மறு நாள் என் நியமன உத்தரவுடன் எச்.ஏ.எல்.சென்று பர்சனல்
டிபார்ட்மெண்டில் காண்பிக்க, அவர்கள் நான் அங்கு சேரும்போது நிறுவனத்துடன் ஒரு
பாண்டில் கையெழுத்திட வேண்டுமென்றும், அதற்கு என் தந்தையின் ஒப்புதலும்
வேண்டுமென்றும் கூறினார்கள். மூன்று வருடப் பயிற்சி ஒப்பந்தம் பயிற்சி முடிந்தபின்
பீ. மெகானிக் பதவி நியமனம், பயிற்சி முடிந்தபின் 5-/ வருடம் பணியில் இருப்பேன்
என்று உத்தரவதம்,மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பல ஷரத்துக்களுடன் கூடிய ஒப்பந்தப்
பத்திரத்தைக் கொடுத்தனர். அங்கு பர்சொனல் டிபார்ட்மெண்டில் இருந்த ஒருவரென் மாமா
சேஷனைப் பற்றி விசாரித்தார். அவர் விசாரித்த தோரணை எனக்குப் பிடிக்காததால் நான்
விட்டேத்தியாக பதில் கூறினேன். நான் எச்.ஏ.எல். பயிற்சிக்குத் தேர்வானது அங்கு
சேருவது பொன்ற செய்திகள் என் சகோதரி மூலம் என் மாமாவுக்குத் தெரிந்து, அவர்களுடைய
நண்பராக இருந்த பர்சொனல் டிபார்ட்மெண்ட் அதிகாரி என்னை விசாரித்திருக்கிறார்.
என்று பிற்பாடு தெரிந்து கொண்டேன். மறுநாளிலிருந்து எஸ்.ஜே. பாலிடெக்னிக் செல்ல
வேண்டுமென்றும் , மதியம் 12- மணிமுதல் இரவு 8-/ மணி வரை அங்கு பயிற்சி என்றும் அறிவிக்கப்பட்டோம்.
அதில் மதியம் 12-/ மணி முதல் மாலை 4-/ மணி வரை வகுப்பறைப் பாடங்கள் என்றும், மாலை
4-/ மணி முதல் இரவு 8-/ மணி வரை ப்ராக்டிகல் ட்ரெயினிங் இருக்கும் என்றும்
கூறினார்கள். எச்.ஏ.எல்.-ல்பயிற்சிப் பள்ளியில் பயிற்சிக்கான மெஷின்களோ வசதிகளோ
இல்லாதிருந்ததால் இந்த அணுகு முறை. ஆறு மாதம் பயிற்சி முடிந்தபிறகு, தொழிற்சாலையில்
எல்லா பிரிவுகளிலும் பயிற்சியுடன் பணி புரியும் வாய்ப்பும் தரப்படும் என்றும்
அறிந்தோம்.
மாலை லாட்ஜ்
அறைக்குள் வருவதற்குள் எனக்கு மிகவும் அலுப்பாகவும் ஆயாசமாகவும் இருந்தது. நான்
ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும்போது, என் மாமா டாக்டர் சேஷன், அம்பி மாமா என்று
சொல்லப்படும் சுப்பிரமணியம் மாமா, மற்றும் ஆச்சு அண்ணா, மூவரும் என் அறைக்கு
வந்தார்கள். நான் எதிர்பார்க்காத ஒன்று. நான் என் தந்தைக்கு எழுதி வைத்திருந்த
கடிதம் மேசை மேல் இருந்தது. அதனை என் அண்ணா படிக்கத் துவங்கினான். என் மாமா என்
ட்ரெயினிங் பற்றிய எல்லா விவரங்களையும் கேட்டுக்கொண்டு, பிறகு எனக்கு வரும்
சம்பளம் எனக்கே போதாமல் இருக்குமென்றும், என் தந்தைக்கு உதவி செய்யப் போய்
கஷ்டப்படாமல் இருக்குமாறும் அறிவுரைகள் கூறினார். அது எனக்கு முற்றிலும்
பிடிக்கவில்லை. நான் மிகவும் டயர்டாக இருப்பதாகக் கூறி உறங்க விரும்புகிறேன்
என்றும் நாகரீகமாக நான் அந்த சம்பாஷணையை விரும்பவில்லை என்று தெரியப் படுத்தினேன்.
இப்படி நான் இந்த விஷயங்களை விலாவாரியாக எழுதக் காரணம் , சில சம்பவங்கள் நம் வழ்க்கையின் போக்கை நிர்ணயிக்கின்றனஎன்பதை விளக்கவேயாகும். நான் ப்போது வேலைக்குச் சேருவேன், எப்போது என் தந்தையின் சுமையை ஓரளவுக்காவது குறைப்பேன் என்று எண்ணிக்கொண்டிருக்கையில், என் மாமாவுடைய அந்தப் பேச்சு,என் முடிவை திசை திருப்ப முயற்சி என்றே எனக்கு அப்போது தோன்றியது. ஏற்கெனவெ என் ஆச்சு அண்ணா,எவ்வளவு பாசமுடனும் நேசமுடனும் இருந்தவன் சற்றே திசை மாறி என் தந்தைக்கு உதவுவதை நிறுத்திக் கொண்டான்
என்றால், அதற்கு இம்மாதிரியான போதனைகளே காரணமாக இருந்திருக்க
வேண்டும். என்னையும் அந்த வழியில் செல்ல எடுத்த முயற்சியோ என்று எனக்கு தோன்றியது.
அதற்கு சில
நாட்களுக்குள் அப்பாவிடமிருந்து வந்த கடிதம் அவருக்கு என்னைப் பற்றிய கவலைகளை
வெளிப்படுத்துவதாக இருந்தது. பெர்சொனல் டிபார்ட்மெண்டில் இருந்த என் மாமாவின்
நண்பர், என் குணம் நடவடிக்கைகள் சரியில்லை என்றும், அப்படியே தொடர்ந்தால், என்னை
வேலையிலிருந்தே நீக்கி விடுவார்கள் என்று கூறியதாகவும் அவருக்கு ஆச்சு அண்ணா
கடிதம் மூலம் தெரிவித்ததாகவும் அப்பா கடிதத்தில் எழுதியிருந்தார். நான் அவருக்கு
விளக்கமாக கடிதம் எழுதி சமாதானப் படுத்தினேன். மேலும் நான் அவரிடம் அவர்
பெங்களூருக்குப் பணி மாற்றம் கேட்டுப் பெற முடியுமாஎன்றும் முயற்சி
செய்யும்படியும் கேட்டு எழுதி இருந்தேன்.
அந்தக்
காலத்தில் நடந்த கடிதப் பரிமாற்றங்களை, இன்றும் நான் வைத்திருக்கிறேன். அவை
அப்பாவின் மன வெளிப்பாடுகளைக் கூறுவதாயும்
இப்படியாக நான் பயிற்சியில் சேர்ந்து வாழ்வின் இன்னொரு அத்தியாயத்துக்குள் காலடி வைத்தேன். என்னுடன் அந்த அறையில் இன்னும் இருவர் இருந்தனர்.அதில் ஒருவர் பெயர் சந்திரசேகரன்.பின்னி மில்லில் வேலையிலிருந்தார்.தந்தை மறுமணம் செய்த மாற்றாந்தாயின் கொடுமைகளுக்கு ஆளானதை சொல்லும் அவருக்கு எனக்கிருந்த மாற்றாந்தாயைப் பற்றி நான் உயர்வகப் பேசுவதை நம்புவது கஷ்டமாயிருந்தது. மற்றவர் பெயர் வாசுதேவன். கேரளக்காரர்.பெங்களூர் வந்து வேலை தேடிக்கொண்டிருந்தார். அவருக்கு செலவுக்கு ஊரிலிருந்து பணம் வரவேண்டும். நான் அந்த லாட்ஜில் இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட வேண்டும்.வாசுவுக்கு வீட்டிலிருந்து பணம், வரத் தாமதமாகி ஒரு முறை அவனால் லாட்ஜ் வாடகை கொடுக்க முடியவில்லை. அறையைக் காலி செய்ய ஓட்டல் முதலாளி கூறினார்.அதற்கு முன் வாசு தன் உடைமைகளைப் பார்த்துக் கொள்ளும்படியும், வாடகைப் பணம் கட்ட வரும்போது அதை அவன் என்னிடமிருந்து எடுத்துக் கொள்வதாகவும்கூறிப் போனான். அவனை ஓரிரு தினங்கள் காணாமல் அவனது பெட்டியைப் பறிமுதல் செய்ய ஓட்டல் முதலாளி என் அறைக்கு வந்தார். நான் அது தற்சமயம் என் பாதுகாப்பில் இருப்பதால் அதனை அவர் எடுக்கக் கூடாது என்று தடுத்தேன். அவருக்கு என் மேல் கோபம் அதிகமாகி காலையில் குளிக்க வென்னீர் தருவதை நிறுத்தினார். சிற்றுண்டி சாப்பிடும்போது குடிக்க நீர் தரமாட்டார். எப்படியும் என்னையும் அறையைக் காலி செய்ய்விக்க முயற்சிகள் மேற்கொண்டார். எந்த ஒரு செயலையும், பிற்பகல் விளையும் பலன்களை அதிகம் யோசிக்காமல் எந்த பயமும் இன்றி செயல்களை செய்து வருபவனாக நான் இருந்தேன். தவறு செய்பவர் தண்டிக்கப் பட வேண்டும் என்று உறுதியாய் இருந்தேன். என் பக்கம் எந்தத் தவறும் இல்லாதிருக்கையில் எனக்கு க் கஷ்டங்கள் கொடுத்த அந்த லாட்ஜ் முதலாளி மீது கமர்ஷியல் ஸ்ட்ரீட் பொலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தேன்.அந்த இன்ஸ்பெக்டருக்கு என்னைப் பார்த்ததும் ஒரு பரிவு உண்டாகி இருக்க வேண்டும். என்னிடம் கவலைப் பட வேண்டாம் என ஆறுதல் கூறியவர், இரண்டு பொலீஸ்காரர்களை லாட்ஜுக்கு அனுப்பி அந்த முதலளியை வரவழைத்து அவரைக் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தார். இதனால் ஓட்டல் முதலாளி என் மேல் கோபம் அதிகமாகி இருந்தார். அவரை நான் அவமானப் படுத்தி விட்டதாக நினைத்தார். நானும் சுமூக நிலை வராது என்று உணர்ந்து சிறிது நாட்களில் அங்கிருந்து விலகி வேறு ஒரு லாட்ஜில் சில நாட்களும் அதன் பிறகு என் நண்பன் ஸ்ரீதரனின் லாட்ஜ் கோமள விலாஸிலும் தங்கினேன். இவ்வளவு நாட்களுக்குப் பிறகு அந்த சம்பவங்களை நினைத்துப் பார்க்கையில் நான் இளங்கன்று பயமறியாது என்ற படியும், கூடுதலாக இம்பல்ஸிவ்வாக இருந்திருக்கிறேன் என்றும் தெரிகிறது.
காலைநேரங்கள் வியப்பாகவே இருக்கும். புகை பிடிக்கும்
பழக்கத்தை எனக்குக் கற்றுக் கொடுத்தவன் என்னைவிட சுமார் ஒன்றரை வயது இளையவனான என்
தம்பி சோமநாதந்தான். நாங்கள் வெல்லிங்டனில் இருந்தபோது, பள்ளியிறுதிப் படிப்பு
முடிந்து சும்மா இருந்தபோது அவன் சிகரெட் பிடிப்பதைக் கண்ட என்னையும்
தூண்டிவிட்டு, புகை பிட்க்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுத்தான். அவன் ஆரம்பத்தில்
ஸ்டார் சிகரெட்களை வாங்கிப் புகைத்ததாக நினைவு. விடுமுறைக்கு பெங்களூர்
சென்றிருந்தபோது என் சகோதரி ராஜியின் மைத்துனன் கங்காதரன் எனக்கு சைக்கிள் ஓட்டக்
கற்றுக் கொடுத்ததும் நான் சைக்கிள் ஓட்டப் பயின்ற இடம் தற்போது ஜனத்திரளும்
சந்தடியும் வண்டி ஓட்டங்களும் மிகுந்திருக்கும் சிவாஜி நகர் பஸ் ஸ்டாண்ட் இருக்குமிடமாகும்..அப்போது ஒன்றுமே இல்லாத
திறந்த வெளியாக இருந்தது.மறுபடியும் எண்ணங்கள் தடம் மாறி வேறு நினைவுகளைக் கொண்டு
வருகிறது.
நாங்கள் நடந்து செல்லும் பாதையில் பெங்களூர் ஹெட் போஸ்ட் ஆஃபிஸ் இருந்தது. நான் பதினைந்து ரூபாயுடன் பெங்களூர் வந்து தங்கினாலும் என் செலவுக்குப் பணம் தேவைப் பட்டது. அப்பா எனக்குப் பணம் அனுப்ப வேண்டுமானால் நான் அதை எப்படிப் பெறுவது.? என் பயிற்சி நேரம் மதியம் 12- மணி முதல் இரவு 8-/மணி வரை. சுமார்பதினொன்று பதினொன்றரை மணிக்கு நான் என் இருப்பிடத்தை விடுவேன். போஸ்ட் மேனைப் பார்க்க முடியாது. மேலும் என்னுடைய ஒப்பந்தப் பத்திரங்கள் அப்பாவின் கையெழுத்தாகி எனக்கு வர வேண்டும். அதை அவர் ரெஜிஸ்தர் தபாலில் அனுப்ப வேண்டும்..இதையெல்லாம் யோசித்து நாங்கள் போகும் வழியில் இருந்த தலைமைத் தபால் நிலைய போஸ்ட் மாஸ்டரை அணுகி, எனக்கு வரும் தபால்களை என் அப்பா c/o postmaster என்று அனுப்புவார் என்றும் ,அவரிடமிருந்து நான் அதைப் பெற்றுக் கொள்கிறேன் என்றும் வேண்டிக்கொண்டேன். அவரும் ஒப்புதலளிக்க எனக்கு வரும் தபால்கள் என் பெயரிட்டு C/O POST MASTER என்று வரத் தொடங்கியது. இந்தக் காலத்தில் அப்படிச் செய்ய முடியுமா என்று தெரிய வில்லை. பிறருக்கு உதவும் எண்ணங்கள் கொண்ட மக்கள் ஊழியர்கள் ( பப்ளிக் செர்வண்ட்ஸ் )இருந்த காலம் அது. நான் பெங்களூரில் இருந்து கடிதம் அனுப்பினால் அது மறு நாள் வெல்லிங்டனில் பட்டுவாடா ஆகும். எனக்கு வந்த ஒரு கடிதத்தில் அப்பா ஒருமுறை நான் எழுதிய கடிதம் மூன்றாம் நாள் கிடைத்ததாகக் கூறி ஆதங்கப் பட்டிருந்தார். இப்போது தபால்கள் ஒரு வாரம் ஆனாலும் கிடைக்கிறதா என்று கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால் தற்காலத்தில்ஆனால் தற்காலத்தில் தபால் சேவையின் முக்கியத்துவம் மிகவும்குறைந்து விட்டது. பயிற்சி வகுப்புகளில் இருந்து விலகாமல் ,விடுமுறை எடுக்காமல், எனக்குப் பெற வேண்டிய தபால் மற்றும் மணி ஆர்டர்களை நான் பெறுவதற்கு செய்த உத்திதான் இந்த C/OPOSTMASTER விவரம்.
பயிற்சியில்
நான் கற்றுக் கொண்டதெல்லாமே எனக்குப் புதியது. கொஞ்சம் கொஞ்சமாக என்னை இன்னுமொரு
உலகுக்கு அறிமுகப் படுத்தியது பயிற்சியும் அந்த நாட்களும்தான்
நான் அப்பாவுக்கு பணி மாற்றம் வாங்கிக் கொண்டு பெங்களூர் வர
வேண்டுமென்று கடிதத்துக்கு மேல் கடிதம் எழுதிக் கொண்டிருந்தேன்.அவரும் உண்மையாகவே
முயற்சி செய்து கொண்டிருந்தார். பணி மாற்றம்கிடைக்கும் வாய்ப்பு கூடுதல் ஆக உள்ளது
என்றும் அவரும் எழுதியிருந்தார்.அது விஷயமாக ஒரு முறை பெங்களூர் வந்திருந்தார்.
நான் அப்போது ஸ்ரீதரன் வீட்டார் நடத்திக் கொண்டிருந்த கோமள விலாசில் தங்கிக்
கொண்டிருந்தேன். ஒரு அறையில் நான்கைந்து பேர்களில் நானும் ஒருவன். அவர் பெங்களூர்
வந்திருந்தபோது வேறெங்கும் போகாமல் என் அறையில் என்னுடனெ தங்கினார். நான் இதைக்
கூறுவதன் காரணமே அவருக்கு என் மேல் இருந்த அன்பின் வெளிப்பாடாகவே கருதினேன் என்று
குறிப்பிடத்தான்.அவருடைய மாமனார் மாமியார் வீடு மட்டுமின்றி, அவருடைய பெண் புகுந்த
வீடு இருந்தும் என்னுடன் ,அவர் வளர்ந்த முறைக்கு சற்றும் ஒட்டாத சூழலான ஒரு நான்
வெஜிடேரியன் ஒட்டலில் நான்கு பேருடன் மேலும் ஒருவராக அவர் தங்கியது அவருக்கு என்
மேல் இருந்த அன்பின் வெளிப்பாடில்லாமல் வேறென்ன இருக்க முடியும்.?அசைவ உணவுக்
கூடத்தில் அவரை உண்ண வைப்பதில் எனக்கு எந்தவித சங்கோஜமும் இருக்கவில்லை. அதை நான்
ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. ஆனால் அவருக்கு அது சற்றும் ஒவ்வாத சூழல்., என்று
இப்போது உணருகிறேன். அவரை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற ஆவலில் அவரை ஒரு
சினிமாவுக்குக் கூட்டிச் சென்றேன். COURT JESTER
என்ற படம். DANNY KAYE நடித்தது
என்று நினைவு. அதிகம் சினிமா எல்லாம் செல்லாத அவரும் அதை
விரும்பி ரசித்தார். வாழ்க்கையில் சில கணங்கள் மறக்க முடியாதவை.
எண்ணங்கள் தொடர்பில்லாமல் தொடர்ந்தாலும் அவற்றைப் பதிவு செய்யும்போது ஒரு தொடர்ச்சி இருந்தால்தான் நன்றாயிருக்கும். இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு சம்பவம் நடந்த கால கட்டம் சில சமயம் தெளிவில்லாமல் போய்விடுகிறது. எப்படி இருந்தாலும் பதிவுகள் உண்மையை உணர்த்த வேண்டும். என்பதில் உறுதியாக இருக்கிறேன்.முதல் ஆறு மாத காலத்தில் கற்றுக்கொ
கற்றுக்கொண்டது எல்லாமே புதியதாய் இருந்தது. பொறியியல் வாழ்வின் ஆரம்பப் படிக்கட்டுகள் அவை. மெகானிக் என்றால் எதோ காரின் அடியில் எதையோ செய்பவரின் நினைவுதான் வரும் என்றிருந்தது போக பொறி இயலின் மற்ற பரிமாணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கிய காலமது. காலையில் சிற்றுண்டி முடித்துவிட்டு செய்ண்ட்.ஜான்ஸ் ரோடில் ஒரு தெரிந்தவருடன் வசித்து வந்த சுந்தரேஸ்வரனுடன், டிக்கென்சன் ரோட், இன்ஃபண்ட்ரி ரோட், பி.ஆர்.வி. தியேட்டர் வழியாக நேரே சென்று, கப்பன்பார்க்கில் நுழைந்து செண்ட்ரல் காலேஜ் அருகே எஸ்.ஜே. பாலிடெக்னிக் வரை நடந்து செல்லும்பொது எங்களுக்குள் ஏற்பட்ட நட்பு இன்றுவரை நீடிக்கிறது. நட்பு என்றால் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து கொள்வது, குடும்பப் பின்னணி புரிவது என்ற அளவோடு மட்டுமே இருந்தது. ஒருவருடைய அந்தரங்கத்தை ஆராய்வதோ கேள்வி கேட்பதோஇல்லை. இருந்தாலும் மிகக் குறைந்த அளவே இருந்தது. என்னுடைய அறியாமையைவிட கிராமத்துப் பின்னணியில் வளர்ந்த அவனது புரிதல் கூடுதலாகவே இருந்திருக்கிறது. எல்லோரிடமும் ஒத்துப் போகும் குணம் அவனிடம் இருந்தது. எனக்குப் பிடித்தால் மட்டுமே பழகுவேன் என்ற என் குணமும் அவனுக்குப் புரிந்தது. சில நேரங்களில் சீக்கிரமே கிளம்ப நேரிட்டால். கப்பன் பார்க்கில் இருந்த செண்ட்ரல் லைப்ரரிக்குப்போய் புத்தகங்களைப் பார்வையிடுவதும், சில நேரங்களில் படிப்பதும் நடக்கும்.
அப்பாவுக்கு நான் விடாமல் கடிதம் எழுதிக்
கொண்டிருந்தேன்,எப்படியாவது வேலை மாற்றம் கேட்டு பெங்களூர் வரும்படி. அவரும்
மிகவும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்
என்பது உண்மைதான். அவருக்கு பெங்களூருக்கு மாற்றலாகியது. கண்டோன்மெண்டிலோ அலசூரிலோ
வீடு பார்க்கக் கூறினார். கண்டோன்மெண்டிலிருந்து ஜலஹள்ளி ஜீ.ஈ. ஸ் ஆஃபிஸ் வருவதற்கு
மாத பஸ் பாஸ் ரூபாய் 13-/ என்றும் வேறேங்காவது இருந்தால் அதிகக் கஷ்டம் என்றும்
கூறியிருந்தார். நானும் முதல் ஆறு மாதப் பயிற்சியில் நான்கு மாதங்கள்
முடித்திருந்தேன். வெங்கடாசலம் அண்ணா அப்போது லீவில் வந்ததால் எல்லோரையும்
கூட்டிக் கொண்டு வருவதில் உதவியாய் இருக்கும் என்று அப்பா எழுதி இருந்தார்.
அலசூரில் ராமகிருஷ்ணா மடத் தெருவில் வாடகைக்கு வீடு பார்த்தோம். ஒரு வழியாக
எல்லோரும் ஒன்று சேர வாய்ப்பு கிடைத்தது. அப்பா பாவம், தினமும் கண்டோன்மெண்ட் வந்து,
அங்கிருந்து வேலைக்குப் போய் மறுபடியும் கண்டோன்மெண்ட் வந்து நடந்து அலசூர்
வீட்டுக்கு வரவேண்டும். எனக்கு அலசூரிலிருந்து எஸ்.ஜே.பீ.-க்குசெல்வது என்பதானது
இரண்டு மாதத்துக்கும் குறைவாகவே இருந்தது. ஆறு மாத பயிற்சி முடிந்த பிறகு நாங்கள்
கட்டாயமாக ஹாஸ்டலில் தங்க வேண்டும்.என்பது விதி. அந்த நாட்களின் நினைவுகள் அதிகமாக
வருவதில்லை என்பதைவிட நினைவில்லை என்பதே சரி. நானும் ஹாஸ்டலுக்குச் சென்று
பயிற்சியைத் தொடர்ந்தேன்.
மெயின் ஃபாக்டரியில் பயிற்சி என்பது, அங்குள்ள ஒவ்வொரு பகுதிக்கும் ஓரிடம் இரண்டு வாரம் என்பதுபோல் இருந்தது. மெஷின் ஷாப், ஷீட்மெடல் போன்ற இடங்களில் நிறைய பிரிவுகளில் பயிற்சி. பயிற்சி என்றால் நம்மை யாரும் வேலை செய்ய விடமாட்டார்கள். தொழிலாளிகள் செய்வதை நாம் அருகிருந்து அருகிருந்து பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களோ நாம் முக்கியமான விஷயங்களைக் கற்றுக் கொள்ளக் கூடாது என்பதிலேயே குறியாய் இருப்பார்கள். பணிக்கு ஏற்ற செட்டிங் ஏதாவது செய்யும்போது நம்மை ஏதாவது காரணம் சொல்லி அகற்றிவிடுவார்கள். அங்கு வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்கள் அனுபவத்தில் கற்றதை, பயிற்சி என்ற பெயரில் சின்னப் பையன்கள் நாங்கள் கற்றுக் கொண்டு பிற்காலத்தில் அவர்களையே அதிகாரம் செய்யும் நிலைக்கு வந்து விடுவோம் என்ற பயமே அவர்களது செயல்களுக்குக் காரணம். அனுபவமிக்கத் தொழிலாளியிடம் நட்புடன் பழகி எவ்வளவு தெரிந்து கொள்ள முடியுமோ அதைக் கற்றுக் கொள்வது நம் சாமர்த்தியம். கூடியவரை அவர்கள் சொல் பேச்சுக் கேட்டு, அவர்களுக்கு மரியாதை கொடுத்தால் எடுபிடி வேலையெல்லாம் பழகி கொஞ்சம் கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும். அங்கிருந்தவர்களில் வேலை அறிந்தவர்கள் அதிகம் படிக்காதவர்கள்.
இந்த
காலகட்டத்தில் எனக்கு மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி எனக்கு நினைவுக்கு வருகிறது.
அப்போது சீனப் பிரதமராயிருந்த சூ-என் லாய் இந்தியா வந்திருந்தார். அவர்
எச்.ஏ.எல்.-க்கு வருகை தந்தார். அவரை மெஷின் ஷாப்புக்கு அழைத்து வரும்போது, வரும்
வழியில் ஆட்டோமேடிக் லேத் மெஷின்களில் எனக்குப் பயிற்சி. அவர் உள்ளே வரும் வழியில்
ஒரு புறத்தில் இந்த மெஷின்கள் ஓடிக்கொண்டிருக்க, அதன் அருகே சீனியர்
ஆப்பரேட்டருடன் நானும் நின்று கொண்டிருந்தேன். வரிசையாகப் பார்வை இட்டுக்கொண்டு
வந்தவர் எங்கள் அருகே வந்து ஏதோ கேட்டார். எங்களை சுட்டிக் காட்டிக் கேட்க,
பயிற்சி எடுக்கும் பையன் என்று சொல்லி இருக்க வேண்டும். என் அருகில் வந்தவர்,
செல்லமாக என் கன்னத்தில் தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்திச் சென்றார். உலகத்
தலைவர்களில் ஒருவரின் செல்லத்தட்டு கிடைத்தது நினைத்து அன்றெல்லாம்
மகிழ்ந்திருந்தேன்.
ஹாஸ்டலில்
அதிகாலையில் எழுப்பி விடுவார்கள். ஒரு அறையில் நாங்கள் மூவரோ நால்வரோ இருந்தோம்.
சரியாக நினைவில்லை. பி.டி. பயில்விக்க ஒரு பயிற்சியாளர் இருந்தார். பெயர்
நினைவில்லை. அவர் காலையில் அறைக் கதவைத் தட்டி, ஒவ்வொருவர் பெயரையும் கூறி “
எந்திரி, எந்திரி, ஏந்திரி,”என்று முழக்கமிட்டுக் கூறுவது இப்போதும் காதில் ஒலிக்கிறது.
அப்பா மாற்றலாய் வந்த ஓரிரு மாதங்களில்
நான் ஹாஸ்டலுக்குச் சென்றதாலும் வாரம் ஒரு முறையே வீட்டுக்கு வர முடியும்
என்பதாலும், வீட்டின் நிலவரங்கள் சரியாகத் த்ரியவில்லை. என்னைப் பொறுத்த வரையில்
என் குடும்பம் என் அருகில் இருந்தது, அது போதும் என்றாகி இருந்தது. குறிப்பிட்டுக்
கூற என்று ஒன்றுமில்லாத அளவுக்கு நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
இந்த
நிலையில் எச்.ஏ.எல்- ல் ஒரு செய்தி சொன்னார்கள். ஒரு புதிய ட்ரெயினிங் ஸ்கீம்
என்றும்,அதற்கு டிப்ளொமா பாஸ் செய்தவர்களே அனுமதி என்றும் அவர்களுக்குப் பயிற்சி
பாம்பே அருகில் அம்பர்நாத் என்ற இடத்தில் இருந்த ஆர்டிசான் ட்ரெயினிங் ஸ்கூலில்
கொடுக்கப் படும் என்றும் தெரிய வந்தது. அது இரண்டு ஆண்டு காலப் பயிற்சி என்றும்
பயிற்சி முடிந்ததும் செட்டர் ஆப்பரேட்டர் ஆக பணி நியமனம் செய்வார்கள் என்றும்
தெரிந்தது. என்ன இருந்தால் என்ன.?நமக்குப் பிரயோசனமில்லாதது . வெறும்
பள்ளியிறுதிப் படிப்பு படித்தவர்கள்தானே நாங்கள் என்றெல்லாம் நாங்கள்
நினைத்திருந்த வேளையில் எங்கள் பயிற்சி மேலாளர் திரு. எஸ்.ஏ.எஸ் டீன் என்பவருக்கு
ஏதோ ஞானோதயம் ஏற்பட்டிருக்க வேண்டும். அப்போது ட்ரேட் அப்ரெண்டிஸ் பயிற்சிக்கு மூன்று
குழுக்கள் (பேட்சஸ் )சேர்க்கப் பட்டிருந்தனர். நான் இரண்டாவது பேட்ச்
பயிற்சியாளன். மூன்று பேட்சுகளிலும் சேர்ந்து சுமார் அறுபது பேருக்கும்
மேலிருந்தோம். எங்கள் அனைவருக்கும் பரீட்சை வைத்து அதில் சிறப்பாகத் தேறுபவர்களில்
சிலரை டிப்ளொமா ஹோல்டர்களுடன் பயிற்சிக்கு அனுப்ப முடிவு எடுத்திருந்தார்.
எங்களுக்கு தீயரி ப்ராக்டிகல் என்றெல்லாம் பரீட்சை வைத்து சிலரைத் தேர்ந்தெடுக்க
முடிவு செய்திருந்தார். அதில் தேர்வு பெற்றால் எங்கள் பிற்காலம் அப்போது
எதிர்பார்த்ததைவிட பிரகாசமாய் இருக்க வாய்ப்பிருந்தது. செட்டர் ஆப்பரேட்டர்
என்றால் அப்போதிருந்த க்ரூப் லீடருக்குச் சமமாகும். அதாவது ட்ரெயினிங் முடிந்து
ஒரு முதல் நிலை மேற்பார்வையாளராகச் சேர்த்துக் கொள்ளப் படுவோம். ( சூப்பர்வைசர்
)தினக் கூலி சம்பளம் மாத சம்பளமாக மாறும்.
பரீட்சைகள் நடந்தன. முடிவுகளை வெளியிட திரு.டீன் தயாராக இருந்தார். எங்கள் எல்லோரையும் ஓரிடத்தில் கூடச் செய்தார். ஒவ்வொரு பெயராக அழைத்து ஒரு ஓரத்தில் நிற்க வைத்தார். இப்படி ஒன்பது பெயர்கள் படிக்கப் பட்டன. சிறிது நேரத்துக்குப்பிறகு மீண்டும் மூன்று பெயர்களைப் படித்தார். அவர்களை இன்னொரு புறம் நிறுத்தினார்.எஞ்சியிருந்தோர் என்ன ஏது என்று தெரியாமல் விழித்திருக்கமுதலில் அழைக்கப்பட்ட ஒன்பது பேரும் தேர்வு செய்யப் பட்டார்கள் என்று அறிவித்தார். இரண்டாம் முறை அழைக்கப்பட்ட மூவரும், Provisionally Selected என்று கூறினார். மல்லிகார்ஜுனன்,வேணுகோபால், என்.ஆர். ஸ்ரீனிவாசன்,பாபுல்கர், பி. பி. வர்கீஸ், வைத்தியநாதன், ஸ்ரீதரன், ரவீந்த்ரன்,சுந்தரேஸ்வரன், பத்மநாபராவ், அனந்த மூர்த்தி, என்று பதினோரு பெயர்கள் நினைவுக்கு வர, பனிரெண்டாம் நபர் யாரென்று அறிய பழைய புகைப் படத்தைத் தேடப்போனேன். திடீரென்று நினைவுக்கு வந்த பெயர் என்னுடையதுதான். என்னையே மறந்திருந்தேன். இதில் ப்ரொவிஷனலி செலெக்டெட் என்ற பிரிவில் நான் ரவீந்திரன் ,பத்மனாப ராவ் மூவரும் இருந்தோம். நான் என் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கப் பட்டேன். பயமறியாமல் மனதில் பட்டதைக் கூறும் சுபாவம் சில சமயம் சங்கடங்களைத் தருகிறது. ஆனந்தத்துடன் அப்பாவிடம் விஷயங்களைப் பகிர்ந்து கொண்டேன். மிகவும் சந்தோஷப் பட்டார். நாங்கள் புறப்படுவதற்கு முன் தேவையாக நாங்கள் கொசுவலை, காலணிகள் போன்றவற்றை வாங்க வேண்டும் என்றும் கூறப் பட்டிருந்தோம். 1957-ம் வருடம் மார்ச் மாதம் 22-ம் நாள் அம்பர்னாத்தில் பயிற்சி துவங்கும் என்றும் கூறப்பட்டிருந்தோம். இவையெல்லாம் ஃபெப்ருவரி முதல் ,இரண்டாவது வாரங்களில் நடந்தது. நான் அம்பர்நாத் செல்வதற்கான ஏற்பாடுகளில் என் தந்தை இறங்கினார்.
இந்த நிலையில் ஃபெப்ருவரி மூன்றாம் வாரம் அப்பா உடல் நலமில்லாமல்
பெங்களூர் அகரம் மிலிடரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார். இதன் பிறகு நடந்தவை
என் வாழ்க்கையில் அதிக முறை நினைவுக்கு வந்து, என்னை வாட்டிய சம்பவங்களே.
சம்பவங்கள் நடக்கும்போது நமக்கு அறியாத வீச்சு, நடந்தபிறகு மிகவும் அதிகமாகத்
தெரிகிறது.அப்பா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, என்னிடம் அவர்,நான்
தான் இந்தக் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற முறையில் ஏதெதோ பேசினார். ஏன் அப்படிப்
பேசுகிறாரென்று கூட அறியாமல், எதற்கும் கவலைப் பட வேண்டாம் என்று மட்டும்
கூறினேன். வீட்டு விலாசத்துக்கு ஒருபோஸ்ட் கார்ட் ஆஸ்பத்திரியிலிருந்து
வந்திருந்தது. அதில் அவரை D I list-ல்
வைத்திருப்பதாக இருந்தது. இந்தப் பாவி எந்த டீ.ஐ. லிஸ்ட்டைக்
கண்டான் .அறியாமையின் உச்சகட்டத்தில் அதன் பொருள் தெரியாமல் ஏதோ ஒரு லிஸ்ட் என்று
விட்டு விட்டேன். பிறகல்லவா வெகு நாளைக்குப் பிறகு தெரிந்தது. D I LIST என்றால் டேஞ்சரஸ்லி இல் என்று.ஆஸ்பத்திரியில் அவர்கள் கடமை
அறியப் படுத்தி இருந்தனர். அறியாமையின் அலட்சியத்தால் என் அப்பாவை இழந்து விட்டேனோ
என்னும் குற்ற உணர்ச்சி என்னுள் அடிக்கடி தோன்றும். என்ன சொல்லி என்ன பயன்,?
மார்ச் மாதம் இரண்டாம் நாள் நான் பயிற்சியில் இருக்கும்போது,
அப்பாவின் உடலை வீட்டுக்குச் சென்றுவிட்டதாகவும் நான் வீட்டுக்குப் போகவேண்டும்
என்றும் தெரியப் படித்தினார்கள்.செய்வதறியாமல் ஒரு வாடகை சைக்கிளை எடுத்துக்
கொண்டு, வீட்டிற்கு வந்து நான் என் அப்பாவின் சடலத்தைத்தான் பார்க்க முடிந்தது.
சற்று நேரம் ஏதும் அறியாமல் மயங்கிக் கிடந்தேன். யார் யாரோ வந்தார்கள் என்னென்னவோ
செய்தார்கள். என் அப்பாவின் உடலுக்கு அந்திமக் கிரியைகளை நாந்தான் செய்தேன். ஒரு
அத்தியாயம் முடிந்தது. ஆனால் ஒன்றின் முடிவு ஒன்றின் துவக்கமாக இருந்தது. என்னையே
நான் அறியவும், என்னைப் பிறருக்கு அறிவிக்கவும் என் அப்பாவின் மரணம்தான்
காரணமாயிருந்தது. சில முடிவுகள் எடுக்கப் படும்போது என்னென்ன எதிர்ப்புகள்
எங்கெங்கிருந்தெல்லாம் வருகின்றன என்றெல்லாம் தெரியாமலேயே அவற்றை
சமாளித்திருக்கிறேன். இன்று நினைத்தாலும் எடுத்த முடிவுகளிலும் செய்த
செயல்களிலும், தவறென்று எனக்கு எதுவும் தெரிவதில்லை.
அப்பா இறந்த செய்தி எப்படி வித்தனசேரியில் இருந்த என் அம்மாவின் (சித்தியின்)உறவினன் சேதுமாதவனுக்குத் தெரிந்ததோ தெரியவில்லை.( இந்த சேதுமாதவனைப் பற்றி நான் முன்பே எழுதி இருக்கிறேன். அப்பாவின் இறங்கு முகத்துக்கு முக்கிய காரணமாயிருந்தவர்களில் இவரும் ஒருவர். இவருக்கு உதவப் போய்தான் ,அப்பாவுக்குக் கெட்ட பெயர் வந்து பதவியிறக்கம் ஏற்பட்டது.)அவர் வந்திருந்தார். அப்பாவின் ஆஃபீஸுக்கும் சென்றிருக்கிறார். அப்பாவின் தம்பி ராமச்சந்திரனும் திருச்சூரில் இருந்து வந்திருந்தார். அப்பாவின் குடும்ப நிலையறிந்து அப்பாவின் ஆஃபீஸிலிருந்து கொஞ்சம் பணம் வசூலித்துக் கொடுத்தார்கள். அப்பாவின் சம்பளப் பணத்துடன் இவ்வாறு வசூலான தொகையுடன் அம்மாவையும் தம்பிகளையும் பாலக்காட்டில் இருந்த மேமை குஞ்சுக்குட்டி அம்மாளின் வீட்டுக்கு அம்மாவுடன் கலந்தாலோசித்து முடிவுக்கு வந்தேன். என் நண்பர்களும் கொஞ்சம் பணம் வசூலித்துக் கொடுத்திருந்தனர். மார்ச் மாதம் ஆறாம் நாள் அம்மா தம்பிகளை பாலக்காட்டுக்கு அனுப்பிவிட்டு வந்தேன். இந்த முடிவுக்கும் செயலுக்கும் ஏகப்பட்ட எதிர்ப்புகள் இருந்தன. அப்பாவின் காரியங்கள் முடியு முன்னே எப்படி அவர்கள் ஊருக்குப் போகலாமென்பது முதல் ஆஃபீஸில்வசூல் செய்து கொடுத்த பணத்தை எப்படி வாங்கலாயிற்று என்பது வரை எதிர்ப்புகள் ஏராளம். அப்பா வாங்கிய சம்பளம் வயிற்றுக்கு மட்டுமே போதாத நிலையிலவர்கள் பெங்களூரில் வாடகை வீட்டில் தங்குவதோ காரியங்களில் பங்கேற்பதோ இயலாத காரியம். இந்த சாதி மாற்றுக் கல்யாணத்தால் காரியங்களில் அவர் பங்கேற்க முடியாது. அதுவும் மற்றவர் செலவில் நடக்கக் வேண்டிய ஒன்று. செண்டிமெண்டுக்கோ சடங்குகளுக்கோ முக்கியத்துவம் கொடுக்காமல் யதார்த்த நிலையிலிருந்து எடுக்கப்பட்ட முடிவு அது. அதில் என் சித்தியின் பங்கும் இருந்தது. எனக்கு அம்பர்நாத் பயிற்சிக்குச் செல்வதா வேண்டாமா என்ற ஒரு நிலை. பயிற்சி முடியாத நிலையில் அவர்கள் பெங்களூரில் இருப்பது, என் செலவில் இருப்பதென்பது எண்ணிப்பார்க்க முடியாத ஒன்று. எப்படியோ பல்லைக் கடித்துக் கொண்டு இரண்டு வருடங்கள் ஓட்டிவிட்டால், என் பயிற்சி முடிந்து நான் ஓரளவுக்கு ஸ்திர நிலைக்கு வந்தபோது அவர்களை பெங்களூருக்கு அழைத்துக் கொண்டு, மேற்கொண்டு காரியங்களைக் கவனிக்கலாம். எதிர்ப்பு சொன்னவர்களிடம் நான் கேட்ட ஒரே கேள்வி இதுதான். என் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் யாராவது எங்கள் குடும்பத்தைக் காப்பாற்றத் தயாரா, அதற்குண்டான செலவுகளை ஏற்க முடியுமா என்பதே. கேட்டவர்கள் எல்லோரும் வாய் மூடி மௌனியாகி விட்டனர்
கண்டோன்மெண்ட் ஸ்டேஷனில் ட்ரெயினுக்கு நாங்கள்
காத்திருந்தபோது, டாக்டர் மாமா அங்கு வந்து ஒரு இலவசக் காட்சியே
காண்பித்துவிட்டார். என்னால்தான் எல்லாத் தவறான முடிவுகளும் என்றும், அதற்கான பலன்களை எல்லோரும் அனுபவிப்பார்கள் என்ற
முறையிலும் ஏதேதோ கூறி சத்தமிட்டார். நான் பொறுமை காத்து பதில் ஏதும் சொல்லாமல்
இருந்து விட்டேன்.
நன்றாக நினைவில் வைத்திருந்து எழுதியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குவேறு வ்ழியில்லை
நீக்குஏற்கெனவே நான் படித்த பல பகுதிகள் இதில் இருக்கின்றன. மறுபடியும் படித்தேன்.
பதிலளிநீக்குநான்பலபதிவுகள் எழூதி இருக்கிறேன் சில விஷயங்கள் ரிபிடாகி இருக்கலாம்
நீக்குபல நல்ல முடிவுகளை எடுத்துள்ளீர்கள்...
பதிலளிநீக்குநன்றி
நீக்குநேற்று போட்ட கருத்துரை காணவில்லை...!
பதிலளிநீக்குஎனக்கும் வி ளங்காத து
பதிலளிநீக்குநினைவில் தோன்றுவதைப் பதிவுசெய்துவிடுங்கள். யாருக்காவது உதவும்- குடும்பத்தாருக்கோ அல்லது நண்பர்களுக்கோ. நினைவுகளின் தொகுப்புதானே வாழ்க்கை!
பதிலளிநீக்குஅதைத்தானேசெய்கிறேன்
நீக்குஇப்பகுதிக்குப் போட்ட கருத்தைக் காணவில்லை.
பதிலளிநீக்கு//சம்பவங்கள் நடக்கும்போது நமக்கு அறியாத வீச்சு, நடந்தபிறகு மிகவும் அதிகமாகத் தெரிகிறது.//
யதார்த்தம்.
நீங்கள் எடுத்த முடிவுகளும் மிகவும் யதார்த்தம் சார். யதார்த்த முடிவுகளுக்கு இப்படித்தான் எதிர்ப்பு எழுவதுண்டுதான். அதில் உங்களின் பொறுப்பான மனதையும் காட்டுகிறது.
கீதா
காகாஊச்
நீக்குஇக்கட்டான தருணத்தில் நல்ல முடிவு எடுத்துள்ளீர்கள்.
பதிலளிநீக்கு