ஆச்சு அண்ணாவைப் பற்றி எழுதும்போது சில கசப்பு நினைவுகள்
வருவதைத் தடுக்கமுடியவில்லை. என்னதான் கசப்பான உணர்வுகளாயிருந்தாலும் அப்படி
மற்றவர் மனதைப் புண்படுத்துவதில் அவருக்குத்
தெரியாமலேயே அவருக்கு சந்தோஷம் ஏற்படுகிறதோ என்னவோ.நான் அம்பர்நாத்தில்
இருந்தபோது,நான் அம்மா தம்பிகளுக்கு உதவுவது எல்லாம் வீண் என்றும் அவர்களுக்கு என்
மேல் அன்பே இல்லை என்றும் கூறி என்னை உசுப்பேத்தினார். நான் மறுதளித்து பதில்
சொன்னபோது எனக்கொரு கஷ்டம் வந்தால் அவர்கள் உதவ மாட்டார்கள் என்றும், இல்லையென்று
நிரூபிக்க என்னை அவர்களுக்குக் கடிதம் எழுதுமாறு கூறினார்.அதில் நான் மிகவும்
அல்லல்படுவதாகவும் உடனே எனக்குக் கொஞ்சம் பணம் ( ரூ.20-/ என்று நினைக்கிறேன்
)அனுப்புமாறும் எழுதச் சொன்னார்.அவர்களே அங்கு கஷ்டமான ஜீவிதம் நடத்துகிறார்கள்,
எப்படி அது அவர்களால் முடியும் என்ற என் கேள்விக்கு, மிகவும் புண்படும்படியான
பதிலைக் கூறினார். நான் அந்தச் சவால் ஏற்றுக் கடிதம் எழுதி சில நாளில் அவர்கள்
எனக்குப் பணம் அனுப்பியதும் நான் மிகவும் வருத்தப் பட்டேன்.அவர்கள் அன்பை சோதிக்க
நான் செய்த காரியம் எனக்கு மிகவும் மனக்கிலேசத்தை ஏற்படுத்தியது. இதேபொல் நான் HAL ல் சேர்ந்தபோது அப்பாவுக்கு என்னைப் பற்றிக் கூறி,அவரை
வருத்தப் படுத்தியதும் நினைவுக்கு வருகிறது. பிற்காலத்தில் என் மூத்த மகன் மனோவின்
கலியாண நிச்சய தார்த்தத்துக்கு வந்திருந்தபோதும் எங்களுக்கு மிகுந்த மனக்கஷ்டம்
கொடுத்தார்.நிச்சய தாரத்துக்கு அழைப்பு
அனுப்பும் போதே கல்யாண தேதியையும் கூறி இருந்தேன்.பெங்களூரிலிருந்து திருச்சி
வந்தவர் எல்லாம்முடிந்து ஊருக்குப் புறப்படும்போது, திருமணத்துக்கு வர இயலாது
என்றும் திருமணம் நடக்க இருக்கும் நாள் எங்கள் தாயாரின் இறந்த திதி நாள் என்றும்
கூறினார். அப்படி இருந்தால் அதை முன்பே கூறி இருக்கலாம். எனக்கு இந்த திதி
நாட்களெல்லாம் தெரியாது. நான் எதையும் பார்ப்பதும் இல்லை, எதையும் செய்வதும்
இல்லை. இருந்தாலும் மங்கல நிகழ்ச்சி என் தாயாரின் திதி நாளில் வருவது என்றால்,
சங்கடமாகத்தானே இருக்கும். பிறகு நான் என் பெரிய அண்ணா வெங்கிடாசலத்திடம்
கேட்டபோது அப்படி ஒன்றும் இல்லை, அது திதி நாளும் அல்ல ,என்றும் கூறவே மனசு சமாதானமாயிற்று.
ஆச்சு அண்ணா பின்னால் திருமணத்துக்கு வந்தார் என்று கூறத்தேவை இல்லை. எதையோ எழுத
எங்கோ வந்து விட்டேன்.நினைவுகள் ஒன்றிலிருந்து ஒன்றுக்குக் கட்டுப் பாடில்லாமல்
தாவுகின்றது. அவர் குணாதிசயங்கள் காட்டும் நிகழ்ச்சிகள் இன்னும் உண்டு. அவற்றைப்
பிறகு பார்ப்போம்.
மாதம் ரூ.2 1/2
சீட்டுக் கட்டி ரூ.30-/கிடைத்தது. கூடவே HAL ல்
இருந்து யூனிஃபார்ம் அலவன்ஸாக ரூ.40-/என்று நினைக்கிறேன், அதுவும் கிடைக்க நான்
பாலக்காட்டுக்கு அம்மா ,தம்பிகளைப் பார்க்கச் சென்று வந்தேன்.
ஹாஸ்டலில்
இருந்தபோது இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் பயிற்சிக்கு வந்தவர்கள்
இருந்தனர்.ஓரளவுக்குப் பலரிடம் பழக்கம் உண்டு. ஆனால் யாரிடமும் கூடுதல் ஒட்டல்
இருக்கவில்லை..ஆண்டு முதல் தினம், ஆகஸ்ட் 15, குடியரசு தினம் போன்ற நாட்களிலிரவு
12 மணிக்கு, அம்பர்நாத் ரயில் நிலையம் வரை நடந்து சென்று ஒரு டீ குடித்து வரும்
வழக்கம் இருந்தது.ஒரு குடியரசு தினத்தன்று பம்பாயில் இருந்தே,ன் பம்பாயே வர்ண
விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டு ஜகஜ்யோதியாகக் காட்சியளிக்க, ஜனத் திரளும்
எங்கும் குதூகலத்துடன் நடந்தது நினைவுக்கு வருகிறது. ஹாஸ்டலில் இருக்கும்போது ஒரு
கையெழுத்துப்பத்திரிகை கொண்டு வருவது என்று முடிவாகி அழகான கையெழுத்துப் பத்திரிகை
எங்களில் பலரால் எழுதப் பட்டு, சித்திரங்கள் வரையப் பட்டும் எங்களுக்கு பெருமை
தரக் கூடிய வகையில் மூன்று இதழ்கள் கொண்டு வந்ததாக நினைவு. ஆரம்ப கால ஆர்வங்கள்
அடங்கவே பத்திரிகையும் நின்றது.ஹோலி பண்டிகை கொண்டாட்டம் வட இந்தியர்களுக்கு.,
நமக்குத் திண்டாட்டமாக இருந்தது. ஹோலி அன்று நாங்கள் எங்கள் அறையில் உறங்கிக்
கொண்டிருந்தபோது , அதிகாலையில் கூட்டங் கூட்டமாக வந்து எங்களையெல்லாம் எழுப்பி
வர்ணங்கள் பல பூசி, எங்களையும் இழுத்துக் கொண்டு தெருவில் முழங்கிக் கொண்டு
சென்றது மறக்க முடியாது.,அந்தப் பண்டிகையே மிகக் களேபரமானது. ஹாஸ்டல் ஐந்து
கட்டிடங்களில் இருந்து சில நாட்களில் , ஒரு கட்டிடத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்
கட்டிடத்தில் இருப்பவர்களுக்கும் பாட்டுப் போட்டி அந்தாக்ஷரி போல நடக்கும்.
அவர்கள் ஹிந்தியில் பாட எங்கள் பக்கமிருந்து ஹிந்தியும் தமிழும் ,மலையாளம் கன்னடம்
என்று கலந்து கட்டுவார்கள். ஓ, அது அந்தக் காலம்.! பின்னொரு தடவை,,என் நண்பனும்
என் மனைவியின் மாமனுமான ஸ்ரீதரன், அதே அம்பர்நாத் ட்ரெயினிங் ஸ்கூலில் வைஸ்
ப்ரின்சிபால் ஆகப் பதவியில் இருந்த போது, அவருடைய மகன் திருமணத்துக்கு அம்பர்நாத்
சென்றோம். கட்டிடங்கள் இருந்தன.ஹாஸ்டலாக இல்லாமல் வேறு வேறு பணிகளுக்காகப் பயன்
பட்டு வந்தது தெரிந்தது.நிறைய வருடங்கள் கழித்துச் சென்றதாலேதோ கனவுலகைக் காண்பது
போல் தோன்றியது.
ஹாஸ்டலில்
இருந்த சமயத்தில் நாங்கள், ஜிம்மில் பயிற்சி செய்ய, ஷட்டில் விளையாட, டேபிள்
டென்னிஸ் விளையாட என்று எல்லா இண்டோர் கேம்ஸ் வசதிகளை உள்ளடக்கிய லாஹூர் ஷெட்,
என்ற இடம் இருந்தது. ராணுவத்தினர் உபயோகிக்கும் ஒரு வித கட்டிட அமைப்பு.. மாலையில்
பயிற்சி செய்பவர்களும் விளையாடுபவர்களுமாக நிறைந்திருக்கும். நேரம் ஆக ஆகக்
கூட்டம் குறையும். ஒரு நாள் மாலை, மாலை என்று சொல்வதைவிட இரவு எனலாம், சாதாரணமாக
விளையாட்டுகளில் ஈடுபடாத சிலரும் வந்திருந்தனர். புகை பிடிக்கும் பழக்கம் பல
பேருக்கு இருந்தது. அன்றிரவு நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது லாஹூர் ஷெட்
பற்றியெரிந்தது.யாரிட்ட சிகரெட்டின் நெருப்போ.?மறுநாள் எல்லோரும் அழைக்கப் பட்டு
எச்சரிக்கப் பட்டனர்.அதன் பிறகு வேறு ஒரு பயிற்சிக் கூடம் கட்டப் பட்டது.
சில நாட்கள்
அடுத்துள்ள உல்லாஸ்நகருக்கு சிந்தி காலனிகள் இருக்குமிடம் நடந்தே செல்வோம். நண்பர்கள்
சேர்ந்து செல்லும்போது அடிக்கும் லூட்டி, இப்போது நினைத்தால், சற்றே ஓவராக
இருந்ததோ என்று தோன்றுகிறது. அப்போது அதெல்லாம் சிந்தித்ததே கிடையாது.எல்லாம்
தமாஷ்தான். கேளிக்கைதான்.
அம்பர்நாத்திலிருந்து விடுமுறையில் பாலக்காட்டுக்குச் சென்று
வந்தது குறித்து எழுதினேன்.அங்கே அவர்கள் இருந்த வீட்டைப் பெரிதாக்கும் வேலைகள்
நடந்து கொண்டிருந்தன. அம்மாவுக்கு வந்த ப்ராவிடெண்ட் ஃபண்ட்பணம் கொண்டும், இருந்த சில நகைகளை விற்றது கொண்டு
கிடைத்த பணத்தில் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அந்த வீட்டுக்கு அருகே ஒரு மன நல
வைத்தியர்;புகழ் பெற்றவர். எனக்கு என் அப்பாவின் அத்தை மகன் என்ற உறவு..டாக்டர்
பரசுராமன் என்று பெயர். , ப்ராக்டிஸ் செய்து கொண்டிருந்தார். பக்கத்து
ஊர்களிலிருந்தெல்லாம் நோயாளிகள் வருவார்கள். அவர்கள் அங்கு தங்குவதற்கு இடம்
தேடும் நிலையில் இருந்தனர். வீட்டை சற்றே விஸ்தாரமாக்கி ஓரிரு அறைகள் வாடகைக்கு
விட்டால், கொஞ்சம் வரவு கூடும் என்ற எண்ணத்தில் துவக்கப் பட்ட வேலை. அப்போது அதில்
எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. இல்லாவிட்டால் என்ன.? பிழைக்க வேண்டாமா.?கடைசியில்
அம்மாவின் முடிவே சரியானதாகத் தெரிந்தது. நான் விடுமுறையில் சென்றிருந்த போது
பாபுவின் முதுகில் பெரிய பெரிய கட்டிகள் வந்து கஷ்டப் பட்டுக்
கொண்டிருந்தான்.ஒலவக் கோடு ஸ்டேஷன் அருகே ஓரிடத்தில் ஏதோ எண்ணை விற்கிறார்கள்
என்றும் அதை வாங்கி வரும்படியும் என்னை
அனுப்பினார்கள். நானும் வாடகைக்கு ஒரு சைக்கிள் எடுத்துக் கொண்டு. அந்த இடத்தைத்
தேடிச் சென்றேன். சென்ற என்னை வழி காண்பிப்பதாகக் கூறி ஒருவன், சற்று தூரம்
அழைத்துச் சென்று, ஒரு விட்டின் முன் நின்றிருந்த பெண்களைக் காட்டி, எனக்கு
யாரிடம் விருப்பம் என்று கேட்டான். எனக்கு கைகால்கள் எல்லாம் வெலவெலக்க விட்டால்
போதும் என்று ஓடி வந்து விட்டேன். நடந்த விஷயத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் முடியவில்லை. ஆனால்
இம்மாதிரி விஷயங்கள் நடை பெறுவதை முதன் முதலாக அனுபவத்தில் கண்டேன்.அதுவும் ஒரு
பாடமாக அமைந்தது என்றே எண்ணிக் கொள்கிறேன்.
இரண்டு வருடம் பயிற்சி முடிந்து பெங்களூர் வந்தோம். சில நினைவுகள் வரும்போது, நிகழ்ச்சிகள் நடந்த காலம் முன்னே பின்னே தோன்றுகிறது.எது எப்படி இருந்தாலும் நிகழ்வுகள் உண்மை. அனுபவங்கள் உண்மை. படிப்பினைகள் நிஜம். பெங்களூர் வந்தபோது நண்பர்கள் நாங்கள் நான்கு பேர் ஒரு வீடு வாடகைக்கு எடுத்துக் கொண்டு சேர்ந்து தங்கினோம். நான் ,பாபுல்கர்,ரவி மற்றும் அனந்தமூர்த்தி நால்வரும் வசந்த நகரில் என் பாட்டி, மாமா வீட்டுக்கு நேர் எதிரில் ஒரு வீட்டில் வாடகைக்கு வந்தோம். எந்த வீட்டின் படியை மிதிக்க மாட்டேன் என்று உறுதி கொண்டிருந்தேனோ,அதே வீட்டின் நேர் எதிரே தினமும் அவர்கள் கண் எதிரே நடமாடிக் கொண்டிருக்கும், ஒரு வாழ்க்கை விதியின் விளையாட்டு என்றே சொல்ல வேண்டும். என்னைவிட அவர்களுக்கு எம்பராஸ்மெண்ட் அதிகம் இருந்திருக்கும். மாமாவின் பிள்ளைகள் பெண்கள் எந்த ஒரு கட்டுப் பாடுமில்லாமல், எங்கள் வீட்டுக்கு வருவார்கள் விளையாடுவார்கள். அனைவரும் வயதில் சிறியவர்கள். அங்கு அடுத்திருந்த மைதானத்தில் கிரிக்கட் விளையாடுவோம். மாமா மகன் ஹரி, என் அண்ணா ஆச்சு எல்லோரும் டீம் மெம்பர்கள். கிரிக்கெட் பால், பாட், ஸ்டம்ப்ஸ் க்லவ்ஸ் பாட்ஸ் , ப்ராக்டிஸ் நெட் போன்றவை மாமாவின் உதவியால் வாங்கப் பட்டன. கிரிக்கெட் விளையாட்டில் எங்கள் டீமின் பெயர், விஜய் கிரிக்கெட்டர்ஸ். அந்தக் காலத்தில் எங்கள் டீமில் விளையாடிய ஓரிருவர், ஜீவராஜ் ஆல்வா போன்றோர் அரசியலில் ஈடுபட்டு பெயர் பெற்றவர்களாய் விளங்கி னார்கள்..எங்கள் டீமின் பயிற்சி தினமும் மாலை 4 1/2 முதல் 6-/ மணிவரை நடக்கும். வார இறுதி நாட்களில் வெவ்வேறு இடங்களில் மற்ற டீம்களோடு மாட்ச் நடக்கும். விளையாட்டில் வெகுவாக ஈடுபட்டிருந்த காலம் அது. நான் வசிக்கும் இடம் மாறிய பிறகும் அங்கிருந்து வந்து பயிற்சியிலும் மாட்ச்சுகளிலும் பங்கு கொண்டிருக்கிறேன்.
HAL ல் எங்களை AERO ENGINE DIVISION ல்
பணிக்கு அமர்த்தினார்கள். நாங்கள் பயிற்சி முடிந்து வந்த நிலையில் ஏரோ எஞ்சின்
டிவிஷனில் எதுவும் தயாரிப்பிலிருக்க வில்லை, ஏன், மெஷின் போன்ற தளவாடங்களே வராத
நிலையிலாதியிலிருந்து எல்லாப் பணிகளிலும் பங்கு கொண்டோம். எந்த மெஷின் எங்கு வரும்
போன்ற லே அவுட் எல்லாமே நாங்கள் செய்ததே. எங்களுக்கு மெஷின் செட்டர் என்று பெயர்
கொடுத்தாலும் எங்களை முதல் நிலை மேற்பார்வையாளர்கள் என்று அறிவித்திருந்தாலும்,
அங்கிருந்த மேலதிகாரிகளுக்கு எங்களை அப்படி ஏற்றுக் கொள்ள மனமிருக்க வில்லை.
நாங்கள் இன்னும் அடி மட்டத்திலிருந்து வர வேண்டும், எங்களுக்கு அனுபவம் என்பது
ஏதுமில்லை என்ற காரணங்களினால்,அங்கு வந்த மெஷின்களை நாங்களே இயக்கிப் பயிற்சி பெற
வேண்டும் என்று விதித்தார்கள். நிறைய ஸ்பெஷல் மெஷின்கள் இறக்குமதி செய்யப்
பட்டிருந்தன. அனுபவம் வேண்டி தொழிலாளர்களாகவே நடத்தப் பட்டோம். இன்று அதை நினைவு
கூர்ந்து பார்க்கும் போது, அதனால் நாங்கள் பலனடைந்ததாகவே தெரிகிறது..எங்கள் மேலும்
எங்கள் திறமை மீதும் நம்பிக்கை வளர்ந்தது..அது எங்கள் பிற்காலத்துக்கு நல்ல
அஸ்திவாரமாக இருந்தது.
ஆரம்ப காலத்தில் நடைபெற்ற ஒன்றிரண்டு சம்பவங்கள் நினைவு கூர்கிறேன்.பிரிஸ்டல் சிடெலி எஞ்சின்ஸ் என்ற இங்கிலாந்து கம்பெனியுடன் ஒப்பந்தம்செய்யப் பட்டு, நாங்கள் போர் விமானத்துக்கு வேண்டிய ஆர்ஃபியுஸ் எஞ்சின்ஸ் உற்பத்தி செய்ய வேண்டி இருந்தது. அந்த சமயத்தில் பாரதப் பிரதமர், திரு. ஜவஹர்லால் நேரு அங்கே வருகை தந்தார். பாரதப் பிரதமரை வெகு அருகில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடைய வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் கூட வந்திருந்தவர்கள் தவித்து விட்டனர். அவரது மார்பக அளவு சிலையை,சிறிய சைஸில் எங்களிட மிருந்த காப்பியிங் மெஷினில் தயாரித்து அவருக்குப் பரிசாகக் கொடுத்தோம். ஒரு தொழிலாளி, அவரைப் படம் வரைந்து அவரிடம் ஆட்டோகிராஃப் கேட்க அருகே செல்ல, முதலில் தடுத்து நிறுத்தப் பட்டு பிறகு கையெழுத்து வாங்கினார். அங்கிருந்த மெஷின்களைப் பற்றியும், அவை செய்யக் கூடிய வேலைகள் பற்றியும் கவனமாகக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.இந்தக் காலத்தில் பாதுகாப்பு கெடுபிடிகளால் தலைவர்களை அருகில் இருந்து காண்பதே கடினம்.
HAL-ல் ஆயுத பூஜை விமரிசையாகக் கொண்டாடப் படும்..அதற்கென்று ஒரு
தொகையைக் கம்பெனி தரும். தொழிலாளர்கள் தங்கள் திறமையைக் காட்டி தயாரிக்கும்
பொருட்கள் காட்சிக்கு வைக்கப் படும். ஏரோ எஞ்சின் ஃபாக்டரியில் அந்த வருடம் முதல்
ஆயுத பூஜை. இங்கிலாந்திலிருந்து வந்திருந்த வெள்ளைக்கார அதிகாரிகளுக்குப்
பெருமையாகக் காட்டிக் கொள்ள, இந்த பண்டிகையை உபயோகிக்க நினைத்தனர் நம் அதிகாரிகள்.
ஆயுத பூஜை நிறைவாகக் கொண்டாட ஒரு குழு நியமிக்கப் பட்டது. அதில் நானும் பங்கு
பெற்றிருந்தேன். பூஜை நடக்கும் போது வெள்ளைக் கார அதிகாரிகளுக்கு மாலை போட்டு
மரியாதை செய்ய முடிவெடுத்தனர். நம் இந்திய அதிகாரிகள். எனக்கு அதில் உடன்பாடு
இல்லை. நாம் தெய்வமாக நினைத்து தொழிலுக்குச் செய்யும் மரியாதை, மனிதர்களுக்குக்
கூடாது என்று வாதிட்டு, அதற்காக மாலைகள் வாங்கக் கூடாது என்றும் வாதிட்டோம்.
அதனால் எனக்குக் கிடைத்தது கெட்ட பெயர் மட்டுமே. அவர்கள் தனிப் பட்ட முறையில்
செலவு செய்து ஆங்கிலேயர்களுக்கு மாலையிட்டு மகிழ்ந்தனர். அந்தக் காரியங்களை
நாங்கள் பகிஷ்கரித்தோம். HAL-- ல் என் பெயர் ரிபேர் ஆனதற்கு அது அடிக்கல்
நாட்டியது போல் இருந்தது.
வேலைகள்
எல்லாம் கற்றுக் கொண்டு, இரண்டு ஷிஃப்டுகளில் மாறி மாறி வந்து ,அது ஒரு
வாடிக்கையான காரியமாக, குறிப்பாக பிரஸ்தாபிக்க ஏதுமில்லை என்ற கதியில் வ்ண்டி
ஓடிக் கொண்டிருந்தது.
அம்மா தம்பிகளை
பெங்களூர் அழைத்து வந்து, அவர்களை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டிய பொறுப்பு
எனக் கிருந்தது. என் சகோதரர்கள் இதில் ஈடுபாடு காட்ட வில்லை. ஆரம்பத்தில் சோமா
எனக்கு உறுதுணையாய் இருப்பேன் என்று கூறி பிறகு பின் வாங்கி விட்டான். இதன் நடுவே
நாங்கள் வசந்த நகர் வீட்டிலிருந்து மாறி அவரவர் வழிப்படி ஹோட்டல்களிலும்
ரூம்களிலும் தங்கத் துவங்கினோம். நான் ஸ்ரீதருடைய கோமள விலாஸில் தங்கத்
துவங்கினேன். ரவி வீரப் பிள்ளைத் தெருவில் ஒரு ரூமிலும் தங்க ஆரம்பித்தான்.
பாபுல்கர், கிருஷ்ணன் குட்டி, போன்றோர் எங்கு சென்றனர் என்பது நினைவுக்கு
வரவில்லை.
இந்தகால கட்டத்தில் ஒரு நாள் நான் என் தமக்கை ராஜியின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர்கள் அப்போது மாரத்த ஹள்ளியில் குடியிருப்பில் தங்கி இருந்தார்கள். நான் அங்கிருந்த நேரத்தில் குறி சொல்லும் ஒருத்தி அங்கு வந்து குறி சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் சொல்வது கிட்டத்தட்ட சரியாக இருந்ததுபோல் தோன்ற நானும் என் கையை நீட்டினேன். அவள் குறி சொல்லும்போது என் குணாதிசயங்களோடு கூடவே சொன்ன செய்தி என்னை மிகவும் பாதித்தது. நான் இன்னும் ஓரிரு மாதங்கள்தான் உயிர் வாழ்வேன் என்று ஆருடம் கூறினாள். நான் இல்லாவிட்டால் அம்மா, தம்பிகளின் நிலை குறித்து எண்ணி என் மனம் கவலைக்குள்ளாகியது.என் இழப்பை ஈடுசெய்ய ஒரு பெரிய தொகைக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதே சிறந்தது என்று தோன்றி,ரூ.10,000-/ க்கு ஒரு பாலிசி எடுத்தேன். மாதம் ரூ.25-/ ப்ரீமியம் கட்ட வேண்டும். அப்போது எனக்கிருந்த மன நிலைக்கு அது சரியாகப் பட்டது. ஓரிரு மாதங்கள் கட்டினால் போதும்.பிறகு நான் தான் இறந்து விடுவேனே. பலனை அவர்கள் அனுபவிக்க வேண்டித் துணிந்து விட்டேன். நான் மாதாமாதம் ரூ.25-/என்ற விதத்தில் பணம் கட்டி, கட்டி, கட்டி ஒரு கட்டத்தில் என்னால் முடியாமல் போய், பாலிசி லாப்ஸ் ஆகி, நான் கட்டிய 16 மாதப் பிரிமியம் பணம் ரூ400-/ எள்ளானதுதான் நான் என் அறியாமைக்கு கொடுத்த விலை.
அம்மாவுக்கு
என்னோடு பெங்களூர் வருவதில் முதலில் கொஞ்சம் தயக்கம் இருந்தது. குஞ்சுகுட்டி
அம்மாளுக்கு அறவே விருப்ப மிருக்க வில்லை. பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை
அவர்கள் முடிவை மாற்றியது. பெங்களூர் வர சம்மதிக்க வீடு பார்க்கும் படலம்
துவங்கியது. பல கஷ்டங்களுக்குப் பிறகு வீடு அமைந்தது..நாதமுனி என்ற ஒரு நண்பனின்
வீடு. பழயதாய் இருந்தாலும் வசதிகள் இருந்தது. வாடகை மாதம் ரூ.55-/. என் நிலைக்கு
அது அதிகமாயிருந்தாலும், தேவை உத்தேசித்து ஏற்பாடு செய்து விட்டேன்.
நடராஜன் பாபு இவர்களை பள்ளியில் சேர்க்கவும் கொஞ்சம் சிரமப் பட்டேன்.அப்படி இப்படிப் பேசி என் அப்பாவின் சித்தப்பா, அவரை குஞ்சப்பா என்றழைப்போம்,ஆர்.பி.ஏ. என்.எம். பள்ளியில் கணக்காசிரியராய் இருந்தவர்,அவருடைய உதவியால் இடங்கிடைத்தது..சந்துரு, விச்சுவை, சிவாஜிநகர் புனித மேரிஸ் சர்ச்சில் உள்ள ஆரம்பப் பள்ளியில் சேர்க்கவும் முடிவாயிற்று.இவ்வளவு நாட்கள் கழித்து இவற்றை இரண்டே வரிகளில் எழுத முடிகிறது.ஆனால் அந்தக் காலத்தில் அதைச் செய்து முடிக்க நான் நிறையவே சிரமப் பட வேண்டி இருந்தது.
மாதம் ரூ.55-/க்கு வீடு வாடகையாக
எடுத்துவிட்டாலும், எனக்கு அது சிரமமாக இருந்ததால், வீட்டில் ஒரு அறையை,என்
நண்பர்கள் அமானுல்லா, மற்றும் வேணுகோபாலுக்கு சப் லெட் செய்ய, நான் மாதம் ரூ.35-/
கட்டினால் போதுமாயிருந்தது.
ட்ரெயினிங்
முடித்து ஓரிரு வருஷங்கள் ஆனபிறகே, அம்மாவையும் தம்பிகளையும் கூட்டிக் கொண்டு வர
முடிந்தது.எனக்கு எவ்வளவோ கஷ்டங்கள் இருந்தாலும் என்னுள் ஒரு மலர்ச்சி
ஏற்படுத்தியது பேபியே. பேபி யாரோ அல்ல. என் மனைவியாய் பின் வந்தவள்..கமலா அவள்
பெயர். நான் வைத்த பெயர் சாந்தி. எங்கள் திருமணம் நடக்கும் முன், நான் அவளைப்
பார்த்தது, பழகியது, மணந்தது, என்று சற்று விரிவாக எழுத வேண்டும்.
நான் முதன் முதலாய் சாந்தியை ( அப்போதைய கமலா, பேபி ) பார்த்தது ஸ்ரீதரனுடைய கோமள விலாஸ் ஹோட்டலில். அவர்கள் வீட்டிற்கு ஓட்டலில் இருந்துதான் உணவு எடுத்துச் செல்லப் படும்.அதைக் கொண்டு செல்ல சில சமயங்களில் அவள் வருவாள். நான் அங்கு உணவருந்தும் வேளைகளில் அவள் வந்து சமயங்களில் அவள் வருவாள். நான் அங்கு உணவருந்தும் வேளைகளில் அவள் வந்து செல்லும்போது, ஏதோ ஒன்றால் ஆகர்ஷிக்கப்பட்டு, என் பார்வை அவளிடம் செல்லும். அது 1960-ம் வருஷ நடுவில் இருக்கும் என்று எண்ணுகிறேன். எனக்கு 22-/ வயது நடந்து கொண்டிருந்தது.அவளுக்கு பதினைந்து வயசிருக்கலாம்.வயசுக் கோளாரால் ஏற்படும் ஈர்ப்பு என்று சொல்ல முடியாது.,காதலா என்றும் தெரியாது. அவள் வயசில் சின்னவள். எங்கள் கண்கள் பேசிக் கொண்டன என்று பொய் சொல்ல முடியாது. ஆனால் அவளைப் பார்த்ததும் இவள் எனக்குத்தானோ என்ற எண்ணம் ஏற்பட்டது உண்மை. என் நண்பன் ஸ்ரீதரனின் அக்காள் மகள் என்று கூட எனக்கு அப்போது தெரியாது. ஒன்று மட்டும் நன்றாக நினைவிருக்கிறது. நாங்கள் நண்பர்கள் கோமள விலாஸ் முன்னே நின்று பேசிக் கொண்டிருக்கையில்,என் நண்பன் டேவிட், அவள், அவள் வீட்டின் முன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து யாரந்த அழகி என்று விசாரித்தான்.எனக்குக் கோபம் கோபமாக வந்து நான் அவனைக் கடிந்து கொண்டேன். அவனுக்கு விஷயம் தெரியாமல் என்னை ஏதோ பித்துப் பிடித்தவன் என்பது போல் பார்த்தான். பிறகுதான் நான் யோசிக்க ஆரம்பித்தேன். யாரோ ஒரு பெண்ணைப் பார்த்து யாரோ அழகு என்று சொன்னால் எனக்கு ஏன் கோபம் வர வேண்டும். என் உள்ளத்தில் அவள் எனக்குரியவளென்ற எண்ணம் ஆழப் பதிந்திருக்க வேண்டும்.அதற்குப் பிறகு எனக்கு அவளை வெறுமே பார்ப்பதிலேயே ஒரு மகிழ்ச்சி ஏற்படத் துவங்கியது. பார்க்கா விட்டால் மனசு ஏங்க ஆரம்பித்து விட்டது. என்னுள் ஏற்பட்ட அந்த ரசாயன மாற்றம் அவளுள் ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. மணந்தால் அவளை மணப்பது என்று என்னுள் தீர்மானித்துக் கொண்டேன். எதையும் திட்ட மிட்டுச் செய்ய வேண்டும், திட்டமிட்டதைச் செய்ய வேண்டும் என்ற கொள்கையுடையவன் நான். என்னை நான் அவர்கள் குடும்பத்துக்கு பிடித்த மானவனாகவும், நல்லவனாகவும் அறியப் பட வேண்டும் என்பதில் குறியாக இருந்தேன். திருமணம் உடனே செய்து கொள்ளும் நிலையில் நானிருக்கவில்லை.
அம்மாவையும் தம்பிகளையும் பெங்களூர் கூட்டிக் கொண்டு வந்து இரு குடும்பங்களும் பழக வழி செய்தால் எண்ணப் பரிமாற்றங்களுக்கு வழி வகுக்கலாம். அம்மாவும் தம்பிகளும் வரும்போதே அவர்கள் வீட்டில் இறங்குவதாக ஏற்பாடு செய்திருந்தேன். இரு குடும்பங்களும் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ள வாய்ப்பாயிற்று. அம்மாவுக்கு முதலில் அவ்வளவு விருப்பம் இருக்க வில்லை. அவர்களுக்குப் பயம். மலையாளப் பெண்ணை ப்ளான் செய்து மண முடிக்கிறார்கள் என்ற பழி வருமே என்று. இருந்தாலும் என் சுபாவம் தெரிந்து தடை ஏதும் சொல்லவில்லை (தொடரும்)
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குநன்றி
நீக்குமுதல் காதலை அருமையாக விவரித்து உள்ளீர்கள்...
பதிலளிநீக்குஓ அப்படியா
நீக்குகாதலிக்க நேரமில்லை. ஆயினும் காதல்
பதிலளிநீக்குகாதல் மலர்ந்த விதம்
பதிலளிநீக்குஉங்களை கவர்ந்தவரைப் பற்றி அழகாக சொல்லுகிறீர்கள்.
பதிலளிநீக்குஅவளும் அழகுதான்
நீக்குசார் நீங்கள் சொல்லும் விதம் மிகவும் நன்றாக இருக்கிறது. வெளிப்படையாகவும் இருக்கிறது. ஆர்வத்துடன் வாசிக்கிறேன்.
பதிலளிநீக்குஅந்த வயதிலேயே உங்கள் காதலில் உறுதியாக இருந்தது என்பது உங்களின் அனுபவங்களினால் விளைந்த மனப்பக்குவமும், பொறுப்புணர்வும்.
அடுத்த என்ன என்று அறிய ஆர்வம் மேலிடுகிறது.
கீதா
அடுத்த என்ன என்று அறிய ஆர்வம் மேலிடுகிறது.
பதிலளிநீக்குகீதா இந்நிகழ்ச்சிகள் முடிந்து ஆகிறது 58ஆண்டுகள்
நானிடும் கமெண்ட் மட்டும் காணாமல் போவது வெறுப்பாயிருக்கிறது. ஸ்பாமில் தேடிப்பார்க்கவும்!
பதிலளிநீக்கு