ஞாயிறு, 18 டிசம்பர், 2011

பயண அனுபவங்கள் ...

                                    பயண அனுபவங்கள்.
                                   ------------------------------

            நான் பதிவெழுத விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. ஆனால் அவை எவ்வளவு தூரம் வாசகர்களை ஈர்க்கும் என்று தெரிவதில்லை. இருந்தாலும் பரவாயில்லை. நான் ரசித்து, விரும்பி எழுதியவை அவ்வள்வு ரசிக்கப் படாமலும் , ஏனோதானோ என்று எழுதியவை விருப்பத்துடன் படிக்கப் படுவதையும் பார்க்கும்போது, எழுதுவது மட்டுமே நான் செய்ய வேண்டியது, மற்றது வாசகர்கள் ரசனை என்று விட்டுவிட்டு. இதை எழுதுகிறேன்.


        ஏழெட்டு நாட்கள் நான் பெங்களூரில் இல்லாமல் என் தம்பியின் தொடர் அழைப்பின் பேரில் கோயமுத்தூர் சென்றிருந்தேன். என் தம்பியிடம் என் மனைவி ஒரே ஒரு கண்டிஷன் இட்டாள். அவளைக் கோயில்களுக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்பதுதான் அது. குருவாயூருக்கு எத்தனை முறை சென்றாலும் அவளுக்குத் திருப்தி இருக்காது. மறுபடியும் மறுபடியும் குழந்தை கண்ணனைக் காண விரும்புவாள்..இந்தமுறை கேரள தமிழ் நாடுகளிடையே முல்லைப் பெரியாரால் பதட்டம் நிலவ , அங்கு செல்லவே தயக்கம் இருந்தது. மதுரைக்குப் போகலாமா என்று பரிசீலிக்கப் பட்டது. எனக்கு எதுவானாலும் சம்மதமாகவே இருந்தது. அண்ணியின் விருப்பம் நிறைவேற்ற குருவாயூரே செல்ல முடிவாயிற்று. பயப்பட்டபடி ஏதும் நிகழவில்லை. நிம்மதியான ,அருமையான தரிசனம் கடந்த சில காலங்களில் கிடைக்காத அற்புத தரிசனம், அரை மணிநேரத்தில் மூன்று முறை கண்ணனின் திருவருள் காணப் பெற்றோம். கண்ணனின் அழகு சிலை ஒன்றையும் வாங்கிக் கொண்டு திரும்பினோம். என்ன சொல்வது. நாங்கள் வாளையாரைத் தாண்டியதும் எல்லையை மூடிவிட்டார்கள். துன்பங்கள் துடைப்பவன் கடாட்சம் கிடைக்கப் பெற்று மகிழ்ந்தோம்.


            மறுநாள்  என் விருப்பம் பூர்த்திசெய்ய கூனூர் வெல்லிங்டன் பகுதிகளுக்குச் சென்றொம். நான் நான்கு வருடங்கள் வசித்த இடங்களையும் படித்த பள்ளியையும் முதன் முதல் வேலை பார்த்த மைசூர் லாட்ஜ் இருந்த இடங்களையும் என் மனைவிக்கும் தம்பி, தம்பி மனைவிக்கும் காண்பித்தேன். வட்டக் குடியிருப்பில் நாங்கள் இருந்த இடம் தற்போது ஒரு குதிரை லாயாமாக உருவெடுத்திருக்கிறது. அங்கு இன்னும் நினைவுகளை தாங்கி நிறுத்தும் ஒரே சின்னமாக அந்த சாம்பிராணி மரமும், முனீஸ்வரன் இருந்த திட்டும் மட்டுமே இருக்கிறது. அடுத்த முறை செல்லும்பொது , செல்ல வாய்ப்பு கிடைக்கும்போது ,அவையும் இருக்குமா என்பது சந்தேகமே. இதை எழுதும்போதே மனம் வாடுகிறது.


              நான் படித்த பள்ளி புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளி  அப்பர் குனூரில் சிம்ஸ் பார்க் அருகே இன்னும் புதுப் பொலிவோடு இருப்பது கண்டு மிகவும் மகிழ்ந்தேன். பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரை சந்தித்து ,1954-ம் வருடம் அங்கிருந்துதான் பள்ளியிறுதிப் படிப்பு முடித்தேன் என்று கூறியபோது, அவர் அப்போது தான் பிறந்திருக்கவே இல்லை என்றார். இத்தனை வருடங்களுக்குப் பிறகு நாங்கள் அப்பள்ளிக்குச் சென்றது மகிழ்ச்சி தருகிறது என்றார்.


             நாங்கள் மலையிலிருந்து கீழிறங்கும்போது கார் போகும் பாதையில் நான்கு காட்டு யானைகள் நின்றிருந்தன. நான் என் பள்ளி நாட்களின் நினைவுகளில் மூழ்கி இருந்தேன். மற்றவர்கள் சுவாரசியமாகப் பேசிக் கொண்டு இருந்ததால் சாலையில் யானைகளைக் கவனிக்க வில்லை. சுமார் முப்பது அடி தூரத்தில் வந்ததும் தான் யானைகள் இருப்பது கவனிக்கப் பட்டது. பயத்தில் உறைந்து விட்டோம். காரைத் திருப்பி செலுத்த முடியாது. நேராகவும் போக முடியாது மூன்று பெரிய யானைகளும் ஒரு குட்டியும் இருந்தன. யானைகள் எங்களை சட்டை செய்ததாகவே தெரியவில்லை. அதுவும் நல்லதுக்குத்தான்.ஐந்து நிமிடங்கள் வரை உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்தோம். அவை சாலையை விட்டுக் கீழிறஙகத் துவங்கியதும் விர்ர்ரேன்று காரை செலுத்தி எங்களுக்கு நிம்மதி கொடுத்தார் எங்கள் ட்ரைவர். ஒரு திகிலான அனுபவம்தான் அது


       .       அதற்கு மறுநாள் ஒரு வித்தியாசமான கோவில் தரிசனம் .கோவையில் காரமடை அருகே கேஜி க்ரூப்ஸ் நிர்வகிக்கும் தென் திருப்பதி என்று அழைக்கப் படும் பாலாஜி ( பெருமாள், வெங்கடேஸ்வரா ) கோவில். ஒரு ரம்மியமான சூழ்நிலையில் அமைதியான பசுமை சூழ்ந்துள்ள இடத்தில் அழகான ஆலயம் இதில் என்னைக் கவர்ந்த விஷயம் என்னவென்றால், சாதாரணமாக ஆலயங்களில் பக்தர்கள் செய்யும் அர்ச்சனை ,அபிஷேக ஆராதனைகள் ஏதுமில்லை. கோயில் நிர்வாகமே அந்தந்த நேரத்தில் பூஜைகள் செய்கின்றனர். எல்லோருக்கும் சமமான தரிசனம். உண்டியல் தட்டு வகையறாக்கள் ஏதுமில்லை. வாரத்தில் மூன்றுநாட்கள் அன்னதானம். மற்ற நாட்களில் தொன்னையில் பிரசாதம். நான் சில நாட்களுக்கு முன் எழுதிய பதிவுக்கு நேர்மாறான நிகழ்வுகள். மனம் லேசானதுபோல் உணர்ந்தேன்


               அங்கிருந்து வரும்போது பதிவர் ஐயா டாக்டர் கந்தசாமி அவர்கள் இல்லத்துக்குச் சென்று அவரைக் கண்டு பரிச்சயப் படுத்திக் கொண்டேன். என்னைவிட மூத்தவர். என்னைவிட இளமையுடன் இருக்கிறார். அன்பான உபசரிப்பு. ஆதரவான பேச்சு. என் உடல் நலம் குறித்த அக்கறையான விசாரிப்பு. நினைவுப் பரிசாக ஒரு பேனாவும் ஒரு குறிப்பேடும் அன்புடன் கொடுத்தார். அவருடன் நான் எடுத்துக் கொண்ட புகைப் படம் சரியாக வந்திருந்தால் பதிவில் இணைத்திருப்பேன். ஒரு நல்ல நண்பரை சந்தித்த மகிழ்ச்சியுடன் திரும்பினேன்.


                  என் பள்ளி நினைவுகளை ஒரு தனிப் பதிவும் , பாலக்காட்டில் ஒரு வீட்டில் எரியும் நந்தா விளக்கு பற்றிய ஒரு இடுகையும் வெளியிடஎழுதியுள்ளேன்.
---------------------------------------------------------------------------        
    
    

         

வியாழன், 15 டிசம்பர், 2011

அரண்டவன் கண்ணுக்கு....

                                     அரண்டவன் கண்ணுக்கு
                                    ------------------------------------
                                           (  ஒரு சிறு கதை )

அவர் அலுவலகப் பணி நிமித்தமாக வந்திருந்தார்.விருந்தினர்
விடுதி என்று ஏதும் தனியாக இல்லாததால், ஆஃபீஸில் ஒரு
அறையையே  விருந்தினர் விடுதியாக உபயோகப்படுத்தினர்
பணி நடக்கும் இடத்துக்குப் போக வரவும், போக்குவரவு
வசதிக்கும் அந்த இடமே சரியாக இருக்கும் என்பதால்,அவரை
அங்கே தங்க வைத்தனர்.

வந்தவர் வேலை எல்லாம் முடித்து வந்து மாலையில் ஒரு
திரைப்படமும் பார்த்து இரவு பதினோரு மணியளவில் அறை
வந்தவர், சற்று நேரத்தில் உறங்கி விட்டார். அவருக்கு திடீரென
“ஜல் ஜலங்” என்ற சப்தம் கேட்டு, கண்முழிப்பு வந்தது. உடல்
எல்லாம் வியர்க்க ஆரம்பித்தது நாக்கு வரண்டு விட்டதுஎழுந்து
சென்று தண்ணீர் எடுத்துக் குடிக்கவும் பயத்தால் முடியாமல்                                                                        
போய்விட்டது. சிறிது நேரத்தில் எல்லாம் பிரமையாய் இருக்கும்
என்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு உறங்க எத்தனித்தார். சற்று
நேரத்தில் மறுபடியும் “ஜல்ஜலங் “என்ற சப்தம் கேட்டது அவருக்கு
பயத்தில் நெஞ்சே வாய்க்குள் வந்து விட்டது போலிருந்தது.
இருட்டில் பயம் அதிகரிக்கவே கஷ்டப்பட்டு எழுந்து விளக்கைப்
போட்டார். ஃபானின் வேகத்தை கூட்டினார். மனம் ஒரு நிலைப்பட
மறுத்தது. என்ன என்னவோ எண்ணங்கள் ..கந்தர் சஷ்டிக் கவசம்
சப்தமாகச் சொல்லப் பார்த்தார். வாயசைந்ததே தவிர வார்த்தை
வெளிவரவில்லை. ஒருபேயோ, பிசாசோ வாழும் இடத்தில் தங்க
வைத்து விட்டார்களே என்று அந்த நிர்வாகிகள் மீது கோபம்
கோபமாய் வந்தது. ஆஃபீஸுக்கு ஒரு வாட்ச் மேன் கூடக்
கிடையாது. இந்த நேரத்தில் யாரிடம் போவது.?எங்கே செல்வது
என்றெல்லாம் எண்ணிக்கொண்டு எல்லோரையும்ஒருவழியாகத்
திட்டித் தீர்த்தார். காலையில் வெளிச்சம் படர ஆரம்பித்தது.
முதலில் இந்த இடத்தை விட்டு எங்காவது செல்ல வேண்டும்
என்று தன்னுடைய பெட்டியைத் தன் உடமைகளால் நிரப்பி
வெளியே கிளம்பினார்.

வெளியே வந்தவர் எதிரில் ஒரு லம்பாடிப் பெண் மாடிக்குச்
செல்லும் படிக்கட்டுகள் கீழே இருக்கும் இடத்திலிருந்து எழுந்து
வந்தாள். அவள் நடக்கும்போது அவள் கை அசைவிலும் கால்
அசைவிலும் “ ஜல், ஜலங் “ என்று சப்தம் கேட்டது.
-------------------------------------------------------------------------
     

திங்கள், 12 டிசம்பர், 2011

பொறியாளரும் நிர்வாகியும்....

                        பொறியாளரும் நிர்வாகியும்.
                        ---------------------------------------
                         ( எங்கோ கேட்டது. பதிவாகிறது )


காற்றடைத்த பலூனில் மாதொருத்தி
ககனமார்க்கமாகப் பறக்கையில்
போகுமிடம் அறிந்தும், இருக்குமிடம்
அறியாமல்,சிறிதே காற்றிறக்கிக் கீழே
பறந்தவள் பார்த்தாள் ஆங்கொரு மனிதனை.
இன்னும் சற்றே கீழே பறந்துச் சத்தமாகக்
கேட்டாள்,” ஐயா, நான் எங்குள்ளேன்.?
ஒரு மணிநேரம் முன்பே ஒருவரை நான்
சந்தித்திருக்க வேண்டும். போகும் திசை
புரியாமல் நானும் விழிக்கிறேன்.”

“நீங்கள் காற்றடைத்த பலூனில் தரையிலிருந்து
சுமார் முப்பது அடி உயரத்தில் ,நாற்பது டிகிரி
வடக்கு லாடிட்யூடிலும் அறுபது டிகிரி
கிழக்கு லாஞ்சிட்யூடிலும் பற்ந்து கொண்டு
இருக்கிறீர்கள்”பட்டென்று பதில் வந்தது.

“ நீங்கள் ஒரு பொறியாளரோ.?”

“ ஆம். எப்படிப் புரிந்து கொண்டீர்கள்.?”

“ நீங்கள் கூறியதெல்லாம் சரியான குறியீடுகள்.
 ஏதும் புரியாத புதிராய்,எனக்குதவாத பதில்கள்.
 நான் இன்னும் காணாமல்தான் போகிறேன்.
 போதாக்குறைக்கு உங்களால் இன்னும் தாமதம்.
 இது போதாதா புரிந்து கொள்ள. “

“ நீங்கள் ஒரு உயர்மட்ட நிர்வாகியோ.?”

“ ஆம். எப்படிக் கண்டு பிடித்தீர்கள்.?”

“எங்கிருக்கிறோம் எங்கு போகிறோம் என்று
 புரியாமல் இருக்கிறீர்கள்.கொடுத்த வாக்கைக்
 காப்பாற்ற எந்த சிந்தனையும் இல்லாமல்
 கீழிருப்பவர் உங்கள் பிரச்சனைக்கு தீர்வு சொல்ல
 எதிர்பார்க்கிறீர்கள் .இதற்கு மேலும் என்ன
 வேண்டும் உங்களைக் கண்டுகொள்ள.”
--------------------------------------------------------

சனி, 10 டிசம்பர், 2011

அம்மா..

                                            அம்மா
                                            ----------

( ஒரு திருமணத்துக்காக நாங்கள் எல்லோரும் குடும்பத்துடன் சென்னை 
   சென்றிருந்தோம். என் முதல் பேரன் தான் வரவில்லை என்றும் தனியாக
   சில நாட்கள் இருக்க விருப்பம் என்று கூறினான். நாங்கள் திரும்பி வந்த 
   போது அவன் தாயின் பிரிவை ஆங்கிலத்தில் எழுத்தில் வடித்திருந்தான்.
  அதன் தமிழாக்கமே இது.)


         
                தளைகளும் கட்டுப்பாடும் அற்ற தனிமையில்
நானிருந்தபோது விடுதலை உணர்விருந்தது.
ஆனால் நீ இல்லாதது வெறுமை உணர்த்தியது
அன்புடன் உன அதட்டலும்,அதிகாரமும் இல்லாதிருந்தது
என்னுள் ஏக்கத்தை ஏற்படுத்தியது.

உன் உதிரத்தின் உயிராய் தொப்புள் கொடி
உறவாய் உதித்தவன் நான்.காலங் கடந்து
உணர்கிறேனோஅம்மா, நீயின்றி நானில்லை என்று ?. 

என்னுள் மாற்றங்கள் நிகழ்கிறது நான் அறிவேன்
அவை நல்லதோ அல்லதோ நானும் அறியேன் -ஆனால்
அறிகிறேன் அம்மா, என் அன்பு என்றும் மாறாதது.

விடியலில் என்னை எழுப்பும் ஆதவன் நீ
அந்தியில் என்னை உறக்கும் நிலவும் நீ
என் எண்ணத்தில் உன்னை நிறுத்தி
நீயில்லா வெறுமையை விரட்டினேன்.

இனிமையின் இருப்பு நீ,பூரணத்தின் பொலிவு நீ
என்னுள் என்னை மிளிரச் செய்பவள் நீ
எல்லாம் எனக்கு நீயே அம்மா
உலகில் சிறந்தவள் நீயே அன்றோ.!
-------------------------------------------------------



                       

செவ்வாய், 6 டிசம்பர், 2011

சேவை மனோபாவம்..

                                        சேவை மனோபாவம்
                                         -----------------------------
  வேலை தேடும் படலம் என்றொரு பதிவு எழுதி இருந்தேன்.
அதில் நான் HAL-ல் பயிற்சிக்குத் தேர்வானது வரை எழுதினேன்.
பெங்களூரில் வேலைக்குச் சேர நான் வந்தபோது,நான் என்
சொந்தக் காலில் நிற்க வேண்டும் உறவுகள் யாரிடமும் உதவி
பெறலாகாது என்ற முடிவில் உறுதியாய் இருந்தேன்.

 அப்பாவின் சங்கடம் அனுபவித்திருந்தால்தான் தெரியும். நேர் காணலுக்கே மெட்ராஸுக்கு அனுப்ப முடியாமல் அவர் தவித்த தவிப்புபர்மா ஷெல் சுப்பிரமணியம் அவர்களால் உதவப்பட்டதால் தீர்ந்தது. மறுபடியும் அவரிடம் கையெந்த அவருடைய தன்மானம் தடுத்தது. அவர் கணக்குப்படி, அடுத்த மாதம் என் ஸ்டைபெண்ட் பணம்வரும்வரை, சமாளிக்க ரூ.60-/ ஆவது வேண்டும். என் தங்கும் செலவு, போகவர செலவு, சாப்பாட்டுச் செலவு. என்றெல்லாம் கணக்கில் கொள்ள வேண்டும். என்ன செய்தார், ஏது செய்தார் என்று நினைவில்லை. ட்ரெயின் டிக்கட் போக என்னிடம் ரூ.15-/ கொடுத்து மகனே உன் சமத்து எப்படியாவது சமாளி.இன்னும் பத்து நாட்களில் இன்னும் கொஞ்சம் பணம் அனுப்புகிறேன்.என்று ஆறுதலும் கூறினார். எனக்குத்தான் எந்த பயமும் கிடையாதே. கவலைப் படாதீர்கள் சமாளித்துக் கொள்கிறேன் என்று சமாதானம் கூறினேன்.



       இப்படியாக ரூ.15-/ உடன் 1956-ம் வருடம் ஏப்ரல் 28-/ம் தேதி, பெங்களூர் வந்தேன். என்னிடம் ஒரு சிறிய ட்ரங்க் பெட்டி என் உடைமைகளுடனும், என் சான்றிதழ் , நியமன உத்தரவு போன்றவற்றுடனும் இருந்தது.

       பெங்களூரில் ஏதாவது ஓட்டலில் தங்க வேண்டும். எங்கு போவது.?எனக்கு பெங்களூரில் கண்டோன்மெண்டில்( கொஞ்சம் முன்னே வந்து போன பழக்கத்தில் )தங்கலாம் என்றும், அதுவே எஸ். ஜே. பாலிடெக்னிக் சென்று வர சௌகரியமாக இருக்கும் என்றும் தோன்றியது. ரயிலில் வந்து கண்டோன்மெண்ட் ஸ்டேஷனில் இறங்கினேன். ஒரு குதிரை வண்டிக்காரரிடம், ஹோட்டலில் தங்க இருப்பதாகவும் சிவாஜி நகரில் எங்காவது தங்குமிடம் காட்டுமாறும் வேண்டிக்கொண்டேன். அவர் என்னை ஓல்ட் புவர் ஹௌஸ் ரோடின் ஆரம்பத்தில் இருந்த அசோகா லாட்ஜ், என்ற இடத்துக்குக் கூட்டிச் சென்றார். அங்கு விசாரித்ததில், மாதத்துக்கு தங்கும் முறை அங்கில்லை என்றும், தினமும் தங்க ரூ.30-/ க்கும் மெலாகும் என்றும் கூறினார்கள். வேறிடம் காட்டுமாறு குதிரை வண்டிக்காரரிடம் வேண்டிக்கொண்டேன் அவரும் என் நிலைமை நன்றாகப் புரிந்து கொண்டு கமர்ஷியல் ஸ்ட்ரீட் அருகிலுள்ள இப்ராஹிம் சாஹிப் தெருவில் இருந்த ராஜா லாட்ஜ் என்ற இடத்திற்கு கூட்டிச் சென்றார். அங்கு விசாரித்ததில் மூன்று பேர் தங்கும் அறையில் எனக்கு ஒரு கட்டில் தரப்படும் என்றும் மாத வாடகை ரூ.10-/ என்றும் கூறினார்கள். நானும் மாதவாடகை ரூ.10-/ அட்வான்ஸாகக் கொடுத்தேன். லாட்ஜில் காலை சிற்றுண்டிக்கும் மதிய இரவு உணவுக்குக் கணக்கு வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறினார்கள். என் தங்கும் பிரச்சினை முடிய என் தந்தைக்குக் கடிதம் எழுதினேன். அன்று மாலை டஸ்கர் டௌனில் இருந்த என் சகோதரி ராஜி வீட்டுக்குச் சென்று விவரங்கள் கூறினேன். என் பள்ளி நண்பன் தாமோதரன் வீட்டை விசாரித்து அவனைப் போய் பார்த்தேன். அவன் என்னை மறுநாள் வாடகை சைக்கிளில் எச்.ஏ.எல். இருக்குமிடம் காண்பிக்கக் கூட்டிச் சென்றான். நான் தங்கி இருந்த இடத்திலிருந்து சுமார் 10.. அல்லது 11 கிலோமீட்டர் தூரத்தில் எச்.ஏ. எல் இருந்தது.

                  மறு நாள் என் நியமன உத்தரவுடன் எச்.ஏ.எல்.சென்று பர்சனல் டிபார்ட்மெண்டில் காண்பிக்க, அவர்கள் நான் அங்கு சேரும்போது நிறுவனத்துடன் ஒரு பாண்டில் கையெழுத்திட வேண்டுமென்றும், அதற்கு என் தந்தையின் ஒப்புதலும் வேண்டுமென்றும் கூறினார்கள். மூன்று வருடப் பயிற்சி ஒப்பந்தம் பயிற்சி முடிந்தபின் பீ. மெகானிக் பதவி நியமனம், பயிற்சி முடிந்தபின் 5-/ வருடம் பணியில் இருப்பேன் என்று உத்தரவதம்,மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பல ஷரத்துக்களுடன் கூடிய ஒப்பந்த பத்திரத்தைக் கொடுத்தனர் மறுநாளிலிருந்து எஸ்.ஜே. பாலிடெக்னிக் செல்ல வேண்டுமென்றும் , மதியம் 12- மணிமுதல் இரவு 8-/ மணி வரை அங்கு பயிற்சி என்றும் அறிவிக்கப்பட்டோம். அதில் மதியம் 12-/ மணி முதல் மாலை 4-/ மணி வரை வகுப்பறைப் பாடங்கள் என்றும், மாலை 4-/ மணி முதல் இரவு 8-/ மணி வரை ப்ராக்டிகல் ட்ரெயினிங் இருக்கும் என்றும் கூறினார்கள். எச்.ஏ.எல்.-ல்பயிற்சிப் பள்ளியில் பயிற்சிக்கான மெஷின்களோ வசதிகளோ இல்லாதிருந்ததால் இந்த அணுகு முறை. ஆறு மாதம் பயிற்சி முடிந்தபிறகு, தொழிற்சாலையில் எல்லா பிரிவுகளிலும் பயிற்சியுடன் பணி புரியும் வாய்ப்பும் தரப்படும் என்றும் அறிந்தோம்.


 இப்படியாக நான் பயிற்சியில் சேர்ந்து வாழ்வின் இன்னொரு அத்தியாயத்துக்குள் காலடி வைத்தேன். என்னுடன் அந்த அறையில் இன்னும் இருவர் இருந்தனர்.அதில் ஒருவர் பெயர் சந்திரசேகரன்.பின்னி மில்லில் வேலையிலிருந்தார்.தந்தை மறுமணம் செய்த மாற்றாந்தாயின் கொடுமைகளுக்கு ஆளானதை சொல்லும் அவருக்கு எனக்கிருந்த மாற்றாந்தாயைப் பற்றி நான் உயர்வாகப் பேசுவதை நம்புவது கஷ்டமாயிருந்தது. மற்றவர் பெயர் வாசுதேவன். கேரளக்காரர்.பெங்களூர் வந்து வேலை தேடிக்கொண்டிருந்தார். அவருக்கு செலவுக்கு ஊரிலிருந்து பணம் வரவேண்டும். நான் அந்த லாட்ஜில் இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட வேண்டும்.வாசுவுக்கு வீட்டிலிருந்து பணம், வரத் தாமதமாகி ஒரு முறை அவனால் லாட்ஜ் வாடகை கொடுக்க முடியவில்லை. அறையைக் காலி செய்ய ஓட்டல் முதலாளி கூறினார்.அதற்கு முன் வாசு தன் உடைமைகளைப் பார்த்துக் கொள்ளும்படியும், வாடகைப் பணம் கட்ட வரும்போது அதை அவன் என்னிடமிருந்து எடுத்துக் கொள்வதாகவும்கூறிப் போனான். அவனை ஓரிரு தினங்கள் காணாமல் அவனது பெட்டியைப் பறிமுதல் செய்ய ஓட்டல் முதலாளி என் அறைக்கு வந்தார். நான் அது தற்சமயம் என் பாதுகாப்பில் இருப்பதால் அதனை அவர் எடுக்கக் கூடாது என்று தடுத்தேன். அவருக்கு என் மேல் கோபம் அதிகமாகி காலையில் குளிக்க வென்னீர் தருவதை நிறுத்தினார். சிற்றுண்டி சாப்பிடும்போது குடிக்க நீர் தரமாட்டார். எப்படியும் என்னையும் அறையைக் காலி செய்ய்விக்க முயற்சிகள் மேற்கொண்டார். எந்த ஒரு செயலையும், பிற்பகல் விளையும் பலன்களை அதிகம் யோசிக்காமல் எந்த பயமும் இன்றி செயல்களை செய்து வருபவனாக நான் இருந்தேன். தவறு செய்பவர் தண்டிக்கப் பட வேண்டும் என்று உறுதியாய் இருந்தேன். என் பக்கம் எந்தத் தவறும் இல்லாதிருக்கையில் எனக்குக் கஷ்டங்கள் கொடுத்த அந்த லாட்ஜ் முதலாளி மீது கமர்ஷியல் ஸ்ட்ரீட் பொலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தேன்.அந்த இன்ஸ்பெக்டருக்கு என்னைப் பார்த்ததும் ஒரு பரிவு உண்டாகி இருக்க வேண்டும். என்னிடம் கவலைப் பட வேண்டாம் என ஆறுதல் கூறியவர், இரண்டு பொலீஸ்காரர்களை லாட்ஜுக்கு அனுப்பி அந்த முதலாளியை வரவழைத்து அவரைக் கடுமையாய் எச்சரித்து அனுப்பினார். இதனால் ஓட்டல் முதலாளி என் மேல் கோபம் அதிகமாகி இருந்தார். அவரை நான் அவமானப் படுத்தி விட்டதாக நினைத்தார். நானும் சுமூக நிலை வராது என்று உணர்ந்து சிறிது நாட்களில் அங்கிருந்து விலகி வேறு ஒரு லாட்ஜில் சில நாட்களும் அதன் பிறகு என் நண்பன் ஸ்ரீதரனின் லாட்ஜ் கோமள விலாஸிலும் தங்கினேன். இவ்வளவு நாட்களுக்குப் பிறகு அந்த சம்பவங்களை நினைத்துப் பார்க்கையில் நான் இளங்கன்று பயமறியாது என்ற படியும், கூடுதலாக இம்பல்ஸிவ்வாக இருந்திருக்கிறேன் என்றும் தெரிகிறது

விடுமுறைக்கு பெங்களூர் சென்றிருந்தபோது என் சகோதரி ராஜியின் மைத்துனன் கங்காதரன் எனக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்ததும் நான் சைக்கிள் ஓட்டப் பயின்ற இடம் தற்போது ஜனத்திரளும் சந்தடியும் வண்டி ஓட்டங்களும் மிகுந்திருக்கும் சிவாஜி நகர் பஸ் ஸ்டாண்ட்  இருக்குமிடமாகும்..அப்போது ஒன்றுமே இல்லாத திறந்த வெளியாக இருந்தது.

நாங்கள் நடந்து செல்லும் பாதையில் பெங்களூர் ஹெட் போஸ்ட் ஆஃபிஸ்  இருந்தது. நான் பதினைந்து ரூபாயுடன் பெங்களூர் வந்து தங்கினாலும் என் செலவுக்குப் பணம் தேவைப் பட்டது. அப்பா எனக்குப் பணம் அனுப்ப வேண்டுமானால் நான் அதை எப்படிப் பெறுவது.? என் பயிற்சி நேரம் மதியம் 12- மணி முதல் இரவு 8-/மணி வரை. சுமார்பதினொன்று பதினொன்றரை மணிக்கு நான் என் இருப்பிடத்தை விடுவேன். போஸ்ட் மேனைப் பார்க்க முடியாது. மேலும் என்னுடைய ஒப்பந்தப் பத்திரங்கள் அப்பாவின் கையெழுத்தாகி எனக்கு வர வேண்டும். அதை அவர் ரெஜிஸ்தர் தபாலில் அனுப்ப வேண்டும்..இதையெல்லாம் யோசித்து நாங்கள் போகும் வழியில் இருந்த தலைமைத் தபால் நிலைய போஸ்ட் மாஸ்டரை அணுகி, எனக்கு வரும் தபால்களை என் அப்பா c/o postmaster  என்று அனுப்புவார் என்றும் ,அவரிடமிருந்து நான் அதைப் பெற்றுக் கொள்கிறேன் என்றும் வேண்டிக்கொண்டேன். அவரும் ஒப்புதலளிக்க எனக்கு வரும் தபால்கள் என் பெயரிட்டு C/O POST MASTER என்று வரத் தொடங்கியது. இந்தக் காலத்தில் அப்படிச் செய்ய முடியுமா என்று தெரிய வில்லை. பிறருக்கு உதவும் எண்ணங்கள் கொண்ட மக்கள் ஊழியர்கள் ( பப்ளிக் செர்வண்ட்ஸ் )இருந்த காலம் அது. நான் பெங்களூரில் இருந்து கடிதம் அனுப்பினால் அது மறு நாள் வெல்லிங்டனில் பட்டுவாடா ஆகும். எனக்கு வந்த ஒரு கடிதத்தில் அப்பா ஒருமுறை நான் எழுதிய கடிதம் மூன்றாம் நாள் கிடைத்ததாகக் கூறி ஆதங்கப் பட்டிருந்தார். இப்போது தபல்கள் ஒரு வாரம்
 ஆனாலும் கிடைக்கிறதா என்று கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால் தற்காலத்தில் தபால் சேவையின் முக்கியத்துவம் மிகவும்குறைந்து விட்டது. பயிற்சி வகுப்புகளில் இருந்து விலகாமல் ,விடுமுறை எடுக்காமல், எனக்குப் பெற வேண்டிய தபால் மற்றும் மணி ஆர்டர்களை நான் பெறுவதற்கு செய்த உத்திதான் இந்த C/OPOSTMASTER  விவரம்.

முன்பின் தெரியாத ஒரு சிறுவனுக்கு உதவியாய் இருந்த அந்தக் குதிரை 
வண்டிக்காரரும் , ஒட்டலில் தங்கி யிருக்கும் ஒருவன் கஷ்டப்படும்போது
ஆறுதல் கூறிஅவன் துயரங்களைத் துடைக்க உதவும் மனப் பான்மையுள்ள 
போலீஸ் அதிகாரியும் அரசின் தலைமைத் தபால் நிலையம் ஆனாலும் ஊர்
பேர் தெரியாத ஒரு இளைஞன்உதவி என்று வந்தபோது எந்த சட்டமும் 
பேசாமல் உதவி புரிந்த அந்தத் தலைமைத் தபால் நிலைய போஸ்ட் 
மாஸ்டரும் சேவை மனப் பான்மையுடனே செயல் பட்டனர் என்று எண்ணும் 
போது “ ஓ, அது அந்தக் காலம் “என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.
-----------------------------------------------------------------.  











ஞாயிறு, 4 டிசம்பர், 2011

ஒரு திகில் அனுபவம்....ஓ..பாம்பு.!

                                               
                                                         ஓ...பாம்பு.......
                                                         --------------

இவன் திருச்சி BHEL-ல்வேலைக்குச் சேர்ந்த புதிது. ஒரு சில
நாட்கள் ஓட்டலில் தங்கி விட்டு, பொன்மலைப் பட்டியில் ஒரு
நண்பன் மூலம் வீடு பார்த்தான். பழைய வீடாயிருந்தது.கதவு
களிலும் கதவு நிலைகளிலும் மரம் உளுத்துப் போனதுபோல்
இருந்தது. பக்கத்தில் ஒரு டெண்ட் கொட்டகை இருந்தது. மாலை
வேளைகளில் பாட்டு கேட்கும்.மனைவி மற்றும் பிறந்து நான்கே
மாதங்களுமான குழந்தையுடனும் குடித்தனம் தொடங்கி
விட்டான். வாழ்க்கைப் படகு மெல்ல அசைந்து ஓடிக் கொண்டு
இருந்தது. ஒரு நாள் இரவு, அழுதுவடிந்து கொண்டிருந்த விளக்கு
வெளிச்சத்தில் ஏதோ ஒன்று ஓடிக் கதவின் பின்புறம் போவதைப்
பார்த்ததாக இவன் மனைவி சொன்னாள். என்ன ஏது என்று தீர்க்க
மாகச் சொல்லத் தெரியவில்லை. வேகமாக நெளிந்து ஊர்ந்து
சென்றதுபோல் இருந்தது என்றாள்.என்னதான் அது என்று வீடு
முழுவதும் தேடிப் பார்த்தும், எதுவும் தென்படவில்லை. சமையல்
அறைக்கும் ஹாலுக்கும் நடுவில் இருந்த கதவு நிலையின்
அடியில் ஒரு ஓட்டை இருந்தது. அதன் உள்ளிருந்து அவ்வப்போது
ஏதோ வெளியில் தெரிவதும் உள்ளே போவதுமாக இருந்தது.
பாம்பின் நாக்கு என்றே எண்ணியவர்கள் மிகவும் பயந்து போய்
விட்டார்கள். என்ன ஏது என்று தெரியாமல் கைக்குழந்தையை
வைத்துக் கொண்டு, வீட்டில் பாம்பும் இருந்தால்.....இவன் கையில்
ஒரு கழியை வைத்துக் கொண்டு கதவருகில் காத்திருந்தான்.
அவ்வப்பொது நாக்குதான் வெளியில் தெரிந்ததே தவிர, அந்தப்
பாம்பு வெளியே வரவில்லை. அந்த ஓட்டையில் ஒரு நீளமான
குச்சியை வைத்துக் குடைந்தான்.நீளமான குச்சி உள்ளே போகும்
அளவுக்கு பெரிய ஓட்டையாக இருந்ததால்தானோ என்னவோ
அது இன்னும் உள்ளே சென்றிருக்க வேண்டும். ஊதுபத்தியைக்
கொளுத்தி அந்த ஓட்டைக்குள் புகை போகும்படி செய்து பார்த்தும்
அது வெளியே வரவில்லை. இரவு நேரம் போய்க் கொண்டிருந்தது..
குழந்தையை நடுவில் கிடத்தி இரண்டு பக்கமும் இவனும் இவன்
மனைவியும் படுக்க ஏற்பாடு செய்யப் பட்டது. படுப்பதற்கு முன்பு
அந்தக் கதவின் நிலையைச் சுற்றி மண்ணை அள்ளிப் போட்டுப்
பரப்பினார்கள்.கண் அயர்ந்து தூங்கி விட்டால் , அது தெரியாமல்
வெளியில் வந்து விட்டால்.,தடம் பார்த்துத் தெரிந்து
கொள்ளலாமே. அன்று இரவு சிவ ராத்திரியாகக் கழிந்தது. அது
வெளியில் போனதற்கான தடம் தெரிய வில்லை. விடிய்ற்காலை
ஒரு பக்கம் இவனும் மறுபக்கம் அவளும் அது வெளியே வரக்
காத்திருந்தனர். அவள் கையில் கழி. இவன் கையில் இரும்புச்
சட்டுவம். அது எப்படியும் வெளி வரும்; வந்தவுடன் ஒரே போடு,
என்பதாகப் ப்ளான். கண்களில் எண்ணையை விட்டுப் பார்ப்பது
போல் கவனமாகக் கண் காணித்துக் கொண்டிருந்தார்கள். அது
உள்ளேதான் இருந்தது வெளியில்போனஅடையாளம்ஏதுமில்லை
திடீரென்று அது வெளியில் ஓடியது. என்ன ஏது என்று பார்க்காமல்
அந்த இரும்புச் சட்டுவத்தால் ஒரே போடு. வெளியே வந்த அது
இரண்டாக வெட்டுப்பட்டு இருந்தது, இறந்தது. பார்த்தால் அது ஒரு
அரணை.!
--------------------------------------------------------------------------------------                                   

வியாழன், 1 டிசம்பர், 2011

இப்படியும் சிலர்.....

                                            இப்படியும் சிலர்
                                             ................................
                                                   ( 1 )

     ” காலையில் எங்கேபோய் வருகிறீர்கள் ?”-எதிரில் வந்த
நண்பரிடம் தெரியாமல் கேட்டு விட்டேன்.

      “நான் மார்க்கெட்டுக்குப் போய் காய்கறி வாங்கிவருகிறேன்”--
இதை சொல்ல வரும் நண்பர்,”இன்று காலையில் எழும்போதே
ஒரு மாதிரியாக இருந்தது.நம்க்கு நேரம் சரியில்லையோ
என்று நினைத்துக்கொண்டே எழுந்தேன். கும்பகர்ணன் மாதிரி
தூங்கிக் கொண்டிருந்தால் போதுமா?எல்லா வேலையும் நானே
செய்ய வேண்டி இருக்கிறது. வீட்டில் சமைக்க ஏதாவது காய்
கறிகள் வாங்கி வரக் கூடாதாஎன்று மனைவி கத்தத் துவங்கி
விட்டாள் சரி என்று பையை எடுத்துக்கொண்டு கிளம்பினென்.
கொஞ்ச தூரம் போனதும் பர்ஸை எடுக்க மறந்தது தெரிந்தது.
மறுபடியும் மனைவியின் வாயில் விழ வேண்டுமெ என்று
பயந்துகொண்டே,திரும்பி வந்து பர்ஸை எடுத்துக்கொண்டு
மார்க்கெட்டுக்குப் போனேனா....எந்தக் காய்கறி நன்றாக
இருக்கிறது, விலை மலிவு என்று தெரிந்துகொள்ளபல கடைகள்
ஏறி இறங்கினேன் வெண்டைக்காய் பிஞ்சாய் இருக்கா என்று
தெரிய உடைத்துத்தானே பார்க்க வேண்டும்.?அந்தக்கடையில்
உடைத்துப் பார்க்கக் கூடாது என்று தடுத்து விட்டார்கள்.
அப்போது மூன்றாம் வீட்டு முத்துச்சாமி எதிரே வந்தார். அவரது
மகளுக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருக்கிறதாம். சென்னையில்.
வரும் மாதம் முதல் வாரத்திலாம். அவசியம் வர வேண்டும்
என்று கேட்டுக்கொண்டார். நாம் இருக்கும் இருப்புக்கு சென்னை
போய் கலியாணம் எல்லாம் பார்க்க முடியுமா.?அப்படியே
போனாலும் வெறுங் கையோடு போக முடியுமா.?என்ன செய்ய.?
முயற்சி செய்கிறேன் என்று சொல்லிவிட்டுத் தப்பித்தேன்.
கொஞ்சம் வெண்டைக்காய் வாங்கினேன். முருங்கைக்காய்
எனக்குப் பிடிக்கும்.ஆனால் ஒரு காய் நாலு ரூபாய் சொல்கிறான்
கட்டுப்படியாகுமா.?ஏதோ கொஞ்சம் கீரை தக்காளிவாங்கிக்
கொண்டு இப்போதுதான் வருகிறேன். நடுவில் உம்மைப் பார்த்து
விட்டேன். நேரமாகிவிட்டது. வீட்டுக்குப் போனால் ஏன் லேட்
என்று மனைவியிடம் அர்ச்சனை வாங்க வேண்டும் ...”...ஏதோ
தாமதத்துக்கு நாந்தான் காரணம் போல பெசிக்கொண்டேபோனார்.

                                                        ====================
                                                      ( 2 )

 ” பதிவெல்லாம் எழுதுகிறாயாமே”

 “வயதாகிவிட்டதல்லவா.நேரம் போக வேண்டுமே. ஏதாவது
செய்துகொண்டு இருந்தால்பொழுது போகும்தானே.”

 “ கம்ப்யூட்டர் எல்லாம் உபயொகிக்கத் தெரியுமா.?”

 “ எங்கே தெரிகிறது. ...பேரன் புண்ணியத்தில் ஒரு ப்ளாக்
துவங்கி இருக்கிறேன்.அதில் மனதில் தோன்றுவதை எழுதுவேன்”

 “ நீ எழுதுவதைபடிக்க வாசகர்கள் இருக்கிறார்களா என்ன.?”

 “ஏதோ பலர் படிப்பார்கள்;சிலர் கருத்தும் எழுதுவார்கள்.”

 “எந்த மொழியில் எழுதுகிறாய்.?”

  “ஏன், தமிழில்தான். “

 “அதுதானே பார்த்தேன். ஆங்கிலத்தில் எல்லாம் எழுதத் தனித்
திறமை வேண்டுமே. இல்லாவிட்டாலும் பேரன் சொல்லிக்
கொடுக்கலாமே.உனக்கென்னப்பா...பேரன் சொல்லிக்கொடுத்து
கம்ப்யூட்டர் உபயோகிக்கிறாய். பொழுது போக்குக்காக எழுது
கிறேன் என்கிறாய்.அதைப் படிக்கவும் ஜனங்கள் இருக்கிறார்கள்
என்கிறாய். ஹூம்.!கொடுத்துவெச்சவந்தான் “

                                -------------------------------------
                                                      ( 3 )

 ” நேற்று உன்னைக் கிளப்பில் பார்த்தேன்.”

 ” ஆமாம், அவ்வப்போது கிளப்புக்குப் போவ்துண்டு.”

 “ உன் மனைவியுடன் வந்திருந்தாயே.”

 “ஆம் எங்கு போவதானாலும் மனைவியுடந்தான் போவேன்.”

 “உன் மனைவியுடன் நீ போவ்தைப்பார்த்து என் மனைவி
   என்னிடம் சண்டை பிடிக்கிறாள்.”

 “ என் மனைவியுடன் நான் போவதால் உங்கள் மனைவி ஏன்
    சண்டை போடவேண்டும்?”

 “ என்னையும் உன்னை மாதிரி, எங்கு போவதானாலும் கூடவே
    இழுத்துக் கொண்டு போக்ச் சொல்கிறாள்.”

 “ மன்னிக்க வேண்டும். நான் என் மனைவியை அழைத்துக்
   கொண்டு போகிறேன். இழுத்துக் கொண்டு போவதில்லை.”

 “உன் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்./’

 ‘ படித்துக் கொண்டு இருக்கிறார்கள்.”

 “ அவர்கள் படித்து முன்னுக்கு வர வேண்டாமா.?நீ அவர்களுக்கு
    ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டாமா.?இப்படி
    மனைவியுடன் சுற்றிக் கொண்டிருந்தால் எப்படி.?”

 “ என் பிள்ளைகளை நான் அதிகம் கட்டுப்படுத்துவதில்லை.
    அவர்களுக்கு நல்லது கெட்டது தெரியும் “

 “ என்னால் அப்படி விட முடியாது. எனக்கிருப்பது பெண்
   குழந்தைகள். மிகவும் கண்டிப்புடன் வளர்க்கிறேன்.”

இப்படி அறிவுரை கூறியவரின் பெண்களில் ஒருத்தி யாரையோ
காதலித்து அவனுடன் ஓடி விட்டாள்.

                                        ==============================
                                                   ( 4 )

 “அப்பா, உங்களைப் பார்க்க விரும்புவதாகஒருவர் இவரிடம்
   சொல்லியிருக்கிறார்.தயாராக இருங்கள். காதில் ரத்தம் வரும்
   அளவுக்குப் பேசியே அறுத்திடுவார்”, என் மருமகள் என்னை
   ஏற்கெனவே தயார்படுத்தி இருந்தாள்.நானும் அறுபடக் காத்து
   இருந்தேன். வந்தவருக்கு சுமார் அறுபது வயதிருக்கும். என் மகன்
   என்னைப் பற்றி அவரிடம் பல தடவைப் பேசியிருக்க வேண்டும்.
   அவரும் என்னைப் பார்க்க விருப்பம் தெரிவித்து வந்திருந்தார்.
    நன்கு படித்த மனிதர்;நல்ல வசதி உள்ளவர். தொழிற்சாலையில்
    பணி புரிந்து தன் வாழ்க்கையையே அதற்காக அர்ப்பணித்துக்
    கொண்டவர் என்றும், அவர் இல்லையென்றால் அத்தொழிற்
    சாலையே விலசம் இல்லாமல் போயிருக்கும் என்றும், தன்னால்
    பல குடும்பங்கள் வாழ்வதாகவும், அதிலிருந்து தனக்கு எதுவும்
    பலனாகக் கிடைக்கவில்லை என்றும் சொல்லிப் போனார்.
    இப்போது ஏதோ சில லட்சங்கள் வருமானம் இருப்பதாகவும்,
    இரண்டு மூன்று பங்களாக்கள் தனக்கு இருப்பதாகவும் அவர்
    சொல்லக் கேட்டுக் கொண்டேன். அவர் ஒரு ஆசாரமான குடும்
     பத்தில் இருந்து வருவதாகவும், வாழ்வில் எல்லாம் இருந்தும்
     நிம்மதி இல்லையென்றும் புலம்பித் தீர்த்தார். அவருக்கு அவரது
     சஞ்சலங்களைக் கொட்டித் தீர்க்க நான் ஒரு WAILING WALL-ஆக
     என்னை எண்ணிக் கொண்டேன். எல்லாவற்றையும் கேட்டுக்
     கொண்ட நான்,தெரியாத்தனமாக அவர் குடும்பம் பற்றிக் கேட்டு
     விட்டேன்.

 “ நான் இப்போது தனியாகத்தான் இருக்கிறேன்”- என்றார்.

நான்:-” பெற்றோர், மனைவி மக்கள் என்று....... ”

அவர்:-”வயதான அம்மா இருக்கிறாள்;மனைவி இருக்கிறாள்; ஒரு
                மகன் இருக்கிறான்.”

நான்:- ” இவ்வளவு பேர் இருந்தும் தனியாக இருக்கிறேன்
                என்கிறீர்களே.”

அவர் :-”என் அம்மா என்னுடன் இருக்கிறாள். என் மகன் அவன்
                அம்மாவுடன் இருக்கிறான்.”
நான்:- “புரியவில்லை.”

அவர்:-” நான் செய்த ஒரே தவறு,கொஞ்சம் வயசு வித்தியாசத்தில்
                வேற்று மதப் பெண்ணைக் காதலித்துக் கலியாணம்
                செய்து கொண்டதுதான். மகன் பிறந்ததும் ,அவளுக்கு
                நான் என் அம்மாவை விட்டு அவளுடனேயே இருக்க
                வேண்டும் என்று விருப்பம்.அதற்காக அம்மாவை விட்டுக்
                கொடுக்க முடியுமா.? நீ வேண்டுமானால் உன் மகனுடன்
                இருந்துகொள் என்று கூறிவிட்டேன்”

நான்:- ”பேசித் தீர்க்க வேண்டிய விஷயம். அவசரப்பட்டு முடிவு
               எடுத்து விட்டீர்களோ.?”

அவர்:-”அவளுக்கு நான் எப்படியும் அவளுடன் வருவேன் என்று
                நம்பிக்கை. எனக்கு என் அம்மா முக்கியம். விட்டுக்
                கொடுக்க முடியாது.  அப்படி இப்படி என்று பதினெட்டு
                வருடங்கள் ஓடிவிட்டது.

நான்:  ”பலத்தைக் காட்டி பயமுறுத்தும் நாடுகளே பரஸ்பரம்
              பேசித் தீர்த்துக் கொள்ள முயற்சிக்கும்போது ,பேசாமலே
              பிரச்சனை தீரும் என்று எப்படி எண்ணுகிறீர்கள்.?”

அவர்:-”நான் எப்பேர்ப்பட்ட மனிதன். எப்படி விட்டுக் கொடுப்பது..
               ஒரு சின்ன சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி, எந்த
               பலனையும் எதிர்பாராமல்,எத்தனை பேரை வாழ
               வைத்திருக்கிறேன். “

நான்:- ”பலனில்லாமலா இருந்த இடத்திலிருந்து லட்சங்களுக்கு
               மேல் வரும்படியும், சொத்துக்களுக்கு சொந்தக்காரராய்
               இருப்பதும்? உங்கள் நிலைக்கு எத்தனையோ பேரின்
               உழைப்பும் ஒரு முக்கிய காரணம் அல்லவா,?”

அவர்:- “என்ன.. நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட் போலப் பெசுகிறீர்கள் ?”

நான்:- “உள்ளதைச் சொன்னேன். நான் எனது என்று நாம் அதிகம்
               நினைக்கும்போது, புரிதல் குறைகிறது. EGO வளர்கிறது.
               பிரச்சனைகள் முடிவு பெறுவதில்லை. உங்கள் மகனிடம்
               பேசினீர்களா.?”

அவர்:-“அவன் அம்மாவைவிட மோசம் சொன்ன பேச்சைக் கேட்க
               மாட்டான். ஊதாரித்தனமாக செலவு செய்வான். எல்லாம்
              அவள் கொடுக்கும் இடம். “

நான்:-”உங்கள் மனைவி என்ன செய்கிறார்கள் ?”

அவர்:-”அவள் ஒரு டாக்டர். எல்லோருடைய பிணிக்கும் மருந்து
               கொடுப்பவள்.அவளுக்குள்ள வியாதியே தெரியாதவள். “

பேசப் பேச மனிதர் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் வசம் இழந்து
கொண்டிருந்தார். இந்தப் பேச்சு முற்றுப் பெற வாய்ப்பில்லை
என்று தோன்றியபோது “எல்லாம் நல்ல படியாக முடியும் மனசை
தளர விடாதீர்கள். தைரியமாக இருங்கள் “,என்று ஒருவாறு
தேற்றி அனுப்பினேன்.
                                         ========================
                                                      ( 5 )

“நான் போனவாரம் FRANKFURT-ல் இருந்து LONDON-க்கு FLIGHT-ல்
வரும்போது டாக்டர் கிருஸ்டியன் பார்னார்ட் அவர்களை
சந்தித்தேன்.”

“யாரு..? உலகிலேயே முதன் முதலில் இருதய மாற்றுச் சிகிச்சை
செய்தாரே அவரா.?”

“ஆம் .அவரேதான். நான் BHEL-ல் வால்வ் டிவிஷனில் முதன்மைப்
பொறுப்பில் பதவியிலிருக்கிறேன் என்று சொன்ன போது
அவருக்கு இருதய சிகிச்சைக்கு வால்வ் தயாரித்துக் கொடுக்க
முடியுமா என்று கேட்டார். நானும் இப்போது BUSY SCHEDULE-ல்
இருப்பதால் கொஞ்சம் அவகாசம் கேட்டிருக்கிறேன் “
                                          ============================