Wednesday, March 7, 2012

நினைவில் நீ ( அத்தியாயம் பன்னிரெண்டு )


                                    நினைவில் நீ ( நாவல் தொடராக )
                                    ----------------------------------------------

                                                   -------  12   -------

         கண்ணன், பாபு தன்னை வேண்டுமென்றெ அவமானப் படுத்திவிட்டதாக எண்ணிப் பொறுமினான். பாபுவின் வாதப் பிரதி வாதங்கள் கவைக்குதவாதது என்று திடமாக எண்ணினான். செய்யப் பட்ட செயலின் .குற்றத்தை மறைக்க, ஏமாற்றுகிறவர்கள் எழுப்புகிற குரலில் உண்மை உள்ளதென்று பாபு தவறாக எண்ணுகிறான் என்றும் வேதனைப் பட்டான். ஆண்டவன் வழிபாடு, அர்ச்சகம் செய்வது இவற்றுக்கென்றே ஏற்படுத்தப் பட்டதுதான் பிராமண குலம் என்றல்லவா பாபு கூறுகிறான்.!அப்படிச் செய்யாதவர்களெல்லாம் சூத்திரர்களாம். ! நாக்கில் நரம்பில்லாமல் பெரியவன் என்ற பேதமில்லாமல் என்னையே எடுத்தெறிந்து பேசிவிட்டானே. சே..! இதெல்லாம் இந்த புத்தி கெட்ட மாலதியின் பேச்சைக் கேட்டதால் வந்த வினையல்லவா,! தான் கஞ்சி குடிக்க தன் கணவன் மட்டும் ஒன்றும் அறியாமல் வேளா வேளைக்கு தின்று போகிறானே என்ற வேதனையில் அவள் என்னிடம் ஏதாவது சொல்லியிருந்தால், அவளுக்குச் சோறு போட வகையிருக்கிறதா என்று பார்ப்பது, இல்லையென்றால் நானும் கஞ்சி குடித்துவிட்டுப் போகிறேன் என்றிருக்காமல், அவள் பேச்சைக் கேட்டு அங்கு போனதே என் மடத்தனம் “


              கண்ணனுக்கு ஏற்பட்ட மனப் புகைச்சல் எளிதில் அடங்குவதாக இல்லை. என்னென்னவோ எண்ணித் தன்னையே குறை கூறிக் கொண்டான்.. பிராமணீயத்தை எதிர்க்கும் அந்த அற்பனுக்கு,அதன் மகத்துவத்தைக் காட்டியே தீருவது என்று சங்கல்பித்துக் கொண்டான்.

    இன்றைக்கு வந்து வேறு உயிரை வாங்கப் போகிறான்..என்னென்னவோ சொல்லிக் குழப்புகிறான். நானாவது பேசாமல், ஒன்றாக வாழ விரும்பி வந்திருக்கிறோம் என்பதோடு நிறுத்தி இருக்கலாம். பிறகு நடப்பவற்றைப் பிறகு கவனித்திருக்கலாம். சே.!அதைவிட அவன் குணம் இப்போது தெரிந்ததே எவ்வளவோ மேல். ! இல்லையென்றால் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்திருக்கும். ஹூம்.! வரட்டும். என்னதான் சொல்கிறான் பார்ப்போம்.பாபு வரும் நேரம் நெருங்க நெருங்க கண்ணன் குட்டி போட்ட பூனை மாதிரி அமைதி இழந்து தவித்தான்.பாபுவும் வந்து சேர்ந்தான்.

   ” பெரிய துரை.! லெட்டர் எழுதிப் போடறானாம்,நான் காத்திருக்க வேணுமாம். .தெரியப்படுத்தாம வரக்கூடதோ.?சரி, வந்த விஷயம் என்ன,?கண்ணன் மன நிலை மாறியிருக்கவில்லை என்று பாபு கணக்கெடுத்து விட்டான். தன் மன உறுதியைக் காட்டுபவன் போல ,ஒன்றுமே இதற்கு முன்பு நடக்காத மாதிரி மிகவும் சகஜ பாவத்தில்,இல்லையண்ணா. நான் வர சமயத்தில் ஒரு சமயம் நீ வீட்டில் இல்லாது போனால்... அதுவுமில்லாமல் நான் வரேன்னு தெரிஞ்சிருந்தால் அண்ணியும் எனக்காக ஏதாவது ஸ்பெஷ்லாகச் செய்திருப்பார்கள்என்றான். “ இல்லையா அண்ணி.என்று கேட்டு மாலதியும் மனமாற்றம் அடைந்திருக்கிறாளா என்று அறிய விரும்பினான். மாலதிக்கு தர்ம சங்கடமாக இருந்தது. என்பதன் கூட, பாபுவை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லையே என்ற எண்ணமும் கலந்திருந்தது. மெல்லச் சிரித்து மௌனமாக இருந்தாள். அந்தச் சிரிப்பே அவளுடைய நிலையை எடுத்துக் காட்டியது. பாபுவுக்கு என்னதானிருந்தாலும் தான் ஒரு அன்னியப் பெண்ணிடம் அன்றைக்குக் கடிந்து பேசியது தவறு என்றே தோன்றியது.ஆத்திரத்தை அடக்கி அவ்ளை அலட்சியம் செய்திருக்கலாம்..ஆனால் இந்தப் பாழாய்ப் போன,நல்லது கெட்டது, சரி தவறு முதலியவற்றை ஆராயும் குணங்கள் எல்லாம் நடந்து முடிந்து போன பிறகல்லவா தெரிய வருகிறது.,என்று தன்னையே நொந்து கொண்டான். 


     கண்ணன் எப்படியாவது பாபுவைத் தாக்க வேண்டும், அவனை அவமானப் படுத்த வேண்டும், என்று சதா எண்ணிக் கொண்டிருந்தான்.எண்ணிக் கொண்டிருந்தவன் கிடைத்த வாய்ப்பையும் நழுவ விடத் தயாராயிருக்கவில்லை. ஒன்றுமே நடக்கவில்லை என்பதுபோல நடிக்கத் தனக்கும் தெரியும் என்று காட்டிக் கொள்ளும்.பாபுவை வார்த்தைகளால் தாக்கவும், தன் இருப்பிடத்தில் தான் வைத்ததே சட்டம் என்பதை நிரூபிக்கவும்,” ஸ்பெஷ்லாகச் செய்து போட வேண்டும் என்ற ஆசை இருந்தால் போதுமா பாபு.? அதை அனுபவித்து உண்ணுபவர்களும் அன்புக்குப் பாத்திரமானவர்களாகவும் இருக்க வேண்டும் அல்லவா.? நீ என் தம்பி. அதனால் என் அன்பு உனக்குண்டு. குளித்து பூஜை முடித்த பிறகுதான் இங்கு சாப்பாடு. நீ தயாரானால் குளித்து விட்டு ஸ்பெஷ்லாகச் சாப்பிடலாம்..ரெடியானால் வா சாப்பிடலாம் “என்று கூறினான்.    

    ”.ஓ.! நான் குளித்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். பூஜைகள் முடித்துக் கொள்ளுங்கள். நான் அதுவரை வெண்டுமானால் காத்திருக்கிறேன்”---பாபு இடக்காகப் பேசி தன்னை மடக்குவதாக கண்ணனுக்குப் பட்டது. அவனுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்ற ஆத்திரத்தில் ,சரி.கொஞ்ச நேரம் இரு பூஜை முடியட்டும்என்று கூறி , விபூதியைக் குழைத்துப் பூசிக்கொண்டு, விளக்கேற்றி ஸ்வாமி படத்தின் முன்னால் போய் அமர்ந்தான். தன் அண்ணனுக்கு இவ்வளவு பக்தியா என்று எண்ணி பாபு ஆச்சரியப் படட்டும் என நினைத்து, சாதாரணமாகப் பத்து வினாடிகள் ஆண்டவனைத் துதி செய்யும் நேரத்தை அன்று வேண்டுமென்றே ஒரு மணி நேரமாக நீட்டினான். பாபுவுக்கு கண்ணன் வேண்டுமென்றே காலத்தைக் கடத்துவது நன்றாகத் தெரிந்தது. இருந்தாலும் அதை வெளிக் காட்டாமல், பொறுமையாக அங்கிருந்த பத்திரிகைகளிலும், புத்தகங்களிலும் கவனத்தைச் செலுத்தினான்.ஒரு வழியாகக் கண்ணன் பூஜையை முடித்துக் கொண்டு, அதே சமயத்தில் மாலதிக்கு சைகையால் “ ஒன்று “ என்று தெரிவித்து முன் அறைக்கு வந்தான். சிறிது நேரத்தில் ஒரு தட்டில் உப்புமாவும், ஒரு க்ளாசில் பாலும் மாலதி கண்ணன் முன் வைத்துவிட்டு உள்ளே சென்றாள். பாபு பத்திரிகையிலிருந்து தன் தலையைச் சற்றே தூக்கி நோக்கியவன், ஒருவருக்கு மட்டும் கொண்டு வரப் பட்ட உண்டியைக் கண்டு, தன்னைக் கண்ணன் நன்றாக அவமானப் படுத்த திட்ட மிட்டிருக்கிறான் என்பதை யூகித்துக் கொண்டான். கண்ணனின் இந்த அற்ப சந்தோஷத்துக்கு தான் ஈடு கொடுக்க வேண்டும் என்று எண்ணியவன், மனம் வேதனையால் வாடியது..கண்ணன் பாபுவை ஒப்புக்குக்கூட அழைக்காமல் கொண்டு வரப் பட்டிருந்த சிற்றுணவை முடித்துக் கொண்டு, “பாபு வந்த விஷயத்தைச் சொல் என்றான். அவன் முகத்தில் வெற்றிப் பெருமிதம் தாண்டவமாடியது.பாபுவின் வேதனை அடைந்த முகம், அவமானத்தின் சாட்டையடி பட்டு துவண்டு போய் விட்டது என்று நினைத்து சந்தோஷப் பட்டான்.

   ” அண்ணா, வந்த விஷ்யமிருக்கட்டும்.எனக்கொரு சந்தேகம்..அதை முதலில் தெளிவித்துக் கொள்கிறேன் ‘என்று பாபு கூறியதைக் கேட்டதும் ,அவன் சற்று முன்பு நடந்த நிகழ்ச்ச்க்கு விளக்கம் கேட்கப் போகிறான் என்று நினைத்துக் கண்ணனும் தன்னை போருக்கு ஆயத்தப் படுத்திக் கொண்டான். :ஆண்டவன் வழிபாட்டை இப்படி படத்தின் முன்னால் உட்கார்ந்து ஒரு மணி நேரம் புரியாத வார்த்தைகளைச் சொல்லுவதன் மூலம் தானா வெளிப் படுத்த முடியும்.?

       “ அது சுத்த நாஸ்திகக் கேள்வி. தூணிலும் இருப்பவன் துரும்பிலும் இருப்பவன் கடவுள். அவன் புகழ் பாடவே ஏற்படுத்தப் பட்ட மொழி சம்ஸ்கிருதம். புரிவதும் புரியாததும் அவனவன் ஞானத்தைப் பொறுத்தது. பிராமணன் ஞானி. ! நான் ஒரு பிராமணன் . பூஜை புனஸ்காரங்களில் எனக்கு நம்பிக்கை உண்டு செய்கிறேன். உன்னை மாதிரி நாஸ்திக சர்ச்சைகளில் ஈடுபட எனக்கு நேரமில்லை. “

        ‘அண்ணா, ஆண்டவன் என்றழைக்கப்படும் ஒரு அத்யந்த சக்தியை வழிபட பூஜை புனஸ்காரங்களே வேண்டாமே. மலர்மாலை அணிவிப்பதும், மங்கலப் பொருட்களை நைவேதனமாகப் படைப்பதும், மந்திரங்களை உச்சாடனம் செய்வதும்தான் பூசனையா.? நான் சொல்லுகிறேன். ஆண்டவனின் படம், பலனை மனதில் கொண்டு, அதையடைய ,தன் புலன்களை அடக்கி, சிந்தனையைக் கட்டுப் படுத்தி சக்தியின் உருவில் லயிக்கச் செய்ய உதவும் ஒரு சாதனம். THAT IS AN OBJECT TO CONCENTRATE YOUR THOUGHTS. பிரதிபலனை அடைய விரும்புபவனும், பரம்பொருளும், மலர் மாலைகளாலும் மங்கலப் பொருட்களாலும் உள்ளத்தின் எண்ணத்தில் இரண்டறக் கலப்பதே பூஜையின் முக்கிய நோக்கம். அர்ச்சிப்பவனின் உள்ளத்திலேயே, அர்ச்சனைப் பொருட்களே இல்லாமல் ஆண்டவனின் சக்தியை ஒருங்கே கொண்டு வந்து, பலனை எதிர்பார்க்காது, உண்மையில் மனம் உருகி கண்ணீர் சிந்துவதே முன்னதை விட உயர்ந்தது.ஆனால் அதற்கு நல்லெண்ணம் கொண்ட தூய்மையான எண்ணம் வேண்டும். இதைத்தானே அன்பே சிவம் என்கிறார்கள். இல்லாதவர்களுக்குத்தானே படமும் ,சிலையும், பக்திப் பிரசாதங்களும்.இதுவும் கூட என் நாஸ்திக வாதம் என்று நினைத்து விடாதே. இது ஞானிகளையும் ,மறைகளையும் நான்புரிந்து கொண்ட வரை தான் எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறது.

     உனக்கும் கூடக் கடவுள் பக்தி உண்டு என்று நீ சொல்லித்தான் மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். முடியும். பாபு உன்னுடைய விதண்டா வாதங்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. பிறரை தூஷிப்பதற்கென்றே பிறந்துள்ளவர்களில் என் தம்பியும் ஒருவன் என்று எண்ணும்போது தான், எனக்க மிகவும் மனக் கஷ்டமாக இருக்கிறது. “

      உண்மையிலேயே தன் பேச்சும் போக்கும் கண்ணனுக்குப் புரியவில்லை, அதனால் பிடிக்கவுமில்லை. அந்த விதத்தில் கண்ணன் தன்னிடம் வருத்தப் பட்டதும் அதை எடுத்துக் காட்ட , எடுத்துக் கொண்ட முறையும் சரியோ தவறோ தன்னிடம் கண்ணனுக்கு அன்பு இருந்தது என்பதை நிரூபிக்கிறது என்றே பாபு எண்ணினான். அந்த அன்பிலேயே கண்ணனை வென்றுவிட முடியும் என்று பாபு மனக் கோட்டை கட்டினான்.

   ” அதிருக்கட்டும் அண்ணா. ! அன்றைக்கு நான் பெசிய பேச்சுகளால் உங்கள் மனம் புண் பட்டிருக்குமானால் அது என் தவறல்ல.நான் கொண்டுள்ள கொள்கையின் தவறாயிருக்கலாம். ஆனால் அது தவறு என்றுதான் எனக்குத் தோன்ற மாட்டேன் என்கிறது.மேலும் அன்றைக்கு நீங்கள் கடைசியாக வரும்போது கூறிவிட்டு வந்த “உறவுக்கு முழுக்குப் போடுவது “ என்ற வார்த்தைகள். என்மனசை மிகவும் வருந்தச் செய்தது. உலகில் உறவு என்பது நாம் விரும்பிக் கிடைக்கப் பெறும் ஒன்றல்ல. நாம் வேண்டாமென்றால் விட்டுப் போகக் கூடியதும் அல்ல. நமக்குள் அபிப்பிராய பேதங்கள் இருக்கிறது “

      “ அதுதானே உறவையே வெறுக்க வைக்கிறது.

        “அதைத்தானே வேண்டாமென்கிறேன், விளக்க வந்தேன். அபிப்பிராய பேதங்கள் இருப்பது இயற்கை. நம் கையில் இருக்கும் விரல்களும் கூட வேறுபட்டுத்தானே இருக்கிறது. அதற்காக விரல்களை வெட்டிப் போடுகிறோமா என்ன..வித்தியாசப் பட்டாலும் நம் கை விரல்கள் என்றுதானே எண்ணுகிறோம். உண்மை இது அல்லாதது இது. என்று வரையறுக்கப் பட்டு எல்லோரும் ஒப்புக் கொள்ளும் நிலை வரும்வரை, எண்ண வேறுபாடுகள் இருப்பது சகஜம். கொள்கையை எதிர்த்தாலும் அதைக் கொண்டுள்ளவரை வெறுப்பது என்பது என்னவோ எனக்குச் சரியாகப் படவில்லை. நமது கொள்கைகள் ஒத்து வர வில்லை என்ற எண்ணத்தில் மட்டுமே நமக்குள் ஒற்றுமை இருக்கிறது. உன்னை என் கொள்கைகளிலும் என்னை உன் பக்கம் இழுத்துக் கொள்ளவும் போட்டி போடுகிறோம். இது அன்பினால் ஏற்படுவது. அந்த அன்பும் அதற்குக் காரணமாயிருகிறதென்று நீ நினைக்கும் நமது உறவும் பிட்டுப்பிரித்துத் தள்ளப் பட வேண்டாம் என்று உன்னிடம் வேண்டிக் கொள்ளவே வந்தேன். சொல்லியும் விட்டேன் இனி உன்னிஷ்டம். நான் இங்கு அடிக்கடி வருவேன். உனக்கும் நம் வீட்டில் என்றும் வரவேற்பு உண்டு. .வருகிறேன்.

        விடை பெற்றுக் கொண்டு சென்று விட்டான் பாபு. அவன் இவ்வளவு தூரம் வந்து பேசிப் போனதே அவனுடைய பண்புக்கு எடுத்துக் காட்டு என்று மாலதி நினைக்கத் தொடங்கவும் “  “அடிபட்ட புலி சீறுது. அடிக்கடி வேறு வருவானாம். ! யார்தான் வரவேற்கத் தவங்கிடக்கிறார்களோ.தெரியலை “ என்று கண்ணன் உறக்கவே தன் ஆத்திரத்தைக் கொட்டிக் கொள்ளவும் “ தாயே என் கணவனுக்கு நல்ல வழி காட்டு, அவரை நல்ல எண்ணங்களுக்கு உறைவிட மாக்கம்மா.என்று தியானிக்கவும் வேண்டிய தாயிற்று.
-------------------------------------------------------------------- 

                                                        ( தொடரும் )        

  

 . 
       

5 comments:

 1. அபிப்பிராய பேதங்கள் இருப்பது இயற்கை. நம் கையில் இருக்கும் விரல்களும் கூட வேறுபட்டுத்தானே இருக்கிறது. அதற்காக விரல்களை வெட்டிப் போடுகிறோமா என்ன..வித்தியாசப் பட்டாலும் நம் கை விரல்கள் என்றுதானே எண்ணுகிறோம்.

  நினைவில் நிறைந்த வரிகள்..

  ReplyDelete
 2. அபிப்பிராய பேதங்கள் இருப்பது இயற்கை. நம் கையில் இருக்கும் விரல்களும் கூட வேறுபட்டுத்தானே இருக்கிறது. அதற்காக விரல்களை வெட்டிப் போடுகிறோமா என்ன..வித்தியாசப் பட்டாலும் நம் கை விரல்கள் என்றுதானே எண்ணுகிறோம். உண்மை இது அல்லாதது இது. என்று வரையறுக்கப் பட்டு எல்லோரும் ஒப்புக் கொள்ளும் நிலை வரும்வரை, எண்ண வேறுபாடுகள் இருப்பது சகஜம். கொள்கையை எதிர்த்தாலும் அதைக் கொண்டுள்ளவரை வெறுப்பது என்பது என்னவோ எனக்குச் சரியாகப் படவில்லை.//

  கொள்கையை எதிர்த்தாலும் அதைக் கொண்டுள்ளவரை வெறுக்க கூடாது தான்.

  அருமையாக சொல்லிவிட்டீர்கள்.

  ReplyDelete
 3. உரையாடல்களும் 'ஒன்று' சிக்னலும் சுவாரசியம்.

  ReplyDelete
 4. உரையாடல்களில் உங்கள் நாடக மேடை அனுபவங்களின் முத்திரைகளைக் காண்கிறேன்.

  ReplyDelete
 5. தொடர்கிறேன்....எப்படி வித்தியாசமான மனிதர்கள். கடவுளின் தியான விளக்கங்கள் பிடித்திருந்தன.

  ReplyDelete