பெண்களே என்ன நினைக்கிறீர்கள்?
---------------------------------------------------
2011-ம் வருடம் மார்ச் மாதம் “அன்புடன் மலிக்கா’ வின் விருப்பத்திற்கிணங்க “பெண் எழுத்து “ என்னும் தலைப்பில் ஒரு பதிவு எழுதி இருந்தேன். .எழுத்தில் ஆண் எழுத்து பெண் எழுத்து என்று ஏதாவது உண்டா என்றும் எழுதி இருந்தேன். பெரும்பாலும் பெண்கள்.கோயில்கள் , இறைவன், சமையல் , என்றும் யாருடைய எண்ணத்துக்கும் பங்கம் வராத முறையில் கவிதைகளும் , சுற்றுலா விஷயங்களுமே எழுதுகிறார்களோ என்ற கேள்வியையும் கேட்டிருந்தேன். .எதை எழுதினாலும் யார் மனதும் புண்படாத விதத்தில் யார் எழுதுவதானாலும் இருக்க வேண்டும் என்றும் எழுதி இருந்தேன்.
கடந்த மாதம் தலைநகரில் ஒரு இளம்பெண் சீரழிக்கப்பட . நாடே அல்லோல கல்லோலப் பட்டிருக்க, இங்கே நம் பெண் பதிவர்கள் அவர்களிடைய எண்ணங்களைப் பதிவுசெய்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஒரு வலைப் பயணம் மேற் கொண்டேன். வலையுலகில் பெண்பதிவாளர்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. அவர்களுக்கு இருக்கும் வாய்ப்பில் ஒரு பொதுக் கருத்துருவாக்கம் செய்ய முயற்சித்திருக்கலாம். ஆனால், நான் படித்தவரை அவர்களுடையது என்னும் அபிப்பிராயங்கள் எங்கும் பதிவு செய்யக் காணோம்.(மறுபடியும் சொல்கிறேன். நான் படித்தவரை )
பெண்கள் அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?எப்போதுமே ஒரு ஆணைச் சார்ந்திருக்க வேண்டியவள் , அவளுக்கென்று தனிப்பட்ட அபிப்பிராயமோ கருத்தொ கிடையாது என்று எண்ணுகிறார்களா.?பெண் சுதந்திரம், பெண் விடுதலை என்றெல்லாம் அறிஞர்கள் சொன்னது அவர்களுக்குப் பொருந்தாது என்று எண்ணுகிறார்களா.? இந்த மாதிரி சீர்கேடான சம்பவங்களுக்குக் காரணம் என்ன என்று அவர்கள் நினைக்கிறார்கள்.?மனிதனாகப் பிறந்தால் வளர்ந்ததும் மணம் முடிப்பதும் சந்ததி வளர்ப்பதும் இருக்கத்தான் செய்யும். ஆனால் பெண் ஒரு போகப் பொருளாக சித்தரிப்பதில் அவர்களுக்கு எந்த அளவு உடன்பாடு. ஒவ்வொருவருக்கும் குடும்பம் வாழ்க்கை எல்லாம் இருக்கிறது. இதில் யார் பங்கு எவ்வளவு என்று எந்த முடிவில் பெண்கள் இருக்கிறார்கள். பெண்களின் நடை உடை பாவனையெல்லாம் அவர்கள் இப்பேர்ப்பட்டவர் என்று அனுமானிக்கும் வகையில் இருக்கிறதா.?
சந்தர்ப்பம் கிடைக்காதவரை எல்லா ஆண்மகன்களும் நல்லவரே.
சந்தர்ப்பம் கிடைக்கும் போது ஒவ்வொரு ஆண்மகனும் விலங்காகி விடுகிறான் என்ற கருத்தில் ஒருவரது( பிரபல எழுத்தாளரின்) எழுத்தைப் படித்தேன். அதில் பெண்களுக்கு உடன்பாடா.?தவறு செய்யும் ஒவ்வொரு ஆண்மகனும் அவனை இழந்த நிலையில் போதையில் இருக்கும்போதே தவறு செய்கிறான் என்பது சரியா.?பச்சிளஞ்சிறார்களை சிதைப்பவர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?அந்தப் பிரபல எழுத்தாளர் தவறு செய்தவர்களின் சார்பில் மன்னிப்பு கேட்பதாக எழுதி இருந்தார். இதில் பெண்களுக்கு உடன்பாடா, திருப்தி அடைந்து விடுவார்களா.?
கணவனுக்கு மனைவியின் மீது இருக்கும் உரிமையில் அவள் விரும்பாத போது புணர்ச்சியில் ஈடுபடுவது கற்பழிப்பு என்று எண்ணுகிறார்களா?.அப்படி நினைப்பதாயிருந்தால் அவ்வாறு நிகழும்போது புகார் செய்து தண்டனை பெற்றுத் தருவார்களா.?.
ஆனந்த விகடனில் பொக்கிஷம் பகுதியில் சுஜாதா எழுதி இருந்த “முதல் மனைவி” என்ற கதை படித்தேன். அதில் வரும் கணவனும் மனைவியும் போல்தான் பலரும் இருக்கிறார்களா.?(அந்தக் கதையை எல்லோரும் படிக்க வேண்டும் என்றுதான் கதையை எழுத வில்லை)
எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் , பெண்கள் மனதில் பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும்( பாரத நாரி.?) என்ற பலமான கருத்தின் வெளிப்பாடே. அவர்கள் எந்தக் கருத்தும் வெளிப்படுத்தாமல் இருக்கச் செய்கிறதோ என்னவோ.?பெண்களே உங்களுக்காக நீங்களே தளைகளைப் போட்டுக் கொள்ளாதீர்கள். வாழ்வில் ஆணும் பெண்ணும் சமம். ஏதோ ஒரு காரணத்துக்காக,ஏதோ காரணம் என்ன? PROCREATION-க்காக மட்டுமே வித்தியாசமாய் படைக்கப் பட்டிருக்கிறார்கள்.உண்மையைச் சொல்லப் போனால் ஆண்களைவிடப் பெண்களே சிறந்தவர்கள் என்னும் என் கருத்தையும் இங்கே பதிவிடுகிறேன்.
தவறுகள் நடக்கும் போது தட்டிக் கேட்க வேண்டியதும் போராட வேண்டியதும் பெண்கள் உணர்ந்தது டெல்லி சம்பவங்கள் எடுத்துக்காட்டின. என் ஆதங்கமே வலைப்பூக்களில் எழுதுவதன் மூலம் மற்றபடி போராட முடியாதவர்கள் வெளிப்படுத்தவில்லையே என்பதுதான். பெண்களின் உலகம் கடவுள் கோயில் சமையல் இவற்றையும் மீறி வியாபித்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதும் அவசியம்.
கேள்வி:- அது சரி. இந்தமாதிரி நிகழ்வுகளுக்குக் காரணம் என்னவென்று நீ நினைக்கிறாய்.?
பதில்:- ஒன்றா இரண்டா, சொல்லிக் கொண்டே போகலாமே. இருந்தாலும் முக்கியமாக நான் கருதுவதைச் சொல்கிறேன். முதலாவதாக நம் கலாச்சாரம். நம் மூதாதையர்கள் உடன் இருப்பவர்களை வர்ணாசிரம தர்மத்தின் மூலம் மட்டும் அடக்கி வைக்கவில்லை. பெண்களுக்கு சம உரிமை கொடுக்காததன் மூலமும் அடக்கி வைத்திருந்தனர். ஆனால் மேலோட்டமாகப் பார்க்கும்போது பெண்களுக்கு ஒரு பெரிய ஸ்தானம் தந்ததுபோல் தோன்றும். எந்த செயலிலும் பெண்ணுக்குப் பங்கு இருப்பது போல் காண்பித்து உண்மையில் அவர்களுக்கு இரண்டாம் பங்குதான் கொடுத்திருக்கிறார்கள். நம் கதைகளிலும் புராணங்களிலும் பெண்கள் ஆண்களின் உடமைப் பொருளென்றும் (பாஞ்சாலியைப் பணையம் வைத்தது), ஒரு பெண் ஆணைச் சார்ந்து இருப்பதுதான் ( ராமர் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி) தர்மம் என்றும் போதிக்கப் பட்டு அந்த போதனையே இரத்தத்தில் ஊறி அதுவே பாரத நாரியின் குணமாக ஏற்றுக் கொள்ளப் பட்டுவிட்டது.ஆணுக்கு பெண் ஒரு போகப் பொருள் என்பது கலாச்சார உணர்வாகவே மாறிவிட்டது. அவற்றை மீறி ஒரு பெண் வெளியில் வருவது ஆணுக்குச் சமம் என்று நிலை நாட்டுவது பொதுவாக ஆண் வர்க்கத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அதன் பிரதிபலிப்பே பெண்களைப் பற்றிய அண்மையில் சில பிரபலங்கள் வெளியிட்டக் கருத்துக்கள். நம்முடைய patriarchial சொசைட்டியில் பெண்கள் உரிமை கொண்டாடுவது முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை.
இதையெல்லாம் மீறித் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பும் பெண்களும் தங்கள் சுயம் அறிந்து நடக்க வேண்டும். தங்களை போகப் பொருளாகக் கருதும் ஆண்களின் கவனத்தை சுண்டி இழுக்கும் வகையில் நடை உடை பாவனைளால் கவர்வது பாதுகாப்பல்ல என்ற உணர்வு அவர்களுக்கு வேண்டும். வண்ணம் நிறைந்த மலரை அதன் தேனைப் புசிக்க வண்டுகள் வருவது இயல்புதானே. ஆண்கள் வண்டுகள் போல் மொய்ப்பதில் பெண்கள் மனம் மகிழ்வடைவதும் இல்லையென்று சொல்ல முடியாது.
என்னவெல்லாமோ எழுதினாலும் என்னால் புரிந்து கொள்ள முடியாதது பச்சிளங்குழந்தைகளை பாலியல் கொடுமைக்கு எப்படி உட்படுத்துகிறார்கள் என்பதுதான். அதில் என்ன இன்பம் கிடைக்கப் போகிறது. வெறும் வக்கிர புத்தியின் வெளிப்பாடல்லவா.?நான் ஒரு பதிவு எழுதி இருந்தேன். அது ஒரு உண்மைக்கதை. பிறகு அந்தக் கதையை எழுதி இருக்க வேண்டாமோ என்று தோன்ற பரிகாரம் என்று இன்னொரு பதிவும் எழுதினேன்.
ஆண்களின் பாலியல் கொடுமைகளின் கீழ் கணவன் மனைவியை அவள் விரும்பாத நேரத்தில் புணர்வது கொண்டு வருவதானால் , எனக்குத் தோன்றுகிறது, பெரும்பாலான ஆண்கள் தண்டிக்கப் பட வேண்டியவர்கள் ஆவார்கள்.ஒருவரது அடிப்படைக் குணங்கள் அவரது மிகச் சிறிய பிராயத்திலேயே உருவாக்கப் படுகிறது என்கிறார்கள். ஆகவே நம் குழந்தைகள் நல்லவர்களாக வளருவதில் நம் கடமை நம் பங்கு மிகப் பெரிய அளவை வகிக்கிறது என்னதான் சட்டங்கள் கொண்டு வந்தாலும் குற்றங்களை குறைக்க முடியலாம். ஒழிக்க முடியுமா. ?
எழுத எழுத மனம் குமைகிறது. தலைநகரில் நடந்த ஆர்பாட்டங்கள் பலரது குமுறலின் வெளிப்பாடே. ?நல்லதொரு சமுதாயத்தை உருவாக்குவதே நம் கடமை என்று கூறத்தானே முடியும் என் போன்றவர்களால். வலையில் எழுதுவதன் மூலமாக நாட்டு நடப்புகள் நம்மையும் பாதிக்கின்றன என்று தெரிவிக்கலாமே என்னும் ஆதங்கமே இப்பதிவு.
--------------------------------------------------------