Wednesday, August 31, 2011

உன் விருப்பமா...?

உன் விருப்பமா .?
-----------------------

எங்கும் நிறைந்தவன் 
எல்லாம் உணர்ந்தவன் 
எதற்கும் காரண கர்த்தா 
என்றறியப்படும் உன்னை 
பண்டைய பாவலர் அரசனை 
புகழ் பாடி பரிசில்பெற்றதுபோல் 
உன் புகழ் பாடிபோற்றி குறை தீர்க்க 
வேண்டுதல் உன் விருப்பமோ .?

ஆயிரம் நாமங்கள் கொண்டு 
பாயிரம் பல பாடி
அறியாத ஆயிரம் நிகழ்வுகள் 
கதையாகக் கேட்டு அதையே 
நிஜமென்று நம்பி உன்னை
ஏற்றிப் பாடுதல் உன்விருப்பமோ.?

ஆக்கல் காத்தல் அழித்தல் 
அனைத்தும் உன் செயல் 
என்றறிந்தும் உன் புகழ்
நீ கேட்டால்தான் உன்செயல்
சீராக இருக்கும் என்று எம்மைப் 
பாட விடல் உன் விருப்பமா.?

அழகு தமிழில் எண்ணங் கோர்த்து 
இனிதாய் பாட்டெழுதி இன்புற்று 
கேட்டது கிடைக்கும் என வேண்டி 
விழைந்து கேட்போருக்கு மட்டும்தான் 
அருளா; இல்லை மென்குரல் 
கொண்டு சுருதி பிறழாது 
இசை கொண்டு உன்புகழ் இசைப்போர்க்கு 
மட்டுமே அருளல் உன் விருப்பமா.?

செய்யும் செயல் எதற்கும்
சரியாக,நேராக எதிர்மறை 
இருக்கும் என்பது விஞ்ஞான கணிப்பு 
வாழ்வின் நெறியும் முறையும் 
முற்பிறப்பின் விளைவு இப்பிறப்பில் 
என்றெண்ணுவது மெய்ஞ்ஞான தெளிவா.? 
செயலும் விளைவும் அவரவர் பொறுப்பு 
என்று எண்ணல்தவறெனக் கூறல் உன் விருப்பமா.?

இல்லாத ஒன்றையும் 
இருப்பதாக பாவித்து 
இரண்டையும் ஒன்றாய் எண்ணி 
பகுத்தறிவால் பாகம் பிரிக்க 
முற்படும் என் போன்றோர் 
உணராத ஒன்றிடம் முறையீடல் 
கேட்பதும் உன் விருப்பமோ .?
-------------
  

5 comments:

  1. இது என் விருப்பமே...

    ReplyDelete
  2. தங்கள் கவிதையிலேயே அதிகம்
    என் மனதுக்கு பிடித்தது என்றால்
    இந்தக் கவிதையைத்தான் சொல்வேன்
    ஒரு கட்டுக்குள் தங்கள் எண்ணங்களை
    திணிக்க முயன்று தவிக்காது
    சொல்ல நினைப்பதை
    சுருதி குறையாது மிக அழகாக நேர்த்தியாக
    சொல்லிப் போயிருக்கிறீர்கள்
    மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
    தரமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. @Ramani-- See the irony of this. What you say you liked much is felt not even worth any comment by many readers. I am happy that a discerning
    reader like you appreciate this Thanks.

    ReplyDelete
  4. @Reveri-- Do you like my asking questions like this.?

    ReplyDelete
  5. Sir, whatever you want to write, write.. some may like idli, some may like dosa, some may like pongal.. but all are done using rice...
    you cant satisfy everyone..
    you cant be a nice person to every one
    that is the irony of life...

    ReplyDelete