Wednesday, March 21, 2012

நினைவில் நீ ( அத்தியாயம் பதினைந்து )                                 நினைவில் நீ ( நாவல் தொடராக.)
                                 ----------------------------------------------
                                                -------  15  ---------

          பாட்டி இற்ந்து போன பிறகு கமலத்துக்கு உறவினர்களின் க்ஷேம லாப நஷ்டங்களைப் பற்றி செய்தி கிடைப்பது மிகவும் அரிதாயிருந்தது. மேலும் அவ்வப்போது கிடைத்துவந்த கணிசமான உதவிகளும் நின்று போயிற்று. பாட்டியின் பெருமைகளைப் பற்றி பிரலாபித்துப் பேசியே கிட்டத்தட்ட  ஒரு மாத காலத்தை ஓட்டிவிட்டாள். கணவன் கொண்டு வந்து கொடுக்கும் பணம் போதாத போதெல்லாம் பாட்டியின் ஞாபகமே அவளுக்கு வந்தது. கண்ணன் கல்யாணமான பிறகு அவளை வந்து பார்ப்பதைக் கூட நிறுத்தி இருந்தான்.பாபுவைப் பற்றியோ சொல்லவே வேண்டாம்.முன்பும் அவன் அடிக்கடி வருபவனல்ல. இப்போதும் கிடையாது. எப்போதாவது அவனைப் பார்க்க நேர்ந்தால் என்னடா பாபு, உன் அக்காளின் ஞாபகமே உனக்கு இல்லை. யாருக்கெல்லாமோ. என்னவெல்லாமோ செய்கிறாயே ஒரு முறை வந்தாவது, அக்கா ஏதாவது என்னால் ஆகணுமான்னு, கேட்டிருப்பாயா.? நானென்ன அப்படி உங்கிட்டேதான் ஏதாவது இதுவரைக் கேட்டிருப்பேனாஎன்று தொண தொணப்பாள். பாபுவும் சாதுரியமாக “ உனக்கு நான் ஏதாவது வேண்டுமா என்று கேட்பதே அத்திம்பேரை அவமதிப்பதாய் இருக்கும். அவரிருக்கும்போது உனக்கென்ன குறைஎன்று கேட்டே மடக்கி விடுவான்.

      பாபுவுக்கு பெயரும் புகழும் அதிகமாகிக் கொண்டு வருவதாகக் கேள்விப் பட்டிருந்தாள், அதுவும் அரையும் குறையுமாக தன் கணவனிடமிருந்து. எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்ளா விட்டால் மண்டை வெடித்து விடும் போலிருந்தது அவளுக்கு. அதற்காகவே கண்ணனின் வீட்டுக்கு ஒரு நடை வந்தாள்.. அவள் வந்த நேரம் சரியாக இருக்கவில்லை.. அதற்கு முந்தின தினம்தான் கண்ணனும் மாலதியும் பாபுவின் வீட்டுக்குச் சென்று கோபப் பட்டு திரும்பி இருந்தனர்.

      கமலத்தைப் பார்த்ததும் கண்ணன் முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக் கொண்டான்.. வாவென்று கூடச் சொல்லவில்லை. அந்த ஆத்திரம் கமலத்துக்கு மாலதியிடம் திரும்பியது.

          நான்கைந்து நண்டும் சிண்டுமான வாண்டுகளுடன் கமலம் வந்ததும் மாலதிக்குப் பகீரென்றது. “ இதுகளுக்கு காப்பி, பலகாரம் இத்தியாதி வகையறாக்களுக்கு எங்கே போவது.ஏற்கனவே அரைப் பட்டினியாகக் காலம் தள்ள வேண்டி இருக்கு.இன்றைக்கு முழுப் பட்டினி என்றே அவள் எண்ணம் ஓடியது. அதனால் அவளுக்கு கமலத்தை வா என்று வரவேற்கவும் மறந்து போயிற்று. அது கண்டு “ என்ன ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும்.? நான் வந்தது கூடத் தெரியாமல் பிரமிச்சு நிக்கறேளே. கல்யாணம் ஆனதற்கப்புறம் கண்ணன் ரொம்பவே மாறிட்டான்.அதுக்கு முன்னால் அக்கா, அக்கான்னு உயிரையே விடுவான். இதுக்குத்தான் சொல்றது; நல்லது பொல்லாது தெரியாமே ஒரு வீட்டிலேருந்து பொண் எடுக்கக் கூடாதுன்னு. டேய். சனியன்களா வந்த இடத்திலேயாவது வாலைச் சுருட்டிண்டு இருக்க மாட்டேள். “

          அக்கா, நான் பண்ணிண்ட கல்யாணத்தில் ஒண்ணும் குறைச்சல் இல்லை.. எல்லாம் நம்ம குடும்ப தோஷந்தான்.அண்ணா தம்பிகள் மாதிரியா இருக்கு. சேச்சே.! சுத்த மோசம். எல்லாருக்கும் கொடுக்கிற வரைக்கும்தான் நல்லவன். இல்லாட்டா பொல்லாதவன். அப்பா விஷயத்திலேயும் அப்படித்தான். இப்போ உன் விஷயத்துலேயும அப்படித்தான்.

           கமலத்துக்கு மெல்லுவதற்கு அவல் கிடைத்து விட்டது. மெள்ள மெள்ள எல்லா சமாச்சாரங்களையும் கறந்து விட்டாள். பாபுவுக்கும் க்ண்ணனுக்கும் மனத்தாங்கல்.இதுக்குக் காரணம் கண்ணன் பாபுவிடம் உதவி கேட்கப் போயிருக்கிறான். அவன் கண்ணனைக் கன்னா  பின்னா வென்று பேசியிருக்கிறான்  அவன் இதையும் செய்வான் இதுக்கு மேலேயும் செய்வான். எல்லாம் அந்த சாதி கெட்டவளோட வேலையாய்த் தானிருக்கும். பாபுவுக்கு ரொம்ப நல்ல பெயராமே. ஹூம்.! எப்படி எப்படி எல்லாம் பேசி யாரையெல்லாம் ஏமாற்றுகிறானோ. ! அதுக்கு மட்டும் அவனுக்கு கொள்ளை சாமர்த்தியம். ..... என்றபடியெல்லாம் முடிவுக்கு வந்து, பொருமியும் ,சிலாகித்தும் தனக்குள்ளேயே எண்ணிக் கொண்ட கமலம், மாலதி பயந்ததுபோல் அவர்களை முழுப் பட்டினி யாக்கிவிட்டுத்தான், அங்கிருந்து போனாள்.

       வீட்டிற்கு திரும்பியவள் காட்சி, அவளாலேயே நம்ப முடியவில்லை. அவளுடைய கணவன் கட்டிலில் கிடத்தி வைக்கப் பட்டிருந்தான். அருகில் பாபுவும் இன்னொருவனும் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

        முதலில் கமலம் பதறிப்போனாள். கணவனுக்கு என்னவோ ஏதோ என்று கலங்கினவளுக்கு, அருகில் சென்றதும் எழுந்த நெடியும் கணவன் கிடந்த நிலையும் அவன் நன்றாகக் குடித்துவிட்டுப் போதையிலிருக்கிறான் என்று தெரிய வைத்தது. கணவன் குடிப்பது கமலத்துக்குத் தெரியாததல்ல. இருந்தாலும் நினைவு தவறும்வரைக் குடித்து வந்து பார்த்ததில்லை.

      அவளுக்கு பாபுவிடம் என்றுமில்லாத ஒரு தனி அன்பு அன்று ஏற்பட்டது. நிலை தவறி விழுந்து கிடந்த கணவனை வீட்டில் சேர்ப்பித்தவன் என்பதற்காக மட்டுமல்லாமல் இப்படி நடந்த நிகழ்ச்சி யாருக்கும் தெரியாமல் போகப் பண்ணியவன் என்பதாலும் அவளுக்கு அவனிடம் மதிப்பும் சற்றே கூடியது.

     ”அக்கா, நான் எதுவும் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. நீயே யூகித்திருக்கிறாய். அத்திம்பேருக்கு இந்தப் பழக்கம் உண்டு என்று எனக்குத் தெரியாது. நல்ல காலம்.! நான் பார்த்திருக்காவிட்டால், அவர் இந்நேரம் லாரியில் அறைபட்டு ஆஸ்பத்திரியில்தான் இருந்திருப்பார். ஹும். அது போகட்டும். இனிமேலாவது அவர் இந்த வழிக்குப் போகாமல் நீதான் தடுக்க வேண்டும். நானும் அடிக்கடி வந்து பார்ப்பேன். இப்போதுதானே தெரிகிறது, நீ ஏன் கஷ்டப் படுகிறாய் என்று. அவரை இந்தப் பழக்கத்திலிருந்து நீதான் மாற்றி திருத்தணும். நேரமாயிட்டது. நாளை வந்து பார்க்கிறேன். “ என்று கூறிவிட்டு பாபு சென்றுவிட்டான். அவனைப் பற்றி அவளுக்குக் கிடைத்த தகவல்களவன் அவளுக்குச் செய்த உதவி, இதையெல்லாம் எண்ணிப் பார்க்கும்போது கமலத்துக்கு ஒன்றுமே புரியவில்லை.

        “ இந்தப் பிள்ளைக்குத்தான் எவ்வளவு நல்ல குணம். இது எப்படி எனக்குத் தெரியாமல் போயிற்று. “ என்று முதன் முதலில் தனக்குத் தெரியாதது ஒன்றும் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டாள். பாபு போன பிறகு தன் கணவனைக் கண்ட போது அவளுக்கு ஒருவித அருவருப்பு கலந்த பயமும் ஏற்பட்டது. தன்னுடைய தலை விதி என்று விதியின் மேல் பழியைப் போட்டு சமாதானம் அடைந்து கொண்டாள்.

      மறுநாள் பாபு வந்தபோது, அவனைப் பார்க்கவே கமலத்துக்கும் அவள் கணவனுக்கும் வெட்கமாயிருந்தது. பக்குவமாகப் பேசி பாபு தன் அத்திம்பேரின் தவற்றை சுட்டிக் காட்ட, ஏதாவது பதில் சொல்ல வாயெடுத்த தன் கணவனை கமலம் பார்த்த பார்வையில் அவர் அடங்கி விடுவதை பாபு கவனித்தான்.இனிமேல் இந்த மாதிரி தவறான வழிக்குச் செல்லாமலிருந்தால், தன்னால் கூடிய மட்டும் உதவி செய்வதாகவும் வாக்களித்தா.ன்..அதற்கு இருவரும் சரி என்று தலை அசைக்கவே இருபத்தைந்து ரூபாய்களை கமலத்திடம் கொடுத்துவிட்டு பாபு சென்று விட்டான்.

      அவன் எதிர்பார்த்த பலன் கிடைத்து விட்டதாக ஏமாந்துதான் போனான். கமலத்தால் கணவனைக் கட்டுப் படுத்தவும் முடியவில்லை. அவனால் குடிக்காமல் இருக்கவும் முடியவில்லை. பாபு வரும்போதெல்லாம், கேட்கும்போதெல்லாம், குடிப்பதை ஒரேயடியாக நிறுத்தி விட்டேன். அப்போதாவது ஏதாவது கஷ்டம் வரும்போது குடியில் மறந்து போயிருந்தேன். ஆனால் குடிதான் மறைந்து விட்டதே தவிர கஷ்டம் வடியவில்லை என்று கூறி பாபுவிடம் அனுதாபத்துடன் பணமும் பெற்று வந்தான்-இன்னும் குடிப்பதற்கு
-----------------------------------------------------------------------
                                                         ( தொடரும்.)
   

6 comments:

 1. நாவலே தொடராகவா?தொடருங்கள்.சுவாரஸ்ய நடையில் கதையினை படிக்க விறு விறுப்பாக உள்ளது

  ReplyDelete
 2. நண்டு சிண்டு போன்ற சொற்களை எதிர்கொண்டு வருடக்கணக்கில் ஆகிறது. சமூகக் கதைகள் எழுதுவது மிகவும் சிரமம். சுவாரசியம் குறையாமல் எழுதுகிறீர்கள். தொடர்கிறேன்.

  ReplyDelete
 3. @ஸாதிகா,
  முதலிலிருந்து படித்துக் கொண்டு வந்தால் இன்னும் ரசிக்கலாம் என்று எண்ணுகிறேன்.வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 4. @அப்பாதுரை,
  இந்தக் கதை அறுபதுகளில் எழுதியது என்று சொல்லியிருக்கிறேன். அமெரிக்காவில் இருப்பதால் சில பல சொல்லாடல்கள் எதிர்கொள்வது கடினம்தான். தொடர்ந்து வருவதற்கு நன்றி.

  ReplyDelete
 5. தொடர்கிறேன்....
  சில மனிதர்கள் எளிதில் பாடம் பெறுவதில்லை.

  ReplyDelete
 6. தொடர்கிறேன்....
  சில மனிதர்கள் எளிதில் பாடம் பெறுவதில்லை.

  ReplyDelete