன்றாக வேலை செய்வேன் “என்று கூறி மன்றாடினேன். பலனிருக்கவில்லை. முதல் வேலை தேடும் படலம் தோல்வியாக முடிந்தது.
பின்னர் பெங்களூர் வந்து வேலைக்கு முயற்சி
செய்வது என்று முடிவு செய்து பெங்களூர் வந்தே. முதலில் டாக்டர் மாமா சேஷன்
எனக்குக் கண்களைப் பரிசோதனை செய்வித்து கண்ணாடி வாங்கிக் கொடுத்தார். எனக்கு ஒரு
ப்ரொஃபெஸ்ஸரின் தோற்றம் வந்துவிட்டது என்று கலாய்த்தார்கள் ராஜி அப்போது சிவாஜி
நகரில் டஸ்கர் டௌன் , மாமனார் மாமியார் மச்சினர்களுடன் ஒரு சின்ன வீட்டில்
இருந்தாள். என் மாமாவீடு இன்ஃபண்ட்ரி ரோட் க்ராஸில் இருந்தது. நான் அங்கிருந்தேன்.
ராஜியின் மாமனார் திரு. பட்டு ஐயர் எனக்கு வேலை வாங்கிக் கொடுப்பதாகக் கூறினார்.
அப்போது பெங்களூர் விதான சௌதா கட்டுமானப்
பணிகள் தொடங்கி இருந்தன. கருங்கல் வேலைப் பாடுகள் கொண்ட தூண்களும் விதானங்களும்
செதுக்கும் வேலைகள் நடை பெற்றுக் கொண்டிருந்தன. அதில் ஒரு காண்ட்ராக்டர்,
திரு.விலாஸ் ராவ் நாயக் என்பவர்.அங்கு கொத்து வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு
மேஸ்திரி போல் ஒரு வேலை. திரு.பட்டு ஐயர் சொல்லி விலாஸ்ராவ் நாயக் எனக்குக்
கொடுத்தார்.காலை எட்டு மணி முதல் மாலை ஆறுமணி வரை கல் கொத்துபவர்கள் வேலையை
மேற்பார்வை செய்து கொண்டு இருக்க வேண்டும். நாள் முழுவதும் வெயிலில் நின்று கொண்டு
இருக்கவேண்டும். நானும் ஆர்வத்துடன் தலையில் ஒரு ஹாட் அணிந்துகொண்டு
நான்
செய்ய வேண்டிய வேலைகளைக் கவனமுடன் செய்து வந்தேன். ஒரு மாதம் முடிந்து எனக்கு
ரூபாய் இருபது சம்பளமாகத் தருவதாக திரு. நாயக் கூறினார். எனக்கு மிகவும் ஏமாற்றமாக
இருந்தது. தினமும் வெயிலில் நின்று, ஒரு மாதம் கஷ்டப்பட்டு புரிந்த பணிக்கு ரூபாய்
20-/ சம்பளம் மிகவும்குறைவாகப் பட்டது. திரு. பட்டு ஐயரிடம் கூறினேன். அவர் அதை
வாங்க வேண்டாமென்றும் ,நாயக்கிடம் கூறி அதிகம் பெற்றுத் தருவதாகக் கூறினார். ஆனால்
திரு.நாயக் அதற்கு மேல் தர முடியாதென்றும் வாங்கிக் கொள்ளாவிட்டால் அதுவும்
கிடைக்காது என்றும் கூறினார். பட்டு ஐயர் அவரிடம் கோபப்பட்டு சண்டை போட்டுத்
திரும்பி விட்டார். என் மாமா திரு நாராயணன் அட்வொகேட் மூலம் ஒரு லாயர் நோட்டீஸ்
நாயக்கிற்கு அனுப்பப்பட்டது. அவர் அதை பெற்றுக் கொள்ளவேயில்லை. மொத்தத்தில் பூர்வ
ஜென்மத்தில் நான் நாயக்கிடம் பட்ட கடன் என் வேலை மூலம் அடைபட்டிருக்க வேண்டும்.
இப்படியாக என் முதல் வேலை சம்பளமில்லாத ஒரு மாதப் பணியாக அமைந்துவிட்டது.
இப்போதும் விதான சௌதாவைக் காணும்போது என் சம்பளமில்லாப் பணிமூலம் என் பங்கு அதில்
இருப்பது நினைவுக்கு வரும். இதற்கிடையில் நான் ஹாட் போட்டுக்கொண்டு ஒரு நாள்
ராஜியின் வீட்டுக்குச் செல்ல அடுத்த வீட்டு நாயொன்று என்னைக் கடித்து
விட்டது.அதற்கு நான் யாரோ வித்தியாசமானவனாகத் தெரிந்திருக்க வேண்டும்.நல்ல காலம்
ஒரு ஏ.டி.எஸ் ஊசியுடன் டாக்டர்கள் நிறுத்திக் கொண்டார்கள். இந்தக் காலத்தில்
ராஜியின் மைத்துனன் எனக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்தான். இப்போது சிவாஜி
நகர் பஸ் நிலையம் அப்போது மிகப் பெரிய திறந்த வெளியாக இருந்தது. அங்குதான் சைக்கிள்
ஓட்டக் கற்றுக் கொண்டேன்.
என் முதல் வேலை
முயற்சியும்,கிடைத்த வேலையும் ஏமாற்றங்களில் முடிந்திருக்க,ஒரு நாள் காலையில் என்
தாத்தா அவர்கள் என்னிடம் “I do not like you
to stay here; you better get out” என்று கூறினார்.நான் செய்த தவறு என்ன
என்று தெரியாமலெயே என்னை வீட்டை விட்டுப் போ என்று சொன்னது என்னை மிகவும்
பதித்தது.வீட்டை விட்டு போவதென்றால் வெல்லிங்டனுக்குத்தான் செல்ல வேண்டும்.
அப்பாவுக்குக் கடிதம் எழுதினேன். ரயில் பயணத்துக்குப் பணம் அனுப்பும்படியும், அதை
ராஜியின் விலாசத்துக்கு அனுப்புமாறும் எழுதினேன். அப்பா மிகவும் வருத்தப்பட்டு
என்னைத் திரும்பி வரும்படி எழுதினார். எனக்கு இன்னும் சிறிது காலம் இருக்கலாம்
என்று தோன்றினால் இருக்கலாம் என்றும் எழுதினார். அப்போது நான் மிகவும்
வைராக்யத்துடன் இனி அவர்கள் வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்க மாட்டேன் என்று
உறுதி கொண்டு வெல்லிங்டன் வந்து சேர்ந்தேன். இதற்கிடையில் வேலைக்காக பெங்களூர்
எம்ப்லாய்மெண்ட் எக்ஸ்செஞ்சில் பதிவு செய்திருந்தேன். நேஷனல் டிஃபென்ஸ் அகாடமி,
டெஹ்ராடூனின் பயிற்சிக்காக விண்ணப்பித்திருந்தேன். அம்பர்னாத்-ல் பயிற்சிக்கு
ஆட்கள் எடுப்பதாகவும் அதற்கு தேர்வு எழுத வேண்டும் என்றும் அப்பா கூறியிருந்தார்.
ஆனல் தேர்வு எழுத மனுப்போடும் நாளும் நேரமும் தவறியிருந்தது. எல்லாமாக
ஏமாற்றங்களையே சந்தித்துக் கொண்டிருந்தேன்.இவ்வளவு நாட்களுக்குப் பிறகும் எனக்கு
என் தாத்தா ஏன் என்னை வீட்டை விட்டுப்போகச் சொன்னார் என்று தெரியவில்லை. அவருக்கு
என் மேல் காழ்ப்புணர்ச்சியா, இல்லை என் தந்தை மேலிருந்த வெறுப்பா, இல்லை நான் தான்
ஏதாவது தவறு செய்திருந்தேனா என்று ஒன்றும் விளங்கவில்லை. எந்தக்காரணமாக
இருந்தாலும் அது என்னிடம் தெரிவிக்கப் படவில்லை. ஆனால் அந்த சம்பவம் என்னை மனசில்
உறுதி உள்ளவனாகவும் ,வைராக்கியம் மிக்கவனாகவும் மாற்றியது.
. மறுபடியும் வெல்லிங்டன், மறுபடியும் அப்பாவிடம் நச்சரிப்பு, , மறுபடியும் அப்பாவின் முயற்சி என்று என் வேலை தேடும் பணி
தொடர்ந்தது.
கூனூரில் ஒரு ஓட்டல். மைசூர் லாட்ஜ் என்று பெயர். அதற்கு ஒரு அன்னெக்ஸ் கூனூர் ரயில் நிலையத்துக்கு எதிரில், சுமார் நூறு அடி உயரத்தில் இருந்தது. அதன் உரிமையாளர் கிருஷ்ண போத்தி. அங்கு வேலை செய்ய ஒரு படித்த , சற்றே ஆங்கிலம் பேசத் தெரிந்திருக்கும் இளைஞன் தேவை என்றும் தெரிவித்திருக்க, அப்பா அவரிடம் பேசி இருக்கிறார். என்னையும் அறிமுகப் படுத்தினார். என்னை வேலையில் சேர்த்துக் கொண்டார்கள். வாரம் ஆறு நாட்கள் வேலை. அங்கேயே தங்கி இருக்கவேண்டும். ஞாயிற்றுக் கிழமை வீட்டிற்குப் போய் வரலாம்.என் செலவு போக மாதம் ரூ.25/-சம்பளம். வேலையில் சேர்ந்து விட்டேன். அங்கு நான் தங்கி இருந்த நாட்கள் என்னை சிறிய பையனிலிருந்து, ஒரு இளைஞனாகவும் உலகம் தெரிய வழி செய்யும் வகையிலும் அமைந்தது.(தொடரும்)
சிறுவயதிலிருந்தே பலவிதமான முயற்சி + பலவிதமான எண்ணங்களும்... ஆனால் எதையும் எளிதாக எடுத்துக் கொண்டது மட்டும் தெரிகிறது... அருமை ஐயா...
பதிலளிநீக்குநன்றி
நீக்குதாத்தா ஏன் அவ்வாறு சொன்னார் என்பதற்கான உண்மையான காரணம், இந்நாள் வரைக்கும் தெரியாதா ஐயா...
பதிலளிநீக்குதெர்ந்தால் மறைக்கும் எண்ணமில்லை
நீக்குடயரி எழுதி அதில் இருந்து எடுத்து எழுதுவது போல் கோர்வையாக எழுதுகிறீர்கள். தொடரட்டும்.
பதிலளிநீக்குJayakumar
எல்லாமே நினைவில் இருந்து வருபவை
நீக்குசார் உங்கள் அனுபவங்கள் உங்களுக்கு நிறையவே கற்றுக் கொடுத்திருக்கும். எத்தனை கஷ்டங்கள்! ஒரு சில வாசித்த நினைவும் வருகிறது. கோயம்புத்தூரில் வேலை, அன்னெக்ஸில் சேர்ந்தது பற்றி நினைவு.
பதிலளிநீக்குஅது சரி தாத்தா ஏன் வெளியில் போகச் சொன்னார்? காரணம் அதன் பின்னும் தெரியவில்லையோ?
கீதா
எங்கள் வீட்டிலும் பழைய நோட்டுப் புத்தகங்களில் இருந்து பேப்பர் எடுத்து நோட்புக் தைத்து அதில்தான் நீங்கள் சொல்லியிருப்பது போல ஒவ்வொரு பாடத்திற்கும் பிரித்து எழுதுவதுண்டு. புத்தகங்கள் எல்லாமே சீனியர்களிடம் இருந்துதான் வாங்கிப் படிப்பது.
நீக்குகீதா
தாத்தாஇ ப்போது இல்லையே
நீக்குஒவ்வொரு அனுபவம்
நீக்குமுந்தைய நான் யார் பகுதிகளையும் வாசித்தேன் சார். சிறு வயதில் நிறையவே கஷ்டங்கள் பட்டிருக்கிறீர்கள். அப்பாவுடன் நண்பன் போன்று பழகிய அந்த அனுபவங்கள்தான் இப்போது உங்களுக்கு உங்கள் மக்களோடு இருப்பதும் தெரிகிறது.
பதிலளிநீக்குதுளசிதரன்
சில அனுப்பவ பாடங்கள்
நீக்குவிட்டுப்போன பதிவுகளைப் படிக்கவேண்டும். பயணங்களால் படிக்க இயலவில்லை. படித்துவிட்டுக் கருத்திடுகிறேன். நீங்க ஒரு மெடிகுலஸ் ரைட்டர். முடிந்தவரை கோர்வையாக நினைவில் வைத்துக்கொண்டு எழுதுகிறீர்கள்
பதிலளிநீக்குநன்றீ
பதிலளிநீக்குவேலை கிடைத்த நேரம் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
பதிலளிநீக்குஆம்
நீக்குஎன் கமெண்ட் காணாமல் போய்க்கொண்டே இருக்கிறது!
பதிலளிநீக்கு