ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

குறு நாவலுக்குக் கரு


                       குறுநாவலுக்குக் கரு.
                       ------------------------------



கல்கியில் ஒரு குறுநாவல் போட்டி அறிவித்திருக்கிறார்கள் என்றும் அதில் பரிசு வலையுலக எழுத்தாளர்களுக்கே கிடைக்க வேண்டும் என்றும் தேனம்மை லக்ஷ்மணன் எழுதி இருந்தார். போட்டிக்கு எழுத வல்லவர்கள் என்று பலரது பெயர்களைக் குறிப்பிட்டிருந்தார். அதில் என் பெயரும் இருந்தது. இது எனக்கு போட்டிக்கு நாமும் ஏன் கதை எழுதக் கூடாதுஎன்னும் எண்ணத்தைத் தோறுவித்தது. எண்ணம் இருந்தால் போதுமா. கதை எழுத ஒரு கரு வேண்டாமா.? அண்மைக்காலமாக பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சியிலும் ஷீனா போராவின்  கொலை பற்றிய செய்திகள் வந்த  வண்ணமாய்இருக்கிறது எனக்கு ஒரு சந்தேகம் . கேள்விப்படும் நிகழ்வுகள் அருமையான கதைக்கு வித்தாக இருக்கிறது. ஆனால் உண்மை நிகழ்வுகள் என்ன என்று எதையும் அறுதியாகச் சொல்ல முடியவில்லை. 2012-ம் ஆண்டு நடந்த கொலை பற்றி இப்போது சூடாகச் செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது. சில நிகழ்வுகள் என்று சொல்லப் படுபவற்றை சில புனைவுகள் சேர்த்து நாம் ஏன்  எழுதக் கூடாது என்று தோன்றுகிறது என் பிள்ளைகளும் உன் பிள்ளைகளும் நம் பிள்ளைகளுடன் விளையாடுகிறார்கள் என்று ஒரு கதையில் எழுதிய நினைவு, அதற்குப் பதில் தன் கணவனிடம் என் மகளும் உன் மகனும் காதல் செய்வதைத் தடுக்க வேண்டும் என்னும் ரீதியில் எழுதினால் தவறா. ? ஹேஷ்யங்களை நிஜமாக்கலாமா? அப்படியே எழுதினாலும் நம் மேல் குற்றச்சாட்டு பதிவு செய்ய வாய்ப்பிருக்கிறதா. ?பொதுவாகவே எழுதும் புனைவுகள் பெரும்பாலும் ஏதோ நிகழ்வையே ஆதாரமாகக் கொண்டிருக்கும். இல்லையா. ?வாசகர்களே குறுநாவலுக்கான கரு கிடைத்து விட்டது என்று நான் எழுதட்டுமா.? எழுதுகிறேனோ இல்லையோ ஒரு பதிவு தேற்றி விட்டேன்     
     . 

புதன், 26 ஆகஸ்ட், 2015

வயதுகளின் பரிணாமம்


                                   வயதுகளின் பரிணாமம்
                                  ----------------------------------------


வயதாவதின் பரிணாமம் பற்றி யோசித்திருக்கிறீர்களா? வயதாவதை நாம் விரும்புவது நாம் குழந்தைகளாக இருந்தபோது தான்  பத்து வயதுக்குட்பட்டவரிடம் வயதைக் கேளுங்கள். பளிச்சென்று பதில் வரும்  நாலரை. ஆறரை ஏழரை என்றெல்லாம் வரும் அடுத்தவயதுக்குத் தாவும் அவசரம் அந்தப் பிராயத்தில்தான் இருக்கும் பதினம வயதுகளில் வயதைக் கூட்டித்தான் சொல்வோம் குறைக்கமாட்டொம் பதினாறு பதினேழு வயதிலேயே  நாம் முதிர்ந்தவர்களாக உணர்வோம் (நான் வளர்ந்து விட்டேன் என்னையும் கணக்கில் சேர்க்க வேண்டும்) 21 வயது ஆகிவிட்டால் எனக்கும் எல்லாம் தெரியும்  என்னும் நினைப்பும் கூடவே வரும் முப்பதுகளில் ஏதோ கனவு காண்பது போல்  உணர்வோம்  நாற்பதுக்கு நாட்களைத் தள்ளுவோம் சந்தேகங்கள் கூடவே வரும்  அப்படி இப்படி என்று ஐம்பதை அடைகிறோம் அறுப்துக்கு வந்து சேருகிறோம்  வந்தவேகம் எழுபதில் புலப்படும்  எண்பதுகளில் எல்லாவற்றிலும் ஒரு சுழற்சி இருக்கும்  தொண்ணூறுகளில்  எல்லாமே இப்போது நடந்தது போல் இருக்கும் வந்து போன 1980 ல் இது அப்படி அது இப்படி என்றே எண்ணம் தோன்றும் .  நூறு ஆயிற்றென்றால்  மீண்டும் வயது என்ன என்று  சொல்லும்போது நூறரை  நூற்றி ஒன்றரை என்று ஆகும்
என்றும் இளமையாய் இருப்பது எப்படி.? இந்த எண்களைத் தூக்கிக் கடாசுங்கள்.நல்ல நட்புகளை நாடுங்கள். எதையும் கற்றுக்கொள்ளும் முனைப்போடு இருங்கள் சோம்பிப் போகாதீர்கள் எதையாவது செய்துகொண்டிருங்கள் ஆங்கிலத்தில் An idle mind is a devil’s den என்பார்கள் சின்னச் சின்ன சந்தோஷங்களையும் அனுபவியுங்கள் கண்ணிர்தரும் நேரங்களையும் எதிர் நோக்குங்கள்  இதம் தரும் சூழ்நிலையை உருவாக்குங்கள் உடல் நலம் பேணுங்கள், மனம் விரும்பும் இடங்களுக்குச்சென்று வாருங்கள் எந்தக் குற்ற உணர்வும் வேண்டாம் அன்பைப் பகிருங்கள். நினைவிருக்கட்டும்  வாழ்வு என்பது நாம் விடும் மூச்சுக்காற்றில் இல்லை நாம் அனுபவிப்பதில்தான் இருக்கிறது.
அவ்வப்போது நான் எழுதிய முதுமை என்பது ஒரு வரம் என்னும் பதிவைப்படியுங்கள்.தெளிவும் கிடைக்கும்
 

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

ஓ அந்தக் கால அனுபவங்கள்


                 ஓ அந்தக் கால அனுபவங்கள்
                  -----------------------------------------
அண்மையில்  FROM ADOLESCENSE TO ADULTHOOD  என்று எழுதி இருந்தேன் அதைப் படிக்க இங்கே சுட்டவும் . இம்மாதிரி சொந்த அனுபவங்களைப் பதிவிடுவதில் என்ன லாபம் என்று முதலில் தோன்றினாலும்  இந்த அனுபவங்களைக் கதை போல் படித்துச் செல்லலாம். மேலும் சொல்லப் பட்டிருக்கும் செய்திகள் அந்தக் கால வாழ்க்கையை முன்னிறுத்தும் முதியவர்களின் அனுபவங்களை சரித்திர நிகழ்ச்சிகள் போல் கொள்ளலாம் . அந்தக் காலத்தில் கோவையில் எனக்கேற்பட்ட அனுபவங்களை இதில் பகிர்கிறேன்



      கோயமுத்தூரில் எங்கு தங்குவது, எப்படி வேலை தேடுவது, யாரைப் பார்ப்பது, என்று எதுவுமே யோசிக்க்ச்வில்லை. அப்போது கோயமுத்தூரில் சில சத்திரங்கள் இருந்தன. அங்கு ஒரு இரவு தங்க, ஒரு கட்டில் தருவார்கள். வாடகை எட்டணா. பல் விளக்க, குளிக்க எந்த வசதியும் கிடையாது. சாலையோரத்தில் உள்ள குழாய்களில்காலையில் பல் விளக்கி முகம் கழுவுவேன்.பிறகு கோயமுத்தூரில் நிறைய மில்கள் இருப்பது கேள்விப் பட்டிருந்ததால், ஏதாவது மில்லில் ஏதாவது வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், காலையில் நடக்கத் தொடங்குவேன். ஒவ்வொரு மில் வாசல் முன்பு செல்லும்போதே, அங்குள்ள காவல்காரர்கள் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். மீறி ஒன்றிரண்டு மில் உள்ளே சென்று வேலை கேட்டால், உன் படிப்பு என்ன, டைப்பிங் தெரியுமா, ஷார்ட் ஹேண்ட் தெரியுமா, சான்றிதழ்கள் எங்கே, என்று கேட்டுத் துரத்தி விடுவார்கள். வெயிலில் அங்கங்கே சுற்றும்போது, சோடாவும் கலரும் வாங்கிக் குடிப்பேன். மிகவும் பசித்தால் ஏதாவது ஓட்டலில், எதையாவது வாங்கிச் சாப்பிடுவேன். இந்த நிலையில் கோவையில் நான் படித்தபோது ,என்னுடன் படித்த, பி. டி. ஆல்ஃப்ரெட். என்ற ஆலியின் நினைவு வந்து, அவனைப் பார்க்கப் போனேன். மிகவும் மகிழ்வுடன் என்னை வரவேற்ற அவன் என் கதையைக் கேட்டதும் மிகவும் கடிந்து கொண்டான். முடிந்தவரை எனக்கு உதவுவதாகவும் கூறினான். அவன் எஸ். எஸ். எல். சி.  ஃபெயில். ஏதோ ஒரு மில்லில் அட்டெண்டராக வேலை பார்த்து வந்தான். என்னை அந்த மில்லுக்கு அழைத்துச் சென்று அவனுடைய மேலாளரிடம், எனக்கு ஏதாவது வேலை தரும்படிக் கேட்டான். அங்கும் அதே கதைதான். அட்டெண்டர் வேலை எதுவும் காலி இல்லை என்றும்,வேறு எந்த வேலைக்கும் எனக்குத் தகுதி இல்லை, என்றும் கூறி அனுப்பிவிட்டார்கள். உடற்சோர்வு, மனச் சோர்வு என்று சேர்ந்து வாட்டியது. கையில் இருந்த காசும் கரைந்து கொண்டு வந்தது..என்ன செய்வது என்று தெரியாத நிலையில், டெல்கோ கம்பெனி மார்க்கெட்டிங்  மேனேஜரின் நினைவு வந்தது.அவருடைய அலுவலக விலாசம் தெரிந்து, அவரைத் தேடிப் போனேன். என்னைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியுடனும், மரியாதையுடனும், என்னை வர வேற்ற அவர், “ஓட்டல் மேனேஜருக்கு மசால் தோசையும் காப்பியும் கொண்டு “ வரப் பணித்தார். என்னை அவர் மேனேஜர் என்றுதான் அழைப்பார். அந்த வரவேற்பையும் மரியாதையையும் பார்த்த பிறகு, அவரிடம் என் நிலையைக் கூறி, வேலை கேட்க என் “ஈகோஇடந்தரவில்லை. சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அவரிடம் விடை பெற்று வந்து விட்டேன். அப்பாவுக்கோ, அல்லது வீட்டில் யாருக்கோவாவது, நான் இப்படி அவதிப் படுவதும் ஊர் சுற்றி வேலை தேடுவதோ தெரியாது. அவர்கள் என்னை ஞாயிற்றுக்கிழமை எதிர் பார்த்துக் கொண்டிருப்பார்கள். கையிலும் காசில்லை ,வேலையும் கிடைத்த பாடில்லை. மிகவும் வருத்தப் பட்டுக்கொண்டிருந்தபோது, ஆலி என்னை ஓரிடத்துக்கு அழைத்துப் போவதாகக் கூறி வரச் சொன்னான். அவன் என்னை அழைத்துச் சென்ற இடம் கோயமுத்தூர் ரெயில் நிலையம். எனக்கு வெல்லிங்டனுக்கு ஒரு டிக்கெட் வாங்கிரயிலில் ஏற்றி அனுப்பிவிட்டான். நானும் வேறு வழியின்றி வெல்லிங்டன் சென்று வீட்டிற்குப் போனேன். சனிக்கிழமையே நான் வந்து விட்டதாக நினைத்து, எனக்கு உடல் நலம் சரியில்லையோ என்று நினைத்துப் பதறி விட்டார். நான் ஏதும் கூறாமல் சாதாரணமாக இருப்பதுபோல்ஞாயிற்றுக்கிழமை மாலை வரை இருந்து விட்டேன். நான் ஓட்டலுக்குத் திரும்பிச் செல்லாதது ஏன் என்று கேட்ட போது நான் வேலை பிடிக்கவில்லை என்று கூறினேன்.கோயமுத்தூரில் அலைந்ததையோ, ஏமாற்றமடைந்ததையோ சொல்லவில்லை. அப்பாவும் என்னை வற்புறுத்தவில்லை.இந்த சின்ன வயதில் உன்னை வேலைக்குப் போகச் சொன்னதே என் கையாலாகாத்தனம் “என்று கூறி மிகவும் வருத்தப் பட்டுக் கொண்டார். நான் குந்தா ப்ராஜெக்டுக்குப் போய் அந்த எஞ்சினீயரின் சிபாரிசுக் கடிதத்துடன் வேலைக்குப் போவேன் என்று அப்பாவுக்கு தைரியம் கூறினேன். நான் மைசூர் லாட்ஜில் இருந்தபோது பல இடங்களுக்கு வேலைக்கு மனு போட்டிருந்தேன். அந்த நேரத்தில் எச்.ஏ.எல். ல் இருந்து ட்ரேட் அப்ப்ரெண்டிஸ்  ட்ரெயினிங்கில் சேர தேர்வுக்கு மெட்ராஸ் வரச் சொல்லி கடிதம் வந்திருந்தது. அதன் முடிவு தெரிந்த பிறகு குந்தாவில் முயற்சிக்கலாம் என்றிருந்தேன். ஆனால் மெட்ராசுக்கு தேர்வுக்குச் செல்லப் பணம் வேண்டுமே.வழக்கம்போல் அப்பாவிடம் பணம் இருக்கவில்லை. ரூபாய் பத்தோ பன்னிரண்டோதான் அவரால் சமாளிக்க முடிந்தது. அப்போது வெல்லிங்டனிலிருந்து மெட்ராசுக்கு ரெயில்வே கட்டணம் மூன்றாம் வகுப்புக்கு ரூபாய் பத்து என்று நினைவு. போக வரவும் அங்கு ஓரிரு நாட்கள் இருக்கவும் குறந்தது ரூபாய் முப்பது தேவைப் பட்டது. பணமில்லாததால் நேர்முகத் தேர்வுக்குப் போக முடியாத நிலை. அந்த நேரத்தில் மைசூர் லாட்ஜுக்கு அடிக்கடி வந்து செல்பவரும் என் மீது மிகவும் அன்பு வைத்திருந்தவரும் “ குழந்தே “என்று கூப்பிடுபவருமான பர்மா ஷெல் இன்ஸ்பெக்டர் திரு. சுப்பிரமணியம் நினைவு வந்து, அவரை அவர் வீட்டில் சந்தித்தேன். என் நிலைமை எடுத்துக் கூறினேன். அவர் என்னை ஆறுதலாகத் தட்டிக் கொடுத்துநான் இண்டர்வியூவுக்கு மெட்ராஸ் செல்ல உதவுவதாகவும் கூறினார். ஈரோடில் அவருக்கு ஒரு வேலை நிமித்தம் செல்ல வேண்டி இருப்பதாகவும் என்னை அவருடைய காரிலேயே ஈரோடு வரைக் கூட்டிச் சென்று, அங்கிருந்து மெட்ராஸுக்குரெயிலில் டிக்கெட் வாங்கி ஏற்றி விடுவதாகவும் கூறினார். எனக்கு மனதில் கொஞ்சம் தெம்பும் உற்சாகமும் வந்தது. அவர் கேட்டுக் கொண்டபடி அவருடைய வீட்டுக்கு காலை பதினொரு மணி அளவில் சென்றேன். அவருடன் அவருடைய காரில் ஈரோடு வரை பயணித்தேன். போகும் வழியெல்லாம் அவர் என்னை எப்படி நேர்முகத் தேர்வை சந்திக்க வேண்டும் என்று பயிற்சி அளித்தார். என்னை கேள்விகள் கேட்டு, நான் பதில் சொல்வதுகேட்டு, என்னை ஊக்கப் படுத்தி, எனக்கு அந்த தேர்வில் வெற்றி கிடைக்கும் என்றும் வாழ்த்தினார். ஈரோடில் என்னை ரயில் ஏற்றியும் விட்டார். ஆக காலணா செலவில்லாமல் தேர்வுக்கு மெட்ராஸ் வந்து விட்டேன். ரயிலில் இருந்து இறங்கி ராயப்பேட்டா பைக்ராஃப்ட்ஸ் ரோட் க்ராசில் இருந்த என் சித்தப்பா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வீட்டுக்குச் சென்று குளித்து உடையணிந்து, வேப்பேரியில் குறிப்பிட்ட இடத்துக்கு நேர்முகத் தேர்வுக்குச் சென்றேன். அந்த தூரங்களையெல்லாம் நடந்தே சென்றேன் என்பதை இப்போது நினைத்தாலும் வியப்பாயிருக்கிறது. என்னிடம் இருந்த ஒரு நல்ல பேண்ட்டோடு, ஷ்ர்ட்டும் அணிந்து, ஒரு டையும் கட்டிக் கொண்டு( உபயம். திரு. சுப்பிரமணியம்.)நான் நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்களையெல்லாம் கவனித்தபோது, அந்த இண்டர்வியூவுக்கு டை அணிந்து சென்றது நான் மட்டுமே என்று உணர்ந்தபோது, கொஞ்சம் கூச்சமாகவும் வெளிக்குப் பெருமையாகவும் இருந்தது. அதுதான் என் வாழ்க்கையில் பங்கு பெற்ற முதல் இண்டர்வியூ. நன்றாகவே நினைவுக்கு வருகிறது. என்னுடைய முறை வந்து என்னை கூப்பிட்டபோது,மிடுக்காகவே சென்று, வணங்கி இருக்கையில் அமர்ந்தேன். என் பெயர், தகுதி குடும்பம் போன்ற விஷயங்களைப் பற்றிக் கேட்டார்கள்.நானும் தைரியமாகவே பதில் சொன்னேன். படிப்பில் நான் காம்பொசிட் மாத்ஸெடுத்திருப்பதாகக் கூறி அதில் என்ன கற்றுக் கொடுத்தார்கள் என்பதையும் கூறினேன். அப்போது தேர்வுக் குழுவின் தலைவர் எனக்கு பித்தாகோரஸ் தீரம் தெரியுமா என்று கேட்டார்கள். நானும் பித்தாகோரஸ் தீரமை தமிழில்சொன்னபோதுதான் அவர்களுக்கு நான் தமிழ் வழிக் கல்வி பயின்றது தெரிந்தது. என்னுடைய ஆங்கில பதில்களை கேட்டுக் கொண்டிருந்த அவர்களுக்கு நான் தமிழில் கற்றவன் என்ற செய்தி வியப்பளித்தது. அந்த தேற்றத்தை என்னால் ஆங்கிலத்தில் கூற முடியுமா என்று கேட்க, நானும் அதை அப்படியே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறினேன். அது அவர்களுக்கு திருப்தி அளித்திருக்க வேண்டும். தேர்வு முடிந்து என்னைப் போகச் சொல்லி, மற்றவர்களைக் கூப்பிட ஆரம்பித்தனர். வெளியே வந்தவன் தேர்வின் முடிவு தெரியாததால் காத்திருந்தேன். உணவு இடைவேளைக்கு வெளியே வந்த தேர்வுக் குழு தலைவரிடம்முடிவு பற்றிக் கேட்டேன். மிகவும் விறைப்பாக தேர்வானால் தபாலில் தெரிவிப்பதாகக் கூறினார். முடிவு தெரியாத நிலையில் சற்றே மனபாரத்தோடு, வீடு வந்து , அன்று மாலையே ரயிலில் வெல்லிங்டன் செல்லப் பயணப் பட்டேன். இவ்வளவு விலாவாரியாக நான் இங்கு இதை விவரிப்பது, என் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு இவையெல்லாம் அஸ்திவாரமாக இருந்ததாலும், என் வாழ்க்கையின் பாதையை எனக்குக் காட்டிய நிகழ்ச்சிகள் என்பதாலும் தான் 

நான் வேலையில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டபின்  ஒரு முறை கோவை சென்றிருந்தேன். என் அந்தக் கால நண்பன் ஆலியைத் தேடி அவன் வீட்டுக்குச் சென்றேன்  மிகுந்த சிரமங்களுக்கு இடையில் அந்த வீட்டைக் கண்டுபிடித்தேன் BEES cottage  என்பது அவன் வீட்டின் பெயர் என்பது மட்டும் நினைவில் இருந்தது. கஷ்டப்பட்டுக்கண்டு பிடித்துப் போனபோது அவனது உறவினர் என்னை விசாரித்தார். ஆலியின் பால்ய கால நண்பன் என்று கூறிக் கொண்ட என்னை வியப்புடன் பார்த்தார். பிறகு அவர் சொன்ன செய்தி ஆலி எங்கோ காணாமல் போய் விட்டான். அவன் இருக்குமிடமே யாருக்கும் தெரியாது என்பதுமாகும் 

சென்னையில் எச் ஏ எல் லில் நேர்காணலுக்குச் சென்ற நான் தேர்வாகி இருப்பதாகவும் மே மாதம் முதல் தேது 1955-ல் பெங்களூரில் வேலைப் பயிற்சிக்குச் சேருமாறும் உத்தரவு வந்திருந்தது.

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

உரிமைகள்


                                           உரிமைகள்
                                           -----------------


என்ன எழுதுவது என்று அறியாமல் தவித்துக் கொண்டிருந்த எனக்கு திரு, ரமணியின் பதிவு ஒன்றைப் பார்த்ததும் பொறி தட்டியது போல் இருந்தது. கம்யூனிச நாட்டுக் கொழுத்தநாயும் இந்திய நாட்டு வற்றல் நாயும் பற்றி எழுதி இருந்தார். கம்யூனிச ,முதலாளித்துவ கோட்பாடுகள் பற்றிப் பேசும் போது ஓரிடத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. ஒரு அமெரிக்கனும் ரஷ்யனும் சந்தித்துக் கொண்டார்களாம். அமெரிக்காவில் இருக்கும் பேச்சு சுதந்திரம் பற்றி அமெரிக்கன் பெருமையாகக் கூறினானாம் . என்நாட்டில் வெள்ளை மாளிகை முன்பு நின்று என்னால் அமெரிக்க ஜனாதிபதி ஒரு முட்டாள் என்று கூற முடியும் ரஷ்யர்களால் முடியுமா என்று கேட்டானாம் அதற்கு ரஷ்யன் ஏன் எங்களாலும் முடியும். வெள்ளை மாளிகை முன் நின்று அமெரிக்க ஜனாதிபதி ஒரு முட்டாள் என்று கூற முடியும் என்றானாம் .....!
ஒரு முறை குருஷ்சேவ் ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தாராம் அப்போது கூட்டத்தில் ரஷ்யாவில் பேச்சு சுதந்திரம் இல்லை என்று யாரோ பின்னாலிருந்து கூறினார்களாம் உடனே குருஷ்சேவ் “ யார் சொன்னதுஎன்று உரக்கக் கேட்டாராம் கூட்டமே கப்சிபென்று ஆகிவிட்டதாம்
ஒரு முறை  நேரு ரஷ்யாவுக்குப் போய் இருந்தபோது, அவரிடம் இந்தியர்கள் பொது இடங்களில் மலஜலம் கழிக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு வைக்கப் பட்டதாம் அதற்கு நேரு ரஷ்யாவிலும் தான் அப்படிச்செய்வோரைப் பார்த்ததாகக் கூறினாராம் குருஷ்சேவ் இருக்க முடியாது என்று கூறி நேருவிடம் தகவல்கள் கேட்டாராம். அவர் தந்த தகவல் படி அவ்வாறு மலஜலம் கழித்தவரைத் தேடிக் கண்டுபிடித்து வந்தார்களாம் அப்படிக்கண்டுபிடிக்கப்பட்டு வந்தவனைப் பார்த்தால் அவன் ஒரு இந்தியன் என்று தெரிய வந்ததாம்                        :      .               .



.


திங்கள், 17 ஆகஸ்ட், 2015

வெள்ளை மாளிகையில்....


                       வெள்ளை மாளிகையில்........
                        -------------------------------------
என் நண்பனின் பேரன் ஒருவன் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிடம் இருந்து பரிசு பெற்றான் என்னும் செய்தி எனக்கு மகிழ்ச்சி தந்தது ஆனால் இந்தக் காணொளி வெள்ளை மாளிகையில் ருத்ரம் சொல்லப் படுவது கேட்ட போதும் மகிழ்ச்சி தருகிறது. நம் திரை இசைப் பாடல்கள் வெள்ளையர்களால் பாடப் படும் போதும் மகிழ்ச்சி தருகிறது. யார் சொன்னார்கள் நாம் மாட்டுமே மேனாட்டவரைக் காப்பி அடிக்கிறோம் என்று.? எனக்கு வந்த காணொளிகளை பகிர்கிறேன்
    JEFFREY ERHARD  AND ROBBIE ERHARD CHANTING RUDRAM  IN WHITE HOUSE

                               தமிழ் திரை இசைப் பாட்டு வெள்ளையர்களால்  .

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

விடுதி வாழ்க்கை


                         விடுதி வாழ்க்கை.
                         ----------------------------


இவன் எச் ஏ எல்-லில் பயிற்சிக்காகச் சேர்ந்து மேற்பயிற்சிக்காக அம்பர் நாத் சென்றது குறித்து எழுதி இருக்கிறான் அந்த அம்பர்நாதில் பயிற்சி பெற்ற பலரும் உலகின் எல்லாப் பகுதிகளிலும் இருக்கிறார்கள் சென்னை புனே ஜபல்பூர் போன்ற இடங்களில் அம்பர்நாத் ட்ரெயினிங் ஸ்கூலில் பயின்றவர் அவ்வப்போது கூடுகின்றனர்.அடுத்து பெங்களூருவில் இவ்விதம் ஒன்று கூட ஒரு எண்ணம் வந்திருக்கிறது. 2016-ம் ஆண்டு ஃபெப்ருவரியில் கூடலாம் என்னும் ஐடியா உருவாகி இருக்கும் இந்நேரம் இவனுக்கு அங்கு பயிற்சியில் இருந்த போது  ஏற்பட்ட அனுபவங்கள் நினைவுகளாய் வருகிறது.

விடுதி வாழ்க்கை என்று கூறினாலும் எல்லோருக்கும் அனுபவங்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. .மூன்று தலை முறையினரின் விடுதி வாழ்க்கை அனுபவங்களைக் உணர்ந்தும் கண்டும் கேட்டும் ஆயிற்று.. இவனுக்கு படிப்பும் பயிற்சியும் கலந்த வாழ்வுக்கு ஒரு வாய்ப்பு வந்தது. கிடைத்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தும் முன் அநேக கேள்விகள் , வாழ்வாதாரத்தை நிச்சயிப்பவை, எழுந்தது. இவன் தேர்வு செய்யப் பட்ட நேரம் இவன் தந்தை காலமாயிருந்த நேரம். இவனை நம்பி கலம், மரக்கால், படி, ஆழாக்கு என்று பலரும் பின்னால் நின்றிருந்த சமயம்.அவர்கள் கூடவே இருந்து படிப்பையும் பயிற்சியையும் தியாகம் செய்வதா, இல்லை படிப்புக்கும் பயிற்சிக்கும் செல்வதன் மூலம் ஒரு சிறந்த எதிர்காலத்தைக் கனவு காண்பதா என்ற மில்லியன் டாலர் கேள்வி..எழுந்த அந்த நேரமும் சந்தர்ப்பமும் உணர்ந்திருந்தால்தான் விளங்கும். மனசுக்கும் அறிவுக்கும் நடந்த பலப் பரீட்சையில் அதிசயமாக அறிவு வெற்றி பெற்று உற்றாரின் பிரிவை எதிர்கொள்ளத் துணிந்தான்

நினைவுகள் 55 வருடங்கள் பின்னோக்கிச் செல்கிறது..பம்பாய்க்கு அருகே உள்ள அம்பர்நாத், பயிற்சியும் படிப்பும் தொடர நிர்ணயிக்கப்பட்ட இடம். பெங்களூரிலிருந்து HAL-மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 50- பேர் குழுவில், இவனும் ஒருவன். ஹாஸ்டல் வாழ்க்கையைப் பற்றி எழுத இருப்பதால், மற்ற விஷயங்கள் உரிமை இழக்கின்றன
அம்பர்நாத் மெஷின் டூல் ப்ரோடோடைப் ஃபாக்டரி ராணுவ அமைச்சகத்தின் கீழ் வருவது. அதை ஒட்டிய பயிற்சிப் பள்ளியில் அகில இந்தியாவிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கிருந்தவர்களைவிட இவன் குழுவில் இருந்தவர்கள் தங்களை ஒரு படி மேலானவர்களாகக் கருதினர். இவர்களுடைய பயிற்சி ஒரு மேற்பார்வையாளர்க்குரியது.அவர்கள் தொழிலாளியாக அமர்த்தப்பட தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். இவர்களில் பெரும்பாலோர் தென் இந்தியர்கள்.அவர்கள் அகில இந்தியப் பிரதிநிதிகள். ஒட்டு மொத்தத்தில் விடுதியில் இருந்தவர்கள் ஒரு மினி இந்தியாவைப் பிரதிபலிப்பவர்களாக இருந்தனர். ஐந்து இரண்டு மாடிக் கட்டிடங்களைக் கொண்ட விடுதியில், ஒரு கட்டிடத்தில் சுமார் 100- பேர் வீதம் மொத்தம் 500- பேர். ஒவ்வொரு தளத்திலும் நான்கு டார்மிடரிகள். ஒவ்வொன்றும் 12- பேரைத் தங்க வைக்கக் கூடியது. ஒவ்வொருவருக்கும் ஒரு கயிற்றுக் கட்டில், ஒரு நாற்காலி , ஒரு சைட் ராக்-கம் மேசை.தளத்தில் இரண்டு பகுதிகளிலும் பொதுவான கழிப்பிட மற்றும் குளியல் வசதிகள். ஒரு பொதுவான பெரிய சாப்பாட்டு ஹால்.உடற்பயிற்சிக்கான எல்லா வசதிகளும் கொண்ட மைதானமும், எல்லா இண்டோர் விளையாட்டு வசதிகள் கொண்ட லாஹூர் ஷெட், என்ற ஒரு கட்டமைப்பும்  இருந்தது. 5- நிமிட நடையில் பயிற்சிப் பள்ளி இருந்தது. இவர்களது இருப்பிட வசதிக்கும் உணவுக்கும் HAL நிறுவனம் இவர்களது ஸ்டைபெண்ட் ல் இருந்து மாதம் ரூபாய் 50- பிடித்து அதை பயிற்சிப் பள்ளிக்காக செலுத்தினர். அவர்களுடைய பயிற்சி மாணவர்களுக்கு அனைத்தும் இலவசம். இதுவும் இவர்கள் தங்களைப் பற்றி உயர்வாக எண்ணிக்கொள்ள ஒரு காரணம். இந்த எண்ணத்தின் தாக்கம் இவர்கள் அங்கு போய்ச் சேர்ந்த ஓரிரு மாதங்களில் வெளிப்பட்டது..பெரும்பாலும் தென் இந்தியர்களான இவர்களுக்கு  தினமும் சப்பாத்தி, பூரி என்று சாப்பிடுவது கடினமாகத் தெரிய தென் இந்திய சாப்பாடு வேண்டி உணவைப் புறக்கணிக்கும் ஒரு போராட்டம் உருவெடுத்தது. என்னவெல்லாமோ சமாதானம் கூறினாலும் போராட்டம் நிறுத்தப் படவில்லை. நாங்கள் ஒன்றும் போட்டதை இலவசமாகத் தின்பதில்லை.பணம் கொடுக்கிறோம். அரிசி சாப்பாடு, சாம்பார், ரசம் எல்லாம் கொடுக்கப் பட வேண்டும் என்று கூப்பாடு போட்டனர். அங்கிருந்தவர்களுக்கு தென் இந்திய உணவு சமைக்கத் தெரியாது என்று கூறப்பட்டது. கற்றுக் கொடுக்கிறோம் என்று இவர்கள் முன்வர, சாம்பார், ரசம் என்ற பெயரில் ஏதோ சமைத்துப் பறிமாறப்பட்டு, போராட்டம் கை விடப் பட்டது.
பயிற்சியில் இருப்பவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவு இந்தக் காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாது. காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்யச் செல்பவர்கள் ஒரு முட்டையும் ஒரு பெரிய டம்ளர் பாலும் அருந்திச் செல்வர்.காலை உணவாக, டீயுடன் பூரி கிழங்கு அல்லது ரொட்டி கொடுக்கப் படும். அளவு ஏதும் கிடையாது. பூரிகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து, சாண் உயரம் ,முழ உயரம் என்று அளந்து, எடுத்துச் சென்று உண்பதைப் பார்த்து இவனுக்கு ஆச்சரியம். இவனுக்கோ நான்கு அல்லது ஐந்து பூரிகள் சாப்பிடுவதே பெரும்பாடு. காலை பத்து மணி அளவில் கணக்கில்லாத தேவைப்பட்ட அளவு பிஸ்கட் ( க்ரீம் உட்பட ) தேனீருடன். மதிய உணவில் சப்பாத்தி சப்ஜி, ஒரு ஸ்வீட், அசைவ உணவு உண்பவர்களுக்கு அதுவும் உண்டு. மதியம் மூன்று மணிக்கு மீண்டும் பிஸ்கட் ,டீ.மாலை ஆறு மணிக்குத் தேனீருடன் பஜ்ஜியோ பகோடாவோ. இரவு மதியம் போல் உணவு.

சமைக்கப் படும் உணவுகள் முதலில் அருகிலிருந்த ராணுவ ஆஸ்பத்திரியில் சோதிக்கப் பட்டு, சமச் சீர் உணவுதான் என்று உறுதி செய்யப்பட்டு பிறகுதான் வழங்கப் படும்.

இவ்வளவு விரிவாக உணவு பற்றிக் குறிப்பிடக் காரணம் நம் மக்களின் மனோபாவத்தை உணர்ந்து கொள்ளக் கிடைத்த வாய்ப்பை விளக்கத்தான். பயிற்சிக்கு வந்தவர்களில் பெரும்பாலோர் அடிமட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்.அவர்களுக்கு இந்த மாதிரியான சத்தான, அளவில்லாத உணவு கனவு கூடக் காண முடியாதது. நிர்வாகத்தில் சில மாதங்கள் கழிந்த பிறகு செலவு கூடிப் போவதால், எண்ணற்ற பிஸ்கட்கள் என்பதை மாற்றி தேநீருடன் இரண்டு பிஸ்கட்கள் என்று குறைத்தார்கள். கேட்கவா வேண்டும் .மீண்டும் போராட்டம். இந்த முறை சாப்பாட்டுச் செலவுக்கு ஒதுக்கப் பட்டுள்ள நிதியில் செலவு செய்ய ,பயிற்சியில் உள்ளவர்களே தேர்ந்தெடுக்கப் பட்டதோடு, அது சரிவர நடை பெறுகிறதா என்று கண்காணிக்க பிரதி தினமும் ஒருவர் நியமிக்கப் படுவார் என்றும் ஏற்றுக்கொள்ளப் பட்டது. அதன் விளைவு , தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பெட்டியில் பிஸ்கட் பாக்கெட்கள் அடுக்கப் பட்டன. பகிர்ந்துண்ணும் பிஸ்கட்களின் எண்ணிக்கை குறைந்தது , ஒரு வேளை ஊழலுக்கு வித்திட்டது என்று கூறலாமா.?
சில நாட்களில் மாலை நேரங்களில் அறிவிக்கப் படாமலேயே பாட்டுப் போட்டிகள் தொடங்கி விடும். ஒரு கட்டிடத்திலிருப்பவர் யாராவது உரக்கப் பாட ஆரம்பிக்க எதிர் கட்டிடத்திலிருந்து எதிர் பாட்டு வந்து சுவையான அந்தாக்ஷரியாக மாறிவிடும். பெரும்பாலான நேரங்களில் இவனுடைய கட்டிடத்தில் இருப்பவர் வெற்றி வாகை, சூடுவர். ஏனென்றால் இங்கிருப்பவர்கள் ஹிந்தி, தமிழ் கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் பாடுவார்கள். மற்றவர்களிடமிருந்து பெரும்பாலும் ஹிந்தியில் மட்டுமே எதிர்பாட்டு வரும்.

எல்லா விளையாட்டுகளுக்கும் வசதியான லாஹூர் ஷெட் ஒரு முறை தீயில் எரிந்தது. சாதாரணமாக விளையாட வராதவர்கள் அன்று வந்து சிகரெட் புகைத்து துண்டுகளை எங்கோ போட இரவு ஷெட் கொழுந்து விட்டு எரிந்தது. யாரையும் குறிப்பிட்டுக் குறை கூற முடியாத நிலையில், , மீண்டும் ஒரு விளையாட்டு அரங்கம் உருவாக சில காலமாயிற்று. டேபிள் டென்னிஸ் என்னும் விளையாட்டை இவன் அங்கு கற்று , ஓரளவு தேர்ச்சி பெற்று, போட்டியில் பரிசும் பெற்றிருக்கிறான்.

ஒரு முறை நண்பர்கள் ஆர்வமாக எதையோ பார்த்துக் கொண்டிருக்க, என்னவென்று கேட்ட போது, “ பைரனின் கவிதைகள் என்று எதையோ காட்டினர். படித்துப் பார்க்கும் போது, அவை உடலுறவை குறித்த பச்சையான செய்திகள் கவி நடையில் ஆங்கிலத்தில் எழுதப் பட்டவை என்று தெரிந்தது..இது நாள் வரை அதன் மூலம் என்ன, உண்மையிலேயே பைரனின் கவிதைகளா என்று இவனுக்குத் தெரியாது.

இன்னொரு முறை சில நண்பர்கள் சில ஃபோட்டோக்களை கூடி அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவற்றைக் காண அவர்கள் சொன்ன ஒரே விதி, அவற்றை நின்று கொண்டுதான் பார்க்க வேண்டும். பலரும் ஆர்வத்துடன் விதிக்குட்பட்டு படங்களைப் பார்த்துக் கொண்டிருக்க, கூடியிருந்தவர்கள் நிற்பவனின் முன் பக்கத்தை நோட்ட மிட்டுக் கொண்டிருப்பார்கள். நிற்பவன் ஒரு சில வினாடிகளில் உட்கார்ந்து விடுவான். !


சிகரெட் புகைப்பதில் போட்டி நடக்க இவன் அதில் கலந்து கொண்டு , மறுநாள் உதடெல்லாம் வீங்கி, வார்டனிடம் டோஸ் வாங்கியது மறக்க முடியாது.

அடுத்திருந்த உல்லாஸ் நகருக்கு நடந்து சென்று, சிந்திப் பெண்களை சைட் அடிக்கும் வாடிக்கையும் உண்டு

ஒரு வருடம் தட களப் போட்டியில் இவன் கலந்து கொண்டு, உயரந் தாண்டுதலில் முதல் பரிசு வென்றபோது, பலராலும் தோள் மேலேற்றிச் செல்லப் பட்டான். ஏதடா, திடீரென்று இவ்வளவு மதிப்பு என்று பார்க்கும்போது, இவன் வெற்றி பெற்றதால் இன்னொரு வீரன் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள முடிந்தது தெரிந்தது

ஹோலி பண்டிகையை அவர்கள் கொண்டாடுவது தென் இந்தியர்கள் பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தும். அதிகாலையில் எழுந்து எல்லோரையும் எழுப்பி முகத்தில் சாயம் பூசி தெருவெங்கும் கலாட்டாவுடன் உலா வருவார்கள். அடுத்திருந்த சிவன் கோவில் பழமை வாய்ந்தது. சிவராத்திரி வெகு விசேஷம். சிவ லிங்கம்  பிரதிஷ்டை செய்யப்பட்ட இடம் தரையின் சற்று அடியில் ஆழத்தில் இருக்கும். எல்லோரும் லிங்கத்தை தொட்டு அபிஷேகம் செய்யலாம். ஊரே திரண்டு பார்க்கக் கண் கொள்ளாக் காட்சியாய் இருக்கும்.

அங்கிருந்தபோது ஆங்கிலத்தில் ஒரு கையெழுத்துப் பத்திரிகை கொண்டு வரப்பட்டது. அழகான கையெழுத்துடன் பிரமாதமான படங்களுடன், விடுதி வாசிகளாலேயே எழுதப் பட்டு இர்ண்டு மாதத்துக்கு ஒன்றாக வெளியிடப்பட்டு ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றது.

.ஞாயிற்றுக் கிழமைகளில் எல்லோருக்கும் பொதுவான ஒரு வேலை உண்டு. அது கயிற்றுக் கட்டிலில் இருக்கும் மூட்டைப் பூச்சிகளை அகற்றுவது ஆகும். மூட்டைப் பூச்சிகளை ஒழிக்க ஒரு வழி என்று விளம்பரம் செய்யப் பட்டு,, லூதியானாவிலிருந்து வரவழைக்கப்பட்ட பார்சலில் ஒரு குப்பியும் , ஒரு சிறிய ஹாமரும், ஒரு கல் தட்டும் இருந்தது. கூடவே ஒரு செய்முறைத் தாளில் விளக்கமும் இருந்தது. மூட்டைப் பூச்சியைப் பிடித்து தட்டில் வைத்து ஹாமரால் கொன்று குப்பியில் சிறிது நீர் விட்டு அதில் போட்டால் மூட்டைப் பூச்சி போச்சு போயே போச்சு.!

விடுதியில் இருந்த போது அங்கே இரண்டு மூன்று குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து அதில் வந்த பணம் கொண்டு ஊருக்குப் போகவும் சில்லறைத் தேவைகளையும் இவன் கவனித்துக் கொண்டான்.

விடுதியில் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த மக்களிடம் பழகும் வாய்ப்பு ஒரு நல்ல படிப்பினையாக இருந்தது. கடைசியாக ஒன்று சொல்ல வேண்டும். இந்தியப் பிரிவினையின் போது அகதிகளாய் நம் நாட்டிலேயே பல இடங்களில் குடி வைக்கப் பட்ட சிந்திகள் நல்ல உழைப் பாளிகள் நல்ல வியாபாரிகள். ஏதாவது பொருளில் MADE IN USA  என்று பார்க்க நேர்ந்தால் அது உல்லாஸ்நகர் சிந்தி அசோசியேஷனால் தயாரிக்கப் பட்டிருக்கலாம் கவனிக்கவும்.!
பயிற்சிக் கூடத்து நினைவுகளும் வராமல் இல்லை. தொழிற்கூடப் பயிற்சியில் பலவிதமான மெஷின்களில் பயிற்சி பெற்று தேர்ச்சிபெறவாய்ப்பளிக்கப் பட்டது. அதில் ஒரு பயிற்சி ஆசிரியர் யாராவது ஏதாவது சிறு பிழை செய்தாலுமே அனைவரையும் CALL ALL”என்று கூட்டி தவறைச்சுட்டிக்காட்டி பாடம் எடுக்க ஆரம்பித்து விடுவார். இன்னொரு ஆசிரியர் தமிழர். ஆங்கில மொழிமீது காதலே கொண்டவர். அறிமுகமே இல்லாதவருடன் கூட சகஜமாக ஒரு ஹல்லோ சொல்லிப் பேச ஆரம்பிக்கலாம் என்று சிலாகிப்பார், தொழிற்கூடப்பயிற்சி தவிர தீயரிடிகல் வகுப்புகளும் உண்டு. அதில் ஒரு ஆசிரியர் அடிக்கடி பேசும் போது “நான் இங்கிலாந்தில் இருந்தபோது “ என்று நீட்டி முழக்குவார். இவனுடன் இருந்த சிலர் பதிலுக்கு “ நாங்கள் பெங்களூரில் இருந்தபோது “என்று கூறி மடக்குவார்கள்.

அது சரி. 2016-ல் ஒன்று கூட இருக்கும் எத்தனை பேருக்கு ஒருவரை ஒருவர் நினைவு படுத்த முடியும்?அவர்களில் ஒருவரின் பேரன் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிடமிருந்து பரிசும் பாராட்டும் பெற்றவனாம்,....!
                      -----------------------                         :      .               .



.






 

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

பதிவு பழையது உத்தி புதியது ..........

                      
                               பதிவு பழையது உத்தி புதியது.......
                          --------------------------------------------




ஏற்றத்தாழ்வுகள் மறையாது. குறைக்கவாவது செய்ய வேண்டும்
என்றால், எல்லோருக்கும் கல்வி அறிவு அவசியம். அதுவும்
அனைவருக்கும் சமமாக இலவசமாக இருக்க வேண்டும்.
அடிப்படைக்கல்வியாவது வியாபாரமாக இல்லாமல் இருக்க
வேண்டும். அகக் கண்கள் திறந்தால் தீர்வுகள் தானாக வரும்.

ரொம்ப சரியா சொன்னீங்க.
                       ------------------
 தனியார் பள்ளிகளை வளர்க்கவே திட்டங்கள் தீட்டபடுகின்றன..
இந்த 25% திட்டத்துக்கு செலவு செய்வதை விட அரசு பள்ளிகளை தரம் உயர்த்தலாம்..
அரசு பள்ளி ஆசிரியர்களில் பெரும்பகுதியினர்.. வாங்குற சம்பளத்துக்கு வேலை செய்வதில்லை..
பள்ளியில் ஆசிரியர்கள் தூங்கினால் உடனடியாக பணியிடை நீக்கம் போன்ற கடுமையான தண்டனைகளை செயல்படுத்தவேண்டும்
தனியார் பள்ளிகளை முதலில் முடக்க வேண்டும்...
முற்றிலும் அரசுடமையாக்கப்பட்ட கல்வி இருக்க வேண்டும்...
பிறகு அரசு பள்ளிகளின் தரம் தானாக உயரும்
                  --------------
அன்புள்ள ஐயா...

வணக்கம். ஒரு கல்வியாளனாக என்னுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். மிகச் சரியான ஒரு கட்டுரையை அருமையாக பதிவு செய்திருக்கிறீர்கள். இதனை வாசித்துக் கொண்டே வரும்போது இதற்கான தீர்வை நான் யோசிக்கும் அதையும் தாங்களே சரியாகச் சொல்லிவிட்டீர்கள்.

என்னடைய தனிப்பட்ட கருத்துக்களாக சிலவற்றை உங்கள் பதிவிற்குப் பதிலாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

1.
சாதி. மதம் இவற்றைத் தாண்டி முறையான ஒழுங்குப்படுத்தப்பட்ட தரமான கல்வி எல்லா வசதிகளுடனும் எல்லோருக்கும் வழங்கப்படும் சூழலை ராணுவ நடவடிக்கை போலக் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

2.
எந்த சாதிசங்கங்களையும் முறைப்படுத்தக்கூடாது. அவற்றை நீக்குதல்வேண்டும். கல்வி வாயிலாகவே எல்லாவற்றையும் பெறவேண்டும். தகுதியும் தரமும் மேலெடுத்துச் செல்லவேண்டும்.
3. புதிதாக பள்ளிகள், கல்லுர்ரிகள், பல்கலைக்கழகங்கள் இவற்றை மேன்மேலும் தொடங்க அனுமதிப்பதை நிறுத்தி ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள கல்வி நிறுவனஙகளைக் கடுமையான விதிகளுக்குட்படுத்தி புற அமைப்பு, கட்டிடம், கழிப்பறை, விளையாட்டுத் திடல், வகுப்பறை, நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் முழுமைபெற்ற கல்வித்தகுதி, அவர்களின் பயிற்றுவிக்கும் தரம் இவை முறையான இடைவெளிகளில் பரிசோதிக்கப்பட்டு அவற்றினைத் தரமாய் எப்போதும் தக்கவைப்பது மிக முக்கியமானது,

3,
கல்வி உதவித்தொகை, கல்விக்கடன, இலவசங்கள் இவற்றையெல்லாம் நிறுத்தி அரசே உண்மையாகப் பொருளாதார நிலையில் கஷ்ட்ப்படுபவர்கள் யாராக இருந்தாலும் என்ன சாதியாக இருந்தாலும் எத்தனை பேராக இருந்தாலும் அவர்களின் உச்சக்கட்ட கல்வி வரை அத்தனை செலவுகளையும் ஏற்கவேண்டும். இலவசங்களுக்கு செலவிடப்படும் கோடிக்கணக்கான தொகையை கல்விக்குச் செலவிடலாம்.

4.
கட்சி சார்புகளை எல்லாம் மறந்து தரமான மனிதர்களையும் அவர்களால் சமூகத்திற்குப் பயன்விளையும் என்று நம்புகிறவர்களையும் அரசியல் பணிக்கு தெரிவு செய்யலாம். இதெலல்லாம் நடக்குமா என்கிற கேலியைத் தாண்டி யோசிக்கவேண்டும்.

5.
மிகமிக முக்கியமான ஒன்று. விடுபாடு இல்லாமல் எல்லாப் பெண்களும் வயது வேறுபாடின்றி கல்வி அறிவு பெறுதல் கட்டாயமான பணியாக முறைப்படுத்தப்படவேண்டும். இது நல்ல சமுகத்தை வடிவமைக்கும்.

பதிவிற்கு நன்றிகள்.
அகக் கண்கள் திறந்தால் தீர்வுகள் தானாக வரும்.நிச்சயமாக..

அருமையான பகிர்வு.. பாராட்டுக்கள்..
                    ---------------
...
விசாலமான பார்வைகள்
நிஜமான யோசனைகள்
என்ன இருந்தாலும் என்று மாறும் எந்த நிலை?
                   --------------------
ரொம்ப பெரிய சப்ஜெக்ட். கருத்து ஒன்றும் சொல்வதற்கில்லை.
                       -------------------
வர்ணாசிரமம் ஜாதியாக மாறிய கொடுமையை அறியாமையை எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.கல்வியறிவு இதைப் போக்கிவிடும் என்பதை முழுமையாக ஏற்க முடியவில்லை
                    ---------------
இதில் வருத்தமளிக்கும் விஷயம்
புறக்கணிக்கப் பட்ட பிரிவில் இருந்து
முன்னேறியவர்கள் அவர்களை
ஒரு புதிய உயர்ந்த ஜாதியாக
நினைத்துக் கொண்ட அவர்கள் இனத்தவர்களையே
தாழ்ந்தவர்களாக நடத்துவதுதான்
சிந்திக்கத் தூண்டிப்போகும் அருமையான பதிவு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
மிகச் சிறந்த பதிவென்றே இதை கருதுகிறேன்.
                 ---------------

தொழிலின் அடிப்படையில்தான் சாதியை பிரித்தான் அன்றைய முட்டாள் மனிதன். இன்று சாதியைவைத்து யாரும் தொழில் செய்வதில்லை. விவசாயத்தை தொழிலாகக் கொண்ட குடும்பத்தினரின் அடுத்த தலைமுறைகள், இன்று நகரங்களில் பணிபுரிகின்றனர்.

வெள்ளாமைக் கண்டால்தான் வாழ்க்கை என்ற நிலை மாறி இருக்கிறது. இன்று கிராமங்களில் விவசாயம் செய்ய ஆள் இல்லை.

குடுமி வைத்து புரோகிதம் பார்த்த குருக்களின் வாரிசுகள் வேறு வேலைக்கு சென்றுவிட்டனர்.
பனை ஏறி கள்ளு விற்றவர்கள் இன்று வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கின்றனர்.

குலத் தொழிலைக் கொண்டுதான் சாதி பிரிக்கப்பட்டது. குலத் தொழிலை யாரும் தொடராதபோது சாதி எதற்கு...?
சாதி சிலருக்கு வரம் சிலருக்கு அதுவே சாபம்.

நல்லதொரு பதிவு வாழ்த்துகள் ஐயா...!
                      -------------
//எழுதும் போது எண்ணங்கள் எங்கெங்கோ செல்கின்றன. ஏற்ற
தாழ்வுகள் மறையாது. குறைக்கவாவது செய்ய வேண்டும்
என்றால், எல்லோருக்கும் கல்வி அறிவு அவசியம். அதுவும்
அனைவருக்கும் சமமாக இலவசமாக இருக்க வேண்டும்.
அடிப்படைக்கல்வியாவது வியாபாரமாக இல்லாமல் இருக்க
வேண்டும். அகக் கண்கள் திறந்தால் தீர்வுகள் தானாக வரும்.//

மிகவும் அருமையான வாசகங்கள். நன்றி ஐயா.
                   -------------
//.கட்டாயக் கல்வித் திட்டத்தில்
25%
இடம் ஏழை மக்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதியை
நடைமுறைப் படுத்தவோ, செயல்படுத்தவோ எந்த முனைப்பும்
இல்லாமல் மெத்தனமாக இருக்கிறார்கள்.// intha karuththai otti thaan inru en post...http://veeluthukal.blogspot.in/2012/01/blog-post_31.html
                  --------------
ஏற்ற தாழ்வுகள் என்பதே உண்மையில் இல்லை. எல்லோரும் முக்கியபங்கு வகிப்பவர்கள். நம் உடலில் உள்ள எந்த உறுப்பு உசத்தி எது மட்டம்?
                   -----------

மனிதன் தாழ்வு ஏற்றம் இல்லை என்று உணர்ந்து அனைவரையும் சமமாக பாவிப்பது என்பது நடக்காது. இதற்கு தீர்வும் இருப்பதாக தெரியவில்லை. தனிமனிதன் வேண்டுமென்றால் மாறலாம்.
                      -------------
வலைப்பதிவில் எழுதுபவர்களுக்கு வரும் தட்டுப்பாடே எனக்கும் வருகிறது. நான் என் கருத்துக்கள் சிலவற்றில் மிகவும் நம்பிக்கை கொண்டு இருக்கிறேன் பலமாக சிந்தனையில் எழும் கருத்துக்கள் என் பதிவுகளில் சில சமயம் எப்படியாவது இடம் பிடித்து விடும் அம்மாதிரியான சிந்தனை ஓட்டத்தில் நான் எழுதிய பதிவு ஒன்றுக்கு வந்த பின்னூட்டங்களே இப்பதிவு. நான் 2012-ம் ஆண்டு துவக்கத்தில் எழுதிய பதிவின் சுட்டி இதோ. அதற்கு வந்த பின்னூட்டங்களே மேலே.
                            ----------------.

 


 



          

சனி, 8 ஆகஸ்ட், 2015

இவரைச் சந்தித்து இருக்கிறீர்களா


                     சில குணாதிசயர்கள்--சந்தித்து இருக்கிறீர்களா.?
                     ------------------------------------------------------------------
                                              ( 1 )

     ” காலையில் எங்கேபோய் வருகிறீர்கள் ?”-எதிரில் வந்த
நண்பரிடம் தெரியாமல் கேட்டு விட்டேன்.

      “நான் மார்க்கெட்டுக்குப் போய் காய்கறி வாங்கிவருகிறேன்”--
இதை சொல்ல வரும் நண்பர்,”இன்று காலையில் எழும்போதே
ஒரு மாதிரியாக இருந்தது.நம்க்கு நேரம் சரியில்லையோ
என்று நினைத்துக்கொண்டே எழுந்தேன். கும்பகர்ணன் மாதிரி
தூங்கிக் கொண்டிருந்தால் போதுமா?எல்லா வேலையும் நானே
செய்ய வேண்டி இருக்கிறது. வீட்டில் சமைக்க ஏதாவது காய்
கறிகள் வாங்கி வரக் கூடாதாஎன்று மனைவி கத்தத் துவங்கி
விட்டாள் சரி என்று பையை எடுத்துக்கொண்டு கிளம்பினென்.
கொஞ்ச தூரம் போனதும் பர்ஸை எடுக்க மறந்தது தெரிந்தது.
மறுபடியும் மனைவியின் வாயில் விழ வேண்டுமெ என்று
பயந்துகொண்டே,திரும்பி வந்து பர்ஸை எடுத்துக்கொண்டு
மார்க்கெட்டுக்குப் போனேனா....எந்தக் காய்கறி நன்றாக
இருக்கிறது, விலை மலிவு என்று தெரிந்துகொள்ளபல கடைகள்
ஏறி இறங்கினேன் வெண்டைக்காய் பிஞ்சாய் இருக்கா என்று
தெரிய உடைத்துத்தானே பார்க்க வேண்டும்.?அந்தக்கடையில்
உடைத்துப் பார்க்கக் கூடாது என்று தடுத்து விட்டார்கள்.
அப்போது மூன்றாம் வீட்டு முத்துச்சாமி எதிரே வந்தார். அவரது
மகளுக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருக்கிறதாம். சென்னையில்.
வரும் மாதம் முதல் வாரத்திலாம். அவசியம் வர வேண்டும்
என்று கேட்டுக்கொண்டார். நாம் இருக்கும் இருப்புக்கு சென்னை
போய் கலியாணம் எல்லாம் பார்க்க முடியுமா.?அப்படியே
போனாலும் வெறுங் கையோடு போக முடியுமா.?என்ன செய்ய.?
முயற்சி செய்கிறேன் என்று சொல்லிவிட்டுத் தப்பித்தேன்.
கொஞ்சம் வெண்டைக்காய் வாங்கினேன். முருங்கைக்காய்
எனக்குப் பிடிக்கும்.ஆனால் ஒரு காய் நாலு ரூபாய் சொல்கிறான்
கட்டுப்படியாகுமா.?ஏதோ கொஞ்சம் கீரை தக்காளிவாங்கிக்
கொண்டு இப்போதுதான் வருகிறேன். நடுவில் உம்மைப் பார்த்து
விட்டேன். நேரமாகிவிட்டது. வீட்டுக்குப் போனால் ஏன் லேட்
என்று மனைவியிடம் அர்ச்சனை வாங்க வேண்டும் ...”...ஏதோ
தாமதத்துக்கு நாந்தான் காரணம் போல பெசிக்கொண்டேபோனார்.
                                               --------------
                                                    2

 ” பதிவெல்லாம் எழுதுகிறாயாமே”

 “வயதாகிவிட்டதல்லவா.நேரம் போக வேண்டுமே. ஏதாவது
செய்துகொண்டு இருந்தால்பொழுது போகும்தானே.”

 “ கம்ப்யூட்டர் எல்லாம் உபயொகிக்கத் தெரியுமா.?”

 “ எங்கே தெரிகிறது. ...பேரன் புண்ணியத்தில் ஒரு ப்ளாக்
துவங்கி இருக்கிறேன்.அதில் மனதில் தோன்றுவதை எழுதுவேன்”

 “ நீ எழுதுவதைபடிக்க வாசகர்கள் இருக்கிறார்களா என்ன.?”

 “ஏதோ பலர் படிப்பார்கள்;சிலர் கருத்தும் எழுதுவார்கள்.”

 “எந்த மொழியில் எழுதுகிறாய்.?”

  “ஏன், தமிழில்தான். “

 “அதுதானே பார்த்தேன். ஆங்கிலத்தில் எல்லாம் எழுதத் தனித்
திறமை வேண்டுமே. இல்லாவிட்டாலும் பேரன் சொல்லிக்
கொடுக்கலாமே.உனக்கென்னப்பா...பேரன் சொல்லிக்கொடுத்து
கம்ப்யூட்டர் உபயோகிக்கிறாய். பொழுது போக்குக்காக எழுது
கிறேன் என்கிறாய்.அதைப் படிக்கவும் ஜனங்கள் இருக்கிறார்கள்
என்கிறாய். ஹூம்.!கொடுத்துவெச்சவந்தான் “
                                                 --------------------
                                                             3

 ” நேற்று உன்னைக் கிளப்பில் பார்த்தேன்.”

 ” ஆமாம், அவ்வப்போது கிளப்புக்குப் போவ்துண்டு.”

 “ உன் மனைவியுடன் வந்திருந்தாயே.”

 “ஆம் எங்கு போவதானாலும் மனைவியுடந்தான் போவேன்.”

 “உன் மனைவியுடன் நீ போவ்தைப்பார்த்து என் மனைவி
   என்னிடம் சண்டை பிடிக்கிறாள்.”

 “ என் மனைவியுடன் நான் போவதால் உங்கள் மனைவி ஏன்
    சண்டை போடவேண்டும்?”

 “ என்னையும் உன்னை மாதிரி, எங்கு போவதானாலும் கூடவே
    இழுத்துக் கொண்டு போக்ச் சொல்கிறாள்.”

 “ மன்னிக்க வேண்டும். நான் என் மனைவியை அழைத்துக்
   கொண்டு போகிறேன். இழுத்துக் கொண்டு போவதில்லை.”

 “உன் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்./’

 ‘ படித்துக் கொண்டு இருக்கிறார்கள்.”

 “ அவர்கள் படித்து முன்னுக்கு வர வேண்டாமா.?நீ அவர்களுக்கு
    ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டாமா.?இப்படி
    மனைவியுடன் சுற்றிக் கொண்டிருந்தால் எப்படி.?”

 “ என் பிள்ளைகளை நான் அதிகம் கட்டுப்படுத்துவதில்லை.
    அவர்களுக்கு நல்லது கெட்டது தெரியும் “

 “ என்னால் அப்படி விட முடியாது. எனக்கிருப்பது பெண்
   குழந்தைகள். மிகவும் கண்டிப்புடன் வளர்க்கிறேன்.”

இப்படி அறிவுரை கூறியவரின் பெண்களில் ஒருத்தி யாரையோ
காதலித்து அவனுடன் ஓடி விட்டாள்
                                         ----------------------------------
                                                          4

 “அப்பா, உங்களைப் பார்க்க விரும்புவதாகஒருவர் இவரிடம்
   சொல்லியிருக்கிறார்.தயாராக இருங்கள். காதில் ரத்தம் வரும்
   அளவுக்குப் பேசியே அறுத்திடுவார்”, என் மருமகள் என்னை
   ஏற்கெனவே தயார்படுத்தி இருந்தாள்.நானும் அறுபடக் காத்து
   இருந்தேன். வந்தவருக்கு சுமார் அறுபது வயதிருக்கும். என் மகன்
   என்னைப் பற்றி அவரிடம் பல தடவைப் பேசியிருக்க வேண்டும்.
   அவரும் என்னைப் பார்க்க விருப்பம் தெரிவித்து வந்திருந்தார்.
    நன்கு படித்த மனிதர்;நல்ல வசதி உள்ளவர். தொழிற்சாலையில்
    பணி புரிந்து தன் வாழ்க்கையையே அதற்காக அர்ப்பணித்துக்
    கொண்டவர் என்றும், அவர் இல்லையென்றால் அத்தொழிற்
    சாலையே விலசம் இல்லாமல் போயிருக்கும் என்றும், தன்னால்
    பல குடும்பங்கள் வாழ்வதாகவும், அதிலிருந்து தனக்கு எதுவும்
    பலனாகக் கிடைக்கவில்லை என்றும் சொல்லிப் போனார்.
    இப்போது ஏதோ சில லட்சங்கள் வருமானம் இருப்பதாகவும்,
    இரண்டு மூன்று பங்களாக்கள் தனக்கு இருப்பதாகவும் அவர்
    சொல்லக் கேட்டுக் கொண்டேன். அவர் ஒரு ஆசாரமான குடும்
     பத்தில் இருந்து வருவதாகவும், வாழ்வில் எல்லாம் இருந்தும்
     நிம்மதி இல்லையென்றும் புலம்பித் தீர்த்தார். அவருக்கு அவரது
     சஞ்சலங்களைக் கொட்டித் தீர்க்க நான் ஒரு WAILING WALL-ஆக
     என்னை எண்ணிக் கொண்டேன். எல்லாவற்றையும் கேட்டுக்
     கொண்ட நான்,தெரியாத்தனமாக அவர் குடும்பம் பற்றிக் கேட்டு
     விட்டேன்.

 “ நான் இப்போது தனியாகத்தான் இருக்கிறேன்”- என்றார்.

நான்:-” பெற்றோர், மனைவி மக்கள் என்று....... ”

அவர்:-”வயதான அம்மா இருக்கிறாள்;மனைவி இருக்கிறாள்; ஒரு
                மகன் இருக்கிறான்.”

நான்:- ” இவ்வளவு பேர் இருந்தும் தனியாக இருக்கிறேன்
                என்கிறீர்களே.”

அவர் :-”என் அம்மா என்னுடன் இருக்கிறாள். என் மகன் அவன்
                அம்மாவுடன் இருக்கிறான்.”
நான்:- “புரியவில்லை.”

அவர்:-” நான் செய்த ஒரே தவறு,கொஞ்சம் வயசு வித்தியாசத்தில்
                வேற்று மதப் பெண்ணைக் காதலித்துக் கலியாணம்
                செய்து கொண்டதுதான். மகன் பிறந்ததும் ,அவளுக்கு
                நான் என் அம்மாவை விட்டு அவளுடனேயே இருக்க
                வேண்டும் என்று விருப்பம்.அதற்காக அம்மாவை விட்டுக்
                கொடுக்க முடியுமா.? நீ வேண்டுமானால் உன் மகனுடன்
                இருந்துகொள் என்று கூறிவிட்டேன்”

நான்:- ”பேசித் தீர்க்க வேண்டிய விஷயம். அவசரப்பட்டு முடிவு
               எடுத்து விட்டீர்களோ.?”

அவர்:-”அவளுக்கு நான் எப்படியும் அவளுடன் வருவேன் என்று
                நம்பிக்கை. எனக்கு என் அம்மா முக்கியம். விட்டுக்
                கொடுக்க முடியாது.  அப்படி இப்படி என்று பதினெட்டு
                வருடங்கள் ஓடிவிட்டது.

நான்:  ”பலத்தைக் காட்டி பயமுறுத்தும் நாடுகளே பரஸ்பரம்
              பேசித் தீர்த்துக் கொள்ள முயற்சிக்கும்போது ,பேசாமலே
              பிரச்சனை தீரும் என்று எப்படி எண்ணுகிறீர்கள்.?”

அவர்:-”நான் எப்பேர்ப்பட்ட மனிதன். எப்படி விட்டுக் கொடுப்பது..
               ஒரு சின்ன சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி, எந்த
               பலனையும் எதிர்பாராமல்,எத்தனை பேரை வாழ
               வைத்திருக்கிறேன். “

நான்:- ”பலனில்லாமலா இருந்த இடத்திலிருந்து லட்சங்களுக்கு
               மேல் வரும்படியும், சொத்துக்களுக்கு சொந்தக்காரராய்
               இருப்பதும்? உங்கள் நிலைக்கு எத்தனையோ பேரின்
               உழைப்பும் ஒரு முக்கிய காரணம் அல்லவா,?”

அவர்:- “என்ன.. நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட் போலப் பெசுகிறீர்கள் ?”

நான்:- “உள்ளதைச் சொன்னேன். நான் எனது என்று நாம் அதிகம்
               நினைக்கும்போது, புரிதல் குறைகிறது. EGO வளர்கிறது.
               பிரச்சனைகள் முடிவு பெறுவதில்லை. உங்கள் மகனிடம்
               பேசினீர்களா.?”

அவர்:-“அவன் அம்மாவைவிட மோசம் சொன்ன பேச்சைக் கேட்க
               மாட்டான். ஊதாரித்தனமாக செலவு செய்வான். எல்லாம்
              அவள் கொடுக்கும் இடம். “

நான்:-”உங்கள் மனைவி என்ன செய்கிறார்கள் ?”

அவர்:-”அவள் ஒரு டாக்டர். எல்லோருடைய பிணிக்கும் மருந்து
               கொடுப்பவள்.அவளுக்குள்ள வியாதியே தெரியாதவள். “

பேசப் பேச மனிதர் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் வசம் இழந்து
கொண்டிருந்தார். இந்தப் பேச்சு முற்றுப் பெற வாய்ப்பில்லை
என்று தோன்றியபோது “எல்லாம் நல்ல படியாக முடியும் மனசை
தளர விடாதீர்கள். தைரியமாக இருங்கள் “,என்று ஒருவாறு
தேற்றி அனுப்பினேன்.
                                         ========================
                                                    5

“நான் போனவாரம் FRANKFURT-ல் இருந்து LONDON-க்கு FLIGHT-ல்
வரும்போது டாக்டர் கிருஸ்டியன் பார்னார்ட் அவர்களை
சந்தித்தேன்.”

“யாரு..? உலகிலேயே முதன் முதலில் இருதய மாற்றுச் சிகிச்சை
செய்தாரே அவரா.?”

“ஆம் .அவரேதான். நான் BHEL-ல் வால்வ் டிவிஷனில் முதன்மைப்
பொறுப்பில் பதவியிலிருக்கிறேன் என்று சொன்ன போது
அவருக்கு இருதய சிகிச்சைக்கு வால்வ் தயாரித்துக் கொடுக்க
முடியுமா என்று கேட்டார். நானும் இப்போது BUSY SCHEDULE-ல்
இருப்பதால் கொஞ்சம் அவகாசம் கேட்டிருக்கிறேன் “
                                          ============================          

.




  

புதன், 5 ஆகஸ்ட், 2015

தமிழ்மணமா புதிர்மணமா.?


                                தமிழ் மணமா புதிர் மணமா..?
                                 ------------------------------------------


வலைத்தளம் அமைத்துத் தமிழில் எழுதுபவர்கள் முதலில் செய்யும் வேலைகளில் ஒன்று தளத்தைத் தமிழ்மணத்தோடு இணைப்பதுதான்  நானும் விதிவிலக்கல்ல. எழுத ஆரம்பித்த ஓரிரு மாதங்களிலேயே தமிழ்மணத்தில் இணைத்தேன் தளம் தமிழ் மணத்தில் இணைந்தாலும் பதிவு எழுதியவுடன் தமிழ் மணத்தில் நுழைந்து இடுகையையும் இணைப்பது வழக்கம். அதுதான் முறை என்றும் எண்ணிக் கொண்டிருந்தேன் பொதுவாக என் பதிவுகளை நான் எழுதிய மறுநாளே இணைப்பது வழக்கம் ஆனால் சில மாதங்களுக்கு முன் அவ்வாறு இணைக்கப் போகும் போது இடுகை ஏற்கனவே இணைக்கப் பட்டு விட்டது என்று அறிவிப்பு வந்தது. சில பதிவுலக வாசகர்கள் ஆர்வ மிகுதியால் இணைப்பது தெரிந்தது. என் பதிவுகள் மூலம் அவ்வாறு இணைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டபடிஅவ்வாறு இணைக்கப் படுவது நிறுத்தப் பட்டது என்று அறிந்தேன் இருந்தாலும் நான் இணைக்கப்போகும் முன்பாகவே என் பதிவுகள் இணைக்கப் பட்டு விடுகின்றன, இதுவரை புரியாத புதிர் இது.

நான் பதிவுலகில் வந்தபோது எனது யு.ஆர் எல் டாட் .காமில் இருந்தது. பின் எப்போது அது .இன் னுக்கு மாறியது என்றும் புரியவில்லை. டாட் இன்னில் இருந்தால் வாக்குப் பட்டை வேலை செய்யாது என்று அறிகிறேன் வாக்குப் பட்டை இருந்தால்தான் ஓட்டு விழும் என்றும் பின்னூட்டங்களின் எண்ணிக்கையும் ஓட்டு எண்ணிக்கையுமே வாசகர்களைக் கவரும் என்றும் தமிழ் மணத்தில் வரும் ராங்க்   குக்கு அடிப்படை என்றும் ஒருபதிவில் படித்த நினைவு. ஆனால் வலைச்சர யு.ஆர் எல். டாட் இன்னில்தான் இருக்கிறது ஆனால் ஓட்டுகள் வருகிறது என்றும் அறிகிறேன் இதுவும் புரியாத புதிர்

எனது இரண்டாவது தளமான பூவையின் எண்ணங்கள்- உம் தமிழ்மணத்தில் இணைக்கப் பட்டிருந்தது. ஆனால் நான் இந்த தளத்தில் எப்பொழுதாவதுதான் எழுதுவதாலும் இந்தத் தளத்துக்கும் வாசகர்கள் தேவை என்பதாலும் அண்மையில் எழுதிய பதிவுகளை இணைக்க முற்பட்டேன் ஆனால் ஏதோ புதிதாக தமிழ் மணத்தில் இணைக்க விரும்பிய பதிவு என்று நினைத்து தமிழ் மணத்தில் இருந்து என் மின் அஞ்சல் முகவரிக்குக் கடிதம் வந்தது. (வேறு பெயரில்) .எங்கோ தவறு என்று குறிப்பிட்டு அதிலேயே ரிப்லை பகுதியில் எழுதி அனுப்பினால் டெலிவரி ஃபெயில்ட் என்று வந்தது. புதிதாக ஒரு அஞ்சல் அனுப்பி விளக்கமாக எழுதி இருந்தேன்  இது நாள்வரை பதில் இல்லை. என் கடைசி இடுகையை இணைக்க முற்பட்டால் கோரிக்கை ஏற்கனவே இருப்பதாக அறிவிக்கிறது. (வேறு தளத்தின் பெயரில்)
ஆக இதுவும் புரியாத புதிராக இருக்கிறது. தமிழ் மண நிர்வாகிகளுக்கு மின் அஞ்சல் அனுப்பினால் பதில் இல்லை.  விஷயம் அறிந்த வாசகர்கள் தெளிவு செய்வார்களா, இல்லை எங்காவது தொழில் நுட்பப் பிரச்சனை இருக்கிறதா .? எனக்கு தமிழ் மண ராங்க்  பற்றியோ வாக்குகள் பற்றியோ கவலை இல்லை. . இருந்தாலும் ஏன் என் விஷயத்தில் இந்தத் தவறுகளென்றும் புரியவில்லை.