வெள்ளி, 18 மார்ச், 2022

ஜீவாத்மா பரமாத்மா ஒரு புதிய அணுகல்

 



                                      ஜீவாத்மாவும் பரமாத்மாவும்...
                                      ----------------------------------------


கனவுக்கு நேரக் கணக்கு ஏதும் கிடையாது .அதிகாலையில் எழுந்திருக்கிறேன். என்ன ஆச்சரியம் .! நான் கட்டிலில் உறங்கிக் கொண்டிருக்கிறேன். என்னால் என்னையும் என் அருகில் படுத்திருந்த மனைவியையும் நன்றாகப் பார்க்க முடிந்தது. உருவமில்லாமல் நான் உயரே சஞ்சரிக்கிறேன். என்னை ஒரு குரல் கூப்பிடுகிறது. எனக்கு ஒரு முறை கனவில் கடவுளிடம் உரையாடிய அனுபவம் இருந்தது.
“ யார் என்னைக் கூப்பிடுவது.?கடவுளாயிருந்தால் முன்பு வந்தது போலென் முன்னே வா “ என்றேன்.
“ எங்கும் வியாபித்திருக்கும் நான் உன் முன்னே வந்தேனா.? என்ன உளறுகிறாய்.? ஏதாவது கனவு கண்டிருப்பாய். “
“ அதுபோல் இது கனவில்லையா.? குரல் மட்டும் கேட்கிறதே.
“ குரல் என்பது உனது பிரமை. உண்மையை உணர்ந்து கொள்ளாமல் நீயே என்னவோ நினைத்துக் கொள்கிறாய். உருவமே இல்லாத எனக்கு ஆயிரம் உருவங்களும் பெயர்களும் கொடுத்து உண்மை என்று நம்பும் கற்பனைத் திறன்தான் உங்களுக்கெல்லாம் இருக்கிறதே. “
“ சரி. உண்மைதான் என்ன.? “
“ உன் ஆழ்மனதில் , ஜீவாத்மா பரமாத்மாவிடம் ஐக்கியமாகத் துடிக்கிறது.உண்மை நிலையைப் புரிந்து கொள்ள மனம் விழைகிறது.
ஜீவாத்மா பரமாத்மா என்று ஏதோ புரியாமல் சொன்னால் எப்படி.? 
“ பரமாத்மா என்பது எங்கும் வியாபித்திருக்கும் பிராண வாயு.ஜீவாத்மா என்பது ஒருவனை இயக்கும் பிராணவாயு..அது அவனை விட்டு வந்தால் பரமாத்மாவுடன் ஐக்கியமாகி விடும்.
“ அனாதி காலம் முதல் தேடிவரும் கேள்விக்கு மிக எளிதாகப் பதிலாக ஏதோ கூறுகிறாயே.
“ மக்கள் மத்தியில் ஒரு கதை உலாவுவது தெரியுமா.? ‘ அமாவாசை இரவில் ,விளக்கில்லா அறையில், கருப்புப் பூனையைத் தேடும் குருடன் போல ‘என்று. அதுபோல்தான் அவரவர் கற்பனைக்கு  ஏற்றபடி கதைகள் புனைகிறார்கள். “
“ கொஞ்சம் விளக்கமாகத் தெரியப் படுத்தலாமே.
“ ஒருவன் உயிரோடு இருக்கிறான் என்று எப்போது கூறுகிறாய்.? “
“ அவன் மூச்சு விட்டுக் கொண்டிருக்கும்போது.
“ அவன் மூச்சுவிட மறந்தால்.... தவறினால்... ?
“ இறந்தவனாகக் கருதப் படுவான்.
“ மூச்சு என்பது என்ன.?
“ சுவாசம். ஒருவன் காற்றை உள்ளிழுத்து வெளிவிடுவது சுவாசம். “
“ எந்தக் காற்றையும் உள்ளிழுத்து வெளி விட்டால் சுவாசிப்பதாகுமா.?
“ இல்லை. ஆகாது. காற்றில் இருக்கும் பிராணவாயுவைத்தான் சுவாசிக்கிறான். அது இல்லாத நச்சுக் காற்றை சுவாசித்து ஆயிரக் கணக்கானவர்கள் போபாலில் இறந்திருக்கிறார்களே.

“ ஆக இந்தப் பிராணவாயுதான் உடலின் எல்லா பாகங்களையும் இயங்கச் செய்கிறது. உடலின் இரத்தத்தை சுத்திகரிக்கிறது. அது உடலின் எல்லா பகுதிகளுக்கும் பாய்ந்து இயக்குகிறது. உடலில் ஏதாவது பாகம் ரத்தம் இல்லாமலிருக்கிறதா. ? இருப்பது

நகமோ முடியோ ஆக இருக்கலாம். சுத்திகரிக்கப் பட்ட ரத்தம் மூளைக்குச் சேரவில்லையானால் அவனை இறந்தவன் என்றே கூறுகிறார்கள். மூளைக்குச் செல்லும் ரத்தத்தில் பிராணவாயு இருக்கிறது.
“ ஜீவாத்மா பரமாத்மா பற்றி விளக்கம் கேட்டால் உடற்கூறு பற்றி விளக்கம் தேவையா.? “
“ அடிப்படை அறிவை கோட்டை விடுவதால் நேராக மூக்கை பிடிக்காமல் தலையைச் சுற்றி அதை அணுகுகிறீர்கள் என்றுகூற வந்தேன்.
”  பிராண வாயு இல்லாமல் இயக்கம் இல்லை என்பது நிச்சயமா.?
“ சந்தேகமில்லாமல். வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இல்லை என்றால் அதற்குக் காரணம் அங்கு பிராணவாயு இல்லை என்பதால்தான். சந்திரனில் நீர் இருக்கிறதா, செவ்வாயில் நீர் இருக்கிறதா என்ற ஆராய்ச்சிகள் அதைத்தானே கூறு கின்றன. “
“ உலகில் உயிரினங்களை இயக்க பிராணவாயு இருப்பதுபோல வேற்று கிரகங்களை இயக்குவது எது..?
“ வேற்று கிரகங்கள் எங்கே இயங்குகிறது.? அவை இருக்கின்றன அவ்வளவுதான்.
இந்த பேரண்டத்தையே இயக்குபவன் கடவுள் என்கிறார்களே. அதெல்லாம் பொய்யா.?
“ தெரியாதவற்றைப் பொய் என்று கூறமுடியாது. அனுமானங்கள் என்று வேண்டுமானால் கூறலாம். “
“ குழந்தை பிறக்கும் போதே சுவாசித்துக் கொண்டே பிறக்கிறதே . அது எப்படி.? “

“ உயிருடன் இருக்கும் ஆணின் விந்து உயிருள்ளது. பெண்ணின் கரு முட்டை உயிருள்ளது ( மூன்றோ நான்கோ நாட்கள் )இரண்டும் இணையும்போது உயிர்

இருக்கிறது . பின் வளரும்போது தாயின் உடலுடன் தொப்புள் கொடி பிணைப்பால் உயிருடன் இருக்கிறது. வெளிவரும்போது ஒரு ஜீவாத்மாவாகிறது. இறக்கும்போது பரமாத்மாவுடன் இணைகிறது.
“ நான் இப்போது ஜீவாத்மாவாகவும் அல்லாமல் பரமாத்மாவுடன் இணையாமல் அனாந்திரத்தில் இருக்கிறேனே . இதை என்ன சொல்ல. ? “
” ஒவ்வொரு முறையும் சுவாசிக்கும்போது மனிதன் ஒரு மாத்திரையோ, குருவோ (உபயம் சுந்தர்ஜி ) இறக்கிறான். பின் உயிர்க்கிறான்.இந்த மாத்திரையோ குருவோ போதும், கனவு காண. நேரம் கணக்கு எல்லாம் கடந்து நிற்கும். உன் ஜீவாத்மா அனாந்திரத்தில் நிற்காமல் உன் கூட்டுக்குள் செல்லட்டும்.. சிறிது தாமதித்தாலும் உன்னைத் தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள். பரமாத்மாவுடன் இணையாமல் அனாந்திரத்திலேயே இருக்க வேண்டியதுதான் “

திடுக்கிட்டு விழித்தேன். வியர்த்துக் கொட்டியது. நான் இன்னும் இறக்கவில்லை. பரமாத்மாவுடன் இணையவில்லை இதுவும் கனவா.? 




)
-------------------------------------------------------------------------------

2 கருத்துகள்:

  1. இதுவும் கனவு தான் சார். உங்கள் ஆழ் மன எண்ணங்களின் வடிவம் கனவாக. அர்த்தமுள்ள கனவு!

    கீதா

    பதிலளிநீக்கு