நினைவில் நீ..( நாவல் தொடராக. )
-------------------------------------------------
-------- 13 -------
பட்டகாலிலே படும், கெட்ட குடியே கெடும் என்று தெரியாமலா சொல்லி இருக்கிறார்கள். .அனுபவ பூர்வமாக உணர்ந்து கூறப்பட்ட வார்த்தைகள் அல்லவா.. .ஆஷாவின் மரணமும், -கொலையென்று எண்ணவே நடுங்கியது—மகனுக்குக் கிடைத்த தண்டனையும் பாட்டியை ஒரேயடியாக ஆட்டிவிட்டிருந்தது, என்பதோடு கூட தன்னுடைய மற்ற இரு பிள்ளைகளின் அலட்சியமும் அவளை வெகுவாக பாதித்தது. கல்யாணமான பிறகு கண்ணனும் கூட பாட்டியை லட்சியம் செய்து ஆதரவு காட்ட வில்லை. நல்ல விளை நிலத்திலே புல்லும் பூண்டும் தன் காலத்திலேயே விளைந்து மண்ணின் வளத்தையே கொள்ளை கொண்டு போகிறதே. ஒரு சமயம் தான் விளைத்ததே இந்தக் கள்ளியும் காளான்களும்தானோ. என்றெல்லாம் உள்ளம் உருகத் துவங்கிய பாட்டி, நாளாவட்டத்தில் படுத்த படுக்கையாகி விட்டாள். செல்வாக்கும் பதவிசும் இருக்கிற காலத்திலேயே அவள் எதிர்பார்க்காத ஏகப்பட்ட எதிர்ப்புகளிருந்த தென்றால், எல்லாம் இழந்த நிலையில் அவளை சீந்தக் கூட ஒரு ஜீவன் இல்லாமல் போய் விட்டது. துயரத்தால் உருகி, உடலில் வலுவிழந்து பாதிக்கப் பட்ட பாட்டிக்கு , பேசவோ நடக்கவோகூட முடியாதபடி,உடலின் அங்கங்கள் எல்லாம் கட்டுப் படுத்தக்கூட திராணி இல்லாமல் முடங்கிப் போயிற்று. இந்த நிலையில் ஒடுங்கிக் கிடந்தவள் அடுத்துள்ளவர்கள் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி இருந்தபோது, வாய்விட்டு ஆண்டவனை துணைக்கு அழைக்கவும் முடியாத துன்பத்தில் துவண்டு போனாள். தன் அந்திம காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது என்ற எண்ணம் தனக்குச் சீக்கிரம் விடிவு ஏற்படும் என்ற நம்பிக்கையை வளரச் செய்தது. வாழ்வின் பல கோணங்களை தன் நிலையில் இருந்து தான் ரசித்து அனுபவித்த விதம் அடிப்படையிலேயே தவறு அவள் எண்ணும்போது, தன்னை அறியாமலே கண்களில் நீர் வழிய ஆண்டவனை மனசால் துணைக்குக் கூப்பிடுவாள். அப்போது ஒரு அலாதியான அமைதி கிடைப்பதையும் உணர்வாள். கடைசி காலத்தில் இந்த நிலையில்தான் ஆண்டவனை உளங்கனிந்து வழிபடுகிறோம் என்று தெரிய வந்தபோது ஆயுட்காலம் பூராவும் வீணாக்கப் பட்டு விட்டதே என்று குமுறி மனம் நொந்தாள். அவள் செய்த குற்றங்களுக்கும்,கொண்டிருந்த எண்ணங்களுக்கும் தகுந்த தண்டனை கொடுத்தாகி விட்டது என்றே கடவுளுக்குத் தோன்றி இருக்க வேண்டும். ஒரு நாள் யாரும் அறியாமலேயே அவளுடைய உயிர்ப் பறவை சிறகடித்துச் சென்றிருந்தது. கண்கள் திறந்த நிலையில் நாக்கு உலர்ந்திருந்த முறையில் யாரும் கவனிப்பார் இல்லாது கிடந்த அந்த சடலத்தை முதன் முதலில் கண்ட சரஸ்வதிக்கு பயமாகவே இருந்தது. அவளது மரத்துக் கிடந்த உணர்வுகளுக்கு இன்னுமொரு உயிர் போயிற்று என்றே சாதாரணமாகவே எண்ணத் தோன்றிற்று.
பாட்டியின் சவ அடக்கத்துக்குச் சென்று திரும்பி இருந்த பாபு அவள்து முடிவை எண்ணி மனம் வருந்தித் திரும்பும்போது கல்யாணி அம்மா கூறிய செய்தி அவனை ஆத்திரத்தின் எல்லைக்கே அழைத்துச் சென்றது..ராஜுவுக்கும் விசுவுக்கும் சிக்கென் பாக்ஸ் போட்டிருந்தது. முத்துமாரி அம்மன் விளையாடுகிறாள்; சுத்தமாக இருக்க வேண்டும். என்று பாபுவிடம் கல்யாணி அம்மா கேட்டுக் கொண்டாள். பாபு சாவு வீட்டிலிருந்து வந்தவன் குளிக்காமல் தன் தம்பிகளைக் காணவும் கூடாது என்று தடை போட்டாள். பாபுவுக்கு அது பைத்தியக் காரத்தனமாகத் தோன்றியது. கிருமிகளாலும் உடல் வெப்பத்தாலும் ஏற்படும் வியாதியை ஆண்டவனின் முத்து என்று மரியாதையுடன் அழைக்கும் மூடத்தனம் கண்டு மனம் வெம்பினான். சொல்லிப் புரிய வைக்கலாம் என்றால் சொல்லவே இடம் கொடுக்க வில்லை கல்யாணி அம்மா. பாபு தீவிரமாகத் தம்பிகளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றான்.அதை கல்யாணி அம்மா மூர்க்கமாக எதிர்த்து, தன் பிள்ளைகளைக் கவனிக்கும் முதல் பொறுப்பு தன்னுடையது, பிறகுதான் மற்றவருக்கு என்ற முறையில் பேசியது பாபுவை மிகவும் வருந்தச் செய்தது/ தனக்குத் தம்பிகளின் நலனில் அக்கறை கொள்ள அருகதை இல்லை என்று ஏசிவிட்டார்களே என்று வெதும்பினான். தடுக்க முடியப் பெறாதவைகள் அனுபவிக்கப் பட வேண்டியது தானே. என்று சமாதானம் செய்து கொண்டான். தன் மனக் குறைகளையும் சஞ்சலங்களையும் தன் உற்ற நண்பன் கானிடம் கூறி நிம்மதியடைய அவனைக் காணச் சென்றான்.ஒரு எதிர்பார்க்காத நிகழ்ச்சி அவனை எதிர் கொண்டழைத்தது. கானும் அம்மை வாய்ப்பட்டிருந்தான். அதுவும் அநாதரவான நிலையில்.பாபுவுக்கு சட்டென என்னதான் தோன்றியதோ நண்பனை வற்புறுத்தித் தன் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டான். “ அம்மா, என் கூடப் பிறக்காத ஒரு சகோதரன் கான்..அவனையும் கவனிப்பது உன் பொறுப்பு” என்று கூறி கல்யாணி அம்மாவைத் திகைக்கச் செய்து விட்டான். அம்மனின் ஆட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப் படும் ஆட்களும் நல்லவர்களே என்று எண்ணிய படியே கானையும் கவனிக்கத் தொடங்கினாள்.
அம்மா ,எனக்கு மட்டும் இந்த வியாதி வரட்டும் அப்போது தெரியும். சுத்த முட்டாள்தனமாக ஒரு வியாதியைக் கடவுளாகக் காண மாட்டேன். நீங்கள் நினைப்பதுபோல் இந்த வியாதி கடவுளானால் அது எனக்கும் வரட்டும். நான் எதிர்க்கிறேன். வியாதிதான் என்றால் அதை விரட்டி வெற்றி காண்பேன். இல்லையென்றால் நான் அழிக்கப் படட்டும். என்று பலமுறை கட்டுப்படுத்தியும் கட்டுக்கடங்காத எண்ணச் சுமைகளை வெளிப் படுத்தினான்.
அடுத்த நாள் காலையிலேயே உடலில் குறு குறுப்பான ஒரு உணர்ச்சி. மூட்டுகளெல்லாம் குடைச்சல்.இதையெல்லாம் பொருட்படுத்தாமல் வேலைக்கும் சென்றான். வேலை செய்ய முடியாதபடி ஒரு சோர்வு. அசதி தன்னை ஆட்கொள்ளுவதை உணர்ந்தான். தன் எண்ணங்களே சரி என்று நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்று விட்டதாக எண்ணிக் குதூகலித்தான். வியாதியா, கடவுளா பார்க்கலாம் ஒரு கை. என்று சவால் விட்டுக் கொண்டான்.மாலை வீடு திரும்பொயதும் முதல் வேலையாக பாத் ரூமுக்குச் சென்று தன் உடலை நன்றாக சோதனை போட்டான். சிவப்பு முத்துக்கள் பரவிக் கிடந்தன.சட்டை செய்யாமல் குளிர்ந்த நீரை வாரிக் கொட்டிக் கொண்டு குளித்தான்.உடற்சோர்வு அவனை அடக்கி ஆண்டது.
கல்யாணி அம்மாவுக்கு மிகவும் கவலையாகிவிட்டது. “ தாயே என் பிள்ளையை மன்னித்து விடம்மா. அறியாமல் செய்யும் பிழைகளைப் பொறுத்துக் கரை தேற்றம்மா.” என்று மனம் உருகி வேண்டிக் கொண்டாள். ராஜுவும் விசுவும், கானும் குணமடைந்து வர வர பாபுவின் உடல் நிலை மோசமாகிக் கொண்டு வந்தது. அவனும் விநாடிக்கு ஒரு முறை அம்மனின் ஆட்டம் என்றழைக்கப் படும் அம்மை வியாதியிடம் சவால் விட்டுக் கொண்டிருந்தா.ன். தான் பேசப் பேச தன் தாய் மனம் வாடுகிறாளே என்ற உணர்வே இல்லாமல் வியாதியை அருவருத்துப் பழித்துப் பேசினான்
. ஒரு நாள் மாலை அடக்கமுடியாத எரிச்சல், தாங்க முடியாத தலைவலி இவற்றால் தாக்கப் பட்ட பாபு இறுதி வெற்றி யாருக்கு என்று தெரியும் நிலை வந்து விட்டது என்று உணர்ந்து, தன் சக்தியெல்லாம் ஒருங்கே திரட்டிக் கொண்டு போராட்டத்துக்கு தயாராகி விட்டான். வேதனைகளின் உபாதைகளோடு கூட, உள்ளத்துப் போராட்டத்தின் வேகம் போட்டி போட்டது. கட்டுப் படுத்த முடியாத நிலையில் பாபு “ ”ஆண்டவனே, மூடப் பழக்கங்களை எதிர்த்து, அன்பே கடவுள் என்று நான் வணங்கும் நிலை சரியானால்,இந்த வியாதி என்னைவிட்டு ஓடட்டும். இல்லை ஒன்றே குலம் ,ஒருவனே தேவன் என்ற வாக்கு பொய்யாகி, வியாதியும் ,வீம்பும், அகங்காரமுமே ஆண்டவன் வடிவென்றால், நான் சாகத் தயாராயிருக்கிறேன் “ என்று வேண்டிக்கொண்டான்.மற்ற மூவரும் கூட அம்மையால் பாதிக்கப் பட்டார்கள். ஆனால் கஷ்டம் சிறிதுமே கூட இல்லாமல் தேறி விட்டார்கள். யாரும் உடல் எரிச்சல் என்று ஒரு முறை கூடக் கூறவில்லை. தனக்கு மட்டும் எரிதணலில் இருப்பது போன்ற எண்ணம் ஏன் என்று பாபுவுக்குப் புரிந்து அனுமானித்துக் கொள்ள முடியவில்லை.
கண் விழித்த போது கல்யாணி அம்மா பாபுவுக்கு உப்பில்லாத கஞ்சி புகட்டிக் கொண்டிருந்தாள்.அந்த இரவு நேரத்தில் கெம்பம்மா கோவிலுக்கு உப்பும் தயிரும் கொண்டு சென்று அங்கிருந்து விபூதி கொண்டு வந்திருந்தாள். அதைப் பூசியவுடன் பாபு விழித்துக் கொண்டான். விளக்கம் கேட்டு விளங்கப் பெற்றவன் தன் தாயின் நம்பிக்கை தன்னைக் காப்பாற்றியது என்று உணர்ந்தான். சாவின் பயங்கரத்தை தெரிந்தவன், இன்னுமொரு முறை அந்த உணர்வுகளுக்கு தன்னால் ஈடு கொடுக்க முடியாது என்று அறிந்தான். ஆண்டவனைப் பல கோணங்களில் கண்டாலும் நம்பிக்கைதான் முக்கியம் என்று தெரிந்து கொண்டவன், அசாதாரண முறையில் ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்தான்.
-----------------------------------------------------------------------------
( தொடரும் ) . . .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக