Thursday, August 11, 2022

நான் யார் 13

                                               

                                                           23 வயதில்
                                                     பதினாறு  வயதினிலே

      மெட்ராஸ் பாடியில் லூகாஸ் டீவீஎஸ் ஃபாக்டரி இருந்தது. நான் வில்லிவாக்கத்தில் ஒரு ஒண்டுக் குடித்தன வீடாக ரூ.40-/ மாத வாடகையில் எடுத்திருந்தேன். வீட்டிலிருந்து நடந்து சென்றால் இருபது நிமிடங்களில் வேலைக்குச் சென்று விடலாம். ஒரு சிறிய திறந்த வராந்தா, அதனுள்ளே ஒரு அறை, அடுத்து சமையல் அறை. பாத்ரூம் கக்கூஸ் நான்கைந்து வீடுகளுக்குப் பொது. கிணற்று நீர். .நானும் சாந்தியும் ஒருவருக்கொருவராக வாழ்க்கை துவங்கினோம்.எனக்கு சம்பளமாக ரூ.410-/.பிடித்தம் போக ரூ.360-/   370-/ வரை கிடைக்கும். அதில் ரூ200-/ பெங்களூரில் அம்மாவுக்கு அனுப்பி விடுவேன். மீதியில் எங்கள் செலவு நடக்க வேண்டும். இதில் ஜெட் எஞ்சின் கோவாப்பரேட்டிவ் சொசைட்டியிலிருந்து வாங்கிய கடனுக்குத் தவணை செலுத்த வேண்டும். நாங்கள் வாழ்க்கையைத் துவங்கிய காலத்தில் வீட்டில் எந்த விதமான சாமான்களும் கிடையாது. ஒரு ட்ரங்க் பெட்டி இருந்தது. ஒரு ஸ்டவ் இருந்தது. சில மண் பாண்டப் பாத்திரங்கள் இவைதான். சொல்லிக் கொள்ளும்படியாகப் படுக்கை கூட இருந்ததில்லை. ஃபர்னிசர் பற்றிப் பேச்சே இல்லை. இவை எல்லாம் இல்லையே என்ற எண்ணமும் இருக்கவில்லை. அவற்றையெல்லாம் இப்போது எண்ணிப் பார்க்கும்போதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு ஷிஃப்ட் பணி. காலை 7-45 முதல் மாலை 5- 30 வரைஒரு வாரம். திங்கள் முதல் வெள்ளி வரை. சனி ஞாயிறு விடுமுறை. அடுத்த திங்கள் ஷிஃப்ட் மாறும். மின் வெட்டு காரணமாக இரண்டாம் ஷிஃப்ட் இரவு 9-15-க்கு துவங்கி மறுநாள் காலை 7-30 வரை. உணவு உறக்கம் எல்லாப் பழக்கங்களும் உடல் பழகத் துவங்குமுன் மாறிவிடும். கிட்டத்தட்ட ஒரு வருட காலம் அந்த மாதிரிப் பணியில் இருந்ததால், என் உடம்பு தேறவே சந்தர்ப்பம் இருக்கவில்லை..

 

               என் தம்பி சோமா, TAFE-ல் பணியில் இருந்தான். எனக்கு இரவு ஷிஃப்ட் ஆக இருக்கும்போது,அவனுக்குப் பகல் ஷிஃப்ட்.எங்களுடன் அவன் தங்கியதில் வீட்டில் யாராவது ஒருவர் சாந்திக்குத் துணை இருப்போம். வாழ்க்கைப் பயணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஒருவரை ஒருவர் புரியத் துவங்கினோம்.இருந்த வசதிகளில் திருப்தி அடைந்து மகிழ்வாகவே வாழ்ந்தோம். எங்கள் மண வாழ்க்கைக்குப் பொருள் தரும் விதத்தில்சாந்தி கரு தரித்தாள். அவள் கருத் தரித்திருக்கிறாள் என்பதோ அவளை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும் என்பதோ, எனக்குத் தெரிய வில்லை. மூன்று மாதங்கள் கழிந்த பிறகுதான்,அதுவும் சோமா சொல்லி வற்புறுத்திய பிறகுதான்,கருவை உர்ஜிதம் செய்ய, மருத்துவரிடம் சென்றோம்.கரு உறுதியாயிற்று. அவ்வளவுதான். எந்தவிதமான மருந்து மாத்திரைகளோ, விசேஷ கவனிப்புகளோ கொஞ்சமும் இல்லாமல் சாதாரணமாகவே வாழ்க்கை ஓடியது. ஒன்று மட்டும் இப்போது சொல்லியாக வேண்டும். எதையும் செய்யக் கூடாது என்ற எண்ணம் இருக்கவில்லை. அறியாமையின் காரணமாக எதையும் செய்ய வேண்டும் என்று தோன்றவில்லை. இப்போது நினைத்துப் பார்க்கும்போது, இப்போது இருப்பவர்களுடன் ஒப்பிட்டு நோக்கும்போதுதான் நாங்கள் எவ்வளவு ஈஸியாக வாழ்க்கையை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று புரிகிறது.

 

      சனி ஞாயிறுகளில் பீச்சுக்குப் போவோம். எப்போதாவது சினிமாவுக்குப் போவோம். சாந்தியின் சித்தி கல்யாணி அவர்களின் வீட்டுக்குப் போவோம் அவர்களின் குழந்தைகள் விஜி, தங்கம் போன்றவர்களையும் பீச்சுக்கும் ஜூவுக்கும் கூட்டிச் சென்றிருக்கிறோம். ஒரு முறை பீச்சில் சுண்டல் விற்றுக் கொண்டிருந்த ஒரு சிறுவனைப் பார்த்து, அவன் என் சித்தப்பா கிருஷ்ணமூர்த்தியின் மகனோ என்று சந்தேகம் வந்து அவனைக் கேட்டு விசாரித்து, உண்மை என்று அறிந்ததும் மனம் சங்கடப் பட்டது. அவனை விலாசம் கேட்டு அறிந்து அவர்களை வீட்டில் சந்தித்தபோது வாழ்க்கைச் சக்கரம் சிலரை எப்படியெல்லாம் புரட்டிப் போடுகிறது என்று அறிந்து கொள்ள வாய்ப்பாயிருந்தது. என் அக்கா ராஜியின் திருமணம் நடந்தது கண்டு, அவசர அவசரமாக என் சித்தப்பாபெண் பொன்னம்மாவுக்குக் கலியாணம் நடந்தது.அவர்கள் எங்களை விட வசதியானவர்கள் என்று நிரூபிக்கவே அது அப்படி ஏற்பாடு செய்யப் பட்டது என்று அம்மாவும் அப்பாவும் பேசிக் கொள்வார்கள். சித்தப்பாவின் ஃபார்மசி ஷாப் நஷ்டத்தி ஓடி அவர்கள் கஷ்டத்தில் இருந்தது மனசுக்கு சங்கட மளித்தது

  அன்றைக்கு கிருஷ்ணமூர்த்தி சித்தப்பா வீட்டுக்குப் போனபோது மனசு சங்கடப் பட்டது என்று எழுதி இருந்தேன். அன்றைக்கு அவர் என்னையும் சாந்தியையும் வழி அனுப்ப பஸ் ஸ்டாண்ட் வரை வந்திருந்தார். HAL வேலைக்கு இண்டெர்வியூவுக்குப் போனபோது அவர்களைப் பார்த்தது. அதன் பிறகு என் தந்தை இறந்தபோதும் அவர்கள் வரவில்லை. நான் HAL-ல் ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் பயிற்சியிலும் அதன் பிறகு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு பணி புரிந்து, திருமணமாகி மதராஸ் வரும்வரை அவர்களோடு  கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் தொடர்பே இருக்கவில்லை. Lot of water must have flowed under the bridge.அவரை மறுபடி நான் பார்க்க முடியவில்லை. சித்தியையும் அவரது பிள்ளைகளையும் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

நான் வேலையில் பணி மாற்றம் காரணமாக விஜயவாடாவுக்குச் சென்றபோது, கிருஷ்ணமூர்த்தி சித்தப்பாவின் மகன் பாலகிருஷ்ணன் விஜயவாடாவில் ஏதோ ஒரு கடையில் பணியில் இருக்கிறான் என்று கேள்விப்பட்டு அவனைத் தொடர்பு கொண்டேன். வீட்டு விலாசம் வாங்கி ஒரு நாள் என் மனைவியுடன் அவர்கள்வீட்டுக்குச் சென்றேன். அவயம் சித்தி எங்களைப் பார்த்ததும் கண்ணீர் விட ஆரம்பித்து விட்டாள்அவர் மகன் பாலன் என்னைவிட ஓரிரு வயது குறைவாக இருப்பவன் , மணமாகி இருந்தது. தங்கைகள் ஜெயமணி, மற்றவள் பெயர் நினைவுக்கு வரவில்லை. மணமாகி இருந்தனர். ஒரு தம்பி சுப்பாமணி என்றழைத்தனர், இன்னொருவன் வெங்கடேசன். ஒரு சைக்கிள் கடையில் வேலையிலிருந்தான். அவனுடைய முதலாளியின் பிள்ளைகளுக்கு மதிய உணவு எடுத்துக் கொண்டு, என் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கு வருவான். என் சித்திக்கு என் நிலையை அவர்களது நிலையுடன் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. மிகவும் கஷ்டத்திலிருந்த மகாதேவன் மகன் காரில் ( அது கம்பனி கார் என்றாலும் )வந்திறங்குகிறான். அவன் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கு அவளுடைய மகன் உணவு கொண்டு செல்கிறான் என்ற எண்ணங்களே மனசிலும் வாக்கிலும் பொறாமை இருப்பதைக் காட்டிக் கொடுத்து விட்டது. அதன் பிறகு இரண்டு மூன்று முறை அவர்கள் வீட்டுக்குச் சென்றோம். அதெல்லாம் முடிந்த பிறகு நாங்கள் திருச்சிக்கு திரும்பி வந்தபிறகு அந்த வெங்கடேசன் எங்கள் விலாசம் கிடைக்கப் பெற்று எங்களுக்கு அவனுடைய திருமணப் பத்திரிக்கை கொடுக்க திருச்சி வந்திருந்தான். அவன் மஸ்கட்டில் வேலையில் இருப்பதாகவும் , அவனை மணக்க இருக்கும் பெண் திருச்சியைச் சேர்ந்தவள் என்றும் தெரிந்தது. நாங்கள் அவனது திருமணத்துக்குச் சென்றிருந்தோம். இடைப்பட்ட காலத்தில் சித்தி இறந்தது அறிந்தோம். வெகு நாட்களுக்குப் பிறகு அவர்கள் அண்ணன் தம்பி, தங்கைகளைக் கண்டோம். எல்லோரும் இருக்கும் ஒரு புகைப் படத்தை நினைவுக்காக வாங்கி வைத்துக் கொண்டேன். இந்த நிகழ்வுகள் நான் என் வலைப்பூவில் ஒரு சிறு கதை எழுத விஷயமாய் அமைந்தது.எல்லோரும் நல்ல நிலையில் இருக்கும்போது உறவுகள் தொடர்பில் இல்லாதது சில சமயம் சங்கடப் படுத்தியதுண்டு.பொதுவாகவே எங்கள் குடும்பத்தில் உறவுகள் ஒட்டுவதில்லை. நான் என் தலை முறைக்குப் பிறகாவது நிலைமை சீர்திருந்தும் என்று எண்ண முடியவில்லை. அவரவர்கள் அவரவர் நியூக்கிளியஸ் குடும்பம் உண்டு அவர்கள் உண்டு என்னும் மனோபாவத்துடன் வாழ்கிறார்கள். யார் யார் உறவுகள் என்றே அவர்களுக்குத் தெரிவதில்லை. சித்தப்பாக்களில் பெரியவர் கிருஷ்ணமூர்த்தி. அவருக்குப்பின் வரதராஜன் என்ற ராசு சித்ட்தப்பா. தங்கம் என்பது சித்தியின் பெயர். அவர்களுக்கு புத்திர பாக்கியம் இல்லை. ஒரு பெண்ணை தத்து எடுத்து வளர்த்தார்கள்.. இப்போது இருவருமுயிரோடு இல்லை. அடுத்தவ்ர் ராமச்சந்திரன். இவரிப் பற்றி இந்த பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன். அவருக்கு பின் காலத்தில் பார்வை அறவே தெரியாமல் போய் விட்டது. காணும் சக்தி போனபிறகு லக்ஷ்மி கடாட்சம் கிடைத்ததாக அவர் சொல்வது  அவ்வப்போது நினைவுக்கு வரும். சமைத்து கொடுக்கும் உணவில் மனைவியே விஷம் வைத்துக் கொடுத்தாலும் தெரியாது. வாழ்க்கையே ஏதோ நம்பிக்கையில் ஓடுகிறது என்பார். திருச்சூரில் ஒரு ஃபார்மசுடிகல் ஏஜென்சி எடுத்து நடத்திக் கொண்டிருந்தார். இப்போது அவரும் இல்லை. அவருக்கு அடுத்தது விஸ்வநாதன் எனும் விச்சா சித்தப்பா. சென்னையில் இருந்தார். அவர் வீட்டுக்கு சென்றிருக்கிறேன். பாட்டியின் அந்திம கால்த்தில் அவருக்கு மிகவும் உறு துணையாக இருந்தவர். கடைசியாக சதாசிவன் எனும் தொரைசாமி சித்தப்பா. குஜராத்தில் ஒரே மகளுடன் இருக்கிறார். ஏறத்தாழ ஐம்பது வருடங்களுக்குப் பிறகு அவர்களை சந்தித்தேன். மகளின் எல்டிசி யில் பெங்களூர் வந்திருந்தனர். அவர்களால் என் வீட்டுக்கு வர முடியாமல் நானும் சாந்தியும் அவர்களை அவர்கள் தங்கி இருந்த ஓட்டலில் சந்தித்தோம். ஒரு புகைப் படமும் எடுத்துக் கொண்டோம். அதன் பிறகு டச் இல்லை. ஆக அப்பாவுடன் பிறந்த ஐந்து சகோதரர்கள் பற்றிக் கூறிவிட்டேன். கூடப் பிறந்த மூன்று சகோதரிகளில் கடைசி தங்கை ராசம்மாவை என் மாமாவுக்கே மண முடித்து விட்டார். மற்ற இரு அத்தைகள் பற்றி எனக்கு முழு விவரம் இல்லை. ஒருவர்  அன்னம் அத்தை ஜாம்ஷெட்பூரில் இருந்ததாகவும் அவரது மகனை சந்திர சித்தப்பாவின் மகளுக்கு மணம் முடித்ததாகவும் தெரிகிறது. இன்னொருவர் லக்ஷ்மி அத்தை. அவரது மகளை தொரைசாமி சித்தப்பாவின் மனைவி என்றும் நினைக்கிறேன். அப்பாடா..! எனக்கு இந்த அளவாவது தெரிந்திருக்கிறதே.!OUT OF SIGHT ,OUT OF MIND என்பது முக்காலும் உண்மை.!

 

சென்னையில் சித்தப்பாவை சந்தித்தது பற்றி எழுத ஆரம்பித்து  கொஞ்சமாவது அப்பா வழி உறவுகளைப் பற்றிக் குறிப்பிட முடிந்தது. சென்னையில் லூகாஸ் டிவிஎஸ் நிறுவனத்தில் சூபர்வைசராகப் பணி. எச் ஏ எல் ல் பணியில் இருந்தபோது சில பாடங்கள் கற்றேன். . யாரும் திறந்த மனத்துடன் இருப்பதை விரும்புவதில்லை. நாம் உண்டு நம் பணி உண்டு என்றிருக்க வேண்டும். தவறுகள் ஏதாவது நடந்தால் கண்டும் காணாதது போல் இருக்க வேண்டும். முன் பல்லால் சிரித்துக் கடைவாய்ப் பற்களைக் கடிக்கும் மக்களே அதிகம். இதையெல்லாம் தெரிந்து கொண்டு புதிய இடத்தில் ஒரு புதிய வாழ்க்கை ஆரம்பிக்க முடிவு செய்தேன். ஆனால் அதுவும் சரியல்ல என்று கற்றுக் கொண்டேன். நன்றாக பிழிந்து எடுத்து நம்மை  ஒன்றுமே தெரியாத அப்பாவி என்று ட்ரீட் செய்ய ஆரம்பித்தனர். ஆங்கிலேய கூட்டுக் கம்பனி அது. பல வெள்ளையர்களும் பணியில் இருந்தனர். சில மெஷின்களை இயக்கும் முறைகளை நியமப் படுத்தி இருந்தார்கள். அவர்களது வழிமுறைகளைத்தான் பின் பற்ற வேண்டும். எனக்கு ஒரு சில உத்திகளைக் கொண்டு உற்பத்தியைப் பெருக்க முடியும் என்று தோன்றியது. ஆனால் அதை நடைமுறைப் படுத்த எனக்கு அதிகாரம் இருக்கவில்லை. நான் என் மேலாளருடன் கலந்து பேசி நான் இரவு ஷிஃப்ட்டில் வரும்போது வழி முறைகளை மாற்றி அமைத்து உற்பத்தி அதிகம் காண்பித்தேன். இது அவர்களது புருவங்களை உயர்த்தியது. கேள்விகள் எழவே நான்  எடுத்துக்கொண்ட புதிய நடைமுறைகளைத் தாளில் எழுதி சமர்ப்பித்தேன். ஒன்று சொல்ல வேண்டும். அவர்களது வெள்ளைக்காரத்தலைவன் என்னை பகல் ஷிஃப்டில் செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கச் சொன்னார். அது முடிந்ததும் என்னை மிகவும் பாராட்டினார்கள். நான் எழுதிக் கொடுத்திருந்தாலும் எனக்கு பாராட்டு வாய் வழி மட்டுமே வந்தது. ஆக பணியில் திறமை உள்ளவன் என்று அங்கீகரிக்கப் பட்டே.ன். ஆனால் ஒரு முறை பெங்களூர் சென்றவன் எதிர்பாராத விதமாய் ஒரு திங்கட்கிழமை இரவு ஷிஃப்ட்டுக்கு வரமுடிய வில்லை   இப்படி இருக்குமானால் என் வேலைக்கு பங்கம் வரும் என்று பயமுறித்தினார்கள்.  பொறுப்புகளுடன் ஒரு குடும்பம் அல்லாமல் இரண்டு குடும்பத்தை பேண . இருந்தாலும் முன்பே செய்தி கிடைக்கச் செய்தேன். அவர்கள் இது வேண்டியவன் தலைக்கு மேல் எப்போதும் கத்தி இருப்பது போல் உணர்ந்தேன். அதுவே என்னை வேறு வேலை தேட வைத்தது.(தொடரும்)

இது வரை எழுதியதைப் படித்து வரும்போது விஜயவாடாவில் சித்தப்பாவின் மகன் வெங்கடேசன் சைக்கிள் கடையில் வேலை பார்த்து வந்ததாக எழுதியது நினைவின் தவறு என்று தெரிகிறது.இந்த வெங்கடேசன்  திருமணத்துக்குப் பத்திரிக்கை கொடுக்க பெங்களூரு வந்திருந்தான். பேச்சின் நடுவே சைக்கிள் கடையில் அவன் வேலை பார்க்கவில்லை என்றும் ஒருவேளை அவனது தம்பியாக இருக்கலாம் என்றும் கூறினான் எனக்கு அவனது தம்பியின் நினைவே இல்லை. சம்பந்தப்பட்டவனே மறுக்கும் போது அதை நான் சரிசெய்ய வேண்டியது அவசியம் என்று தோன்றியது


                                                                                           

12 comments:

 1. நினைவுகள் தொடரந்து சுழலட்டும் ஐயா

  ReplyDelete
  Replies
  1. நினவுகள்தொடரும்வ ரை

   Delete
 2. மிகவும் எளிமையாக வாழ்ந்து உள்ளீர்கள் ஐயா... அருமை...

  ReplyDelete
 3. Replies
  1. அதுவே என் விருப்பம்

   Delete
 4. ஆரம்பம் எளிமையான வாழ்க்கை. பொறுப்புகள் என்று சிக்கல்கள்., உறவுகளைத்தொடர்பில் வைத்திருக்கவும் முயன்றது நல்ல விஷயம் சார். இப்போதைய தலைமுறைகள் கண்டிப்பாக எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை.

  அது போல சமூக ஸ்டேட்டஸ் நமக்கு வசதி குறைவென்றால் மக்கள் உறவினர் நம்மிடம் தொடர்பில் இல்லாமல் இருப்பது என்பது என் அனுபவத்திலும் உண்டு. ஸ்டேட்டஸ் பார்த்துப் பழகும் மக்களையும் கண்டிருக்கிறேன்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. என்னை எந்த காலத்தில் செர்ப்பது

   Delete
 5. பொறுப்புகள் ஒருபுறம்.  சொந்தக் காதல் மற்றும் விருப்பங்கள் ஒரு புறம்.  இரண்டையும் பாலன்ஸ் செய்து கொண்டு வந்திருக்கிறீர்கள்.

  ReplyDelete
 6. புரிபது மகிழ்ச்சி தருகிறது

  ReplyDelete
 7. புரிவது மகிழ்ச்சி தருகிறது

  ReplyDelete