Wednesday, June 15, 2011

செல்லி....எங்கள் செல்லம்.

செல்லி.....எங்கள் செல்லம்
--------------------------------------
              என் மனைவியின் பாட்டியின் காரியத்துக்கு 
திருச்சியிலிருந்து பெங்களூர் வந்து திரும்பிய என் மனைவியும் 
என் மூத்த மகனும்,எனக்கு ஒரு எதிர்பாராத பரிசு என்று ஒரு 
கூடையைக் கொடுத்தனர். அதைத் திறந்து பார்த்தபோது, உண்மை
யிலேயே,நான் எதிர்பார்க்காததுதான்.ஒரு கறுப்பு நாய்க் குட்டி.
பிறந்து நான்கு வாரங்களாம். வால் இல்லை. காக்கர் ஸ்பானியல் 
ஜாதியின் கலப்பு நாய். பெண் குட்டி. என்னைவிட என் இளைய 
மகன் அதிக சந்தோஷமும் ஆச்சரியமும் அடைந்தான். எப்படி என் 
மனைவி  இதற்கு சம்மதித்து கொண்டு வந்தாளோ என்பதே ஒரு
புதிர். 

              வீட்டிற்கு வந்ததும் அது (அவள் )வீட்டின் சுவரோரமாக 
எல்லா இடங்களையும் சுற்றி வந்து, முகர்ந்து பார்த்துப் பின் ,முன் 
கால்கள்முன்னேயும், பின் கால்கள் பின்னேயுமாக நீட்ட்ட்ட்ட்டிப்
படுத்தது. பெண்கள் இல்லாத வீட்டுக்கு வந்த பெண் குட்டிக்குப்
பெயர் என்ன வைக்கலாமென்று ஒரு பெரிய சர்ச்சையே நடந்தது
என் பிள்ளைகளுக்குத் தங்கை என்ற பொருளில் செல்லி என்று 
( தெலுங்கில் தங்கை ) பெயர் வைத்தோம். என் பிள்ளைகள் அதை 
ஸ்டைலாக  ஷெல்லி என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். முதல் சில 
நாட்கள் என் மனைவிக்கு அதை கவனிப்பதே ஒரு பெரிய வேலை
ஆகிவிட்டது. முதலில் அது அசுத்தம் செய்யும் இடங்களை சுத்தம்
செய்வது தொடங்கி, அதற்கு உணவு கொடுத்துப் பார்த்துப் பார்த்து
வளர்ப்பதே முக்கிய அலுவலாகிவிட்டது. எல்லா வேலைகளை
யும்  அதைப் பற்றிய பயத்திலேயே செய்து வந்தாள். எங்கள் 
வீட்டில் நாங்கள் சைவம். நாயையும் சைவமாகவே வளர்த்தோம்.
செல்லிக்கு காரட் ,பீன்ஸ் , காபேஜ், என்றால் மிகவும் பிடிக்கும்.
காய்கறி நறுக்கும்போது அருகில் வந்து வாயில் எச்சில் ஊறக் 
காத்திருக்கும். காய்கறிகளில் முதல் பங்கு அதற்கே.காரட் என்ற 
பெயர் கேட்டாலேயே, சொன்னவரைப் பிடித்திழுத்து,  ஃபிரிட்ஜ்
பக்கம் நிறுத்தி எடுத்துக் கொடுக்கக் கேட்கும். ஆகவே நாங்கள் 
காரட் என்ற வார்த்தையை ஸ்பெல்லிங் ஆகத்தான் சொல்வோம்.
           நான் அதை மாடிக்குக் கூட்டிச் சென்று, சொன்ன பேச்சைக் 
கேட்கப் பழக்கினேன். நில், உட்கார், நட , ஷேக் ஹாண்ட், என்று 
சொன்னதைச் செய்யும். ஏதாவது ஆகாரப் பொருளைத் தின்னாதே
என்றால் சாப்பிடாது. பர்மிஷனுக்காகக் காத்திருக்கும். அதற்கு 
வீட்டில் எஜமானன் நான் என்று நன்றாகத் தெரியும்..ஒருசமயம் 
எங்கள் வீட்டு ரேஷன் கார்டை கடித்துக் கிழித்திருந்தது. இதை 
யார் கிழித்தது என்று நான் கேட்டவுடன் ,அடங்கி ஒடுங்கி சோஃபா
அடியில் போய்ப் படுத்துக் கொண்டது. அது ஏதாவது தவறு 
செய்தாலோ, அதற்கு விருப்பமில்லாததை செய்யச் சொன்னாலோ
( உதாரணத்துக்கு-குளிர் கலத்தில் குளிக்க )சோஃபாவின் அடியில் 
போய்விடும். கட்டாயப் படுத்தினால் உறுமித் தன் எதிர்ப்பைத் 
தெரிவிக்கும். 

           என் பிள்ளைகள்  எங்காவது வெளியே போகும்போது, அவர்
களுடன்  கூடப் போக முயற்சிக்கும். அவர்கள் அதை அதட்டிக்
கதவைச் சாத்திக் கொண்டு வெளியே போய் விட்டால், யார் 
போனார்களோ அவர்களது  ஏதாவது  உடையை ( ஜட்டி, பனியன்)
தேடி எடுத்து, அதை அங்கும் இங்கும் போட்டுப் புரட்டித் தன் 
ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ளும். ஆடைகளை கிழிக்காது. 
வீட்டிற்கு வரும் பாத் ரூம் சுத்த்ம் செய்ய வருபவரை அதற்கு 
பிடிக்கவே பிடிக்காது. அவர் வருவது கண்டு குரைக்க ஆரம்பிக்கும்.
நாங்கள் அதை ஒரு அறையில் விட்டு கதவை சாத்துவோம். 
பாத்ரூம் சுத்தம் செய்பவர் போன பின் கதவைத் திறப்போம்.
இருக்கும் ஆத்திரத்தோடு கதவைத் திறந்ததும் வெகு வேகமாகப் 
பாய்ந்து  வந்து வெளியே பார்த்துக் குரைக்கும்.

            நான் அலுவலகத்திலிருந்து மாலை திரும்பும்போது, என் 
காரின் சத்தத்தை தூரத்தில் வரும்போதே அறிந்து என்னை 
வரவேற்கத் தயாராகிவிடும். நான் வந்த உடனே, என் மேல் 
தாவி , என் கையை நக்கித் தன் சந்தோஷத்தைத் தெரிவிக்கும். 
நான் குளித்து உடை மாற்றி ஈஸி சேரில் உட்கார்ந்து அன்றைய 
பத்திரிகையை வாசிக்கத் தொடங்குவேன். சற்று நேரம் பொறுமை
யாய்க் காத்திருக்கும். பின் என்னைப் பிறாண்ட ஆரம்பிக்கும். 
மாலை அதை வாக்கிங் கூட்டிச் செல்லவேண்டும். கழுத்தில் 
செயினை மாட்டி வாக் போக படி இறங்க போனால் அது வராது. 
திரும்பி திரும்பி வீட்டைப் பார்க்கும். என் மனைவியும் வந்தால்
தான் படியிறங்கும். வாக்கிங் போகும்போது அதன் காலில் 
ஏதாவது கல்லோ, முள்ளோ குத்திவிட்டால் அந்தக் காலை 
தூக்கிக்கொண்டு அப்படியே நின்றுவிடும். நாம் அதனை எடுத்து
எறிய வேண்டும். அதேபோல அது சைவ நாயாதலால்  பீன்ஸ்
போன்ற காய்களைத் தின்று  அது மலம் கழிக்கும் போது அதன் 
ஆசன வாயில் ஏதாவது நார்  போன்றிருந்தால் அது நகராது. 
அதை சுத்தம்செய்து எடுத்தால்தான் மேலே நகரும். அதற்காக 
நாங்கள் நடக்கும்போது கையில் கொஞ்சம் வேஸ்ட் பேப்பர் 
எடுத்துச் செல்வோம்.

           அதன் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கவும் அதற்கு
வேண்டிய ஊசிகளைப் போடவும், ஒரு மிருக வைத்தியரை
நாடுவோம். அவரை வீட்டிற்கு அழைத்து வந்து, பிறகு கொண்டு
விடவேண்டும். ஒரு வருகைக்கு ரூபாய் ஐம்பது கொடுப்போம். .
அவருக்கு செல்லியைப் பார்த்து பயம். செல்லிக்கு அவரைப்
பார்த்து பயம். ஊசி போட அதை சன்னலின் ஒரு பக்கம் சேர்த்து
அழுத்திப் பிடிப்போம். மறுபக்கம் இருந்து டாக்டர் ஊசி போடுவார்.
ஊசி வேண்டாத நாட்களில், அவர் தூர நின்று பார்த்து நாய் நல
மாக இருப்பதாகக்  கூறி பீஸ் வாங்கிக்கொண்டு போய்விடுவார்.

            அசைவ நாய்க்கு சைவ உணவு கொடுத்து வருகிறோமே,
பாவம், என்று ஒரு முறை மட்டன் வாங்கி வந்து, வேக வைத்துக்
கொடுத்தோம். பழக்க மில்லாமல் சாப்பிட்ட அதற்கு, எலும்பு
ஒன்று அதன் மேலண்ணம் கீழண்ணமாக நேராக மாட்டிக்
கொண்டது. அது எவ்வளவோ முயன்றும் எடுக்க முடிய வில்லை.
என் மகன் அதன் வாயுக்குள் கை விட்டு அதை எடுக்க முயற்சி
செய்தான். நாய் எதிர்பாராமல் அவன் கையைக் கடித்து விட்டது.
பிறகு அது அவனையே , மன்னிப்பு கேட்பதுபோல் சுற்றி சுற்றி
வந்தது. அதை மிருக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்று, எலும்பை
எடுக்க வேண்டினோம்.அதை ஒரு கேட்டில் நகர முடியாமல்
கட்டி, ஒரு நீள கம்பியை வளைத்து, வாயில் இட்டு இழுத்து
எலும்பை எடுத்தனர். அது சரியாகி வர என் மனைவி, வேளாங
கண்ணி மாதா கோவிலுக்கு பிரார்த்தனை செய்ய , அங்கு சென்று
நிறைவேற்றி வந்தோம்.

            எல். டி சி. மூலம், ஒரு டாக்சி ஏற்பாடு செய்து, திருச்சி,
கோவை, ஊட்டி, முதுமலை, மைசூர், பேளுர்ஹலேபேட் ,
சரவண பெலகுளா, பெங்களூர், என்று டூர் போனோம். முதுமலை
பண்டிபூர் வழியே மைசூர் செல்லும்போது, ஒற்றை காட்டு யானை
ஒன்று குறுக்காக பாதையில் நிற்க, நாங்கள் மிகவும் பயந்து
விட்டோம். செல்லி எங்கள் காலடியில் தூங்கிக் கொண்டிருந்தது.

              ஒரு முறை செல்லியின் மூக்கில் ஒரு தேனி கொட்டிவிட,
அது மயங்கி விழ, நாங்கள் முதலில் மிகவும் பயந்து போனோம்.
சற்று நேரத்தில் தட்டுத் தடுமாறி  எழுந்து நின்று, மாடிக்கு ஓடியது,

             ஏழே வருடங்கள் எங்களுடன் இருந்த செல்லி, பாத்ரூம்
சுத்தம் செய்பவர் வந்து போக, ஒரு முறை பாய்ந்து வெளியே
வர, எங்கோ மூலையில் இடித்து, அதற்கு கண் பார்வை குறையத்
தொடங்கியது. என் மனைவி அடிக்கடி கூறுவாள், பக்கத்தில்
மாமியார் இல்லாத குறையை செல்லி போக்குகிறது என்று.
அப்படி பார்த்துப் பார்த்து கவனித்துக் கொள்வாள். செல்லி இறந்த
இரண்டு நாட்களுக்கு என் இளைய மகன் உண்ணவே இல்லை.

             செல்லிக்குப் பிறகு நாங்கள் வேறு செல்ல நாய் வாங்கவே
இல்லை. நாய்களுக்கு வளர்ப்போரிடமும், பூனைக்கு வளரும்
இடத்திலும் விசுவாசம் அதிகம். செல்லி கதை கேட்க என் பேர
குழந்தைகளுக்கு ஆர்வம் அதிகம். எத்தனை முறை கேட்டாலும்
சலிக்காது.
-------------------------------------------------------------------------------.

 









.

19 comments:

  1. ""ஆகவே நாங்கள்
    காரட் என்ற வார்த்தையை ஸ்பெல்லிங் ஆகத்தான் சொல்வோம்.""

    நல்ல கருத்தான செல்லி , உங்களின் செல்வி
    மனதிற்கு என்னவோ போல் ஆனது அதன் முடிவு
    சக உரிரினகளின் மேல் உங்களின் பாசம்
    நெகிழவைக்கிறது

    ReplyDelete
  2. அருமையான பதிவு.

    ReplyDelete
  3. நாய்களைப் போல ஒரு உயிர்த் தோழனைப் பார்ப்பது கடினம்.அவற்றின் பிரிவைத் தாங்குவதும் கடினம்.

    செல்லியின் கதையிலிருந்து அது உங்களை எப்படி ஆக்ரமித்திருந்தது என்பதை அறிய முடிந்தது.

    ReplyDelete
  4. நன்றியுள்ள ஒரு நாயின் சரித்திரத்தை தங்கள் பதிவின் மூலம் அழகாக அறிய முடிந்தது. நன்றிகள் சார்.

    ReplyDelete
  5. செல்லி கதை கேட்க என் பேர
    குழந்தைகளுக்கு ஆர்வம் அதிகம். எத்தனை முறை கேட்டாலும்
    சலிக்காது.//

    எங்களுக்கும் படிக்கச் சலிக்கவில்லை. பகிர்வுக்கு நன்றி ஐயா. அதன் பிரிவு கண்கலங்க வைக்கிறது.

    ReplyDelete
  6. உங்கள் பதிவு என் தந்தையாரின் நினைவுகளை கிளர்த்திவிட்டது. பலநாய்கள் வளர்த்தார். ஒவ்வொரு நாய் சாகும் போதும் அவர்படும் வேதனை சொல்லி மாளாது. அழகான பதிவுங்க

    ReplyDelete
  7. அன்பின் ஜிஎம்பி - என்னை விட பல ஆண்டுகள் நீங்கள் மூத்தவர். வலையுலகில் உங்களை விட மூத்தவர்கள் சிலரே உள்ளனர். என்னை சீனா என்றே அன்பாக அழைக்கலாம். ஐயா எல்லாம் வேண்டாம். நானும் நீங்கள் மூத்தவராக இருப்பினும் அன்பின் ஜிஎம்பி என அன்புடன் அழைக்கவே விரும்புகிறேன். உங்கள் இடுகைகள் படிக்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  8. அன்பின் ஜிஎம்பி - செல்லி உங்களது செல்லக் குழந்தைகளின் தங்கை. அதனைப் பெற்றவர்கள் மாதிரி வளர்த்தது நல்ல செயல். செல்லி இல்லாதது மிக வருத்தமே ! என்ன செய்வது ..... பேரன் பேத்திகளுக்குக் செல்லி கதை சொல்லி பொழுது போக்குங்கள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  9. பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார்
    அதை தன்பெற்ற பிள்ளைக்கு மேல்
    பாசம் காட்டி வளர்த்தார் என்பது போல
    நாங்களும் ஒரு நாய் வளர்த்தோம்
    தாங்கள் குறிப்பிட்டிருப்பதைப்போல
    அதன் இழப்பு எங்களை ரொம்ப
    சங்கடப்படுத்திவிட்டது
    அதன் பின் இப்போதெல்லாம்
    நாய் வளர்க்க மனதைரியம் வருவதில்லை

    ReplyDelete
  10. நான் கூட ஒரு பயங்கர நாய் நேசன். போன ஜென்மத்தில் நாயாக இருந்திருப்பேனோ என்று கூட சந்தேகம். உங்கள் செல்லியின் கதை நாங்கள் வளர்த்த நான்கு நாய்களின் நினைவை கிளறி விட்டு விட்டது. நாய்கள் என்று சொல்லவே வாய் (கை!) வரவில்லை. அந்த நான்கு அன்பு ஜீவன்களில் ஒன்றின் நினைவாய் நாய் மனம் என்ற பெயரில் ஒரு கதை கூட எங்கள் பதிவில் எழுதியுள்ளேன். மனிதனை அண்டித்தான் உன் பிழைப்பு என்று கடவுள் அந்த ஜீவன்களிடம் சொல்லி விட்டார் போலும். மனிதனிடம் அவை காட்டும் அன்பு சிலிர்க்க வைக்கும்.

    ReplyDelete
  11. வருகை தந்து, கருத்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

    ReplyDelete
  12. வருகை தந்து, கருத்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

    ReplyDelete
  13. அனேகமாக எல்லோருக்கும் இப்படி ஒரு செல்லி கதை இருக்கும் சார். செல்லப்பிராணிகள் வளர்ப்பும் அந்த ஒரு கதையுடேனேயே முற்றும் போடப்பட்டுவிடும். உங்களுக்கு செல்லி எங்களுக்கு லட்சுமி - அழகான ஆட்டுக்குட்டி.. நன்றி சார்.

    ReplyDelete
  14. தாங்கள் எழுதியுள்ள செல்லி யின்
    வரலாறும் அதன் சோகமுடிவும
    நீண்டநேரம் என் நெஞ்சத்தில்
    இனம் காணாத துன்பத்தைத்
    தந்தது என்றால் அது மிகை யாகாது
    அது வளர்ந்த முறையும் அதை
    இங்கே தாங்கள் வரைந்த முறையும்
    அருமை அருமை
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. ஷெல்லி- ஆஹா! முக்கியமா-- அந்த dress அ தரைல புரட்டர விஷயம்-- ரொம்பவே அழகு! எனக்கு நாய்கள் னா கொஞ்சம் பயம். ஆனா-- வளக்கரவா கதை சொன்னா கேக்க பிடிக்கும்... என் friend ஆத்துல Tommy ன்னு ஒரு dog இருக்கும்... அவ, நான்-எல்லாம் சென்னைக்கு வந்து தங்கினப்போ-- அவ daily போன் ல அவாத்துக்கு பேசும்போதெல்லாம் Tommy கிட்டயும் பேசுவா.... போன் ல அது கொரைக்கும்... ரொம்ப அழகா இருக்கும், பாக்க... எங்க பாட்டி ஆத்துல இருந்த Tiger -- தாத்தா போன போது-- ரெண்டு மூணு நாள் வரைக்கும் தண்ணி கூட குடிக்காம உக்காந்து இருந்துது...

    எங்க Bushy -- அத கவனிக்காம எங்க அப்பா பேப்பர் படிச்சா-- பேப்பர் மேல ஏறி, news அ மரச்சிண்டு படுத்துக்கும்!

    ரொம்ப அழகான பதிவு, sir !

    ReplyDelete
  16. நெகிழ வைக்கும் நினைவுகள். பாசத்தோடு பழகிய ஜீவனைப் பிரிவதென்பது அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமல்ல. சக குடும்பத்தாரை இழந்ததுபோலவே அவ்வளவு மனம் உறுத்தும் நிகழ்வு அது. உங்கள் வரிகளிலிருந்தே செல்லியின் பால் நீங்கள் வைத்துள்ள அன்பு புரிகிறது.

    ReplyDelete
  17. அப்படியே பின்னோக்கி நாங்கள் வளர்த்த செல்லங்களின் நினைவுகளை வர வைத்து விட்டீர்கள் ..நெகிழ வைத்தது உங்கள் குடும்பத்தார் செல்லி மீது காட்டிய அன்பும் செல்லி உங்கள் அனைவர் மீதும் கொண்ட பாசமும் ..எங்கள் வீட்டிலும்நிறைய செல்லிகளும் செல்லன்களும் இருந்தார்கள் ..இவை நம்மை விட்டு செல்லும்போது ஏற்படும் துயரம் வார்த்தைகளால் வடிக்க முடியாதது ..மகள் கொடுத்த தொலையாலேயே ஜெசி வளர்க்க ஆரம்பித்து இப்போ மாலதியும் எங்களை அதன் பெற்றோராக அடாப்ட் செய்து கொண்டது ..மிகவும் அருமையாக எழுதி இருக்கீங்க ..செல்லியையும் உங்களோடு பயணம் அழைத்து சென்றது வியப்பை சந்தோஷத்தை அளிக்கிறது ..

    ReplyDelete
    Replies
    1. அதை வளர்த்ததையும் அதனுடன் பொழுதைக் கழித்ததும் இன்னும்மனதில் பசுமையாக இருக்கிறது செல்லி என்றால் தெலுங்கில் தங்கை என்று பொருள் என் மகன் களுக்கு ஒரு தங்கை போலவே இருந்தாள் வருகைக்கு நன்றி ஏஞ்செல்

      Delete
  18. மிக அருமையான பகிர்வு... எந்தப் பிராணியும் நாம் வளர்க்கும் விதத்திலேயே இருக்கு அதன் பழக்க வழக்கமும். ஆனா ஆக 7 ஆண்டுகள்தானா? கவனமாக வளர்த்தால் 14,15 ஆண்டுகள் வரை இருப்பார்கள் என்கிறார்கள்... எனக்கு இப்பவே கவலையாக இருக்கு எங்கள் டெய்சியை நினைக்க... என்னால இழப்பு என்பதை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை...:(.

    ReplyDelete