திங்கள், 25 ஜூலை, 2022

நான் யார் ....6

 


       பள்ளியில் ஆசிரியர்களாக இருந்தவர்களில் ப்ரத்ர் மாண்ட்ஃபோர்ட், ப்ரதர் ஜான் ஆஃப் த க்ராஸ், திரு. வேங்கடராம ஐயர், திரு. எம். பி. காமத், திரு. எஸ்.பி. காமத், திரு. தர்மராஜ ஸிவா மறக்க முடியாதவர்கள். ப்ரதர் மாண்ட்ஃபோர்ட் ஐந்தாம் ஃபார்ம் வகுப்பாசிரியர். ;ப்ரதர் ஜா ஆஃப் த க்ராஸ் ஆறாம் ஃபார்ம் வகுப்பாசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்;.வேங்கடராம ஐயர் தமிழாசிரியர். எம்.பி. காமத் கணித ஆசிரியர், மற்றும் என்.சி.சி. ஆசிரியர், எஸ்.பி. காமத் சோஷியல் ஸ்டடிஸ்  மற்றும் திரு.சிவா விஞ்ஞான ஆசிரியர்கள் ஆவார்கள். ஒவ்வொரு ஆசிரியரும் அவர்கள் தொழிலை தெய்வமாக மதித்தவர்கள். மாணவர்களிடம் பெரும் அன்பு கொண்டவர்கள். ஒவ்வொரு ஆசிரியரையும் நினைவில் நிற்க வைத்த சம்பவங்கள் ஏராளம். ஆனால் ஒவ்வொருவரைப் பற்றியும் ஒரு குறிப்பாவது அவசியம். ஒரு முறை வகுப்பு பரீட்சை நடந்து கொண்டிருந்தது. கரும்பலகையில் வினாக்களை எழுதி அதற்கு பதில் எழுதப் பணித்திருந்தார்கள். நான் எப்போதும் முதல் பெஞ்சில் உட்காருபவன். அன்று பரீட்சைக்காக என்னைக் கடைசி பெஞ்சில் உட்கார வைத்தார்கள்.எனக்கு கரும்பலகையில் எழுதியது சரியாகத் தெரியாததால் அடுத்திருந்த மாணவனை எட்டிப் பார்த்து, கேள்விகளை தெரிந்து கொண்டேன். நான் காப்பி அடிப்பதாக எண்ணி தலைமை ஆசிரியரிடம் அனுப்பினார்கள். எனக்கு அழுகை அடக்க முடியவில்லை. நான் வகுப்பில் முதல் மூன்று இடங்களில் வருபவன். ஆதலால் காப்பியடிக்க வேண்டிய நிலையில் நான் இல்லை என்று அழுது கொண்டே வாதாடினேன். என் நிலையைப் புரிந்துகொண்ட தலைமை ஆசிரியர் ப்ரதர் ஜான் என்னை சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரத்தில் மணி பார்க்கச் சொன்னார். நான் சற்றே அருகில் சென்று பார்க்க முயன்றபோது,என்னைத் தடுத்து, இருந்த இடத்திலிருந்தே நேரம் பார்க்கச் சொன்னார். என்னால் முடியாததால், அவர் என்னிடம் என் கண் பார்வையில் குறையிருப்பதையும், அதை என் தந்தையிடம் கூறும் படியும் கூறி, என்னைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் அளித்தார். அப்போதுதான் என் கண் பார்வையில் குறை இருப்பது தெரிந்தது. இருந்தும் கண் பார்வையின் குறை அறியவும் கண்ணாடி அணியவும் அப்போது எங்கள் வீட்டில் நிதி நிலைமை சரியாக இல்லாததால். நான் பள்ளியிறுதிப் பரீட்சை முடித்து, பெங்களூர் வந்தபோதுதான் என் மாமா டாக்டரிடம் காட்டிக் குறையறிந்து கண்ணாடி அணிந்தேன். காலம் கடந்து பரிசோதனை செய்ததால் கண்ணாடியின் வீரியமும் அதிகமாக மைனஸ் ஆறு என்ற நிலையில் இருந்தது.

 

 

           கணக்கு ஆசிரியர், எம்.பி. காமத் ட்ரிக்னோமெட்ரி பாடம் நடத்தும்போது, ஒரு கதை சொல்லி பாடம் புரிய வைத்தார். அத்தை மாமன் மக்களை ஆங்கிலத்தில் கசின் என்று அழைப்பர். ஒரு முறை எல்லை மீறிய போது அந்தப் பெண், ah cos,..oh sin.  என்று சொல்லி அணைப்பிலிருந்து தன்னைக் காத்துக் கொண்டாளாம். Ah Cos என்பது

ADJACENT SIDE /HYPOTANEUS  FOR COSINE என்றும்  OH SIN என்பது OPPOSITE SIDE / HYPOTANEUS  FOR  SINE என்றும் விளங்க வைத்தார். இதையே என் பேரன் விபுவுக்கும் நான் சொல்லிக் கொடுத்தேன். சயின்ஸ் ஆசிரியர் சற்றே குள்ளமானவர். தலைப்பாகை அணிந்திருப்பார். மெல்லிய குரலில் பேசுவார். அவர் பேசுவது கேட்க வேண்டுமானால் வகுப்பில் நிச்சயம் அமைதி காக்கப்பட வேண்டும். மிகவும் கண்டிப்பானவர். அவர் மாணவர்களுக்கு தரும் அதிகபட்ச தண்டனை, வகுப்பில் உள்ள சுவற்றில் பதிக்கப் பட்டுள்ள புத்தக அலமாரிக்கு அடியில் நிற்க வேண்டும். நேராக நிற்க இயலாது. சுவற்றுடன் சேர்ந்து கால்களை சற்றே மடக்கித்தான் நிற்க முடியும். தனிப்பட்ட முறையில் எல்லோரும் சுத்தமாக இருக்க வற்புறுத்துவார். பௌடர் ஸ்னோ போன்றவை உடம்பின் துர்நாற்றத்தை மறைக்கவா என்று கேள்வி கேட்பார். திரு.எஸ்.பி. காமத் சோஷியல் ஸ்டடிஸ் பாடம் நடத்துவார். THE SOLE JUSTIFICATION FOR EXISTENSE IS THE SEARCH FOR TRUTH. என்ற காந்தியின் வாக்கினை எங்களுக்கு முறையாகப் பயிற்றுவித்தவர். சமுஸ்கிருதமும் தமிழுங் கற்று பாரதப் பண்பாட்டினை வளர்க்க வேண்டும் என்று பாடங்களூடே பயிற்றுவித்தவர் எங்கள் தமிழாசிரியர். இவர்களைத் தவிர பள்ளி கரஸ்பாண்டண்ட்  ஆக ப்ரதர் க்ளாடியஸ் இருந்தார். பள்ளி மாணவர்களை அவர்களுடைய குழந்தைகள் போல நடத்துவார். ஹூம்.! அது ஒரு கனாக் காலம். !

 

 

      நாங்கள் அப்பர் கூனூரில் பேரித் தோப்பு நடுவே வசித்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சி. அடிக்கடி நினைவு கூர்வது. ஒரு நாள் அப்பா வேலைக்குப் போகாமல் வீட்டில் உடல் நலமில்லாமல் இருந்திருக்கிறார். மதியம் கழிந்து சற்று நேரமிருக்கும். ஓய்வாக இருந்தபோது ஒரு சாமியார், வீட்டிற்கு வந்திருக்கிறார். அவரைப் பார்த்ததும் அப்பாவும் அம்மாவும் வீட்டுக்குள் அழைத்து உபசரித்திருக்கிறார்கள். வந்தவர் தாம் இமயமலையில் தவம் செய்பவர் என்றும், நாட்டு மக்களின் நலத்துக்காக ஒரு யாகம் நடத்தி அன்னதானம் அளிக்க விரும்புவதாகவும், அதற்குப் பணம் தர முடியுமா என்றும் கேட்டிருக்கிறார். மாலை டாக்டரிடம் செல்ல அப்பா,ரூ.10-/வைத்திருந்தார். சாமியார் அப்பாவின் கையைப் பிடித்து, சுவற்றைக் கிள்ளி சிறிது சுண்ணாம்பைக் கொடுத்திருக்கிறார். கற்பூர வாசனை வந்ததாம். “ ஐந்து ரூபாய் தருவாயா. ?என்று கேட்டதும் அப்பா சரியென்றிருக்கிறார். வந்தவர் பணம் வேண்டாமென்றும் அப்பாவை சோதிக்கவே கேட்டதாகவும் சொன்னாராம்.பிறகு அம்மாவைப் பார்த்து அடுப்பிலிருந்து சிறிது சாம்பல் எடுத்து வரச் சொன்னாராம். அம்மாவும் எடுத்துவந்து கொடுத்தபோது, அதிலிருந்தும் கற்பூர வாசனை வந்ததாம். வந்த சாமியார் அம்மாவிடம் “ இரண்டு ரூபாய் தருவாயா,என்று கேட்கவும், அம்மாவும் சரியெனக் கூறி இருக்கிறார். வந்தவர் அப்பாவிடமும் அம்மாவிடமும் அவர்கள் தர சம்மதித்த ரூபாய் ஐந்தும், ரூபாய் இரண்டும் கொண்டு வரச் சொல்லி பணத்தை வாங்கிக் கொண்டு சென்று விட்டார். அவர் சென்ற சற்று நேரம் கழித்தே, அப்பாவுக்கும் ,அம்மாவுக்கும், சுய உணர்வு வந்து நடந்ததை எண்ணிப் பார்த்திருக்கிறார்கள். மருத்துவச் செலவுக்கு வைத்திருந்த ரூபாய் பத்தில் ஐந்தும் இரண்டுமாக ஏழு பறி கொடுத்துவிட்டு பரிதாபமாக அமர்ந்திருந்தபோது,  நானும் சோமாவும் வந்து விஷயம் கேட்டு அந்த சாமியாரைத் தேடிப் போனோம். பலன் கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு வேண்டாமென்று சொல்லி பிறகு ஏதாவது வேண்டுபவர்களை அஞ்சும் ரெண்டும் ஏழு என்று கேலியாகக் கூறுவோம்.

 

          கூனூரில் இருக்கும்பொது வீட்டின் பின் புறத்தில் சற்று தூரத்தில் குடியிருந்த ஒரு வாலிபர்,ராஜியிடம் காதல் என்று கூறி ஏதோ பேச முயன்றிருக்கிறார். ராஜிக்கு பதினைந்து வயதிருக்கும். அவளும் ஏதோ பேசி கலியாணத்துக்கு அப்பா அம்மாவிடம் கேளுங்களென்று கூறியிருக்கிறார். இது அப்போது விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த ஆச்சு அண்ணாவுக்குத் தெரிந்து, அவளைக் கண்டபடி அடித்துவிட்டார். அந்த சம்பவம் ராஜியை சீக்கிரம் திருமணம் செய்து அனுப்பவேண்டிய ஒரு உந்துதலை வீட்டில் ஏற்படுத்தியது.

 

      கூனூரிலிருந்து வெல்லிங்டன் அலுவலகத்துக்கு அப்பா சென்று வருவதில் இருந்த கஷ்டங்களும்,மேலும் அலுவலக குடியிருப்பு வெல்லிங்டனில் கிடைத்ததிலும் எங்கள் ஜாகை அங்கு மாறியது. #13, சர்க்கிள் குவார்டர்ஸ் என்ற விலாசத்திலிருந்த வீடு. பெரிய வீடு. மூன்று பெரிய ஹால்கள், மூன்று அறைகள் சமையலறை பாத்ரூம் என்று சுமார் 2000 சதுர அடி கொண்ட வீடு. சுற்றிலும் விஸ்தாரமான இடம். சாலையில் இருந்து சற்றே இறக்கத்தில் இருந்தது. வீட்டி முன்புறம் ஒரு பெரிய மரம். அதனடியில் முனீஸ்வரன் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது. மரத்தின் அருகே செர்வண்ட் குவார்டர்ஸ் அதில் திரு. ஜோசப், அவர் மனைவி பூவா, மகள் நேவீஸ் மற்றும் அவர்கள் குடும்பம் தங்கி இருந்தது. பூவா அம்மாவுக்கு ஒத்தாசையாய் இருப்பதுண்டு. நாங்கள் பள்ளிக்குச் செல்ல மூன்று மைலுக்கும் மேலாக நடக்க வேண்டும். சர்க்கிள் குவார்டர்ஸிலிருந்து சற்று தூரம் நடந்து, மேடேறி, மெட்ராஸ் ரெஜிமெண்டல் செண்டர் முன்பாகப் போய், செர்விஸஸ் ஸ்டாஃப் காலேஜ் , ஜிம்கானா சென்று அங்கிருந்து ஸிம்ஸ் பார்க் வழியாகப் பள்ளிக்குச் செல்ல வேண்டும். அதெல்லாம் அப்போது சர்வ சாதாரணமாகத் தெரிந்தது. பிறிதொரு காலத்தில் நானும் சோமாவும் கூனூர் வெல்லிங்டன் எல்லாம் சென்று எங்கள் பள்ளிக்கூடம் இருந்த வீடு முதலியவற்றைப் பார்க்க விரும்பினோம். அப்போது கூனூரிலிருந்து வெல்லிங்டனுக்கு எங்களால் நடக்க முடியாமல் ஆட்டோ ரிக்‌ஷாவில் சென்றோம்.

 

      அலுவலகக் குடியிருப்பில் இருந்தபோது தினமும் முனீஸ்வரனுக்கு விளக்கேற்றும் பணியும் ஒன்று. மாலையில் யார் செய்வது என்று வழக்கே நடைபெறும். பெரும்பாலும் சோமாவே அந்த வேலையைச் செய்ய வேண்டி வரும். மாலையில் அந்த மரத்துக்கு அருகே செல்லவே எனக்குப் பயமாக இருக்கும். ஆனால் சோமா மகா தைரியசாலி.

 

      நாங்கள் அலுவலகக் குடியிருப்பில் இருந்தபோது, ஆச்சு அண்ணாவுக்கு என்ன மனமாற்றமோ ஏற்பட்டு, அப்பா அம்மாவுக்கு எதிராக எண்ணத் துவங்கினார்.அவருக்கு சம்பளம் கிடைக்கும் நேரத்திலேயே, ஒரு குறிப்பிட்ட தொகை அப்பாவுக்குக் கிடைக்குமாறு ஏற்பாடு செய்திருந்த அவர், அதை நிறுத்தி விட்டார். ஒரு நாள் அவர் வெல்லிங்டன் குடியிருப்புக்கு அருகே முகத்தில் கைக்குட்டை கட்டிக் கொண்டு, ( அடையாளம் தெரியாமலிருக்க )நடராஜன் பாபுவிடம் ஏதோ கேட்டிருக்கிறார். அவரை சற்றுத் தொலைவில் கண்ட அம்மாவுக்கு சந்தேகம் வர, ஆச்சு அண்ணாதானா என்று பார்த்து வர எங்களை அனுப்பினார். சோமாதான் முதலில் ஓடிப்போய்ப் பார்க்க, அவர் ஹிந்தியில் ஏதோ கூறிக்கொண்டே சென்று விட்டார். ஏதோ ஒரு ஓட்டலில் தங்கி இருந்திருக்கிறார். பிறகு வீட்டுக்கு வந்து ஓரிரு நாட்கள் நன்றாகக் கழிந்த பிறகு, ,அம்மா எங்களை சரியாக நடத்தவில்லை, கொடுமைப் படுத்துகிறார், என்று கூறி தகராறு செய்து கோபித்துக் கொண்டு போய் விட்டார். இந்த இடத்தில் சில விஷயங்களைக் குறிப்பிட வேண்டும். அன்பும் பரிவும் மிக்க ஆச்சு அண்ணா ஏன் இப்படி மாறினார். சித்தியை அன்னையாகவே பாவித்து, எல்லோருடனும் அன்பாக இருந்த அண்ணா ஏன் மாறினார். அம்மாவின் கொடுமைகள் ஏதாவது இருந்திருந்தால் அவர் எங்களுடன் இருந்தபோதே, தெரிந்திருக்க வேண்டும். கொபமோ, வெறுப்போ அப்போதே தோன்றியிருக்க வேண்டும். எல்லோரிடமும் சுமுகமாக, அன்பாக ,பரிவாகப் பழகியவர், மாறியது அவருக்கு திடீரென்று தோன்றிய ஞானோதயம் அல்ல. வெறுப்பும் கோபமும் அவருக்கு இருந்தது இல்லை. யாராவது எதையாவது கூறக் கேட்டு அதற்கு நியாயம் கற்பிக்க காரணங்களைக் கண்டுபிடித்து சண்டை போட்டார். சிறிய வயதில் மிகவும் வசதியுடன் வாழ முடியவில்லை. சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் அதை அனுபவிக்கவும் வேண்டும்;அதே சமயத்தில் அப்படி அனுபவிக்கக் கிடைத்த சம்பளத்தை பகிர்ந்து கொண்டால் ,அப்பாவுக்கு உதவினால் முடியாது.இவ்வளவு காலம் நீ கஷ்டப்பட்டு விட்டாய்,இனியாவது நல்லபடியாக வாழ வேண்டியதைப் பார் “என்கிற தோரணையில் அவருக்கு புத்திமதிகள் கிடைத்திருக்க வேண்டும். புத்திமதி அளித்தவர்கள் வேண்டுமென்று செய்தார்களோ, இல்லை அவர்களது தரப்பு எண்ணங்களுக்கு வடிகால் கொடுக்கவும் , அப்பாவுக்கு தண்டனை தரவும் வேண்டிச் செய்தார்களோஎன்பது முக்கியமல்ல. நாம் எடுப்பார் கைப் பிள்ளையாக இல்லாமல் சுயமாக சிந்தித்துசெயல்பட வேண்டிய அறிவை ஆண்டவன் கொடுத்திருக்கிறான் அதனை உபயோகப் படுத்தாமல் இருந்தது துர திருஷ்டமே. அப்பா அவருடைய வாழ்வில் எவ்வளவு வேதனை அனுபவித்திருந்தார் என்பது எனக்குத் தெரியும். அந்த மாதிரி நேரங்களில் ஆச்சு அண்ணா செய்தது தவறு என்று எடுத்துக்கூற யாரும் இருக்கவில்லை. அப்பாவின் தரப்பு நியாயங்களை அப்போது அண்ணா உணர்ந்திருக்கவில்லை. அவர் அப்போது செய்தது தவறு என்று இப்போது நான் அவரிடம் கூற முடியும். அவருக்குப் புரிய வைக்கவும் முடியும். ஆனால் அதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை. இப்போது அப்பாவும் இல்லை. அம்மாவும் இல்லை. அந்த விஷயங்களைப் பற்றிப் பேசினால் அவர் வருத்தப் படலாம். ஆனால் திருத்திக் கொள்ள முடியாது. அம்மாவின் மீது வெறுப்பு வரக் காரணம் கூறி நியாயப் படுத்த முன்வரலாம். என்ன இருந்தாலும் அவர் எங்களைப் பெற்ற தாய் அல்லவே. அவர்கள் பெற்ற குழந்தைகளுக்கு அன்பும் பரிவும் சலுகைகளும் காட்டுவது முறைதானே, இயற்கைதானே. ஆனால் எங்களிடம் வெறுப்பாக நடந்து கொள்ளவோ. கொடுமைப் படுத்தவோ இல்லை என்பதுதானே உண்மை. அடிக்கவோ பட்டினி போடவோ கடுஞ்சொற்களால் கடிந்து கொண்டதோ கிடையாது. அவர்கள் செய்த தவறெல்லாம் அவர்கள் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுத்ததுதான். இதெல்லாம்கூட எனக்கு அப்போது தோன்றவில்லை. இப்போதுதான் புரிகிறது. நல்ல வேளை என் மனத்தை மாற்ற சிலர் முயன்றபோது, நான் என் எண்ணங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தேன். நான் ஆச்சு அண்ணாவைப் பற்றி இவ்வளவு எழுதக் காரணம், அன்பான மனம் கொண்ட அவரால் அப்பா மிகவும் மனம்சஞ்சலப்பட்டது காரணமாகவும் , மற்றும் பெரியண்ணா எங்களுடன் சேர்ந்து வாழ்ந்தது மிகவும் சொற்ப நாட்களே என்பதாலும்தான். சோமா எங்களுடன் கூடவே இருந்து வளர்ந்தவன்.ஆனால் ஏனோதானோ என்னும் சுபாவம் கொண்டவன். பக்குவப்படாத வயசிலேயே, அவனுக்கு ஒரு வழி பிறக்கும் முன்பாகவே, அப்பா காலமாகி விட்டதால், அவனுடைய எண்ணங்களுக்கும் சுபாவத்துக்கும் ஏற்ப அவன் வாழ்க்கை அமைந்து விட்டது.

 

            சில நினைவுகள் அந்தக் காலத்தது மட்டுமல்ல.பிற்கால வாழ்க்கை முறைகளையும் மாற்றிவைத்ததாகவும் இருக்கின்றன.(தொட்ரும்) 

 

8 கருத்துகள்:

  1. நடக்கும் என்பார் நடக்காது...
    நடக்காதென்பார் நடந்து விடும்...

    கிடைக்கும் என்பார் கிடைக்காது...
    கிடைக்காதென்பார் கிடைத்து விடும்...

    பதிலளிநீக்கு
  2. இப்பதிவுக்கா இப்பின்னூட்டம்

    பதிலளிநீக்கு
  3. எம் பி காமத்தின் கற்பிக்கும் முறை அபாரம். சாமியாரேமாற்றிய சம்பவமும் முன்னர் படித்த நினைவு.

    பதிலளிநீக்கு
  4. நான் பதிவுகள் எழ்துவதால்சில சம்பவங்கள் முன்பே வந்திருக்கலாம்

    பதிலளிநீக்கு
  5. சார் உங்கள் அனுபவங்களை நீங்கள் சொல்லும் விதம் அருமை. அப்போதே சுய சிந்தனை உங்களுக்கு இருந்திருக்கிறது. அதனால்தான் எல்லாவற்றையும் அந்தந்தக் கோணத்தில் சிந்திக்க முடிந்திருக்கிறது. சாமிஜி விஷயம் ஏமாந்தது முன்பு வாசித்த நினைவு இருக்கிறது...நீங்கள் உங்கள் நினைவலைகளை எழுதுவதால் இதுவும் தொடர்கிறது என்பதும் புரிகிறது.

    காமத் சார் சூப்பர் ஆசிரியர்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. 'என் மனத்தை மாற்ற சிலர் முயன்றபோது, நான் என் எண்ணங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தேன். ' நல்ல முடிவு செய்தீர்கள்.

    பதிலளிநீக்கு