Wednesday, December 1, 2010

வலைப்பூவில் பதிவுகள் ( ஒரு விமரிசனம் )

வலைப்பூவில்   பதிவுகள்  ( ஒரு  விமரிசனம்  )
--------------------------------------------------------------------
         மனதில்   பூட்டப்பட்டிருக்கும்   எண்ணங்களுக்கு   வடிகால்   தேட   நாம்   எழுதுகிறோம்.  சில  விஷயங்கள்  மனதை  வெகுவாகப்   பாதித்திருக்கும்.  இல்லை   சில   விஷயங்கள்   சொன்னால்   படிப்பவர்களுக்குத்  தெரிந்து  கொள்ள   வாய்ப்பாயிருக்கும்.   பாடியவன்   பாட்டைக்  கெடுத்தான், எழுதியவன்  ஏட்டைக்  கெடுத்தான்  என்பது  போல்  இல்லாமல் , எழுதப்படுவதால்  எழுதுபவனும்,  வாசிப்பவனும்   சிறிதேனும்  பாதிப்படைய   வேண்டும்.,பலனடைய   வேண்டும்.  சிலரது  எழுத்துக்களைப்   படிக்கும்போது , மூன்று   வயதுக்  குழந்தைகள்  மனசில்  தோன்றும்  ஏகப்பட்ட  எண்ணங்களைக   கோர்வையாகக்   கூற  முடியாமல் , அவசரமாகவும்  தொடர்பு   அறுந்தும்   பேசுவது  போல்  இருக்கிறது.

             மொழியின்  மேல்  இருக்கும்  ஆளுமையை   வெளிப்படுத்தும்   விதத்தில்  சிலரது  எழுத்துக்கள்   இருக்கின்றன. என்னதான்   சொல்ல  வருகிறார்கள்  என்று  சில சமயம்  புரியாமல்  இருக்கிறது ( Abstract  writings ) எழுதுபவர்கள்  எல்லோருக்கும்  அவரவர்கள்   எழுத்து , "காக்கைக்குத்  தன  குஞ்சு   பொன்   குஞ்சு "  என்பதுபோல்   இருக்கும்,  மறுக்க   முடியாது.
 
          வலைப்பூக்களில்  எழுதப்படும்  தலைப்புக்கள் , எடுத்துக்கொள்ளப்படும்   விஷயங்களின்    "வெரைட்டியை"   காண்பிக்கின்றன . எத்தனை  விஷயங்களைத்தான்
பகிர்ந்து  கொள்ள  எழுதுபவர்கள்  துடிக்கிறார்கள் என்றும்   புரிகிறது. வெவ்வேறு  விஷயங்களில்  எல்லாப்  பதிவுகளுக்கும்  அதற்குரிய  வாசகர்  வட்டம்  இருக்கும்.  போகப் போக   வளரவோ  குறையவோ  செய்யலாம். அது  எழுத்துக்களின்  தன்மையைப்  பொருத்தும்  இருக்கலாம் .

          பதிவுகளைப்  பலர்  படிக்கிறார்கள்  என்பதைப்  புரிந்து  கொள்ள  அப்பதிவுகளுக்கு  வரும்  காமெண்ட்ஸ்  மூலம்  அறிந்து  கொள்ளலாம்.   ஆனால்  படித்துவிட்டு   எந்த   ஒரு   பின்னூட்டமும்   எழுதாமல்   செல்பவர்களும்   இருக்கத்தான்   செய்கிறார்கள்.  பெரும்பாலான  பின்னூட்டங்கள்   உற்சாகப்   படுத்தியும்   புகழ்ந்துமே   எழுதப்படுகிறது.    சில  பதிவர்கள்  பின்னூட்டங்களைப்   பார்த்து   தணிக்கை   செய்து    விருப்பப்பட்டால்   பிரசுரிக்கலாம்   என்பது   போல்   வலைப்பூவில்   வசதிகள்   வைத்திருக்கிறார்கள். எழுதப்  படும்  பின்னூட்டங்கள்   பிரசுரமாகாமல்   இருக்க  என்ன   காரணங்கள்   இருக்கலாம்.?   மேலெழுந்தவாரியாகப்  பார்க்கப்போனால், எழுதியவற்றை  விவாதிக்கக்கூடாது   என்ற  மனப்பான்மையாக   இருக்குமோ  என்று  தோன்றுகிறது. எழுதுபவன்  விமரிசனத்துக்குப்  பயப்படலாமா.?யார்  என்ன  விமரிசனம்  செய்தாலும்  காக்கைக்குத்  தன  குஞ்சு பொன்  குஞ்சுதானே. எழுத்தின்  தரத்தை  உயர்த்திக்  கொள்ள  வேண்டுமென்றால்   விமரிசனத்துக்கு   உட்படத்   தயக்கம்  கூடாது. எழுதிய  பின்னூட்டங்களை  பதிவர்கள்  எப்படி  எடுத்துக்கொள்கிறார்கள்  என்பதை  அறிய மறுபடியும்  அவர்கள்  வலைக்குள்  புகுந்து  பிறகுதான்  தெரிந்து  கொள்ள   வேண்டி  இருக்கிறது.

          சாதாரணமாக  எழுதுபவற்றை  கதை,  கவிதை,  கட்டுரை  என்று  மூன்று  தலைப்புகளில்  அடக்கி  விடலாம். மொழியின்  மீதிருக்கும்   ஆளுமையைக்  காண்பிக்க   கவிதைகளும் , புனைவுத்  திறமையை  வெளிப்படுத்த  கதைகளும்  நிகழ்வுகளில்  அக்கறையை  தெரியப்படுத்த   கட்டுரைகளும்  எழுதப்  படுகின்றன. ஒவ்வொருவருக்கும்   ஒவ்வொருவிதமான  நடை , மொழியினை  கையாளும்  லாகவம் , ஆளுமை  எல்லாம்   தெரியவருகிறது. கவிதைகளில்  மனதைப்  பாதிக்கும்  சிறு  விஷயங்களும்  எழுதப்   படுகின்றன . அப்படி  எழுதுவோர்  நிச்சயமாக  ஏதோ  ஒரு  பாதிப்பில்தான்  எழுதுகிறார்கள்.  அவர்கள் சொல்லவருவது   படிப்பவருக்குப்  போய்ச்  சேர்ந்தால்  மிகவும்  நல்லது.

          சில  சமயம்  மனசால்  மிகவும்  பாதிக்கப்பட்டு  எழுதப்படும்  பதிவுகள்  யாராலும்  படிக்கப்படாமலேயே  போக  வாய்ப்பிருக்கிறது. குறைந்த  பட்ச வாசகர்களாக  பதிவின்   தொடர்பாளர்களைக்  கூறலாம். நம்  எழுத்தைப  பிறர்  படிக்கவேண்டும்  என்று  நாம்   நினைப்பது  போலத்தானே  எல்லாப் பதிவர்களும்  நினைப்பார்கள். பிறருடைய  பதிவுகளைப  படித்து  பின்னூட்டங்கள்  நாம்  எழுதினால்  அவர்களும்  நம்  பதிவுகளைப்  படிக்க   வாய்ப்புண்டு.

          சிலரது  இடுகைகளின்  எண்ணிக்கை  கண்டு  பிரமிப்பாய்  இருக்கிறது. ஒரே  நாளில்  இரண்டு, மூன்று, நான்கு  இடுகைகள்  கூட  இருக்கின்றன. எழுதுவதில்  அவர்களுடைய  உற்சாகம்  தெரிகிறது.  தமிழ்மணத்தில்  ஒரு நாளில்  முன்னூறுக்கும்  மேற்பட்ட  இடுகைகள்  பதிவாகின்றன. அவற்றை  மேலோட்டமாகப்  பார்க்கவே  நிறைய  நேரம்  தேவைப்படுகிறது. அதில்  சிலவற்றையாவது  தேர்ந்தெடுத்துப்  படித்து  உள்வாங்கிக்கொள்ள  படிப்பவர்களுக்கு   ஆர்வமும்  பொறுமையும்  வேண்டும்.

          பதிவர்களைப்  பற்றியும்  அவர்களது  எழுத்துக்களைப்   பற்றியும்  அறிந்துகொள்ள   அவர்களுடைய  பழைய  இடுகைகளையும்  படித்தால்தான்  ஓரளவுக்கு  அவர்களைப்  பற்றிக்  கணிக்க  முடியும்.  யாருக்கு  எந்த  மாதிரி  எழுத்து  கைவருகிறது, அது  நமக்குள்  ஏதாவது  பாதிப்பை  ஏற்படுத்துகிறதா , எழுதுவது  அரசியலா,  அறிவியலா,  திரையியலா,  ஆன்மீகமா,  விஞ்ஞானமா , இவற்றில்  எதில்  வெகுஜன  நாட்டமிருக்கிறது   என்பதை  எல்லாம்  தெரிந்து  கொள்ள  முடியும்.

          தரத்தைப்  பற்றிய  என்னுடைய  பதிவொன்றில்  நான்  கூறியிருந்ததை  மீண்டும்  நினைவு   கூர்கிறேன். எழுதுபவர்களை  உற்பத்தியாளர்களாகவும்   வாசிப்பவர்களை   வாடிக்கையாளர்களாகவும்   கருத வேண்டும். வாடிக்கையாளரின்  திருப்தியே   தரம்.  வாசகனின்  திருப்தியே  எழுத்தின்  தரம்.
--------------------------------------------------------------------------------------------    
 


  .   




 

8 comments:

  1. உள்வாங்கிக்கொண்டேன்..

    ReplyDelete
  2. உங்கள் பதிவுகள் தமிழிலா ஆங்கிலத்திலா.?

    நன்றாக மிளிர என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. உங்கள் கருத்துக்களை முழு மனதோடு ஒத்துக் கொள்கிறேன்.வாசகர்கள் பல தரப் பட்டவர்,அதே போல்பதிவர்களின், எழுத்திலும் எண்ணங்களிலும்
    வித்தியாசம் இருக்கத் தான் செய்யும்.யாருக்காக எதை மாற்றிகொள்வது எனபது கேள்வி?.அப்படி மாற்றினால் எழுத்தின் சுயம் கெட்டுப் போகலாமோ,என்ற அச்சம்.பதிவு என்பது என்னைப் பொறுத்தவரை, பொதுவில் வைக்கப் படுகின்ற நாட்குறிப்பு .
    இங்கு எழுத்துக்களுக்கு இலக்கணம், இலக்கு என்ற கட்டுப்பாடுகள் தளர்ந்திருக்கும்,சில சமயம் பல கிறுக்கலாய்த் தான் இருக்கும்.சிலர் தோன்றிய போதெல்லாம் எழுதுவர்.சிலர் வரை முறை வைத்து எழுதுவர்.ஆக இது அவரவரின் எண்ண ஊற்றுக்கள்,கிடைக்கும் நேரம் பொறுத்தது.முத்துக்களைப் பொருக்கவும்,அன்னம் போல் தேர்ந்து தெளிதலும்,அவகாசம் தேவை. ஆற்றல் மிக்க எழுத்தாளர் போல்,ஒரு சிலரின் பதிவுகள் தான் இருக்கக் கூடும்.விமரிசனங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்,என்பதில் எள்ளளவும் கருத்து வேறுபாடில்லை.ஆயின் தரம் தாழ்ந்த,தனிப்பட்ட புண் பட வைக்கும் விமரிசனங்களை இடாமல்,பிடித்தவற்றை பற்றி பின்னூட்டம் இட்டு ஒதுங்கலாம்.
    ஆக்கபூர்வமான,உண்மையான
    பின்னூட்டங்கள்,பதிவர்க்கு கசப்பே
    ஆயினும் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும்.நன்றாக அலசி,ஆராய்ந்து எழுதியுள்ளிர்கள்.குற்றம்,குறை இருப்பின்" நக்கீரன்", போல் சொல்லவும்.மாற்றுச் சிந்தனைகளுக்கு வழி பிறக்கும் ..என்றும் அன்புடன்

    ReplyDelete
  4. உங்கள் கருத்துக்கள் இன்னொரு விமரிசனம் போல்
    ஆழ்ந்து சிந்தித்து எழுதப்பட்டிருக்கிறது.நன்றி.

    ReplyDelete
  5. What i feel is - if your writing can inspire a person to aspire and has an positive impact in him then you have the art of conveying. Is this not a reason good enough for me to say - what you write is not what matters. what you convey and how simple it is, for a person to relate, and understand, that matters.
    Ezhuduvadhu peridhalla adai padithu purindu kolvadu thaan peridhu. ezhudum neramo, kalamo, edamo edhuvum mukiyam illai. ezhuthil uir thaan mukiyaam en endraal adhil anubavam kooda nizhal madiri pin thodarugirathu. adhu ungalidam irukiradhu sir. am very moved by your writings - mano

    ReplyDelete
  6. உங்கள் கருத்தும் kalidoss கருத்தும் சரியே. எழுத்தை எழுத்தாகக் கொண்டு படித்தால் மனம் புண்படாது படிக்கலாம் என்பது என் எண்ணம். முகந்தெரியாதவரை காரணமில்லாமல் தாக்குவதில் எழுதுகிறவருக்கும் motive இல்லை என்பதை நம்புகிறவன் நான். எழுத்தின் வெளிப்பாடு பலசமயம் பலவித புரிதல்களை ஏற்படுத்தக்கூடியதால் படிப்பவரும் திறந்த மனதோடு, அடிப்படை நம்பிக்கையோடு படித்தால், இணையத்தில் அருமையான கலந்தெழுத்தாடல்களில் கலந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  7. எழுதுபவரின் நோக்கமே எழுத்தைப் பிறர் படிக்க வேண்டும். நம் கருத்துகள் பரவலாகச் சென்றடைய வேண்டும் என்பதுதான். இணையத்தில் கலந்தெழுத்தாடல்கள் நடக்குமானால் மகிழ்ச்சி அடைவேன். நன்றி திரு. அப்பாதுரை அவர்களே.

    ReplyDelete
  8. அருமையான கருத்துக்களுடன் கூடிய ஆலோசனைகளுக்கு நன்றி பாலு சார்.

    நான் எழுத நினைத்துகொண்டிருந்த விஷயங்களைத்தான் சொல்லியிருக்கிறீர்கள்.

    இங்கு பலதரப்பட்ட குழுக்களாக எழுதுபவர்களிலும் படிப்பவர்களிலும் இருக்கிறார்கள்.

    பின்னூட்டங்களும் மனதிலிருந்து வருபவையாக இல்லாமல் வேடிக்கையாக இருக்கின்றன.

    மந்தை மனோபாவம் அதிகமாக இருக்கிறது.

    ஒரு கோயிலில் தர்மதரிசனத்துக்கு முண்டியடிப்பவர்களை இது நினைவுபடுத்துகிறது.

    me the first, second என்று ம்யூசிகல் சேர் சமாச்சாரங்களும் நடக்கின்றன.

    அதற்கு அடுத்த படி சூப்பர், அருமை, கலக்கிட்டீங்க என்ற ஒற்றை வரித் தாக்குதல்கள்.

    நானோ நீங்களோ எழுதுகிற எல்லாமே நன்றாக அமைய வேண்டும் என்கிற மெனக்கெடலோடுதான் எழுதுவோம்.

    இதையும் தாண்டி ஃபார்ம் இல்லாத பேட்ஸ்மேன் போல சில சமயங்களில் சொதப்பல்கள் நிகழவும் வாய்ப்புண்டு.

    இதையும் வாசகர்களின் தெளிவான விமர்சனம் தான் பார்வைகாட்டும் விளக்காக உதவுமே தவிர விமர்சனத்தின் இனிப்பை மட்டும் உட்கொண்டு கசந்தால் ஒதுக்குவது எழுத்தின் ஆரோக்கியத்துக்கு உகந்ததல்ல.

    இதற்கடுத்தது படைப்பவர்களின் அக்கிரமம் அல்லது அகங்காரமான போக்கு.அல்லது தரம் தாழ்ந்த தாக்குதல்கள் நம்மை அடுத்த முறை அந்தத் தளங்களுக்குள் நுழைவதை யோசிக்க வைக்கின்றன.

    இன்னும் விரிவாய் என் தளத்தில் ஒரு இடுகையாய்ச் சொல்லிவிடலாமெனும் அளவுக்கு நீள்வதால் இது போதுமென்று நிறுத்துகிறேன்.

    இதுபோன்ற கருத்துக்களில் நிலவும் ஒத்த சிந்தனை ந்ல்ல எழுத்துக்களைப் படிக்க உதவும்.

    உங்கள் அலைவரிசைக்கு நன்றி பாலு சார்.

    ReplyDelete