சனி, 17 நவம்பர், 2012

அமர காதலா...?.


                                     அமர காதலா......?.
                                     ----------------------


அவனுக்கு அவள்மேல் காதல்,
அவளுக்கு அவன்மேல் காதல்
காதலுக்குக் காரணம் என்ன.?
அழகு, அறிவு, படிப்பு, அந்தஸ்து.?
எல்லாவற்றுக்கும் மேம்பட்டது
எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது,
காதல் இருப்பது உண்மைதானா.?
அவனுக்கு வந்தது திடீர் சந்தேகம்.
உயிரினும் மேலான காதலுக்கு அவள்
உயிரையே தருவாளா. ? சோதித்துப்
பார்க்க அவன் துணிந்து விட்டான்.

அவன் இறந்தால் அவளும் அவன் பின் தொடர்வாளா.?
அவன் இறந்து அறிவது ஆகாதது..ஆனால் அறிந்து
கொள்ளவோஆவல் அதிகம். சிந்தனைச் சிற்பி,
சிந்தித்துப் பார்த்து வழி ஒன்று கண்டான் சோதித்துப் பார்க்க.

காதலின் பிரதிபிம்பமே அவர்கள்-இதை வெட்டென விளங்கச்
செய்ய அவர்கள் அமர காதலர்களாவது.. முடிவு தெரியாக்க்
காதலைவிட முடிவு தெரிந்த சாதல் சிறந்தது உண்மைக் காதல்
என்றால் இருவரும் சேர்ந்தே உயிர் விட்ல் வேண்டும்.
இல்லையெனில் ஒருவரை ஒருவர் மறக்க வேண்டும்.
என்னென்னவோ சொல்லிக் குழப்பினான் .கட்டிளங்குமரியவள்
குழம்பித் தெளிந்தாள்.ஒரு நாள் அவகாசம் கேட்டாள்.
இருவரும் சேர்ந்திருந்து மறு நாள் ஊர்ப்புறத்தே இருந்த
ரயில் தண்டவாளத்தில் கையுடன் கையும் மெய்யுடன் மெய்யும்
இணைந்து இருவரும் சேர்ந்தே தலை கொடுக்க முடிவாயிற்று.

அவனுக்குள் எழுந்ததோர் தர்ம சங்கடம். காதலை
சோதித்துப்பார்க்கத்தான் அவன் எண்ணினான்
கடைசி நிமிடம் இது ஒரு சோதனையே என்று கூறி
உயிர் பிழைப்பதுதான் இவன் திட்டம் . ஆனால்
அமர காதலைச் சாதலில்தான் நிரூபிக்க நேருமோ.
பார்ப்போம் என்னதான் நடக்கிறது என்று.

ஆண் பெண் ஒருவரை ஒருவர் நாடி ,கண்டு மகிழ்ந்து
அளவிலா அன்பு கொண்டு , மட்டற்ற காதல் ஊற்றாய் ஊறி
ஆறாய்ப் பெருக்கெடுத்து பின் சங்கமிப்பதே குடும்ப சாகரம்.
அதில் அமைதியும் இருக்கும் கொந்தளிப்பும் இருக்கும்
அனுபவித்து அறிவதே மனிதகுலக் கடமை. .அவள் அவனது
மனச் சுவற்றில் எழுதிய சித்திரமா இல்லை கடைத்தெரு
கத்தரிக்காயா. ? இவன் வருமுன் காப்பவனா வாழப் பயந்தவனா.
வரும்முன் காப்பது அழித்துக் கொள்வதில்தான் இருக்குமா.?
வாழப்பயந்தவனாகத்தானிருக்க வேண்டும். அணு அணுவாய் பயந்து
சாகும் கோழையுடன் வாழ்வதை விட ....அட வாழ்வாவது ஒன்றாவது.
அதைத்தான் முடித்துக் கொள்ளலாம் என்கிறானே.-மங்கையவள்
மருகினாள் மாய்ந்து மாய்ந்து உருகினாள்.  

 இந்த குரங்கு மனம்தான் வாளாயிருப்பதில்லை. பழைய சம்பவக் கிளைகளில் தொத்திக் கொள்கிறதே. அன்றொரு நாள் .முழு நிலா இரவு..அவனும் அவளும் உல்லாச சல்லாபங்களில் ஈடுபட்டிருக்க, அவன் அவளிடம் , பொற்சரிகை விளிம்பு  கோர்த்து, மிளிரும் நிலப் பட்டாடைஉடுத்து,பல வண்ண முழுமணிகள் அழுத்தி முற்றிய நல்லணிகலன் பல அணிந்து,நறு மணங்கமழும் கூந்தலுடன்,உறுப்புத் திருத்தி ஒய்யாரங்காட்டி,உவகை பொருத்தி உரிய அன்பின் சில்லுரை இன்புற மொழிந்து,ஒரு ஆண்மகனை வயப் படுத்தும் நங்கையினும், இயற்கை நலம் பெற்றாள்,கருகி நீண்ட விரிகுழற் கற்றையுடையாள் மொய்க்கும் வண்டென விரைந்தாடும் விழியுடையாள், கொவ்வைப் ப்ழத்தைப் பழிக்கும் செவ்விய இதழாள்,கடைந்துருட்டியதன்ன பச்சிளந்தோளுடன்,பூங்கொம்பின் ஒசிவுடையள்,கிள்ளை மொழியாள் மயிலென உலவி, அவள்மேல் முதிர்ந்த அன்பு கொண்ட அவனுடன்,ஒருமித்து உள்ளம் உருகி,அவனை அவள் வயப் படுத்தும் மங்கை நல்லாள் அவளே சிறந்தவள் என்றபோது,மெய் மறந்த அவள் அவன் மேல் சாய அவன் இரு கைகளாலும் இருகி அணைத்து..........வெட்கத்தால் நினைக்கவே முடியவில்லை. .நினைத்து மகிழாமல் இருக்கவும் முடியவில்லை.


ஆனால் ஆதிகண்ட அந்தமறியாத இல்வாழ்வில் அவனுக்கு நாட்டமில்லையே. அவனை அவள் மனமுவந்து நேசிக்கும் பட்சத்தில் அவனுடைய விருப்பத்தை நிறை வேற்றியே ஆகவேண்டும்.

ஒரு நாள் அவகாசம் கேட்டவள் என்னதான் திட்டம் வைத்திருக்கிறாளோ தெரியவில்லையே. உடலின்பத்தில் நாட்டமேற்படுத்தி  திசை திருப்ப முனைவாளோ. அதற்கெல்லாம் இடங்கொடுக்கக் கூடாது. உயிர் விடத் துணிந்தவளுக்கு சோதனையில் வெற்றி பெறுபவளுக்கு வாழ்நாளெல்லாம் இன்பம் தரலாமே. சோதனைதான் என்று தெளிவிக்க இன்னும் சில மணித் துளிகளே உள்ளன. அதோ அவளும் வருகிறாள். ஊருக்கு வெளியே ஒன்றாய் போக வேண்டும் கடைசி நொடியில் தெரிவித்தால் வாழ்வில் பற்று இன்னும் கூடக் கூடும்.

மனதில் தோன்றும் உணர்ச்சிகளை மனதின் அடித்தளத்தில் அழுத்திப் புதைத்தால் அவ்வுணர்ச்சிகள் வடி வதங்கி இறந்து விடுகின்றன. உணர்ச்சிகளுக்கு அதனால் ஏற்படும் எண்ணங்களுக்கு வார்த்தைகளால் உயிர் கொடுத்து தெளிவிக்காவிட்டால் உணர்ச்சிகளின் உண்மைத்தன்மை மறைந்து எதிர்பாராத விபரீதங்கள் விளையலாம்.

ஊரின் வெளிப்புறப் பிரதேசம். அமைதியைக் கிழித்துக் கொண்டு தூரத்தில் புகை வண்டி அசுர வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு வினாடிகளில் தண்ட வாளத்தை அடையலாம் அருகில் புஸ்ஸென்ற சப்தம் கேட்டு அவனும் அவளும் திடுக்கிட்டனர். சாகும் தருவாயிலும் ஏனோ அந்த பயம். அவனுக்கு திக் திக்கென்று அடித்துக் கொண்டது. அவள் சமாளித்துக் கொள்கிறாள். .பிறகு என்னதான் தோன்றியதோ சீறிவரும் பாம்பிடம் கை கொடுக்கிறாள். அதற்கென்ன. .?கொட்டிவிட்டு ஆத்திரம் தீரச் சென்றுவிட்டது. அவன் அலறுகிறான்,புரளுகிறான்,பிதற்றுகிறான்.புலம்புகிறான். அவள் அவனது விருப்பத்தை நிறைவேற்றி விட்டாள். விபரீதம் விளைந்து விட்டது.!
( பல ஆண்டுகளுக்கு முன் ,1950-களின் கடைசி வருடங்களில்   சிறுகதை எனக் கிறுக்கி வைத்தது அதிகம்.எடிட் ஏதும் செய்யாமல் பதிவிடுகிறேன்..எழுத்தில் நடையில் வித்தியாசம் தெரிகிறதா.?)
-------------------------------------------------------------------------
 .        






  






புதன், 14 நவம்பர், 2012

காது காத்த பாடல்

                     
                                         காது காத்த பாடல்.
                                       ----------------------------


முதலில்அந்தப் பாடலின் பொருள்/ பதவுரை.
==================================
திதத்த ததித்த திதத்த ததித்த எனும் தாள வாக்கியங்களை தன்னுடைய நடனத்தின் மூலம் வெளிப்படுத்துகின்ற உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும்,மறை கிழவோனாகிய பிரம்மனும்,புள்ளிகள் உடைய படம் விளங்கும் பாம்பாகிய ஆதிகேசனின் முதுகாகிய இடத்தையும்,இருந்த இடத்திலேயே நிலைபெற்று அலை வீசுகின்ற,சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் ( தன்னுடைய வாசற்தலமாகக் கொண்டு ) ஆயர்பாடியில் தயிர் மிகவும் இனிப்பாய் இருக்கிறதெ என்று சொல்லிக் கொண்டு,அதை மிகவும் வாங்கி உண்ட ( திருமால் ) போற்றி வணங்குகின்ற பேரின்ப சொரூபியாகிய மூலப் பொருளே தந்தங்களை உடைய யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட ,கிளி போன்ற தேவயானையின் தாசனே பல தீமைகள் நிறைந்ததும், ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பபட்டதும்,மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும் ,பல ஆபத்துகள் நிறைந்ததும் ( ஆகிய ) எலும்பை மூடியிருக்கும் தோல்பை ( இந்த உடம்பு )அக்னியினால் தகிக்கப் படும் அந்த அந்திம நாளில்,உன்னை இவ்வளவு நாட்களாகத் துதித்து வந்த என்னுடைய புத்தி உன்னுடன் ஐக்கிய மாகிவிட வெண்டும்.
சுருக்கமாக “ நடராஜமூர்த்தியாகிய சிவ பெருமானும், பிரம்மனும், இடைச் சோலையில் தயிர் உண்டு, பாற்கடலையும் ஆதிகேசனையும் பாயலாகக் கொண்டு யோக நித்திரை செய்யும் திருமாலும் வணங்குகின்ற ஆநந்த மூலப் பொருளே,தேவயானையின் தாசனே,ஜனன மரணத்துக்கு இடமாய்,சப்த தாதுக்கள் நிறைந்த இந்த பொல்லாத உடம்பை தீயினால் தகிக்கப் படும்போது உன்னை துதித்துவந்த என் சித்தத்தை உன்னுடைய திருவடிக்கு நீ ஆட்படுத்த வேண்டும் “ என்பதே ஆகும்.
சரி. இந்தப் பொருளுடைய பாட்டு எது என்று அனுமானிக்க முடிகிறதா.?தென்னாற்காடு மாவட்டத்தில் சனியூர் என்ற இடத்தில் பிறந்த வில்லிபுத்தூரார் தமிழில் மகா பாரதம் இயற்றினார். வைணவ குலத்தவரான இவரை வக்க பாகை எனும் இடத்தை ஆண்டுவந்த மன்னனான வரபதி ஆட்கொண்டான் என்பவன் ஆதரித்து வந்தான். வில்லிபுத்தூரார் புலவர்களிடையே போட்டி வைத்து வென்றவர் தோற்றவர் காதை அறுக்க வேண்டும் என்ற முடிவுக்கு உட்படுத்தப் பட்டு பலருடைய காதுகளை அறுத்து பிரசித்தி பெற்றிருந்தார்.
இதனைக் கேள்விப்பட்ட அருணகிரிநாதர் இதற்கு முடிவு கட்ட வில்லிபுத்தூராருடன் போட்டியில் கலந்து கொண்டார். ஆரம்பத்திலேயே
“ முத்தை திரு பத்தித் திருநகை “ என்ற பல்லுடைக்கும் பாடலை முருகன் அடியெடுத்துக் கொடுக்கப் பாடியவரிடம்  வில்லிப் புத்தூரார் தோல்வியடைந்தார். அருணகிரிநாதர் வில்லிப் புத்தூராரை மன்னித்து காதறு படலத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
அருணகிரிநாதர் வாதில் வென்ற பாடலின் பொருளும் பதவுரையும் தான் இப்பதிவின் முதலில் கண்டது. போதும் இந்த சஸ்பென்ஸ் . அந்தப் பாடல் இதுதான்.

திதத் தத்தத் தித்தத, திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத் தத்தத் தித்த திதிதித்த தேதுத்து த்திதத்தா
திதத் தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத் தத்தத் தித்தித்தி தீதீ திதி துதி தீ தொத்ததே!
( நன்றி:- விக்கிப் பீடியா. )







திங்கள், 12 நவம்பர், 2012

பிறந்தநாளும் மணநாளும்






நவம்பர் மாதம் ஸ்கார்ப்பியோ ராசியில் பிறந்த சில பிரபலங்களின் பெயரைக் கூறு. .
பண்டிட் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி , ஜீ.எம். பாலசுப்பிரமணியம். .!

கடைசிப் பெயர் அனைவரும் அறிந்ததே. இந்த 74 வயது இளைஞன் பிறந்தது
11- 11-1938 மணம் முடித்தது 11-11-1964.  AND GOING STRONG//! எப்போதும் போல் ஏதோ கிறுக்கத் தோன்றியது அடியில் காண்க.


ஆண்டொன்று போக அகவை ஒன்று கூட
இன்றுறங்கி நாளை எழுவேனா என்றறியாமலேயே
சேர்த்துவிட்டேன் ஏழு பத்துகளுடன் நாலாண்டுகளும்
ஆசை எனும் அரவமே அனைத்து வினைகளுக்கும்
ஆதி காரணம் என்றறிந்தும் பாசவலையில் கட்டுண்டு
காலம் கழிந்து விட்டது.. அன்பால் கட்டுவதும்
அன்பினால் கட்டப் படுவதும் இன்பம்தான்
மறுப்பதற்கில்லை, மறப்பதற்கில்லை. .புவியில்
வந்துதித்த நாளே இல்லத் துணையுடன் சேர
தேர்ந்தெடுத்த நாளும் எனும்போது கூடுகிறது
மகிழ்ச்சி குறையில்லாப் பொலிவுடன்.

அல்லல்கள் பலவற்றோடு அனுபவங்கள்
கற்றுத் தந்த பாடங்கள் அசைபோட்டு உணரும்போது
இன்னுமொரு வாழ்வு அமையுமானால் , கேள்வி எழுகிறது,
இதையே தேர்ந்தெடுப்பேனா என்று. .நிச்சயமாய் இதையே
தேர்ந்தெடுப்பேன், என்னில் இருந்த சில குறைகள் நீக்க
எனக்கொரு வாய்ப்பு அது நல்குமல்லவா.?


குறைவற்ற வாழ்வுதனை நிறைவாக வாழ்ந்து விட்டேன்.
இனி எனக்கொரு குறையிலை நான் தயார் யாரும்
அறியாத அண்டப் பேரண்ட வெளிக்குள் ஒளியிலோ இருளிலோ
நான் நுழைய, இருப்பினும் அனுபவங்கள் பகிர எனக்கங்கொரு
வலைத்தளம் இருக்குமா, தெரியவில்லையே..!  

சில நாட்களுக்குமுன்  உன்னை வணங்குகிறேன் என்னும் ஒரு பதிவு எழுதி உருவமில்லா சக்தியை வணங்கி சில வரிகள் எழுதி இருந்தேன். அதை அருமை வலையுலக நண்பர் சூரி சிவா  ( சுப்புத் தாத்தா ) பாடி எனக்கு அணுப்பி இருந்தார். அதை அனைவருடனும் பகிர விரும்பினேன் ஆனால் என்ன செய்தாலும்  ட்ராஃப்டில் வருவது ப்ரீவியூவில் வருவதில்லை. இந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு என்  மதிப்பையும் நன்றியையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.  
பதிவுலக நண்பர்கள் 

அனைவருக்கும் என் மனக்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் 








வெள்ளி, 9 நவம்பர், 2012

எங்கே தவறு...?


                                           எங்கே  தவறு.....?
                                             -----------------
                                         ( ஒரு சிறு கதை )

தப தப “ என்று கதவு தட்டப் பட்டது.
“ இதோ வருகிறேன். அதற்குள் இப்படியா கதவைத் தட்டுவதுஎன்று கூறிக் கொண்டே வந்த ஜயந்தி சற்றும் எதிர்பார்க்காத முறையில் , கதவை திறந்ததும் தள்ளப் பட்டாள் அவளுக்கு பரிச்சயமே இல்லாத மூன்று நான்கு பேர் அவளைக் கீழே தள்ளி மிதித்து , அவள் தலை முடியைக் கொத்தாகப் பிடித்து மாறி மாறி அறைந்தார்கள். அவளுடைய பதின்ம வயதுப் பெண்: ஐயோ, ஐயோ அம்மாவை அடிக்கிறார்களே என்று சத்தம் போட ஆரம்பித்தாள்.. ‘ உடனே இந்த ஊரைவிட்டு ஓடிடு. இன்னும் இங்கேயே இருக்கலாம்னு நெனச்சா, உன் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. ஜாக்கிரதைவந்தவர்கள் அவர்களுக்கு கொடுக்கப் பட்ட பணி முடித்துக் கிளம்பினார்கள்.

ஜயந்திக்கு முதலில் ஒன்றுமே விளங்க வில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் விளங்க ஆரம்பித்ததும் நிலைமை கட்டுக்கு அடங்காமல் போவது புரிந்தது. கையில் ஒரு பையில் அத்தியாவசியமான சில துணி மணிகளை எடுத்துக் கொண்டு மகளையும் அழைத்துக் கொண்டு அவள் குடியிருந்த மாடி வீட்டிலிருந்து யாரிடமும் சொல்லாமல் வெளி யேறினாள்.

அன்றிரவு சுமார் பதினோரு மணி அளவில் ஜயந்தி குடியிருந்த வீட்டின் காம்பௌண்ட் கேட்டைத் தாண்டி வந்த சிலர் கீழ்வீட்டின் கதவைத் தட்டினார்கள்.அந்தத் தேவடியாள் ஜயந்தி எங்கே.? ஒளித்து வைத்திருக்கிறீர்களா.?”  வீட்டின் சொந்தக்காரருக்கு ஒன்றும் விளங்க வில்லை. “ ஜயந்தி மாடியில் குடியிருக்கிறாள். அங்கு போய் பாருங்கள். இந்த அகால நேரத்தில் தொந்தரவு செய்தால் பொலீசுக்கு போன் பண்ணுவோம்.என்று சத்தம் போட்டார். “ தாராளமாகப் போன் செய்யுங்கள். இந்த வீட்டில் விபச்சாரம் நடக்கிறது என்று நாங்களும் புகார் கொடுப்போம்என்று அவர்களும் பதிலுக்கு மிரட்டினார்கள். ஜயந்தி அங்கில்லை என்று உறுதி செய்து கொண்ட பின்னர் அந்த ரௌடிக் கும்பல் வெளியேறியது.

அவர்கள் சென்ற பிறகு மாடிக்குச் சென்று பார்த்தபோது கதவு பூட்டப் பட்டிருந்தது தெரிந்தது. இந்த நேரத்தில் யாரிடமும் சொல்லாமல் எங்கே போயிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு அவளை கை பேசியில் தொடர்பு கொள்ள முயன்றனர். சுவிட்ச் ஆஃப் செய்துள்ளதாகத் தகவல் கிடைத்தது.

வீட்டைவிட்டு வெளியே வந்த ஜயந்தி முதலில் அவள் கணவனுக்கு( ? ) ஃபோன் செய்தாள். “ இந்த இடமும் அவர்களுக்குத் தெரிந்து விட்டது. இனி அங்கு இருப்பது முடியாத காரியம். என்ன செய்யச் சொல்கிறீர்கள்என்று கேட்டாள்.


“ நீ நேராக மைசூருக்குப் போ. நானும் அங்கு வந்து சேருகிறேன்/ பிறகு உசிதம் போல் செய்யலாம் “ என்று பதிலளித்தான்.
இப்படி எவ்வளவு நாட்கள் ஓடி ஓடி ஒளிந்து வாழமுடியும் . இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்தவள் நினைவுகள் இதற்கான காரணங்களை மேய ஆரம்பித்தது
ஜயந்தி அழகானவள்தான். எல்லோரையும் போல் வாழ்க்கைக் கனவுகள் அவளுக்கும் நிறையவே இருந்தது. டிகிரி படிப்பு முடித்ததும் திருமணப் பேச்சும் எழுந்தது. ஜயந்திக்கு பட்டம் பெற்றதால் வேலைக்குப் போய் சம்பாதிக்கும் ஆசை ஏதுமிருக்க வில்லை. ஆகவே திருமண பேச்சு எழுந்ததும் அவள் மறுப்பு ஏதும் சொல்லாமல் கல்யாணம் செய்ய இசைந்தாள். இவர்கள் சுமாரான வசதி படைத்த குடும்பம் ஒரு அண்ணன் . பார்த்துப் பார்த்துதான் திருமணம் செய்தார்கள். ஜயந்திக்கு அவளது திருமண நாளின் முதல் இரவை மறக்கவே முடியாது.
மணமக்கள் இருவரும் ஏகப் பட்ட எதிர்பார்ப்புகளுடன் முதல் இரவை எதிர் நோக்கி இருந்தனர். ஆரம்ப சம்பாஷணைகளுக்குப் பிறகு விளக்கு அணைக்கப் பட்டது. மணமகன் முதலிரவின் போது இப்படி இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஒத்திகை பார்த்துக் கொண்டவன் போல் மெதுவாக அவளை அணைத்தான். இவளும் இணைந்து கொடுக்க மெல்ல மெல்ல உதடோடு உதடிணைய கைகளும் மேலெல்லாம் படர தாம்பத்தியத்தின் முதல் படியில் இறங்கினான். ஓரிரு நிமிடங்களில் அவனுடைய இச்சை தணிக்கப் பட்டதும் சோர்வுடன் சரிந்தான். அதுவரை அவனுடைய இச்சைக்கு தன்னை உட்படுத்திக் கொண்ட ஜயந்தி மெதுவாக உடல் கிளர்ச்சியால் ஆட்படுத்தப் பட்டு அவனை இறுக்கிக் கட்டி அணைத்தாள். இதனை சற்றும் எதிர்பாராத அவள் கணவன் முதலில் கொஞ்சம் பயந்தான். சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்ட அவன் மீண்டும் கலவியில் மூழ்கி அயர்ந்தான். ஜயந்தி அப்போதுதான் மெதுவாக இச்சையின் உச்சத்துக்குச் சென்று கொண்டிருந்தாள். அவள் கலவியின் இன்பத்தை அடையும் முன்பாக அவள் கணவன்  துவண்டு விட்டான். அவனால் முடியவில்லை ஜயந்திக்கு அவன் மேல் கோபம் எழுந்தது. இப்படியாக முதல் இரவு இருவருக்கும் வித்தியாசமான அனுபவங்களைக் கொடுத்தது. அதன் பின் வந்த நாட்களிலும் இதே அனுபவம் தொடர இருவரும் இரவு நேரத்தை வெறுக்க ஆரம்பித்தனர்.இளமைப் பருவத்தின் உடல் இச்சைகளைப் பூர்த்தி செய்ய முடியாத கணவனின் கையாலாகாத்தை வெறுத்து இவளும் , இவள் இச்சையைப் பூர்த்திசெய்ய ஒரு பொலி எருதுதான் வரவேண்டும் என்று அவனும் நினைக்கத் தொடங்கினர்.
எது எப்படி இருந்தாலும் ஜயந்தி முழுகாமல் இருந்து ஒரு பெண் மகவை ஈன்றாள். சிறிது காலத்துக்காவது நிம்மதியாக இருக்கலாம் என்று அவள் கணவன் நினைத்துக் கொண்டான். தாம்பத்திய வாழ்வில் எவ்வளவு நாட்கள் இப்படியே தாக்கு பிடிக்க முடியும்.? சண்டையும் பூசலுமாக நாட்கள் ஓடின. ஒரு நாள் இவளையும் குழந்தையையும் விட்டு விட்டு அவன் ஓடியே போய் விட்டான். ஜயந்திக்கு காரணம் தெரிந்திருந்தாலும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில் செய்வதறியாது நடமாடிக்கொண்டிருந்தாள். அவளுக்கு ஒரு இட மாற்றம் தேவை என்று நினைத்து அவளை அவளது அண்ணன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இடமாற்றம் கொஞ்சம் தெளிவு கொடுத்தாலும் ஜயந்தியின் இளமையின் இச்சைகள் பூர்த்தி செய்யப் படாமலேயே இருந்தது. துணைக்கு ஏங்க ஆரம்பித்தது மனசு. காலையில் எழுவது பள்ளிக்குப் போகத்துவங்கிய பெண்ணின் தேவைகளைக் கவனிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது என்று ஒரே சீரில் வாழ்க்கை நடந்தாலும் மனதின் வெறுமை அவளை ஆக்கிரமிக்கத் துவங்கியது. மெள்ள மெள்ள தன் அண்ணனுக்கும் அவன் குடும்பத்துக்கும் தான் பாரமாய் இருப்பதாய் எண்ணத் துவங்கினாள்
ஜயந்தியின் அண்ணனுக்கு நிறைய நண்பர்கள். அவனது வீட்டுக்கு வந்து போகும் பலரையும் ஜயந்தி கவனித்து வந்தாள். அவர்களில் சிவகுமார் இவளைக் கவர்ந்தான். நிதானமாக அவனைப் பற்றிய விவரங்களை சேகரித்துக் கொண்டாள் . சிபகுமாரனுக்கு ஏறத்தாழ இவள் வயதிருக்கும். பெரிய பணக்காரன். மணமானவன், மனசுக்குப் பிடித்தவனாய் இருந்தான். சிவகுமாரனுக்குக் குழந்தை பாக்கியம் இருக்கவில்லை. அவன் மனைவி வீட்டில் அது ஒரு பெரிய குறையாகத் தெரிந்தது. வசதி இருந்தும் குழந்தை பெறும் அருகதை இல்லாதவன் என்பதால் உதாசீனப்படுத்தப் பட்டான். சிவகுமாரன் வீட்டில் குழந்தை இல்லாக் குறைக்கு அவன் மனைவியே காரணம் என்று எண்ணினர். அவனுக்கு மறுமணம் செய்யவும் தயாராயிருந்தனர். குழந்தை இல்லை என்னும் ஒரே காரணத்துக்காக விவாக ரத்து கிடைக்குமா.?மேலும் சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டவன் அதன் பலன்களை இழக்க விரும்பவில்லை. ஜயந்தியைக் கண்டவன் அவளது மையலில் மயங்கினான். ஜயந்தியின் அண்ணனுக்கு இது பிடிக்கவில்லை. ஜயந்தியை மணமுடித்து தனியாகக் குடித்தனம் வைக்கச் சொன்னான். சிவகுமாரனின் தாய்க்கு இதில் உடன்பாடே. சிவகுமாரன் சட்டப்படி ஜயந்தியை மணக்க முடியாவிட்டாலும் கோவிலில் ஆண்டவன் சந்நதியில் ஜயந்தியின் க்ழுத்தில் தாலி கட்டி அங்கே அருகிலேயே வீடு பார்த்துக் குடித்தனம் வைத்தான்.
அதில்தான் வினையே ஆரம்பித்தது. சிவகுமாரனின் மனைவியின் சகோதரர்கள் அடியாட்களுடன் வந்து ஜயந்தியை சிவகுமாரன் இல்லாத நேரத்தில் வந்து மிரட்டியும் அச்சுறுத்தியும் வரத் துவங்கினர். அடிக்கடி ஜாகை மாற்றி பயத்தில் ஜடந்தியும் அவள் மகளும் வசித்தனர். சிவகுமாரனைத் தொடர்ந்து வந்து அவர்கள் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து கலாட்டா செய்ததால், சிவகுமாரன் அவனது காரை எங்காவது தூரத்தில் நிறுத்தி நடந்து வரத்தொடங்கினான்.  ஜயந்தி தனக்காக வாடகைக்கு வீடு தேடினால் அவளை விசாரித்து கணவனோடு வரும்படி வீட்டு உடமையாளர்கள் கேட்டனர். கணவருக்கு அடிக்கடி பயணம் செய்யும் பணி என்று பொய் பேசிப் பார்த்தும் வீடு வாடகைக்கு கிடைக்காததால் சிவகுமாரனுடன் வந்து வாடகைக்கு வீடு பிடிக்கலானாள். இப்படி ஓடி ஒளிந்து வாழ்கையில் சிவகுமாரன் மனைவி கர்ப்பம் தரித்து ஒரு ஆண்மகவை ஈன்றாள். ஜயந்தியின் பாடு திண்டாட்டமாகிவிட்டது. சிவகுமாரனின் உறவினர்கள் வன்முறையில் இறங்க நடந்ததுதான் அவள் கடைசியாக வீட்டை விட்டு வெளியேறியது.
ஜயந்தியை மைசூருக்குப் போகச் சொன்ன சிவகுமாரன் அங்கு சென்று அவளுடன் காரில் அவளது சொந்த ஊருக்கு கூட்டிச் சென்று அவளை அவளது பெற்றோரிடம் ஒப்படைத்து அவளை கைவிட மாட்டேன் என்று உறுதி அளித்து வந்து விட்டான்.
ஜயந்தியின் கதை கேட்கும்போது எங்கோ  ஏதோ தவறு என்பது புரிகிறது.  எங்கே என்று தெரிகிறதா.?.      









    

செவ்வாய், 6 நவம்பர், 2012

பெண்களும் மனைவியரும் மன்னிக்கவும்....


                      பெண்களும் மனைவியரும் மன்னிக்கவும்
                       ----------------------------------------------------------


வாழ்க்கையில் என்றாவது ஒருவன் திருமணம் செய்து கொள்ளவேண்டும்.
ஏனெனில் வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சியை நாடுவது முடியாத காரியம்.
                                                --- யாரோ ---
பிரம்மச்சாரிகளிடம் அதிக வரி வசூல் செய்யவேண்டும் .சிலர் மட்டும் அதிக சந்தோஷத்துடன் இருப்பது நியாயமல்ல.   --- ஆஸ்கர் வைல்ட்.---

பணத்திற்காக திருமணம் செய்யாதே. அதைவிட எளிதில் கடன் கிடைக்கும்
                                      ---ஸ்காட்டிஷ் பழமொழி---
நான் தீவிரவாதிகள் பற்றிக் கவலைப் படமாட்டேன். எனக்குத் திருமணமாகி இரண்டு வருடமாகிறது.       -----சாம் கினிசன்

பெண்களைவிட ஆண்களுக்கு நல்ல காலம் அதிகம். அவர்கள் தாமதமாகத் திருமணம் செய்கிறார்கள். . பெண்களை விட சீக்கிரம் இறக்கிறார்கள்,
                                      ---எச். எல் .மென்கென் ---
புது மணத் தம்பதிகள் புன்னகைக்கும்போது ஏன் என்று புரியும்.பத்தாண்டுத் தம்பதியர் புன்னகைக்கும்போது ஏன் என்று தோன்றும்.---யாரோ--
காதலுக்குக் கண் இல்லை. கலியாணம் கண் திறக்க வைக்கும்.--யாரோ--
                                      
மனைவிக்குக் கார் கதவை ஒருவன் திறந்து விடும்போது. ஒன்று நிச்சயம் அது புதிய கார் அல்லது அவள் புதிய மனைவி.
நான் என் மனைவியை எங்கு அழைத்துச் சென்றாலும் தவறாமல் வீட்டுக்கு திரும்பி  வந்து விடுகிறாள்.
நான் என் மனைவியை எங்கள் திருமணநாள் விழாவுக்கு எங்கு போக வேண்டும் என்று கேட்டேன். எங்கானாலும் இதுவரைப் போகாத இடத்துக்கு என்றாள். அப்படியானால் “ சமையல் அறைக்கு ?என்றேன்.
                                                  -----யாரோ--
எப்பொழுதும் என் மனைவியின் கையை விட மாட்டேன். விட்டால் ஷாப்பிங்  போய்விடுவாள்.
குப்பைத் வண்டி பின்னால் நான் தாமதமாகி விட்டேனா?என்று கேட்டுக் கொண்டு ஓடிய என் மனைவி பின்னே ஓடிச் சென்ற நான்,“ இல்லை . ஏறிக்கொள் ‘ என்றேன்.

அவன் திருமணம் செய்து கொள்ள ஏன் பயப் படுகிறான் என்று சொன்னான். திருமண மோதிரம் சிறிய கை விலங்கு போல் தெரிகிறதாம்

உன் மனைவி முன் வாசலில் இருந்தும்  உன் செல்ல நாய் பின் வாசலிலிருந்தும் அனுமதி வேண்டி இரைந்தால் யாரை முன்னால் உள்ளே விடுவாய்? . நிச்சயமாய் என் நாயை அது அனுமதிக்கப் பட்டவுடன் குரைப்பதை நிறுத்தும்.                 ----- யாரோ----
ஒருவன் ஒரு வேண்டுதல் கிணறுக்குள் வேண்டிக் கொண்டு சில்லறையை வீசினான். அவன் மனைவியும் வேண்டுதலுக்காக கிணற்றுக்குள் எய்யிப் பார்த்தபோது தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டாள். அவன் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனான். “ அட... இவ்வளவு சீக்கிரம் வேண்டுதல் நிறை வேறி விட்டதே “

( புன்னகை ஒரு சிறந்த நகை. இதைப் படிப்பவரும் அதை அணிந்து கொள்ளட்டுமே )      












ஞாயிறு, 4 நவம்பர், 2012

ஒரு தன்னிலை விளக்கம்.


                                 ஒரு விளக்கம்.
                                 -----------------------

அன்பு பதிவுலக நண்பர்களே, நான் இரண்டாண்டுகளுக்கும் மேலாக பதிவுலகில் எழுதி வருகிறேன். வித்தியாசமான விஷயங்களை கட்டுரைகளாகவும் ,கவிதைகளாகவும் கதைகளாகவும் எழுதி வருகிறேன். அண்மையில் எனக்கு வந்த மின் அஞ்சல்களில் கண்ட சில தகவலளையும் பகிரத் தொடங்கினேன். நல்ல விஷயங்கள் என்று எனக்குப் பட்டதை , சிலவற்றை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்தும் பகிர்ந்து கொண்டேன். அந்த விதத்தில் என் பதிவு ;சென்னையின் விற்பனைப் பிரிவுப் பெண் ,வாஷிங்டன் போஸ்டின் கண்மூலம் பதிவிட்டிருந்தேன். நல்ல விஷயம் எனப் பாராட்டியும், எனக்குத் தனிப்பட்ட மூறையில் இது  முன்பே வந்த சமாச்சாரம் என்றும் அதில் கண்ட செய்தியின்உண்மை நிலை குறித்த சந்தேகத்து டனும் கடிதம் வந்தது.  எனக்கு வந்த மின் அஞ்சலின் அடிப்படையில் எழுதி இருந்தேன். அதில் கண்ட செய்தி உண்மை என்று நம்பி எழுதினேன். அது இரண்டு வருடங்களுக்கு முன்பே வந்தது என்றோ அது தவறாக இருக்கலாம் என்றோ எண்ண வில்லை. ஆனால் நான் எழுதுவது உண்மைக்குப் புறம்பாக இருக்கலாம் எனும் செய்தியே எனக்கு வருத்தம் அளிக்கிறது. சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பால் பட்டவளாக இருக்க வேண்டும் எனும் மொழிக்கு ஒப்ப நான் எழுதுவதும் சந்தேகத்துக்கு உள்ளாகக் கூடாது என்றும் எண்ணுகிறேன். எனக்கு  அனுப்பிய நண்பருக்கும் விளக்கம் கேட்டு எழுதி உள்ளேன். ஆனால் அவர் எனக்கு முகப் பரிச்சயம் கூட இல்லாதவர். பார்ப்போம் பதில் வருகிறதா என்று.  இருந்தாலும் இனி மின் அஞ்சலில் வரும் செய்திகள் உண்மை என்று நம்பி பகிர்வதில்லை என்று முடிவு செய்துள்ளேன். அது சரியானதுதான் என்று நம்புகிறேன்

இடம் பெயர் போன்ற விவரங்களுடன் தவறான செய்தி கொடுக்க வேண்டிய அவசியம் யாருக்கும் இருக்காது என்னும் என் நம்பிக்கை பொய் என்று எண்ணமனம் வரவில்லை. ஒரு வேளை காலங்கடந்த செய்தியாய் இருக்கலாம். காலங்கடந்த நிகழ்ச்சி என்பதால் சம்பந்தப் பட்ட வர்கள் நினைவில் இருந்து மறைந்து போயிருக்கலாம். இருந்தாலும் மின் அஞ்சல் செய்திகளை பதிவிட மாட்டேன்  என்பதில் உறுதியாய் இருக்கிறேன்.    

வெள்ளி, 2 நவம்பர், 2012

சென்னையின் விற்பனைப் பெண்,(வாஷிங்டன் போஸ்ட் கண்மூலம் )



                     வாஷிங்டன்  போஸ்ட் கண்கள் வழியே
          சென்னையின் விற்பனைப் பெண்


மைலாப்பூரில் கபாலீஸ்வரர்  கோயிலில் தரிசனம் முடித்து அருகில் இருந்த கிரி ட்ரேடிங் ஸ்டோர்ஸுக்குப் போய் தத்வ போதாஎனும் புத்தகம் கிடைக்கிறதா என்று தேடிக்கொண்டிருந்தோம்.
பலரும் பலவிதமான ஒலி நாடாக்களும் குறுந்தகடுகளும் அபங்கிலிருந்து, அருணா சாய்ராமிலிருந்து, , பாம்பே ஜெயஸ்ரியிலிருந்து என ஆர்வத்துடன் தேடி வாங்குவது கண்டு சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறோம் என்ற மகிழ்ச்சி எங்களை ஆட்கொண்டது.
நான் இந்தப் புத்தகத்துக்காக எல்லா இடங்களிலும் தேடிக் கொண்டிருந்தபோது, என் மனைவி பாரதியார் பாடல்களையும் எம்.எஸ்ஸின் இசைத் தகடுகளையும் வாங்கிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது கல்லாப் பெட்டி அருகே நின்றிருந்த அந்தப் பெண்ணைக் கவனித்தேன். அவளும் ,( 17, 18 வயதிருக்கலாம், அருகில் இருக்கும் ஏதாவது கிராமத்தைச் சேர்ந்தவளாக இருக்கலாம் எட்டாவது வரை படித்திருக்கலாம் , கொஞ்சம் கருப்பு நிறத்தில் இருந்தாள்  ஏழ்மையின் காரணமாக இங்கு பணியில் இருக்கலாம் என என் எழுத்தாளனின் புத்தி என்னவெல்லாமோ கணிக்க ), எங்களையும் கவனித்துக் கொண்டிருந்தாள். நான் அவளை கவனிப்பதை விட்டு “ தத்துவ போதம்தேடுவதில் முனைந்தேன்.
சந்தியா வந்தனத்திலிருந்து சுவாமி விவேகாநந்தாவின் சிகாகோ பேச்சுகள் வரை ஏதேதோ புத்தகங்களை சுமார் நாற்பது நிமிடத்துக்கும் மேலாக பார்த்தேன், பிறகு அவளைப் பார்த்தேன். அவளும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். நான் அந்தப் புத்தகம் பற்றி அவளிடம் ஏதும் கேட்கவில்லை. அந்தப் பெண்ணுக்கு இந்தப் புத்தகம் பற்றித் தெரிந்திருக்காது என்ற எண்ணம்தான் காரணம்
சார் நான் உங்களுக்கு உதவட்டுமாஎன்று தமிழில் கேட்டாள்.
நான் தத்துவ போதா “ எனும் புத்தகம் தேடுகிறேன்.
சம்ஸ்கிருதமா அல்லது ஆங்கிலம் சம்ஸ்கிருதம் சேர்ந்ததா.?
ஓ... இவளுக்குத் தெரிக்றது. “ சம்ஸ்கிருதமும் ஆங்கிலமும் “
“ சின்மயா மிஷன், அல்லது இந்து பப்ளிகேஷன்ஸ் அல்லது ராமகிருஷ்ண மட  பிரசுரங்களில் எது வேண்டும்.?
“ எனக்குத் தெரியவில்லை. நான் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். உண்மையில் எனக்கு எதுவும் தெரியாது “
“ உங்களுக்குத் தமிழ் படிக்கத் தெரியுமா சார்.?
தெரியும். நான் ஒரு தமிழன்” ( பெரும்பாலான நேரங்களில் பெரும்பாலான இடங்களில் நான் அப்படி ஒப்புக் கொண்டிருக்க மாட்டேன் என என் உள்ளுணர்வு கூறியது.)
நான் அரை மணி நேரத்துக்கும் அதிகமாக தேடிய ஷெல்ஃப் லிருந்து ஓடிச் சென்று ஒரு புத்தகத்தை எடுத்து வந்து . இந்தப் புத்தகம் தமிழில் என். சிவராமன் எழுதி இந்து பப்ளிகேஷன்ஸ் பிரசுரித்தது..அருமையான புத்தகம் எளிதில் புரிந்து கொள்ளக் கூடியது. சம்ஸ்கிருத டெக்ஸ்டும் உள்ளே இருக்கிறது.
கடவுளே.! நான் எப்படி இந்தமாதிரி இப்பெண்ணை  தவறாக  ,குறைவாக எடை போட்டுவிட்டேன். நான் ஒரு என். ஆர் ஐ என்ற அகங்காரமா? இல்லை ஏழ்மையில் இருக்கும் இந்த கருத்த கிராமத்துப் பெண்ணுக்கு  தத்துவ போதம் பற்றி என்ன தெரிந்திருக்கும் என்ற அறியாமையா.?
நான் என் ஆணவத்தை ஒதுக்கி  தாழ்மையுடன் ,மேடம் ,நேற்றுவரை எனக்கு தத்துவ போதம் பற்றி ஏதும் தெரியாது. யார் எழுதியது என்றும் தெரியாது. நேற்று இந்தத் தலைப்பில் ஒரு பிரசங்கம் கேட்டேன் அதிலிருந்து என் ஆர்வம் கூடியது.
“ பாரதீய வித்தியா பவனில்  கோடா வெங்கடேஸ்வர சாஸ்திரியின் பிரசங்கம் கேட்டீர்களா.?
அட.. உனக்கு எப்படித் தெரிந்தது.?
அவர் தொடர்ந்து இந்த மாதிரி விஷயங்களில் தலைப்புகளில் பாடம் நடத்துகிறார். நகரத்தில் உள்ளவர்களில் மிகச் சிறந்தவர்.
“ உனக்கு இந்த மாதிரி விஷயங்களில் ஈடுபாடு அதிகமா.?
“ ஆமாம் சார். விவேகாநந்தா ராமகிருஷ்ண பரம ஹம்சா போன்றவர்களைப் படிப்பதில் விருப்பம் அதிலும் தத்துவ போதம் எனக்குமிகவும் பிடித்த சப்ஜெக்ட்.
“ நீ தத்துவ போதம் படித்திருக்கிறாயா.?
ஆம். சிவராமன் எழுதியதைப் படித்திருக்கிறேன். ஒரு முறை படிக்கக் கையில் எடுத்து விட்டால் கீழே வைக்க மனம் வராது.
அப்படி என்னதான் அப்புத்தகத்தில் இருக்கிறது.?
 “ சார் தத்துவ போதம் பற்றி ஏதும் தெரியாதது போல் தமாஷ் செய்கிறீர்கள்.
“ உண்மையில் என அறியாமையைத் தான் கூறுகிறேன்.
சற்று தூரத்தில் இருந்து என் மனைவி கவனித்துக் கொண்டிருந்தாள்.
:சார், என்னைப் பொறுத்தவரை இந்த புத்தகத்தை ஒரு முறை படித்தால் வேதாந்தத்தின் சாராம்சத்தை உணர்ந்து கொள்ளலாம். அகங்காரத்தை நீக்கி பணிவைக் கற்றுத்தரும்.
“ இந்தப் புத்தகம் ஒருவனுக்குப் பணிவைக் கற்றுத்தருமா.?
“ நிறைய நம்பிக்கைத் தேவைப்படும்  மனம் ஒன்றி லயித்துப் படித்தால் அது சாத்தியமாகும். “
அடுத்து என் மனைவியும் எங்கள் சம்பாஷணையில் கலந்து கொண்டு அந்தப் பெண்ணின் புத்தி சாதுர்யத்தையும் அறிவையும் கண்டு இவளை நீங்கள் ஏன் வாஷிங்டன் போஸ்ட் டுக்காக பேட்டி எடுக்கக் கூடாது.? எப்பவும் பாரிஸ் ஹில்டன் போன்றவர்களைத்தான் பேட்டி காண வேண்டுமா.?என்றாள். எனக்கும் நான் இந்தப் பெண்ணுக்குக் கடமை பட்டு இருப்பதாகத் தோன்ற பேட்டிக்கு எனக்கு கொஞ்ச்ம் நேரம் ஒதுக்க முடியுமா என்று கேட்டேன்.
“ மன்னிக்கணும் சார். முதலில் முதலாளி ஒப்புதல் தர வேண்டும். மேலும் இங்கு வரும் பலருக்கும் என் வழிகாட்டலும் சேவையும் தேவைப் படும்.
“ உன் பெயரென்ன.?
“ கலைவாணி.
என் மனைவிக்கு இந்தப் பெண்ணின் முதலாளியிடம் உள்ள மதிப்பும் வேலையில் இருந்த அக்கறையும் மிகவும் பிடித்துப் போய் நேராக முதலாளியிடம் சென்று அந்தப் பெண் கலைவாணி “ என்று துவங்கினாள்.
“ ஆம். நல்ல உழைப்பாளி
“ இவர் என் கணவர் விஸ்வநாத் “
“உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி சார்.
“ இவர் வாஷிங்டன் போஸ்ட் இல் சீனியர் ஜர்னலிஸ்ட்
முதலாளி எழுந்து நின்று “ வாஷிங்டன் போஸ்ட் இலா என்று கேட்டார்.
ஆம். நான் இந்தப் பெண்ணை பெட்டி காண விரும்புகிறேன். இவளுடைய பேச்சும் பணிவும் வேலையில் இருக்கும் அக்கறையும் என்னை மிகவும் ஈர்த்து விட்டது “
முதலாளி அவளைக் கூப்பிட்டார். “ கலைவாணி இவர்கள் அமெரிக்காவிலிருந்து இவ்வளவு தூரம் வந்திருக்கிறார்கள். உன்னுடன் சிறிது நேரம் பேச விரும்புகிறார்கள். உன்னால் முடியும்தானெ.?
அப்பொழுது மாலை நேரம் . 5.45 மணி ஆகி இருந்தது. சார் இப்போது நல்ல கூட்ட நேரம் . நிறைய வாடிக்கையாளர்களுக்கு என் உதவி தேபைப் படலாம் . இவர்கள் நாளைக்கு வர முடியுமென்றால்..........
சரி. நாங்கள் நாளை மீண்டும் வருகிறோம்
மறு நாள் டைம்ஸ் ஆஃப் இண்டியா, மெட்ராஸ் ப்ரெஸ் க்ளப் போன்ற இடங்களின் நிகழ்ச்சிகளை ஒதுக்கித் தள்ளி இந்தப் பெண்ணை பேட்டி காண வந்தேன்கூட்டம் அதிகமில்லாத நேரம் . நானும் என் மனைவியும் அவளைப் பற்றி தெரிந்து கொண்டது. கலைவாணி ஆற்காடு பக்கத்தில் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்தவள். அவளுக்கு ஐந்து சகோதரிகள். இவள்தான் மூத்தவள். தந்தை ஒரு குடிகாரன் இவர்களைத்தவிக்கவிட்டு சில வருஷங்களுக்கு முன் இறந்து போனான். தாயார் சித்தாளாகப் பணி புரிந்து இவர்களைக் காப்பாற்றிக் கொண்டிருந்தவள். இவர்களை நடுத்தெருவில் விட்டு இறந்து இரண்டு வருடங்களாகின்றன.
ஒன்பதாவது முடித்திருந்த கலைவாணி வேலை தேடி வந்தபோது ‘கிரி ட்ரேடிங் அவளுக்கு உதவ முன் வந்தது. தன்னுடைய ஐந்து சகோதரிகளையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்து தன் சொற்ப சம்பளத்தில் அவர்களைப் பராமரித்து வருகிறாள். சகோதரிகள் ஐந்து பேரும் சென்னை கார்பொரேஷன் பள்ளியில் படிக்கின்றனர்.
“ கலைவாணி தத்துவ போதம் பற்றிப் படிக்கும் இந்த ஆர்வம் உனக்கு எப்போது ஏற்பட்டது..?
“ சார், இங்கு நான் சேர்ந்தபோது வாடிக்கையாளர்களுக்கு உதவ வேண்டும் என்றால் நமக்கும் சிறிதாவது தெரிந்திருக்க வேண்டும் என்று எண்ணி சிறிய புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன். அப்படியே ரமணர், ராமகிருஷ்ணர், விவேகாநந்தர் போன்றோரைப் பற்றிப் படிக்க ஆரம்பித்து. பகவத் கீதை விவேக சூடாமணி என்று படிக்கப் போய் ...
உனக்கு இங்கே என்ன சம்பளம் ?
“மாதம் ரூ, 2500/-
“ இந்த சம்பளத்தில் ஐந்து சகோதரிகளையும் வைத்துக் கொண்டு சமாளிக்க முடிகிறதா.?
ரொம்பக் கஷ்டம் சார். ஆனால் முதலாளி நிறையவே உதவுகிறார்
“ வாழ்க்கையில் உன் லட்சியம் என்ன.?
“ என் சகோதரிகளை படிக்க வைக்க வேண்டும் படித்தால் அவர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும் இல்லையா சார்.?
நான் உனக்கு மாதம் ரூ. 10,000/- தந்தால் உன் செலவுகளை சமாளிக்கப் போதுமாய் இருக்குமா.?
“ அது மிகவும் அதிகம் சார். ஆனால் என் முதலாளி ஒப்புதல் கொடுத்தால்தான் நான் பெற்றுக் கொள்வேன்.
நாங்கள் அவளை முதலாளியிடம் அழைத்துக்கொண்டு போய் “ இவளுடைய சகோதரிகளின் படிப்பு முடியும் வரை இவளுக்கு மாதம் ரூ.10000/- தர விரும்புகிறோம். என்றோம்
“ இவள் அதற்குத் தகுதி உள்ளவள்தான் சார்..நீங்கள் என்னை நம்பலாம். நான் மாதாமாதம் அந்தப் பணம் இவளுக்குச் சேரும்படி பார்த்துக் கொள்கிறேன். இல்லையென்றால் நீங்கள் இவள் பெயரில் ஒரு அக்கௌண்ட் ஓப்பென் செய்து அதில் பணம் நேராகவே செலுத்தலாம்
என் நண்பர் , டைம்ஸ் ஆஃப் இந்தியா வின் ரீஜினல் மானேஜராய் இருக்கும் ஜான் பால் என்னுடன் வந்தவர் “ நல்ல காரியம் செய்தாய்என்றார்.
என் மனைவி , “ மயிலைக் கற்பகாம்பாள் அருளால் கலைவாணி வேதாந்தத்தில் நல்ல தேர்ச்சி பெற்று அமெரிக்காவில் சொற்பொழிவுகள் நடத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை நாம் செய்யலாம்என்றாள்.
நாங்கள் ஆச்சரியத்தின் பிடியில் இருந்து விலகாமல் அங்கிருந்து அகன்றோம். இந்தியாவின் அகத்தே கலைவாணி மாதிரியான அணிகலன்கள் எவ்வளவு எவ்வளவோ காணலாம். அவர்கள் முன் என் ஆணவம் அழிக்கப் பெற்று துரும்பு போல் உணர்கிறேன். பணிவுடன் தலை சாய்க்கிறேன்.
( ஆயிரக் கணக்கான பாடப் ப்படாத , அறியப் படாத நாயகர்களும் நாயகிகளும் இந்தியாவின் மூலை முடுக்குகளிலெல்லாம் அணியப் படாத அணிகலன்களாக இருக்கக் கூடும். அவர்களை முன் நிறுத்தும் முயற்சியில் ஈடுபடல் அவசியம். ) 
----------------------------------------------------------------