ஞாயிறு, 16 ஜனவரி, 2022

உலகேமாயம்வாழ்வே மாயம்

 மாயை

பிள்ளைப் பிராயத்தில் மண் உண்ட கண்ணன் வாயில்

சிறிதே மண் காண எண்ணிய தாய் யசோதை

மண்ணுடன் விண்ணும் நீரும் நிலமும் அண்ட அகிலமும்

கண்டே மயங்கியது மாயையின் மயக்கத்தால் அன்றோ.

 

மாயை தயை கொண்டு ஆயர் குலச் சிறார்களையும்

கன்றுகளையும் காணாமல் போக்கினான் நான்முகன் பிரமன்

பரம்பொருளே இடைச் சிறுவராய் கன்றுகளாய் உருவெடுத்து

எங்கும் நீக்கமற நிறைந்து நின்றதும் மாயையின் செயலன்றோ.

 

முன்னவன் தன் மாயையை விலக்க, மறைத்த தனைத்தும்

மறையாமல் நிற்க , பிரமனே நாரணனின் கணக்கிலா

உருவம் கண்டு அவனும் மாயையில் மூழ்கி

விளக்கம் பெற்றதும் மாயையின் செயலன்றோ

 

செருக்களத்தில் பார்த்தனுக்குச் சாரதியாய் சக்கரம்

கொண்டு ஆதவனை மறைத்து பூவுலகினை இருட்டாக்க

தலை தப்பியது என எண்ணி ஜயத்ரதன் தலை காட்ட

சக்கரம் மீட்டு இருள் விலக்கி அவன் தலை கொய்ய

கண்ணன் நிகழ்த்தியதும் மாயையின் செயலன்றோ/.

 

இல்லாதது இருப்பதுபோல் தோன்றுவதும் இருப்பது

இல்லாதது எனத் தோன்றுவதும் மாயையின்

விளைவு எனப் பொருள் புரிதல் தவறாமோ.

உலகே மாயம் வாழ்வே மாயம் என்பதும் சரிதானோ

நிரந்தரம் என்பது ஏதுமில்லை,நிகழ்வுகளில் நிச்சயமில்லை.

கருத்துப் பிழைகளும் காட்சிப் பிழைகளும் நிறைந்ததே வாழ்க்கை

மாயையின் பிடியில் மயங்கி இருப்பதே வாழ்க்கையின் நிதர்சனம்

மனத்தின்  மயக்கமே  மாயை என்றறிவோம்

உண்டு உறங்கி எழுவது நிச்சயமில்லை போகுமிடம்

தெரியாமல் போகாத ஊருக்குப் பொருள் ஈட்டி யாருக்கென்ன லாபம்

பேதம் பாராமல் பகிர்ந்துண்டு  வாழ்தல்  பெருமை தரும் 

ஈதலின் இன்பம் கொடுத்தனுபவித்தால் புரியும்

 ஏற்றமும் தாழ்வும் நிரந்தரமல்ல யாரும் யாராகவும் ஆகலாம்

உணர்ந்து கொண்டால் வாழ்வில் நிம்மதி நிச்சயம்
--------------------------------------------------------------------------------------------.

மாயை என்பது தண்ணீரில்
கிடையாக நிறுத்தி வைக்கப்படும் ஒரு கோலைப் போன்றது . என்ன தான் கோல் வளையவில்லை என்று நம் common sense சொன்னாலும் ஒவ்வொரு முறையும் நமக்கு கோல் வளைந்தே தெரிகிறது. அப்படிப்பட்டது தான் மாயை. மாயை என்று தெரிந்து கொண்டே
எல்லாவற்றியும் செய்ய வேண்டி இருக்கிறது இவ்வுலகில்.

மாயை என்று நாம் சொல்லும் போது
நம்மை அறியாமலேயே 'நிரந்தரம்' என்ற ஒன்றை பின்புலத்தில் கொண்டு வந்து விடுகிறோம்.

வியாழன், 13 ஜனவரி, 2022

எங்கே தவறு

                 எங்கே  தவறு.....?

                                             -----------------
                                         ( ஒரு சிறு கதை )

தப தப “ என்று கதவு தட்டப் பட்டது.
“ இதோ வருகிறேன். அதற்குள் இப்படியா கதவைத் தட்டுவது” என்று கூறிக் கொண்டே வந்த ஜயந்தி சற்றும் எதிர்பார்க்காத முறையில் , கதவை திறந்ததும் தள்ளப் பட்டாள் அவளுக்கு பரிச்சயமே இல்லாத மூன்று நான்கு பேர் அவளைக் கீழே தள்ளி மிதித்து , அவள் தலை முடியைக் கொத்தாகப் பிடித்து மாறி மாறி அறைந்தார்கள். அவளுடைய பதின்ம வயதுப் பெண்: ஐயோ, ஐயோ அம்மாவை அடிக்கிறார்களே என்று சத்தம் போட ஆரம்பித்தாள்.. ‘ உடனே இந்த ஊரைவிட்டு ஓடிடு. இன்னும் இங்கேயே இருக்கலாம்னு நெனச்சா, உன் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. ஜாக்கிரதை” வந்தவர்கள் அவர்களுக்கு கொடுக்கப் பட்ட பணி முடித்துக் கிளம்பினார்கள்.

ஜயந்திக்கு முதலில் ஒன்றுமே விளங்க வில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் விளங்க ஆரம்பித்ததும் நிலைமை கட்டுக்கு அடங்காமல் போவது புரிந்தது. கையில் ஒரு பையில் அத்தியாவசியமான சில துணி மணிகளை எடுத்துக் கொண்டு மகளையும் அழைத்துக் கொண்டு அவள் குடியிருந்த மாடி வீட்டிலிருந்து யாரிடமும் சொல்லாமல் வெளி யேறினாள்.

அன்றிரவு சுமார் பதினோரு மணி அளவில் ஜயந்தி குடியிருந்த வீட்டின் காம்பௌண்ட் கேட்டைத் தாண்டி வந்த சிலர் கீழ்வீட்டின் கதவைத் தட்டினார்கள்.” அந்தத் தேவடியாள் ஜயந்தி எங்கே.? ஒளித்து வைத்திருக்கிறீர்களா.?”  வீட்டின் சொந்தக்காரருக்கு ஒன்றும் விளங்க வில்லை. “ ஜயந்தி மாடியில் குடியிருக்கிறாள். அங்கு போய் பாருங்கள். இந்த அகால நேரத்தில் தொந்தரவு செய்தால் பொலீசுக்கு போன் பண்ணுவோம்.” என்று சத்தம் போட்டார். “ தாராளமாகப் போன் செய்யுங்கள். இந்த வீட்டில் விபச்சாரம் நடக்கிறது என்று நாங்களும் புகார் கொடுப்போம்” என்று அவர்களும் பதிலுக்கு மிரட்டினார்கள். ஜயந்தி அங்கில்லை என்று உறுதி செய்து கொண்ட பின்னர் அந்த ரௌடிக் கும்பல் வெளியேறியது.

அவர்கள் சென்ற பிறகு மாடிக்குச் சென்று பார்த்தபோது கதவு பூட்டப் பட்டிருந்தது தெரிந்தது. இந்த நேரத்தில் யாரிடமும் சொல்லாமல் எங்கே போயிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு அவளை கை பேசியில் தொடர்பு கொள்ள முயன்றனர். சுவிட்ச் ஆஃப் செய்துள்ளதாகத் தகவல் கிடைத்தது.

வீட்டைவிட்டு வெளியே வந்த ஜயந்தி முதலில் அவள் கணவனுக்கு( ? ) ஃபோன் செய்தாள். “ இந்த இடமும் அவர்களுக்குத் தெரிந்து விட்டது. இனி அங்கு இருப்பது முடியாத காரியம். என்ன செய்யச் சொல்கிறீர்கள்” என்று கேட்டாள்.


“ நீ நேராக மைசூருக்குப் போ. நானும் அங்கு வந்து சேருகிறேன்/ பிறகு உசிதம் போல் செய்யலாம் “ என்று பதிலளித்தான்.
இப்படி எவ்வளவு நாட்கள் ஓடி ஓடி ஒளிந்து வாழமுடியும் . இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்தவள் நினைவுகள் இதற்கான காரணங்களை மேய ஆரம்பித்தது
ஜயந்தி அழகானவள்தான். எல்லோரையும் போல் வாழ்க்கைக் கனவுகள் அவளுக்கும் நிறையவே இருந்தது. டிகிரி படிப்பு முடித்ததும் திருமணப் பேச்சும் எழுந்தது. ஜயந்திக்கு பட்டம் பெற்றதால் வேலைக்குப் போய் சம்பாதிக்கும் ஆசை ஏதுமிருக்க வில்லை. ஆகவே திருமண பேச்சு எழுந்ததும் அவள் மறுப்பு ஏதும் சொல்லாமல் கல்யாணம் செய்ய இசைந்தாள். இவர்கள் சுமாரான வசதி படைத்த குடும்பம் ஒரு அண்ணன் . பார்த்துப் பார்த்துதான் திருமணம் செய்தார்கள். ஜயந்திக்கு அவளது திருமண நாளின் முதல் இரவை மறக்கவே முடியாது.
மணமக்கள் இருவரும் ஏகப் பட்ட எதிர்பார்ப்புகளுடன் முதல் இரவை எதிர் நோக்கி இருந்தனர். ஆரம்ப சம்பாஷணைகளுக்குப் பிறகு விளக்கு அணைக்கப் பட்டது. மணமகன் முதலிரவின் போது இப்படி இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஒத்திகை பார்த்துக் கொண்டவன் போல் மெதுவாக அவளை அணைத்தான். இவளும் இணைந்து கொடுக்க மெல்ல மெல்ல உதடோடு உதடிணைய கைகளும் மேலெல்லாம் படர தாம்பத்தியத்தின் முதல் படியில் இறங்கினான். ஓரிரு நிமிடங்களில் அவனுடைய இச்சை தணிக்கப் பட்டதும் சோர்வுடன் சரிந்தான். அதுவரை அவனுடைய இச்சைக்கு தன்னை உட்படுத்திக் கொண்ட ஜயந்தி மெதுவாக உடல் கிளர்ச்சியால் ஆட்படுத்தப் பட்டு அவனை இறுக்கிக் கட்டி அணைத்தாள். இதனை சற்றும் எதிர்பாராத அவள் கணவன் முதலில் கொஞ்சம் பயந்தான். சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்ட அவன் மீண்டும் கலவியில் மூழ்கி அயர்ந்தான். ஜயந்தி அப்போதுதான் மெதுவாக இச்சையின் உச்சத்துக்குச் சென்று கொண்டிருந்தாள். அவள் கலவியின் இன்பத்தை அடையும் முன்பாக அவள் கணவன்  துவண்டு விட்டான். அவனால் முடியவில்லை ஜயந்திக்கு அவன் மேல் கோபம் எழுந்தது. இப்படியாக முதல் இரவு இருவருக்கும் வித்தியாசமான அனுபவங்களைக் கொடுத்தது. அதன் பின் வந்த நாட்களிலும் இதே அனுபவம் தொடர இருவரும் இரவு நேரத்தை வெறுக்க ஆரம்பித்தனர்.இளமைப் பருவத்தின் உடல் இச்சைகளைப் பூர்த்தி செய்ய முடியாத கணவனின் கையாலாகாத்தை வெறுத்து இவளும் , இவள் இச்சையைப் பூர்த்திசெய்ய ஒரு ” பொலி எருது” தான் வரவேண்டும் என்று அவனும் நினைக்கத் தொடங்கினர்.
எது எப்படி இருந்தாலும் ஜயந்தி முழுகாமல் இருந்து ஒரு பெண் மகவை ஈன்றாள். சிறிது காலத்துக்காவது நிம்மதியாக இருக்கலாம் என்று அவள் கணவன் நினைத்துக் கொண்டான். தாம்பத்திய வாழ்வில் எவ்வளவு நாட்கள் இப்படியே தாக்கு பிடிக்க முடியும்.? சண்டையும் பூசலுமாக நாட்கள் ஓடின. ஒரு நாள் இவளையும் குழந்தையையும் விட்டு விட்டு அவன் ஓடியே போய் விட்டான். ஜயந்திக்கு காரணம் தெரிந்திருந்தாலும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில் செய்வதறியாது நடமாடிக்கொண்டிருந்தாள். அவளுக்கு ஒரு இட மாற்றம் தேவை என்று நினைத்து அவளை அவளது அண்ணன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இடமாற்றம் கொஞ்சம் தெளிவு கொடுத்தாலும் ஜயந்தியின் இளமையின் இச்சைகள் பூர்த்தி செய்யப் படாமலேயே இருந்தது. துணைக்கு ஏங்க ஆரம்பித்தது மனசு. காலையில் எழுவது பள்ளிக்குப் போகத்துவங்கிய பெண்ணின் தேவைகளைக் கவனிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது என்று ஒரே சீரில் வாழ்க்கை நடந்தாலும் மனதின் வெறுமை அவளை ஆக்கிரமிக்கத் துவங்கியது. மெள்ள மெள்ள தன் அண்ணனுக்கும் அவன் குடும்பத்துக்கும் தான் பாரமாய் இருப்பதாய் எண்ணத் துவங்கினாள்
ஜயந்தியின் அண்ணனுக்கு நிறைய நண்பர்கள். அவனது வீட்டுக்கு வந்து போகும் பலரையும் ஜயந்தி கவனித்து வந்தாள். அவர்களில் சிவகுமார் இவளைக் கவர்ந்தான். நிதானமாக அவனைப் பற்றிய விவரங்களை சேகரித்துக் கொண்டாள் . சிபகுமாரனுக்கு ஏறத்தாழ இவள் வயதிருக்கும். பெரிய பணக்காரன். மணமானவன், மனசுக்குப் பிடித்தவனாய் இருந்தான். சிவகுமாரனுக்குக் குழந்தை பாக்கியம் இருக்கவில்லை. அவன் மனைவி வீட்டில் அது ஒரு பெரிய குறையாகத் தெரிந்தது. வசதி இருந்தும் குழந்தை பெறும் அருகதை இல்லாதவன் என்பதால் உதாசீனப்படுத்தப் பட்டான். சிவகுமாரன் வீட்டில் குழந்தை இல்லாக் குறைக்கு அவன் மனைவியே காரணம் என்று எண்ணினர். அவனுக்கு மறுமணம் செய்யவும் தயாராயிருந்தனர். குழந்தை இல்லை என்னும் ஒரே காரணத்துக்காக விவாக ரத்து கிடைக்குமா.?மேலும் சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டவன் அதன் பலன்களை இழக்க விரும்பவில்லை. ஜயந்தியைக் கண்டவன் அவளது மையலில் மயங்கினான். ஜயந்தியின் அண்ணனுக்கு இது பிடிக்கவில்லை. ஜயந்தியை மணமுடித்து தனியாகக் குடித்தனம் வைக்கச் சொன்னான். சிவகுமாரனின் தாய்க்கு இதில் உடன்பாடே. சிவகுமாரன் சட்டப்படி ஜயந்தியை மணக்க முடியாவிட்டாலும் கோவிலில் ஆண்டவன் சந்நதியில் ஜயந்தியின் க்ழுத்தில் தாலி கட்டி அங்கே அருகிலேயே வீடு பார்த்துக் குடித்தனம் வைத்தான்.
அதில்தான் வினையே ஆரம்பித்தது. சிவகுமாரனின் மனைவியின் சகோதரர்கள் அடியாட்களுடன் வந்து ஜயந்தியை சிவகுமாரன் இல்லாத நேரத்தில் வந்து மிரட்டியும் அச்சுறுத்தியும் வரத் துவங்கினர். அடிக்கடி ஜாகை மாற்றி பயத்தில் ஜடந்தியும் அவள் மகளும் வசித்தனர். சிவகுமாரனைத் தொடர்ந்து வந்து அவர்கள் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து கலாட்டா செய்ததால், சிவகுமாரன் அவனது காரை எங்காவது தூரத்தில் நிறுத்தி நடந்து வரத்தொடங்கினான்.  ஜயந்தி தனக்காக வாடகைக்கு வீடு தேடினால் அவளை விசாரித்து கணவனோடு வரும்படி வீட்டு உடமையாளர்கள் கேட்டனர். கணவருக்கு அடிக்கடி பயணம் செய்யும் பணி என்று பொய் பேசிப் பார்த்தும் வீடு வாடகைக்கு கிடைக்காததால் சிவகுமாரனுடன் வந்து வாடகைக்கு வீடு பிடிக்கலானாள். இப்படி ஓடி ஒளிந்து வாழ்கையில் சிவகுமாரன் மனைவி கர்ப்பம் தரித்து ஒரு ஆண்மகவை ஈன்றாள். ஜயந்தியின் பாடு திண்டாட்டமாகிவிட்டது. சிவகுமாரனின் உறவினர்கள் வன்முறையில் இறங்க நடந்ததுதான் அவள் கடைசியாக வீட்டை விட்டு வெளியேறியது.
ஜயந்தியை மைசூருக்குப் போகச் சொன்ன சிவகுமாரன் அங்கு சென்று அவளுடன் காரில் அவளது சொந்த ஊருக்கு கூட்டிச் சென்று அவளை அவளது பெற்றோரிடம் ஒப்படைத்து அவளை கைவிட மாட்டேன் என்று உறுதி அளித்து வந்து விட்டான்.
ஜயந்தியின் கதை கேட்கும்போது எங்கோ  ஏதோ தவறு என்பது புரிகிறது.  எங்கே என்று தெரிகிறதா.?.   
(  விமரிசனம்  வரவேற்கப்படுகிறது ) 

செவ்வாய், 11 ஜனவரி, 2022

இன்னுமொரு வாய்ப்பு

 ஆண்டொன்று கழிகிறது, இன்னொன்று மலர்கிறது.

நாளெல்லாம் ஒன்றுபோல் தோன்றினும் ஒன்றாவதில்லை.
ஒவ்வொரு விடியலிலும் மீண்டும் உயிர்க்கிறோம்
புலரியில் புள்ளினங்கள் பறக்கும்போது அவை
நேற்றை நினைக்கின்றனவா ?. இன்றைக்கென்று புதுப்
பிரமாணங்கள் எடுக்கின்றனவா ?..மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த
இன்று, நேற்று, நாளையெல்லாம் .ஓ......! அவனுக்கு ஓரறிவு கூட
இருப்பதாலா. இருக்கட்டும். நேற்றின் நாளையாம் இன்று பற்றி
நேற்றே கவலை கொண்ட அவன் இன்றின் நாளையைப் பற்றி
சிந்திக்காமல் இருப்பானா. சிந்திக்கட்டும் சிந்திக்க வேண்டும்
நாளெல்லாம் ஒன்றுபோல் தோன்றினும் ஒன்றாவதில்லை.
ஒவ்வொரு நாளும் சிகரம் தொட இன்னொரு வாய்ப்பு.
வாழ்க்கைப் பயணம் தொடர்வோம் . புத்தாண்டில் புது
சிகரம் தொடப் பிரமாணம் எடுப்போம்.
(ஒரு இழப்பின் வேதனையில் என்னையே தேற்றிக் கொள்ள 
எழுதியது)




சனி, 8 ஜனவரி, 2022

இன்னுமொரு சுட்ட கதை

வேதபுரத்தில் ஒரு புது மாதிரிக் குடுகுடுப்பைக்காரன் புறப்பட்டிருக்கிறான். உடுக்கைத் தட்டுவதிலே முப்பத்தைந்து தாள பேதங்களும், அவற்றிலே பல வித்தியாசங்களும் காட்டுகின்றான். தாள விஷயத்திலே மஹா கெட்டிக்காரன். உடம்பு மேலே துணி மூட்டை சுமந்து கொண்டு போவதில்லை. நல்ல வெள்ளை வேஷ்டி உடுத்தி, வெள்ளைச் சட்டை போட்டுக் கொண்டிருக்கிறான். தலையிலே சிவப்புத் துணியால் வளைந்து வளைந்து பெரிய பாகை கட்டியிருக்கிறான். பாகையைப் பார்த்தால் நெல்லூர் அரிசி மூட்டையிலே பாதி மூட்டையைப் போலிருக்கிறது. நெற்றியிலே பெரிய குங்குமப் பொட்டு, மீசையும் கிருதாவுமாக மிகவும் விரிந்த பெரிய முகத்துக்கும் அவனுடைய சிவப்பு நிறத்துக்கும் அந்தக் குங்குமப் பொட்டு நன்றாகப் பொருந்தியிருக்கிறது. ஆள் நெட்டை; தடியன். காலிலே ஹைதராபாத் ஜோடு மாட்டியிருக்கிறான். நேற்றுக் காலையிலே, அவன் நம்முடைய வீதி வழியாக வந்தான். உடுக்கையிலே தாள விஸ்தாரம் நடக்கிறது. பெரிய மிருதங்கக்காரன் வேலை செய்வது போலச் செய்கிறான், நல்ல கெட்டிக்காரன். அவன் சொன்னான்:

”குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது;
ஜாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது;
சொல்லடி, சொல்லடி சக்தி மாகாளி,
வேதபுரத்தாருக்கு நல்ல குறி சொல்லு;
தரித்திரம் போகுது, செல்வம் வருகுது;
படிப்பு வளருது, பாவம் தொலையுது;
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான், போவான்; ஐயோவென்று போவான்,
வேதபுரத்திலே வியாபாரம் பெருகுது;
தொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான்;
சாத்திரம் வளருது; சூத்திரந் தெரியுது;
மந்திரம் பெருகுது; தந்திரம் வளருது;
மந்திரமெல்லாம் வளருது; வளருது!
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு,
சொல்லடி, சொல்லடீ, மலையாள பகவதீ.
அந்தரி, வீரி, சண்டிகை, சூலி;
குடுகுடு குடுகுடு”

– இப்படி அவன் சொல்லிக் கொண்டு போவதை நான் மெத்தையிலிருந்து கேட்டேன். இதென்னடா புதுமையாக இருக்கிறதென்று ஆச்சர்யத்துடன் அவனை நிற்கச் சொன்னேன். நின்றான். கீழே இறங்கிப் போய், அவனை ஸமீபத்தில் அழைத்து ”எந்த ஊர்” என்று கேட்டேன். ”சாமி, குடுகுடுப்பைக்காரனுக்கு ஊரேது, நாடேது? எங்கேயோ பிறந்தேன், எங்கேயோ வளர்ந்தேன். எங்கெல்லாமோ சுத்திக் கொண்டு வருகிறேன்” என்றான். அப்போது நான் சொன்னேன் :

”உன்னைப் பார்த்தால் புதுமையாகத் தெரிகிறது. சாதாரணக் கோணங்கிகளைப் போலில்லை. உன்னுடைய பூர்வோத்தரங்களைக் கூடிய வரையில் விஸ்தாரமாகச் சொல்லு. உனக்கு நேர்த்தியான ரிகை வேஷ்டி கொடுக்கிறேன்” என்றேன்.

அப்போது, குடுகுடுக்காரன் சொல்லுகிறான் : ”சாமி, நான் பிறந்த இடந்தெரியாது. என்னுடைய தாயார் முகம் தெரியாது. என்னுடைய தகப்பனாருக்கு இதுவே தொழில். அவர் தெற்குப் பக்கத்தைச் சேர்ந்தவர். ‘ஒன்பது கம்பளத்தார்’ என்ற ஜாதி. எனக்குப் பத்து வயதாக இருக்கும் போது தஞ்சாவூருக்கு என் தகப்பனார் என்னை அழைத்துக் கொண்டு போனார். அங்கே வைசூரி கண்டு செத்துப் போய் விட்டார். பிறகு நான் இதே தொழிலில் ஜீவனம் செய்து கொண்டு பல தேசங்கள் சுற்றி ஹைதராபாத்துக்குப் போய்ச் சேர்ந்தேன். அப்போது எனக்கு வயது இருபதிருக்கும். அங்கே ஜான்ஸன் என்ற துரை வந்திருந்தான். நல்ல மனுஷ்யன். அவன் ஒரு ‘கம்பெனி ஏஜெண்டு’. இந்தியாவிலிருந்து தாசிகள், நட்டுவர, கழைக் கூத்தாடிகள், செப்பிடு வித்தைக்காரர், ஜாலக்காரர் முதலிய பல தொழிலாளிகளைச் சம்பளம் கொடுத்துக் கூட்டிக் கொண்டு போய், வெள்ளைக்காரர் தேசங்களிலே, பல இடங்களில் கூடாரமடித்து வேடிக்கை காண்பிப்பது அந்தக் கம்பெனியாரின் தொழில். விதிவசத்தினால் நான் அந்த ஜான்ஸன் துரை கம்பெனியிலே சேர்ந்தேன். இங்கிலாந்து, பிரான்ஸ், முதலிய ஐரோப்பிய தேசங்களிலே ஸஞ்சாரம் செய்திருக்கிறேன். அமெரிக்காவுக்குப் போயிருக்கிறேன். இரண்டு வருஷங்களுக்கு முன்பு சண்டை தொடங்கினபோது, மேற்படி ‘கம்பெனி’ கலைந்து போய் விட்டது. எங்களுக்கெல்லாம் பணம் கொடுத்து இந்தியாவுக்கு அனுப்பி விட்டார்கள். உயிருள்ளவரை போஜனத்துக்குப் போதும்படியான பணம் சேர்த்து வைத்திருக்கிறேன். ஆனாலும் பூர்வீகத்தொழிலைக் கைவிடுவது ஞாயமில்லை என்று நினைத்து இங்கு வந்த பின்னும் பல ஊர்களில் சுற்றி, இதே தொழில் செய்து வருகிறேன். ஐரோப்பா முதலிய தேசங்களில் சுற்றின காலத்தில் மற்றக் கூத்தாடிகளைப் போல வீண் பொழுது போக்காமல், அவ்விடத்துப் பாஷைகளைக் கொஞ்சம் படித்து வந்தேன். எனக்கு இங்கிலீஷ் நன்றாகத் தெரியும். வேறு சில பாஷைகளும் தெரியும். அநேக புஸ்தகங்கள் வாசித்திருக்கிறேன். இங்கு வந்து பார்க்கையிலே அவ்விடத்து ஜனங்களைக் காட்டிலும் இங்குள்ளவர்கள் பல விஷயங்களிலே குறைவுபட்டிருக்கிறார்கள். நம்முடைய பரம்பரைச் தொழிலை வைத்துக் கொண்டே ஊருராகப் போய் இங்குள்ள ஜனங்களுக்குக் கூடியவரை நியாயங்கள் சொல்லிக் கொண்டு வரலாமென்று புறப்பட்டிருக்கிறேன். இதுதான் என்னுடைய விருத்தாந்தம்” என்றான்.

ஒரு ஜரிகை வேஷ்டி எடுத்துக் கொடுக்கப் போனேன்; போன தீபாவளிக்கு வாங்கினது; நல்ல வேஷ்டி.

”சாமி வேண்டியதில்லை” என்று சொல்லிவிட்டு அவன் மறுபடி உடுக்கையடித்துக் கொண்டு போய் விட்டான். போகும் போதே சொல்லுகிறான் :

”குடு குடு, குடு குடு, குடு குடு, குடு குடு
சாமிமார்க்கெல்லாம் தைரியம் வளருது.
தொப்பை சுருங்குது; சுறுசுறுப்பு விளையுது,
எட்டு லட்சுமியும் ஏறி வளருது,
பயந் தொலையுது, பாவந் தொலையுது
சாத்திரம் வளருது, சாதி குறையுது,
நேந்திரம் திறக்குது, நியாயந்தெரியுது,
பழைய பயித்தியம் படீலென்று தெளியுது,
வீரம் வருகுது, மேன்மை கிடைக்குது,
சொல்லடீ சக்தி, மலையாள பகவதி,
தர்மம் பெருகுது, தர்மம் பெருகுது,”

– என்று சொல்லிக் கொண்டே போனான். அவன் முதுகுப்புறத்தை நோக்கி, தெய்வத்தை நினைத்து, ஒரு கும்பிடு போட்டேன்.




செவ்வாய், 4 ஜனவரி, 2022

நான் நல்ல பையன்

 


எண்பத்து மூன்றிலும்  நல்ல பையன் நான்
கண்முன்னே கார்குழல் விரித்த கன்னியர்


(இப்போதெல்லாம் பின்னிய கூந்தல் காண்பதரிது)

பத்மினி,சித்தினி,சங்கினி, அத்தினிப் பெண்டிர்
பவிசாக வந்தாலும் பத்திர காளியாய் நின்றாலும்
பயமாய் இருக்கிறது.. தலை தூக்கிக் கண்டாலே
காவலரிடம் புகார் செய்வரோ, என்றே அச்சம்.
அவர்களுக்கென்ன ..பாரதியே கூறிவிட்டான்
நிமிர்ந்து நடக்கவும்  நேர்கொண்டு பார்க்கவும்.

எனக்கேன் இந்த பயம்..?

பேதையோ, பெதும்பையோ
மங்கையோ மடந்தையோ , அரிவையோ தெரிவையோ
இல்லை பேரிளம்பெண்ணோ , பார்வையால்
துகில் உரியப்பட்டு பருவ பேதமின்றி சிதைக்கப்படும்
அச்சத்தின் உச்சத்தில் வளைய வரும் தாய்க்குலம்
யாரைப் பார்த்தாலும் பாம்பா பழுதையா என்றறியாது
தற்காப்புக்காக எதுவும் செய்யலாம்தானே

பாரதிதாசன் கூறியதுபோல் “ கிளையினில் பாம்பு தொங்க
விழுதென்று குரங்கு தொட்டு விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கென குதித்ததைப் போல் கிளைதோறும் குதித்துத் தாவி
கீழுள்ள விழுதையெல்லாம் ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி
உச்சிபோய்த் தன் வால் பார்க்கும்.”

பாவிகள் பலரது செயல்கள்
பூவையரிடையே அச்சத்தை விளைவிக்க நானிருக்கிறேன்
எண்பத்து மூன்றிலும்  நல்ல பையனாக.

சனி, 1 ஜனவரி, 2022

உணவும் உடலும் ஒரு மீள் பதிவு

 

எனக்கு வெகு நாட்களாகவே இருக்கும் சந்தேகம். உண்ணும் உணவுக்கும் உருவத்துக்கும் சம்பந்தம் உண்டா. ? எனக்குத் தெரிந்தவர்களில் சிலர் அதிக அளவிலும் அடிக்கடியும் உண்டாலும் ஒல்லிப்பிச்சான்களாகவே இருக்கிறார்கள். சிலர் குறைந்த அளவே உண்டாலும் பருமனாக இருக்கிறார்கள். .ஒருவரது எடை உயரத்துக்கு ஏற்றபடி இருக்க வேண்டும் ஒருவரது உயரத்தை செ. மீ. கணக்கில் எடுத்துக்கொண்டால் அவரது எடை பொதுவாக உயரம்   in செ.மீ-லிருந்து 100-ஐ கழித்தால் வருவது என்பது THUMB RULE ஆக எடுத்துக் கொள்ளலாம். உயரத்துக்கும் எடைக்கும் சம்பந்தம் இல்லாமல் தொந்தியும் தொப்பையுமாக , காலில் இருக்கும் செருப்பைக் கூட காணமுடியாதபடி இருந்தால் உடம்புக்கு நல்லதல்ல. உடல் நலத்தில் அக்கரை செலுத்த வேண்டும்.



சிலர் உயிர் வாழ உண்கிறார்கள். சிலர் உண்பதற்காக உயிர் வாழ்கிறார்கள். பொதுவாக உடல் பருமன் அதிகமுள்ளவர்கள் உடல் உழைப்பில் குறைந்தவர்களாக இருக்கிறார்கள். உட்கொள்ளும் உணவையும் செலவுசெய்யும் சக்தியையும் கலோரி என்னும் கணக்கில் சொல்கிறார்கள். உடல் ஆரோக்கியத்துக்கு மிக முக்கியம் நாவடக்கம். பேச்சைக் குறைப்பதல்ல. இது வேறு நாவடக்கம். உணவு உட்கொள்ளும்போது இன்னும் சிறிது சாப்பிடலாம் என்று தோன்றும்போதே உண்பதை நிறுத்திவிட வேண்டும். எழுபது சதவீதம் உணவும் இருபது சதவீதம் நீரும் உட்கொண்டபிறகு மீதி இடம் காலியாக இருப்பது முக்கியம். அதை விட்டு தொண்டைவரை உணவை நிரப்பினால் ஆரோக்கியம் உத்தரவாதம் இல்லை. 
எனக்கு உணவை ரசித்து, ருசித்துச் சாப்பிடுபவர்களைக் கண்டால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். என் உறவினர் ஒருவர் போஜனப் பிரியர். நன்றாகச் சாப்பிடுவார். அவருக்கு அந்தக் காலத்தில் குடலில் அல்சர் வந்து ஆப்பரேஷன் செய்து   இரைப்பையின் நீளத்தைக் கணிசமாக குறைத்திருந்தார்கள்.
அவர் சாப்பிடுவதைப் பார்த்து நண்பன் ஒருவன், பாதி குடலை அறுத்தெறிந்தும் இவ்வளவு சாப்பிடுபவன் , முழுக் குடலும் இருந்தால் எவ்வளவு சாப்பிடுவானோ “என்று காமெண்ட் அடிப்பான். இன்னொரு உறவினர் தோசையோ இட்லியோ சாப்பிடும்போது இன்னும் வேண்டும் என்பதை “ நாட் அவுட் “ என்று சொல்லித் தெரியப் படுத்துவார். அவரை அவுட் செய்வதற்குள் போதும் என்றாகிவிடும். ஒரு இண்டெரெஸ்டிங் விஷயம். வீட்டில் நிறைய சாப்பிடுபவர்கள் பொதுவாக ஓட்டலில் சாப்பிடும்போது அளவு மிகவும் குறைவாகவே இருக்கும். உணவுக்குப் பதில் பணத்தை உண்பதுபோல் நினைக்கிறார்களோ என்னவோ. அது டிபன் வகையறாக்களில் மட்டும்தான் இருக்கும். ஓட்டலில் அன்லிமிடெட் சாப்பாடு என்று வரும்போது ஒரு கை பிடிப்பார்கள்.

நான் பார்த்து புரிந்து கொண்ட வரை ( இது ஒரு அனுமானம்தான். தவறு இருக்கலாம் )நன்றாக உண்டு கொழுகொழுவென்று இருப்பவர்கள். மனதளவில் இரக்க சிந்தனை உடையவர்களாகவும் கோபம் குறைந்தவராகவும் இருக்கிறார்கள். அதற்கு நேர்மாறாக ஒல்லியாய் இருப்பவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவராகவும் முன் கோபம் உள்ளவராகவும் இருக்கிறார்கள்.உணவு பற்றிய சில விஷயங்கள் பாட புத்தகங்களில் இருப்பது கண்டு சில நாட்கள் பத்திரிகைகளில் பெரிய விவாதமே இருந்தது. வெஜிடேரியன், நான்-வெஜிடேரியன் உணவுகளில் எது சிறந்ததுஎன்னும் விவாதம் சர்ச்சையைக் கிளப்பும். ஆனால் மனித்னின் வாயும் பற்களும் வெஜிடேரியன் உணவுக்குத்தான் சரியாக இருக்குமோ என்று தோன்றுகிறது. 

வெஜிடேரியன் நான்-வெஜிடேரியன் உணவு என்று எண்ணும்போது எனக்காக நான்வெஜிடேரியன் உணவைத் துறந்த என் மனைவியை நினைக்காமல் இருக்க முடியவில்லை. திருமணம் ஆன புதிதில் அவளை சென்னையில் புஹாரி ஓட்டலுக்கு அழைத்துச் சென்று அவள் பிரியப்பட்ட நான்வெஜிடேரியன் உணவைச் சாப்பிடச் சொன்னேன். அந்த என் so called நல்ல குணம் கண்டு அவள் புலால் உண்பதைத் தவிர்த்து விட்டாள். நான் உணவில் எந்த  taboo வையும் கொண்டு வரப் பிரியப் படவில்லை. என் மக்களில் பலரும் புலால் உண்பது தடுக்கப் படவில்லை

உணவு உடலுக்கு முக்கியம். ஆனால் அதுவே உடலுக்கு ஊறு விளைவிக்கும் என்றால் அதைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. நேரத்துக்கு அளவாக உண்டு உடலைப் பேணுவது மிக முக்கியம். கூடுதல் இனிப்பு வகைகளும் எண்ணையில் பொறித்த உணவு வகைகளும் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும். உண்ட உணவு செரிக்க வேண்டும். உண்ணும் உணவின் அளவு சக்தியும் உடற் பயிற்சியின் மூலம் எரிக்கப் பட வேண்டும். உட்கொள்ளும் உணவின் கலோரி அளவும் நம் உடல் சம்பந்தப் பட்ட நடவடிக்கைகளின் மூலம் செலவாகும் கலோரி அளவும் சரியாக இருந்தால் நம் உடல் கட்டுக்குள் இருக்கும். சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.நோயற்ற வாழ்வின் சரியான பாதையில்தான் நாம் இருக்கிறோம் என்று நாம் அறிய BODY MASS INDEX   என்னும் முறையை உபயோகிக்கிறார்கள். உயரத்துக்கும் எடைக்கும் உள்ள சரியான கொழுப்பின் அளவை கண்டுபிடிக்கும் ஒரு விகிதாச்சாரம்  எனக் கொள்ளலாம்